தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 21மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:56, 4 ஜனவரி 2014 அன்றிருந்தவாரான திருத்தம் மறை பரப்புதலில் மதுரை முனைவர் G.சிறியபுஷ்பம், பேராசிரியை (ஓய்வு) பாத்திமா கல்லூரி, மதுரை. இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவரான புனித தோமையார், தாம் உணர்ந்து அனுபவித்த கிறித்துவிற்குச் சான்று பகர, கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இந்தியாவிற்கு வந்தார். நற்செய்தியால் கிறித்தவம் பரவத் தொடங்கிய அந்தத் தொடக்க காலத்திலேயே நம் இந்தியத் திருநாடு விலை மதிப்பில்லாத விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளும் பேறு பெற்றது. நற்செய்தியை அறிவிக்கவும், அதனைப் புரிந்து மனம் மாறியவராய்க் கிறித்துவர்களை உருவாக்குவதும் அரிய முயற்சியையும் அளவற்ற தியாகத்தையும் மையமிட்ட பணியாகும். இன்றைய தமிழகத்தில் மறை மாநிலங்களின் வளர்ச்சி வியப்பூட்டுமளவில் பெருகிப் பெருமை பெற்று வருகிறது. ஆனால், அவை உருவான வரலாற்றில் எண்ணற்ற பல அரிய செய்திகளை நாம் இனங்காண வேண்டியுள்ளது. இன்றைய நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் கடல்வழி ஒன்றே பயண வழியாயிருந்தது. அதனால், மறைத்தொண்டர்களாக இந்தியாவிற்கு வந்தவர்கள், கடற்கரைப் பகுதிகளிலேயே கிறிஸ்துவை அறிவித்தனர். புனித தோமையார் தொடங்கிப் புனித சவேரியார் காலம் வரையிலும் நற்செய்தி என்னும் கதிரோனின் கதிர்கள் கடற்கரைகளையொட்டிய பகுதிகளை மட்டும் பெரிதும் தழுவியிருந்தன. உள்நாட்டுப் பகுதிகளில் அதன் தாக்கம் ஊடுருவ இயலவில்லை. இக்குறை பிற்காலத்தில் தத்துவ போதகர் என்னும் தெ. நொபிலியால் தீர்ந்தது. "பரங்கி மார்க்கம்" என்று பகடி செய்யப் பெற்ற மேலைப் பண்பாட்டோடு கூடிய இந்தியக் கிறித்துவம் அதனால் தலமயமாக்கல் என்னும் பண்பாட்டு மயமானது. இந்தியக் கிறித்துவ வரலாறு காண எண்ணற்ற குறிப்புகள் உண்டு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய தோமையார் சிலுவைகள் மலபாரிலும் மயிலாப்பூரிலும் இருந்ததைத் தம் இந்தியா பற்றிய குறிப்புக்களில் இன்டிகோ கூறுகிறார். 13 ஆம் நூற்றாண்டில் மார்க்கோ போலோ ஜான் ஆஃப் மான்டே கார்வீனோ தென்னகம் வந்த போதே பல கிறித்தவ சபைகளைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார். இதன்பின் அறியலாகும் இந்தியக் கிறித்துவம் போர்த்துக்கீசியரின் வருகையோடு தொடங்குகிறது. கி.பி. 1498-இல் வந்த வாஸ்கோடகாமாவைப் பின்பற்றிப் பல பிரான்சிஸ்கன் சபைக் குருக்கள் கி.பி. 1534 இல் கோவாவில் தலைமையகம் அமைத்தனர் 8 ஆண்டுகளுக்குப் பின் வந்த தூய சவேரியார் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் கிழக்காசியப் பகுதிகளில் பயணித்துக் கிறித்துவத்தைப் பரப்பினார். தெற்குக் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பரவர்கள் தொடங்கிக் கோவா, திருவிதாங்கூர், கொச்சி, சென்னை போன்ற பகுதிகள் வரை அவர் பணி செய்தார். அரும்பாடுபட்டு ஓடியாடி அவர் உண்டாக்கிய சமயமாற்றம் என்பது இந்தியப் பண்பாடு அதன் சமூக மரபுகளைக் கைவிட்டு ஐரோப்பியப் பெயர், வாழ்வியல் மரபுகளைக் கட்டாயமாகக் கைக்கொள்வதாக அமைந்திருந்தது. அதனால் மனம் மாறிய தமிழ்க் கிறித்துவர்கள் அந்நியர் போலவும் புறச் சாதிக்காரர் போலவும் நடத்தப்பட்டனர். ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு தரும் நற்செய்திப் பணியில் இத்தகைய விளைவு கண்ட திருமறைத் தொண்டர்கள் பெரிதும் வருந்தினர். நிலைமை மாறிட அவர்கள் தம் நினைவுகளையும் செயல்களையும் மாற்றிக் கொண்டார். ஹென்றி ஹென்றிக்கஸ் என்பவர் தாம் மொழிகின்ற தம் சத்திய வேதம் கேட்போரின் மொழியால் மண்ணுக்குகந்தவாறு மாறி அமையுமாறு தமிழில் பாவ சங்கீர்த்தனம் வழங்கினார். மனம் மாறிய தம் "ஆடுகளுக்காக" இந்த ஆயரே இரு வழிபாட்டு நூல்களை, (கிரீசித்தியானி வணக்கம், தம்பிரான் வணக்கம்) எழுதினார். இந்நாட்டு மக்களின் மொழியில், பரவர், முக்குவர் பேச்சு வழக்குகளை மிகுதியாக அமைத்துக் கொண்டார். இவரே புனிதர் வரலாறு எழுதினார். இவரைப் பின்பற்றி வந்த அனைத்து இயேசு சபையினரும் அதனால் பெரும்பயன் அடைந்தனர். அதுவரை வேரூன்றுவதில் தாமதமும் விழுது விட இயலாமையும் கொண்ட கிறித்துவம் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. தென்னகத்தைப் பொறுத்தவரை மதுரை மறைத்தள வரலாறு இக்கால முதலே சிறப்புற்றது எனலாம். மதுரை மறைத்தளம் கி.பி. 1595 ஆம் ஆண்டில் இயேசு சபைக்குரு கொன்சாலோ பெர்னாண்டஸ் என்பவரால் அடிகோலப் பெற்றது. முதன் முதலில் மதுரையில் கிறித்துவ ஆலயமும், பள்ளியும் அவராலேயே ஆரம்பிக்கப்பெற்றன. பின் வந்த இராபர்ட் தெ நொபிலி அடிகளார் அன்றைய சமூகத்தில் அரச ஆதரவுடன் சமூக நியதிகளில் ஆளுமை செய்த உயர்குடிப் பிறப்பினராகக் கருதப் பெற்ற அந்தணர்களையும் கிறித்தவர்கள் ஆக்கும்படித் தம் மேனிலையாக்கப் புதுமுறையில் மறை பரப்பினார். கி.பி. 1606-இல் அதற்காக அவர் தமிழகத் துறவியாக வாழ்ந்தார். தமக்கென எளிய கீற்றுக் குடிலமைத்தார். புலால் தவிர்த்தார். அருந்தமிழை அரிச்சுவடியிலிருந்து கற்று ஆராய்ச்சி நூல்கள் எழுதும் வகையில் தம்மை மொழியறிவில் வளப்படுத்திக் கொண்டார். அவர் வாழிடமும் வழிபாட்டு முறைகளும் தழுவியமைத்தல் என்னும் தலத் திருச்சபைக்கேற்றதாக அமைந்தன. தம் பெயரையும் அவர் தத்துவ போதகர் என்று ஆக்கிக் கொண்டார். இத்தகைய மாற்றங்கள் சமுதாய மேல்தளத்திலுள்ள உயர்குலத்தவரை மனம் மாற்றப் போதுமானவைகளாயின. 'பரங்கி மதம்' என்பது மாறி கிறித்தவம் இந்தியச் சமயங்களுள் ஒன்று போல வரவேற்கப் பட்டது. இந்தியப் பண்பாட்டையும் தமிழ்ப் பண்பாட்டையும், ராபர்ட் தே நோபிலி--வீரமாமுனிவர்-- பெஸ்கி இணைக்கும் முயற்சி தத்துவ போதகருக்குப் பின் வீரமாமுனிவர் என்னும் பெஸ்கி அடிகளார் காலத்திலும் தொடந்தது. பைந்தமிழ் மதுரை பையப் பைய கிறித்துவின் கரங்களுக்குள் வந்தது. வீரமாமுனிவர் தமிழின் வித்தகராய் உரைநடை, கவிதை, கதை அகராதி, மருத்துவம் போன்ற பல முகங்களில் தம் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் தேம்பாவணி தமிழ்க்காப்பியங்களுள் கிறித்துவத்தை இணைத்த இணையற்ற பெருமை பெற்றது. தமிழின் எழுத்துக்களைச் சிரமமின்றி எழுத எழுத்துச் சீர்திருத்தமும் செய்தாரிவர். இவ்வாறு இயேசுவிற்காக தம் நடை, உடை,பாவனைகளை மாற்றிக் கொண்டனர் மறைத்தொண்டர்கள். தன்னுயிரையும் ஈந்த இயேசுவைப்போல யாவற்றையும் இழக்கவும் துறக்கவும் தயங்காத இவர்களில் தூய அருளானந்தர் கூற்று கவனிக்கத்தக்கது. இயேசுவிற்காக எங்கள் வாழ்வையும் மாற்றிக் கொண்டாலும் எங்கள் நிறம் மட்டும் எங்களை இம்மண்ணகத்தாரிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறதே. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் யாராவது எங்கள் நிறத்தையும் மாற்றவல்ல மருந்தினைக் கண்டு பிடித்து உதவ வேண்டுகிறோம் என்று இவர் தம் மேலாண்மையருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். மதுரையில் மறைத்தொண்டர்கள் பலரும் வந்துரைத்துள்ளனர். சின்ன சவேரியார் என்னும் ஜேம்ஸ் தெ. ரோசி கி.பி. 1738 ஆம் ஆண்டில் மதுரை மறைப்பணித் தளத்திற்கு வந்து 38 ஆண்டுகள் மறவ நாட்டுப் பகுதிகளில் சமயத்திற்கும் தமிழிற்கும் தொண்டாற்றியுள்ளனர். இங்ஙனம் நொபிலி, பிரிட்டோ, பெஸ்கி, தெ ரோசி என்று நீளும் இயேசு சபைக் குருக்களால் வளர்ந்த பழைய மதுரை மிஷன் கி.பி. 1773-இல் பாப்பரசர் 14 ஆம்கிளமண்ட் கட்டளைப்படி மதுரை விட்டகன்ற சேசு சபையினரால் தற்காலிகமான இருண்ட காலத்தை எதிர் கொண்டாலும் பின் வந்த 6 ஆம் பத்திநாதர் மூலம் கேரளப்பொறுப்பில் கண்காணிக்கப்பட்டது. ஆயனில்லா ஆடுகள் ஒரு புறம்; புதிதாக நுழைந்த திருத்தமுறைக் கிறித்தவம் மறுபுறமாகத் தென்னகம் திணறியது. இக்கால கட்டத்தில் பிரஞ்சு சேசுசபையின் மேற்பார்வையில் மீண்டும் மதுரை மிஷன் களை கட்டியது. கி.பி. 1838-இல் சேசு சபையைச் சார்ந்த நால்வர் அருட் திரு. பெடிரன்ட்(அருளானந்த சுவாமி) அருள் திரு. கார்னியர் (ஞானப் பிரகாசியார்)சுவாமி, அருள் திரு. ஏ. மார்ட்டின் (விசுவாச நாதர் சுவாமி) அருள் திரு. ரோன்குலட்(மிக்கேல் சுவாமி) என்ற நால்வரும் புதிய மதுரை மிஷனுக்குப் பொறுப்பாக நியமனம் பெற்றனர். தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளடங்கிய இப்பரந்த மறைமாநிலத்தில் பொறுப்பேற்ற நால்வருக்கும் பன்முகப் பிரச்னைகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வறுமையின் கோரப் பிடியில் வலுவற்ற பாமர கிறித்துவர்கள், தம் சமயத் தலைவரோடு போர்த்துக்கீசியர், பிரஞ்சுக்காரர், அமெரிக்கர் ஆகிய வேற்றுவருக்கும் கட்டுப்பட வேண்டிய கட்டாய நிலை. மூன்றே ஆண்டுகளில் முடிந்து போன பொறுப்பாளர்கள் நால்வருக்குப் பின் கி.பி. 1846 -இல் அதுவரை திருச்சியை மையமாக்கிய பழைய மதுரை தனிமறை மாநிலமாக மாறியது. அதன் முதல் ஆண்டகை கனோஸ் அவரைத் தொடர்ந்து பார்த்தே, பைசாண்டியஸ் போன்றவர்கள் மதுரைப்பேராயர்களாயிருந்தனர். மக்களுக்குக் கல்வித் துறையிலும், சமூக வளர்ச்சித் துறையிலும் பல்வேறு சேவைகளைச் செய்தனர். புதிய மதுரை மிஷன் இன்று தாயாகித் தூத்துக்குடி, திருச்சி, கோட்டாறு, பாளையங்கோட்டை, சிவகங்கை எனப் பல தனி மறை மாவட்டஙக்ளை உருவாக்கியுள்ளது. |