நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! 3மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:39, 7 பெப்ரவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம் சோமாஸ்கந்தர்!
நமது பாரதத்தின் திரிவேணி சங்கமத்தில் இணையும் வெண்மை நிறக் கங்கையைப் போல் உடல் முழுதும் அணிந்த வெண்ணிறத் திருநீறோடு இறைவனும், கருநிறத்து யமுனை போன்ற உமை அம்மையும், சிவந்த நிற சரஸ்வதி போன்ற செக்கச் சிவந்த சிவகுமாரன் ஆன ஸ்கந்தனும் சேர்ந்தே சோமாஸ்கந்த மூர்த்தி ஆனார்கள் என்பது வழக்கு. பொதுவாகக் கர்ப்பகிரகங்களின் வலப்பக்கங்களில் காணப் படும் சோமாஸ்கந்த விக்ரகம் பல்லவர் காலத்தில் பிரபலம் ஆகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் காலங்களில் கருவறைக்குப் பின்புறம் கருவறைச் சுவரில் இந்த மூர்த்தம் வைக்கப் பட்டு வழிபட்டு வந்ததாயும் தெரிய வருகின்றது.
ஈசன் அமர்ந்த திருக்கோலத்தில் இடக்காலை மடித்துக் கொண்டும், வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டும், புலித் தோலோ அல்லது பட்டாடையோ அணிந்து கொண்டும் இருப்பார். நான்கு திருக்கரங்களில் பின்னால் உள்ள இரு கரங்களிலும் முறையே மானும், மழுவும் இருக்கும். முன்னால் உள்ள இருகரங்களும் முறையே அபய முத்திரையும், வரத முத்திரையும் காட்டிக் கொண்டிருக்கும். அம்பிகை நேர்மாறாக வலக்காலை மடித்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பார். வலக்கரம் தாமரையுடனும், இடக்கரம் மேனியில் அமர்த்தியும் காணப்படும். அம்பிகையின் மடியிலோ அல்லது இருவருக்கும் நடுவே ஆடிக் கொண்டோ குழந்தை கந்தன் ஆனந்தமாய்க் காட்சி தருவான்.
ஆடிய கோலத்தில் இருக்கும் கந்தனின் இடக்கரம் பழத்தையும், வலக்கரம் ஆள்காட்டி விரலைக் காட்டியபடியும் காணப்படும். நம்மைச்சுட்டிக் காட்டுவதாயும் அமைந்திருக்கும் இந்தக் கோலம் காணக் கிடைக்காத அரிய காட்சி. பல அருங்காட்சியகங்களில் காணப் படும் இந்த சோமாஸ்கந்த வடிவம் திருக்கருகாவூர், திருக்கள்ளில் போன்ற இடங்களிலும், சப்த விடங்கத் தலங்களில் முதன்மையான திருவாரூரிலும் காணப்படுகின்றது.திருவாரூரில் தியாகராஜா என்ற பெயரில் வழங்கப்படுபவர் இந்த ஸோமாஸ்கந்தரே ஆவார். இந்த மூர்த்தத்தையே மஹாவிஷ்ணு புத்திரப் பேறு வேண்டி தன் இதயத்தில் இருத்தி வழிபட்டதாய்ச் சொல்வார்கள். இந்த சோமாஸ்கந்தரைத் தான் தியாக ராஜராகப் போற்றி வழிபடுகின்றோம். குமரகுருபரர் தம் திருவாரூர் நான்மணி மாலையில் இவரைப் போற்றிப் பல பாடல்கள் பாடி இருக்கின்றார்.
என்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்
வரந்தந் தருள வரதம்வைத் தாலென் வரதமிடக்
குமரகுருபரரின் திருவாரூர் நான்மணி மாலையில் இருந்து.
--Geetha Sambasivam 11:51, 7 பெப்ரவரி 2011 (UTC) |
