லெமூரியா-ஆய்வுக் கட்டுரை--2மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:04, 4 மே 2014 அன்றிருந்தவாரான திருத்தம் லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா ( பாகம்-2)
ஆக , லெமூரியா என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் நிலவிய கருத்துக்களின் அடிப்படையில் எழுந்த ஒரு புவி உயிரியல் கோட்பாடு என்பது தெளிவு. ‘அல்ல,அல்ல, லெமூரியா என்பது ஓர் தமிழ்ச்சொல்லே’- என வாதிடுவோரும் உளர். மதிவாணன் எனும் ஓர் அன்பர் எழுதிய சிறு நூல் ஒன்றில் , அந்த அன்பர் கூறுவதாவது. “ குமரிக் கண்டம் முழுதும் மூலிகைகள் நிறைந்திருந்தன- எல்லாம் இலைகள் –இலை மூலிகைகள், மூலிகை என்பது மூலிரை என்று மருவும்- இலைமூலிகை என்பது, இலைமூலிரை என மாறும் – இலைமூலிரை என்பது மருவி இலெமூரிய என்றாகும், ஆதலின் குமரிக்கண்டம்தன் லெமூரியா “ சரி, இப்போதைக்கு லேமூரியாவை விட்டு விட்டு குமரிக் கண்டம் பக்கம் வருவோம். குமரிக் கண்ட கோட்பாட்டிற்கு வித்திட்டவர்கள், இடைக்கால உரையாசி ரியர்கள் – இளம்பூரனர், அடியார்க்கு நல்லார் ( காலம்-பன்னிரெண்டாம் நூற்றாண்டு ?), போன்றோர் எனத் தெரிகிறது.காரணம், சங்க இலக்கியங்கள் , பதினெண் கீழ் கணக்கு நூல்கள், இரட்டைக் காப்பியங்கள் , பக்தி இலக்கியங்கள் இவை எதிலும் குமரிக் கண்டம் எனும் சொல் காணக் கிடைக்கவில்லை. (இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்). சிலம்பில் , புகார் காண்டம் வேனிற் காதையில், “ நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண் புனல் நாடு “ என்று தமிழ்நாடு பற்றிய நேரான தெளிவான கருத்தது காணப்படுகிறது. தொடியோள் என்றால் குமரி- பௌவம் என்றால் கடல் என்று நேரடியாகப் பொருள் கொள்ளாமல் “ தொடியோள் நதியும் என்னாது, பௌவம் என்றது என்னையெனின் – பஹுறுளி ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே நாற்பத்தியொன்பது நாடுகளும் கடல் கொண்டு ஒழிந்ததால் குமரியாகிய பௌவம் என்றார்” என்று அடியார்க்கு நல்லார் விரித்து எழுதியுள்ளார். அடியார்க்கு நல்லார் பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்- அரும்பத உரை ஆசிரியரின் உரையைத் தழுவி சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் என்று கருதப் படுகிறது
“அடியார்க்கு நல்லாரின் உரை கடுகளவும் கட்டுச்செய்தியாய் இருக்கமுடியாது” என முழங்கும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் “ இன்றைய குமரி முனைக்குத் தெற்கே ஈராயிரம் மைல் நீள நிலப்பரப்பு இருந்தது—அதன் தேன் கோடியில் பஹ்ருளி ஆறும், வடகோடியில் குமரி ஆறும் பாய்ந்தோடின-குமரிக் கண்டத் தென்கோடியில் பனிமலைத் தொடர் போலும் பன் மலையடுக்கத்து குமரித் தொடர் இருந்தது—இந்தக் குமரிக் கண்டத்தில்தான் தமிழ் தோன்ற்யது-தமிழன் தோன்றினான்” என உறுதியாக நம்புகிறார். “முதல் கடல் கோளில் குமரிமலையும் பஹ்ருளியாறும் அதன் கரையில் கட்டப்பட்ட (தென்) மதுரை உட்பட்ட பாண்டி நாட்டின் தென்பெரும்பகுதி மூழ்கியது. இரண்டாம் கடல் கோளில் பாண்டியர்களின் இரண்டாம் தலைநகராகிய , வடபுலத்தில் நெய்தல் நிலத்தில் அமைந்த கதவம் (அல்லது கபாடம் அல்லது புதவம் அல்லது அலைவாய் ) அழிந்தது. மூன்றாம் கடல் கோளில் குமரியாற்றை கடல் கொண்டது. நான்காம் கடல் கோள் மணிமேகலை காலத்தில் கவேரிபூம்பட்டினத்தைக் கொண்டது.” என பாவாணர் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார். கடைச் சங்க காலத்திற்கு முன் இரு மிகப் பெரும் கடல் கோள்கள் நிகழ்ந்திருப்பின் , அவை பற்றிய செய்திகள் , குறிப்புகள் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டில் பரவா லாகப் பேசப்பட்டிருக்கும். ஆனால் இல்லை- நாற்பத்தியொன்பது நாடுகள் பற்றிய செய்திகளோ , குமரி மலை –குமரி ஆறு- குமரிக் கண்டம் போன்ற சொற்களோ,தொடர்களோ எங்கும் காணப் படவில்லை.
(இலக்கியங்களில் உள்ள குமரிக்கோடு மற்றும் கடல்கோள் பற்றிய குறிப்புகள் --நாளை ) கட்டுரை ஆக்கம் திரு சிங்கநெஞ்சம் சம்பந்தம் |