சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! அஹோபிலம் 3மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:39, 12 பெப்ரவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம் சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம்
ஹிரண்யகசிபுவைக் கொன்ற கோபத்தில் இருந்து தணியாத நரசிம்மரின் கோபத்தை அடக்க முடியாமல் தவித்த தேவர்கள், பிரஹலாதனையே வேண்ட அவனும் நரசிம்மத்தின் கோபம் தணியப் பிரார்த்திக்கின்றான். அவனுக்காக எழுந்தருளிய கோலமே இது. கோபம் தணிந்து ஸ்ரீ எனப்படும் அன்னையுடன் எழுந்தருளி இருக்கின்றார் நரசிம்மர். மா= என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். லோலா=என்றால் காதலன், லோலம்=காதல். அன்னையைக் காதலுடன் தன் இடது தொடையில் இருத்தி செளம்ய ரூபமாய் இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தின் அமர்ந்திருக்கும் ரூபமே மாலோல நரசிம்மர்.
நவ நரசிம்மர்களில் இவருக்குள்ள மற்றொரு சிறப்பு, மடியில் திருமகளை இருத்திக் கொண்ட இவரின் இந்த மூர்த்தத்தையே அடிப்படையாக வைத்து உற்சவரை அஹோபிலம் மடம் ஜீயர்கள் அமைத்துள்ளனர். முதலாம் ஜீயரின் கனவில் சாட்சாத் அந்த ஸ்ரீமந்நாராயணனே, மாலோல நரசிம்மராய்க் காட்சி அளித்து இவ்விதம் உத்திரவிட்டதாயும் சொல்கின்றனர். இன்றைக்கும் அஹோபில மடத்தின் ஜீயர்கள் தாங்கள் ஆன்மீக யாத்திரைகள் செல்லும்போதெல்லாம் மாலோல நரசிம்மரின் இந்த உருவத்தை அடிப்படையாய்க் கொண்ட உற்சவ மூர்த்தத்தைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். தினசரி உற்சவருக்குப் பூஜை, வழிபாடுகளும் உண்டு. இன்னும் சிலர் மா= என்றால் பிரானையே குறிப்பதாகவும் லோலா என்பதே ஸ்ரீ என்னும் மஹா லக்ஷ்மியைக் குறிக்கும் எனவும் சொல்கின்றனர். எப்படி இருந்தாலும் ஸ்ரீயை அணைத்த கோலத்தில் சங்கு, சக்ரதாரியாய், அழகிய கோலத்தில் காட்சி அளிக்கின்றார். இங்கும் சடாரி, தீர்த்தப் பிரசாதம் வழங்கப் பட்டது. இவ்வளவு கடினமான இடங்களுக்குக் கூட வந்து வழிபாடுகள் நடத்தும் பட்டாசாரியார்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. இந்த மாலோல நரசிம்மர் ஆனவர் செவ்வாயினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் போக்கி அருள்கின்றார். மனதில் ஏற்படும், சஞ்சலம், பயம் அனைத்தையும் போக்கி மனோ தைரியத்தை உண்டு பண்ணுகின்றார்.
ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன் அடுத்து யோக நரசிம்மர். அதற்கு முன்னர் இந்த மலையைப் பற்றிய ஒரு சிறு குறிப்புக்குப் பின்னர் யோகநரசிம்மரைக் காணலாம். . இந்த மலைப் பகுதி கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது என்றாலும், இரு மலைகளாய் இருக்கின்றன. இவ்விரண்டு மலைப்பகுதிகளிலுமே நவ நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. தெலுங்கில் நல்லமலை என அழைக்கப் பட்டிருக்கின்றது. நல்ல என்றால் கறுத்த என்ற பொருள் எனச் சொல்கின்றனர். மரங்களால் சூழ்ந்து அடர்ந்த காடாக இருள் அடர்ந்து கருங்கானகமாய் இருந்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது எனச் சொல்கின்றனர். இப்போதும் மரங்கள் அடர்ந்தேதான் காணப் படுகின்றது. காட்டு மிருகங்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மலையின் ஒரு பகுதி கருடாசலம் எனவும் மற்றொரு பகுதி வேதாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது. ஹிரண்யனுக்காக நரசிம்ம அவதாரம் எடுக்கத் தன்னிடத்தை விட்டு ஸ்ரீமந்நாராயணன் வந்ததால் அவர் பிரிவைத் தாங்க முடியாமலும், அவருக்குச் சேவை சாதிக்க முடியாமலும் தவித்த கருடாழ்வார் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். நரசிம்மமோ? ஒளிந்து வேடிக்கை காட்டியது. தன் பக்தனுக்காக க்ஷண நேரம் கூடத் தாமதிக்காமல் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட நரசிம்மத்தின் பெருமையை உணர்ந்த கருட பகவான், தானும் அவரைத் தரிசிக்க வேண்டிப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை மட்டும் போதாது என உணர்ந்து தவம் இருக்க ஆரம்பித்தார். கருடன் தவம் இருந்த மலையே கருடாத்திரி எனவும் கருடாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது. வேதாத்திரி மலையின் ஒரு பக்கம் இருந்து எதிரே நோக்கினோமானால் கருடனின் மூக்கும், இருபக்கமும் விரிந்த சிறகுகள் போல மலைச் சிகரங்கள் இருப்பதையும் காணலாம்.ஹிரண்யனைக் கொன்ற அதே மடியின் மேலே சாட்சாத் ஸ்ரீ என்னும் அந்த மஹாலக்ஷ்மியை இருத்திய மலைக்குன்றமே வேதாத்திரி மலைத் தொடராகும். இவ்விரண்டு மலைத் தொடர்களும் சேர்ந்தே அஹோபிலம் என அழைக்கப் படுகின்றது. இவற்றின் நடுநாயகமான குன்றே ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் எனப் படும் உக்கிர நரசிம்மர் ஹிரண்யனை வதைத்த இடமாகும். அதற்கும் போவோம். கொஞ்சம் காத்திருக்கணும். இரு மலைகளின் உயரத்திலும், மாபெரும் குகையில் நரசிம்மமாய் அவதரித்த இறைவனைக் கண்டு கருடன் பரவசம் அடைந்து "அஹோபிலம், மஹாபலம்" எனத் துதித்து வணங்கியதாயும் அதனாலும் அஹோபிலம் எனப் பெயர் ஏற்பட்டதாயும் சொல்கின்றனர். தவிர நரசிம்ம அவதாரச் சிறப்பைப் போற்றித் தேவாதிதேவர்களும் வந்து அவர் திருவடி போற்றி வணங்கி, "அஹோ!! பலம்!!!, அஹோ!!! பலம்!!!!" என வியந்து பாராட்டியதாலும் அஹோபலம் என்பது நாளடைவில் திரிந்து அஹோபிலம் எனப்பட்டதாகவும் அறிகின்றோம். பிலம் என்றாலேயே குகை எனப் பொருள். குகைகளுக்குள்ளேயே இங்கே நரசிம்மரைக் காணமுடியும். இறைவன் தன் பக்தனுக்காக விரும்பி எடுத்த வடிவம் நரசிம்ம வடிவம். அதனாலேயே சிங்கவேள் எனத் தமிழில் சொல்லுகின்றனர். சிங்கமாய் விரும்பி வேட்கையுடன் வந்த குன்றம் இது என்பதாலும் சிங்கவேள் குன்றம் எனப் பெயர் ஏற்பட்டதாய்த் தெரிய வருகின்றது. மேலும் ருத்ர ரூபமாய் மட்டுமே அறிந்த நரசிம்மரின் வேறு பல தோற்றங்களையும் கொண்டது இந்த நவநரசிம்மர்களின் சந்நிதிகள். கீழ் அஹோபிலத்தில் பிரஹலாத வரதரின் ஆலயம். மேல் அஹோபிலத்தில் (இதற்குப் பேருந்து, கார், வேன்கள் செல்லும்) மலைச்சாரலில் ஆலயம் அஹோபில நரசிம்ம ஆலயமாகப் பிரதான ஆலயமாய் இருக்கின்றது. மலைச்சாரலில் அதன் மடிப்புகளில் ஒளிந்துள்ள மறைவான குகைப் பகுதிகளிலேயே மற்ற நரசிம்மர்களின் ஆட்சி நடந்து வருகின்றது. மேல் அஹோபிலம் வரையிலும் தனியார் வாகனங்கள் அல்லது பேருந்துகளில் செல்லமுடியும். அதன் பின்னர் நம்மை அந்த நரசிம்மரே அழைத்துச் செல்லவேண்டும். --Geetha Sambasivam 08:39, 12 பெப்ரவரி 2011 (UTC) |




