பரத்தை கூறிய வஞ்சினம்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:42, 28 பெப்ரவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் ப.கிருஷ்ணமூர்த்தி ஏதேனும் ஒரு தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்கள் அத்தொழிலில் உள்ள மிகக் கடினமான, நிறைவேற்ற முடியாத ஒரு செயலை நிறைவேற்றுவதாக உறுதி மேற்கொள்வர். இதை அத்தொழிலில் உள்ள சவாலாகக் கருதுவர். இன்னவாறு செய்து முடிப்பேன் என்று அவர்கள் கூறுகிற செயலை, ஒருவேளை நிறைவேற்ற முடியவில்லை என்றால், தான் அத்தொழிலையே விட்டுவிடுவதாகவும் கூறுவதுண்டு. தற்கால உலகியலில் காணப்படும் இந்நிலையே அக்காலத்தில் வஞ்சினம் கூறுதலாக இருந்திருக்கும் எனக் கருத இடமுண்டு.
இடையறாது போர் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு காலமாக சங்ககாலம் இருந்தமையால், அக்காலத்தில் போரே ஒரு தொழிலாக இருந்தமை வெளிப்படை. அரசன் ஒருவன், அவனுடைய ஆற்றலை உணராது, இகழ்ந்து போர்தொடுக்க முனையும் மற்ற பகையரசர்களிடம், அவர்களை, "இன்னவாறு செய்வேன் இல்லையெனில் இன்னவாறு ஆவேன்" என்று சூள் கூறுவது வஞ்சினம் ஆகும்.
"இன்னது பிழைப்பின் இதுவா கியர்எனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்". என்கிறது தொல்காப்பியம் - புறத்திணையியல் (19).
வஞ்சினம் கூறுதல், காஞ்சித்திணையில் அமைந்துள்ள ஒரு துறை. இத்துறையில் அமைந்ததாகப் புறநானூற்றில் மூன்று பாடல்கள் (புறம்.71 - 73) காணப்படுகின்றன. அவற்றை முறையே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் பாடியுள்ளனர்.
தம்மை இகழ்ந்த பகையரசரைப் போரில் வென்று தம் வஞ்சினத்தை நிறைவேற்ற முடியாமல் போனால் தாம் அடைய வேண்டிய இழிநிலைகள் என்னென்ன என்பனவற்றையும் கூட அம்மன்னர்கள் மூவரும் பட்டியலிடுகின்றனர்.
சோழன் நலங்கிள்ளி கூறும் வஞ்சினம் இது (புறம் - 73):- "உண்மையான அன்புடன் ஓர் ஆடவனுடன் காதல் கொள்ளாமல் அவனிடமிருக்கும் பொருளையே பொருளாகக் கொள்ளும் பொதுமகளிரிடையே (பரத்தையர்) என் மார்பில் அணிந்துள்ள மாலை குழைவதாக",என்பது பரத்தையருடன் கூடி வாழும் நிலையைக் குறிக்கிறது. (அது இழிநிலையாகக் கருதப்படுவதால்) அந்நிலையைத் தான் அடைய நேரட்டும் என வஞ்சினம் கூறினான் சோழன் நலங்கிள்ளி. பரத்தையரைச் சேர்வது இழிவான நிலை என்று சோழன் கூற, அதுபோன்ற இழிவான நிலையில் இருக்கும் பரத்தைப் பெண் ஒருத்தி, "தான் அடைந்த பழிச்சொல்லுக்குப் பரிகாரம் தேடவில்லையென்றால், தான் செய்யும் பரத்தமைத் தொழிலையே விட்டுவிடுவதாக",வஞ்சினம் கூறுகிறாள்.
இனி ஒருமுறை என்னுடைய சேரிக்குத் தலைவன் வந்தால் (கண்டிப்பாக வருவான்), அவன் சூடியுள்ள மாலையையும், அவனுடைய ஆடையையும் பற்றிக்கொள்வேன். பெண் யானை, ஆண் யானையைப் பிடிக்குமாறு போல, தலைவனைப் பிடித்து, என்னுடைய கூந்தலைக் கயிறாகக் கொண்டு என் தோளில் கட்டி, அவனுடைய மார்பினைச் சிறைப்படுத்துவேன். அவ்வாறு தலைவனைச் சிறைப்பிடிக்க முடியவில்லை என்றால், என் தாய் பேணிப் பாதுகாத்து வளர்த்த என்னுடைய அழகு எவருக்கும் பயன்படாது துன்பமடைந்து கெடுவதாக", என்று வஞ்சினம் கூறுகிறாள்.
"வருகதில் அம்மஎம் சேரி சேர அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காண தாரும் தானையும் பற்றி ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்துஅவன் மார்புகடி கொள்ளேன் ஆகின் ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல் பரந்து வெளிப்படாது ஆகி வருந்துக தில்ல யாம்ஓம்பிய நலனே". (அகநா - 276)
இல்லற உரிமையுடையவள் தலைவி. அவளே தலைவன் பரத்தையரிடம் சென்றது குறித்து வஞ்சினம் கூறத்தக்கவள். அவள் அமைதியாக இருக்கவும், உரிமை இல்லாத பரத்தை வஞ்சினம் கூறுகிறாள். இதற்குக் காரணம், பரத்தையைத் தலைவி பழித்ததில் எள்ளளவும் நேர்மை இல்லை என்பதே ஆகும். எனவே, பரத்தை தன் மீதான பழிச்சொல் கண்டு வெகுண்டு இவ்வளவுக்கும் காரணமான தலைவனை, "தான் இன்னவாறு செய்வதாகவும், இல்லையெனில் இன்னவாறு ஆவதாகவும்", வஞ்சினம் கூறுகிறாள்.
இனிய இல்லறம் நடத்திக்கொண்டிருக்கும் தலைவியிடமிருந்து தலைவனைப் பிரித்தது பரத்தையின் குற்றமில்லையா என்றால், தலைவன், தலைவியை விட்டுப் பிரிந்தது குற்றமாக இருப்பினும், அவனைப் பிரித்தது தன்னுடைய குற்றம் இல்லை என்கிறாள் பரத்தை.
பரத்தையரை நாடிச் செல்லும் பழக்கம் ஆண்களுக்கு உரியதேயன்றி, ஆண்களை நாடிச் செல்லும் பழக்கம் பரத்தையருக்கு (பொதுமகளிர்) இல்லாதிருந்த காலமாகச் சங்ககாலம் இருந்திருக்கக்கூடும். "வாலிழை மகளிர்த் தழீஇய சென்றவன்" என்ற குறுந்தொகைப் பாடலில் (45), பரத்தை கூறிய வஞ்சினம் "தழீஇய" என்பதற்கு உரை எழுதும் பெருமழைப் புலவர், "தலைவன் தாம் தழுவ விரும்புவ தல்லால் அவர் (பரத்தை) தழுவ விரும்பார்" என்று கூறியுள்ளார். அதனாலேயே பரத்தையும், "தலைவனைத் தேடித் தான்வரவில்லை என்றும், தலைவனே தன்னைத் தேடி வந்ததாகவும்" குற்றம் சாட்டுகிறாள். அதனால் தலைவி, பரத்தை மீது சினங்கொண்டு பழியுரைக்கக் காரணம் எதுவுமில்லை என்பது பரத்தையின் நிலைப்பாடாக இருக்கிறது. பரத்தை கூறும் உவமையும் அதற்கு மிக வலிமையான சான்றாக அமைகிறது. வாளை மீனை இரையாகக் கொள்ளும் பொருட்டு எழுந்த நாரை, மெதுவாக நடந்து செல்கிறது. நாரை நடந்து செல்லும் ஓசையை மீன் அறிந்து கொண்டால், அது தப்புவதற்கு வாய்ப்பாகிவிடும் என்பதால், நாரை மெல்லமெல்லச் செல்கிறது. அவ்வாறு நாரை மெல்ல ஒதுங்கிச் செல்வது, கன்னமிடச் செல்லும் கள்வனின் நடையைப் போன்று இருக்கிறது என நாரையின் நடைக்கும் ஓர் உவமை கூறப்படுகிறது. "நீளிரும் பொய்கை இரைவேட்டு எழுந்த வாளை வெண்போத்து உணீஇய நாரைதன் அடிஅறி வுறுதல் அஞ்சி பைபயக் கடிஇலம் புகூஉம் கள்வன் போல சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரன்". - (அகநா - 276)
வைகறையில் எழுந்து பரத்தையரைப் பார்க்கச் சென்ற தலைவர்கள் ஒருபுறம் இருக்க, அகநானூற்றில் இந்தத் தலைவன் மட்டும் கள்வனைப் போல நள்ளிரவில் செல்கிறான். பரத்தையைத் தேடிச்சென்றது தலைவனின் குற்றம். தலைவன் மீதுள்ள குற்றத்தை அறியாத தலைவி, பரத்தையைப் பழி தூற்றுவதற்கு ஒரு காரணமும் இல்லை. எந்தக் குற்றமும் இல்லாத நிலையில், தன்மீது தூற்றப்படும் பழியால் சீற்றம் கொண்ட பரத்தை வஞ்சினம் கூறுகிறாள்.
தலைவன் பரத்தையிடம் வந்துவிட்டு மீண்டும் தலைவியிடம் திரும்பச் செல்வதனாலேயே இவ்வளவு பழியும் பரத்தையின் மேல் விழுந்துவிடுகிறது. தலைவன் இல்லத்திற்குத் திரும்பாமல் பரத்தையுடனேயே இருந்துவிட்டால், தலைவியின் பழிதூற்றல் குறித்து அவள் அஞ்சவேண்டியதில்லை. தலைவன் இன்னும் ஒருமுறை தன்னுடைய சேரிக்கு வருவான் என்பதை உறுதியாக நம்பும் பரத்தை, அவன் அவ்வாறு வரும்பொழுது தன்னுடைய தோளையும், கூந்தலையும் கொண்டு தன் மார்பிலேயே சிறைவைத்துவிடுவதாகக் கூறுகிறாள்.
ஒருவேளை பரத்தை கூறியபடி, தலைவனை அவளால் சிறைவைக்க முடியவில்லை என்றால், அப்போது தான் அடைய வேண்டிய தண்டனை என்னவென்பதையும் அவளே கூறுகிறாள்.
"என்னுடைய தாயால் பேணிப் பாதுகாத்து வளர்க்கப்பட்ட இந்த அழகு முழுவதும் (யாருக்கும் பயன்படாமல்) கெடுவதாக", என்கிறாள். தன்னிடம் ஒரு பொருள் கேட்டு வந்தவருக்கு அதைக் கொடுக்காதவன் சேர்த்து வைத்த செல்வம் போன்று, இந்த அழகு கெட்டு அழிவதாக என்கிறாள் பரத்தை. பெண்ணின் அழகு பயன்படாமல் கெட்டு அழிவது பிறருக்குப் பயன்படாத செல்வம் போன்றது என்று வள்ளுவரும் (குறள் - 101:7) கூறுகிறார்.
இக்குறட்பாவின் கருத்துடன் பரத்தைப்பெண் கூறும் வஞ்சினத்தையும் பொருத்திப் பார்த்தால் அவள் கூறும் வஞ்சினத்தின் உட்பொருள் விளங்கும். நன்றி:- தினமணி --Ksubashini 11:42, 28 பெப்ரவரி 2010 (UTC) |