ஆகமீயம்: மந்திராயணம்மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:42, 25 பெப்ரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
திராவிட மெய்யறிவு வரலாறு- 3.1
படலம் மூன்று: ஆகமீயத்தின் மந்திராயணம் முனைவர் கி. லோகநாதன் 1.0 உடற் கூற்று எந்திரங்களின் மூலப்பொருள் அசுத்த மாயை; அறிவு எந்திரங்களின் மூலப் பொருள் சுத்த மாயை. இனி இவ்விரண்டும் மாயைகளின் மூலம் குடிலை அல்லது தூமாயை. இதன் மேல் அக்கர சக்கரங்கள் பாய, அறிவு எந்திரங்கள் தோன்றும் இடம் சுத்த மாயை என்றும், தனுக்களும் அதன் பல்வேறு உறுப்புகளும் தோன்றும் இடம் அசுத்த மாயை என்றும் படும் 1.1 சுத்த மாயையிலிருந்து உற்பவிக்கும் அறிவு அல்லது உள்ள எந்திரங்கள் சிந்தனை ஓட்டங்கள் கற்பனைகள் கனவுகள் இறைவடிவங்கள் போன்றவை ஆகும். அசுத்த மாயையிலிருந்து உற்பவிப்பவை தனுக்களும் அவற்றின் உறுப்புக்களும் தாவரங்கள் புவனங்கள், விண்னில் விளங்கும் கோள்கள் விண்மீன்கள் போன்றவையாகும். 2.0 ஒன்றறி உயிர்களிலிருந்து கூர்ந்து ஆறறி உயிர்கள் தொடங்கி அவற்றையும் கடந்தறி உயிர்கள் வரை, இந்த இரண்டு வகை எந்திரங்களும் ஒத்து வரும் முறையிலேயே தொழிற்படுகின்றன. 3.0 இனி மானிடப் பிறப்பு பெற்ற உயிர்கட்கு சில தனிச் சிறப்புக்கள் உண்டு. அவற்றில் மிகவும் முக்கியமானது, அசுத்தமாயா தனுவினைப் பெறும் அத்தகுதியை கழன்று சுத்தமாயா தனுவையே உடலாகப் பெறும் வாய்ப்பு உண்டு என்பதை அறிவதாகும். உடலோடு இருந்தாலும் அதில் தொடக்குறாது. அசுத்தமாயாத் தனுவில் பதியாது அறிவு எந்திரங்களே விளங்கும் மந்திரத் தனுக்களையே தன் தனுக்களாகக் கொண்டிலங்கும் ஓர் வாழ்க்கை நிலை தன்னால் அடையக் கூடிய ஒன்று என்று அறிவதாகும். 3.1 இதனை நன்றாக அறிந்த பெரியார்களே இருபிறப்பாளர் ஆகும். மானிடப் பிறப்பிலிருந்து கூர்ந்து உயர்ந்து தெய்வப் பிறப்பு அடையும் முயற்சியே தம் முயற்சியாக வாழ்வோரே இத்தகையோர். இந்த முயற்சியில் வெற்றி அடைவது எப்படி? 4.0 அறிவிலே ஆணவ மலத்தின் இருளிலிருந்து வெளிப்பட்டு கரந்திருக்கும் எந்திரசொரூபங்களின் மறைமுக அறிவினைக் கொண்டு உயிர்கள் பற்பல பொருட்களை தத்தம் தேவைகட்கு ஏற்ப படைத்து மகிழ்கின்றன. குருவிகள் கூடு கட்டி வாழ்கின்றன. பாம்பு போன்றவை வளை தோண்டி அதனுள் வாழ்கின்றன. மீன்கள் தமக்கேற்ற நீர் வகையையும் நில வகையையும் தேர்ந்து சூழலிற்கு ஏற்ற முறையில் உடல் உறுப்புக்களைப் பெற்று வாழ்கின்றன. மானிடர்கள் வீடென்றும் அதற்கு வேண்டிய பாண்டங்கள் கருவிகள் படுக்கைகள் மற்றும் ஏனைய வசதிகள் என்றும், கல்விகூடங்கள் தொழிற்கூடங்கள், ஆய்வுக் கலன்கள் அதற்குரிய எந்திரங்கள் கருவிகள் மற்றும் ஏனைய வசதிகள் என்றும், போரிட்டு தற்காக்க போர்க்கருவிகள் போர் விமானகங்கள் கப்பல்கள் எறிகணைகள் வான்கலங்கள் என்றும், இன்னும் பலவாறான எந்திரங்களைப் படைத்துப் படைத்து புதுப்புது உலகங்களைக் கண்டு கூர்ந்து கூர்ந்து செல்கின்றனர். 4.1 இத்தகைய எந்திரப் படைப்புக்களைப் பார்த்து அவற்றின் மூல வேட்கைகளை உணரும் போது, அனைத்தும் உடற்றனுவால் வரும் கால-இடத் தடைகளை நீக்கும் குறிப்புடைத்தாய் இவை இருக்கின்றன என்று தெளிவாகின்றது. கால்களால் நடந்து சென்றே இடத்தைக் கடக்க வேண்டும் என்ற கட்டின் நீக்கமே ஊர்திகளின் படைப்பு. கண்களால் மாத்திரம் பார்த்து அறிய வேண்டும் என்ற கட்டினை நீக்கவே நுண்பெருக்கி தொலைநோக்கி என்பன போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் படைப்பு. செவிப்புலனால் வரும் கட்டினை நீக்க தொலைபேசி ஒலிபெருக்கி வானொலி போன்றவை. உடம்பின் முன் நிகழ்வதையே அறிய வேண்டும் என்ற கட்டின் நீக்கமே தூரத்து விசயங்களள உடன் காணத் தரும் தொலைக்காட்சி வசதிகள் போன்றவை. 4.2 ஏன் இவ்வாறான உடலைக் கடந்து அறிய வேண்டும் எனும் வேட்கை என்ற கேள்வி எழ, உடலைக் கடந்து அல்லது உடலின்றி ஓர் வகைய மந்திரசொரூப தனுவைப் பெற்று, அதன் வழி நினைத்த இடத்திற்கு உடன் செல்லல். நினைத்த பொருளை உடன் பார்த்தல் கேட்டல் அனுபவிதலுமாக வரும் திறங்களோடு அதாவது அட்டமாசித்திகளோடு இருக்கவேண்டும் என்ற மூலவேட்கை உயிரோடு கலந்திருக்கின்றது என்று அறிகின்றோம். எண் சித்திகளாவன : அணிமா இலகிமா கரிமா மகிமா பிராத்தி பிரகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்பன வாகும். இவற்றின் விளக்கத்தை திருமூலரின் மூன்றாம் தந்திரத்தில் கண்டு கொள்க 4.3 புடைபெயர்ச்சி முடியாத தாவரங்கள் அதனைப் பெற்று பறத்தல் ஓடல் நடத்தல் ஊர்தல் என்றவாறு நகரும் பிராணிகள் ஆகின்றன. அறிவில் பல குறைகளி உடைய இவை அவற்றைப் போக்கி ஆறறிவு பெற்ற உயிர்களாக மானிடர்கள் ஆகின்றன. இதற்கடுத்த பரினாம வளர்ச்சியாக, அசுத்த மாயா காரியத் தனுவின்றி ஆனால் உயிர் மந்திரசொரூபமாக்வே இயங்கி உடலால் வரும் கட்டுகள் எல்லாம் இல்லாது வாழும் ஓர் நிலையாகும். இயக்குகின்ற மூல ஊந்தல்களாகிய இந்த எண் சித்திகள் அத்தகைய பிறப்புக்களை ஈட்டியும் தரும் தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 3.2 5.0 எந்திர சங்கிலித் தொடரை ‘கன்மம்’ என்று கொண்டால், இரண்டு வகையான கனமத் தளைகள் இருப்பதைக் காணலாம். ஒன்று உடற்றனு தரும் எந்திரத் தொடர் சம்பந்தம். பிறிதொன்று அறிவுருக்கள் தரும் எந்திரத் தொடர் தரும் சம்பந்தம். முதலதை ‘தனுகன்மம்’ என்றும் இரண்டாவதை ‘அறிவுகன்மம்’ என்றும் கொண்டால், அனைத்துயிர்கட்கும் இவ்விர்ணடு தன்மைகளுடைய கன்மங்களின் சம்பந்தம் உண்டெனத் தெரிகின்றது. 5.1 ஆக யாண்டு தனுகன்ம சம்பந்தம் நீங்குகின்றதோ, ஆண்டு உடலெடுத்து அறிகின்ற கட்டுப்பாடின்றி, உடலின்றியே ஆக கால இடக் கட்டுகளின்றியே பற்பல அறிந்து மகிழும் பிறப்புக்கள் வந்தடையுமென்று தெரிகின்றது. மேலும் இத்தகைய தனுகன்ம நீக்கம் தற்செயலாக நடக்கும்போதே ‘உடற்கழி அனுபூதிகள்’ எனும் Out of Body Experiences மெய்யாகின்றன என்றும் தெரிகின்றது. 6.0 தனுகன்மம் நீங்கிய ஆன்மாக்களே ‘விஞ்ஞானகலர்’ ஆன்மாக்கள் ஆகும். இவர்கட்கு சுத்தமாயா மந்திரசொரூபங்களே உடம்பு. காலம் இடம் ஆகியவற்றை நிறுத்தும் தனு இல்லாதுபோக, உலகெங்கும் மந்திர வடிவத்தில் சென்று வரும் பேறும், அத்தோடு நிகழ்ந்தது நிகழ்வது நிகழ விருப்பது ஆகியவற்றை உடன் அறியும் பேறும், அதாவது மகிமா சித்தி கிட்டியவர்களாக இருப்பர். இருக்கின்ற மலம் ஆணவமேயாக, சுத்தமாயா உலகக் குடிகளாக, பற்பல மந்திர சொரூபங்களை அக்கர சக்கரங்களைப் பெற்று அறியாதிருப்பதை அறிந்து எஞ்சி இருக்கின்ற ஆணவ மலத்தை நீக்குவர். 6.1 உடற்றனு இல்லாது போக சுட்டுகால சுட்டுயிட உணர்வுகள் அதாவது சுட்டுணர்வுகள் இல்லாதவர்களாய், இவற்றைக் கடந்து மேலான நிலையில் திரிகின்ற மந்திரசொரூபிகளாக விளங்குவர். ஆயினும் ஆணவயிருள் இருக்க, அதனால் அறியாமை இருக்க அதனால் குறிப்புக்கால உணர்வு இருக்கும் என்றறிக. கனவு காட்சிகளில் வரும் மந்திரவுலகே இவர்கள் உலகு. இறையருளால் பற்பல தெய்வ வடிவங்களைப் பெற்று, மேலே மேலே சென்று முடிவில் ஆணவ மலம் முற்றிலும் நீங்க, இந்த தெய்வ வடிவங்களும் வேண்டாதாகி இறைவனோடு இரண்டறக் கலந்து அவனோடு முற்றிலும் வியாபித்து ஒருமையுடன் வேறற நின்று முத்திபேறு அடைகின்றன. 7.0 எவ்வாறு ஓர் தனு அசுத்த மாயையை மந்திரங்கள் முயக்குவதால் உருவாகின்றதோ, அதேபோலவே ஒவ்வொரு தெய்வடிவமும் அதனைப் போன்ற பிற வடிவங்களையும் சுத்தமாயையை மந்திரங்கள் முயக்குவதால் தோன்றுவன ஆகும். தனுகனமத் தளை தொலைத்த நிலையில், நமக்கு சித்திக்கக் கூடியவையே தெய்வ வடிவங்களும் அவற்றைப் போன்ற பிறவும். 7.1 தெய்வ வடிவ நிலையில் அறிவின் தொழிற்பாடு நிலையே நிலையாகவும், அசுத்த மாயா விருப்பும் பந்தமும் ஓர் சிறிதும் இலாது தூய்தாக இருக்கும். பற்பல மந்திர வடிவங்களையே பற்றி தான் அதுவாகி, அதற்குரிய குணங்களையும் அறிதிறன்களையும் பெற்று, புதியதாகப் பற்பல கற்று ஆணவ இருளை முற்றிலும் நீக்க பெரிதுழைக்கும் இத்தகைய ஆன்மாக்கள். 7.2 உடற்றனு வெடுத்த ஆன்மாக்களுக்கும் இந்த மந்திரவுலக வாழ்க்கை அனுபவம் ஓரளவு உண்டு. எப்படியெனில் கனவுகள் நுதல்விழிக் காட்சிகள் தரும் அனுபவங்கள் இத்தன்மைய வாம். இங்கு மந்திர வடிவங்கள் தானே யாகி பற்பல கற்பதும், அதன் வழி ஆணவ மல நீக்கம் நடைபெறலும் உண்டு. இந்நிலை வளர, மரணமெனும் முடிவில் இத்தகைய ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுக்கும்போது, உடற்றனுவால் வரும் கால இட கட்டுக்களின்றி மந்திர வடிவமாகவே வாழ்ந்து பற்பல புதிய அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு அமைகின்றது. உலகு மந்திரவுலகாக அமைந்து உடற்றனுவின்றி கால இடக் கட்டின்றி சஞ்சாரஞ் செய்து பற்பல அறிந்து மகிழும் வாழ்க்கை அமைகின்றது. தொடரும் திராவிட மெய்யறிவு வரலாறு- 3.3
இந்த மந்திரபுலம் ஆன்மாக்கள், சித்தபுருடர்கள் கந்தவர்கள் வித்தேசுரர்கள் போன்று நினைத்த இடத்தில் நினைத்த வடிவில் தோன்றும் ஆற்றலோடு விளங்குபவர்கள் ஆகும். இவர்களை ‘சாயாப்புருடர்கள்’ என்றும் கூறலாம். மின்காந்த அலைகள் போல பொறிபுலகளின்றி கண்டு கேட்டு உற்று சுவைத்து முகர்ந்து அறிந்து அறிவினைக் கவர்கின்ற பொருளோடு அநந்நியமாக நின்றறிந்து ஆகவே சத்தறிவினைத் தவிர்த்து வேறொன்றும் அல்லாத சுத்த நிலையத்தவாகி செல்லாத உலகெலாஞ் சென்று காணாத வெல்லாங் கண்டு அறிவினைப் பன்மடங்குப் பெருக்கி உயர்வார்கள். எதுபோல வெனின், மொழித்திறன் சித்தித்த மானிட ஆன்மாக்களுக்கு இதற்கு முன் தோன்றாத அறிவெல்லாம் சிந்தனை எல்லாம் மொழிவழி கிட்டுவதுபோல வென்க. கனவுகள் நிறைய வரப்பெற்று அதன் வழி பொறிபுலன்களுக்கு கிட்டாத பல உண்மைகளை ஒருவன் அறிவதைப் போல எனலுமாம். 8.1 குறிப்புக் கால கட்டே கட்டாக, அதவழி வரும் வேட்கையே வேட்கையாக சுட்டுக்கால கட்டில் வீழ்த்தும் கன்மத்தளை கழன்று, ஆணவ மலமே இனி கழிக்க வேண்டிய மலமாக, மந்திரவுலகு அழிக்கப்படும் மகாசங்கார காலம் வரை தொடரும் பண்புடை நித்தியசூரிகளாக இவ்வான்மாக்கள் திகழும்.
இந்த நித்தியசூரிகளின் அனுபவம் எப்படி அமையுமெனில் கூறுதும். தனுவெடுத்து கற்கும் கட்டு இல்லாதுபோக, பிறப்பும் இறப்பும் இலாத யந்திர சொரூபங்களே தானாகும் சாயாபுருடர்களாக வாழ்வர். இறைவன் திருவுளம் பற்றும் மந்திரவடிவங்கள் தாம் ஆகுவர். கனவுகளில் காட்சிகளில் ஓரளவு வெளிப்படும் புராணவுருக்கள் தாம் ஆவர். கண்ணனாக உருத்திரச் சிவனாக திருமுருகனாக விநாயனாக திருமாலாக இலக்குமியாக கலைவாணியாக என்றெல்லாம் வருவதொடு தீமையைக் கண்டிக்க பேயாக பூதமாக அசுரர்களாக அரக்கர்களாக இன்னும் இதுபோன்ற அழிக்கும் திறத்து மந்திரவடிவங்கள் தாமாகி இறைவன் தன் திருவிளையாடல்களை நடத்துதற்கு கருவியாக ஆவர். 9.0 இவர்கட்கு கற்றல் என்பது அநந்நியமாக நின்று, தான் எடுத்த அறியந்திர வடிவினை சத்துப்பொருளாய் அறிவதாகும். காட்டாக மாயக்கண்ணன் உருவெடுக்க, அந்த யந்திரம் தானாகி, உடலெடுத்த ஆன்மாக்களோடு உடங்கி ஒருமையுடன் நின்று தொழிற்படுத்தி அந்த உடல் ஆன்மாக்களுக்கு ஓர் அனுபவம் தரும் முகத்தானே தாமும் அவ்வுருவின் இயல்பினை அநந்நியமாய் நின்று அறியும். இங்கு தொழிற்படுத்தப்படும் மானிடன், தான் அறியாது தன்னைச் செலுத்தும் கண்ணன் வடிவினை மல மறைப்பால் அறியாது, அதன்வழி ஆகும் செயல்களைத் தான் செய்து, அந்த செயல்களால் வரும் பலன்களில் பொறிபுலன்களால் உணரப்படுபவற்றை உணர்ந்து மகிழ்வான். பிறகு முதிர்ந்து ஓர் சித்தனாகிய பொழுதே, தான் அவ்வாறு ஒழுகியதற்குக் காரணம் தன்னுள் ஆவேசித்து தன்னறிவோடு கலந்து தொழிற்படுத்திய கண்ணன் எனும் மந்திர வடிவம் என்று அறிவன். 10.0 இவ்வாறு அநந்நியமாய் நினைத்த மந்திர வடிவினை பெற்று, நினைத்த உள்ளத்தில் உடலில் ஆவேசித்து (சித்தர்கள் கூடு விட்டு கூடு பாய்தல் போல்) அந்த ஆன்மாக்களைத் தொழிற்படுத்தி யந்திரவடிவங்களின் இயல்புகளை அறிதலே மந்திரவுலக வாழ்க்கையின் பெருநோக்கம். அசுத்த மாயா காரிய வுலகில் பற்பல பிறவிகள் எடுத்து, எடுத்த பிறவிக்குத் தக, ஓர் உலகினை அறிந்து அதற்குத் தக அறியாமை நிக்குவதுபோல், சுத்தமாயா வுலகில் சுத்த உடம்பாகிய பற்பல மந்திர வடிவங்களைப் பெற்று அவையேத் தானாகி, பிறப்பு இறப்பு என்பதற்குப் பதிலாக ஓர் யந்திரவுரு தானாதல், பிறகு கழன்று இன்னொன்று தானாதல் என்றவாறு வாழ்ந்து இதுவரை காணாத புவனமெல்லாங் கண்டு அறியாமை நீக்கம் செய்தலே இங்கு ஆகும் கற்றலாம். படலம் மூன்று: மந்திராயணம் முற்றும்
|