இன்னும் அறியேன்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:41, 16 பெப்ரவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர் தட்டச்சு செய்து அளித்தவர்: தமிழ்த்தேனீ
தமிழ் ஆராய்ச்சியில் நான் ஈடு பட்ட பிறகு தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடுவது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான வேலையாகிவிட்டது. அச்சிட்ட புஸ்தகமோ, அச்சிடாததோ எதுவானாலும் சுவடியின் உருவத்திலே காணும்பொழுது ஏதோ தெய்வத்தின் உருவத்தைக் காண்பது போலவே நான் எண்ணுவது வழக்கம்.சுவடிகளைத் தேடி அவை இருக்குமிடம் சென்று மூலை முடுக்குகளிற் கிடக்கும் அவற்றைத் தொகுத்து ஆராய்வதில் என் உள்ளம் ஒரு தனி இன்பத்தை அடையும். என் உடலில் முதுமைப்பருவத்தின் தளர்ச்சி ஏறிக்கொண்டே வந்தாலும் என் உள்ளத்தில் மட்டும் ஏட்டுச்சுவடிகளின்பாலுள்ள பற்று இறங்கவே இல்லை.
“இல்லை; உங்களிடம் ஒரு சமாசாரம் சொல்லவேண்டும்” என்றார் அம்மாணாக்கர்.
அவர்: நான் சாப்பிடும் விடுதியில் ஒருவர் வந்திருக்கிறார். அவர் மிக்க செல்வராக இருந்தவராம். பெரிய குடும்பத்திற் பிறந்தவராம். நல்ல நிலையில் இருந்தவராம். அவரைப் பார்க்கும் போதே அவர் பெரிய மனிதர் என்று தோற்றுகிறது, இப்பொழுது தம் செல்வத்தையெல்லாம் இழந்துவிட்டுக் கடன்காரர்களுக்குப் பயந்து தலைமறைவாக இருக்கிறாராம். அவர் தம்முடைய வீட்டில் பலகாலமாக உள்ள ஏட்டுச் சுவடிகளையெல்லாம் கொண்டுவந்திருக்கிறார். அதுவரையில் அந்த மாணாக்கர் கூறியது சத்தில்லாத சமாசாரமாக இருந்தது; சற்று பாராமுகமாகவே கேட்டுவந்தேன்.ஏட்டுச்சுவடிகளென்ற வார்த்தை என் காதில் விழவே கவனமாகக் கேட்கத் துவங்கினேன்.
“ இல்லை; இல்லை. எனக்கும் அந்தச் சந்தேகம் வந்தது,” இவ்வளவு சுவடிகளையும் விலைக்கு வாங்கிக் கொள்ள எங்கள் தமிழாசிரியரால் முடியாதே’ என்று அவரிடம் சொன்னேன். ‘பணம் வேண்டாம்; இவைகளை வாங்கிக் கொண்டு பாதுகாக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.என் கஷ்ட காலம் இவைகளைத் தரும்படியாயிற்று! அருமை தெரியாதவர்கள் கையில் அகப்பட்டு வீணாவதை விடத் தக்கவர்களிடம் இருந்தால் நல்லதென்றெண்ணிக் கொண்டுவந்தேன்’ என்று அவர் சொன்னார்.”
நான் என் வீடு சென்றேன். என் வீட்டிலிருந்து அவ்விடுதி மிகவும் சமீபமாகவே இருந்தது. நான் வீட்டுக்குப் போன சிறிது நேரத்தில் அம்மாணாக்கர் தம்மால் தூக்கிக் கொள்ளக்கூடிய சுவடிகளை அள்ளிக் கொணர்ந்து என் வீட்டிற்கு வந்து என் முன் போட்டார்.
“ ஏன் அப்பா ! நான் வருகிறேன்; அவர் இருக்கிறாரா?”என்று கேட்டேன்.
பலவகையில் துன்பங்களை அடைந்து தேடாமல்,சுவடிகள் வலிய வந்து எனக்குமுன் குவிந்தனவென்றால் எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு வேறு எதையாவது ஒப்புக்கூறமுடியுமா? ‘ இவற்றை வழங்கிய உபகாரியைப் பாராமல் இருப்பது பிழை’ என்று எண்ணினேன்.
“சுவடிகளின் அருமை உனக்குத் தெரியாது. இவற்றைத் தந்த அந்தக் கனவானை நான் பாராமல் இருப்பது பாவம் ! வா;பார்க்கலாம்’ என்று நான் அம்மாணாக்கரிடம் சொன்னேன்.
போகும் போதே என் மனதில் அக்கனவானுடைய நிலையைப் பற்றிய எண்ணங்கள் எழுந்தன; நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம்;பாவம்! தமிழ்ச்சுவடிகளைப் பிறரிடம் கொடுப்பது பெரிய அகௌரவமென்றும் பஞ்சகாலத்தில் பிள்ளையைக் கொடுத்துவிடுவது போன்றதென்றும் எண்ணினார் போலும்! இவ்வளவு கஷ்டத்தில், இவைகளை நம்மிடத்தில் ஒப்பிக்க வேண்டுமென்ற கருத்து வந்தது நம்முடைய நல்ல காலந்தான், அக்கனவான் ஒரு அபூர்வப் பிறவியுடையவர். அவரைப் பார்த்து மகிழ்ந்து சல்லாபம் செய்யவேண்டும்’ என்று எண்னினேன்; வறுமையின் கொடுமையைப் பற்றி நினைத்தேன்; சுவடிகள் கிடைத்தது பற்றி சந்தோஷமும் அக்கனவானது நிலை பற்றி வருத்தமும் மாறி மாறி என் மனத்தே உண்டாயின என்னுடைய நன்றியறிவை அவருக்கு நன்றாக வெளிப்படுத்த வேண்டுமென்று கருதினேன்,ஆயினும் என் உள்ளிருந்த முழு உணர்ச்சியையும் வார்த்தைகளால் எப்படி வெளியிட முடியுமென்று தயங்கினேன்.
இங்கனம் பலவாறு எண்ணமிட்டுக்கொண்டே சாப்பாட்டு விடுதிக்குள் நுழைந்தேன். மாணாக்கர் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.நான் யாரைப் பார்க்கவேண்டுமென்று அவ்வளவு ஆவலோடு சென்றேனோ அந்தக் கனவான்,தம்முடைய சுவடிகளெல்லாவற்றையும் அம்மாணாக்கர் என்னிடம் சேர்ப்பித்துவிட்டதை யறிந்து,ஒருவரிடமும் சொல்லாமற் போய்விட்டார். நான் அவரை அங்கே காணவில்லை.
என்னுடைய நன்றியறியை எதிர்பாராமலே அவ் வுபகாரி சென்றுவிட்டார். உபசாரத்தை அவர் விரும்பவில்லை.சுவடிகளுக்கு அடைக்கலஸ்தானம் ஒன்று வேண்டு மென்று அவர் கருதினார்;தக்க இடம் அகப்படாமல் கஷ்டப்பட்டார்; அப்பால் ஓரிடம் தெரிந்தது; அவ்விடத்திற் சேர்ப்பித்தார்; அந்தக் கடமையைச் செய்துவிட்டுப் போய்விட்டார்.
நான் அவரைக் காணாமையால்,சிறிது நேரம் அங்கே ஸ்தம்பித்து நின்றேன். தம்மைக் காட்டிக்கொளாமல் மகோபகாரம் செய்த அவரைப் பார்க்க முடியவில்லையே!’ என்று வருந்தினேன். ஒரு சிறு காரியம் செய்தாலும் ஊரறிய விளம்பரம் செய்துகொள்ளும் இந்தக் காலத்தில், இப்படி மௌனமாகப் பிறர் அறியாதவாறு உபகாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள்’ என்பதை நினைக்கும் போது என் உள்ளம் கசிந்தது. ‘வலக்கை செய்யும் உபகாரம் இடக்கைக்குத் தெரியாமற் செய்க’ என்று பைபிளில் இருப்பதாகச் சொல்வார்கள் இவ்வாக்கியத்திற்கு இலக்கியமாகிய பேருபகாரியினிடம் உபகாரம் பெற்றும் நான் அவரை அறியக்கூடவில்லை.
அன்று எனக்குக் கிடைத்த சுவடிகளை அப்பால் ஆராய்ந்தேன், அவற்றிற் பெரும்பாலன அச்சிட்ட நூல்களாகவே இருந்தன. ஒரு பழஞ்சுவடியின் ஈற்றில் * “ தமிழ் விடு தூது”என்னும் ப்ரபந்தம் இருந்தது. அதைப்படித்து வந்தேன்,என்னுடைய வாழ்க்கையின் லக்ஷியம் அந்த நூலில் இரண்டடிகளிலே சொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன்.
என்னும் கண்ணியிலே என் உள்ளம் சிக்கிக் கொண்டது. அப்பொழுது, பெயர் தெரிவியாமல் அதனையும் மற்றச் சுவடிகளையும் உதவிய’ பெருந்தகையாளரை மீட்டும் நினைந்து நினைந்து பாராட்டி வாழ்த்தினேன். அவர் யாரோ! இன்னும் அறியேன்! |