கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 33மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:49, 4 ஜூலை 2014 அன்றிருந்தவாரான திருத்தம் சாக்கோட்டை வீரப்ப சுவாமிகள் மடம் சாக்கோட்டை என்னும் ஊர் புது வயலிலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ள சிற்றூர். வீரசேகரர் உமையாம்பிகை ஆலயமும் இவ்வூரில் இருக்கிறது. வீரவன புராணமும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய ஒரு புராணமும் இவ்வூருக்கு உண்டு. கோவிலூர் இராமசாமி ஞான தேசிக சுவாமிகளின் மாணவரான சாக்கோட்டை வீரப்ப சுவாமிகள் இவ்வூரில் ஒரு லட்சம் ரூபாய்ச் செலவில் வேதாந்த மடம் நிறுவி 22 ஆண்டுகள் நடத்தினார்கள். அவர்களுக்குப் பிறகு முத்துக்கருப்ப சுவாமிகள் வேதாந்தம் கற்பித்தும் மடத்தை விரித்துக் கட்டியும் வந்தார்கள். பின்னர் செல்லப்ப சுவாமிகள் சங்கர சுவாமிகள் ஆகியோர் இந்த மடத்தின் அதிபதிகளாக இருந்தனர். புதுச்சேரியில் தம் பெயரால் மடம் நிறுவிய ஶ்ரீ வேதானந்த சுவாமிகள் சாக்கோட்டைக்குச் சென்றார்கள். அவ்வூர் மடத்துத் தலைவர் வீரசேகர ஞான தேசிக சுவாமியானவர் வேதாந்த சுவாமிகளைச் சாப்பிடச் சொல்லி அங்கேயே படித்திருக்கக் கட்டளையிட்டார்கள். அவர்கள் படித்ததும் முறைமைப்படி சந்நியாசம் பெற்றதும் சாக்கோட்டையில் தான். வீரசேகர சுவாமி ஒழுக்கம், கல்வி முதலியவற்றில் சிறந்து விளங்கி வந்தார்கள். அவரை குருவாகக் கொண்டு வேதானந்த சுவாமிகள் வேத நூல்களை ஐயந்திரிபறப் பாடங் கேட்டார்கள். செல்வரங்கசாமி, முத்துக்கருப்ப சாமி முதலியோர் வேதானந்த சுவாமிகளுடன் படித்து வந்தார்கள். படிக்கும்போது வீரசேகர சுவாமிகள், வேதானந்த சுவாமிகளின் அறிவு நுட்பத்தையும் நினைவாற்றலையுங் கண்டு வியப்படைந்தார்கள். ஒரே தினத்தில் பல செய்யுட்களை மனப்பாடஞ் செய்யும் ஆற்றலிருந்தது. இதைக் கண்ட மற்றைய மாணவர்கள் பொறாமை கொள்வதும் உண்டு. மேலும் வீரசேகர சுவாமி வேதானந்த சுவாமிகளிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சுவாமிகள் தலை மாணாக்கராகத் திகழ்ந்து வந்தார்கள். ஒரு சமயம் வீரசேகர சுவாமிகள் சுவாமிகளைப்பார்த்து நீ எங்கு சென்றாலும் அத்வைதத்தை விடாதே என்று கூறினார்கள். ஶ்ரீலஶ்ரீ வே. சுப்பைய சுவாமிகள் சித்தாந்த நூல்களை யெல்லாம் ஆராய்ச்சி செய்த பின் சாக்கோட்டைக்கு வேதாந்த நூல்களை ஆராய வந்தார்கள். அப்போது வேதானந்த சுவாமிகள் வழிகாட்டியாயிருந்து கோயிலூரில் சென்று படிக்கலாம் எனக் கூறினார்கள். சுப்பைய சுவாமிகள் அப்படியே செய்தார். ஜகத்குரு ஶ்ரீ சித்தாரூட சுவாமிகள் ஶ்ரீ சித்தாரூட மடம், ஹூப்ளி. கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டத்தைச் சார்ந்த ஹூப்ளியில் அவதரித்து, ஶ்ரீ சைலத்தில் தமது ஞான குருவாகிய ஶ்ரீ கெஜதண்ட யோகியிடம் கோவிலூர் மரபு வேதாந்தப் பாடங்கள் கற்று அங்கே மடம் நிறுவினார். ௸ ஶ்ரீ சித்தாரூட மடம் புகழ் வாய்ந்த மாபெரும் ஸ்தாபனமாகத் திகழ்கிறது. ஶ்ரீ சித்தாரூட சுவாமிகள் சமாதி அடைந்து சுமார் 50 ஆண்டுகள் ஆகின்றன. கோவிலூர் மடாலயம் சாதுக்கள் ஹூப்ளி செல்லும்போது அவர்களை சித்தாரூட சுவாமிகள் அன்போடு வரவேற்றுப் பக்கத்தில் வைத்து உபசரிப்பார்கள். அனந்த பத்மநாபசுவாமி மடம், மைசூர். திருக்களர் ஆண்டவரின் சீடர், கேரளத்தைச் சேர்ந்த அனந்தபத்மநாப சுவாமிகள், திருக்களர் ஆண்டவர் பரிபூரணம் அடைந்த பிறகு மைசூர் நகரின் எல்லையாக உள்ள சாமுண்டி மலையின் அடிவாரத்தில் ஒரு குகையில் சாந்தா ஆசிரமம் என்ற பெயரில் ஒரு மடத்தை நிறுவினார். குகைக்குள் இருப்பதால் இது குண்டகவி மடம் என்றும் பெயர் பெற்றது. இங்கு இந்த மடத்தை நிறுவிய அனந்த பத்மநாப சுவாமிகளின் சமாதிக் கோயிலும் அமிர்தவல்லியுடன் கூடிய பாரிஜாதவனேஸ்வரர் கோயிலும் உள்ளன. இந்த மடம் இப்போது கர்நாடக மாநிலம் பெங்களூர் கெஞ்சனஹள்ளி ஶ்ரீ கைலாச ஆசிரமம் மகா சமஸ்தானத்துடன் இணைந்துள்ளது. ஶ்ரீ பிரம்மானந்த சுவாமி மடம், பெங்களூர் கோவிலூர் ஆதீனகர்த்தர் தேனிப்பட்டி அண்ணாமலை ஞான தேசிகரின் மாணாக்கரான ஶ்ரீ பிரம்மானந்த சுவாமிகள் இந்த மடத்தை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் 27-இல் ராஜாராம் மோகன்ராய் விரிவு என்ற பகுதியிலுள்ள சீனிவாசா குடியிருப்பில் நிறுவினார்கள். வேதாந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இப்போது இந்த மடம் கர்நாடக மாநிலம் பெங்களூர் கெஞ்சனஹள்ளி ஶ்ரீ கயிலாச ஆசிரமம் மகா சமஸ்தானத்துடன் இணைந்துள்ளது. கோவிலூர் மடாலயம் மேற்கு மாம்பலம், சென்னை. தமிழகத்தின் தலைநகரமான சென்னை நகரத்தில் நகரின் மையப்பகுதியான மாம்பலத்தில் பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது நம் கோவிலூர் மடாலயத்தின் சென்னைக்கிளை மடம். இத்திருமடம் நம் குருமகாசந்நிதானம் சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகளின் பெரும் பொருள் உதவியுடன் கட்டப்பட்டது. குளிர்சாதனத்துடன் கூடிய அரங்கம் ஒன்றும் உணவுக்கூடம் ஒன்றும் அலுவலக வளாகம் ஒன்றும் பத்து விருந்தினர் அறைகளும் கூடிய வசதிகள் நிறைந்த திருமடம். இத்திரு மடத்தை 21--02--1999 அன்று ஶ்ரீமத் காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீமத் ஜெயேந்திர சரஸ்வதி அவர்களும் இளையவர் விஜயேந்திர சரஸ்வதி அவர்களும் திறந்து வைத்தனர். இத்திருமடத்தில் பல்வேறு விதமான கலை மற்றும் கல்விக்கூடங்களும் சேவைகளும் நடைபெற்று வருகின்றன. திருமுறை வகுப்புகள், இசை நடன வகுப்புகள், யோகா வகுப்புகள், ஓவியம் மற்றும் தஞ்சாவூர் ஓவிய வகுப்புகள் முறையாக நடைபெற்று வருகின்றன. நகரத்தார் திருமண சேவை மையமும் இங்கு செயல்பட்டு வருகின்றது. இங்கு பல்துறைக்கலை நிகழ்ச்சிகளும் சமய இலக்கியக் கூடங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மடத்தால் இப்பகுதி மக்களும் மாணவர்களும் மிகுந்த பயன் அடைந்து வருகிறார்கள். *************************************************************************************** கோவிலூர் வேதாந்த மடம் -- ரிஷிகேஷ் இமயமலையின் அடிவாரத்தில் ஆதிகாலம் தொட்டு, ஞானிகளும் ரிஷிகளும் தவம் செய்து புகழ் பெற்ற ஞான பூமியாக விளங்கும் ரிஷிகேசத்தில் நம் குரு மகா சந்நிதானம் அவர்களின் அருள் உள்ளத்தாலும் பொருள் உதவியாலும் ஒரு அழகான அமைதியான ஆஸ்ரமம், "கோவிலூர் வேதாந்த மடம்" என்ற பெயரில் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று பூஜ்ய ஶ்ரீ தயானந்த சரஸ்வதி அவர்களால் தொடங்கி வைக்கப் பெற்றது. ஆரம்பத்தில் ஏறக்குறைய முக்கால் ஏக்கர் நிலத்தில் 24 அறைகள், உணவுக்கூடம், சொற்பொழிவுக்கூடம், பிரார்த்தனை மண்டபம் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 75 அறைகள், அன்னதான மண்டபம், நூலகம், பிரார்த்தனை மண்டபம், அலுவலகம், மான்டிசோரிப்பள்ளி, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவ சாலை, பசுமடம், என எல்லா வசதிகளையும் கொண்டு திகழ்கிறது. இத்திருமடத்தின் சூழல் மிக அற்புதமானது. வெயிலின் கொடுமை எக்காலத்திலும் தெரியா வண்ணம் மரம், செடி, கொடிகள் நிறைந்து வனம் போல் இதமான சூழல். இங்கு படர்ந்திருக்கும் பழைமையான ஆலமரமும் அதன் கீழ் அமர்ந்து அருள் பாலிக்கும் அருள் மிகு கற்பகப் பிள்ளையாரும் கண்கொள்ளாக்காட்சி. அருள் பொழியும் கற்பக மூர்த்தி அருளால் இத்திருமடம் ஏழு ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இங்குள்ள சூழல் தவம் செய்வதற்கும் அமைதியாகக் கற்பதற்கும் ஏற்ற சூழல். கவலைகளை, பதட்டங்களை அறவே அகற்றக் கூடிய அற்புதமான அமைதியான திருத்தலம். இங்கு வேதம், சம்ஸ்கிருதம், வேதாந்தம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. மழலையர்க்கான இயல்பான செயல்முறைக் கல்வியான மாண்டிசோரிக்கல்வி 3 வயது முதல் 6 வயது வரைக்கான குழந்தைகட்காக மிகக் குறைந்த கட்டணத்துடன் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 60 குழந்தைகள் படிக்கின்றனர். இலவச மருத்துவமனை மாலை நேரங்களில் நடைபெற்று வருகின்றது. அவ்வப்போது யோகா வகுப்புகளும் சிறுவர்கட்கான முகாம்களும் நடைபெற்று வருகின்றன. சாதுக்களுக்கு அன்னம் பாலிக்கப்படுகின்றது. யாத்திரிகர்கள் தங்குவதற்கும் உண்பதற்கும் நிறைந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான தென்னக யாத்திரிகர்கள் வந்து தங்கிப் பயன்பெறுகிறார்கள். இங்குள்ள வசதியும் விருந்தோம்பலும் மேலும் மேலும் பெரும் யாத்திரிகர்கள் கூட்டத்தை ஈர்க்கின்றன. பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி, ஶ்ரீஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் சுவாமிகள், பரமஹம்ச நித்தியானந்த கிரி சுவாமிகள் போன்ற ஞானிகளின் முகாம்களும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது சாதுக்களுக்கும் குழந்தைகட்கும் அன்னதானம், (பண்டாரா) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. |