அழிவில் உண்மை பூரண காண்டம்
நான்காம் அதிகாரம்: பயனியல்
படலம் ஒன்பது : ஏரணவியல்
முனைவர் கி. லோகநாதன்(உலகன்) 1997
சூத்திரம் 25: இயலிய நூலியம்
இப்படலம் பயனியல் அதிகாரத்தின் இறுதிப்படலம் என்பதொடு அழிவில் உண்மை எனும் இந்நூலின் இறுதிப்படலமும் ஆகும். இப்படலம் மூன்று சூத்திரங்களை உடைத்ததாய் அமையும் 1. இயலிய நூலியம் 2. ஏரணவுறுப்பியம் , 3. மெய்யியம் என்றவாறு செல்லும். இனி இப்படலம் அளவைநெறியினை விளக்குவதாக இருக்க தனித்தோ அல்லது நூலின் முதலிலோ வைக்கப்படுதல் வேண்டும் , அவ்வாறு அல்லாது இறுதிகண் வைப்பது யாதொவெனின், இறையருளின் பயனாக சிவவாழ்க்கையின் உறுப்பாக முறையாக சிந்தித்துத் தெளிதல் இயல்பான ஒன்றாகி பொய்மைகளைக் தவிர்த்து வாழ்தல் அதனின் மெய்ஞானமே துய்த்தவாறு வாழ்தல் அமையுமென்பதின் இவ்வாறு என்பதாம். இனி இவ்வாறு இறுதியில் வைப்பதால், இதுவரை இந்நூலில் பயின்றுவந்த ஆய்வியற் கோட்பாடுகள் இந்த ஏரணவியலை தழுவி வந்தவை அல்லையோ எனின் , அப்படி யன்று. இலைமறைகாயாக மெய்ஞான துய்ப்பிற்கு தொடக்கத்திலும் உதவி வந்த அந்த சிந்தனை நெறியே இங்கு கிளர்ந்தெடுத்து தெளிவாக ஓதப்படுகின்றது என்பதாம். அதனின் இதனைக் கற்றுத் தெளிந்து பிறகு மீண்டும் இந்நூலின் முதற் சூத்திரம் தொடங்கி இறுதி வரை ஓதுவார்க்கு, இந்நெறிகள் ஆங்கும் விளக்கப்படும் அனைத்திற்கும் முல சிந்தனை நெறியாக விளங்குவது தெரியவரும் என்பதாம்.
இந்நூல் ஓர் ஞானநூல் எனினும் , ஓர் நெறிவாய்ப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எழுந்த ஓர் அறிவியற் பனுவலுமாகும். முறைப்படி சிந்தித்துத் தெளிந்தவற்றையே விளம்புவது ஆகும். அந்த சிந்தனா நெறிதான் யாதென்று விளக்குவது இப்படலம் ஆகும்.
எவ்வகை ஆய்வும் தனக்கெனவோர் முறையியலைக் கொண்டே இயங்குகின்றது. முறையியல் இல்லாதப் பனுவல் வெறும் பிதற்றலாய், குதர்க்கமாய், வீணான கற்பனைகளாய், வெற்றுக் குழறல்களாய் உணர்ச்சிக் குமுறல்களாய் மதிக்கப்பட்டு அறிவியற் பனுவல்களென கூறவாராததாய் விழும். இனி இந்நூலிற்கு அடிப்படையாக இருக்கின்ற முறையியல், எல்லார் அகத்தும் இருக்குமொன்று என்பதொடு இந்நூலில் இதுவரைப் பயின்று வந்தவொன்று எனினும் , இதுவரை தெளிவற்றே உணரப்பட்டிருப்பதின், அதனைத் தெளிவு படுத்துவத்துவான் வேண்டி இப்படலம்.
அகத்தெழு பல்வேறு ஞானவுணர்வுகள் ஆதிசித்துக்களாக உதிக்கின்றன என்பதாலும், இவற்றில் சில மெய்யென அனைவராலும் உடன்படு வகையில் இருக்க, சில பொய்களாக உணரப்பட்டு ஒதுக்கபப்டுகின்றன, வேறு சில அகற்ற முடியா ஐயப்பட்டுடனேயே நின்று நிலவுகின்றன. இம்முறையியல் , மெய்யென ஏன் சில உணர்வுகள் , ஞானவுதிப்புக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சித்தாந்தங்களாக மதிக்கப்படுகின்றன, பிற அவசித்தாந்தங்களாக தள்ளப்படுகின்றன என்பதை திறன்பட விளக்கும்.
இம்முறையியலை பிற முறையியல்களிலிருந்து வேறுபடுத்த ஏரணவியல் என்று பகரப்படுகின்றது. ஏரணங்கள் என்பன அனைராலும் உடன்படக்கூடிய மெஞ்ஞானங்கள் என்பதொடு பழுதில்லா சிவவாழ்க்கையை நிறுத்தும் ஆழுண்மைகள் (axioms) என்பதினும், இவ்வியல் ஏரணவியல் ஆயிற்று. இன்னின்ன அளவைகளின் காரணமாக இவ்விவ் ஞானவுதிப்புக்கள் உண்மைகளாகும் என்றவாறு நையாயிகர் கூற்றுப்படி "பிரமா கரணம் பிரமாணம்" என்று செல்லாது, ஓர் யாத்திரைப் பண்பிற்றாகிய மெய்யறிவு வாழ்க்கை எந்நெறியில் இயங்கின் உண்மைகளையேக் கண்டு உவக்கும், செந்நெறியாகிய திருநெறி இயங்கி சிவஞானம் மகிழும் என்று விளக்கலின் அளவையியல் எனப்பகரப் படாது, ஏரணவியல் என்று பகரப்படுகின்றதாம்.
சூத்திரம் 25. இயலிய நூலியம்
அறிவிற் படுவதனைத்தும் ஆயவருந் நூல்
பொருளை இரட்டுருவிற் காட்டி யகத்தே
இலங்கிடு மறியாமை இருளைப் பாரிடும்
ஏதமில் லுத்திகள் எழுப்பிடு திறத்தன.
இச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின் , அறிவுகளாக உணர்வுகளாக அனுபவிப்பதற்குக் காரணமாக நிற்கும் அனைத்தும், ஓர் நூலினைப் போல இருப்பதின், ஒற்றுமை நயத்தின் நூலெனவேப் படும் என்பதையும், அதனின் பொருளுணர்வினைப் பயப்பிக்கும் அது புறவுறு புதையுரு இருவகையுருவில் பயப்பிக்கும் என்பதையும் உணர்த்துதல் நுதலிற்று என்பதாம். மேலும் புறவுரு தெளிவாக இருக்க, புதையுருவாக நிற்பது , புதைநிலை போக்கிடுவகையில் அகத்து இருப்பதாகத் தெரியவரும் அறியாமை இருளைப் பாரிடும் வகையில் தகுந்த உத்திகள் பெய்யுமாறும் அது தூண்டியும் நிற்கும் என்பதையும் உணர்த்துதல் நுதலிற்று என்பதாம்.
இதனின் மெய்யறிவாய்வின் மூலவூக்கத்தின் தோற்றுவாயும் விளக்கப்பட்டவாறு. நூலென வொன்று வெளிப்பட்டு ஆன்மாவைக் கவ்வி நிற்க அது அறிவிலாகி அகத்துச் செறிந்திருக்கும் அறியாமைத் துன்னிருளை உணருமாறு படுத்த, அதனின் உண்மைதான் யாதென்று அறியப்புகும் ஞானவேட்கை எழும் என்பது.
[ இனி இச்சூத்திரங்களின் உட்கிடக்கை ஏரணவியல் யாதென்று விளக்கும் வகையில் படிமெய், மேற்கோள், ஏது எடுத்துக்காட்டுகள் என்ற வகையில் செல்லும். இதுவரை விளக்கப்பட்டுள்ள அனைத்து சூத்திரங்களும் இவ்வகையிலேயே புரிந்துகொள்ளவும் படும் என்பதையும் ஓர்க. இதன் தெளிவெல்லாம் அடுத்த அதிகாரத்தில்]
முதலாம் படிமெய்
மேற்கோள் : ஐம்புலன்கள் வழியாகவோ அல்லது அவையின்றியோ காண்டல் மெய்யாகாவிடில் அறிவிற் படுவதாய் உள்ள எவ்வித உணர்வுகளும் உதியாவென்றது.
ஏது: உணர்வுகட்கு ஏதுவாகிய பொருட்களும், அறிவிற்கு ஏதுவாகிய கரணங்களும் ஒருங்கே இசைந்து நின்றபோதும் உணர்வு உதியாது போதலின்; பொருளுணர்வுகள் அனைத்தும் காலவுணர்வுடன் நிருவிகற்ப சவிகற்ப உணர்வுகட்கேதுவாகிய முழுசுருவாகவேத் ( Gestaltic) திகழ்தலின்.
எடுத்துக்காட்டு 1.1.1
பொறிலியப் பார்வை, பொறிகளாகிய ஐம்புலன்கள் வழியாக புறத்தே கிடக்கும் ஓர் பொருளினைப்பற்றிய விசயங்களை அறியத் தருவது. இவற்றின் மூலம் தன்மாத்திரைகள் ஆகும். இத்தகையப் பார்வைகள், ஐம்புலன்களும் விடயப் பொருட்களும் இணங்குவதால் அமைவதல்ல. விடயப் பொருட்கள் வீசும் விடயங்கள் அல்லது தன்மாத்திரைகள், தானே ஐம்புலன்களைப் பற்றிடினும்,. அவற்றின் நிமித்தமாக "இஃதுண்டு" "இது இன்னது" என்ரவாறு வரும் பொருளுணர்வுகள் வாளே உதிப்பதில்லை. புலன்களும் பொருட்களும் சம்பந்தப்பட்டிருப்பினும், ஒன்று ஒன்றால் பாதிக்கபப்டும் வியவகாரமாகிய உறவுநிலையில் கிடப்பினும் , பொருளுணர்வு உதியாதே போகின்றது. புலன்களுக்கும் பொருட்களுக்குமிடையே விடய வியாபாரங்கள் நிகழ்ந்திற்றெனினும், அவ்விடயங்களில் சிலவற்றை மாத்திரம் தேர்ந்து நினைவில் இருத்தி சிந்தித்துத் தெளிந்தாலேயொழிய பொருளுணர்வு சனிக்காதே போகின்றது என்பதாம். இதுவேக் காண்டல் என்பதாக, இத்தகைய காண்டலின்றி காட்சிகள் ஆகவே பொருளுணர்வுகள் இல்லையாகின்றது.
எ-டு 1.1.2
இவ்வாறான நிலையிலும் உலகியற் காலவுணர்வின்றி எவ்வித பொருளுணர்வும் சனிக்காது என்பதுமாம். ஐம்புலன்களில் விழும் விடயங்கள் அனைத்தும் மூவினைப்படுவதாக, தோன்றி நின்று அழியும் தன்மைற்று ஆகும். ஆக மாறியே வரும் புலப்பூதிகளையேத் தரும் பண்பிற்று ஆகும். ஆயினும் எங்கே இஃதென , இன்னதென ஓர் பொருளுணர்வு சனிக்கின்றதோ ஆங்கெல்லாம் மாறிவரும் புலப்பூதிகள் ஊடே மாறாவரும் புலப்பூதிகளும் உண்டு. இவையே மூவினைபட்டொழிவதன் ஊடே மாறாது வருவதென பிரித்தறியப்பட்டு பேதப்படுத்தும் பண்பினாலேயே இஃதென இற்றென இன்னதென பொருளுணர்வுகள் சனிப்பதின், காலவுணர்வுடனேயே காட்சிகள் எழுகின்றன என்பதாம். ஆகவே விடய வியாபரம் மாத்திரமன்றி, புலன் விடயம் எனபவற்றின் வெற்று இணக்கங்களுமன்றி, பொருளுணர்வுகட்கு மூலகாரணமாக இருப்பது காண்டலே என்றாகின்றது.
எ-டு 1.1.3
இஃது ஐம்புல நுகர்ச்சிக்கு மாத்திரமன்றி, ஐம்புலன்களும் செயல்படாத ஏனைய அவத்தை நிலைகளிலும் எழும் உணர்வுகட்கும் பொருந்தும். எவ்வகை அவத்தைகட்கும் மூலமாக நிற்கின்ற விடயங்கள் தோன்றி நின்று அழிகின்ற இயல்பிற்றே யாகலின், அவ்வாறான அனுபூதிகள் ஊடே, இவற்றைப் பற்றி ஓடாவகை சிலவற்றை நிறுத்தி தொகுத்து இருத்தினாலே ஒழிய, இஃதென இற்றென இன்னதென பொருளுணர்வுகள் எழாது போம். ஐம்புலன்களின் தொழிற்பாடு ஒடுங்கிய சொப்பனாவத்தையிலும் , கனவெனத் தோன்றுவது மாறிக்கொண்டே வரும் பூதிகளென, இஃதென இதுவென தொடர்ந்து கண்டுகொண்டே வந்து "இதுவே அது" என்றவாறு அடையாளங் கண்டு கொண்டேச் செலத்தான் பொருளுணர்வு சனிக்கின்றது, நிகழ்ச்சி இத்தன்மைற்று என்று அறியவும் எழுகின்றது. இத்தகைய கனா நிலையிலும் இன்னும் இதனை போன்ற பிற அவத்தை நிலையிலும், முன்னோக்குதல் பின்னோக்குதல் இன்னோக்குதல் என்றவாறு காண்டல் செலவேதான், பொருளுணர்வு உதிக்கின்றது என்பதாம்.
எ-டு 1.1.4
இவ்வாறு முன்னென பின்னென இன்னென நோக்குதல் உண்டென பொருளுணர்வு சனிப்பதற்கு ஏதுவாகிய காண்டல் யாதாவதோர் நுதிப்பின்பாற் பட்டதாகின்றது. நுதிப்பென்பது எதனைக் காணவேண்டுமென்பதை ஒருவாறு வரைசெய்தும், அத்தோடு அது இன்னும் மெய்யாகவில்லை, எதிரே ஓர் சாத்தியமாக இருப்பது என்றும் உணர்த்தி நிற்க, காண்டலும் ஏல்வதை ஏற்று அல்லாததைக் கழித்து மெய்யாகின்றது. கணக்கற்ற விடயங்கள் பார்வைக்கு வந்தபோதும் அனைத்தும் பற்றப்படுவதில்லை. எதனைப் பற்றி நினைவில் இருத்துவது எதனைப் பற்றாதுவிடுவது என்ற விடயத் தேர்வினை நிறுத்துவதாக பார்வையை வரை செய்து நிற்பனவே நுதிப்புக்கள் ஆகும். நுதிப்புகட்கு முன் நோக்குதலாகிய எதிர் நோக்குதல் இயல்பாகவே அமைந்திட, அதனை மறித்து பின் நோக்கி இறந்தது காணலும், இரண்டையும் மறித்து இன்நோக்குதலுமாக நோக்குகள் செயல்படுகின்றன. இவ்வாறு ஓர் நுதிப்பு இருக்கவேதான், இதனைக் காண் என்றவாறு ஓர் காட்டு இருக்கவேதான் காண்டல் மெய்யாகி அதன்வழி ஞானநேயங்களாக பொருளும் பொருளின் தோற்றங்களும் உணரப்படுகின்றது.
எ-டு 1.1.5
இனி இவ்வாறு சனிக்கின்ற பொருளறிவுகள் அனைத்தும் நுதிப்பின் வழி எழுவதால், கணக்கற்ற விடயங்கள் பல்வேறு புலன்கள் வழி வந்துற்றதெனினும், அவற்றில் வேண்டிய மாத்திரம் பிரித்தெடுத்து தொகுத்து இணக்கி உடங்கியைந்திட வைத்து ஓர் முழுசுருவாகவே( gestaltic) சேடிக்கப்படுகின்றன என்றவாறு. முழுசுருவாவது பல உறுப்புக்களை உடைய தொகுதி என்பதொடு எல்லா உறுப்பிய விடயங்களையும் நிரல்பட தொகுத்து அமைத்த ஓர் உருவென திகழ வைப்பதாகும். இவ்வாறு முழுசுருக்களாகவே காணப்படுபவை அறிவில் நிற்க, பெயரிட்டு இன்னதென்று கூற முடியாதபோது நிருவிகற்ப உணர்விற்றாய், பெயரிட்டு இன்னதென்று கூறவரும் தெளிவோடு இருக்கும்போது சவிகற்ப உணர்விற்றாய் இருக்கின்றது என்றும் உணர வருகின்றது என்பதாம். அவயவ- அவயவிகளாக முழுசுருக்கள் இல்லெனின், பொருளுணர்வுகள் நிருவிகற்பம் சவிகற்பம் என்று பேதப்படாதே போம்.
எ-டு 1.1.6
இதனின் ஞானமாகிய பொருளுணர்வு , நேயமாகிய பொருளின் தோற்றவுணர்வே ஆகின்றது. இங்கு தோற்றம் என்பது ஓர் பொருள் தன்னையேத் தான் ஓர் சூழலில் காட்டிக்கொள்ளும் பண்பாகும். அல்லது அது எவ்வாறு காட்டபடுகின்றது என்பதுமாகும். நிருவிகற்ப சவிகற்ப உணர்வுகட்கேதுவாகிய அனைத்தும் ஓர் பொருளின் முற்றறிவு அல்லவென்பதின், வரைப்பட்டு வருவதாகிய காட்டறிவே என்பதின் தோற்றறிவேயாம். ஓர் பொருளின் முற்றறிவாவது அதனோடு அநந்நியமாய் ஒன்றித்து அதுவேத் தானாகி பிரிப்பின்றி அறிவது என்பதின், காண்டலால் சனிக்கப்படும் எவ்வித பொருளுணர்வாகிய ஞானமும் அதுவெனும் சுட்டுடனேயே வருவதின், தோற்றறிவேதான் பிறவல்ல. இவை முற்றறிவுகள் இல்லாதுபோதலின் இத்தகைய ஞானங்கள் அனைத்தும் ஓர் பொருளின் முழுவறிவல்ல, மெய்யாகிலும் குறைவறிவாகவே இருக்கின்றது என்பதுமாம். தோற்றறிவுகள் அனைத்தும் இன்னும் அறியாதபல கூறுகள் அப்பொருளிற்கு உண்டு என்று குறிப்பாய் உணர்த்தி காண்டலை குறிப்புக் காலவுணர்வுடனேயே நீங்காமுறை நிறுத்தும் பண்பிற்றும் ஆகும் என்பதாம்.
இரண்டாம் படிமெய்:
மேற்கோள்: இனி எவ்வாற்றினும் காண்டற்கு வாராவோர் பொருள் இல்பொருளாகிய சூன்யமே என்பது.
ஏது: எதற்குத் தோற்றம் அல்லது தோன்றுதற் பண்பு உண்டோ அதுவே உள்ளது என்று கூறவரும் என்பதின்.
எ-டு 1.2.1
ஒருவன் மாட்டு நின்றிலங்கும் அவனது புவனமாகிய பொருளுலகு, இதுவரை அவன் கண்டவற்றையும் , கண்டுகொண்டிருப்பதையும் இனி காணவிருப்பதையும் கொண்டிலங்குவது. இவ்வாறு எல்லா மாந்தர்களது பொருளுலகுகளை அறிந்து ஓர் முழுப்பொருளுலகினை கண்டறியும்போது, ஆங்கும் இவ்வாறு காலவுணர்வினோடு வரும் இதுவரைக் கண்டது, இப்பொழுது கண்டுகொண்டிருக்கப்படுவது, இனி காணவிருப்பது என்றேயாகும்.இங்கு இனி காணவிருப்பது என்பது உள்ளதாய் ஆனால் இதுவரை கண்டுணரப்பட்டு இத்தகையத் தோற்றம் உடைத்து என்று அறியப்படாததாய் இருப்பதாகும். ஆயினும் தக்க சூழ்நிலைகள் பிறக்க, அவையும் காணவரும் என்பதே. இவற்றிற்கு மாறாக இதுவரை காணப்படாததும் , இப்பொழுது கண்டுகொண்டிருக்கப்படுவதின் ஒன்று அல்லாததும் இனி எக்காலத்தும் எவ்வகை காண்டற்கும் வாராது இருப்பதாகவும் யாதும் இருக்கமுடியாதென்பதாம். இத்தகையப் பொருட்களே சூன்யம் என்பது, இல்லது என்பது.
எ-டு 1.2.2
இனி 'இல்லது தோன்றாது' என்னும் சற்காரியவாதம் ஏற்புடைத்து அல்ல; 'ஆகாயத் தாமரை' 'முயற்கொம்பு" 'மலடி மைந்தன்' என்பன போன்றப் பொருட்கள் இல்பொருட்கள் எனினும் தோற்றங்கள் உண்டு, சொற்படுத்த வருகின்றமையின் எனின், அற்றன்று என்றது. யாது இவ்வாறு இருக்கின்ற காருகங்களை புதுமையாகப் புணர்த்தி கற்பிதமாக ஓர் சொல்லாகவே தொடராகவே கதையாகவே வசனிக்கப்படுகின்றதோ, அவ்வாறான அறிவுகள் எல்லாம் நிருவிகற்பமாகப் பெறப்பட்டு சவிகற்பமாகத் தெளியப்பட்டன அல்லவென்பதாம். ஆகவே ஓர் நுதிப்பின் வழி காலவுணர்வோடு பெறப்பட்டவை அன்று என்பதாம். ஆகவே இங்கு தோற்றம் என்பது சற்காரியவாதங் கூறும் தோற்றமல்லவாகும். வேறு யாதோவெனின், வெற்றுக் கற்பிதங்களாக உருவாக்கப்பட்டு மகிழப்படும் செயற்கைப் பொருளுணர்வுகள், புத்தியின் கற்பனைகள் என்பதாம். இவ்வாறான படைப்பியல் கற்பிதங்களென, 'உள்ளது' 'இல்லது' என வரும் பொருளுண்மைபாற் பட்டவை அல்லவாகும்.
எ-டு 1.2.3
இனி பொருளென்றும் அதன் தோற்றமென்றும் பேதங்கள் இல்லை; தோற்றங்களேப் பொருள், கணங்கணம் தோன்றியழியும் கணிகங்களாக ஓர் சாரைபோல் ஒன்று தோன்றி நின்றழிய அதன் சார்பினில் பிறிதொன்று தோன்றி நின்றழிந்து செல்வதேப் பொருள் என்பபடுவது; இத்தகைய கணிகங்களில் ஒடியாது தொடரும் ஓட்டத்தின் காரணமாக எழுகின்ற அறிவே பொருளறிவு, இவ்வாறான கணிகங்களின் வேறு யாதொன்றுமில்லை எனின், அதுவும் பொருந்தாதக் கூற்று என்பதாம். எவ்வாறோவெனின், காலவுணர்வு என்பது சுட்டுக்காலவுணர்வு என்றும் குறிப்புக்காலவுணர்வு என்றும் இருவகைப் படும். இவற்றில் குறிப்புக்காலவுணர்வே முதன்மையானது, மூலமானது. சுட்டுக்காலம் இல்லாதுபோக, குறிப்புக்காலவுணர்வு விடாது தொடர்தலின் இவ்வாறு ஆகின்றது. பொருள்கள் அனைத்தும் தோற்றமே, கணிகங்களின் கோர்வையே எனின், , சுட்டுக்காலவுணர்வினை கணங்களாக்கிக் காணமுடியும் என்றபோதிலும் , குறிப்புக்காலவுணர்வினை விளக்கமுடியாது போம். காண்பான் என்பான், பொருளறிவின் தன்னின் ஓர் எதிர்நிலையையே நோக்கி நிற்பதின் இக்குறிப்புக் காலவுணர்வு என்பதினும், அதனாலேயே பின் நோக்கல், இன் நோக்கல் என்றவாறு நோக்கலும் அதனின் காலவுணர்வு திரிகாலவுணர்வாய் சனித்தலும் என்பதாம். அனைத்தும் கணிகங்கள் என்றால் , கணிகங்களின் கோர்வையென்றால், மூவினைப்பட்டு தோன்றி நின்றழிவதையெல்லாம் அழியாது கண்டுகொண்டிருக்கும் ஒன்று குறிப்புக்காலவுணர்வோடு நிற்பதை இது விளக்கமுடியாது வீழ்தலின், இக்கூற்றினாலும் சற்காரியவாதத்திற்கு இழுக்கில்லை என்றது.
எ-டு 1.2.4
இனி பொருளுணர்வின் தோற்றங்கள் அனைத்தும் கயிற்றை அரவெனக் காணல்போன்றும், சிப்பியை வெள்ளியெனக் காண்பது போன்றும் ஆரோபிதங்களே , அத்தியாசங்களே, ஓர் சொற்படுத்த வாராத மாயாசக்தியின் எழும் விவர்த்தனங்களே, உண்மையான பொருளறிவு அன்று என்றவாறு மாயாவாதம் பகரின், அதுவுமோர் பொருந்தாத கூற்றாகும். இத்தகு விவர்த்தனங்கள் சிற்சில அசாதரண சூழ்நிலையில் ஏற்படும் விபரீதக் காட்சி யனுபவங்கள் ஆகும். அவற்றை காண்டல் அனைத்திற்கும் பொருந்துவதாக கூறுவதின் காரணமாக இஃது பிழையான மறுப்பாகும். சிற்சில அகச்சூழல் புறச்சூழல் காரணமாக, கயிறு அரவமெனத் தோன்றுவது போன்று யாங்கு விவர்த்தவுணர்வு உண்டோ, ஆங்கு நிருவிகற்பமாய் அறியப்பட்டது சிந்தித்துத் தெளிந்து சவிகற்பமாய் அறியப்படும் பொருளின் தோற்றறிவு அன்றாகும். ஆரோபிதங்கள் போன்றவை தூண்டியாக ஓர் பொருளைக் கொண்டு , விபரீதமாகத் தன்னுள் ஓர் காட்சி எழ, அதனின் அப்பொருளை அதுவெனக் கண்டு மகிழ்வதும் அஞ்சுவதுமாகும். இங்கு நிருவிகற்பம் (1) ----> சவிகற்பம்(1) -----> நிருவிகற்பம்(2) -----> சவிகற்பம் ( 2) என்றவாறு வரும் மரபுவழிப்பட்ட ஒன்றை அடுத்து ஒன்று பாரம்பரியமாக வரும் தோற்றறிவு இல்லையென்பதின், இத்தகைய ஆரோபிதங்கள் சற்காரியவாதங் கூறும் பொருள் தோற்றறிவு அல்ல என்பது. இத்தகைய ஆரோபிதங்கள் மித்தியா காட்சிகளாம் -- நிருவிகற்ப சவிகற்ப தோற்றறிவு சனிக்க, இவை பேய்த்தேர் போல் இல்லாது போய்விடலின்.
எ-டு 1.2.5
இனி உள்ளதாகிய அனைத்தும் அறிவில் யாதாவதோர் காண்டல் வழி தோற்றறிவு சனிப்பிக்கும்போது , அது காலவுணர்வுடனேயே வரும். உள்ளது என்பது காலவுணர்விற் படுவதாம், இல்லாதது யாண்டும் படாததாம். உள்ளது திதிபட , தோன்றி நின்று அழிவதாய்த் திகழ, இல்லாதது இவ்வாறு ஆகாதென்றது. யாது திதிபடாது போகின்றதோ , அது உள்ளதுபோலத் தோன்றினும் வெற்றுக் கற்பிதங்களாகியப் பொய்களேயாம். மேலும் இதனின் காலவுணர்வின்றி யாது அறியப்படுகின்றதோ அது இவ்வாறு சுட்டுணர்வின் வழி உணர்த்தப்படுகின்ற "உள்ளது" "இல்லது" என்ற இலக்கணங்கட்கு அப்பாற்பட்டதாகும். காலவுணர்வேக் கழன்று அறிகின்றபோது அந்நிய பாவனையோடு வரும் சுட்டுணர்வு கழன்று விழுந்த நிலையென்பதின், ஆங்கு 'உள்ளது' 'இல்லது' என்றவாறு சொல்லாகும் நிலையும் இல்லையென்பதின், இக்கேள்வியே எழாதுபோகும்.
எ-டு 1.2.6
இனி இல்லது தோன்றாது என்பதின், தோன்றும் உட்பொருட்கள் அனைத்திற்கும் தூலவடிவென்றும் சூக்கும வடிவென்றும் இருவடிவங்கள் உண்டாம். இவற்றை புறவுரு என்றும் புதையுரு என்றும் கூறினும் அமையும். வெளிப்பட்டு பார்வைக்கு இலக்காகி தோன்றி நிற்கும் வடிவம் தூலவடிவமாக, தோன்றாது ஆனால் அகத்தே இருப்பதாய் உள்ளது சூக்கும வடிவம் என்பதாகின்றது. மயிலின் முட்டை, மரத்தின் வித்து என்பன வெளிப்பட்டு நிற்கும் தூலவடிவங்களென, அதனை வீழ்த்தி கோலமயிலாக , ஆலவிருட்சமாக இன்னும் வெளிப்படா வகையில் அம்முட்டையிலும் வித்திலும் புதைந்து கிடக்கின்ற வடிவங்களே சூக்கும வடிவங்கள் என்றது. இதனின் சூக்குமாகி நிற்பது தூலமாகி விருத்தி அடைவதே , காண்டல் வழி எழக்கூடிய தோற்றவறிவிற்கும் பொருளுணர்விற்கும் மூலமாகிய உலக நிகழ்ச்சியாகும். சூக்குமாக நிற்பது தூலமாகி வாராதெனின் , உள்ளது எனினும் உள்ளதென உணர வாராப்போம் என்றவாறு.
மூன்றாம் படிமெய்:
மேற்கோள்: இனி சூக்குமாக மறைபொருளாக இருப்பதொன்று தூலமாகி தோன்றி நிற்க, அதனின் தோற்றறிவினைத் தரும் காண்டல்கள் அனைத்தும் கற்றல் வினைகள் ஆகும்.
ஏது: எங்கே இவ்வாறான காண்டல்களோ, அங்கு அதனின் அறியாமை நீக்கம் மெய்யாகுதலின்.
எ-டு 1.3.1
இனி இல்லது தோன்றாது என்பதினும், உள்ளதேத் தோன்றி உள்ளதென உணரத் தரும் என்பதினும், யாது இதுவரை உண்டென அறியப்படாதிருந்து காண்பதின் உண்டென அறியப்படுகின்றதோ, அதுபொழுது அதன் உள்ளமை உணரப்படாதிருந்து உணரப்படுதலின், அங்கு அதன் மெய்மையைப் பற்றிய அறியாமை நீக்கம் உண்டென்பது. சூக்குமமாக நின்றதொன்று தூலமாகி வெளிப்பட்டு நிற்பினும் , அதனைக் காண்டல் மெய்யாகாவரை அஃது உளதென்றோ இலதென்றோ கூறவாராமையின் , அதனைப் பற்றிய இந்நிலை அறியாமை இருள்நிலை ஆகின்றது. காண்டலின் இவ்வறியாமை இருள்நிலை அகற்றப்பட்டு உண்டென உணர்வு உதித்து அவ்விருள் போக்கி அறிவினைச் சுடரவைத்து துணிவு தருதலின், இஃது கற்றல் வினை என்பதாம். யாங்கு அறியாமை நீக்கமோ ஆங்கு கற்றல் என்பதின் இவ்வாறு.
எ-டு 1.3.2
இனி இவ்வாறு தோற்றிவினை ஈட்டி உண்டென உணரத்தரும் காண்டல்கள் இல்லை, ஆகவே அறியாமை நீக்கத்தின் கற்றல் இல்லை, சீவசாட்சியமே உண்டு, தோற்றங்கள் அனைத்தும் ஆரோபிதங்களாகிய கற்பிதங்களே என்னின், இஃதோர் மயக்கத்தின் பொய்போக்கு என்பதாம். காண்டல்கள் அனைத்தும் ஓர் நுதிப்பினைப் பற்றி எழுவதின், அதுவென நுதிப்பாய் நிற்பது இன்னும் மெய்யாகாத் தன்னினோர் எதிர் நிலையென , ஆங்கு இக்காண்டற்கு மூலமாக நிற்பது குறிப்புக் காலவுணர்வோடு வரும் இருப்புநிலை யாகின்றது. இவ்விருப்புநிலையில் முன்னோக்கல் பின்னோக்கல் இன்னோக்கல் உண்டென்பதின், அந்நுதிப்பு தோன்றுதற்கும் அதனை பற்றிக்கொண்டு காண்டல் செய்ய முனைவதற்கும் மூலமாய், அகத்து செறிந்திருக்கும் அறியாமையே ஆகின்றது. நுதித்து நிற்கும் நிலை, தன்னின் இன்றைய அறியாமை நிலையினைப் போக்கிய அறிந்தவோர் இருப்புநிலை என்பதின், இந்த இருப்புநிலை புடைபெயர்ச்சிக்குக் காரணமாகக் காண்டலே அமைவதின், அதுவோர் கற்றல் வினையே ஆகின்றது.
எ-டு 1.3.3
இனி சீவசாட்சியம் என்பது பொய்யோவென, அஃதோர் மயக்கத்தின் எழுவது, சீவசாட்சியம் வேறு சிவசாட்சியம் அல்லது ஈசுரசாட்சியம் வேறு என்பதை சிறிது விளக்குவம். சீவசாட்சியத்தை சிவசாட்சியமாகக் கொண்டல்தான், காண்பதனைத்தும் பொய்யாக விழும். இது தவறுடைத்த கோட்பாடு ஆகும்.
காலவுணர்வு காணவரும் பொருட்களின் சலனங்களின் எழு சுட்டுக்காலமென்றும், அதற்கு மூலமாகிய நுதிப்பின் எதிர் இருப்புநிலைகள் பற்றி இருப்பதின் எழும் குறிப்புக்காலம் என்றும் இருவகைப்படும். இவற்றில் தோற்றறிவினைத் தரும் காண்டல்கட்கு மூலமாக இருப்பது குறிப்புக்காலவுணர்வென , அதனை மறந்த நிலையில் பொறிலியப் பார்வையிலேயே கட்டுண்டு ஐம்புல விடயங்களில் ஏற்படும் சலனங்களைக் கொண்டே ஓர் மையப்புள்ளியைத் தேர்ந்து முன்னும் பின்னுமென காலத்தைக் கணக்கிட்டுத் துல்லியமாக அளந்தறியும் போதெழுவதே சுட்டுக்காலம் என்பது. இச்சுட்டுக்கால வுணர்விலேயே மயங்கி நிற்க , காணப்படுவதனைத்தும் இலட்சியார்த்தங்களாகத் திகழ, தோற்றறிவுகள் அனைத்தும் இலக்கணார்த்தங்களாகத் திரிந்து காண்பானிற்குத் தென்படும். பொறிலியப் பார்வையில் படும் அனைத்தும் அறிவில்லாத சடப்பொருட்களாகவேத் தோன்றும் என்பதின், இவ்வாறான பொருளுணர்வுகளை அவை தாமே தாரா என்பதின், காண்பான் சீவசாட்சியனாகி , காணப்படுவதனைத்தும் தனது கற்பிதங்களே என்றவாறு சித்துவாதம் (idealism) பகரச் செய்கின்றது என்பதாம். காலவுணர்வோடு ஆகவே சுட்டிமையோடு வருவதெல்லாம் சீவசாட்சியமென, அந்த சுட்டிமைக் கடந்து ஆகவே காலவுணர்வு கடந்து வருவது சிவசாட்சியமென, யாண்டு காலவுணைர்வுக் கடந்து சீவசாட்சியம் நசிக்கப்படுகின்றதோ ஆண்டு சாட்சியம் சிவ அல்லது ஈசுவரசாட்சியமாக எழும். ஆயினும் இதுவும் இறையருளாளேயே எழுமொன்று என்பதுதான் சித்தாந்தம்
எ-டு 1.3.4
இனி இவ்வாறான காண்டல்களில், உண்டெனும் மாத்திரையாய் இருப்பதாக யாது அறியப்படுகின்றதோ, அதுவே நிருவிகற்பவுணர்வின் பொருள் ஆகின்றது. ஆதிசித்து எனினும் ஒக்கும். இவ்வாறு ஓர் பொருளைக் கண்ட மாத்திரையான் அதனை பற்றிய தெள்ளறிவு இன்னுமில்லை, அது யாதாகப்பாற்று என்னும் அறிவு இன்னும் இல்லை என்ற உணர்வும் உடன்வர, அதனை தெற்றென அறிந்த தன்னினோர் எதிர்நிலை தானாகவேண்டும் என்ற முனைப்பில் தொழிற்பட, அதனின் எழுவதே அப்பொருளின் சவிகற்பவுணர்வாகிய தெள்ளறிவு ஆகின்றது. இத்தெள்ளறிவுத் தோன்ற , அது தானாகவேண்டும் என்னும் குறிப்புக்கால உணர்வோடு வரும் அம்முனைப்பும் இல்லாதுபோக, இக்குறிப்புக் காலவுணர்வும் இல்லாதுபோம் என்றவாறு. இத்தகைய சவிகற்ப உணர்வின் இல்லாதுபோம் காலவுணர்வு, கண்டித குறிப்புக்கால வுணர்வு ஆகின்றது.
எ-டு 1.3.5
இனி இவ்வாறு நிருவிகற்பவுணர்வின் பொருட் தோற்றறிவு அப்பொருளின் சவிகற்பவுணர்வினால் போக்கக்கூடிய குறிப்புக் காலவுணர்வென, இத்தகைய காலவுணர்வுகள் மலர்வதற்கு இடந்தந்து தான் நீங்காது நிற்பது அகண்டிதகுறிப்புக்கால வுணர்வு என்பதாம். இது எவ்வாறோவெனின் , சவிகற்ப பொருளறிவின் போக்கப்பட்ட குறிப்புக்காலவுணர்வு, அதனின் இன்னொரு சூக்குமம் தலைப்பட , மீண்டும் அது தோன்றலின், மேலும் ஓர் பொருளின் சவிகற்பவுணர்வு நிறைவு தர, பிரிதொன்று நிருவிகற்பமாக தோன்றவுங் கூடும் என்பதின், இவ்வாறு மீண்டும் மீண்டும் இத்தகைய முனைப்பு நிலைகள் எழுவதற்குக் காரணமாய், நிலைகளனாய் இவை தோன்றி நின்று நீங்க, அது நீங்காததாய் இருக்கின்றவோர் ஆழ இருப்புநிலையே இவ் அகண்டித குறிப்புக்கால வுணர்வு என்றது. யாதொரு சுட்டுணர்வினாலும் கண்டிக்கப்படாதிருப்பதின், இது அகண்டிதம், அதாவது கண்டிதம் இல்லாதது ஆகின்றது.
எ-டு 1.3.6
இதனின் பல்வேறு இருப்புநிலைகளையும் கற்றல் வகைகளையும் பெறுகின்றவர்கள் ஆகின்றோம். கண்டிதகுறிப்புக் கால்வுணர்விற்குக் காரணமாக இருப்பது, அவ்வுணர்வு எழுநிலனாக நிற்பது கண்டித இருப்புநிலையென, மற்றையது அகண்டித இருப்புநிலை யாகின்றது. பின்னதினை ஆதாரமாகக் கொண்டெழுவனவே விடாது வந்துகொண்டே இருக்கத்தக்க கண்டித இருப்புநிலைகளாகும். இனி கண்டித இருப்புநிலையிலேயே அறிய வருபவை பொருட்கல்வியென, அதனின்று பெயர்ந்து அகண்டித நிலைகளை அறியத் தருவது தற்கல்வி ஆகின்றது. மேலும் இவ்வகண்டித நிலைகளே எழாதாக்கி, அதனின் அகண்டித குறிப்புக்காலவுணர்வே , ஆகவே காலவுணர்வே கழன்று விழச் செய்வது இறைகல்வி யாகின்றது. இவ்வகைக் கற்றல்களால் எழு ஞானங்களை பாசஞானம் பசுஞானம் பதிஞானம் எனினும் ஒக்கும். ஐம்புலநுகர்ச்சிக்கு வரும் காண்டல்கள் வழியாகவே பொருட்கல்விகள் நிகழ, அஃது அசித்துப் பொருட்கல்வியாம். கண்டித இருப்புநிலையிலினின்று அகண்டித இருப்புநிலையை அறிவது பொறிலியப்பார்வைக்கு மேலதாகிய நூலியப் பார்வை நுதலியப் பார்வை போன்றவற்றின் அறியவருவதென, இவற்றை மறித்துநோக்கி காண்பானையே அறியத்தருவது தற்கல்வி என்பதின் அதனை சித்துப்பொருள்கல்வி எனினும் அமையும். இனி இத்தகைய சித்துபொருள்கல்வியின் வழி, அதனின் மூலத்திற்கே பெயரத்தான் காலவுணர்வினையே கழற்றும் இறைகல்வி நடைபெறுதலின், இதனை சத்துபொருட்கல்வி எனினும் வல்லே அமையும்.
நான்காம் படிமெய்
மேற்கோள்: இனி எல்லாக் கற்றல்களும் இம்முத்திறத்தவென, அவை மெய்யாகுதற்கு ஏதுவாக நிற்பவனைத்தும் வாசித்து பயிலப்படும் நூற்களைப் போன்றிருப்பதின், இவ்வொற்றுமையின் காரணமாக அவை நூல் எனப்படும் என்றது.
ஏது: செயற்கையின் நூற்களைப் போன்று இயற்கையின் இந் நூற்களும் குறிப்புக்கால வுணர்வினைத் தேற்றி, அதனை நீக்கவேண்டுமெனும் முனைப்பையும் தேற்றி, உத்திகள் பல பெய்து அதனை நீக்கவும் செய்தலின்.
எ-டு 1.4.1
செயற்கையின் ஆக்கப்பட்டு நூலெனத் திகழும் அனைத்தும் அதிகாரமுறைமை என்றும் தொகுதி - பகுதி என்றும் இரண்டுவகை வைப்புமுறையைக் கொண்டிலங்கும். இவற்றில் அதிகாரமுறைமை என்பது கூற வந்த ஆழமான உண்மையை முதற்கண் ஓர் நுதிப்பாக, பொதுப்படவே இன்னது என்று அறியத் தரும் நுதலிப் புகுவதாக தொடங்கி பிறகு சிறிது சிறிதாக அந்நுதிப்பினையே பற்றிக்கொண்டு விட்டகலாது, இன்னும் இன்னும் தெளிவாக்குவான் வேண்டி படிமெய்களாக அடுத்தடுத்து ஓர் முறைமையின் நிரல்பட விரித்துச் சென்று , அதன் நுதிப்பை தெள்ளிதாக்குதற்கு அமையும் வைப்பாகும். இனி இவ்வாறு சிறிது சிறிதாக படிப்படியாக உணர்த்தப்படுபவற்றைப் பகுதிகளாக உறுப்புக்களாகக் கொண்டு திரட்டி ஓர் முழுசுருவாக சமைப்பதே ஓர் தொகுதியாக்குவதே தொகுதி-பகுதி வைப்பாகும். இவற்றில் நூலின் அதிகார முறைமை கற்போன் மாட்டு குறிப்புக்காலவுணர்வினை உதிப்பிக்கும் இருப்பு நிலையைத் தேற்ற , தொகுதி-பகுதி வைப்போ காலவுணர்வே எழாதாக்கி சுத்தசாட்சித்துவத்தை உளதாக்கும் என்றவாறு. ஞானங்கள் உதிப்பதின் இவ்வாறு.
எ-டு 1.4.2
இவ்வாறு சொற்களினால் இயன்றவோர் நூல், கற்போனை செய்தித்துவம் சாட்சித்துவம் என்றவாறு உத்திநிலை படுத்தற்போன்றே, காண்டற்காகும் அனைத்தும் படுத்தலின், அவையும் இவ்வொற்றுமை நயங் கருதி நூற்கள் எனப்படும். இயல்பாகவே எழுதலின் இயலிய நூற்கள் அல்லது வழக்கியல் நூற்கள் என்றும், புனைந்து செய்யப்படுவதின் செய்யுளியல் நூற்கள் என்றும் , எல்லா நூற்களும் இவ்விருவகைப்படும். இங்கு உத்திகளாவன , அறிவுணர்வுகளை உதிக்கத்தரும் செய்தித்துவமும், அவற்றையொட்டி எழும் சாட்சித்துவமும் ஆகும். இவற்றில் செய்தித்துவம் யாதெனின், நுதலியது அறிதல், அதன்வழி அறிந்தது காத்தல், அறிந்தது கொண்டு அறியாததை ஊகித்தல், முன்பின் நோக்கல், ஒப்பிட்டுப்பார்த்தல், உடன்படல், மறுத்தல், எதிர்த்தல் என்றவாறு குறிப்புக்காலவுணர்வின் எழு செய்திகளாகும். இனி சாட்சித்துவமாவது, இவ்வாறு பற்பல செய்திகள் செய்து பிறகு விட்டு நீங்கி ஒடுங்கி நிற்க, அதன்வழி அகத்தே தானே எழும் ஞானவுதிப்புக்களை, அறியாமை இருளை பாருதற்கு காரணமாக இருப்பவற்றை அனுபவிப்பதாகும். தன்முனைப்பு கழன்று நின்று ஞானவெடிப்பு நிகழுங் களமாக தன்னை ஆக்குவதாகும். செய்தித்துவம் வினைமுதலாக்கிட, சாட்சித்துவம் அதனின்று கழன்றிடச் செய்கின்றது எனலாம். இவ்வாறு செய்தித்துவமும் சாட்சித்துவமும் அடுத்தடுத்து பல்வேறு வகையில் பின்னிப் பின்னி வாராது போக, ஞானவுதிப்புக்கள் தரும் உத்திக்கள் எழாதுபோம் என்பதாம். செய்தித்துவ இருப்புநிலை புடைபெயர்ச்சிகளை ஈட்டித் தர, சாட்சித்துவ இருப்புநிலைகள் அறியாமை நீக்கத்தின் ஞானவுதிப்புக்கள் எழும் இருப்புநிலைகளை அடையத் தருகின்றது எனலாம்.
எடு 1.4.3
இனி சொற்களினால் இயன்ற செய்யுள் நூற்களுக்குப் புறவுரு புதையுரு என்றிரு உருக்கள் இருப்பதுபோன்று, இயலிய நூற்களுக்கும் உண்டென்பதாம். ஓர் செய்யுள் நூலின் புறவடிவம் என்பது ஓர்மொழியின் சொற்களால் இயன்ற சொற்றொடர்கள் , பலவேறு அமைப்புவைப்புகட்கு ஏற்ப இலங்கி நிற்பதாம். இன்ன மொழியின், இன்ன வடிவின் இவ்வளவின் இயன்றது இந்நூல் என்றெல்லாம் அறியத் தருவதின் இது புறவடிவு ஆகின்றது. இனி இப்புறவடினை அறிய அறிய, நுதலப்படுவது யாது என்றவாறு அதனின் நுதல்வுகளைப் பற்றி அறியவேண்டும் என்ற முனைப்பு எழ, அதற்குக் காரணமாக இருப்பதே புதையுரு என்பது. தோன்றி நிற்கும் புறவடிவின் உள்ளே புதைந்து கிடப்பதாக நுதலப்படுவது கிடப்பதின், அது புதையுருவாகின்றது. இவ்வுருக்களை தூலம் சூக்குமம் எனினும் அமையும். காண்டற்காகும் அனைத்தும் இவ்வாறான புறவுரு-புதையுரு வென்றும் தூலஞ்சூக்குமம் என்றும் இரட்டுருவோடு வருவதின், நூல் எனவேப் படும் என்பதாம். காண்டற்காகும் அனைத்தும் ஒருபுடை அறிந்ததாயும் ஒருபுடை அறியாததாயும் திகழ்வதால், முற்றிலும் அறியப்பட்டதாய் யாதுமிலாதுபோக, அனைத்தும் நூல் எனவே கொளப்படும் என்றவாறு.
எ-டு 1.4.4
இனி ஓர் நூலின் புறவுருவினைப்பற்றி அதன்வழி அறிவிலாகும் புதையுருவினை அறியப்புகுவான் வேண்டி முயலும்போதே, உத்திகள் மெய்யாகின்றன. அதனின் செய்தித்துவ ( கர்த்தத்துவ) சாட்சித்துவ அந்தக்கரண புறக்கரண கிரியைகளாகிய இவை, புதையுருவாக இருப்பதை புறவுருவாக மாற்றுவிக்கும் வினைகளும் ஆகின்றன. சூக்குமாக இருப்பதை தூலமாக்குவது இவ்வுத்திகள் எனினும் ஒக்கும். அகழ்ந்து சென்று ஆழத்தில் புதைந்து கிடப்பதை வெளிப்படுத்துவது போன்றுமாம். ஆக காண்பான் மாட்டு ஓர் நூல் இருவகை வினைகளை எழுப்புகின்றன என்று கொளத்தகும். வெளிப்பட்டு நிற்கின்ற புறவுருவினைக் காணச் செய்தல், அதன்வழி அந்நூலின் உட்கிடக்கையாய் இருக்கின்ற புதையுருவினைக் காணச் செய்தல் என்பதுமாக நூற்கள் இயங்கும். முன்னைவை உரிமானங்கள் (inter-pretations) என்றால், பின்னவை கரிமானங்கள் (onto-pretations) ஆகும். உரையாக நிற்கும் ஓர் பொருளின் புறத் தோற்றத்தைக் காணும் மானங்கள் - அறிவின் செலவுகள் -- உரிமானங்கள் என, கருவாக மறையாக இருப்பவற்றின்மேல் செல்லும் மானங்கள் அதனின் கரிமானங்கள் ஆகின்றன என்பதாம்.
எ-டு 1.4.5
இனி இவ்வகை உத்திகளால், அவை மெய்யாகுவதின் நூற்களும் பலவிதப்படும். உரிமானங்கள் எழுவதற்கு இடமாகவும் அதன் புறவுரு காண்பதற்கு ஆதாரமாகவும் இருப்பது இயல்நூல் (texts) என்பது. புறவுருவினைக் கண்டு கரிமானங்கள் பெய்து புதையுருத் தெளிந்து அதனை விளக்குவான் பொருட்டு எழும் நூற்கள் செய்நூல்கள் (metatexts) ஆகும். இவ்வாறு செய்நூலின் வரும் தெளிவினை அகப்படுத்தி இயல்நூலிற்கு மீண்டும் செல்ல, முன்பு காணாதது இப்பொழுது காணவருவதின், புதிய புறவுருக்கூறுகள் காணவர, புதிய புதையுருவும் ஆகவே புதிய செய்நூலும் யாக்கவரும். இவ்வாறு நூலாக்கங்கள் சக்கரசுழற்சியின் முடிவின்றி செல்லவுங் கூடும்.
எ-டு 1.4.6
இவ்வாறு வரும் செய்நூல்கள், இயல்நூல் வழியேச் சென்று விட்டகல்தலின்றி அதனுட் கிடக்கும் விடயங்களையேப் பற்றி உரிமானங்கள் கரிமானங்கள் என்றவாரே வரும் உத்திகளைப் பெய்தே, அந்த இயல்நூல் கற்கப்படுமெனின், ஆங்காகும் கற்றல், பிழையற்ற மெய்யானக் ஓர் கற்றல் ஆகும். அந்நூல் நுதலி நிற்கும் பொருளுண்மை இத்தகைய உத்திகளின் வழியேதான் அறியவரும் என்பதின், அவ்வழியேச் செல்லும் வாசிப்புக்கள் அனைத்தும் அந்நூலினைப் பற்றிய மெய்யறிவையேத் தரும். இதனின் அந்நூலில் புறவுரு வடிவிலும் புதையுரு வடிவிலும் யாது இல்லையோ, அது இருப்பதாகக் கொண்டு செல்லும் வாசிப்புக்கள் அனைத்தும் வெற்று கற்பிதங்களாகவே ஆகி, நுதல்வதை அறியத் தராது என்பது. இல்லாததையும் கற்பிதத்தின் இருப்பதாகக் கூறுவதின், அவை மெய்யறிவுப் பனுவல்கள் ஆகாது போகும்.
எ-டு 1.4.7
இவ்வாறு எழக்கூடிய செய்நூற்களை ஏற்கவும் பிழையெனத் தள்ளவும் சில அளவைகள் உண்டு. முதலாவதாக விட்டகன்று இயல்நூலில் எவ்வடிவிலும் இல்லாததை இருப்பதாகக் கூறின், அந்நூல் கற்பனைகள் கொண்டிருப்பதென, தள்ளுதற் கேற்றது. இனி இரண்டாவதாக, இயல்நூலில் இருப்பதையே அறிந்து சவிகற்பமாக்கி சொற்படுத்தலின், அதனின் உண்மைகளே பகரப்படுவதின் , செய்நூலில் முரண்பாடு இருக்கக்கூடாது. உண்மைகள் பலவாயினும் ஒன்றோடொன்று முரண்படாது என்பதின் இவ்வாறு. இதனால் ஓர் நூலின் உட்கிடக்கையை முன்னும் பின்னும் நோக்க அங்கு முரண்பாடு உண்டெனின் அந்நூல் ஏற்புடைத்தன்று என்று விலக்கற்பாலதாம். மூன்றாவதாக புறவுரு இன்றி புதையுரு செல்லல் கூடாதென்பதின், செய்நூல்கள் அனைத்தும் புறவுருக்களை தனக்கு ஆதாரநிலனாகத் தரவேண்டும் என்பது. இவ்வாறு தரவாராத செய்நூற்கள் மலைவு உடமையின் ஏற்புடைத்தன்று ஆகின்றது. இனி ஒரே இயல்நூல் வழி பல செய்நூல்கள் பிறக்கலாமென்பதின், அனைத்தும் ஏற்கக்கூடியவையே யாயினும், பற்பல படிகள் சென்று நுணுக்கமாக உள்ளது ஏனையவற்றையும் தன்னுள் அகப்படுத்தி நிற்பதின், அதுவே அச்சிறப்பின் ஏற்கப்பாலது என்பது. இவ்வாறு இன்னும் பல அளவைகள் உண்டு, கண்டறிக.
ஐந்தாம் படிமெய்
மேற்கோள்: இனி இவ்வாறு வரும் செய்நூற்களில் சில தூரநூற்களென ஆழ்வுள்ளத்தின் பண்புகளை தெள்ளிதின் விளக்குவனவாகத் திகழும் என்றது.
ஏது: கண்டித குறிப்புக் காலத்திலிருந்து விடுதியைத் தரும் அறிவின் தெளிவு கொண்டிலங்கும் செய்நூற்களுக்கு வேறாக, இதனின்று அகண்டித குறிப்புக்காலவுணர்விற்கு பெயரத் தரும் ஆழுள்ளத் தெளிவின் ஞானநூற்களாக இவை நிற்றலின்.
எ-டு 1.5.1
ஓர் இயல்நூலின் புறவுரு வழி அறியப்படும் புதையுரு, அறிந்தும் தெளிவாய் அறியாத நிலையில் கிடக்கும் ஓர் மறைப்பு ஆகும். இப் புதையுரு இம்மறைவை காண்பான் மாட்டு தன்னுள் கிடக்கும் அறியாமை இருளை அறிவித்து நிற்க, அதனைப் போக்குவான் வேண்டி கற்றல் முனைப்பொடு எழுந்து குறிப்புக்காலவுணர்வின் அதனை அறிந்து தன்னின் எதிர்நிலை நுதிப்பாக நிற்பதைப் பற்றிக்கொண்டு உத்திகள் பெய்து கற்கத் தொடங்குவான். எப்பொழுது புதையுருவின் மறைப்பு போக்கப்படுகின்றதோ, அப்பொழுது புதையுருவினை அறிந்த நிலை மெய்யாக, அவன் அதனோடு ஐக்கியப்பட்டு அதுவேத் தானாகி நிற்க, கண்டித குறிப்புக் காலவுணர்வும் கழன்று விழுகின்றது. இவ்வாறே அவன் கற்றுக்கொண்டேச் செல்ல, கண்டித குறிப்புக்காலவுணர்விற் படுவதும் விடுதி பெறுவதுமாக ஞானத்தெளிவுகள் வந்துகொண்டே இருக்க, அவற்றின் மொழியியல் வெளிப்பாடாக நிற்பவை, செய்நூற்களின் ஓர் தன்மைற்றாகிய கருநூற்களாம் ( metaphysical texts) . கண்டித குறிப்புக்கால வுனர்வின் அடிப்படையிலேயே இவை எழுவதின், மூலமாகிய இயல்நூலை இன்னும் இன்னும் தெளிய வைப்பதாகவே இவை இருக்கும்.
எ-டு 1.5.2
இனி இவ்வாறு செல்லுகையில் பற்பல கருநூற்களைப் படைத்துப் படைத்துச் செலாவன் ஒருவன், தன்னையேத் தான் மறித்து நோக்கி ஆங்கு அகத்தே தென்படும் அவற்றையே இப்பொழுது இயல்நூற்களாகக் கண்டு, அவற்றின் புதையுருவாக நிற்கும் தன் ஆழுள்ளத்தையே , தன்னின் அறிவினையே கற்கத் தொடங்க, அதன் பொழுது எழுவதே தூரநூற்கள் ஆகும். இவ்வாறு கருநூற்கள் எழுவதற்குக் காரணமாக, புதையுருவாக நிற்பது தன்னின் அகண்டித குறிப்புக்காலவுணர்வில் படுநிலையே என, அந்நிலை தனக்கு மறையாக நின்று அறிவில் தெற்றென துளங்காது நிற்பதின், அதன் மறைவினைப் போக்கி தெளிவு பெரும் வகையில் எழும் முயற்சிகளின் வெளிப்பாடாக இத்தகைய தூரநூற்கள் இருக்கும். ஆகவே இவை தற்கல்வியின் பாற்பட்டவையாம். ஆதலின் இத்தகைய தூரநூற்கள் உலகியல் விடயங்களைப் பற்றியல்லாது ஆன்மாவைப் பற்றியதாகவே அமையும்.
எ-டு 1.5.3
இவ்வாய்வுகள் உளவியல் துறையிற் பட்டவையாக, உள்ளத்தின் பல இயல்புகளை விளக்குவனவாகும். உள்ளத்து பண்புகளின் வெளிப்பாடாக செயல்களே இருப்பதின், எழுதப்படும் கருநூற்களோடு எழுதப்படாத சொல்லாக்கங்களும், பரிபாசைகளும் மொழிச்சார்புச் செயல்களும் மொழிச்சார்பில் செயல்களுமாக வரும் எல்லாச் செயல்களும் இயல்நூல்களாகக் கருதப்பட்டு அவற்றின் புதையுருவாக இருக்கும் உளவியல்புகளைக் கண்டறிந்து தெளிய இவ்வாய்வுகள் செல்லும். இங்கு மெய்மையினை பயப்பதாகிய உத்திகள், சித்துப்பொருட்களை அசித்துப் பொருட்களின் இயல்புகட்கு இறக்குவதாக அமையாதென்பது. அகத்தடையின் காரணமாக யாவன் இவ்வாறான உத்திகளின் வழி உள்ளத்தை ஆயத் தொடங்குகின்றானோ, அவன் பிழையான அறிவுகளையேப் பெறுவான். அசித்துப்பொருட்கள் ஊடேயே சித்துப்பொருட்களா¡கிய உள்ளங்களின் இயல்புகள் வெளிப்பட்டு நிற்பதின், இத்துறையில் மெய்மையை பயக்கும் உத்திகளாவன, எவ்வாறான அசித்துப் பொருட்களின் புறவுருக்களில், எவ்வாறா¡ன உள்ளத்தின் இயல்பு புதையுருவாக நிற்கும் அதேபொழுது புறவுருவின் பண்பினை நிறுத்தும் நிமித்த காரணமாகவும் திகழ்கின்றது என்று அறியத் தருவனவே யாகும்.
எ-டு 1.5.4
சித்தாகிய உள்ளம் தன்னியல்புகளை ஓர் நிமித்தகாரணமாகவே நின்று, ஐம்புல நுகர்ச்சிக்கு ஆய்வரும் பண்பின் அசித்துப்பொருட்களின் பண்புகளைத் திரித்தே வெளிப்படுத்துகின்றது. எவ்வியல்பு நிமித்தகாரணமாக நின்று எவ்வாறு அசித்துப் பொருட்களைத் திரிக்கின்றது என்று அறியத் தருவதே தற்கல்விபாற் பட்ட உத்திகளாம். சித்துப்பொருட்கள் அசித்துப்பொருட்களோடு இசைந்தே தன்னை வெளிப்படுத்திக் கொள்வதின் இவ்வாறு. இங்கு பயிலும் நிமித்தகாரணத்துவம், பௌதீக காரணத்துவத்தினின்று (physical causation) வேறுபட்டதாம். " ஆ-வின் காரணமாகத்தான் ஈ "எனும்போது , அதற்கு ஆதாரமாக சுட்டுக்காலவுணர்வே நிற்பின், அது பௌதீககாரணத்துவம் பயிலும் நிலையாம். இனி இதற்கு காரணமாக குறிப்புக்காலவுணர்வு இருப்பின், அது நிமித்தகாரணத்துவம் பயிலும் நிலையாம். இங்கு சித்துப்பொருளின் ஓர் இயல்பு, புதையுருவாக ஆகவே சூக்குமமாக, மறையாக நின்று தான் இசைந்து நிற்கும் அசித்துப்பொருளின் பண்புகளை திரிப்பதின் வழி தன்னைக் காட்டி நிற்கின்றது. மலர்ந்த முகம் மனமகிழ்ச்சியையும், சுருங்கிய முகம் மனவருத்தத்தையும் கோடிய முகம் வெறுப்பையும் காட்டி நிற்பதுபோன்று இங்கு. உள்ளத்தின் நிலைகள் புதையுருவாக நின்று முகத்தின் புறப்பண்புகளைத் திரிப்பதின், அது நிமித்தகாரணமாயிற்று என்பதாம். அதனின் அகநிலையைக் காட்டும் குறிப்புமொழியும் ஆயிற்று என்பதாம்.
எ-டு 1.5.5
இனி நிமித்த காரணங்கட்கு கர்த்தத்துவம் இருக்க, பௌதீக காரணங்கட்கு அது இல்லையாம். ஆ சம்பவிக்க ஈ சம்பவிப்பின், ஆ சம்பவிக்காது போக ஈ-யும் சம்பவிக்காது போயின், ஆ-க்கும் ஈ-க்கும் இடையே ஓர் பௌதீக காரணத் தொடக்கு உண்டென்பதாக கொளப்படும். மண் சட்டியைக் கீழே போட, அது உடைதல், ஓர் பொருளை நெருப்பில் வாட்ட அது கருகல், அமிலத்தைக் காரகத்தோடு சேர்க்க உப்பு உண்டாதல், மண்ணிற் கிடக்கும் விதைக்கு நீர் ஊற்ற அது முளைத்தல் என்பனபோன்ற நிகழ்ச்சிகள் பௌதீக காரணீயத் தொடக்கு உண்டென கணிப்பதற்கு ஏதுவான நிகழ்ச்சிகள். இங்கு கர்த்தத்துவம் இல்லயாகின்றது. ஓர் அசித்து நிகழ்ச்சி பிறிதோர் அசித்து நிகழ்ச்சியொடு இவ்வாறு தொடக்குற்று நிற்பதற்கு கர்த்தத்துவம் தருதல் பிழையான போக்காகும். ஆகவே இவ்வாறு நிகழ்சிகளைக் காணும்போது நிமித்தகாரணத்துவம் கற்பித்தலும் தவறுடைத்தாகின்றது. இங்கு பயிலும் காரணக்காரியத் தொடக்கு கணிதப் பண்பின என்பதின், கணிதமொழியில் துல்லியமாக உணர்த்த வருவதுமாகும்
எ-டு 1.5.6
இனி நிமித்த காரணத்துவத்திற்கு எவ்வாறு கர்த்தத்துவம் பொருந்தும் எனின், சித்தியல்பாகிய புதையுருவும், அசித்தியல்பாகிய புறவுருவும் சமகாலியம் (simultaneous) என்பதின் பொருந்துவது என்பதே. ஆ என்பது காலிடாதபோது, ஈ-யும் காலிடாது போவதும், ஆ காலிடும்போதே ஈ காலிடுவதுமாக அறியவரும் தொடர்பே கர்த்தத்துவம் (agentivity) என்பது. காலிடுவதாவது, வெளிப்பட்டு தோன்றி உள்ளதாக அறிவிற்கு ஆய்வருவதாம்.
மகிழ்ச்சி என்பது உள்ளத்தில் காலிட்டு நிற்க, அதேபொழுது மலர்ச்சிக் குறிகள் முகத்தில் காலிட்டு நிற்கும்; மகிழ்ச்சி உள்ளத்தில் காலிடாது போக, மலர்ச்சியும் முகத்தில் காலிடாது போக, உள்ளத்தின் மகிழ்ச்சி நிலையே முகத்தின் மலர்ச்சி குறிகளுக்கு நிமித்தகாரணமாக இருக்கின்றது என்பதாம். இங்கு எளிதில் காண வரும் புறவுருக்கள், முகத்தில் மலர்ச்சிக் குறிகள் காரியம் என்றும் , உத்திகள் பெய்தே அறியவரும் புதையுருக்கள் காரணம் என்றும் கணிக்கப்படுகின்றது என்பதாம். காரணத்துவம் இங்கு கர்த்தத்துவம் என்பதின், கணிதக் கணிப்பிற்கு எட்டாதவொன்றாகவும் ஆகவே உய்த்து உணரப்படுவதாகவே நிற்கும் பண்பிற்று என்பதுமாம்.
ஆறாம் படிமெய்:
மேற்கோள்: இனி காலவுணர்வு கடந்தறி திறத்ததாகவும் , எல்லாவகை நூற்களுக்கும் திருமூலமாகவும் இருக்கின்றவோர் நூல் உண்டென்பது.
ஏது: அகண்டித குறிப்புக் காலவுணர்வில் எழு எல்லா நூற்களையும் தொகுத்து இயல்நூலாக்கி அவற்றின் புதையுருவை நோக்கிச் செல்ல, காலக்கழற்சி மெய்யாகுவதினும், அந்நிலையிலும் ஞானப் பிரகாசம் உண்டென்பதினும்.
எ-காட்டு 1.6.1
இனி அகண்டித குறிப்புக்காலவுணர்வில் ( Fundamental Temporality) இருந்துகொண்டே தன்னையேத் தான் காணும் ஆன்மா, தன்னுள் தானறியாது கிடந்தவாறே தன்னையே இத்தன்மையனென, இக்குணத்தினனென, இத்திறத்தினனென, பலவாறு சேடிக்கும் மறைசத்திகளை மந்திர புதையுருக்களைக் கண்டு அவற்றையும் தெளிந்து மொழிப்படுத்திடச் செய்யும். தன்னுள் நின்றபோதிலும் தனக்கு அப்பாலாக தனது பல்வேறு இருப்புநிலைகளை அருளுவதாக, சேடிப்பதாக இவை இருக்க, இவற்றின் தெளிவினால் எழும் நூற்கள் , தூரநூற்களாகிய கருநூற்களுக்கு வேறாகவும் , அவற்றையே விளக்குவதாகவும் அமைய, அவை துரதூரநூற்கள் எனப்படும். மூல ஆகமங்கள் எனினும் தகும். இவ்வாறு தன்னுள் நின்றவாறு தன்னின் இருப்புநிலைகளை சேடிப்பதாக, தன்னை மேவி நிற்கும் இவையே தெய்வங்கள் என, அச்சத்திகளைக் கண்டறிந்து விளக்கும் நூற்கள் அதனின் ஆகமங்கள் ஆகின்றனவாம்.
எ-டு 1.6.2
இத்தகைய ஆகமங்களும் எண்ணிறந்தவவாம். ஆழ்கடல் புக்கு ஒருவன் சென்ற ஆழத்திற்கு ஏற்ப கடலுள் உள்ளதைக் காண்பானென, அதற்குத் தகவே அவனது சொற்களும் இருக்குமென, அதனைப் போன்றதே ஆகமங்களின் உட்கிடக்கையும். ஒவ்வோர் உள்ளத்தையும் "இவ்வியல்பிற்றோடு இரு" என்றவாறு இருத்தும் தெய்வசத்திகளும் எண்ணிறந்தன என்றது. ஒவ்வொருவர் உள்ளத்தும் கிடக்கின்ற இந்த தெய்வ ஆழ்கடல் பயணமே ஞானயாத்திரையென, அந்த யாத்திரையில் எத்தெய்வத்தை ஒருவன் காண்கிறானோ, அதனையே அறிந்தவனாக அதனை விளக்கி ஓர் ஆகமம் எழுதுவன் என்பதின், தெய்வங்கள் எண்ணற்றவையாக இருக்க, இத்தகைய ஆகமங்களும் எண்ணற்றவையாம். மேலும் இத்தகைய ஆகமங்களும் ஓர் தெய்வமே ஆவேசித்து அந்த ஆன்மாத் தானேயாகி தன்னையே சொற்படுத்தலின், இந்த ஆகமங்களும் பகவத் கீதைகளாக, அருள் வாக்குகளாக வெளிப்பட்டு மக்களை தன்வயப்படுத்தும்.
எ-டு 1.6.3
இனி இத்தகைய ஆகமங்களை இயல்நூலாக்கி அவற்றின் புதையுருவாக நிற்பவற்றை யாவன் விசாரிக்கின்றானோ, அவன் தெய்வ உபாசன் அல்லாது சிவஞானியாகி உயர்கின்றான். ஒவ்வொரு ஆகமும் அந்நியபாவனையின் குறிப்புக்காலவுணர்வுடனேயே வர, இந்த ஆகமங்களின் திருமூலம் நித்தியமானதாக, சத்தியமானதாக, அனைத்திற்கும் தோற்றுவாயாக, ஒன்றாக , ஒடிவின்றி இருப்பதாக காலவுணர்வினையே விழுங்குவதாக இருக்குமென்பது. எல்லாவகை தூரதூர நூற்களுக்கும் ஆகவே எல்லாவகை நூற்களுக்கும் மூலப்புதையுருவாக, மூலமறையாக இதுவே இருக்கின்றது என்பதாம். பிறப்பிற நூற்களெல்லாம் காலவுணர்வோடு வர, ஆகவே அசத்தாய் விழ, காலாகலனாக இதுவே நிற்கின்றது , என்றும் அழியாத சத்தாய் இருக்கின்றது என்பதாம். எல்லா நூற்களுக்கும் மூலம் இதுவேயென, எல்லா ஞானங்களையும் தன்னுள் கொண்டிருப்பதாகவும் இதுவே விளங்குகின்றது என்பதாம்.
எ-டு 1.6.4
காலவுணர்வினை கழற்றிடவேத் தான் இந்த மூலமறைத் தெளிவாகும் என்பதின், அதனால் வரும் ஞானத்தெளிவாகிய சிவஞானத்தை சொற்படுத்த முடியாது போம். பெயர்ச்சொல் வினைச்சொல் என்ற பேதங்கட்கு காரணமாகிய காலவுணர்வின்றி கிளவியாக்கம் இல்லையென்பதின் இவ்வாறு. ஆக உலகில் சொல்லாலியன்ற எவ்வித வேதமும் திருமறைகளும் திருமுறைகளும், இந்த மூலநூல் அல்லவாகின்றது என்பதொடு அதனை தன் புதையுருவாகக் கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பாய் உணர்த்தும் பெற்றியதுவாகவும் நிற்கின்றது. மெய்யான ஞால்வேதமாகிய இது இவ்வாறு உண்டென இத்தகு ஞானநூற்களால் குறிக்கப்படுமேத் தவிர, அதன் உட்கிடக்கையாகிய சிவஞானம் எவ்வாற்றினும் சொற்படுத்த வாராதே நிற்கும். காலவுணர்வினைக் கழற்றி வீசி சுத்தமாகி எவன் இன்னும் ஆழ ஏகுகின்றானோ அவனுக்கே அனுபூதி ஞானமாக இது விளையும், வேறு வகையில் அல்ல. இவ்வாறான இருப்புநிலையே சிவகதி என்பது. இத்தகைய சிவகதியுற்றான் அனுபவிக்கின்ற சிவஞானமே சத்தறிவும் ஆகும். சொற்களால் அன்றி மேலான மோனத்தால், சின்முத்திரையால் குறிக்கப்படுவதும் ஆகும்.
எ-டு 1.6.5
இத்தகைய மோனமொழியின் திருமூலத்தை, ஞால்வேதத்தை புதையுருவாகக்கண்டு அதன் மறைமை போக்கவெழுந்த நூலுத்திகளே சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவாகும். இத்தகைய சிவஞானத்தை அறிந்து தெளிந்து இருக்கின்ற நிலைகளே சாலோகாதிப் பதவிகளென, அவற்றிற்கு ஏற்பவே இந்த சிவஞானத்தை தனது பொருளடக்கமாகக் கொண்டிருக்கும் ஞால்வேதத்தை வாசித்தறிந்து கொள்ள பயிலப்படும் இவ்வுத்திகள் பயிலும். சாலோக நிலையில் சரியை, சமீப்பிய நிலையில் கிரியை, சாரூப்பிய நிலையில் யோகம், சாயுச்சிய நிலையில் ஞானம் என்றவாறு முறையே இவை அமையும். சரியைகளிற் தொடங்கி ஞானத்தில் முடியும் இவ்வுத்திகள் ஆன்மாவை சிவஞானம் சுடரும் ஞால்வேதக் கடல் புகுதற்கு ஏதுவாகின்றனவேத் தவிர, அதனை அனுபூதியாகக் கொளத் தராது என்பது. உத்திகள் அனைத்தும் செய்தித்துவமாகிய கர்த்துத்துவமும் , சாட்சியத்துவமாகிய ஒழிவில் ஒடுக்கத்துவமும் மாறி மாறி வரும் வகையில் இயங்குவதின், யாண்டு கர்த்தத்துவம் உண்டோ ஆங்கு 'நான்' எனும் அகந்தை உண்டென்பதினும், ஆகவே அந்நியவுணர்வு உண்டென்பதினும் அறிய வருகின்ற மறைஞானம் சிவஞானம் ஆகாதென்றது.
எ-டு 1.6.6
இனி எவ்வாறுதான் சிவஞானம் அனுபூதியாகுமென விளம்பின், எல்லா வுத்திகளும் தானே கழன்று விழ, இது சித்திக்கும் என்பது. உத்திகள் பெய்து பயிலும் நிலை இல்லாது போக, அவை எழாவகையில் ஆன்மா சுத்தமாக, அதுபொழுது கர்த்தத்துவமும் சாட்சித்துவமும் எழாது போக, தற்போதமும் அந்நியவுணர்வும் எழாதுபோம் என்றவாறு. இதுவே ஒழிவில் ஒடுக்கம் எனும் இருப்புநிலையாகும். இவ்வாறு ஒழியாது ஒடுங்கிட, அதுபொழுது பிரகாசிக்கும் ஞானமெல்லாம் சிவஞானமேயாக , அஃது அனுபூதிக்கு ஆய்வரவும் செய்யும். அதுபொழுது காலவுணர்வு இன்மையின், அந்நியப் பார்வையும் இன்மையின், அதனை இயல்நூலாகக் கொண்டு புதையுரு காண ஏகுதல் எழாதே விடுதலின், ஞானயாத்திரையின் முடிவு இதுவே ஆகின்றது. பிற நூற்கள் அனைத்திற்கும் இரட்டுரு விருக்க, இச்சிவஞானத்தின் ஞால்வேதத்திற்கு இரட்டுரு இல்லாது போகின்றது. அதனால் சுயம்பிரகாசமாக யாதொரு உத்தியும் வேண்டாது தானே சுடரும் ஒன்றும் ஆகின்றது.
சூத்திரம் 25 முற்றும்