பினாங்கின் கதை 4

மரபு விக்கி இருந்து

60.50.76.10 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 02:55, 9 நவம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பழங்கலத்தில் பழங்கள் - 4
(ரெ.கார்த்திகேசு)


தமிழ் நாட்டிலிருந்து பினாங்குக்கு பழம் பெருமையோடு வந்து குடியேறியவர்களில் நாட்டுக் கோட்டைச் செட்டியார் சமுகத்தினர் (நகரத்தார்கள்) முக்கியமானவர்கள். பினாங்கு குட்டி இந்தியாவில் பினேங் ஸ்த்ரீட்டில் இவர்களின் கிட்டங்கிகள் இன்னும் பழமைச் சிறப்பு மாறாமல் இருக்கின்றன. ஆனால் இப்போது கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோர்கள் மிகச் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள். செட்டியார் சமூகத்தினரில் பலர் இப்போது தொழில் வல்லுனர்களாகவும் பெருவணிகத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இவர்களின் சமூக அடையாளங்களாக பினேங் ஸ்த்ரீட்டில் உள்ள கோயில் வீடும் பினாங்குத் தண்ணீர்மலை தண்டாயுதபாணி ஆலயமும் விளங்குகின்றன. தமிழோடும் தமிழ்க் கடவுளாம் முருகக் கடவுளோடும் தங்களை இணைத்துக் கொண்ட இந்த சமுகத்தினர் பற்றி எனது நண்பர், பினாங்கில் தமிழ் நேசனின் பிரதிநிதியாக இருக்கும் கவிஞர் பி.எல்.சிங்காரம் அவ்வப்போது பத்திரிகைகளில் சிறு சிறு கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து "பினாங்குத் தென்றல்" என்னும் ஒரு நூலையும் ஆக்கியிருக்கிறார். பினாங்கின் பழைய வரலாறு பற்றிய துண்டு துண்டான அரிய தகவல்களைக் கொண்டுள்ள இந்த நூல் இன்னும் வெளியீட்டு வெளிச்சமும் விளம்பர வெளிச்சமும் காணாமல் இருக்கிறது. அதிலிருந்து சில நல்ல தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

நகரத்தார்கள் 1818ஆம் ஆண்டு முதலே இங்கு தொழில் புரியத் தொடங்கியவர்கள். 1850இல் பினேங் ஸ்த்ரீட் 138ஆம் எண் கடையில் கோயில் வீடு அமைத்து அங்கு முருகனை நிறுவி வழிபட்டார்கள். அந்த கோயில் வீடு இன்றும் அதே முகவரியில் மெருகுடன் இருக்கிறது. தைப்பூசத்தின் ரத ஊர்வலம் இங்கிருந்துதான் இன்றும் ஆரம்பம்.

1854 வாக்கில் தண்ணீர்மலைப் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை இவர்கள் கோயில் அமைப்பதற்காக வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. (இந்த ஐந்து ஏக்கரில் ஒரு பகுதி இன்று வணிகக் கட்டடங்களுக்காக விற்கப்பட்டுவிட்டது. இன்றைக்கு Waterfall Hotel அமைந்துள்ள நிலம் இதில் அடங்கியதுதான். இங்குள்ள நிலத்தை விற்று தமிழ் நாட்டில் கோயில் கட்டிவிட்டார்கள் என்று அவர்களைப் பற்றிக் குறை கூறப்படுவதையும் நான் கேள்விப் பட்டுள்ளேன்.)

1857ஆம் ஆண்டில் தண்டாயுதபாணி ஆலயம் பூர்த்தி பெற்று அந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி குடமுழுக்கு நடந்தது. ஆலயத்தின் அமைப்பு பற்றி சிங்காரம் இப்படி ஒரு சுவையான தகவலைக் குறிப்பிடுகிறார்:

"தமிழகம் காரைக்குடியிலிருந்து வந்த கலைஞர்கள், சிற்பிகளைக் கொண்டு செட்டிநாட்டு நகரத்தார் கலைச் சாயலில் கட்டினார்கள். இக்கோயில் அமைப்பு முறை சொக்கட்டான் காய் ஆட்டக் கட்டம் போல (நீண்ட நேர் கோடு, குறுக்கு நேர் கோடு) கூட்டல் குறி அமைப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்."

கோயிலைச் சென்று பார்த்தவர்களுக்கு இந்த உண்மை புலப்படும். இந்த நேர் மற்றும் குறுக்காக அமைந்த மண்டபங்களின் கூரைக்குக் கீழ்ப்பகுதியில் சட்டம் போடப்பட்ட நூற்றுக் கணக்கான ஓவியங்கள் (அச்சுப் பிரதிகள்) அமைக்கப் பட்டுள்ளன. கடவுளர்களின் உருவப்படங்கள் தவிர ரவிவர்மா ஓவியங்களின் பிரதிகளும் உள்ளன. இவை காலத்தால் செல்லரித்துப் போகாமல் கோயில் பொறுப்பாளர்கள் பாதுகாத்து வைக்க வேண்டியது முக்கியம்.

"தென்கிழக்காசியாவில் பினாங்கில்தான் முதல் தண்டாயுதபாணி கோயில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. முருகப்பன், முத்தப்பன், குமரப்பன், தேனப்பன், பழனியப்பன், வேலாயுதம், சுப்பையா, சுப்பிரமணியன், சுவாமிநாதன், சிங்காரம், தண்ணீர்மலை என்று நகரத்தார்கள் தம் குழந்தைகளுக்கு திருமுருகன் நினைவாகவே பெயர் சூட்டி வந்திருக்கிறார்கள்" என்றும் சிங்காரம் குறிப்பிடுகிறார். இதில் "தண்ணீர்மலை" என்ற பெயர் மலேசியாவில் உதித்த பெயராகத்தான் இருக்க வேண்டும்.

பினாங்கு தைப்பூசத்தின் கொண்டாட்ட மையங்களாக இந்தக் கோயிலும், உச்சிமலை பால தண்டாயுதபாணி கோயிலும் விளங்கி வருகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன் வரை இந்தக் கோயில்களில் தைப்பூசம் 5 நாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வந்து பின்னர் அது மூன்று நாள் விழாவாக இன்று ஆகியிருக்கிறது. "அந்தக் காலத்தில் தைப்பூச விழாவில் வழங்கும் அன்னதானத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, நெய் வகையறாக்கள் சென்னை நிறுவனக் கப்பல் மூலம் சுமைக் கட்டணமின்றி தமிழகமிருந்து இலவசமாக வரவழைக்கப் பெற்றதாம்" என்கிறார் சிங்காரம். ஆனால் இன்று அன்னதானமிட மலேசிய இந்துப் பெருமக்களே உதவி வருகிறார்கள். கோயில்களிலும் வெளியே பந்தல்களிலும் வழங்கப்படும் உணவையும் பானங்களையும் அத்தனைக் கூட்டமும் சாப்பிட்டு மாளவில்லை.

இக்கோயிலுக்கு வருகை புரிந்த கவியரசு கண்ணதாசன் கோயிலுக்கு வாழ்த்துக்கவி புனைந்து தந்திருக்கிறார்:

"தீஞ்சுவைத்தேன் பூ மலரும்
தெளிவான பினாங்கு நகர்
தேடியவன் வந்து விட்டான்;
திருக்கோவில் கொண்டபடி
மலையடியில் சிலையானான்
தென்னாட்டுத் தண்டபாணி"

கண்ணதாசன் இவ்வாறு பல மலேசியக் கோயில்களுக்கு (புக்கிட் மெர்டாஜம், தைப்பிங்) கவிபுனைந்து சூடியிருக்கிறார். இவை காலத்தால் அழிந்து போகாமல் இருக்க அவ்வக் கோயில் பொறுப்பாளர்கள் இவற்றைத் தகடுகளில் பொறித்து மாட்ட வேண்டும். அல்லது பளிங்குக் கற்களில் எழுதி வைக்க வேண்டும். கண்ணதாசன் அந்த மரியாதைக்குகந்த அருட்கவிதான்.

(பகுதி 5 தொடரும்)

பங்களிப்பாளர்கள்

60.50.76.10

"https://marabuwiki.org/index.php?title=பினாங்கின்_கதை_4&oldid=392" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 9 நவம்பர் 2009, 02:55 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,082 முறைகள் அணுகப்பட்டது.