திருக்கைலை யாத்திரைப் பயணம் 7மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:12, 13 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் ஓம் நமச்சிவாயா-7
நான் கைலை யாத்திரை போனதும், வந்ததும் இன்னும் அவருக்குத் தெரியாது. மருத்துவப் பரிசோதனை நம் குடும்ப டாக்டரிடம் மேற்கொண்டு வரச் சொல்கிறார்கள். யாருமே அப்படிச் செய்யவில்லை, நாங்கள் இரண்டு பேரும் உள்பட. சிலர் மட்டும் வீட்டிலேயே ட்ரெட் மில் பயிற்சி மேற்கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் யோகா,நடைப் பயிற்சி முதலியன மேற்கொண்டிருந்தாலும் அது மட்டும் போதாது. மேலும் சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் தங்கள் தங்கள் பொறுப்பிலேயே வருமாறு கூறப்பட்டனர். எங்களுடன் வந்த டாக்டர் திருமதி நர்மதா அவர்கள் ஒரு இருதய நோயாளி. திறந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர். மேலும் இரண்டு பேர் கணவன், மனைவி இருவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். சில பேர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் பொதுவாக ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்னை உடல் நலத்தில் இருந்து வந்தது. ரெயிலில் வந்தவர்களில் ஒருவர் கீழே விழுந்து காயம் பட்டிருந்தது.
இம்மாதிரியான ஒரு குழுவாகத் தான் நாங்கள் இருந்தோம். எங்களுடன் கைலை வரை வரப் போகிற "எகோ ட்ரக்" சிப்பந்திகள் அறிமுகம் செய்யப் பட்டனர். பின் பயணம் பற்றி விளக்கப் பட்டது. மறுநாள் செவ்வாய் அன்று காலை நாங்கள் எல்லாரும் கிளம்பி ஹோட்டலில் இருந்து இரண்டு பஸ்களில் சீன எல்லை வரைப் பிரயாணம் செய்ய வேண்டும். அது ஒரு 150 கிலோ மீட்டருக்குக் குறையாது. பின் அங்கிருந்து நட்புப் பாலம் வழியாகக் கால்நடையாக நேபாள, சீன எல்லையைக் கடக்கவேண்டும். பின் அங்கிருந்து குழுவில் 4, 4 பேராகப் பிரிந்து ஒரு வண்டிக்கு 4 பேர் என்று ஒரு டொயோட்டா காரில் திபெத்தில் உள்ள நியாலம் என்னும் ஊரை அடைய வேண்டும். அதுவே சிறிது உயரம் உள்ள ஊர். மறுநாள் போகவேண்டியது இன்னும் உயரம். கால நிலை மாறும். குளிர் அதிகமாகும். ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். சிலருக்கு ஒத்துக் கொள்ளும். சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. மயக்கம், வாந்தி போன்றவை வரலாம். அல்லது சுவாசிக்க முடியாமல் போகலாம்.கூடவே எடுத்து வரும் ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் கொடுத்தும் சரியாக வில்லை என்றால், gammao bag"-ல் படுக்க வைப்பார்கள்.
நல்லவேளையாக எங்களிடம் சொந்தமாக ஜெர்கின் இருந்ததால் அது வாங்கிக் கொள்ள வில்லை. ஸ்லீப்பிங் பாக் இல்லாமல் முடியாது. ஒருவேளை தங்க "மட் ஹவுஸ்" கிடைக்காமல் கூடாரத்தில் தங்க நேர்ந்தால் என்ன செய்வது? ஆகவே அதை வாங்கிக் கொண்டோம். பணம் மேலே ரூமில் இருந்ததால் ஸ்லீப்பிங் பாக்கைக் கொடுக்கும்படியும், மேலே போய் எடுத்து வந்து யாராவது ஒருத்தர் கொண்டு தருகிறோம் என்று கேட்டதற்குக் கண்டிப்பாக மறுக்கப்பட்டுக் கையில் கொடுத்ததை வாங்கி வைத்து விட்டார்கள். ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இவர்களை நம்பி நாம் கிட்டத்தட்ட 55,000 ரூ கொடுத்துள்ளோம் ஒரு 250/-ரூக்கு நம்பவில்லை. அந்த ஹோட்டலை விட்டு நாங்கள் திடீரென எங்கே போய்விடுவோம். ஒருவிதமான கலக்கத்துடனேயே போய்ப் பணத்தை எடுத்து வந்து கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டோம். நாம் எடுத்து வைத்துக் கொண்ட பொருட்கள் தவிர மேலும் இருக்கும் துணிமணிகள், மற்ற சாமான்களை நாம் ஏற்கெனவே கொண்டு வந்த பையில் போட்டு வைத்துவிட்டால் ஹோட்டல்காரர்கள் ஒரு அடையாளச் சீட்டுக் கொடுத்துவிட்டுப் பாதுகாப்பாக வைக்கிறார்கள். லாக்கரும் இருப்பதால் தேவைப்பட்ட பணம் எடுத்துக் கொண்டு மிச்சப் பணம், மற்றும் விலை உயர்ந்த நகைகள் போட்டுக் கொண்டு போட்டிருந்தால் அவற்றையும் ஹோட்டலிலேயே லாக்கரில் வைக்கலாம். இரண்டு சாவி போட்டால் மட்டுமே திறக்க முடிந்த அதன் ஒரு சாவியை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் கேட்டுக் கொண்டு மீட்டிங் முடிந்து சாமான்களைப் பாக் செய்து அறைக்கு வெளியில் வைக்கச் சொன்னார்கள்.
கைலை யாத்திரைக்கு வேண்டிய பை(ட்ராவல்ஸ் காரர்கள் கொடுத்த சிவப்பு பை) அறைக்கு வெளியே வைத்தோம். இந்தப் பைகள் ஒரு ட்ரக்கில் மொத்தமாக ஏற்றப்பட்டு எங்கள் கூடவே அந்த ட்ரக் வரும். மற்றொரு ட்ரக்கில் சமையல் சாமான்கள், காஸ் அடுப்புக்கள், சிலிண்டர்கள், பழங்கள், காய்கறிகள், ஊறுகாய் வகைகள், பால் பதப்படுத்தப்பட்டது முதலியன வருகிறது. ஒவ்வொரு நாளும் சாயங்காலம் நாங்கள் தங்கும் கேம்ப் வந்ததும் பைகள் எங்களுக்குக் கொடுக்கப் படும். எல்லாம் முடித்து அன்றிரவு படுக்கும்போது இரவு கிட்டத் தட்ட ஒரு மணி ஆகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் எழுப்பி விடுவார்கள்.
--Geetha Sambasivam 08:12, 13 டிசம்பர் 2010 (UTC)
|