(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]
பல்லவர்காலத் தமிழ் எழுத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டைச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இங்கு, மாமல்லன் நரசிம்மவர்மனின் ஒரேயொரு தமிழ்க்கல்வெட்டெனக் கருதப்படும் திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டைக் காண்போம். கல்வெட்டு திருக்கழுக்குன்ற மலைமேல் உள்ள குகைக்கோயிலில் உள்ளது. இதன் காலம் கி.பி. 630 – 668. கல்வெட்டின் பாடம் கீழே கொடுக்கபட்டிருப்பினும் கல்வெட்டை நேரடியாகப் படித்துப் பயிற்சி செய்க.
கல்வெட்டின் பார்வைப்படி (Eye copy) :
கல்வெட்டின் பாடம் :
ஸ்ரீ திருக்கழுக்குன்றத்து பெருமான்
னடிகளுக்கு களத்தூர் கோட்டத்
து ........................ திருக்கழுக்குன்ற
த்து ஸ்ரீமலை மேல்
(மூ)லட்டானத்து பெருமான்
னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா
க வாதாபி கொண்ட நரசிங்கப்
போத்த(ர)சர் வைத்தது.
குறிப்பு :
- இறைவன் பெயர் திருக்கழுக்குன்றத்துப் பெருமானடிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
- மூலட்டானம் என்பது கருவறை ஸ்ரீகோயிலைக்குறிக்கும்.
- புறம் என்பது கோயில் பணிகளுக்காக விடப்பட்ட நிவந்தம் அல்லது கொடையைக் குறிக்கும். பணிகளுக்கேற்பப் பெயரமையும். இங்கே கோயிலின் வழிபாட்டுக்காக (பூசை)க் கொடை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வழிபாட்டுப்புறம். அமுதுபடிக்காக (நைவேத்தியம்) எனில் அமுதுபடிப்புறம் என்றும், விளக்குக்காக எனில் விளக்குப்புறம் என்றும், மடைப்பள்ளிக்காக எனில் மடைப்புறம் என்றும் பலவாறு வழங்கப்படும்.
- மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டில் கண்டவாறே இங்கும் ”போத்தரசர்” என்னும் பெயர் வந்துள்ளதை நோக்குக.
- கோட்டம் என்னும் ஆட்சிப்பிரிவு பல்லவர் காலத்திலேயே இருந்துள்ளது கருதத்தக்கது.
- நரசிம்ம வர்மனின் பெயர் இக்கல்வெட்டில் ”நரசிங்க” என வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பல்லவர் கல்வெட்டுகளில் “சிம்ம” என்னும் சொல்லுக்குப் பதில் “சிங்க” என்னும் சொல்லே பயின்றுவருகிறது எனலாம்.
- ஸ்ரீ என்பது கிரந்த எழுத்து.
___________________________________________________________
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________