பாசுர மடல் 082 : பெண்மை அம்பூ இது !மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:55, 3 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் முனைவர் நா.கணேசனின் (NASA) தூண்டுதலால் நம்மாழ்வாரின் அகப்பாடல்களில் தோயும் போது பல கேள்விகள் உள்ளெழுகின்றன. திரு.சந்திரா (in Agathiyar, Tamil.net)சுட்டிக் காட்டியபடி சங்கப் பாடல்களில் பெரும் பகுதி அகத்தில் அடங்கிவிடுகிறது. அந்த ஒருகாரணத்திற்காக, ஒரு மரபைப் பேணும் கருத்தோடு ஆழ்வார்களும், நாயன்மார்களும் அகமரபில் கவி யாத்தனர் என்று முழுதும் சொல்வதற்கில்லை. அகமரபு என்பதே ஆதி தொட்டு ஆன்ம வெளிப்பாடாவே உள்ளது என்பதுதான் உண்மை. எப்படி எனப் பார்ப்போம். புறம் சார்ந்து நம் வாழ்வு இருந்தாலும், அதாவது உடை, உறைவிடம், உணவு என்ற புறம் சார்ந்து நம் வாழ்வு அமைந்தாலும். அவை மட்டுமே ஒருவனுக்கு நிம்மதியைத் தருவதில்லை. பூவின் உள்ளே குடையும் வண்டின் குடைச்சலும், பழத்தின் உள்ளே நெளியும் புழுவின் அரித்தலும் எப்படி வெளியே சட்டெனப் புலப்படுவதில்லையோ அது போல நம் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு வண்டு தொடர்ந்து குடைந்து கொண்டே இருப்பது வெளியே தெரிவதில்லை. இவ்வண்டு, உருவற்ற ஒரு ஆன்ம வண்டு. அது ஒரு பொருள் அல்ல. ஒரு இயக்கம். ஒரு மலரைக் காணும் போது வரும் ஒரு சிலிர்ப்பு. ஒரு கவிதையில் தோயும்போது வரும் நிறைவு. இசையில் மயங்கும் போது வரும் மயக்கம். இவையெல்லாம் இந்த ஆன்ம இயக்கத்தின் வெளிப்பாடுகள். இத்தனை மெல்லிய அந்த இயக்கம் - அதாவது வெளியே போன காற்று உள்ளே திரும்பி வராவிட்டால் இது போச்சு - தொடர்ந்து நடக்க ஒரு உடல் தேவைப்படுகிறது. புறம் இன்றி அகம் இல்லை. எனவேதான் ஊனுடம்பு ஆலயம் என்பார் திருமூலர். ஆனால் இந்த ஊனுடம்பை ஆட்டி வைப்பது இந்த அகக் காட்சிதான்.அக இயக்கம் ஆடி ஓயும் போது புறம் செயலிழந்து விடுகிறது. எனவே அகமின்றி புறம் இல்லை.ஒரு மலரைக் காணும் போது, ஒரு மயிலைக் காணும் போது, ஒருபெண்ணைக் காணும் போது உள் இயக்கம் சிலிர்க்கிறது (ஆணின் பார்வையில்-பெண்ணிற்கும் இது பொருந்தும்). உயிர்ப்பின்அடையாளமாக.கண்களும் கண்களும் கலக்கும் போது காதல் பிறக்கிறது.காதல் பிறக்கும் போதே கவிதையும் பிறந்து விடுகிறது. உடனே உருவமில்லாதொரு உருண்டை (ஐயோ! வைரமுத்து ஏனிப்படியொரு உவமை?) உள்ளே உருளத் தொடங்கிவிடுகிறது. கார்டூன் படங்களில் காட்டுவது போல இதயம் பெருத்து, உடலை விட்டு வெளியே வரத்துடிக்கிறது. அல்லது பெண்ணென்ற உடலின் உள்ளே இருக்கும் அந்த இயக்கத்துடன் இரண்டறக் கலக்கத் துடிக்கிறது. இத்துடிப்பு கவிதையாய், காதலாய்,மடலேறுதலாய், வீர பராக்கிரமங்களாய் வெடித்துச் சிதறுகிறது. காதலி கிடைத்தவுடன் அது நின்று விடுவதில்லை. அவளுடன் கலக்கத்துடிக்கிறது. கலவி என்று அதனால்தான் அதற்குப் பெயர். பாரதி சொல்வதுபோல் "முத்தமிட்டு, பல முத்தமிட்டு கூடிடத் துடிக்கிறது". அதில் வரும் இன்பம் அகம் சார்ந்தது. உடம்பு இயைந்து கொடுக்கிறது, அவ்வளவே. கூடிக் கூடி நிரந்தரமாய் கலக்க ஆன்மா துடித்தாலும் பருப்பொருள் எடுத்த நம் உடல் என்ற தடையால் அது நிகழாமலே போய் விடுகிறது.எனவேதான் கலவியின் முடிவு பிரிவில் நின்று போய்விடுகிறது.அலை கடல் ஓய்வதில்லை. இந்த ஆன்ம முயற்சியும் அலை கடல் போல்மீண்டும், மீண்டும் கலந்து-பிரிந்து, கலந்து-பிரிந்து, கலந்து-பிரிந்து, முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சிக்குப் பலன் இல்லாமல் இல்லை. காருண்யமிக்க இறைமை கலவி இன்பத்தை அருள்வதுடன், கலவியின் பயனாக இன்னொரு ஜீவனைப் படைத்தும் அருள்கிறது. ஆயினும் இது ஒரு சின்னப் பரிசுதான். ஏனெனில் ஆன்மாவினால் கடைசிவரை இரண்டறக் கலக்க முடிவதேயில்லை - உடல் இருக்கும் வரை (இந்த பருப்பொருளான உடம்பை சூட்சும உடம்பாக மாற்ற சித்தர்கள் முயன்றதின் பொருளும் மரணமற்ற பெருவாழ்வு என்பது இறைமையுடன் நித்தியமாய் இருத்தலையே குறிக்கும் என்று நம்புகிறேன்.ஆயினும், இப்பெருவாழ்வு கண்ட வள்ளலாரும் அகப்பாடல்கள் இயற்றியது கவனிக்க வேண்டியது! இங்கு அகம் சார்ந்த ஊடலும். கூடலும் ஆன்ம கலப்பிற்கு உருவகமாக நிற்கின்றன) இரண்டாவது, உடல் உள்ளவரை ஆன்மா என்பது, இறைமையுடன் இரண்டறக் கலத்தல் இயலாமல் தடைப் படுகிறது. இதனால்தான் சித்தர்கள் ஸ்தூல உடம்பை, சூட்சும உடம்பாக மாற்றுவதில் காலத்தை செலவழித்தனர். இந்நிலையை வைணவம் நாராயணனின் வைகுந்தத்தில் பிறப்பு-இறப்பு அற்ற நித்யசூரிகள் சூழ்ந்துசதா காலமும் இறைவனை அனுபவித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது) இந்த ஏக்கம் நிறைவுறாத ஒரு ஏக்கம். இதைச் சரியாகப் புரிந்துகொண்டால் அகமரபு ஒன்றால்தான் இத்தகைய இரண்டறக் கலக்கமுயலும் ஆன்ம முயற்சியைச் சரியாகப் புரிந்து கொண்டு வெளிக்கொணர முடியும் என்பது புரியும். இது மிக, மிக மெல்லிய உணர்வுசார்ந்த ஒரு இயக்கத்தின் வெளிப்பாடு. எனவேதான் ஆழ்வார்களும்,நாயன்மார்களும், பாரதியும் அகமரபில் பாடல்கள் யாத்தனர். அப்படித்தான் முடியும். வேறுவகையில் முடியவே முடியாது.இதில் எந்த ஆச்சாரமும் கிடையாது. முற்றும் துறவறம் எய்திய சங்கரனும், பட்டினத்தாரும் பெற்ற தாய்க்காக கடைசியில் இறங்கிவருவது அகம் வெல்வதைக் காட்டுகிறது. பாவியேன் மனத்தேநின்று ஈரும் ஆலோ! பாவியேன் மனத்தில் நின்று அது பொல்லாத துன்பம் விளைவிக்கிறது. இத்துன்பம் இல்லையெனில் இன்று ஒரு அகமரபில்லை, இன்று ஒரு பாரதி இல்லை, ஒரு கம்பனில்லை, கண்ணதாசனில்லை, வைரமுத்து இல்லை. வாடை வழக்கமாகக் குளிரும். இவள் உடம்புச் சூட்டில் அது வெவ்வாடையாகிப் போகிறது. (வைரமுத்துவின் "அந்திமழைபொழிகிறது பாடலை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் - "தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கிறது!"). குளிர் நிலவு வெம்மதியாய் போய் விடுகிறது. இப்படி புறப்பொருள்களுக்கு அஞ்சி படுக்கையில் விழுந்தால் மலர்ப் படுக்கையும் நோகிறது. அது தலைவனின் கூடலை நினைவு படுத்துகிறது. நம்மாழ்வாரின் அழகியல் இப்பாடலில் பளிச்சென்று தெரிவது அடுத்தவரியில் , "புள்ளுடைத் தெய்வ வண்டு துதைந்த பெண்மைஅம் பூ!என்பதுதான் அது. கருடனை வாகனமாகக் கொண்டு திருமால் என்ற வண்டு நுகர்ந்த பூ இது என்று தன்னைச் சொல்கிறார். இது ஒரு மோகமுள் என்று சொல்கிறார். இந்த மோக முள் ஆதியில் நம் ஒவ்வொருவருள்ளும் குத்தி விட்டதால்தான் இன்றளவும் காதல் உலகில் நிற்கிறது. இறைவனை வண்டாகக் காணும் அழகுதான் என்னே! ஆவியின் பரம் அல்ல வகைகள் என்பதை கலவியின் வகைகள் என்றே ஈடு சொல்கிறது. அதன் உள்ளர்த்தம் என்னவெனில், இறைவன் ஒருவனாக இருந்தாலும், அவ்வண்டு துளைக்கும் மலராக நாமெல்லோரும் இருந்தாலும் நம்முள் நிகழும் கலவி வெவ்வேறு வகையானதே. இல்லையெனில் வள்ளலாரின் கவிதையும், நம்மாழ்வாரின் கவிதையும் ஒன்றாகவே இருக்கும். ஒரு தாயுமானவர், மாணிக்கவாசகர், ஒருஆண்டாள், ஒரு காரைக்கால் அம்மையார் என்பது சாத்தியமில்லாமலே போயிருக்கும். இந்த வகைகளில் புணர்வது அவன் விளையாட்டு.இப்பாடலைப் படித்துவிட்டு நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும்இறைமை வெவ்வேறானதே. அது அவன் சித்தம். அதுதான் கண்ணனின் ராசலீலை. ஒவ்வொரு கோபியின் பக்குவத்திற்கும் ஏற்றவாறு கலவி வேறுபடுகிறது. தன் பெண்மை அழிந்தபடி பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே"பெண்மை அம்பூ அது" என்று அ·றிணையில் தன்னைக் குறிக்கிறார். கலவியின் உச்சத்தில் "நான்" என்பது இல்லாமல் போவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கலாம். இப்படி "நான்" என்பது இல்லாமல் அழிக்கும் இயக்கம்தான் இறைவன். பிரபஞ்சத்தில் ஒருவனே புருஷன்.நாமெல்லோரும் கோபிகளே! கிருஷ்ணபிரேமாமிர்தம்
நா.கண்ணன்.
|