காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:50, 27 ஜனவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம் காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை!
ஈரோடை காவிரிக் கரை.
சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பல பிரம்மாண்டமானக் கோவில்கள், விஜய நகர மற்றும் மராத்திய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த பெரும்பாலான கோவில்கள் காவிரி நதிக் கரையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆழ்வார்களால், பாடப் பெற்ற பெரும்பாலான வைணவ திவ்ய தேசத் தலங்களும், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற தலங்களும் காவிரிக் கரையினிலேயே அமைந்திருப்பதும் தனிச் சிறப்பு.
திருவரங்கம் பற்ற் குறிப்பிடும் போது, “ கங்கையிற் புனிதமாகிய காவிரி நடுவு பட்டு” என்று கம்பர் கூறுவார்.இத்தகைய புனிதம் வாய்ந்த நதிக்கரையில் அமைந்திருக்கும் கொங்கு நாடு பல வகையிலும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அன்னாபிசேகம் மகேந்திரப் பல்லவனால் கட்டப்பட்ட மிகப் பழமையான கோவில் மகிமாலீசுவரர் திருக்கோவிலாகும். மாலி, சுமாலி என்ற இரு அசுரர்கள் வழிபட்ட தலமாதலால் இத்தலம் மகிமாலீசுரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலிலிருந்துதான் எங்கள் ராமேசுவரப் பயணம் இனிதாகத் துவங்கியது. விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையில், ஆண்டவனின் ஆராதனைகளை முடித்துக் கொண்டு, அவனருளாலே, அவன் தாள் வணங்கி, இரு பேருந்துகளில் பயணம் தொடங்கினோம் . கோவில் யாத்திரைகள், சத்சங்கங்கள் இவையனைத்தும் மனித மனங்களைப் பல்வகையிலும் பக்குவப் படுத்தக் கூடிய ஒன்றாகும்.
அன்பு ஒன்றே பேரானந்தத்தை அடைவதற்குரிய ஒரே வழியாகும். நிலையில்லாததொரு உலகில் நிலையான தன்மை பெற்ற ஒரே பொருள் அன்பு மட்டுமே. காரைக்கால் அம்மையார் இறைவன் மீது கொண்ட மாறாத அன்பு போன்று. அன்பில்லாமல் இன்பம் வராது. அன்பில்லாமல் வந்த இன்பமும் நிலையாது. மானுட ஆக்கை என்பது இறைவன் கொடுத்த வரம். மனித மனம் பல சென்மங்களாக, அறியாமையாகிய, ஆணவக், கண்ம,மாயா மலங்களை சுமந்து கொண்டு இறைவன் தன்னைப் போல ஒளி வடிவாக, பேரருள் வடிவாக மாற ஒரே மார்க்கம், அன்புதான். மனித வாழ்வே, கிடைத்ததைப் பாதுகாப்பதும், கிடைக்காததற்கு ஏங்குவதுமே தான், என்றாகிப் போகிறது. இந்த அஞ்ஞானத் திரை விலகும் போது தான், ஞான ஒளி சீறி வெளி வருகிறது. இந்த ஞான ஒளி பெற வேண்டிதான் நாயன்மார்கள் முதல், சாமான்ய மக்கள் வரை ஆண்டவனின் திருப்பாதம் தேடி யாத்திரைகள் மேற்கொள்கின்றனர். தொடரும்.
பவள சங்கரி திருநாவுக்கரசு. தேதி - ஜனவரி - 27 - 2011. |


