சீனுவின் தாலாட்டுப் பாடல்கள் பகுதி 3

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:07, 29 செப்டெம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
தாலாட்டு  
தாயின் கனவுகள் 
பின் வரும் தாலாட்டுப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள சிவகிரி முதல் குற்றாலம் வரையுள்ள பகுதிகளில் பாடப்படுகிறது. இந்நிலப் பரப்பு செழிப்பான நன்செய்ப் பிரதேசம் ஆகும். பல சிற்றாறுகள் இந்நிலப் பகுதியை வளப்படுத்துகின்றன. இப்பாடல்கள் நில வளத்தால் உழவனுக்கு ஏற்படும் பெருமிதத்தைச் சொல்லுகிறது. மலை சார்ந்த இப்பகுதியில் பல மலைக் கோயில்கள் உள்ளன. குறிஞ்சித் தெய்வமான வேலன் வள்ளி, தெய்வயானையோடு பல சிற்றூர்களில் கோயில் கொண்டிருக்கிறான். இப்பகுதியிலுள்ள நிலத்தின் வளத்தைத் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்லுகிறாள் தாய். மலையில் விளையும் பொருள்களான ஏலக்காயும், ஜாதிக்காயும், அவனுடைய மூத்த மாமன் கொல்லையில் விளைகின்றனவாம். மாமன் பெருமை புதிய முறையில் சொல்லப்படுகிறது. மருதமும், குறிஞ்சியும், இயற்கையில் தம்முள் மயங்கி இருவகை நிலங்களின் விளை பொருள்களை யெல்லாம் தன் செல்வ மகனுக்கு அளிப்பதாகத் தாய் கனவு காண்கிறாள். 
ஆராரோ, ஆரிரரோ
மலட்டாறு பெருகிவர,
மாதுளையும் பூச்சொரிய,
புரட்டாசி மாதம்
பிறந்த புனக் கிளியோ
அஞ்சு தலம் ரோடாம்!
அரிய தலம் குத்தாலம்!
சித்திரத் தேர் ஓடுதில்ல !
சிவ சங்கரனார் கோயிலுல!
காடெல்லாம் பிச்சி!
கரையெல்லாம் செண்பகப்பூ
நாடெல்லாம் மணக்குதில்ல!
நல்ல மகன் போற பாதை

தெய்வமே காப்பு 
வாருமையா கந்தா
வரங் கொடுமே வேலவரே
தீருமையா இவன் பிணியை 
திருச்செந்தூர் வேலவரே 
பச்சை நிறம் வள்ளி
பவள நிறம் தெய்வானை
சோதி நிறம் வேலவரு
சொன்ன வரம் தந்தாரே! 
புங்கக் கட்டை வெட்டி - திரபதைக்கு
புளியந் தணல் உண்டு பண்ணி;
பூவே றங்கும் நேரமெல்லாம் திரௌபதை 
பொன்னிற மாய் வந்தாளே. 
யாரடித்தார்? 
ஆரடிச்சா நீ யழுத?
அடிச்சாரச் சொல்லியழு
பேரனடிச் சாரோ
பிச்சிப்பூ கைனால?
மாமன் அடிச்சாரோ
மல்லிகைப்பூ கைனால? 
மாமன் கைச் சிலம்போ
மச்சி னமார் கைச்சிலம்போ?-நீ 
பேரனார் கொண்டைக்கு
வாடா மருக் கொழுந்தோ?


மகன் பெருமை 
பட்ட மரம் பாலூறும்,
பாவல்காய் தேனூறும்,
உளித்தமரம் தான் தழையும்,
உத்தமியாள் வாசலிலே, 
வடக்கே ஒரு மூங்கில்
வளருதில்ல கல்மூங்கில்
வில்லுக்கு வில்லாகும்
விஜயனுக்கு அம்பாகும்
சொற் கேளா அர்ச்சுனர்க்கு
சுண்டு வில்லு அம்பாகும் 
வடக்கே மழை பேஞ்சு
வாசலெல்லாம் தண்ணி
தண்ணி வந்த சயலிலே-நீ
தங்கி வந்த தாமரையோ? 
வடக்கே மழை பேஞ்சு
வார்ந்த மணல் ஓடிவர
நடந்து போ பாலகனே-உன்
நல்ல தடம் நான் பார்க்க 
வடக்கே ஒரு தாள்
வர்ணலட்சம் பூப்பூக்கும்
வாடை யடியாதோ
வரிசை மகன் கண்ணயர
தெற்கு ஒரு தாழை
தென் லட்சம் பூப்பூக்கம்
தென்றல் அடியாதோ
செல்ல மகன் கண்ணயர? 
வைகை பெருகிவர
வாளை மீன் துள்ளிவர
துள்ளி வந்த மீனுக் குல்ல-வேலவா
தூண்டி வலை போட்டாரே 
பத்து வருஷமோ
பாலனில்லா வாசலிலே
கைவிளக்கு கொண்டு
கலி தீர்க்க வந்தவனோ? 
விளக்கிலிட்ட எண்ணெய் போல
வெந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட பால்போல
கைக்குழந்தை தந்தாரே 
மலடி மலடி என்று
மானிடர்கள் ஏசுகிறார்
மலட்டுக் குலமதையே-நீ
மறப்பிக்க வந்தவனோ! 
மலடி புழுங்கலை - ரெண்டு
மான் வந்து திங்குதின்னு
மாதாளங்கம்பு வெட்டி-நீ
மான் விரட்ட வந்தவனோ 
கொல்லையிலே தென்னை வச்சு
குறுத்தோல கொட்டாஞ் செஞ்சு
சீனி போட்டுத் திங்க
செல்வமே பிறந்தவனோ! 
வில்வப் பொடி மணக்கும்
விரிச்ச தலைப் பூமணக்கும்
கதம்பப் பொடி மணக்கும்
கட்டழகன் கடந்தலிலே. 
வட்டார வழக்கு: மணக்குதில்ல - மணக்கிறதல்லவா?; அழிச்சாரே - அழித்தாரே; வந்தடைஞ்ச - வந்தடைந்த; துவைவேட்டி- துவைத்த வேட்டி; வச்சளக்க - வைத்தளக்க; பூ வெறங்கும் - பூ இறங்கும்; பேஞ்சு-பெய்து 
குறிப்பு: மலட்டாறு-திருவெண்ணெய் நல்லூர் அருகில் ஓடுவது, இவ்வாற்றில் நீரோடுவது அபூர்வம். தண்ணீர் ஓடாததைப் பொதுவாக இச்சொல் குறித்தது. “பட்டமரம்” “பாலூறும்” முதலியன.
மலடியாகவிருந்தால் தொட்டதெல்லாம் துலங்காது என்ற நம்பிக்கை பெண்ணுள்ளத்தில் வேரூன்றி நிற்கிறது. ‘மலடி’ என்ற பகுதியில் காணப்படும் பாடலில் இதனைக் காணலாம். இவளுக்கு மகன் பிறந்துவிட்டதால் செத்தமரமும் தளிர்த்து விடுமாம். கல்யாண பாகற்காய் இனிப்பாகி விடுமாம். உளுத்த மரமும் தழைத்து விடுமமாம்.
மாமன் தாசிக்குச் செலவழித்த பணம் பெருமையாகப் பேசப்படுகிறது.

வண்டாளப் பட்சி,
வயலெறங்கி மேயுதிண்ணு
சிங்கார வில்லெடுத்து - நீ
சிற கொடிக்க வந்த வனோ? 
மதுரைப் பெரும்பாதை-ரெண்டு
மங்கை நிண்ணு கோலமிட,
குதிரைப் பதி போட்டு-சொக்கர்
கோல மழிச்சாரே. 
காடெல்லாம் ஓடி,
கதறி அலை மோதி,
காலெல்லாம் நோகுதையா,
கனியே உனைத் தேடி 
வண்டடையும் சோலை,
மயிலடையும் குற்றாலம்,
வண்டடைஞ்ச சோலையிலே-நீ
வந்தடைஞ்ச வான்மயிலே. 
ஊருணியும் வெட்டி,
உசந்த மடமும் கட்டி,
தாரணியார் பூசை செய்ய-நீ
தர்ம குல வம்முசமோ! 
கடலோரம் கோயில் கட்டி,
கந்த னென்று பேர் விளங்கி,
அலையடிக்கு நேரமெல்லாம்-வேலவர்
ஆண்டி வேஷம் கொண்டாரோ?

மாமன் பெருமை 
செக்கச் சிவப்பரோ-உங்க மாமா
சீமைக்கோர் அதிபதியோ
அழகு சிவப்பரோட-ஐயா நீ
அருமை மருமகனோ? 
சின்னக் கிணறு வெட்டி
சிங்கார கல் பரவி
துவை வேட்டி போட்டு வரும் 
துரை ராஜா உங்கள் மாமா 
ஏலக்காய் காய்க்கும்,
இலை நாலு பிஞ்கு வரும்
ஜாதிக்காய் காய்க்கும்
உன் தாய் மாமன் வாசலிலே
கல்லில் எலுமிச்சை காய்க்கும் 
கதலிப் பழம் பழுக்கும் 
முல்லைப் பூ பூக்குதில்ல
உன் தாய் மாமன் கொல்லையிலே 
தங்கக் குடை பிடிச்சு
தாசிமாரை முன்ன விட்டு-உன் மாமன்
தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு
தங்க மடம் கட்டலாமே 
வெள்ளிக் குடை பிடிச்சு
வேசிகளை முன்ன விட்டு-உன் மாமன்
வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு
வெள்ளி மடம் கட்டலாமே! 
முத்தளக்க நாழி
முதலளக்க பொன்னாழி
வச்சளக்கச் சொல்லி
வரிசை யிட்டார் தாய் மாமன்.

தாலாட்டுப் பாடல்கள் சேகரிப்பு திரு வெங்கட்ராம் ஶ்ரீநிவாஸ்

 --Geetha Sambasivam (பேச்சு) 12:06, 29 செப்டெம்பர் 2015 (GMT)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 29 செப்டெம்பர் 2015, 12:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,115 முறைகள் அணுகப்பட்டது.