பாசுரமடல் 001 - ஆழ்வார்களின் அறிமுகம்

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:57, 6 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஆழ்வார்களின் அறிமுகம்



வைணவ சாற்றுமுறை

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.


தினம், தினம்: அடியார்களாகிய நாம், நம்மைக் காக்கும் அரங்கம், சடகோபன் (நம்மாழ்வார்) தந்த ஈரப் பாசுரங்கள் (கண்ணீர் பெருகி பக்தியால் அழுவதால் வரும் ஈரம்), கடல் சூழ்ந்த மண்ணுலகம், இப் பக்தியை மெய்யாக்கிக் காட்டும் ஆச்சார்யன் (இங்கு மணவாள மாமுனி) இவர்கள் வாழ்க வென்று இரைஞ்சும் பண்பாடுதான் நம் தமிழ் பண்பாடு. இது குறித்து நாம் பெருமை கொள்வோமாக!!

ஆழ்வார்கள் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வே மனிதநேயம் மிக்க செய்தியாக அமைகிறது.


சென்னைக்கும், மாமல்லைக்கும் இடையே ஒரு குக்கிராமம். அடாது மழை பெய்து கொண்டிருக்கும் ஒர் நாள். மழைக்கு ஒதுங்கி ஒருவர் ஒரு வீட்டினுள் நுழைகிறார். வீட்டில் யாரும் இல்லை. ரேழி என்று அழைக்கப்படும் இடைப் பகுதியில் ஒண்டுகிறார். அசதியில் கொஞ்சம் படுத்து இளைப்பாறுகிறார். அப்போது இன்னொரு நபர் நுழைகிறார். ஒதுங்க இடம் இருக்குமா என வினவுகிறார். அதற்கு முதல்வர் சொல்லுகிறார், ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். நான் இருந்து கொள்கிறேன் (அதாவது உட்கார்ந்து கொள்கிறேன்) வாரும் என்கிறார். இருவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் நுழைகிறார். கதவைத்தட்டி இருக்க இடம் கிடைக்குமா என வினவுகிறார். அன்புள்ளம் கொண்ட இந்த இருவரும், ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், எனவே வாருங்கள்-மூவரும் நிற்கலாம் என அவரை உள்ளே அழைக்கின்றனர். மூவருக்கும் நிற்கத்தான் சரியாக இடம் இருக்கிறது. அப்போது இவர்கள் அறியாமல் இன்னொருவர் இடையில் புகுந்தது போல் நெருக்குவதை மூவரும் உணருகின்றனர். யார் இந்த நான்காவது ஆள் என்ற கேள்வி எழுகிறது. இரவு நேரம். சுத்தமாக வெளிச்சம் இல்லை. எப்படி காண்பது? விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது? சாதாரண விளக்கில்லை ஞான விளக்கு. ஏன்? நான்காவது ஆளை தொட்டு உணரமுடியவில்லை. அப்போது முதலில் வந்தவர் அந்தாதி தொடங்குகிறார் இப்படி.


வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக-செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று.

(முதல் திருவந்தாதி-பொய்கை ஆழ்வார்)



இப்படி பாடிய முதல் பாசுரங்கள் நூறு. அடுத்தவர் தொடர்கிறார்,

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

(இரண்டாவது திருவந்தாதி - பூதத்தாழ்வார்)



இப்படி இவர் நு¡று பாடல்கள் பாடுகிறார். இந்த அனுபவத்தில் இவர்களுக்கு புரிந்துவிடுகிறது
நான்காவதாக நிற்பது யார் என்று. அதை மூன்றாவதாக வந்தவர் விளங்கச் சொல்கிறார் இப்படி:

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.

(முன்றாவது திருவந்தாதி-பேயாழ்வார்)


இவர் பாடியது நூறு பாடல்கள். பொய்கையில் தோன்றியதாக நம்பப்படுபவர் பொய்கை ஆழ்வார். பூதம் என்பதற்கு அன்னம் என்றொரு பொருள் உண்டு. அதாவது திருமால் நாமமே உணவாகக் கொள்வதால் இவர் பூதத்தாழ்வார் ஆகிறார். (வைதீக திருமண மந்திரத்தில் கணவன் மனைவியிடத்தில் "பூத" என்று சொல்லி பழம் தரவேண்டும். மனைவி "சுபூத" என்று சொல்லி பால்தர வேண்டும். ஒருவரையொருவர் பூதம் பிசாசு என்று திட்டிக் கொள்வதாய் அர்த்தம் கொள்ளக்கூடாது) மூன்றாவது ஆள்வார் பேயாழ்வார். இதுவும் காரணப் பெயர். ஒரு காரியத்தில் பேயாய் அலைகின்றவர்களை நாம் கண்டதில்லையா? இவர் வேலை கண்ணன், நாரணன் என்று மெய்பொருள் கண்டு கொள்ள பேயாய் அலைவது. அதனால் அப்பெயர்.

நா.கண்ணன்

Date: Tue, 02 Sep 1997 09:20:05 +0000

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2010, 12:57 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,519 முறைகள் அணுகப்பட்டது.