அழிவில் உண்மை : பூரணகாண்டம்
நான்காம் அதிகாரம்: பயனியல்
படலம் ஒன்பது: ஏரணவியல்
முனைவர் கி.லோகநாதன் (உலகன்) 1997
சூத்திரம் 26: ஏரணவுறுப்பியம்
மேலே காண்பதெல்லாம் இரட்டுருவின் நூற்களாகவே இருப்பதின், புறவுரு கண்டு நிமித்த காரணப் புதையுரு சென்று அதனைச் செவ்வே அறிந்துத் தெளிந்து செய்நூற்களாகப் பலவியற்றி, பிறகு இவற்றையும் அறிந்துத் தெளிந்து அவற்றோடு இணைத்து இயல்நூலாக்கி ஆழ ஆழச் செல்ல, தூரநூற்களும் ஆகமங்களாகிய தூரதூர நூற்களும் இயற்றப்படும் என்று விளக்கப்பட்டது. இந்த ஞானச்செலவில் தீர்க்கமான முடிவாக, மேற்கொண்டு போக முடியாத அறிவின் எல்லையாக, அந்தத்தின் அந்தமாக இருப்பது வாக்குமனாதீத கோசரமாய் மேலான மௌனத்தின் வழியாக அறியலுறும் ஞால்வேதம் இருப்பதும் விளக்கப்பட்டது. இவ்வாறு இஞ் ஞால்வேதத்தின் சிவஞானமே ஞானமாக கொண்டிலங்கவேதான் ஆன்மாக்களின் எல்லா ஞானச் செய்திகளின் உள்நோக்கமென, இவ்வதிகாரத்தில் இச்செலவிற்குரிய ஏரணக்கூறுகள் விளக்கப்படும். அறிவின் செலவுகள் பிழையான வழிகளிற் சென்று சிவஞானம் பெற்றுச் சுடரமுடியாது போகும் சாத்தியக் கூறுகள் வாழ்வில் இருப்பதின், மெய்வழி யாதென்றும் அவற்றின் அடையாளக் கூறுகள் யாவையென்றும் இவ்வதிகாரத்தில் விளக்கப்படும் என்பதாம்.
சூத்திரம் 26: ஏரணவுறுப்பியம்.
புகுந்துவுட் பொருள் பொருந்துத்தி யினறிந்து
சிறந்துச் செம்பொருட் டுணிவுநற் சூத்திரத்துப்
பகர்ந்து பரனுமொத்திடப் பல்லேதுவின் மேற்கோள்
கருளிரிய காட்டிக் கண்திறப் பிப்பதுவே
இச்சூத்திரம் எந்நுதலிற்றோவெனின், ஏரணவியல் என்பது சூத்திரம், ஏதுவின் எழும் மேற்கோள், இயைபு விளக்கும் எடுத்துக்காட்டுகள் என்றவாறு முன்று உறுப்பினதாகச் செல்லும் இயல்புடைத்து என்பதையும், இதற்குக் காரணம் உண்மையெனின் பரனும் உடன்படு வகையில் இருப்பதொன்று என்றும் அத்தோடு உடன்பாடு எழும்போது, கண்களைத் திறக்கவைத்து காணாததைக் கண்டறியுமாறுச் செய்து கற்றல் ஓர்வகையில் மெய்யாகும்படிச் செய்யும் பண்பினது என்று உணர்த்துதல் நுதலிற்று என்பதாம். தான் கண்டவொன்றை பிறருங் காண வைக்கவே ஞானப்பனுவல்கள் என்பதின், அதற்குரிய அறிவியல் முறையியல் இவ்வாறு இயங்கும் ஏரணவியல் என்பதையும் விளக்குதல் கருத்திற்று என்பதாம்.
முதலாம் படிமெய்
மேற்கோள்: ஆழக் காட்சியின் செய்நூல்கள் அனைத்தும் சூத்திரங்களாலேயே இயங்கும் என்றது.
ஏது: பல்வேறு நூலுத்திகள் வழி சிந்தனை சென்றபோதிலும் சிற்சத்திப் பதிவினாலேயே ஞானவுதிப்புக்கள் எழ, அவற்றையே சொற்படுத்துவனவாக இச்சூத்திரங்கள் திகழ்வதின்
எ-டு 2-1-1
'சூத்திரம்' என்ற சொல் தூயத்தமிழ் சொல்லாகிய 'சூ' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தவொன்றாம். இந்தச் 'சூ'வும் 'சி' என்பதின் திரிபே. இதன் பொருளாவது சிற்சத்திப் பதிவின் எழு ஞானத் தெளிவு என்பதாகும். இத்தகையப் பதிவுகளே, சிற்சத்தி ஈட்டங்களே உள்ளுணர்வுகளாக, ஞானவுதிப்புக்களாக ஆழத்தெளிவுகளாக ஆன்மாக்களால் அறியப்படுகின்றன. நூலென ஒன்றைப் பற்றி செய்தித்துவத்தின் பல வினைகள் ஆற்றி பின் சாட்சித்துவத்தின் ஒடுங்கி நிற்க, அதுபொழுது தானே எழும் ஞானவெடிப்புக்களாக இவை மலர, இத்தகைய ஞானங்கள் சூஸ்த்திரங்களாக உணரவும் படுகின்றன என்றவாறு. சூஸ்த்திரமாவது , தானே எழும் ஞானவெடிப்புக்கள் ஆகும். இதனால் இது கிடைக்கும் என்று நியதிப் படுத்தபடாதவாறு, நிலத்தை அகழ்ந்து செல்வானுக்குக் கிடைக்கும் அருங்கலப் பெட்டகங்கள் போல, ஆழ் நுழைவின் ஞானத் தெளிவுகளே இச்சூஸ்திரங்கள் என்பதாம்.
எ-டு 2-1-2
இனி இத்தகைய ஞானவெடிப்புக்களாகிய சூஸ்த்திரங்களைகிளக்கும் சொற்களாலியன்ற சூத்திரங்கள், சில்வகை எழுத்தின் இயலும் செய்யுட்களாகவே வெளிப்படும். இயல்நூலாக ஒன்றினைக் கண்டு , புறவுருவாக அதில் சில கூறுகளைத் தேர்ந்து , அதன் நிமித்தகாரணமாக உடன் நிற்கும் புதையுருவினை அறிந்து தெளிவான் பொருட்டு நூலுத்திகள் பெய்து முயன்று செல்ல , அதுபொழுது அப்புதைவடிவங்களின் முதற்காட்சிகளாக ஆகாவே உள்ளுணர்வாகவே உணரப்படும் ஒன்றாக இந்த ஞானவெடிப்புக்கள் உதித்து நிற்க , சில்வகை எழுத்துகளாலேயே இயங்கும் என்றது. தெள்ளத் தெளிந்த, இன்னின்ன இயல்பிற்று இது, இதனின் இது என்றவாறெல்லாம் தெளிந்து அறியப்படா ஞானமாகவே இது நிற்றலின், எல்லாவற்றையும் விளக்கித் தெரிக்கும் வகையில் அது இயங்கா என்றது. மேலும் தானே எழாது , ஓர் இயல்நூலினைப் பற்றியே எழுவதின், அது செய்நூலின் உறுப்பாகிட, அது செய்யுள் வடிவிலேயே இயங்கும். இஃது இவ்வாறென ஒருவன் துணிந்து செய்தலின், அது செய்யுள் ஆயிற்று எனினும் ஒக்கும்.
எ-டு 2-1-3
மேலும் வெளிப்பட்டு நிற்காது ஆழ ஆழப் புதைந்து கருக்களாக, மறைஞானங்களாக நின்றிலங்குவதினும் முதற்சொல்லாக்கம் என்பதினும், நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகி, ஆடியின் சாயையினைப் போன்று பரந்துபட்ட ஞானத்தை சுருங்கிய குறுகிய வடிவில் தரித்து நிற்பதின், செய்யுள் வடிவிலேயே இயங்கவும் செய்யும். சொற் பல்காதும் அதேபொழுது குறித்தொன்றைத் திறன்பட கிளப்பதாகவும் இது அமையும். சொற்கள் பல்கிடின் அதுவோர் விரிவுரையாக, விருத்தியாகவே அமையுமென, அதனை விளக்குவது சூஸ்த்திரமாகாது வேறொன்றாகி இயங்கும். எங்கு ஆழமான நுண்ணுணர்வோ ஆங்கு அதனை மாத்திரம் தெரிக்கும் வகையானே, பொருந்திய யாப்பில் திருந்திய சில சொற்களின் வழியாகவே கிளவி வடிவில் எழும் என்றவாறு. இதனின் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைப்படகூறல், மயங்கக் கூறல் , பொருளில மொழிதல் போன்ற சிதைவுகள் நற்சூத்திரங்கள் மாட்டு இல்லாதுபோம் என்றவாறு.
எ-டு 2-1-4
இனி நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகிய சூத்திரங்கள், அதனின் எளிதில் துளக்கலாகாத் துணைமையொடு வருமென்றது. துளக்காலாத் துணைமையாவது, படித்தவுடன் பொருள் விளங்கும் வகையில் செல்லாமை என்பதாகும். நுனித்து சிந்தித்தப் பிறகே உட்பொருள் விளங்கும் வகையில் நிற்கும் பண்பே சூத்திரங்களின் இலக்கணமாகும். இதனின் தன்னகத்தேயே அதனைப் புரிந்துகொள்ள , ஓர் உரை வேண்டப்படும் என்பதையும் குறிப்பால் உணர்த்தியவாறு நிற்கும் என்பதாம். அனைவருக்கும் தெரிந்தவொன்றாகவும், அதனால் ஏற்புடைத்து என்றவாறு அனைவராலும் உடன்பட நிற்பதாகவும் இருக்கின்ற உண்மைகள், மேற்கோள்களாக அனைவர் அறிவிலும் ஏற்கனவே நிற்பதின், அவற்றை மொழிவது சூத்திரங்கள் ஆகாவென்பது. இதுவரை மக்கள் கண்டிராத உண்மைகளை, புதியப்புதிய ஆழஞ்சென்று தெளிந்தவற்றை , கண்டறிந்து பகர்தலின், சூத்திரங்கள் என்பன யாண்டும் துளக்கலாகா துணைமையுடனேயே வரும் பண்பிற்றாம்.
எ-டு 2-1-5
இனி இச்சூத்திரங்கள் தத்தம் தகமையின் வேண்டிநிற்கும் உரைகளில், காண்டிகை உரை இன்றியமையாதொன்றாகும். சிற்சத்திப்பதிவின் ஞானவெடிப்பாக சூஸ்த்திரத்தினைப் பெறும் ஒருவன், பெற்றவுடன் அது உண்மையே என்று உடன்பட மாட்டான் -- ஞானவுதிப்பாகவே ஓர் உள்ளுணர்வாகவே இருப்பதின் இவ்வாறு. மேலும் நையாயிகர் கூற்றுப்படி பிரமாவாகிய உண்மைகளையே பிறப்பிக்கும் பிரமாகரணங்கள் இவ்வுத்திகள் என்பதும் பொருந்தாத ஒன்றாகும். உத்திகள் என்பன ஞானவெடிப்புக்கள் நிகழும் நிலனாக அறிவினை ஆக்குமேயொழிய, வெடிக்கும் ஞானங்கள் உண்மையே பொய்யல என்று துணியவுந் தராதென்பதின் இவ்வாறாம். ஞானநிலங்களாகப் பொய்நிலங்களும் உண்டென, அந்நிலங்களின் புகும் அறிவு, பொய்மைகளையே சூஸ்த்திரங்களாக பெருவதற்கும் இடனுண்டு என்பதின் இவ்வாறு.
இரண்டாம் படிமெய்
மேற்கோள்: இனி எல்லா சூத்திரங்கட்கும் அதன் உட்பொருள் உண்மையே என்னுந் தெளிவு படுத்துவதாக நிற்பது காண்டிகை உரையே என்பது.
ஏது: இத்தகைய உரையே சூஸ்த்திரங்களை உண்மையென தான் ஒத்திடவும், பிறரும் தன்னோடு உடன்படவும் உதவுவது என்பதின்.
எ-டு 2-2-1
ஞானவெடிப்புக்களாகிய சூஸ்த்திரங்கள் என்பன, காணல் கேட்டல் முகர்தல் தொடுதல் என்ற பொறிவழிச் செய்கைகள் வழியாகவோ , சிந்தித்தல் மதித்தல் நினைத்தல் கருதுதல் போன்ற புத்தி வினைகள் வழியாகவோ, அர்ச்சித்தல் உபாசித்தல் நிட்டை கூடல் தியானித்தல் என்பனபோன்ற ஆன்மவினைகளாகிய சரியாதிகள் வழியாகவோ, உறக்கனவு விழிக்கனவு என்பனபோன்ற அவத்தை நிலைகள் படுவதாலோ மேலும் இவைபோன்ற வினைகள் பலவற்றை இணைத்துச் செய்வதாலோ மேலும் விளக்கவாரா வகையினாலோ அகத்தே எழலாம் என்பதின், எழுகின்ற வாயிலையேக் கருதி அதனையே ஓர் அளவையாகக் கொண்டு, இந்நெறி வழி எழுவதின் அது உண்மையே எனக் கொள வாராதென்பது. ஞானத்தை பிறப்பிக்கும் பிரமாகரணங்கள், அந்த ஞானங்கள் உண்மையே என்ற உணர்வினையும் தாராதுபோம். இதனின் எழுகின்ற சூஸ்த்திரங்கள் அனைத்தும் ஆதிசித்துக்களாகவே நிற்கும் என்றவாறு. ஓர் வகைய ஐயப்பாட்டுடனேயே தோன்றி நிற்கின்ற ஞானவெடிப்புக்களே இங்கு ஆதிசித்துக்கள் எனப்படுகின்றன.
எ-டு 2-2-2
எவ்வுணர்வு இருளைக் கிழித்துக்கொண்டு ஒளிர்கின்ற ஆதிசித்தாக இலங்கி நிற்கின்றதோ, அதுவே அப்பெற்றிமையின் அந்தசித்தாக, சித்தாந்தமாக முடிக்கவேண்டிய முனைப்பையும் தன்னுடன் கொண்டுவரும். இம்முனைப்பில் பட்டியங்க, அதன்பொழுது எழுவதே காண்டிகை உரை ஆகும். ஆதிசித்தாக நிற்கும் சூஸ்த்திரத்தின் உண்மையை அல்லது பொய்மையை காணத் தந்து உடன்பட அல்லது மறுத்துப் போக்கிட உதவுவதின், இது காண்டிகை உரை எனப்படுகின்றது. தன்னுள் சூஸ்த்திரமாக வெளிப்படும் ஓர் ஆழ் ஞானத்தை சொற்படுத்தி, நினைவில் இருத்தி பல்வேறு வகையில் சிந்தித்துத் தெளிந்து, மாணறிவாக அச்சூஸ்த்திரத்தை உணரும்போது, தனக்குத் தானே அறியாது அச்சூஸ்த்திரத்திற்கு ஓர் காண்டிகை உரை இயற்றுகின்றான். இன்னின்ன காரணங்களால் இது என்றவாறு தெளிந்தே உடன்பட்டும் உடன்படாதும் நிற்பதின் இவ்வாறு என்பதாம்.
எ-டு 2-2-3
இவ்வாறு சிந்தித்துத் தனக்குத் தானேத் தெளிவது, தனக்குள் காண்டிகை உரை இயற்றுவதே தன்பொருட்டனுமானம் என்பது. அனுமானித்தலாவது ஏரணநியதி வழுவாது சிந்தித்து புதையுருவாக நிற்பதைக் கண்டறிதலாம். இனி இவ்வாறு உண்மையைத் தெள்ளத் தெளிய கண்டவொருவனே, அதே காண்டிகை உரையை பிறரையும் உடன்பட வைக்க , விரித்து மொழியின் எழுதியோ இயம்பியோ வெளிப்படுத்துவன் என்றவாறு. தான் கண்ட உண்மையை பிறரும் கண்டு மகிழத் தருதலின், அவ்வுரை இங்கு பிறர்பொருட்டு அனுமானம் என்றாகின்றது. இது எவ்வாறெனின், தான் கண்ட ஓர் ஆழுண்மையை பிறரும் கண்டு தெளிந்தால் நலம் என்ற கருணையின் வெளிப்பாடாகவும், பலர் உடன்படுதல் தன் கண்டதற்கு இன்னும் உறுதி பிறக்கத் தருதலின் இவ்வாறு எனவும் கொளத் தகும். தான் உடன்பட்டது பிறரும் உடன்படுவதைக் காண, எஞ்சி நிற்கும் ஐயப்பாடுகளும் நீங்கும்.
எ-டு 2-2-4
இனி ஆதிசித்தாக எழுந்து சிந்தனையை முடுக்கி காண்டிகை உரை எழும்படிச் செய்து அதன்வழி ஞானத்தைத் தெளியப்பட்டதாக, உண்மையென உணரப்பட்டு உடன்பட்டதாக ஆகவே அந்தசித்தாக சித்தாந்தமாக உயர்த்தப்பட்டதாக எழுவதின் காண்டிகை உரையில் பயிலும் ஏரண நியதி, சக்கரசுழற்சிப் பண்பிற்று என்பதாம். உத்தேசமாக எழுவதே நிகமனமாக முடிவதின் இவ்வாறு. சித்தாந்தமாகக் கொளப்படுவது, ஆதிசித்தினின்று வேறல்ல என்பதின், அதுவே தெளிந்தவொன்றாக சிந்தனை முடிவிலும் பெறப்படுகின்றது என்பதின், இவ்வாறு ஆகின்றது. இதனின் இது கூறியது கூறலாகி சிதைவுறும் எனின், அற்றன்று என்பதாம். தன்பொருட்டும் பிறர்பொருட்டும் ஆதிசித்தாக இருப்பது உண்மையென்று தெளியப்பட்ட ஒன்றாக இல்லாது போக, அந்தசித்தாகத் தெளிகின்றபோது இந்த உடன்பாடு உண்டு என்பதின் , ஏரணநிலையில் இவ்விரண்டிற்கும் வேறுபாடு உண்டென்பதின், கூறியது கூறல் அன்றாகின்றது. முன்னது கற்றறிந்த ஒன்றாகத் திகழாதுபோக, பின்னது கற்றறிந்த ஒன்றாகத் திகழ்தலின் ஏரணநிலை வேறென்பது. இங்கு ஏரணநிலை (logical status) என்பது தெளிந்த அல்லது தெளியாத நிலையில் ஓர் சூஸ்த்திரம் அறிவொடு உறவுற்று கிடக்கும் நிலையாம்.
எ-டு 2-2-5
இனி ஒருவன் எதனைக் கண்டிருக்கின்றானோ, அதனைத் தான் பிறரையும் கண்டு மகிழுமாறு ஏரணநியதிப் பிழையாது உணர்த்த முடியும் என்பதின், ஏரணநியதி வழுவாது செல்வதற்கு கண்டுதெளிந்திருத்தல் இன்றியமையாத ஒன்றாகும். இவ்வாறு பிறரும் காண உணர்த்துந் திறனே போதகம் என்பதின், ஆழமான உண்மைகளை தானேத் தான் கண்டறியாத போது, தான் ஓர் போதனாக , ஞானகுருவாக சிறக்க முடியாது போம். ஆழமான சூஸ்த்திரங்களாக பல்வேறு உத்திகளின் பெற்று, காண்டிகை உரை எழுதி ஞானவெடிப்புக்களாக எழும் இவற்றை சிந்தித்து சித்தாந்தப் படுத்தி நினைவில் இருத்தாவொருவன் நல்லவோர் போதகாசிரியனாக எழ முடியாதுபோம். தெளிந்து அகத்திடபப்ட்ட ஞானங்களே ஒருவனுக்கு போதனாத்திறத்தினை தருகின்றது என்பதின் இவ்வாறு ஆகின்றது.
எ-டு 2-2-6
இனி இவ்வாறு வரும் போதகங்களே , ஒருவன் மாட்டு காணாததைக் கண்டறியத் தருதலின், இவை கண்களை திறப்பிக்கும் பண்பினவாகின்றன. அதன் உறுப்புகளாக அமைவது : சூஸ்த்திரத்தை ஓர் மொழியின் எடுத்துரைத்து உத்தேசமாக அதனை உணர வைத்தல்; பிறகு காணவாராது கிடப்பதை காணுமாறு செய்திட தக்கன செய்தல்; காண்கின்றானோ அல்லையோவென இடையிடையே சோதித்தல் என்றவாறும் இவற்றோடு ஒத்துவரும் ஏனைய உத்திகளோடும் இது செல்லும். இத்தகைய முயற்சிகளில் சூத்திரத்தின் உட்பொருள் இனிதே காணத்தரும் உத்திகள் அனைத்தும் ஏற்புடை உத்திகளே என்பதொடு இவை எண்ணிலடங்கா வென்பதின், பொருந்துவது யாதென வரிசைப்படுத்தி நிறுத்த முடியாத வொன்றாகும். சூழ்நிலைகளின் வேறுபாட்டிற்கு ஏற்ப, இவை வேறுபட்டுக் கொண்டே வரும் பண்பின என்பதும் காணக்கிடக்கின்றது.
மூன்றாம் படிமெய்
மேற்கோள்: சாதாரண முறையில் அளக்கலாகா அரும்பொருட்டாகி, எளிதில் துளக்கலாகாத் துணைமையுடன் வரும் சூத்திரத்தின் உட்பொருளை சோபானமுறையிலேயே காணமுடியும் என்றது.
ஏது: ஒர் புதையுருவினைக் கண்டு அதன் நிமித்தகாரணப் புதையுருவாக நிற்பதை நுணுகிக் கண்டு தெளிந்து, பின் அதனையே புறவுருவாக்கி அதனுடைய ஆழமான புதையுருவை இன்னும் ஆழஞ் சென்று கண்டு தெளிந்து, இரண்டு உண்மைகளையும் சூர்ணித்து ஒன்றாக்கி பிறகு இவ்வாறு பன்முறை படிமெய்களாகப் பலவற்றைக் கண்டு கண்டு தேறவேத்தான் அங்கைநெல்லியென சூத்திரத்துட் பொருள் இனிதே விளங்கி நிற்கும் என்பதின்.
எ-டு 2-3-1
ஒர் அளப்பரும் நுழைவின் ஆழறிவு சூத்திரம் ஓர் பெருங்கோயிலைப் போன்று விளங்க, அதன் பொருள் மூலத்திலே கருவரையில் நிற்கும் தெய்வப்படிமம் போன்றது. பல பிரகாரங்களைக் கடந்து ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே உள்ளே நுழைந்து மூலத்திற்கு வரவேதான் மூலதெய்வத்தின் தரிசனம் கிட்டுமாறுபோல், பல படிமெய்களைக் கண்டு கண்டு மனத்தகத்து அடக்கி ஒன்றாக்கி கூட்டிகூட்டிச் செல்லவேதான், சூஸ்த்திரம் யாதென விளங்கும். ஒவ்வொரு பிரகாரமும், ஓர் உண்மையைக் காட்டுவதாக, அதன் கதவங்கள் திறக்க , உள்நுழைந்து ஆங்கிருப்பதைக் கண்டு மகிழ்ந்து பிறகு இன்னும் மேலே செல்ல, அடுத்த பிரகாரத்தின் கதவங்கள் திறக்க, முன்கண்ட உண்மையின் காரணமாக இன்னொரு அதனின் ஆழமான உண்மை வெளிப்படும். இவ்வாறு பன்முறை இடைவரு பிரகாரங்களில் தடுமாறாது துணிந்து மேலே மேலே செல்லத்தான் மூலத்திற்கு வரமுடியும்; ஆழ்நுழைவின் சூத்திரத்து உட்பொருளை விளங்கிக் கொள்ள முடியும். பொழிப்பாக உணர்வதை இன்னும் நுனித்து நுட்பமாகவும் திட்பமாகவும் உணர முடியும்.
எ-டு 2-3-2
இன்னொரு வகையில் , இத்தகைய அரும்பொருள் சூத்திரத்தை உணர்ந்து கொள்வதென்பது, பல படிகளைக் கடந்து மேலேறி குன்றுச்சி அடைவது போன்றாம். குன்றுச்சி நின்று காணவரும் உலகே சூத்திரத்தின் உட்பொருளாக இருக்க, அதனை அவ்வாறே தான் கண்டறிய, ஒருவன் அதே குன்றுச்சிக்கு ஏறவேண்டும். படிமெய்கள் என்பன, இந்த குன்றுச்சி மெய்க்காட்சியினை காணத்தரும் வகையில் இடையே நிற்கின்ற படிகளாம். ஓர் படியென ஓர் படிமெய்யைக் கண்டு அதன் உண்மையை உணர்ந்துகொண்டு, அடுத்த படிமெய்க்கு ஏறி இரண்டையும் அகப்படுத்தி தொடர்ந்து ஏற ஏறத்தான் சூத்திரத்தின் அரும்பொருள் எனும் குன்றுச்சியை அடையமுடியும். இடையில் நிற்கும் இப்படிமெய்களைக் காணாதவழி, மேலே போக முடியாதென்பதின், சூத்திரத்தின் உட்பொருள் காணவாராது போம் என்றவாறு.
எ-டு 2-3-3
சோபான முறையில், அதாவது படிப்படியாக மெய்யாகும் இவ்வகயாத்திரையில், சன்னஞ் சன்னமாக அறியாமையிருள் கற்பான் அகத்திலிருந்து நிங்குதலின், இவ்வாறு பிழையின்றி சூத்திரத்தின் மெய்ப்பொருளை அறிவது, கற்றல் தொழிலேயாம். ஓர் சூத்திரம் தன்னகத்தே கொண்டிருக்கும் ஆழக்காட்சியை தானும் கண்டு ஒத்தகாட்சியினனாக தானும் உயர, அதன்பொழுது அகத்திருந்த அஞ்ஞானம் அகன்றுவிழ ஞானம் சுடர்ந்தெரிதலின், இவ்வகயாத்திரை கற்றல் தொழிலே யாகின்றது. ஆகவே இதுவரை தான் காணாத பல உண்மைகளை இதன்வழி காணத்தொடங்குவதின், கற்பானின் ஞானக்கண்ணும் திறக்கப்படுவதாகும். சூத்திரத்தின் உட்பொருளைக் கண்டதின் வழியாக, கற்பானின் பார்வை ஆழமாக அகன்றதாக் விரிந்ததாக இன்னும் அதிக நுட்பத்தினதாக இன்னும் அதிக பிரகாசம் உடைத்ததாக வெல்லாம் திருத்தி அமைக்கப்படுகின்றது என்றவாறு.
எ-டு 2-3-4
இனி இன்னொரு வகையில் சூத்திரத்து உட்பொருளை தெற்றென அறிவது, நிலத்தை அகழ்ந்து அகழ்ந்து ஆழச்சென்று ஆங்கே புதைந்து கிடக்கும் வைரக்கட்டிகளை தங்கப்பாழைகளைப் பெறுவது போன்று என்பதாம். சூத்திரத்தின் புறவடிவிலேயே மயங்கி அதன் யாப்பியல்பு , இலக்கணக் கூறுகள் செய்யுளோசை எழுத்துக்களின் அசை சீர் போன்ற ஓசைநயங்கள் போன்ற புற அணிகளையே ஆய்ந்து செல்லாது, காணப்படும் புறவுருக்களின் புதையுருக்களாக நிற்பவற்றை உட்பொருளை அகழ்ந்து வெளிக்கொணர்ந்து அறிவதே சிறந்தது என்பதொடு, சூத்திரத்தின் மெய்பொருளை அறிவதுமாகும். இங்கு அகழ்வதென்பது, அச்சூத்திரத்தின் வழி நுதலப்படுவது விளங்காது போக, தன்னுள் ஓர் அறியாமை இருள் இருக்கின்றதென்று அறிந்து அதனைக் கண்டு நிட்டை கூடி சாட்சியத்துவத்திற்பட்டு சிற்சத்திப் பதிவினை ஈட்டி அந்த இருளைப் போக்குவதாகும். படிமெய் படிமெய்களாகச் செல்ல, அதிக அதிக அறியாமையிருள் இவ்வாறு நீக்கப்பட, அகத்தே உள்ளொளி பெருகிக்கொண்டே போம் என்பது. ஒவ்வொரு சூத்திரமும் இவ்வாறு உள்ளொளி பெருக்கும் பண்பிற்று என்பதாம்.
எ-டு 2-3-5
இன்னொரு வகையில் அரியநுழைவின் ஆழச் சூத்திரத்தின் உட்பொருளை தெற்றென மனங்கொள்வது, ஆழ்கடல் வீழ்ந்து கீழே கீழே மூழ்கிச் சென்று அற்புத முத்துக்களாக பேருண்மைகளை அடைவதாகும். ஒவ்வொரு உள்ளத்தும் புறவுள்ளம் என்றும் ஆழுள்ளம் என்றும் இருவகைக்கூறுகள் உண்டு. எழுந்து நினைவிலாகும் எண்ணங்கள், நினைப்புக்கள், ஆசாபாசங்கள் போன்றவை கடலின் நுரைதிரையென, அவை புறவுள்ளமாக அவற்றை உதிப்பிக்கின்ற மறைசத்திகள் ஆழுளள்ளதில் புதைந்து கிடக்கின்றன. அரியச் சூத்திரங்களின் உட்பொருள், இத்தகைய ஆழுள்ளத்தையே ஆயச் செய்து, அதனுள் விழுந்து மூழ்கச் செய்து இதுவரை அறிந்திராத பல உண்மைகளை, தன்னுள் தானறியாது கிடக்கும் மறைகளை கண்டறியச் செய்யும் என்பதாம். இதனால் ஆழுள்ளத்தின் பரப்பும் விரிவும் ஆழமுங் குறைய, தன்னறிவு மேம்பட்டு மேம்பட்டு சிறக்கவுஞ் செய்யும். தன்னுள் மறையாக நின்று தன்னியல்புகளை சேடிக்கும் சத்திகளை எவன் அறிகின்றானோ, அவனே தற்கல்வி இயற்றி தன்னுணர்வுப் பெற்று தமையுடையவனாக உயர்வன். இங்கு தமையுடமையாவது, மறையாக நின்றியங்கும் சத்திகளை அறிந்துத் தெளிந்து தன்னாட்சிக்குக் கொண்டு வருவதாகும்.
எ-டு 2-3-6
இவ்வாறு ஓர் சூத்திரத்தின் உட்பொருளை சோபானமுறையில் அறிவது போன்றே பல சூத்திரங்களால் இயன்ற ஓர் ஞானப்பனுவலை அறிவதுமாகும். பல சூத்திரங்களாலியன்ற அதிகாரம், பல அதிகாரங்களால் இயன்ற படலம், பல படலங்களால் இயன்ற காண்டம் என்றவாறு ஒர் ஞானநூற் செல்ல, இவையெல்லாம் படிமெய்களாக நிற்க அவற்றை அறிந்து சூர்ணித்திடவேதான் நூலின் நுட்பபொருளை அறியமுடியும் என்றவாறு. அதிகார முறைமையின் அடுத்தடுத்துச் சென்று பிறகு தொகுத்து ஒன்றாக்கி சூர்ணித்துச் செலவேதான் ஆழ ஆழச் செல்லும் அதேபொழுது பரந்து விரிந்து அகன்று செல்லவும் முடியும். இதனின் ஞானப்பனுவல் ஒன்றினை அறிந்து மகிழ்வதென்பது உள்ளொளி பெருக்கி அகத்து அறியாமையைப் போக்கும் ஓர் ஞானயாத்திரையே என்பது. இவ்வகையில் இத்தகைய முயற்சிகள் ஞானபூசைகளே ஆகும் என்பதுமாம்.
நாங்காம் படிமெய்
மேற்கோள்: எல்லாப் படிமெய்களும் உண்மையென்று உணரப் பட்டதாகவும், பலரால் உடன்பட்டு உண்மையென மேற்கொண்டு இன்னும் ஞானயாத்திரை தொடரும் வகையில் ஐயப்பாடுகளெல்லாம் நீங்கிச் சுடரும் மேற்கோள்களாக இருக்கும் என்பது.
ஏது: இத்தகைய மேற்கோள்கள் அனைத்தும் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி, எழக்கூடிய மறுப்புக்களை எல்லாம் போக்கி தெளிவு படுத்தும் வகையில் விளக்கங்களும் உடைத்தாக தக்க ஏதுக்களோடும் எடுத்துக்காட்டுகளோடும் விளங்கும் காண்டிகை உரையொடு செல்வதின்.
எ-டு 2-4-1
யாது மறுத்தற்கியலாதென, எவ்வகை நோக்கினும் உடன்படுவதையே வேண்டிநிற்பதாக அறியப்படுகின்றதோ, அதுவே உண்மையென்று மேற்கொண்டேகுதற்கு இடந்தருலின், அதுவோர் மேற்கோள் ஆகின்றது. உண்மை என்ற துணிவு பிறக்காவகையில் அது எடுத்தமொழியாக்கப்படும் பொழுது , அதனை மேற்கொண்டேகுதல் நடவாதொழியும். அடுத்தபடி உண்டு, அது இதுதான் என்று மனவுறுதி பிறக்காவிடின் இருந்த படியினை ஊய்ந்து அடுத்தபடியில் கால்வைத்தல் இயலாது போமாறு, உத்தேசமாக முன்மொழியப்படுபவை உண்மையென உடன்பட வாராதெனின், மெய்யறிவுவாய்வு மேற்கொண்டு நடவாதொழியும். உண்மையென ஓர் கருத்திற்கு உடன்படும் பொழுதே, அதனை அகத்திட்டு இருக்கின்ற மெய்யறிவுகளோடும் புணரவைத்து , உளத்தளவில் அதனையோர் ஆதாரத் தலமாகக் கொண்டு உறுதியாக நின்று புதிய உண்மைகளைக் காணும் எழுச்சி பிறக்கும் என்றவாறு.
எ-டு 2-4-2
இனி இவ்வாறான மேற்கோள்கள் அனைத்தும் இதுவரைக் காணாதிருந்து இப்பொழுதே காணப்படும் புதையுருவாகவே பெரும்பாலும் நிற்பதின், இதனை உள்ளதென காட்டிநிற்கின்ற ஓர் புறவுருவும் ஆகவே அந்தப் புறவுருவினை தன்னகத்தே கொண்டிருக்கின்ற இயல்நூலும் உண்டென்பதாம். மேற்கோளாக எடுத்தியம்பப்படும் புதையுருவினை உண்டென இவ்வாறு அறியத் தரும் புறவுருவே ஏது என்பது. புதையுருவென்பது புறவொருவொடு உடங்கியைந்து ஆனால் மறைவாகவே, அதன் நிமித்தகாரணமாகவே நிற்பதின் எடுத்தியம்பப்பட வேண்டியதாக உளதாம். மேலும் புறவுரு ஐயப்பாட்டிற்கும் மருட்கைக்கும் இடனாது விளங்க , அதன் புதையுரு இன்னது என்று அறியாதவகையில் மறைவாகவே நிற்பதினும், மேலும் பல சாத்தியங்களின் ஒன்றினையேத் தேர்ந்து ஒவ்வுவது என்று வேறுபடுத்திக் கண்டறிவதின், உத்தேசமாக அது இயம்பப்பட வேண்டியதாயிற்று. ஆக யாது இவ்வாறு உத்தேசமாக எடுத்தியம்பப் படுகின்றது, அதற்கு ஏதுவாக ஒன்று இருக்கின்றதென்றும், அந்த ஏதுவின் புதையுருவாக எடுத்தியம்பப் படுவது இருக்கின்றதென்றும் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது என்பதாம்.
எ-டு 2-4-3
இனி ஏதுவாக நிற்கும் இப்புறவுருவின் புதையுருவாக உத்தேசிக்கப்படுகின்றது இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டி, மனக்கொள்ளுமாறு விளக்கி நிற்பதே எடுத்துக்காட்டு என்னும் ஏரணவுறுப்பாகும். புறவுரு என்பது இயல்நூலின் ஓர் கூறுவென, அதன்மேல் எவ்வித ஐயப்பாடும் எழாது போம். ஐயப்பாட்டிற்கு உரித்தாக யாது நிற்கின்றதோ அது இயல்நூல்லொன்றின் புறவுருவாக நிற்காது என்பதினும் இவ்வாறு. ஆக இதற்கு விளக்கங்கள் வேண்டாவாம். ஆயினும் அப்புறவுருவின் இலக்கணங்களைக் காண, அதன் நிமித்த காரணமாக இப்பண்பின் புதையுருவே நிற்கின்றது என எடுத்தியம்புவதின், அதில் பிழைகள் இருக்கக்கூடும் என்பதின், எழக்கூடிய ஐயப்பாடுகளையும் மறுப்புக்களையும் துடைத்தொழிக்க எடுத்துக்காட்டுக்கள் வேண்டியதாயிற்று.
எ-டு 2-4-4
இனி எடுத்துக்காட்டு எனும் இவ்வுறுப்பு, உத்தேசமாக உணர்த்தப்படுவது புறவுருவாகக் கொண்டுள்ளதின் புதையுருவாக நிற்கின்றது என்று தான் கண்டதை பிறரும் கண்டறியத் தரும் ஓர் முயற்சி என்பதின், இஃது கண்களை திறப்பிக்கின்றவோர் காரியமும் ஆகின்றது. ஒருவன் அகத்தே அஞ்ஞானவிருளாக இருப்பதை ஞானவொளியாக மாற்றியமைக்கும் பண்பிற்று என்பதின் போதனாத் திறத்ததுமாம். ஆகவே எவ்வெவ்வுத்திகள் இந்த போதகப் பணிக்கு உதவுமோ, அவையெல்லாம் இவ்வெடுத்துக்காட்டுகளில் அமைவது பொருந்துவதே. மேலும் இத்தகைய போதனாவுத்திகள் எண்ணிறந்தனவாக இருக்க, அவற்றை வரம்பிட்டு வகுத்து வரிசைப் படுத்த முடியாதும் போகும்.
எ-டு 2-4-5
ஆயினும் இத்தகைய எடுத்துக்காட்டுகட்கு பொதுவாக கூறக் கூடிய வரம்புகள் உண்டாம். ஏதுவை எடுத்தியம்பும் மொழியின் புதுமைகளை எடுத்தியம்பல்; இவ்வாறே மேற்கோள் மொழியினையும் புரிந்துகொளத் தருதல்; ஏதுவாக நிற்பதின் எவ்வியல்பு மேற்கோளை சாதிக்க காரணமாகின்றது, எவ்வகையில் அதுவோர் நிமித்தகாரண்மாகின்றது என்பதை விளக்குதல்; எழக்கூடிய மறுப்புக்களை உதாகரித்து எவ்வாறு அம்மறுப்புக்கள் எடுபடாது விழுகின்றன என்று இயம்பிடல்; யாண்டும் விட்டகல்வதின்றி எடுத்தியம்பப்படும் ஏதுவின் வழி எவ்வாறு மேற்கோளின் உண்மை மனங்கொள வரும் என்பதை தக்க விரிவோடு உரைப்பது; அரும்பதங்கள் என்றும் புதிதாக யாக்கப்படும் கலைச்சொற்கள் என்றும் வரும் போது அவற்றை இனிதே விளக்கல்; ஓர் நியதியின் படி சிந்தனைச் செல்கிறதெனின் அந்நியதிதான் யாதென்று வெளிப்படையாகக் கூறல் என்றவாறும் இன்னும் பலவாறும் எடுத்துக்காட்டுகள் செலும் என்பதாம்.
ஐந்தாம் படிமெய்
மேற்கோள்: இனி உத்தேசமாக எடுத்தியம்பப் படுபவை மேற்கோள்களாக எழாதுபோவதும் உண்டு.
ஏது: ஏதுக்களாக எடுத்துக்காட்டுகளாகத் தரப்படுபவை பல்வேறு காரணங்களால் போலிகளாகவே முடிவதின்
எ-டு 2-5-1
Y எனும் புதையுருவிற்கு X எனும் புறவுருவே அமைய, Y என்பது X என்பதின் நிமித்தக் காரணப் புதையுரு என்னுந் தெளிவு ஐயப்பாட்டிற்கு இடமிலாது அனைவராலும் பெறவர, அதுபொழுது நியதி பிழையா ஏரணச் சிந்தை அமைகின்றது. இன்னிலையில், காட்டப்படும் புறவுரு உண்மையென உடன்பட வாராது போய்விடின், அப்புறவுரு ஏதுபோலியாகி உத்தேசத்தை மேற்கோளாக நிறுத்தமுடியாது விழுகின்றது என்பதாம். "அகம் பிரம்மமே' என்பது உத்தேசமாக எடுத்தியம்பப்பட, அதற்கு ஏதுவாக "வேதத்தில் இயம்பப்பட்டிருப்பதின்" என்று ஏது தரப்பட்டால், "யாது வேதத்தில் இயம்பப்படுகின்றதோ, அதுவெல்லாம் உண்மை" என்று சுருதி பிரமாணத்துவம் கூறப்படுதலின், அது அனைவராலும் உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும் திறத்தது அல்ல என்பதின், அவ்வேது போலியாக முடிந்து உத்தேசத்தை சாதிக்காது விழுகின்றது என்பதாம். எப்புறவுரு மெய்யெனக் கொள்ளவாராதோ, அது தக்க ஏதுவாக அமையாது போம் என்பதின் இவ்வாறு. ஏதுவல்லாததை ஏதுவாக உபகரிப்பதின், இங்கு ஏதுப் போலி ஆம்.
எ-டு 2-5-2
இனி Y எனும் உத்தேசத்திற்கும் X எனும் ஏதுவிற்கும் புறவுரு-புதையுரு என்றவாறு ஓர் தொடர்பு இல்லாதுபோக, காட்டப்படும் ஏது, போலி எதுவாகவே முடியும். இரண்டிற்கும் எவ்வித தொடர்பும் இன்மையின் இவ்வாறு என்பதாம். "ஆன்மாவென்ற ஒன்றில்லை' என்று நிறுத்த முயல்கின்ற உலகாயதன் போன்றான் ஒருவன், நிறுத்த முயலும்போது அதற்கு ஏதுவாக "பொறியலியப் பார்வைக்கு அகப்படாது போதலின்" என்று கூறிடின், 'பொறிலியப் பார்வைக்கு இலக்கு ஆகாமை' எனும் புறவுருவுள் "ஆன்மா என்றவொன்ற ஒன்று இல்லை" எனும் புதையுரு இல்லாது போதலின், இங்கு தரப்படுமேது தொடர்பின்மையின் ஓர் போலியாக விழுகின்றது. மேலும் "பொறிலியப் பார்வைக்கு இலக்கு ஆகாப்பலவுண்டு" என்னும் உணமையை இது மறுத்து நிற்பதின், இது போலியாக முடிகின்றது என்பதுமாம்.
எ-டு 2-5-3
இனி அவத்தை பேதங்களை மறந்த அல்லது குழப்பிய நிலையில் எதுபோலிகள் எழுவதும் உண்டு. கட்டாக " சாம்பலாகிய ஒருவனை மந்திர சக்தியின் மீண்டும் உயிர் பெற்று எழச் செய்ய முடியும்" என்பதை நிறுத்த, அதற்கு ஏதுவாக "கனவுகளில் இவ்வாறு காட்டப்படுவதின்" என்பது தரப்படுமெனில், ஏதுவாகத் தரப்படுவது, போலியாக முடிகின்றது என்பதாம். உத்தேசமாக தரப்படுவது, பொறிலியப்பார்வைக்கு வரும் சாக்கிராவத்தை விடயமாக இருக்க, அதற்குத் தரப்படும் ஏது, சொப்பனாவத்தையின் சொல்லாக்கமாக இருக்கின்றது என்பதொடு, "யாது கனவில் காட்டபடுகின்றது, அது அவ்வாறே உலகில் நடக்கும்" என்று அகத்தியக் கலையின் கோட்பாடுகள் ( Hermeneutic Semiotics) மறுத்து பிழையாக உணரப்படுதலின், உபகரிக்கப்படுவது போலியாக விழுகின்றது என்பதாம். கனவு மொழிகளை தக்கவாறு பெயர்த்து (interprete) உலகநிகழ்ச்சிகளோடு தொடர்பு படுத்தும் அகத்தியக் கலை இங்கு புறக்கணிக்கப்படுவதின் ஏதுப் போலி உருவாகின்றது என்பதாம்.
எ-டு 2-5-4
இனி X மெய்யாக இருக்க, அதனால் அனுமானிக்கத் தகுந்தது Y-ஆக இருக்க, வேறொன்றை மேற்கோளாக சாதிப்பதின், இதுவும் போலியாக விழும் என்றது. அனுமானிப்பதில் தவறுடைமையின், எடுத்துக்காட்டும் போலி ஆகின்றது. 'நாமரூப பேதங்களாக காணப்படும் அனைத்தும் கற்பிதம்", "ஆன்மா சுத்தசைதன்ய சொரூபி என்பதின்" எனும் போது, ஆன்மா சுத்தசைதன்யமாக நிற்கின்ற இருப்புநிலைகள் உண்டெனினும், அதனின் அனைத்தும் கற்பிதமே என்று துணிவது பொருந்தாது. எவ்வாறோவெனின் எல்லாக் காட்சிகளும் முற்புலன் (foreground) பிற்புலன் (background) என்றவாறு வருமியல்புகள் உண்டென, சுத்தசைதன்ய காட்சி நிலை முற்புலப்படுத்தப்பட, நாமபேதவுணர்வுகள் பிற்புலப்படுத்தப்பட்ட நிலையில் புதைந்தே நிற்க, இல்லாது போவதில்லை -- இவை மறைந்தே நின்று பின் வெளிப்பட்டு நிற்கும் பண்பின. இவ்வாறு கூறுவதொழித்து அவை மறைவதின் அவற்றைக் கற்பிதங்களா¡க்கிப் பொய்யெனப் பகர்வது ஒவ்வாத அனுமானம் என்பதின் இது எடுத்துக்காட்டுப் போலி அல்லது அனுமானப் போலியாகும்.
எ-டு 2-5-5
இனி Y எனும் உத்தேசம் மெய்யாக இருக்க, அதனை நிறுத்தும் ஏதுவாக X என்பது இருக்க, அதனை எடுத்துக்காட்டாது, பிறிதொன்றினை எடுத்துக் காட்டுவதும் எடுத்துக்காட்டுப் போலியாகும். காட்டாக "ஆன்மா சுட்டறிவு உடையது" என்பதை நிறுத்த , 'ஆன்ம அறிவெல்லாம் உபாதிகளால் இயன்றது" எனும்போது, உத்தேசம் உண்மையாக இருக்க, அதனை மெய்ப்பிக்க நிச்சயமற்ற கருத்தாகிய உபாதிகளை கொண்டு வருவது பிழையான ஏதுவைத் தருவதாகும். இங்கு உண்மையான ஏதுவாக ஆன்மாக்களின் வைகரிமொழித் திறனைக் காட்டுவதும், அவ் வைகரி மொழியில் பொதுசுட்டரங்கு தனிசுட்டரங்கு மன்சுட்டரங்கு போன்ற பல சுட்டரங்குகள் வழியே எல்லா வைகரி மொழிகளும் இலக்கண அமைதியோடு விளங்குவதை எடுத்தியம்புவதும் ஒவ்வுவது என்பது.
எ-டு 2-5-6
இனி பல கருத்துக்களை வழிமொழிந்து முறையின் செல்லும் ஓர் காண்டிகை உரையில் முன் பின் உரைக்கப்படுவனவற்றுள் முரண்பாடு இருப்பின், அவ்வெடுத்துக்காட்டும் போலியென்றே முடியும். மேலும் இவ்வாறே பல சூத்திரங்களாலியன்ற அதிகாரத்தின் கண்ணும், பல அதிகாரத்தின் செல்லும் படலத்தின் கண்ணும் , பல படலங்களைக் கொண்டியங்கும் காண்டத்தின் கண்ணும் என்பதாம். முன்பு கூறியவொன்றிற்கு எதிராகவும், முன்பு கூறியதற்கு உடன்பாடு வருவித்து பின்பு அதனை நேராகவோ அல்லது மறைமுகமாகவோ மறுத்துக் கூறி அதற்கும் உடன்பாடு வேண்டப்படின், இத்தகைய ஏரணமுரண்கள் வெடிக்கும். முரண்பாடுகள் ஒத்துப் போதற்கு தடையாக இருப்பதின், இவை எடுத்துக்காட்டுப் போலியாயிற்று என்பதாம்.
ஆறாம் படிமெய்
மேற்கோள்: இனி ஏரணநியதி பிழையாது செல்லும் காண்டிகை உரைகளில், இழித்தல் பழித்தல் வெகுளல் கரத்தல் போன்ற இழிகுணங்களின் இன்னாசொல் பயிலாதென்பது.
ஏது: தான் கண்டு தெளிந்ததை பிறரும் கண்டு தெளிந்து உடன்பட வேண்டும் என்ற கருத்திற் பிழையாது, பல்வேறு வகையில் ஐயமும் மருட்கையும் மேலும் இவற்றைப் போன்ற உளத்தடைகளையும் நீக்கி தெற்றென ஓர் பொருள் ஒற்றுமைக் கொண்டு தன்னோடொத்துப் போகவே காண்டிகை உரை இயலுமென்பதின்.
எ-டு 2-6-1
எவ்வாறு தான் சாதிக்க நினைக்கும் மேற்கோள் பிழையின்றி எடுத்தியம்பப்படும் ஏதுவின் வழி பெறப்படும் என்பதை கரப்பின்றி முடித்தலே கருத்தாகக் காண்டிகை உரை கொண்டிருப்பதின், சினமும் இகழ்ச்சியும் பகைமையும் வெறுப்பும் அகந் தோன்றாது. கரப்பின்றி முடித்தலாவது வெளிப்படாதும் மறையாகவும் மலைப்பிற்குரியதாகவும் இருப்பதை தெளிவாக்கி மாணறிவாக்குதலாம். தான் பெருக்கி மகிழ்ந்த உள்ளொளியின் ஞானத்தெளிவினை பிறரும் கண்டு தன்னகத்து உள்ளொளி பெருக்கி அதனின் தான் பெற்ற ஞானத்தெளிவை பரனும் பெற்று மகிழவேண்டும் என்ற திருநோக்கிலேயே காண்டிகை உரை செலும் என்பதின், பகைமை உணர்வின் பல்வேறு இழிகுணங்கள் வெளிப்படாது போம் என்றவாறு.
எ-டு 2-6-2
இனி எழுகின்ற சூத்திரங்கட்கு தானே முதலில் காண்டிகை உரை எழுதி அதன்வழி அகத்திற் செறிந்திருக்கும் அறியாமை கடியப்பட்ட நிலையிலேயே பிறர்பொருட்டு காண்டிகை உரை விரிக்கப்படும் என்பதின், இத்தகையார் தமை உணர்ந்து தமை உடைய தன்னுணர்வார் ஆகும். தமை உணர்ந்திருப்பதாவது, தன்னுட் சகசமாகவே நிற்கும் அறியாமைத் துன்னிருளை உளதா உறக்கண்டு அதனின் மூலத்தையும் பிழையாது கண்டு ஆழறிவு தேற்றி கடிந்து போக்கி தற்கல்வி இயற்றி தன்னைத் தானே தெளிந்திருப்பதாகும். தன்னைப் பற்றிய அறியாமையை உண்மையாகப் போக்கி தன்னையேத் தான் தெற்றென உணர்ந்திருக்கும் அறிவே தன்னுணர்வு ஆகும். எந்த அளவிற்கு அறியாமை அகத்தே செறிந்திருக்கிறதோ அந்த அளவிற்கு ஆணவச் செருக்கின் பகைமை என்பதின், காண்டிகை உரை எழுதி செல்லும் நல்லார் அகத்து இத்தகைய இழிவான பகைமை குணம் இராதென்றது.
எ-டு 2-6-3
இனி இருக்கின்ற மயக்கங்களையும் மலைப்புக்களையும் ஐயப்பாடுகளையும் போக்கி, எழுந்திருக்கின்ற அறிவை ஆதிசித்தாக மாத்திரங் கொண்டிராது மாணறிவின் அந்தசித்தாக, சித்தாந்தமாக கொண்டிருக்குங்காலே காண்டிகை உரை விரிக்கவரும் என்பதின், இத்தகையோர் வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர் என்பதாம். இங்கு வினைகள் என்பன, அறிவினை சுட்டறிவிலேயே கிடக்குமாறு படுத்தும் அகவிலங்குகள், அல்லது வில்லங்கங்கள் ஆகும். இந்த வில்லங்கங்கள் இருக்கும்வரையில் , தான் கூறுமோர் கருத்திற்கு எதிர் கருத்தோ, அல்லது மறுப்போ தெரிவிப்பானை பகைவன் என்று கருதி அவனோடு போராடி அழிக்கும் எண்ணத்தையேத் தரும். ஆயின் வினையின் நீங்கி விளங்கிய அறிவினார் இத்தகைய இழிகுணங்களிலிருந்து உயர்ந்து நிற்கின்றார் என்பதின், அவரிடம் இத்தகைய சொற்கள் பிறவாதென்பது.
எ-டு 2-6-4
இனி பலவாறுப் பலவாறு அகத்துதிக்கும் கருத்துக்களைக் கண்டு மலைத்து பின் ஏரணநியதி பிழையாது சீர்தூக்கி பார்த்து மயக்கங்களைக் கடிந்து தெள்ளறிவின் மாணறிவுகளையேப் பெற்று அகத்திருத்தி பக்குவத்தில் முதிர்ந்து நின்றாலேயொழிய, சிறப்பான காண்டிகை உரை பிறவாதென்பதின், அவ்வாறு பிறக்கும் போது போர் முரசுக் கொட்டி எதிரிகளை வென்று தான் வாகை சூடவேண்டும் என்பதின்றி, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ' என்ற எண்னத்துடனயே காண்டிகை உரை விரிக்கப்படும் என்பதின், படிப்பார் மனதை நோகச் செய்யும் இன்னாச் சொல் பிறவாது போம். பரங்கருணையின் காரணமாக, தான் பெற்றத் தெளிவின் வரும் பேரின்பத்தை பிறரும் புசிக்க தான் உதவவேண்டும் என்ற எண்ணத்திலேயே மெய்யான காண்டிகை உரை எழும் என்பதின், பிறரை இழித்தலும் பழித்தலுமாகிய செயல்கள் இத்தகைய உரைக்கண் இயலாதென்பது.
எ-டு 2-6-5
இனி இதனின் தான் கூறும் ஓர் கருத்தினை அனைவரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்; தான் யாதைக் கூறுகின்றோமே அதனை உண்மையென்றே அனைவரும் ஒத்துக்கொள்ளவேண்டும், எதிர்க்கக் கூடாது என்ற வெறியின் காரணமாக வலிந்து தன்னுள் ஓர் பொருளைக் கருதிக் கூறலும், அதனின் பிறரை திக்குமுக்காடச் செய்து வஞ்சனையின் மாட்டிவிடலும் மெய்யான காண்டிகை உரையில் நடவாபோம். உள்ளொன்று வைத்துக்கொண்டு கரப்பாடி வேறுபல கூறி உடன்படுமாறு செய்து பிறகு கரந்து வைத்திருந்ததைக் காட்டி மதிமயங்கிடச் செய்து பரனை வீழ்த்தி வெற்றிக் களிப்பாடுவது காண்டிகை உரைக்கு வாரா ஈனத்தன்மையாகும். அரம்போலும் கூர்த்த மதியினர், இவ்வாறு பிறரை அவமானப்படுத்தி வீழ்த்துவது தர்க்கநெறியில் வரும், ஏரணநெறியில் வாராதென்பது.
எ-டு 2-6-6
இனி தன்னகத்தே இருக்கின்ற தெளிவின்மையை மறைப்பதற்காக, எவ்வகை நோக்கினாலும் மனங்கொள்ளா வகையில் உரையியற்றுவதும் காண்டிகை உரைக்கு ஒவ்வாதென்பது. பழகிய சொற்களைப் பயிலாது பழக்கமில் சொற்களைப் பயில்வது, அமைக்கின்ற வாக்கியங்களில் வேண்டிய உருபுகளை தொக்கி மறைத்திட்டு பலபொருள் தெரியக் கூறிச் செல்வது, மிக மிக குன்றக் கூறியேச் செல்லல், அளவிற்கு மீறி விரித்து மலைப்பினை உண்டாக்குவது, புதியப் புதிய கலைச் சொற்களைத் தானே உருவாக்கி அவற்றின் பொருளை இற்றென விளக்காது உரை வளர்த்துச் செல்லல் என்றவாறு இன்னும் பலவாறும் இத்தகைய உரைகள் செல்லும் என்பதாம். எவ்வாறு முயன்றும் மனங்கொள்ளா வகை உரையியற்றிடுதல், பிறர் மறுப்பிலிருந்து தப்பிக்கும் உபாயமே தவிற, தான் பெற்றத் தெளிவை பிறரும் தெளிந்திட செய்வதல்ல என்பதாம்.
26ஆம் சூத்திரம் ஏரணவுறுப்பியம் முற்றும்