பெண்ணைப் பெற்ற இன்றைய பெற்றோர்க்கு..மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:00, 12 பெப்ரவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் இடைமருதூர் கி.மஞ்சுளா
கலித்தொகையில் - பாலைக்கலி (9வது பாடல்) பாடியவர் புலவர் பெருங்கடுங்கோ என்பவர்.இவர் சேரர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால், சேரமான் பெருங்கடுங்கோ என்றும்,பாலைக்கலி என்னும் ஒரு நூலைப் படைத்திருந்ததால், அதையும் இணைத்து, பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ என்றும் அழைக்கப்பட்டார்.
தமிழ் இலக்கியப் பாடல்கள் அனைத்தையும் பொருள் அறிந்து படித்தால் அதன் சுவையே தனி தான்!
பெண்ணைப் பெற்ற இன்றைய பெற்றோர்க்கு ஏற்படும் வேதனையும், தவிப்பும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த பெற்றோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவரும் அந்த வேதனையையும், தவிப்பையும் எவ்வாறு ஏற்று, சகித்துக்கொள்வது என்பதை அருமையாக விளக்கியுள்ளார் புலவர் பெருங்கடுங்கோ.
ஒருவனும், ஒருத்தியும் காதல் வயப்பட்டனர். பெற்றோர் அறியாத வண்ணம் இருவருக்கிடையேயும், ஆற்றோரம், தோட்டம், வீட்டுக் கொல்லைப் புறம் என பல இடங்களில் சந்திப்புகள் நிகழ்ந்தன.
இவர்கள் சந்திப்பது ஊரால் கண்களுக்கு விருந்தாகி, செவி வழியாக ஊர் முழுவதும் உள்ள வாய்க்கு அவலானது. இச்செய்தி அந்தப் பெண்ணின் தாயார் காதுகளுக்கும் எட்டியது. காதலனைப் பார்க்க முடியாதபடி வீட்டில் உடனே காவல் வைகப்பட்டாள் தலைவி. அவனைச் சந்திக்க ஒரே வழி தோழி தானே! சந்திக்க முடியவில்லை என்றாலும், செய்திப் பரிமாற்றம் செய்வாளே..! உடனே தோழியின் உதவியை நாடுகிறாள் தலைவி. இருவருக்கும் இடையே செய்திப் போக்குவரத்தை சில நாள்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தாள் தோழி.
நாளாக நாளாக, தான் விரும்பியவனுக்கு மாலையிட முடியாத குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டாள் தலைவி. இந்நிலையில், காதலர்கள் என்ன செய்வார்கள்?
மனம் கவர்ந்த மணாளனை மணப்பதே பெண்மைக்குச் சிறப்பு என உணர்ந்த அக்காலத் தலைவி கட்டுக்காவலை மீறி, தோழி உதவியுடன் வீட்டைவிட்டு வெளியேறி, தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்டாள்.
இரவு விடிந்தது. படுக்கையில் செல்ல மகள் இல்லை. காலை விடிந்ததும் படுக்கையில் மகளைக் காணவில்லை என்றால், பெற்றவர்கள் மனமும், வயிறும் பற்றி எரியத்தானே செய்யும்! அப்படித்தான் அந்தப் பெண்ணின் தாயும் தவித்தாள்; குமுறினாள்; அழுதாள். உடனே மகளைத் தேடிப் புறப்பட்டாள். அவள் செல்லும் பாலை வழியில், சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குடையைப் பிடித்துக்கொண்டு சில அந்தணர்கள் அவள் எதிரே வந்தனர். கையில் நீர்ப்பாத்திரத்தையும் (கமண்டலம்), முக்கோலை தோளிலும் வைத்திருந்தனர். வெப்பம் நிறைந்த காடுகளில் நடந்து செல்வதையே இயல்பான ஒழுக்கமாகக் கொண்டவர்கள் அவ்வந்தணர்கள் (பாலைக் கலியாயிற்றே!).
அவ்வந்தணர்களைக் கண்ட அப்பெண்ணின் தாய், அவர்களைப் பார்த்து, "அந்தணர்களே! என் மகள், வேறொருத்தியின் மகனோடு காதல் வயப்பட்டு, யாரும் அறியாமல் சென்றுவிட்டாள். அவர்கள் இருவரையும் நீங்கள் வழியில் கண்டீர்களோ? அல்லது காணாமல் விட்டுவிட்டீர்களோ?" என்று கேட்டாள்.
அவள் கூறியதைக் கேட்ட அவ்வந்தணர்கள், "தாயே! அவர்களை நாங்கள் வழியில் கண்டோம்; ஆண் தன்மையும், அழகும் நிறைந்த அவனோடு நடந்து செல்ல முடியாத பாலை நிலத்திலே, அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்களை அணிந்த,
அந்தணர்கள் கூறியதைக் கேட்ட அப்பெண்ணின் தாய் வருத்தமுற்று, "நான்"தான் என்பதை மெüனத்தின் மூலம், தலைகுனிந்து உணர்த்தி நின்றாள். அவள் துயரமடைந்ததைக் கண்ட அந்தணர்கள், அவளுக்கு ஆறுதல் கூறினர். அப்படி என்னதான் கூறினர்? பெண்ணைப் பெற்ற பெற்றோர் அனைவரும் படித்தறிய வேண்டிய செய்திகளைத் தான், அவ்வந்தணர்கள் வாய்மொழியாக, புலவர் பெருங்கடுங்கோ, அக்காலத்திலேயே கூறிச்சென்றுள்ளார்.
"வாசனைகள் பல கலந்த சந்தனம், பூசிக் கொள்கிறவர்களுக்குத்தான் பயன் தரும். சந்தன மரங்கள் மலையில் பிறந்தவையானாலும் அவைகளால் மலைக்கு ஒரு பயனும் இல்லை.
நினைத்துப் பார்த்தால், இதைப் போலத்தான் உமது மகளும். அவள் பயன்படக்கூடிய பருவ காலத்தில் பிறருக்குப் பயன்படுவாளே ஒழிய, உமக்குப் பயன்படமாட்டாள்". "சிறந்த வெண்மையான முத்து, அதை அணிந்து கொள்கிறவர்களுக்குத்தான் பயன்படும். முத்துக்கள் தண்ணீரில் பிறந்தவை. ஆனால், அவைகளால் தண்ணீருக்கு ஒரு பயனும் கிடையாது. இதை ஆராய்ந்து பார்த்தால், உம்முடைய மகளும் முத்தைப் போல் உமக்குப் பயன்படமாட்டாள்"."ஏழுவகை நரம்புகளின் மூலம் உண்டாகும் இனிய ஓசைகள் பாடுவோருக்குத்தான் இன்பமளிக்கும். அவை யாழிலிருந்து பிறந்தாலும் அவற்றால் யாழுக்கு ஒரு பயனும் இல்லை. எண்ணிப்பார்த்தால், இதைப்போலவே உமது மகள் உமக்கு இன்பம் தரமாட்டாள்". எனவே, உமது மகளை நினைத்து துன்பப்பட வேண்டாம்; தாய், தந்தையரைக் காட்டிலும் ஒரு பெண்ணுக்கு கணவனே சிறந்தவன் என்பதை உணர்ந்த உமது மகள், கணவன் சென்ற வழியே சென்றாள். அதுவே இல்லறத்தில் குற்றமற்ற செயலுமாகும்" என்று அந்தணர்கள் கூறிய தத்துவ மொழிகளைக் கேட்ட தாய், உண்மையை உணர்ந்தாள்.
மனம் தெளிவடைந்து வந்த வழியே திரும்பினாள்.
சில நாள்கள் கடந்த பிறகு, புதுமணத் தம்பதிகள் ஊருக்குள் வந்தனர். கோபம் தணிந்த பெற்றோர், அவர்களை வரவேற்று ஏற்றுக்கொண்டனர். மணமக்கள் இனிதே இல்லறம் நடத்தினர். இல்லற வாழ்வின் மகத்துவத்தை விளக்கும் பாடல் இதுதான். இப்பாடலின் சுவையை, பொருள் அறிந்து படித்தால், மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும். பாடலைக் காண்போம்.
"எறித்தரு கதிர் தாங்கி யேந்திய குடைநீழல் வெவ் இடைச் செல்ல மாலை ஒழுக்கத்தீர் இவ்இடை காணேம் அல்லேம் கண்டனம் கடத்தினை பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை என ஆங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம் அக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் பெண்ணைப் பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கக் கருத்தைத் தான் புலவர் கூறியுள்ளார் என்பதில் ஐயமில்லை.
நன்றி:- தினமணி |