கடல் கடந்து வந்த தமிழ்

மரபு விக்கி இருந்து

Geethasambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:32, 4 ஜூலை 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்களின் நினைவு மஞ்சரி முதற்பாகம்

1. கடல் கடந்து வந்த தமிழ்

சீவக சிந்தாமணியை நான் முதன்முதல் 1887-ம் வருஷம் பதிப்பித்தபோது தமிழிலக்கியங்களில் அபிமானமுடையவர்கள் பலருடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கலாயின. எதிர்பாராத இடங்களிலிருந்து வாழ்த்துரைகள் பல வந்தன. தமிழுலகத்தில் அந்த நூல் உண்டாக்கிய இன்பக் கிளர்ச்சிக்கு அடையாளமாகப் பல கடிதங்கள் என்னிடம் உள்ளன. அதனால் எனக்குத் தமிழ் நூலாராய்ச்சியில் தீவிரமான ஊக்கம் உண்டாயிற்று.

அயல்நாட்டிலிருந்து 1891-ம் வருஷம் ஏப்ரில் மாதத்தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பாரிஸ் என்ற முத்திரை இருந்தது. அதன் மேல்விலாசம் தமிழிலும் இங்கிலீஷிலும் எழுதப் பட்டிருந்தது. பாரிஸிலிருந்து தமிழெழுத்து வந்தது என்றால் யாருக்குத் தான் வியப்பு உண்டாகாது? அந்தக் கடிதத்தை ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். கடிதம் முழுவதும் தமிழாக இருந்தது; எனக்கு மேலும் ஆச்சரியம் உண்டாயிற்று. கடிதத்தின் தலைப்பில் ஒரு புதிய செய்யுள் இருந்தது; அதைப் பார்த்தபோது எனக்கு உண்டான ஆச்சரியம் அளவு கடந்தது. அக்கடிதம் வருமாறு;-

SOCIETE HISTORIQUE
CERCLE St.SIMON Paris la April 3d 1891.

மஹாஸ்ரீ சாமிநாதையரென்னும் பெரும்புகழ் பொருந்திய தமிழாசிரியராம் மகா சிறப்பிற் புலவர் தமக்கு நாம் பாரிசு மாநகரத்தில் தமிழாசிரியர் எழுதுபவையாவன;-

"சிந்தாமணியாஞ் சிறப்புடைய காப்பியமே
பொன்றாதின் மாலை பொருந்திவரக் - கண்டேன்
சிலப்பதிகாரமுதற் சீர் நூல்கள் நான்கு
மளித்தலா மென்ம ரறைந்து."

நீர் 1887-ம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்த சிந்தாமணியைக் கண்டு மிகவு மதிசயமா யிருந்தோமென்றும் நீர் செய்த உலகோருக்குப் பெரியவுபகார மறிந்தோமென்றும் இன்னம் பழைய புத்தகங்களச்சிற் பதிப்பித்தற்குரியவாயுண்டென்றும் உமக்கு நாமெழுதவேண்டுமென்றெண்ணிக் கொண்டு வருகிறோமாதலால் மிகவும் களி கூர்ந்து வாழ்வோ மெப்போதென்றால் சிலப்பதிகாரம், மணிமேகலை குண்டலகேசி வளையாபதி யென்னும் வேறு நாற்பெருங் காப்பியங்கள் பரிசோதித்துக் கொடுத்த வப்போதே சொல்லுவோம்.

சிலப்பதிகாரமோ வென்றால் சென்னப்பட்டணத்தில் முன் 1885-ஆம் வருஷத்தில் அதின் முதற்காண்டம் உரையின்றிக் கொடுத்தார்களென்றறிகின்றோமானாலிரண்டாமும் மூன்றாமும் தருகவென்று பல விசேடமா யறவிய மனத்தரெல்லாருங்கேட்போர்.

மணிமேகலையோவென்றால் நங்கட்கண் ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனாலந்தப் பிரதியெழுதியவன் பழையவெழுத்துக்கள றியாதபடியினாலே சில கவிகளும் வார்த்தைகளுமெழுதாமல் விட்டான். ஆதலினாலந்தப் பிரதி படித்தற்குரியதல்லது.

சிறப்புப் பொருந்திய நூலவைகளச்சிற் பதிப்பித்தலின்றி விட்டாற் கையெழுத்துப் பிரதிகளடைக்கலாமோ வென்று கேட்கிறோம். இங்குதான் பாரிசு மாநகரத்தில் printiing type உண்டு. இதுவுமல்லாமல் French பாடைக்குத் திருப்பி யாவர்க்கும் பயன்செய்ய அளிக்கக் கூடுமென்று முமக்கு நாமெழுதுகின்றோம்.

எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக்கொண்டால் ஒரு காகிதமெமக்கு மறுபடியனுப்பினால் மிகவும் சந்தோடமாயிருப்போம்.

சுவாமியுடைய கிருபையெல்லாம் உம்மேல் வருகவென்று உங்கள் colleague and servant ஆயிருக்கிறோம்.

Prof. J. Vinson.

பிரான்சு தேசத்தில் உள்ள ஒருவரிடம் தமிழன்பு எவ்வளவு ஊறியுள்ளதென்பதை அக்கடிதம் நன்றாக வெளிக்காட்டியது. அவர் சீவக சிந்தாமணியைப் படித்து மிக்க இன்பத்தை அடைந்திருந்தார். அதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் நான்கும் வெளிவந்தால்தான் பூரணமான திருப்தி உண்டாகுமென்று அக்கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார்.

அதனை எழுதிய ஜூலியன் வின்ஸோனென்பவரை முன்பு நான் அறியேன். அவராக வலிந்து பாராட்டி எழுதினார். அவருடைய கடிதத்தில் உள்ள அன்புரைகள் என் உள்ளத்தைக் குளிர்வித்தன. பாரிஸிலும் தமிழ்ச் சுவடிகள் உள்ளன என்பதை அதிற் கண்டேன். உடனே அவருடைய கடிதத்திற்குப் பதில் எழுதினேன். அந்நகரத்தில் என்ன என்ன ஏட்டுச் சுவடிகள் உண்டென்று விசாரித்திருந்தேன். அவர் எவ்வாறு தமிழ் படித்தாரென்பதையும் எழுதும்படி வேண்டினேன்.

அவர் எழுதிய மற்றொரு கடிதத்தால் பாரிஸ் நகரத்திலுள்ள பெரிய புத்தகசாலையில் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரம் இருப்பதாகத் தெரிய வந்தது. தமிழானது கடல் கடந்து சென்று அங்கும் அன்பர்களைப் பெற்றிருப்பதை நினைந்து மகிழ்ச்சியுற்றேன்.


ஜூலியன் வின்ஸோனுடைய தந்தையார் காரைக்காலில் ஜட்ஜாக இருந்தாரென்றும் அக்காலத்தில் வின்ஸோன் தமிழ் படித்தாரென்றும் தெரிய வந்தது. வின்ஸோன் பாரிஸ் ஸர்வகலாசாலையில் கீழ்நாட்டுப் பாஷைகளுக்கு ஆசிரியராக இருந்து விளங்கினார்.

நான் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அச்சிடும்பொருட்டு ஆராய்ச்சி செய்து வந்தேன். அந்நூல்களின் உரைச்சுவடிகள் பாரிஸில் கிடைக்குமாவென்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதில் வருமாறு:

Paris la May 7th 1891.

எனதன்பிற்குரிய மகாசாஸ்திரிகளே,

நாம் போன மாசமுமக்கெழுதின காகிதம் உங்கிட்ட வந்ததுக்கு முன்னே நீர் எமக்கனுப்பிய காகிதமடைந்தது. அதில் நீர் சிலப்பதிகார மச்சிற் பதிப்பித்தற்குரிய தென்றும், அதைப் பரிசோதித்துக் கொண்டு வருகிறேனென்றும், கண்ட பிரதிகளில் உரை தப்பியிருக்கிறதென்றும், இங்கு பெரிய புத்தகசாலையிற் சிலப்பதிகாரத்தொரு கையெழுத்துப் பிரதியுண்டாவென்றும் கேட்கிறீர்.

அதற்கு உத்தரங் கொடுக்க வருகிறோம்.

Bibliothique Nationale என்கிற பெரிய புத்தகசாலையிலிருக்கின்ற ஓராயிரந் தமிழ்க் கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த் தெரியும். அவைகளின் list or cataloqueபண்ணினோமானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை.

பழைய புத்தகங்களோ வென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திற் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்த்தையு மெழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலும் மூலமாத்திர முரையின்றி வருகின்றது. அது ஓலைப் பிரதியாக்கும். நாம் அதைக் கடுதாசியிலெழுதினோம், நங்கட் சிறுபுத்தகசாலையிலே வைக்க. ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக் கடுதாசிப் பிரதியனுப்புவோம். நீரதைக் கண்டு மில்லாத கவிகளும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பி யனுப்பலாம்.

நாமிங்குத் தமிழைப் படித்தோமல்ல. நாம் பிள்ளையாயிருக்கும்போது எங்கடகப்பனார் காரைக்காலிலே French Judge ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவுமெழுதவும் படித்தோம். இங்கு நாம் செய்த சில கவிகளுமக்கு அனுப்புகின்றோம்.

இங்ஙனம்,
அன்புடையவன்
Julien Vinson

உரை குறையதாயினுஞ் சிலப்பதிகார மச்சிற் பதிக்க வேண்டும்.!!

அக்கடிதத்தைக் கண்டவுடன் மணிமேகலயிற் சில பகுதிகள் எழுதியனுப்ப வேண்டுமென்று அவருக்கு எழுதினேன். அவர் மிகுந்த ஊக்கத்தோடு அந்நூலிலுள்ள பதிகத்தை மாத்திரம் எழுதியனுப்பினார். முற்றும் எழுதி அனுப்ப அவர் சித்தமாக இருந்தார். பார்த்தவரையில் அந்தப் பிரதி என் ஆராய்ச்சிக்கு உதவியாக இராதென்று தோற்றியதால் அவரை மேலும் சிரமப் படுத்தவேண்டாமென்று நிறுத்திக்கொண்டேன். அவர் அனுப்பிய பாட்டுக்கள் இலக்கணப் பிழையின்றி இருந்தன.

அப்பால் அவர் எனக்கு எழுதியகடிதங்கள் பல. ஒவ்வொரு கடிதத்திலும் பழைய தமிழ் நூல்கள் வெளிவரவேண்டுமென்பதில் அவருக்கிருந்த ஆவலைப் புலப்படுத்துவார். பிரெஞ்சு பாஷையில் அவைகளை மொழி பெயர்க்க வேண்டுமென்பது அவருடைய விருப்பம்.

சிந்தாமணியின் சுருக்கமொன்றைப் பிரெஞ்சு பாஷையில் எழுதியிருந்தார். அப்புத்தகத்தை அவர் எனக்கு அனுப்பினார். அதை நான் ஆங்கிலப் புத்தகமென்றெண்ணிக் கும்பகோணம் காலேஜில் முதல் ஆசிரியராக இருந்த ஸ்ரீமான் ராவ் பகதூர் ஸாது சேஷையரிடம் காட்டினேன். அவர் அது பிரஞ்சு பாஷையென்றும் பிரின்ஸிபாலுக்குக் காட்டினால் படித்துச் சொல்லுவாரென்றும் கூறினார்.

அப்போது பிரின்ஸிபாலாக இருந்த ஸ்ரீமான் ஜே,பி.பில்டர்பெக் துரையவர்களிடம் அதை உடனே காட்டினேன். அவர் அதில் வின்ஸோன் துரை என்னை விசேஷமாகப் பாராட்டி யுள்ளாரென்று எடுத்துக் கூறி, "உங்களால் இந்தக் காலேஜுக்கு ஒரு கெளரவம்" என்றார். தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ்க் கல்வியுடையாரோடு பழகித் தமிழாராய்ச்சி செய்து வருவதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் புலப்படவில்லை. அயல் நாட்டில் ஒரு துணையுமின்றித் தமிழ் ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியன் வின்ஸோனுடைய தமிழன்பு தான் எனக்கு மிகவும் சிறந்ததாகத் தோற்றியது.


என்னுடைய நூற்பதிப்புக்களை மிக்க அன்போடு வின்ஸோன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி என்ன வேலை நடந்து வருகிறதென்று விசாரித்து எழுதுவார். நான் அனுப்பும் புதிய புத்தகங்களை உடனே ஆழ்ந்து படித்து மகிழ்ந்து என் முயற்சியைப் பாராட்டி வரைவார். இன்ன இன்ன விஷயங்களை நூதனமாக அறிந்து கொண்டேனென்று அறிவிப்பார்.


சிலப்பதிகாரப் புத்தகம் எப்பொழுது வெளிவருமென்று அடிக்கடி கேட்டு வந்தார். அது வெளி வந்தவுடன் அவருக்கு அனுப்பினேன். அதைக் கண்டு அவர் அடைந்த இன்பத்துக்கு எல்லையில்லை. என்னைப் பாராட்டி அகவலாக ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு:-


குருவே துணை

(ஆசிரியப்பா)

இளங்கதிர் ஞாயிறிருடொறு நீக்கியபின்
விளங்கிடைச் சங்கேறி வெண்டிரைக்கடல்சூழ்
மாநில மதனில்வாழ் மறைமிகு சோழப்
பூநிலத் தலர்ந்த புகார்நக ரத்துக்
கோவலன் கண்ணகி தங் கூறரு மன்போடு
பாவல முடையாட்குப் பற்பொருட் பரத்தலும்
ஆங்கவன் றுயருமு மணிகிளர் சிலம்பு
வாங்குபு போயது மதுரை யிற்கொலைப்
படலு முதலிய பறை தருஞ் சரிதை
அடல்வினைப்பயனெறி யமைபொருளின்பம்
வேடெனயாந் தெளிவுற வின்மொழிக்காப்பியம்
சிலப்பதிகாரஞ் சிறந்த பெயரால்
உலகெலா மறிய வொளிதரு சென்னைக் கன்
அச்சிட வளர்த்தீ ரடைந்த பெரும்புகழ்
மாசிலா நாம கண் மதி தெரிந் திசைக்கும்
ஒருபே ரகத்திய னுருக்கொண்டு
மருளுடை மண்மிசை வந்து தோன்றினானென.


புறநானூற்றைப் பார்த்து அதன் முகவுரையில் எட்டுத் தொகைகளைப்பற்றி நான் கொடுத்திருந்த செய்திகளைப் படித்து வியப்புற்றார். அதுகாறும் எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய செய்தி ஒருவருக்கும் விளக்கமாகத் தெரியாமல் இருந்தது. அவற்றில் ஒன்றாகிய பரிபாடலைப் பதிப்பிக்கும் செலவைத் தாமே ஏற்றுக்கொள்வதாக அவர் எழுதினார்.


கடல் கடந்து சென்ற தமிழ்ச் சுவடிகளிலே அரிய நூல்கள் எவையேனும் இருக்குமென்பது என் கருத்து. ஆயிரம் பிரதிகளில் என்ன என்ன நூல்கள் உள்ளனவோவென்று சிந்தித்தேன். என் பிரஞ்சு நண்பர் சில நூல்களின் பெயர்களை எழுதி அனுப்பினார். வில்லைப்புராணம் என்று ஒன்று இருப்பதாக ஒருமுறை எழுதினார். நான் அதைப் பற்றிப் பின்னும் விசாரித்தேன். அவர் அது 494 செய்யுட்களை யுடையதென்றும் இன்ன இன்ன சருக்கங்களையுடையதென்றும் எழுதி யிருந்தார். அது மட்டுமா? அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் கேட்டு எழுதியிருந்த வாக்கியங்களால் எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்து தம் கைப்பட அந்நூல் முழுவதையுமே எழுதி அனுப்பிவிட்டார்.


ஏட்டுச் சுவடியைப் பார்த்து எழுதுவது எவ்வளவு சிரமமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டில் அங்ஙனம் எழுதக் கூடியவர்கள் மிகச் சிலரே. தமிழ் நூல்களைச் சிரத்தையோடு படிப்பவர்களே அதிகமாக இல்லாதபோது ஏட்டுச் சுவடியைப் படிப்பதாவது! பார்த்து எழுதுவதாவது!


இந்த நிலையில் பாரிஸிலிருந்து கடல் கடந்து வந்த வில்லைப் புராணத்தை நான் புதையலெடுத்த தனம் போலவே கருதினேன். என் நண்பர் அதை எத்தனை சிரத்தையோடு எழுதியிருந்தார்! அதன் தலைப்பில் சிவலிங்கத்தின் உருவமும் நந்தியுருவமும் வரைந்திருந்தார். அப்பால் அந்தப் பிரதியைக் கொண்டு வேறொரு பிரதி எழுதச் செய்து வின்ஸோன் துரைக்கே அவரது பிரதியை அனுப்பி விட்டேன்.


வில்லைப் புராணத்தை அதுகாறும் நான் படித்ததில்லை; கேட்டதுமில்லை. அப்புராண ஏடுகளும் எனக்குக் கிடைக்கவில்லை. படித்துப் பார்த்தபோது அது வில்வவனமென்னும் தலத்தின் புராணமாக அது காணப்பட்டது. வில்வமென்பது வில்லமென வழங்கும். வில்வவனமென்பது வில்லவனம் என்று ஆகி அது மருவி வில்லையாயிற்றென்று தேர்ந்தேன். தமிழ்நாட்டில் எவ்வளவோ வில்வவன ஸ்தலங்கள் இருக்கின்றன. எந்த வில்வவனத்தைப் பர்றிப் பாராட்டுவது அந்நூலென்று எனக்கு விளங்கவில்லை. மேலும் மேலும் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.


அப்புராணத்திலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றிலிருந்து (பாயிரம், 10) அங்கே எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் குயிலம்மையென்று தெரியவந்தது. அப்போது,


"பக்குவமாகக் கவிநூறு செய்து பரிசுபெற
முக்கரணம்மெதிர் பல்காலும் போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடியலுத்து வந்த
குக்கலையாண்டருள் வில்வ வனத்துக் குயிலம்மையே!"


என்ற தனிப்பாடலும் ஞாபகத்துக்கு வந்தது. அந்தத் தனிப்பாடல் வில்லைப் புராணத்திற்குரிய தலத்தைப் பற்றியதென்று நிச்சயித்தேன். அப்பால் என்னுடைய நண்பர்கள் மூலமாக விசாரித்து வந்தேன். புதுச்சேரிக்கு அருகில் உள்ள வில்வநல்லூர் அம்பிகையின் பெயர் கோகிலாம்பிகை யென்று தெரிய வந்தது. அவ்வூர்ப் புராணம் கிடைக்குமாவென்று தேடச் செய்தேன். நல்லகாலமாகச் சில பிரதிகள் அவ்வூரிலிருந்து கிடைத்தன; அவற்றின் உதவியால், கடல் கடந்து வந்த பிரதியைச் செப்பம் செய்து கொண்டேன்.


அந்தப் புராணம் *வீரராகவரென்னும் பெயருடைய ஒரு புலவரால் இயற்றப் பெற்றது. நல்ல வாக்காக இருந்தது. ஒரு முறை புதுச்சேரிக்குச் சென்றபோது, அதனருகில் வில்வநல்லூர் இருப்பதை அறிந்து அங்கே சென்று ஆலய தரிசனம் செய்தேன். அது மிகப் பழைய தலமாக இருக்கவேண்டுமென்று தோற்றியது. அந்தத் தலத்தைப் பற்றி ஏதேனும் தெரியுமாவென்று பலரை விசாரித்தேன். ஒரு முதிய வீரசைவர், "இது மிகப் பழைய தலம். தேவாரத்தில் வரும் வில்வேச்சரமென்னும் வைப்பு ஸ்தலம் இதுதான்.: என்றார். நான் கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன்.


வில்வவனத்தைப் பற்றி நான் அறிந்த விஷயங்களை வின்ஸோன் துரைக்குப் பிறகு எழுதினேன். அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் தமிழ் இலக்கணமொன்று (Tamil Manual) எழுதினார். அதை எனக்கு அனுப்பினார்.


ஒரு முறை அவர் திருக்குறள், காமத்துப் பாலின் பிரெஞ்சுமொழிபெயர்ப்புப் புத்தகமொன்றை அனுப்பி, "இதனை என் மாணவர் ஒருவர் மொழி பெயர்த்தார். நான் முகவுரை எழுதியிருக்கிறேன்." என்று எழுதினார். தமிழாராய்ச்சியாளராக இருப்பதோடு தமிழ்ப் போதகாசிரியரகவும் அவர் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். தம்முடைய மாணாக்கரொருவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறாரென்றும் என்னைப் பார்க்க வருவாரென்றும் எழுதினார். அம்மாணாக்கர் பெயர் பொண்டெனூ'(Marquis De Barrique 'Fontainieu) என்பது.


1902-ம் வருஷம் அம்மாணாக்கர் இந்நாட்டில் நடைபெற்ற கீழ்நாட்டுக் கலைஞர் மகாசபை'(Orientalists' 'Congress)யின் பொருட்டு வந்திருந்தார். அவர் கும்பகோணத்தில் என் வீட்டை விசாரித்துக்கொண்டு வரும்போது போலீஸார் அவரை வேற்று நாட்டு ஒற்றரென்றெண்ணிப் பிடித்துப் பாதுகாப்பில் வைத்துவிட்டார்கள். அது போயர் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். சிறைப்பட்ட பிரஞ்சுக்காரர் அக்காலத்தில் கும்பகோணத்தில் ஸப் கலெக்டராக இருந்த ஸ்ரீமான் வைபர்ட் துரையென்பவருக்கு ஒரு கடிதமெழுதித் தாம் இன்னாரென்பதையும் தாம் வந்த காரியம் இன்னதென்பதையும் தெரிவித்தார். அவர் பிரெஞ்சு பாஷை தெரிந்தவர். கடிதம் கண்ட உடனே அவரே நேரில் வந்து பிரெஞ்சுக் கனவானை விடுவித்துத் தம் விருந்தினராக இருக்கச் செய்தார்.


அப்பால் பொண்டெனூ சிலருடன் என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஜூலியன் வின்ஸோனைப் பற்றி அவர் மிகவும் மதிப்பாகப் பேசினார். என்னிடம் அவ்விருவர்க்கும் உள்ள பேரன்பு அவருடைய சம்பாஷணையால் விளங்கியது.


நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், "இந்த மாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?" என்று கேட்டார். நான், "என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத் திண்ணையிலும் இருந்து படித்து வந்த மகாவித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்." என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது. அவரோடு நெடுநேரம் பேசினேன். தாம்போகும் மகாசபையில் ஏதேனும் ஒரு பழைய தமிழ் நூலைப் பற்றிய கட்டுரை ஒன்றைத் தாம் வாசிக்க விரும்புவதாகவும், அதற்கேற்ற பழைய நூற்பிரதி ஒன்று உதவினால் நலமாக இருக்குமென்றும் கூறினார். வெளிப்படாமல் இருந்த பழைய காஞ்சிப் புராணத்தை நான் தருவதாக ஒப்புக்கொண்டேன். அவர் தம் செலவில் அதன் பிரதி ஒன்றை எழுதச் செய்து கொடுத்தால் அனுகூலமாக இருக்குமென்று சொன்னார். அப்படியே செய்வதாக நான் கூறினேன். அப்பால் அவர் தஞ்சை சென்று அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு:-


தஞ்சாவூர்,
6 அக்டோபர், '02.

மகாஸ்ரீஸ்ரீ சாமிநாதய்யரவர்களுக்கு அனேக வந்தனம்.

நான் கும்பகோணத்தை விட்டுப் புறப்படும்போது உங்களுக்கு விடுமுறை நாள் என்று கேள்விப்பட்டேன். ஆகையால் தங்களைச் சிரமப் படுத்த எனக்கு மனதில்லை.


மகாஸ்ரீ கலெக்டர் வீட்டில் நான் விருந்துண்ணும்போது உங்களைக் கீர்த்தியால் அறிந்து அதிக மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்களைத் தாங்கள் எனக்குக் காட்டிய பழைய காஞ்சிப் புராணத்தை என்னுடைய செலவில் காபியெடுக்கத் தங்களைக் கேட்கும்படி பிரார்த்தித்துக்கொண்டேன். நான் அந்தப் புராணத்தை அச்சிட்டு வெளிப்படுத்த மாட்டேனென்கிற நம்பிக்கை தங்களுக்கு இருக்கலாம்.


அதின் சாராம்சத்தை அறிந்து கீழ்நாட்டுப்பாஷைகளை ஆதரிக்கும் சங்கத்துக்கு (Orientalists' Congress) எழுத எண்ணமே தவிர வேறு எண்ணங் கிடையாது. இந்த அருமையான அச்சிடாத புஸ்தகத்தைத் தாங்கள் கஷ்டப்பட்டுக் கண்டு பிடித்தீர்களென்றும் அதின் அசல் தங்களிடத்தில் இருக்கிறதாகவும் வெளிப்படுத்துவேன்.


நான் தங்கள் சினேகிதரும் என் உபாத்தியாயருமாகிய மகாஸ்ரீ வின்ஸோன் துரை(M.Vinson) பேரைச் சொல்லித் தங்களைப் பார்க்க வந்தபோது என்னை எவ்வளவு அன்பாய் அங்கீகரித்தீர்கள்! என்றால் தங்களை யான் கேட்கும் புராணத்தின் காபியைத் தருவீர்களென்று நம்புகிறேன்.


சாஸ்திரங்களை ஓங்கச் செய்யவும் அழகிய தமிழ்ப்பாஷையின் பெருமையை வெளிப்படுத்தவுமே இந்த உபகாரத்தைத் தங்களிடம் கேட்கிறேன்.

தங்கள் அபிமானத்தை எதிர்பார்க்கும்

Marquis De Barrique Fontainieu


நான் மதுரை, இராமேஸ்வரம் போய்த் திரும்புகையில் கும்பகோணம் வருகிறேன். தாங்கள் எனக்கு எழுத வேண்டுமானால் புதுச்சேரிக்குக் கடிதம் எழுதவும். அங்கிருந்து எனக்கு வந்து சேரும்.


அவர் விரும்பியபடி பழைய காஞ்சிப் புராணத்தப் பிரதி செய்ய இயலவில்லையாதலின் என்னிடமுள்ள காகிதப் பிரதியையே அனுப்பினேன். அவர் அதை உபயோகித்துக்கொண்டு எனக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.


அவர் வந்து என்னைப் பார்த்ததையும் காஞ்சிப் புராணம் பெற்றது முதலியவற்றையும் தம்முடைய ஆசிரியராகிய வின்ஸோன் துரைக்கு எழுதி யிருந்தார். அவற்றை அறிந்த அவ்வாசிரியர் எனக்குத் தம் மாணாக்கரைப் பற்றி எழுதினார்.


ஸ்ரீபொண்டெனூ தம் கடிதத்தில், 'உங்களைக் கீர்த்தியால் அறிந்து மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்கள்' என்று குறிப்பித்திருந்தார். அதை நான் முதலில் நன்றாகக் கவனிக்கவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு 1903-ம் வருஷம் ஜனவரி மாதம் தஞ்சாவூர்க் கலெக்டரிடமிருந்து ஏழாம் எட்வர்ட் மன்னர் முடிசூட்டு விழாவின் சம்பந்தமாக நடக்கும் தர்பாருக்கு வரும்படி எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் போனேன். அப்போது அரசாங்கத்தார் நான் பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து வருவதை நன்கு மதித்து ஒரு நன் மதிப்புப் பத்திரம் (Certificate of merit in recognition of researches and work in connection with ancient Tamil manuscript) அளித்தனர். அதனைக் கலெக்டர் துரை வழங்கினார். பொண்டெனூ என்னைப்பற்றிச் சிறப்பித்துப் பேசியதன் விளைவென்றே நான் அதனைக் கருதினேன். எனக்கு அரசாங்கத்தார் முதன்முறையாகத் தந்த அந்தச் சிறப்பை நன்றியறிவுடன் ஏற்றுக்கொண்டேன்.


எதிர்பாராதபடி இவ்விரண்டு பிரெஞ்சு நண்பர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிடமிருந்து 1910-ம் ஆம் வருஷத்திற்குப் பின் எனக்குக் கடிதம் கிடைக்கவில்லை. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இயலவில்லை. ஆனாலும் வில்லைப் புராணத்தையும், பழைய காஞ்சிப் புராணத்தையும் பார்க்கும்போதெல்லாம் பிரெஞ்சு தேசத்துத் தமிழாசிரியரையும், தமிழ் மாணவரையும் நினைக்கிறேன். அவ்விரண்டு நூல்களுள் காஞ்சிப் புராணம் இன்னும் வெளிப்படவில்லை.


ஜூலியன் வின்ஸோன் இப்பொழுது இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென்று நூறு கடிதங்களாவது எழுதியிருப்பார். அவர் இல்லை. ஆனால் அவர் அன்போடு எழுதிய கடிதங்கள் இருக்கின்றன. அவர் பழைய அன்பை நினைவூட்டும் வில்லைப்புராணம் வில்வவனப் பெருமையைக் காட்டிலும் அதிகமாக வின்ஸோன் துரையின் தமிழன்பை அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது.


--Geethasambasivam 10:32, 4 ஜூலை 2010 (UTC)--Geethasambasivam 10:32, 4 ஜூலை 2010 (UTC)



பங்களிப்பாளர்கள்

Dev, Geethasambasivam மற்றும் Drtv

"https://marabuwiki.org/index.php?title=கடல்_கடந்து_வந்த_தமிழ்&oldid=2304" இருந்து மீள்விக்கப்பட்டது