நவராத்திரி நாயகியர் 15மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:49, 3 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
பொதுவாக வெண்பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களுடன் சுவடி, ஜபமாலை, வீணை இவற்றைத் தாங்கியவண்ணம் காணப் படும் சரஸ்வதி, ஆங்காரசக்தியாய்த் தோன்றும்போது எட்டுக்கரங்கள், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறும். வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்குகரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம் ஆகியவற்றையும் வல மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முகவடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள் . யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான். இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள். நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு. இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள். அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம். அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள். |