நவராத்திரி நாயகியர் 6

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:10, 25 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக


நவராத்திரியில் நவதுர்க்கைகள் - சைல புத்ரி! 2
இன்றைய அலங்காரம் ஸ்ரீராஜராஜேஸ்வரி


சைலபுத்திரி: சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கிறது. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப் படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை. நடைபெறாது. இவள் தமிழில் மலைமகள் என அழைக்கப் படுகின்றாள். மகாமேருவை வலம் வந்து கொண்டிருக்கும் ஆதித்தியன் ஆன சூரியன் இவளின் பக்தர்களுக்கு அருள் புரியும் வல்லமை கொண்டவன். நவராத்திரி நாட்களில் ஞாயிற்றுக் கிழமை அன்று இவளை வணங்கித் துதித்தால் ஆரோக்கியம் பெருகும். மனம் விசாலமடையும். பர்வத ராஜபுத்திரி வேண்டியது அருளுவாள். வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடிய ஆநந்த தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவளே ஸ்ரீசைலபுத்ரி என்னும் இந்த தேவி ஆவாள்.

இன்று அன்னையை மஹிஷனை வதைக்கக் கிளம்பிய ராஜராஜேஸ்வரி ரூபத்தில் வணங்கவேண்டும். மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிமூர்த்தியாக பாவித்து வழிபடவேண்டும். இன்றும் மஞ்சள் நிறம் உகந்தது. சிவப்புக் கொன்றையும் விசேஷம். இன்றைய நைவேத்தியம் எள் சாதம். எள்ளைக் கல்லில்லாமல் களைந்து வடிகட்டி வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு அதோடு உப்பு, காய்ந்த மிளகாயும் வறுத்துக் கொண்டு பொடி செய்து வைத்து அந்தப் பொடியை நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் போட்டுக் கலந்து கொள்ளவேண்டும். சிலருக்குப் பெருங்காயம் உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்க்கும் வழக்கம் உண்டு. எள்ளுக்குப் பெருங்காயம் தேவை இல்லை. இது தவிர மூன்று வயதுக் குழந்தைக்குப் பிடித்த பலகாரங்கள் எதுவேண்டுமானாலும், வெங்காயம், பூண்டு, தவிர்த்துச் செய்து கொடுக்கலாம். இன்றைய சுண்டல் காய்ந்த மொச்சையை ஊற வைத்துச் செய்த மொச்சைச் சுண்டல்.

மொச்சைச் சுண்டல் செய்முறை:

காய்ந்த மொச்சையை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் அல்லது அடிகனமான நன்கு குழைந்து வேகும் வண்ணம் உள்ள பாத்திரத்தில் மொச்சையைப் போட்டு வேக வைக்கவும். தேவையான அளவு உப்புச் சேர்க்கவும். அதிகப் படியான நீரை வடித்துவிட்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, மி.வத்தல், பெருங்காயத்தூள் சேர்க்கவும், கருகப்பிலை சேர்த்து வெந்த மொச்சையைப் போடவும். ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்க்கவும். நன்கு வதக்கி இறக்கும்போது தேங்காய் துருவல் சேர்க்கவும். சுவையான சுண்டல் தயார்.

துர்கா அஷ்டகம் இரண்டாம் பாடல்:

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்னமாலையின் நீலம்!

மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=நவராத்திரி_நாயகியர்_6&oldid=3405" இருந்து மீள்விக்கப்பட்டது