கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 15

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கோவிலூர் கொற்றவாளீசர் திருக்கோயில்


சாலிவாடி என்றும் கழனிவாசல் என்றும் பெயருடைய ஊரில் சிவகுப்தன் என்ற தன வணிகன் இருந்தான்.  அவன் மனைவி சுதன்மை.  இவர்கள் இருவரும் அரன் நாமம் ஓதித் திருபுவனேசுவரரை பக்தி செய்து வந்தார்கள்.  அவர்களுடைய அருமை மகள் அரதனவல்லி.  சுதன்மை திருபுவனேசையிடம் மிகுந்த பக்தியுடையவள்.

அம்பிகையின் திருக்கோவில் அருகில் சிவகுப்தனுடைய வயல் இருந்தது.  உயர்ந்த சாலிவாடி நெல் கதிர் முற்றத் தொடங்கி இருந்தது. அரதனவல்லியைக் காவலுக்கு அனுப்பினார்கள்.  அவள் விளையாட்டுப் பெண்.  கழனிக்கே போகாமல் மலர்ச்சோலையில் சென்று விளையாடிக் கொண்டிருந்தாள்.

கோவிலில் குடி கொண்டிருந்த தேவி சுதன்மையின் பால் அன்பு கொண்டு தானே அரதனவல்லியாக வடிவமெடுத்து வயலுக்குக் காவலாக நின்றாள்.

நடுப்பகலில், 'குழந்தைக்குப் பசிக்குமே' என்று தயிர்சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு பெண்ணைத் தேடிச் சென்றாள் சுதன்மை.  பரப்பின் மீது சமர்த்தாக உட்கார்ந்து கொண்டு கொம்பினால் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து மகிழ்ந்தாள்.  வெயிலில் சிரமப்படுகிறாளே என்ற பரிவோடு கையில் தயிர்சாதம் எடுத்துப் போட அரதனவல்லி ருசித்துச் சாப்பிட்டாள்.  கொஞ்ச நேரம் கழித்து அரதனவல்லி வந்து 'அம்மா, பசிக்கிறது' என்றாள்.  "என்னடி இது! இப்போது தானே உனக்குச் சாதம் போட்டுவிட்டு வந்தேன்.  ஆவலாகச் சாப்பிட்டாயே!  அதற்குள் பசியா?" என்று திகைத்தாள் சுதன்மை.

அரதனவல்லி தான் வயல்பக்கமே செல்லவில்லை என்று கூறியதும் சுதன்மை அதிசயத்தில் ஆழ்ந்தாள்.  தேவியின் கருணையே இது என்று உணர்ந்து கொண்டாள்.  சிவகுப்தனும் சுதன்மையும் அன்னம் உண்டு அருள் புரிந்த தேவியை மனமுருகிப் போற்றினார்கள்.

நெல்லைக் காத்த அம்பிகைக்கு திருநெல்லை நாயகி என்றும் சாலிவாடீச்வரி என்றும் பெயர் வந்தது.

சிறுமணிச் சம்பாவைச் சமைத்துக் கட்டித் தயிர் விட்டுக் கலந்து மணக்க மணக்கத் தாளித்துக் கொட்டி வாழைக் குருத்தில் சாப்பிட்டால் அன்னை ததியோன்னப் பிரியையாக இருப்பதில் அதிசயமென்னவென்று தோன்றும்.

கோவிலூர்ப் புராணத்தில் உள்ள பல கதைகளில் இதுவும் ஒன்று.  காரைக்குடிக்குச் சமீபத்திலுள்ள கோவிலூர்.  மதுப்ரிய முனிவர் தவம் செய்த தலம். அவருடைய தவச் சிறப்பால் இந்த ஊர்க்குளத்துக்கு மது புஷ்கரிணி என்றும் அருகில் ஓடும் ஆற்றுக்குத் தேனாறு என்றும் பெயர் விளங்குகிறது.

கோவிலூர் இன்னும் பல காரணங்களால் பெருமை பெற்றிருக்கிறது.  கோவிலை வைத்துத் தோன்றிய ஊர் இது.  திரிசிரபுரம் மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் தெள்ளு தமிழில் தலபுராணம் பாடிய ஊர்.  வேதாந்த வடமொழி நூல்களை வடமொழி அறியாதாரும் பயிலத் தமிழாக்கம் செய்து தமிழில் பாடம் சொல்லும் முறையைத் தொடங்கிய ஊர்.  ஆண்டவர் என்ற மகான் வேதாந்த மடம் நிறுவிய ஊர்.  ஞான மார்க்கத்தை, ஆதிசங்கர பகவத் பாதருடைய அத்வைத தத்துவத்தை உணர்ந்த ஞானியர் மடத் தலைவர்களாக விளங்கிய ஊர்.

ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதற்கு மனப்பக்குவமே தகுதி: பிறப்பு ஒரு தடையல்ல என்பதை நிலைநாட்டினார் கோவிலூர் ஆண்டவர்.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியில் நகரத்தார் குடியில் தோன்றிய முக்திராமலிங்கம் சிறு வயதில் சிக்கல் க்ஷேத்திரத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார்.  அருகில் பொருள்வைத்த சேரி என்ற சிற்றூரில் உகந்தலிங்க சுவாமிகள் என்ற ஞானி இருந்தார்.  அவர் நெசவுத்தொழில் செய்பவர். சங்கரருடைய வேதாந்த சாரத்தை அறிந்த பெரியார், அவரிடம் முத்துராமலிங்கத்திற்குப் பக்தி உண்டாயிற்று.  உகந்தலிங்க சுவாமிகள் அவருக்கு வேதாந்த நூல்களைப் பாடம் கூறி வந்தார்.

ஒரு சமயம் இளைஞனாக இருந்த முத்துராமலிங்கத்தைப் பார்த்த வடநாட்டு யோகி ஒருவர், "இவன் உலகத்துக்கே உபதேசிக்கப் பிறந்தவன்" என்றாராம்.  அதுமுதல் அனைவரும் அவரை ஆண்டவர் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

வேதாந்த நூல்கள் பல கற்றபின் கடைசியாக ஞான வாசிட்டம் படித்துப் பூர்த்தி செய்வது முறை.  வசிஷ்ட முனிவர் ஶ்ரீராமபிரானுக்கு உபதேசித்ததன் சாரம் இந்த நூல்.  வாசிட்டம் படித்த பின்னர் குருவுக்கு தக்ஷிணை கொடுத்து மரியாதை செய்து அவர் அனுக்ரஹம் பெற வேண்டும்.  ஆண்டவர் தம் தந்தையிடம் குரு தக்ஷிணைக்குப் பொருள் கேட்டார்.  தகப்பனார்  காதில் விழாத மாதிரி இருந்தார்.  கோபம் கொண்ட ஆண்டவர், "காது செவிடாகி விட்டதா?" என்று கேட்டார்.  அந்த விநாடி முதல் தந்தைக்குக் காது கேட்கவில்லை. பிறகு உகந்தலிங்க சுவாமிகள் கூறியபடி ஆண்டவர் திருநீறு கொடுக்கவே மறுபடியும் காது கேட்க ஆரம்பித்தது.

இப்படி இறைவன் அருளைப் பெற்ற ஆண்டவர் காரைக்குடியிலிருந்த போது கழனிவாசல் தலத்திலுள்ள அருள்மிகு நெல்லையம்மை, கொற்றவாளீசர் இருவரையும் வழிபடுவது வழக்கம்.  ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பகுதியில் ஏழகப் பெருந்தெரு என்ற வணிகப் பெருமக்களின் குடியிருப்பும் அவர்களுக்குப் பாதுகாப்பாக ஒரு படையும் இருந்தது.  இந்தப் பகுதியில் பல ஆலயங்கள் இருந்தன.  அவற்றுள் ஒன்று கொற்றவாளீசர் கோவில்.  வீரசேகர பாண்டியன் என்ற அரசன் இப்பகுதியில் ஆண்டு வந்தான்.  வேட்டையாடச் சென்றபோது அவனுடைய வாள் தொலைந்து போய் விட்டது.  தேடிப் பார்த்தபோது ஒரு சிவலிங்கத்தின் அருகில் அது கிடைத்தது.  மனம் மகிழ்ந்த பாண்டியன் ஈசனுக்குக் கோவில் எழுப்பினான். ராஜகட்கபரமேசுவரர் என்றும் கொற்றவாளீசுவரர் என்றும் அவருக்குப் பெயர் உண்டாயிற்று.

இந்தக் கோவில் நாளாவட்டத்தில் சிதிலமடைந்து மக்கிய கீத்துக்களால் கூரை வேயப்பட்டிருந்தது.  ஒருநாள் ஆண்டவர் அங்கே இருந்தபோது இடி மழையுடன் காற்று வீசவே கூரை விழுந்துவிட்டது. அப்போதே அவர் நெல்லையம்மனுக்கும் கொற்றவாளீசர்க்கும் கருங்கல் திருப்பணி செய்யச் சங்கல்பம் செய்து கொண்டிருக்க வேண்டும்.  இந்த எண்ணத்தை மிக உன்னதமான முறையில் அவர் நிறைவேற்றினார்.

கோவிலருகிலேயே வேதாந்த மடம் நிறுவி சாதுக்கள் எந்தவித விசாரமும் இன்றி வேதாந்த  பாடங்கள் கேட்டுப் பயனடையவும் தமிழ்நாடெங்கும் ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை பரவவும் வகை செய்தார்.

ஒருவருக்குப் பின் ஒருவராகக் கோவிலூர் மடத்துப் பீடாதிபதிகளாக விளங்கிய ஐந்து மடாதிபதிகள் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்று இந்தக் கோவில் மிகவும் அழகாக விளங்குகிறது.  திருக்குளம், நீராழி மண்டபம், மாட வீதிகள், பாடசாலை, குடியிருப்பு வீடுகள், ஆண்டவர் பின் வந்தவர்களுடைய அதிஷ்டானக் கோவில்கள் என்று விரிவடைந்து பொலிவு பெற்றது கோவிலூர்.

கோவிலூரில் ஐந்தாவது பட்டத்தில் விளங்கிய திருக்களர் ஆண்டவர் காலத்தைப் பொற்காலமென்று பாராட்டிப் புகழ்கிறார்கள்.  ஆண்டவர் தொடங்கிய திருப்பணிகளை நிறைவேற்றியது இந்த மகானே என்றும் கூறுகிறார்கள்.  மலாயா நாட்டில் வாழ்ந்த நகரத்தார் பெருமக்கள் இவருடைய காலத்தில் கோவிலுக்குப் பொருளை வாரி வழங்கினார்கள்.  நித்திய பூஜைகளும், ஆடிப் பூர உற்சவமும் குறைவின்றி நடைபெறச் செய்ததோடு 1908 ஆம் ஆண்டில் கும்பாபிஷேஹமும் செய்து வைத்தார்.  அப்போது சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஶ்ரீ சச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்ம பாரதி அவர்கள் தாமே நேரில் வந்திருந்தார்கள்.


(தொடரும்)

--Geetha Sambasivam (பேச்சு) 08:57, 25 ஜனவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam