அநாதிப் பொருளியல் -1 பதியுண்மைமரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:06, 8 ஜனவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் அழிவிலுண்மை அநாதிப் பொருளியல் 1 : பதியுண்மை முனைவர் கி. லோகநாதன்( உலகன்) 1997
சூத்திரம் 1 அறிவின் திறனும் அவாவின் போக்கும் நூந் நெறியின் ஆய்வர் நுழைவுகள் பெற்று பெயராப் பெயர்க்கும் பெரும்பொருள் காண்பர் பெய்யருள் பெருக்கின் பேணின் பிழையாது
என்பது சூத்திரம் கருத்துரை: என் நுதலிற்றோவெனின் தக்க உத்திகள் பெய்தும் பழகியும் இறையருளை ஈட்டி, தான் பெயராது அசலனாக நின்று பிறவனைத்தையும் சலித்துத் தொழிற்படுத்தும் பேரறிவும் பேர் ஆற்றலும் உடைய பதியாகிய இறைவனை அனைவரும் ஞானக் கண்ணின் கண்டு மகிழலாம் என்றது எனவே ஞானக் காட்சியின் உண்டென்று உணர வருவது பதி எனும் பொருள் என்பதாம். இதுவும் அருளைப் பேணி வளர்க்கவே தான் அமையும் என்பதாம் இனி இவ்வாரணம் பல படிமெய்கள் வழி அனைவரும் மனங்கொண்டு ஒத்துக் கொள்ளுமாறு ஏரணநெறி வழுவாது விளக்கப்படும் என்றவாறு இங்கு படிமெய் என்பதாவது, மேலான ஆழமான பேருணமை ஒன்றை சிறிது சிறிதாக பைபையாக தெளிதற்கு வரும் உண்மைகள் என்றவாறு . குன்றுச்சி போல பேருணமைகள், அதனை அடைவதற்கு உதவும் படிகளாக இம்மெய்கள் இருப்பதின், அவை படிமெய்கள் ஆகின்றன. இனி இப்படிமெய்கள் அனைவராலும் உண்மையென மேற்கொளப்படும் வகையில் இருப்பதின் அவை மேற்கோள்கள் ஆகின்றன. இனி இந்நூல் ஏரணவியல் வழி செல்வதின், மேலான உள்ளுணர்வுகளாக ஞானவுதிப்புகளாக இவை பகரப்படாது சிந்தித்துத் தெளிய வரும் உணமைகளாகப் பகரப்படுவதின், ஒவ்வொன்றிற்கும் அவற்றை மெய்யென நிறுத்தும் ஏதுக்களும் மேலும் எவ்வாறு இவை ஏதுக்கள் ஆகின்றன வென்றும். இயைபு யாதென்றும் தக்க எடுத்துக்காட்டுகள் வழி விளக்கப்படும் என்றவாறு. இனி இத்தகைய படிமெய்கள் பலவாக இருக்கவும் ஒன்றினைச் சார்ந்தே அடுத்தது வருவதாலும், அனைத்தும் முடிவில் ஒருங்கே சூத்திரத்தின் உட்பொருளை விளக்குவனவாகவும் அமையும் வகையில் ஓர் அதிகார முறைமை உண்டென்பது. இந்த அதிகார முறைமைதான் யாதெனின், முதற்படிமெய்யை அகப்படுத்தியே இரண்டாம் படிமெய்யும், இவ்விரண்டினையும் இம்முறையில் அகப்படுத்தியே மூன்றாம் படிமெய் என்றவாறு செல்வதே என்பது. முடிவில் எல்லா படிமெய்களையும் அகப்படுத்தித் தெளியும் போதே சூத்திரத்தின் உட்பொருள் பொழிப்பாகவன்றி மிகத் தெற்றென பிரகாசித்து ஏரணமாகவும் ஆரணமாகவும் விளங்கும் என்பதாம். இவ்வாறே ஓர் அதிகாரத்தில் அமையும் பல சூத்திரங்களின் அதிகார முறைமையையும், பல அதிகாரங்கள் விளங்கும் படலங்களின் முறைமையையும் பல படலங்களில் செல்லும் நூலின் அதிகார முறைமையும் என்றறிக. இவ்வாறு செல்வதே ஏரணவியல் என்னும் முறையியல் ஆகும். அனைவர் உள்ளத்திலும் பேருண்மைகளாகிய சூத்திரப் பொருள் ஏற்கனவே இருக்கவே செய்கின்றன.ஆயினும் அவை புதைந்து கிடந்து தெளிவிலா வொன்றாகவும் மறையாகவும் கிடக்க, இத்தகைய ஏரணவியல் வழி செல்லும் சிந்தனை வேள்வி தேவையாகின்றது. இத்தகைய ஏரணவியல் புதைந்து கிடப்பதை வெளிப்படுத்தி அறிவினை நலமே சுடரும் ஒன்றாக ஆக்கும் வகையில் அறியாமை இருளைக் கடியும் என்பதாம். தொடரும்-2 அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 1-2 இம் முறையியலில் எடுத்துக்காட்டுகட்கு தனி சிறப்பிடம் உண்டு. ஏதுக்களாகத் தரப்படுவதிலிருந்து எவ்வாறு அவ்வேது உண்மையென்று அதனின்று மேற்கோளென உறுத்தப்படுவது மெய்யாகின்றது என்பதை விளக்கியருள்வனவே எடுத்துக்காட்டுகள் ஆகும். இவ்வியைபினை தெற்றென எடுத்து அனைவரும் கானுமாறு காட்டுதலால், இவை எடுத்துக்காட்டுகள் ஆகின்றன. ஏதுக்கள் இன்றியும் எடுத்துக்காட்டுகள் இன்றியும் ஏரணவியல் செல்லாதென்க. இவ்வாறு செல்லும் ஏரணவியல் இயலிய நூனெறி பாற்பட்டதாகவே அமையும் என்பது. கற்பனா சேட்டைகளை ஒதுக்கி, ஆயப்படும் பொருள் எவ்வாறு தன்னை தன்னுள் இருந்தவாறே காட்டி அருளுகின்றதோ அவ்வாறே காண்பது இயலியமாகும்,. இது தற்போத சேட்டைகளையும் அதனால் வரும் கற்பனைகளையும் ஒடுக்கி உள்ளதை உள்ளவாறேக் கண்டு உண்மையை அறியும் திறனாகும். நூனெறி என்பது அறிவினிலே கிடக்கும் அறியாமை இருளைக் கடிந்து ஞானப்பிரகாசம் பெற்றுய்யும் கருத்தொடு செல்லுமாய்வு நெறியாகும். இத்தகைய ஞானபிரகாசங்களே ஏரணங்கள் ஆகின்றன. இவற்றை ஈட்டித் தரும் ஆய்வுநெறி ஏரணவியல் என, அது இயலியநூனெறி பிழையாது செல்லும் கருத்தது என்றறிக. காட்டப்படுவதைக் கற்பனைகள் போக்கி காட்டப்படுவாறே காண்பதால் உண்மையறிவு சனிக்கும் என்றவாறு. இனி இவ்வாறு உண்மை என்றறிதற்கு தனிப்பட்ட இலக்கணங்கள் உண்டோவென, இல்லை என்றவாறு. எவ்வாறு இருளைக் கடியும் தன்மையால் ஒளியின் ஒண்மை தெளிவாகிறதோ, அவ்வாறே அறியாமை இருளைக் கடியும் பண்பால் ஓர் உணமை உண்மையென உணரப்படுகின்றது. மறுத்து மறுத்து எறிந்தும் மரியாவகை ஒளிர்ந்து உறுத்தி நிற்பதே உணமையென, எவ்வாறு மறுத்து நோக்கினும் வீழ்த்தப்பட முடியாது நின்றிலங்குவது யாதோ அதுவே உண்மையாம் என்றது. சூத்திரங்களின் உணமையும், அவற்றை மறுக்க முடியாமையே ஒருவன் மாட்டு தெளிவுறுத்தும் என்றவாறு. இவ்வுண்மைகளைக் கண்டு இணங்காமை இரண்டு காரணங்களால் வரும் என்றது. கண்டுங் காணாதது போல நடிப்பாரும், பக்குவக் குறைவின் காரணமாக காணமுடியாது திகைப்பாரும் இணங்காது போவர். இவற்றில் முன்னது ஆணவச் செருக்கினால் வருவது என்பதால் ஏரணவியலிற்குப் புறம்பானது. பின்னது தகுந்த போதனாவழி போக்கப்படும் பண்பிற்று. இவ்வாறு இணங்காரை ஏரணவழி படுத்தியும் போதனை வழி படுத்தியும் இணங்குமாறு செய்வது கூடும் என்பதாம். அனைவரின் இணக்கத்துடனேயே செல்லும் இயல்பிற்று உண்மையையேக் கண்டு செல்லும் ஏரணவியலாகும். உண்மையைத் தவிர்த்து பிற அனைவரின் இணக்கத்தை பெற்றுச் செல்லா என்பதுவும் அறியப்பாற்று. இதனால் ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் இயங்கும் உரை, தொல்காப்பியர் தம் மரபியலில் கூறும் காண்டிகை உரை என்பதாம். தான் கண்டு பிறர் காணாது திகழும் பேருண்மைகளை மொழிப்படுத்தி பிறரும் கண்டு மகிழுமாறு போதித்து விளக்கும் பண்பிற்று இக்காண்டிகை உரை. காண வைப்பதாவது, அகத்தே காணவொட்டாது தடைசெய்து நிற்கும் மலமாசுக்களைத் துடைத்துப் போக்கி ஞானக் கண்ணை சுடர வைப்பதாகும். தொடரும் 3 அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 1-3 முதற் படிமெய் மேற்கோள்: அறிவு பல்வகைப் படும் என்றது ஏது: பார்வைகள் வழியேதான் அறிவு என்பதின், பார்வைகளும் பொறிலியப் பார்வை. நூலியப் பார்வை நுதலியப் பார்வை. பரப்பார்வை சிவப்பார்வை அதீதப் பார்வை என்றெல்லாம் ஆகி முடிவில் பார்வையற்ற பார்வை என்றவாறு பலவகைய என்பதின் எடுத்துகாட்டு 1:1-1 ( முதல் சூத்திரம், முதல் படிமெய் முதல் எடுத்துக்ககட்டு) ஓர் பொருளை விடயித்தல் என்பது வேறு காணல் என்பது வேறு. காணலே காட்சியைப் பயப்பதாகி பொருளுணர்வினைத் தேற்றி நிருவிகற்ப உணர்வு என்றும் சவிகற்ப உணர்வு என்றும் உணரப்படும் என்றவாறு. இவ்வாறான காணல் இல்லெனின் குறித்தலும் உரைத்தலும் தெரித்தலும் அறிவித்தலும் இல்லாது போக அறிவு இல்லை என்றாயிற்று. ஓர் பொருளை அறியுங்கால், அதனை ஓர் முழுசாக அறியும்போதே அதனது பொதுவியல்புகளும் சிறப்பியல்புகளும் மனதில் பட, அது இன்னது, இற்று என்றவாறு சொற்படுத்தப் படுகின்றது. மேலும் அதுபொழுது அவயவம்-அவயவி(whole-part) என்றவாறும் அறியப்படுகின்றது. இவ்வாறு வகுத்தும் தொகுத்தும் அறியப்படும் வகையானே, நிருவிகற்பமாக நிற்கின்ற ஒன்று சவிகற்பமாகத் தெளிவாகிறது. இவ்வாறு தெளிந்துணர்வதே ஓர் பொருளை விடயிப்பதற்கு வேறாக கண்டு அறிந்து இன்னது இற்று என்று உணர்வதாகும். இத்தகைய அறிவுகளே சொற்படுத்தற்கும் வேறுவகையில் உளத்தில் நிறுத்தற்கும் சிந்திப்பதற்கும் கருதற்கும் ஏதுவாக இருப்பதால், இவற்றை அறிவு என்கின்றோம். இதனாலும் காணல்வழி ஆகவே பார்வைகள் வழி அறிவு என்பதாயிற்று. எ-டு 1:1-2 இனி பார்வையும் பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை சிவப்பார்வை என்றவாறும் பிறவாறும் வரும். இவற்றில் பொறிலியப் பார்வையாவது கண் செவி நாக்கு மூக்கு தோல் என்றவாறு வரும் ஐம்பொறிகள் வழியாக அமையும் பார்வையாம். மேலும் இவற்றின் விருத்தியாக வரும் தொலைநோக்கி நுண்பெருக்கி வெட்பமானி என்றவாறு வரும் கருவிகள் வழியாகவும் பெறப்படுவன வாகும். பொறிலியப் பார்வையின் வழி வரும் அறிவெல்லாம், திசையுறு வெளியையும் சுட்டுணர்வின் காலத்தையும் முதற் பொருட்களாகக் கொண்டு கருப்பொருள் உரிப்பொருள் என்றவாறு பொருளறிவு சிறக்கும். இதனால் பொறிலியப் பார்வையின் அறிவெல்லாம் சுட்டுணர்வேயாகி கண்டறியும் அனைத்தும் தனியாகவும் தொகுதியாகவும் தோன்றி நின்று அறிவதாய் காணப்படும். இதனால் கால உணர்வின் கடப்பு ஆகவே சுட்டுணர்வின் கடப்பு பொறிலியப் பார்வைக்கும் ஆகவே அப்பார்வை வழி பெறப்படும் அறிவுகட்கும் இல்லை என்றாயிற்று. இதனால் அநாதிப் பொருட்களின் காட்சி, பொறிலியப் பார்வைக்கு அப்பாலானது என்றும் ஆகின்றது. எ-டு 1:1-3 இனி நூலியப் பார்வை என்பது, காணப்படும் அனைத்தையும் ஒர் நூலெனக் காண்பதின் அமையும் பார்வையாகும். இங்கு நூல் என்பது காண்பான் மாட்டு அவனுள் கிடக்கும் அறியாமையை வெளிப்படுத்தும் அதேபொழுது, வெளிப்பட்டு நிற்கும் புறவுரு வழி வெளிப்படா நிற்கும் புதையுருவினையும் உணர்த்தி நிற்கும் ஒன்றாகும். ஆக நூலியப் பார்வைக்கு மறையாக நிற்பதொன்று உண்டெனப் பட அதனை நீக்குவான் பொருட்டு தன்னின் ஓர் எதிர்நிலையை , அவ்வறிவிலாமையைப் போக்கிய தன்னின் தெள்ளிய ஓர் எதிர்நிலையை நுதித்து நிற்கும் இருப்பு நிலையும் வந்தமைகின்றது. இதனின் காலவுணர்வு குறிப்புக் காலவுணர்வாகவே அமையும் என்றாயிற்று. புறவுருவின் பண்புகளை விளக்கும் புதையுருவிற்குச் செல்லும் மாத்திரையானே அறியாமை நீக்கப்படுவதின், கண்டித குறிப்புக்காலவுணர்வே இதன் வழி நீக்கப்படுவதின், இதுவே கற்றல் என்றாயிற்று. இவ்வாறான கற்றல் வழி அறியாமை இருள் நீக்கபடுகின்றமையின், சிற்சத்திப் பதிவும் அதன்வழி ஞானப்பிரகாசமும் வந்தடைகின்றது. இங்கு ‘கண்டித குறிப்புக்கால வுணர்வு” (Situational Temporality) என்பது ஓர் நூலினால் தேற்றப்படும் குறிப்புக்ககால வுணர்வு ஆகும். இது நீங்க, குறிப்புக்கால வுணர்வில் படும் பண்பே நீங்கும் என்பதல்ல. பிற பிற நூற்கள் பிறப்பிற வகையில் இந்த குறிப்புக்கால வுணர்வினை பிறப்பிக்கலாம். குறிப்புக்கால வுணர்வின் நூலியப் பார்வைக்கு, அகத்து அறியாமை இருள் செறிந்திருப்பதின் உணர்வு தலைப்பட, எந்த ஞானப்பிரகாசமும் அற்ற சுத்த துன்னிருள் நிலையொன்று, சுத்த கேவல நிலையொன்று அறிவின் தொடக்க நிலை என்று தெளியவும் முடியும். இதனின் ஆன்மாக்களின் ஆதி நிலை இதுவே என்று அறியவும் படும். இதனின் இத் துன்னிருளைக் கிழித்துக் கொண்டு ஞானப்பிரகாசம் புணர்த்தும் வகையானே, குறிப்புக் காலவுணர்வு தோன்றுகின்றது என்றத் தெளிவும் கிடைக்கின்றது. எந்த உணர்வும் ஆகவே குறிப்புக்கால வுணர்வும் தோன்றா வகையில் துன்னிருள் கேவலாவத்தையை தருவதாக ஆணவ மலம் அநாதியே இருக்க வேண்டும் என்றும், அதனைக் கிழித்துக் கொண்டு ஞானம் புணர்த்தும் அருட்பிரகாசத்தை ஆதவனெனத் தந்துதவும் இறைவன் சிவப்பரம் பொருளாக அநாதியே இருக்கின்றான் என்றும், இந்த் துன்னிருள் கேவலாவத்தையை விட்டு நீங்கி அருட்பிரகாச சிறப்பால் ஞானம் பெற்றுயரும் ஆன்மாக்களும் அநாதியே உண்டெனவும் இதனால் தெளிவாகின்றது. இவை எல்லாம் இன்னும் நுட்பமாக பிறகு விளக்கப்படும் எ-டு 1:1-4 இனி இவ்விரண்டு வகை பார்வைகட்கும் மேலாக நுதலியப் பார்வை அல்லது ஞானக்கண் பார்வை இருக்கின்றது. இது எப்படிப்பட்டதோ வெனின், ஐம்பொறிகளை பயன்படுத்தாது, கனவுகளில் உறக்கனவுகளையும் விழிக்கனவுகலையும் தந்து மறையாகவே நின்றிலங்கும் மந்திரசொரூவங்களை கண்டு மகிழத் தருவதாகும். இவற்றில் உறக் கனவுகள் உறங்கும் போது வரும் கனவுகளின் வழி பலவற்றை உண்டென அறிவதாகும். விழிக்கனவுகள் என்பன, விழித்துக்கொண்டிருக்கும்போதே பொறிபுலன்களோடு தொடக்கற்று நிற்க கனவுகள் போன்ற அனுபவங்களைப் பெறுவதாகும். இவற்றை யோகக்காட்சி என்றும் கூறுவர். இத்தகைய நுதலியப் பார்வைகளே கடப்புருகாண் திறத்தைத் தந்து ஒருவனை சித்தனாக்குகின்றது. இவற்றைப் பற்றி இன்னும் விரிவாகப் பிறகு, எ-டு 1:1-5 இனி இவற்றிற்கு மேலாக பரனுணர்வினைத் தரும் பரப் பார்வை என்றும், அசுத்தமெல்லாம் போக்கி சுத்தமே காணத்தரும் சிவப்பார்வை என்றும். அனைத்தையும் கடந்து அப்பாலுக்கு அப்பால் இருக்கும் உண்மைகளை அறியத் தரும் அதீதப்பார்வை என்றும் இன்னும் பலவாறும் மேலான பார்வைகள பல உண்டு. இனி முதலில் வரும் பாரவைக்குள் பின் வரும் பார்வை புதைந்து கிடக்க, பொறிலியப் பார்வைக்குள் ஏனையப் பார்வைகள் ஒன்றுக்குள் ஒன்றாக புதைந்து கிடந்து அடுத்தடுத்து வெளிப்பட்டு அனுபவத்தை இன்னும் ஆழமாக்கும் என்றறிக. இனி இவ்வாறு பார்வைகள் பலவகைப்பட அவற்றிற்கேற்ப ஆன்மாக்களின் அவத்தைகளும் பல வகைப் படும் என்றது. பார்வைகட்கும் அவத்தைகட்கும் உள்ளத் தொடர்பு பிறகு விளக்கப்படும். எ-டு 1:1-6 இனி இத்தகைய அவத்தைகள் வழியே தான் அறிவுகள் உதிக்கின்றன என்பதின் அறிவுகளும் பலவகைப்படும் என்றது. பொதுவாக ஓர் அவத்தை நிலையில் தானே எழுவது இருந்தறிவு என்றும். அதனை சிந்தித்துத் தெளிவதின் வரும் அறிவு எண்ணறிவு என்றும் படும். எல்லா அறிவுகளும் இவ்விருவகையுள் அடங்கும் என்பதால், இந்த அவத்தைகளே அறிவுகளின் மூலமென்றும், இவையும் பல்வேறு பார்வைகளின் வழி அமைவதின், இவை மேற்கூறியவாறு பலவகைப்பட, அவற்றிற்கேற்ப அறிவுகளும் பல்வகைப்படும் எனறாயிற்று. தொடரும் 4
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 1-4 இரண்டாம் படிமெய் மேற்கோள்: இனி இவற்றில் அசதறிவுகட்கு வேறாக சத்தறிவு உண்டென்பது. ஏது: காலத் தாக்கமின்றிய பார்வையற்ற பார்வை உண்டென்பதின்
எ-டு 1;2-1 பொறிலியப் பார்வை முதற்கொண்டு அதீதப் பார்வை போன்ற மேலான பார்வைகள் வரை. ஒன்றினில் ஒன்று வெளிப்பட்டுத் தோன்றி அதனின் அதுவரை எட்டாதிருந்த அவத்தைகளை எட்டுமாறு செய்து, அதனின் அதுவரை மறையாக நின்றப் பல மறை நீக்கம் பெற்று அறிவாகுமாறு செய்யும். இவ்வாறான வளர்ச்சியின் போக்கினைக் காண அதற்கோர் எல்லை உண்டெனறும் அவ்வெல்லையும் ஒன்றினை வேட்டு ஒன்றினைப் பார்க்க முனையும் பண்பினையே கெடுப்பதாகலின், முடிவில் பபர்வையற்ற ஓர் பார்வையே அதன் முடிவாக அமைய வேண்டும் என்பதாயிற்று. இதனை அடையவே அடுத்தடுத்து வரும் இந்தப் பார்வைகளின் தோற்றம் என்பதாம். எ-டு 1:2-2 எல்லாப் பார்வைகட்கும் ஓர் வேட்கை நிலை உண்டென்பதால், ஒன்றினை குறித்து நிற்கும் நிலை உண்டென ஆங்கு எஞ்சாது குறிப்புக்கால உணர்வும் உண்டென்பதாம். இவற்றில் வேட்கையற்ற நிலையில் மெய்யாகும் பார்வையற்ற பார்வைக்கே குறிப்பு இல்லாது போவதின். எவ்வகைக் காலவுணர்வும் இன்று என்பதாம். இதுவே துரியாதீத அவத்தையாய் அமைய, இவ்வகை அனுபவத்தை சிவஞானிகள் புசிப்பது மெய்யென, அதனின் மூலமாகிய பார்வையற்ற பார்வையும் ஆகவே காலத்தாக்கமின்றிய நிலையும் மெய்யெனப் பெறப்படும். எ-டு 1:2-3 காலவுணர்வோடு வரும் எல்லா அறிவுகளும், காலவுணர்வொடு வரும் மாத்திரையானே நின்று நிலவா அநித்தியங்களாக அதனின் அசத்தறிவுகள் எனப்படும். பல்வேறு வகைப் பார்வைகளின் வரும் அறிவுகளெல்லாம் இதனால் அசத்தாகின்றன. இனி இவற்றிற்கு வேறாக பார்வையற்ற பார்வையின் துரியாதீத அவத்தையின் மெய்யாகும் அறிவு, காலவுணர்வின் தாக்கமின்றி வருவதின், இத்தகைய அசத்தறிவுகட்கு வேறாக சத்தறிவாகத் திகழும் என்பதாம். என்றும் மாறா அழியா இயல்பின் அறிவுகள் என்பதின் அவை சத்தாகின்றன. எ-டு 1:2-4 காலவுணர்வின் தாக்கமின்றிய அவத்தை நிலையில், பார்வையற்ற பார்வையின் சத்தறிவு சனிக்க, ‘அது’ என சுட்டுதற்கு யாதுமின்றிய இவ்வகை அறிவின் எதிர் சூன்யமேயாகும். இதனால் தான் இது பார்வையற்ற பார்வை யாகின்றது, அதுவென யாதையும் சுட்டாது அனைத்தொடும் அநந்நியமாக நின்று அறிவதின் இவ்வாறு என்றாயிற்று இதனின் இஃது எவ்வகை திரிபுங் கொண்டிலது, ஆகவே அசத்தன்று எனறரயிற்று. இவ்வாறே கூறுவர் மெய்கண்டாரும். எ-டு 1:2-5 பார்வையற்ற பார்வை தவிர்த்த எல்லாப் பிற பார்வைகளிலும் அதுவென்வொன்று சுட்டியறியப்படுதலின், ஞாதிரு ஞானம் ஞேயம் என்ற மூன்றும் உண்டாம். ஞானம் என்பது அறியாமை இருளைப் போக்கி அறிவினிலே தெளிவு பிறப்பிப்பதாம். இஃது ஒரு பொருளைச் சார்ந்தே அமையுமாகலின், இத்தகைய ஞானம் ஓர் நேயத்தை-- காட்சிக்குப் புலனாகுவதுப் பற்றியே எழும் ஒன்றாகத் திகழ்கின்றது.மேலும் இவ்வாறு ஞேயத்தைக் கண்டு ஞானம் மகிழ்வது அறியாமையை நீக்குமொன்றாகலின், இவற்றிற்கு வேறாக இவற்றை அடைந்து மகிழ்வதாக ஓர் ஞாதிரு இருக்கவேண்டும் என்றாயிற்று. இவ்வாறான நிலையில் அதுவென சுட்டியறியப்படும் வகையில் பார்வை இலங்குவதின் அதனோடு குறிப்புக்கால உணர்வும் இந்த ஞாதிருவின் இருப்பு நிலையின் ஓர் கூறாக அமைய வேண்டும் என்றாயிற்று. இதனின் இவ்வாறு சனிக்கும் ஞானமெலாம் அசத்து என்றாயிற்று. இனி முடிவான பார்வையற்ற பார்வை என்பது இவ்வாறான சுட்டுணர்வுகளை சனிப்பதன்று. ஆகவே ஞானம் ஞேயம் ஞாதிரு என்று பேதப்பட்டு நின்றறிவது போக்கி, அனைத்தொடும் அநந்நியமாக அவையே தானாக நின்றறிவதாகும். ஆயினும் இங்கும் ஞானம் இருப்பதின் அதுவும் ஓர் வகைப் பார்வையாகி ஆயினும் சுட்டின்றி திகழ்தலின் சுட்டற்ற அல்லது சுட்டிறந்த பார்வையாம் என்றது. இனி இங்கும் ஞாதிருவாக ஒன்று உண்டோவென, ஓர் வகையில் பார்வை இருப்பதின் ஞாதிருவும் உண்டாம். இல்லையேல் சத்தறிவு என்றவொன்று உண்டெனப்படாது போம் என்றவாறு. இனி இங்கு ஞேயம் என்பதும் யாதும் எஞ்சா வகையில் அறியப்படும் அனைத்துமாம். எ-டு 1:2-6 இருந்தறிவு எண்ணறிவு என்ற அறிவுப் பேதம் இருக்கின்ற வரை எழுகின்ற அறிவெல்லாம் அசத்தறிவென, இந்த முடிந்த நிலையில், இந்தப் பேதங்கள் இல்லை என்றது. இருந்தறிவுமாய் எண்ணறிவுமாய் இந்த இரண்டு பேதங்களையும் கடந்த வொன்றாய் சத்தறிவுத் திகழும். உதித்து நிற்கின்ற காரணத்தால் இருந்தறிவு என்றும், எவ்வித ஐயமும் திரிபும் கொண்டிலாது சுத்தசைதன்யமாகச் சுடர்வதின் எண்ணறிவு என்றும் படும். இனி தோன்றி நின்று அழிதல் இலாதலின், சிந்தனை வேண்டாது சுடர்தலின், இவ்விரண்டினையும் கடந்தவொன்று என்பதுமாம். தொடரும் 5
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 1-5 மூன்றாம் படிமெய்: மேற்கோள்: நாட்டங்கள் பலவாக ஆழ் இழுப்புகளாகிய அவாக்களும் பலலவாகின்றன என்பதொடு எல்லா அவாக்களையும் போக்கும் முத்தி நாட்டமும் உண்டென்பது, ஏது: பார்வைகள் பல வென்பதாலும், நாட்டங்களின்றி சுட்டுப் பார்வைகள் இல்லை என்பதாலும், சுட்டறிதலைப் போக்கும் பார்வையற்ற பார்வை எண்டென்பதாலும். எ-டு 1:3-1 மேலே விளக்கியவாறு அறிவினை பயப்பிக்கும் பார்வைகள் பொறிலியப் பார்வை தொடங்கி பார்வையற்ற பார்வை முடிய பலவகைப்படும். இனி இவற்றில் பார்வையற்ற பார்வையைத் தவிர ஏனைய பார்வைகள் அனைத்திலும் சுட்டுணர்வு ஊர்ந்து வருவதின், காலவுணர்வோடு, ஒன்றினைத் தேர்ந்தும் அதேபொழுது பிரிதொன்றினை ஒதுக்கியுமே பொருளுணர்வு சனிப்பதின், இத்தகைய பார்வைகள் அனைத்தும் நாட்டங்களோடு ஊர்ந்து வருவன வாகும். இந்த நாட்டங்களாலேயே சில விடயங்களைத் தள்ளிவிட்டுக் காணாது பிறவற்றை தேர்ந்து கண்டு ஒன்றென ஒர் பொருளை ஆன்மாக்கள் உணர்கின்றன் (selectivity). மேலும் நாட்டங்கள் என்பன இஃதென தெளிவாக அறியா நிலையிலும், ஓர் முன்னறிவின் (pre understanding) காரணமாக எழுவதினாலும், இந்த முன்னறிவினோடு ஒர் எழுச்சியும் உண்டென, இவ்வகை எழுச்சிகளே அவாக்கள் ஆர்வங்கள் ஆசைகள என்றாகின்றன. ஒவ்வொரு நாட்டத்தின் நிலைக் களனாக ஓர் அவா இருக்கும் என்பதொடு, நாட்டங்கள் பலவாக அவாக்களும் பல என்றாயிற்று. எ-டு 1:3-2 இந்த நாட்டங்கள் அனைத்தும் இயல்பாகவே ஆன்மாகளிடத்து அமைந்திருக்க, இவை கற்பிதங்களோ பொருட்களின் தூண்டல்ளோ பிற காரணங்களோ வருவன அல்ல. ஆன்மாக்களை வாளே இருக்க விடாது பல்வேறு வகையில் செயல்பட வைப்பதாய் இந்த நாட்டங்கலள் இருக்க இவற்றின் மூலமாக நாடிகள் அல்லது ஆழிழுப்புகள்(instincts) இருக்கின்றன என்று படும். ஆழிழுப்புக்களைத் தந்து நாட்டங்களை உற்பவிப்பவையே நாடிகள் ஆகும். இவற்றை எல்லாம் தொகுத்து பிங்கலை நாடி இடகலை நாடி சுழிமுனை நநடி மேரு அல்லது குரு நாடி என்றும் மேலும் இத்தகைய நாடிகளை எல்லாம் இல்லாது போக்கும் மரண நாடி என்று ஒன்று இருப்பதாகவும் கொள்ளலாம். எ-டு 1:3-3 ஆழிழுப்புக்களை ஆன்மாக்களின் அகத்தே பதிவிக்கும் இந்த் நாடிகள் சிவதத்துவங்களாகிய நாதம் விந்து என்பவற்றால் இருத்தப்படும். விந்து ஆட்சியில் பிங்கலை நாடி செயல் பட அது பலவகையான இன்பங்களை தேடிச் செல்லுமாறு ஊக்குவிக்கும். இந்த நாட்டங்கள் வழி மெய்யாகும அறிவுகள் சுட்டுணர்வோடு ஆகவே காலவுணர்வோடும் வருவதின், ஆகின்ற அறிவெல்லாம் அசத்தறினே யாகும். பசித்து உண்பானிற்கும் மீண்டும் பசி வருமாபோல். மீண்டும் மீண்டும் இன்ப நாட்டங்கள் வந்து பல வகையான வேட்கை நிலைகளிலேயே ஆன்மாக்களைக் கிடத்தும். நாதம் மிக்கிருக்க அது இடகலை நாடியாகி, பல வகையான அதிகாரங்களை தனக்குரியதாக்கும் முனைப்புகளைத் தரும். நாதமும் விந்துவும் ஒருங்கே இணைந்து செயல் படும் சுழிமுனை நாடியின் காரணமாக ஆன்மா ஞானத் தெளிவுகளைத் தேடிச் செல்லும். மேலும் ஏரண சிந்தனைய ஊக்குவித்து அறிவினிலே விளங்கும் ஐயம் திரிபுகளைப் போக்கி தெள்ளிய அறிவுகளையேத் திரட்டி மகிழும் திறத்தைத் தரும் இடகலை நாட்டம் என்பதும் பொருந்தும். கணிதவறிவு வேட்டலும் அறிவியற் சிந்தனை போற்றலும் இதனாலேயே யாம். ஆயினும் இத்தகைய அறிவுகளிலும் சுட்டுணர்வு ஊர்ந்து வருவதின், அதனால் காவுணர்வுடனேயே அறிவுகள் மலர்வதின், இத்தகைய அறிவுகளும் அசத்தறிவுகளேயாம் என்றது. அதனால் சிந்தனை ஓர் முடிவினைக் காணாது போய்க்கொண்டே இருக்கும் என்றது. எ-டு 1:3- 4 இனி இவற்றிற்கெல்லாம் மேலாக மேரு நாடி அல்லது குரு நாடி திகழ்கின்றது. சுழிமுனை நாடியின் மெய்ஞான வளர்ச்சி, சத்தறிவாகிய சிவஞானத்தின் பால் இட்டுச் செல்ல, மேரு நாடிச் செலவு மெயாகின்றது. இங்கு அமையும் பார்வைகள் அதீதப் பார்வை தொடங்கி முடிவில் சுட்டுணர்வு இன்றிய ஆகவே காலவுணர்வு இன்றிய பார்வையற்ற பார்வை அமைய, அதுபொழுது ஆன்மா அனைத்தொடும் அவையே தானேயாய் அந்நியமின்றி நின்று சத்தறிவாகிய சிவஞானத்தை மகிழும். இதுவே முத்தி என்பதின், இதற்கு மேல் எவ்விதப் பார்வையும் இல்லாது போக, இதுவே முடிந்த முடிபாகிறது என்பதொடு, எவ்வித அறியாமையும் இல்லாது போக, மீண்டும் பிறவாமையும் வந்தமைகின்றது. எ-டு 1:3-5 இதனால் இந்த மேரு நாடி ஏனைய நாடிகள் போல் அல்லாது, எல்லா வேட்கைகளையும் போக்கும் ஆன்மாவில் புதையுண்டு கிடக்கின்ற எல்லா ஆழிழுப்பகளையும் போக்கிச் சுத்தமாக்கி ஆன்மா பற்றற்ற பற்றைத் தலைபடுமாறு செய்யும் ஒன்றாம். இதனால் எல்லா நாடிகளையும் அழித்து தானே சிறந்து ஆன்மமவை கீழாலவத்தைகட்குத் தள்ளி ஆன்மாவை ஓர் அரக்கனாக்குந் திறத்து மரண நாடி ஒன்றையும் முற்றாக அழிக்குந் திறத்ததும் ஆகும். எல்லா நாடிகளும் செயல்படும் போது ஆங்கே அவற்றிற்கு எதிராக நின்று செயல்படும் இந்த மரண நாடியை ஆன்மாவை சுத்தமாக்கி வீடுபேற்றிற்கு இட்டுச் செல்லும் மேரு நாடியே இல்லாது போக்கும் என்பதாம். இதனாலும் அனுத்துவம் மீண்டும் அறவே எழாது அதீதப் பார்வை போன்ற மேலானப் பார்வைகளின் மேலாலவத்தைகளை அல்லது சுத்தாவத்தைகளை அடைந்து, சிவத்துவம் மிகழச் செய்யும் என்றது.
தொடரும் 6 அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 1-6 எ-டு 1:3-6 இனி இத்தகைய நாட்டங்களின் தோற்றுவாயை நோக்க, அங்கு ஏற்கனவே காணமையின் , காண முடியாமையின் வரும் அறியாமை இருள் இருப்பதுவும் தெளிவாகும். இந்த அகவிருளைச் சற்று துமிக்கும் வகையில் அருட்பதிவு நடக்க, ஓர் உணர்வு உதிக்க அதன் பிறகே ஆன்மா ஓர் வேட்கையொடு அவாவொடு எழுந்து இந்த நாடி செலவுகளில் படுகின்றது. அதுபொழுது ஓர் நுதிப்புத் தோன்ற ஆன்மா அதனைப் பற்றிக்கொண்டு தனதாக்கி “அந்த அறியாமையைப் போகியவனாகத் தான் விளங்கவேண்டும்” என்றவாறு ஒர் முனைப்பில் விழுந்து செயற்பட, குறிப்புக் காலவுணர்வும் தலைப்படுகின்றது. பொறிலியப் பார்வையில் இதுவே சுட்டுக்கால வுணர்வாகின்றது. இத்தகைய பல்வேறு நுதிப்புக்களே(projections) ஆன்மா பல வகையான நாட்டங்கலோடுத் திகழ்வதின் காரணமாகும். எ-டு 1:3-7 அவாக்களை அகற்றிச் சுத்தமாகா ஆன்மாவின் அகத்தே அணுத்துவமே சிறந்திருக்க, ‘அனைத்தும் தனக்கே’ என்றவாறு அகந்தை மிக செயல்பட்டு பல காரியங்களைச் செய்து அல்லற்படும்.ஆயினும் அவ்வப்போது மேலான பார்வைகள் வந்தமைய ‘அனைத்தும் பிறர்க்கே’ என்றவாறு பரத்துவம் அல்லது சிவத்துவம் போற்றும். இவ்வாறு தனக்கென்றும் பிறர்கென்றும் வாழ்ந்து பற்பல செய்து வர, ஆன்மா பல போராட்டங்கட்கு ஆளாகி இறையருட் பதிவு மெய்யாக, பார்வைகளின் பெயர்சிகளை மகிழ்ந்து இன்பம் தரும் பரப்பார்வை சிவப்பார்வை போன்ற மேலானப் பார்வைகளைத் மகழத் தொடங்கும். அதுபொழுது இன்னும் ஆழமான ஞானவிழிப்பு உண்டாக, மறைப்பு அல்லது திரோபவம் எனறவொன்று இருப்பதையும் அறிய வந்து, அதனையும் நீக்கும் முனைப்போடு ஞான முயற்சிகளில் இறங்கும் என்பது. எ-டு 1:3-8 திரோபவம் என்பது காணாமையால் காண முடியாமையால் வரும் ஞானவிருள் அல்ல. இந்த ஞானவிருள் வெறுக்கத்தக்கதாக இருக்க, மறைப்பு என்பது, மேலான நிலையிலும் இன்னும் இன்னும் தேட வேண்டும் இன்னும் இன்னும் கடுமையாக உழைத்து கேள்விகளே எழாத என்றும் அழியாதிருக்கும் சத்தறிவாகிய சிவஞானத்தை மகிழ வேண்டும் என்னும் போக்கினை விருப்பினை நிறுத்துவதாகும் இதுவே சுட்டுக் காலவுணர்வு எழுவதற்கும் மூல காரணமாக இருக்கும் குறிப்புக் காலவுணர்வு எழுவதற்கும் காரணமாகும். இந்த திரோபவம் இருக்கின்ற வரையில், பார்வையற்ற பார்வை அமையாதே போக, காலக் கடப்பும் இயலாதாகி, ஆன்மா அசத்தறிவிலேயே பட்டுழலும் என்பதாம். இதனால் முடிவான ஞானவேட்கையாக, இந்த மறைப்பினை போக்குவதே அமையும் என்றவாறு. தொடரும்
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 1-7
நாங்காம் படிமெய் மேற்கோள் பல்வேறு வகைய அறிவுகளையும் அவற்றை உற்பவிக்கும் அவாக்களையும் ஆய்ந்து தெளிய ஏற்ற முறையில் இயலிய நூன்னெறி என்றது. ஏது: அறிவியலின் கணக்கிட்டறிதல், நையாயிகத்தின் அளவைவழி அறிதல் என்பன போன்ற முறையியல்கள், அறிவின் செலவிற்கு தடைகளை ஏற்படுத்தி. ஆழஞ் சென்று புதியப் புதிய நுழைவுகள் பெற்று மூலத்தை காணவொட்டாது தடுத்தலின். எ-டு 1:4-1 இயலிய நூன்னெறிக்கு வேறான பிற முறையியல்கள் என்பன தற்கால அறிவியலின் கணக்கிட்டு அறிதல், நையாயிகத்தின் அளவை வழி சோதித்து அறிதல் என்றும் இவற்றையே அடிப்படையாகக் கொண்ட பிறவுமாம். இவற்றில் கணக்கிட்டு அறிதல் என்பது, காணப்படும் உலகெல்லாம் எண்ணுலகு (mathetic universe) என்ற அடிப்படையில் இயங்கும் அறிவின் தொழிற்பாடுகளாம். எண்னியற் கண் கொண்டு அனைத்தும் பார்க்கப்படுவதால், ஞானம் ஞேயம் ஞாதுரு என்ற வேறுபாடு நீங்காதே ஒருவன் அறிவான் என்றும் மேலும் ஞானம் என்பது கணிதக்கட்டின் நியதிகள் என்றே யாகும். இதனால் பொறிலியப் பார்வைக்குள் நூலியப் பார்வை என்றெல்லாம் புதையுண்டு கிடக்க, அவற்றையெல்லாம் வெளிபடுத்தாது பொறிலியப் பார்வையிலேயே கட்டுண்டு கிடக்கும் என்பதாம். இதனால் கணக்கிற்கு வாரா மறைபொருளாகப் பல உண்டு என்றும், அவற்றையும் காணவே தான் வேட்கைகள் எல்லாம் அறும் என்றும் அறியாதே அவ்வுயிர் அல்லற்படும் என்பதாம். இங்கு ‘பொருள்’ என்பது எது கணக்கிட்டு உண்டென அறிய வருகின்றதோ அதுவே என, இவற்றிற்கு அப்பால் விளங்கும் பொருள்கள் பொருளல்ல வெற்றுக் கற்பனைகள் என்றே படும் என்பதால், முழுமையாக அறியாமை இருளைக் கடிவது இயலாத ஒன்றாகும் எ-டு 1:4-2 இனி அளவையியல் என்பது, மெய் என்பது பிரத்தியட்சம் அனுமானம் ஆகமம் என்பன போன்ற அளவைகட்கு அடங்குவது என்று ஏற்கனவே முடிசெய்து கொண்டு, தோன்றும் அறிவுகளை எல்லாம் இந்த அளவைகட்கு ஆட்படுத்தி சிந்தித்து அடங்குவதை ஏற்பதும் அடங்காததை பொய்யென முடித்து விடுவதுமாகச் செல்லும் நெறியாகும். மேற்கூறிய மூன்று அளவைகளோடு, உவமம், ஒப்பு அருத்தாபத்தி என்றவாறும் இன்னும் பல அளவைகளையும் கொண்டும் இம்முறையியல் இயங்கும். மெய்யறிவாகிய பிரமாவை சனிப்பதாகிய கரணமே பிரமாணம் என்றவாறு பிரமாணவியலாகவே இம்முறையில் செல்லும். இனி இம்முறையியலில் பார்வையை பொறிலியக் கட்டிற்குள்ளேயே அடக்குவது இல்லையெனினும், ‘மெய்’ என்பது ஓர் அளவைக்குள் அடங்குவது என்பதின் பிழையான ஓர் முறையியல் ஆகின்றது. ‘மெய்’ என்ற உணர்விற்கு எந்த அளவையும் இல்லை, தன்னைத் தானே அது மெய்யென உணர்த்தி விடுகின்றது. எவ்வாறு இருளை துமித்து இல்லாது போக்கும் வகையால் ஒளி தன்னை ஒளியெனக் காட்டிக் கொள்கிறதோ அவ்வாறே ‘மெய்’ என்ற உணர்வுமாகும். பிரமாணம் என்ற ஒன்று இல்ல. ஓர் மெய்யுணர்வு தன்னுளிருந்து தானே தன் மெய்மையை உணர்த்தி விடுகின்றது எ-டு 1:4-3 இனி மேற்கூறிய முறையியகட்கு வேறாக, நூன்னெறி என்பது காணப்படும் பொருட்கள் அனைத்தையும், புறவுரு புதையுரு என்றவாறு இரண்டு உருக்களைக் கொண்ட, ஓர் இரட்டுரு நூலாகக் கொண்டு ஆய்தலாகும். இங்கு பொறிலியப் பார்வைக்கு வருவது புறவுருவாகக் கண்டு அதனோடு நில்லாது, அதில் காணவரும் புறக்கூறுகளை நிறுத்துவதாக, புதையுரு ஒன்று இருக்கவேண்டும் என்று கொண்டு நூலியப் பார்வையையும் தேற்றி அப்பொருளின் இயல்பினை ஆய்வதாகும். புறவுருவாக காணவரும் முகத்தின் கோலங்கள, புதையுருவாக காணவாரா அகத்தின் கூறுகளை ஊகித்து அறிவது போன்று இந்த முறையியல். இதனால் காலவுணர்வும், ஓர் பொருளைப் புரிந்துகொள்ள புதையுருவை எதிர்நோக்கி நிற்பதின் குறிப்புக்கால உணர்வில் விழ, ஆய்வு தன்னின் ஓர் எதிர் நிலையை அடையுமா செல்லும். “ புதையுருவைக் கண்டு புறவினை புரிந்துகொள்ள வேண்டும் ‘ என்றவோர் நுதிப்பு ஆய்வானை பற்ற அவன் தன்னையேத் தான் அறியவும் செய்கின்றான். மேற்கூறிய கணக்கிட்டறிதல் அளவைவழி அறிதல் என்பவற்றில் ஆய்வானையே அறிய வைக்கும் பண்பு இல்லை. மேலும். உண்மை என்பது தன்னைத் தானே காட்டிவிடும் என்றே கொளப்படுவதின், அகக் கட்டுபாடுகள் இன்றி ஆய்வு எங்கு கொண்டு செல்கிறதோ அங்கு அறிவும் செல்லும் என்பதின் நூலியப் பார்வைக்குள் புதையுண்டு கிடக்கும் நுதலியப் பார்வை பரப்பார்வை சிவப்பார்வை போன்ற மேலாம் பிற பார்வைகளும் ஆன்மாவின் பார்வைகளாக வந்தமையும் என்றது. எ-டு 1:4-4 இனி மெய்யுணர்வையே ஒளியாக கொண்டு பொருளாய்வினை செய்ய ஆழங்கள் பல தெரிய வருவதின் பல புதிய நுழைவுகளும் கிட்டுகின்றன. பொறிலியப் பார்வை எல்லா உயிர்கட்கும் இயல்பாக அமைந்த ஒன்று. தொழிற்படும் புலன்கற்கு ஏற்ப ஒன்றறிவது இரண்டறிவது என்றவாறு அவற்றைப் பகுக்கவும் முடியும். செயல்படும் புலனிற்கு ஏற்ப கற்றளிகள்(கற்கத் தரும் திணை நிலை) வேறுபடும் என்றாலும் . புலன்களைக் கடந்து இவை எல்லாம் செல்லாமையின், இவை அனைத்தும் முதல் கற்றளிக்குரிய பார்வைகள் என்றும் அறிவுகள் என்றும் ஆகும். இவை ஐம்புலன்களுக்கு புலப்படா பொருட்களைக் காட்டா. ஆயினும் இவ்வாறு காணவரும் பொருட்களை நூலெனக் கொண்டு ஆய்ந்தால். ஐம்பொறிகட்கு ஆளாகி நிற்கும் புறவுருவிற்கு அதன் பண்புகளை நிறுத்தும் மூலமாக புதையுருவும் இருக்கின்றது என்ற உணர்வு தோன்ற, பார்வை நூலியப் பார்வை யாகின்றது. புறவுருவைக் காட்டும் பொறிலியப் பார்வையை புறக்கணிக்காது பொய்யென்று தள்ளாதும் புதையுருவை நோக்கி ஆய்வுகள் செல்லும் என்றது. இதுவே இயலிய நூன்னெறியும் ஆகும் என்பது. எ-டு 1:4-5 இனி உயிர்களின் எல்லா அறிவு வகைகளையும் அவற்றை உற்பவிக்கும் நாட்டங்களையும் இயலிய நூன்னெறியின் ஆய. நூலீயப் பார்வையொடு, அதனுள் புதைந்து கிடக்கின்ற நுதலியப் பார்வையும் வெளிப்பட்டு, இதுவரை காணாவகயில் நின்ற மறையுலகினைக் காணும் நுழைவுகள் மெய்யாகும் என்றது. மேலூம் நுதலியைப் பார்வையை வலப்படுத்தி அதனால் வரும் பொருளறிவினை புறவுருவாக கொண்டு அதனின்ன் புதையுருவைக் காண விழைய, பரப் பார்வையும் உயிரின் பார்வைவையாக வெளிப்பட்டு நின்று, இதுவரை காணவாரா நின்ற பல உண்மைகளைக் கானுமாறு செய்யும் என்றது. இவ்வாறே சிவப்பார்வை அதீதப் பார்வை போன்ற ஏனைய பார்வைகளுமாம். மேலலன இப்பார்வைகள் புதியப் புதிய நுழைவுகலை தந்து தூர தரிசனங்கல பலவற்றை மெய்யாக்கும் எ-டு 1:4-6 இனி இவ்வாறான இயல்பாக அமைந்த பொறிலியப் பார்வையொடு, அதனுள் புதையுண்டு கிடக்கும் ஏனையப் பார்வைகளும் மெய்யாக. இதுவரை கான முடியாதிருந்த உலகும் அதனுள் விளங்கும் பொருட்களும் காணவருவதின், ஆழ் நுழைகள் பல மெய்யாகின்றன என்பதாம். ஆழப் பார்வைகள் பல அடுத்தடுத்து வெளிப்பட்டு ஆய்வானிற்கு உரித்தாக அமைய, புதியப் புதிய நுழைவுகளும் அவனுக்கு உரித்தாகின்றன. காணா வகை மறைக்கப்பட்டும் உளத்தடையின் அவற்ரைத் தேடாதிருக்கும் போக்கையும் கடிந்து, ஒளிப் பாய்ச்சி தெற்றெனக் காட்டி உண்டென உணரத் தருதலின், இவை நுழைவுகள் எனப்பட்டன, இப்படிபட்ட ஞானயாத்திரை , மெய்யுணர்வையே ஒளியாக கொண்டு செல்லும் இயலிய நூன்னெறிக்கு இயல்பான ஒன்றும் ஆகும். செல்லும் அளவில் சிந்தையைச் செலுத்தி. காண வாராதிருப்பதையும் கண்டு மகிழும் வகையில் பல நுழுவுகளைத் தருவது, இந்த இயலிய நூன்னெறியே ஆகும். தொடரும்
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 1-8 ஐந்தாம் படிமெய் மேற்கோள்: இனி அனைத்தையும் சலித்துத் தான் சலியாது நிற்கும் சங்கார காரணணாகிய முதலையே முதலென அனைவரும் காணலாம் என்றது. ஏது: பார்வைகளின் பெயர்ச்சிகளையும் அதற்கு அடிப்படையாகிய மூலத்தையும் நோக்க, ஐந்தொழில்களின் மெய்மை காண வருதலின் எ-டு 1:5-1 உலக வரலாற்றிலும் பல மாந்தர்களது அறிவு வளர்ச்சிகளையும் அதனால் வரும் பக்குவ முதிர்ச்சிகளையும் காணும் பொழுது, பற்பல ஆழமான பார்வைகள் வந்தனையவேதான் இவை மெய்யாகின்றன என்று அறிகின்றோம். இயல்பாக அமையும் ஐம்புலன்கள் வழி அமையும் பொறிலியப் பார்வையில் கட்டுண்டு கிடக்க பின் படிப்படியாக அதனை கடந்து நூலியப் பார்வை நுதலியப் பார்வை போன்ற மேலான பார்வைகள் வந்தமையவே தான் ஞான முதிர்ச்சியின் வரும் பக்குவ முதிர்ச்சி அமைவதைக் காண்கின்றோம் இந்த வளர்ச்சி ஒரே படித்தாக இல்லாது போதலின் தான், மக்களிடையே பண்பாட்டு வேறுபாடுகள் மத வேறுபாடுகள் சனிக்கின்றன. மேலும் ஒரே பண்பாட்டினை சமயத்தைச் சார்ந்தவர்களிடையே கூட, அமையக் கூடிய பார்வை வேறுபாடுகளால் ஆளுமை வேறுபாடுகளையும் காண்கின்றோம். எனினும் யார் பார்வையற்ற பார்வைக்கு உயர்கின்றார்களோ. அவர்கள் இத்தகைய சமயப் பாண்பாட்டு வேறுபாடுகளை எல்லாம் கடந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றவாறு பொதுமை பாரட்டுவதையும் காண்கின்றோம் இத்தகைய உலகியல் உண்மைகள் பார்வைகளின் புடைபெயற்சியையும், முடிவான ஒன்றாக பார்வையற்ற பார்வை திகழ்வதையும் மெய்ப்பிக்கின்றன. எ-டு 1:5-2 கட்டுண்ட ஓர் பார்வையிலிருந்து கட்டு நீக்கி, புதையுண்டு கிடக்கும் இன்னொரு ஆழப்பார்வையை வெளிப்படுத்தி தனதாக்கி புதிய நுழைவின் புதியதோர் புவனத்தைக் காண்பது, அறிவின் தொழிற்பாட்டினால், ஆன்மாவின் முயற்சியால் அமைவது அன்று. அறிவும் தானே இவ்வாறு தன்னின் ஓர் மேலான பார்வைக்கு பெயரும் இயல்புடையதும் அல்ல- பொறிலியப் பார்வையில் இருக்கும் உயிர் தானே நூலியப் பார்வை நுதலியப் பார்வை என்றவாறு புதையுண்டு பல பார்வைகள் தன் பார்வைக்குள் இருக்கின்றன வென்று அறியாதே கிடத்தலின், பார்வைப் பெயர்ச்சிகள் அறிவின் தொழிற்பாட்டினால அமைவதன்று. கட்டுகளின் கழற்சி அமைவதினாலேயே இப்பெயர்ச்சி என்பதின், இந்த கழற்சிகளை அறிவு தானே செய்யும் திறத்தது அல்ல என்பதால், இப்பெயற்சிகளை மெய்யாக்கும் பரவினைகள் உண்டென்பதாம். இந்தப் பரவினைகளும் அறிவினுள்ளே அறிவறியாது நடக்கும் புதை வினைலளாம் ( unconscious activities) இவையே மந்திரங்களால் மெய்யாகும் திருவிளையாடலகள் என்றும் அவற்றிற்கு மூலமாகிய ஐந்தொழிகள் என்றும் பகரப்படும். அறிவுகளைத் தரும் பார்வைகளை நல்குவதும், இந்த பார்வைக்குள் படுபவற்றை அறிவென நிறுத்துவதும், மேலும் பக்குவம் வந்தமைய இருக்கின்ற பார்வையொடு இன்னொரு ஆழப்பார்வையையும் மகிழச் செய்வது இந்த பஞ்சகிருத்தியங்களே யாம். 1:5-3 இனி எவ்வாறு பஞ்கிருத்தியங்கள் இங்கு எனின், இயல்பாக இருக்கும் அந்தகாரத்தைத் துமித்து ஓர் பார்வையை உயிருக்கு உரியதாய் நிறுத்துவது தோற்றல் என, அது உடன் அழிந்து இல்லாது போமாறு செய்வதொழித்து நின்று நிலவுமாறு செய்வது நிலைபித்தல் அல்லது திதி யாகும். இனி இப்பார்வைக்குள் புதையுண்டு கிடக்கும் இன்னொரு மேலான பார்வையை உற்பவித்து உயிருக்கு உரியதாய் ஆக்குவதில், தோற்றல் உண்டெனினும், முன்பிருந்த பார்வையை இல்லாது போக்குவது இங்கு அழித்தலாகும். உயிர்கள் மாட்டு இம்மூவினைகள் வழி, இருக்கின்ற பார்வைக்குள் புதியுண்டு கிடக்கும் மேலான பல பார்வைகளை வெளிப்படுத்தி, ஆழ் நுழைவுகளைத் தந்து இயல்பாகவே செறிந்திருக்கும் ஞான அந்தகாரத்தைப் போக்குவதே அருளல் என்னும் பரவினையாகும். இனி இவ்வாறு செய்யும் பொழுது பல பார்வைகளை புதைத்து பல புவனங்களை காணவொட்டாது செய்வதே மறைத்தல் எனும் திரோதகமாகும். இனி இவற்றில் அருளல் மறைத்தல் என்ற பரவினைகள் ஒழிய ஏனைய மூவினைகள அறிவுத் திறன் இல்லாத அசித்துப் பொருட்களிடையும் உண்டு , ஆங்கும் பல வகையான சலனங்கள் உண்டென்பதின். சித்துப் பொருட்களே தன் அறிவுகள் தோன்றும் விதத்தை ஓர் பொருளாக்கி சிந்தித்துத் தெளிய வல்லவை என்பது, இவையே ஐந்தொழிகளின் உண்மையைக் கண்டு, அவற்றிற்கு மூலமாக, அந்த பரவினைகளைச் செய்யும் ஓர் சித்துப் பொருளாக இறைவன் உண்டென்பதை தெள்ளிதின் உணர்ந்து மகிழும் என்றது. எ-டு1:5-4 இனி இவ்வாறு பஞ்சகிருத்தியனாக உணரப்படும் முதலை, ‘சங்கார காரணாகிய முதல்” என்பது என்னையோ வெனின், ஓர் பார்வைக்குள் பல அறிவுகள் உதிப்பதும் பின் மறைவதும் , பின் மீட்டுணர்வு மீண்டும் கற்றல் எனும் செய்ல்கள் வழி அவற்றை மீண்டும் அடைதல் என்பவற்ரிற்குப் புறம்பாக, கட்டுக்களை நீக்கி, ஆழ் நுழைவுகள் தந்து, இதுவரை கண்டறியாதன கண்டறியச் செய்யும் பொழுது, அகத் தடைகளின் கட்டுகளை நீக்குவதே இங்கு சங்காரம் எனப்படுவதாம். இந்த சங்காரமும் அருளல் என்படுவதேயாகும். இத்தகைய சங்கரிப்புகள் வழியாகத் தான் செறிந்திருக்கின்ற அந்தகாரம் துமிக்கபப்டுவதின் அதன் காரணமாகப் புதிய நுழைவுகள் கைவர ஆழப் பார்வைகள் வழி புதிய புவனங்கள் காண வர, இது அருளுதல் என்றும் ஆகும். இனி இவ்வாறு சங்காரங்களின் காரணமாக முடிவில் பார்வையற்ற பார்வையே எல்லா உயிர்களுக்கும் உரியதாக அமைவதின், இந்த சங்காரத்தைச் செய்யும் முதலும். பார்வையற்ற பார்வையில் யாண்டும் இயல்பாக இருக்கும் ஓர் முதலாகவே இருக்கவேண்டும். மேலும் இந்தப் பார்வைக்கு உரியதாக பகல தெய்வங்கள் கூடாதென்பதின், ஏகனாக இந்த சங்காரகரணனாகிய முதலே முதலாக உடைத்து என்றவாறாம். எ-டு 1:5-5 இனி நுதலிய பார்வை அமைந்துவுடனேயே, பல தெய்வங்களை நிதரிசனமாக காணவரும் ஆகவே இறைவன் உண்டெனும் அறிவு ஐயம் திரிபற மெய்யாகும், பஞ்சகிருத்தியங்களிக் கருத வேண்டாம் எனின், அற்றன்று. நுதலியப் பார்வை பல தெய்வங்களின் தரிசனத்தைத் தரும் அதே பொழுது, தெய்வம் உண்டு ஆனால் ஒன்றல்ல பல(polytheism) என்ற உணர்வையும் உதிப்பித்து பல தெய்va வழிபாட்டினறாக ஆன்மக்களை வாழச் செய்யும். ஆயின், இவ்வாறு காண வரும் தெய்வடிங்களை அருளுவதும் இவற்றை எல்லாம் கடந்து, பார்வையற்ற பார்வையே தனது சொரூபப் பார்வையாக நிற்கும் இறைவன் ஒருவனே என்ற உணர்வு இந்த பஞ்ச கிருத்தியங்களைச் சிந்தித்துத் தெளிவதால் வரும் ஒன்றாகும். இதனால் தெய்வங்கள் பல என்னும் பிழையான அறிவு போக்கப்பட்டு, சங்கார காரணாகிய ஒரே முதல், ஒரே இறைவன் பல வடிவங்களில் தன்னைக் காட்டியும் அருளுகின்றான் என்று அறிந்து ஆன்மாக்கள் பிழையற்ற ஏகவனேகத்துவம்(metatheism) மகிழும் என்றது. எ-டு 1:5-6 இனி இந்த முதல் பார்வையற்ற பார்வையின் சிவஞானமே ஞானமாக, காலத்தாக்கமின்றிய சத்தறிவே அறிவாக நிற்பதின் அசலன சொரூபி என்றது. சிவஞானமே என்றும் அழியாத் ஞானமும் அறிவுகளின் எல்லாப் பக்குவப் புடைபெயற்சிகளையும் சங்கரித்து இல்லாது போக்குவதின் அவற்றிற்கு அசலனத்தைத் தரும் முதலாக இதுவும் அசலன சொரூபியாம். ஆயினும் ஞாயிறு தோன்ற அதன் சந்நிதானத்தில் சில செடிகள் ஒடுங்குவதும் சில செடிகள் மலர்வதும் போல், எவ்வித சலனமும் இல்லாத இந்த இறைவனது சந்நிதானத்தில் இந்த ஐந்தொழிகள மெய்யாகும் என்பதின், இறைவன் அசலனன சொரூபி என்பதற்கு இழுக்கில்லை என்க. இன் இந்த அசலன சொருபியாக பல தெய்ங்கள இருக்கலாமே என, அது முடியாதாம். முடிந்த பார்வையாகிய பார்வையற்ற பார்வை எவ்வித காலத்தாக்கமும் இன்றிய , ஆகவே பற்றற்ற நிலையின் பார்வையே என, அசலன சொரூபியாக இருகக்கூடியய பரம்பொருலள் ஒண்றேயாம் பலவல்ல என்றது. மேலும் இப் பார்வைக்குள் சுட்டு இல்லையென்பதும், அனைத்தொடும் அநந்நியமாக அத்துவிதமாக அவையேத் தானாக நின்று அனைத்தையும் உள்ளவாறே அறிவதின் . இப்பரம் பொருள் ஒன்றேயாம் என்றது. தான் அசலனாக நின்று பிற அனைத்தையும் சலித்துத் தொழிற்படுத்துவதின், இப்பரம்பொருளே முழுமுதற் பொருளே அதனின் பதி ஆகும். ‘பதி’ என்றால் ஆட்சி செய்வான் என்று பொருள் படும். மேலும் சங்கார முதலாக இரு முதல்கள் இருந்தால். ஒன்று பிறிதொன்றை சங்கரித்து இல்லாது போக்கி தானே தனி முதலாக தனக்கு ஓர் முதலாக வேறு யாரும் இல்லாதிருப்பதின், இந்த சங்கார காரனணாகிய முதலே அனைதையும் ஆட்சி செய்து ஊய்விக்கும் பதி என்பதாம். தொடரும் அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 1-9
ஆறாம் படிமெய்
மேற்கோள்
இனி இவ்வாறான பதியுண்மை அறிவு, அருளை பேணின் பெருக்கின் அல்லது மெய்யாகாது போம் என்றவாறு.
ஏது:
அருளின் வழியே தான் மெய்யுணர்வைத் தலைப்பட முடியும் என்பதின்.
எ-டு 1:6-1
பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை போன்றப் பார்வைகள் ஊடே ஆணவ மலம் இன்னும் அகற்றப் படா நிலையில் ஆன்மாக்கள் அதனின் ஈர்ப்புக்கு ஆளாக்கும் மரணநாடி வழிச் சென்று, உள்ளம் பேதலித்து பல அச்சங்களை அவலங்களை அனுபவிப்பதொடு, அவற்றைப் போக்க பல மதமாச்சரியங்களுக்கும் கற்பனைகட்கும் மித்தைகக்கும் ஆளாகி மயங்கிக் கிடக்கும். இதனால மெய்ஞானத்தை அனுபவிக்கத் தரும் சுழுமுனை நாடி செலவில் படாது பெரிதும் அல்லற்படும். இந்நிலையில் வேண்டுவதெல்லாம் மெய்யறிவே. எவ்வளவு இதமாக இருந்தாலும் கற்பனைகள் அல்ல என்றும உறுதியாக நின்று, அருட்பதிவையே வேண்டி நிற்க, அகத்திலே செறிந்திருக்கும் மாய்மைகள் மயக்கங்கள் விட்டகல, தெள்ளத் தெளிவாக, தன்னுளிருந்து தனது மெய்மையை உணர்த்தும் மெய்ஞானங்கள் உதிக்க , ஞான வளர்ச்சி மெய்யாகும் மேலான பார்வைகளும் வந்தமையும் என்பது.
எ-டு 1:6-2
அருளின் பதிவாகிய சிற்சத்திப் பதிவே, அனுபவிக்கப்படும் அறிவு மெய்யறிவு என்பதைக் காட்டிவிடும். ஐயமும் திரிபும் தோன்றா வகையில் அவ்வறிவுச் சுடர்வதின், அதன் மெய்யாம் தன்மை தானே புலனாகும். இதனால் ஐயமும் மருட்ககையும் நீங்க, உள்ளத்தில் ஓர் உறுதியும் தோன்றி அவ்வழியேத் தொடர்ந்து செல்ல வேட்கையும் பிறக்கும். இவ்வாறு ஆன்மாத் தொடர, ஆன்மா இன்னும் இன்னும் ஆழமான மெய்யறிவுகளைப் பெற்று அறிவினல் செறிந்திருக்கும் அறிவாமை நீங்க. நாட்டங்கள் சுழுமுனைச் சென்று பின் வீடுபேற்றையே விரும்பத் தரும் மேரு நாடிச் சென்று வேண்டுவதெல்லாம் சிவஞானமே என்றவாறு வாழவும் வைக்கும்.
எ-டு 1:6-3
இனி இவ்வாறு தவறாது செல்லாவேத் தான், ஆன்மா பொறிலியப் பார்வையில் வாழ்க்கையைத் தொடங்கினாலும், ஒன்றில் ஒன்று புதையுண்டு கிடக்கும் மேலானப் பார்வைகளாகிய நூலலிய நுதலியப் பார்வை போன்றவற்றை அருளப்பெற்று இதுவரை காணமுடியாது மறையாக நின்ற புவனங்களையும் கண்டு மகிழ்ந்து இன்னும் இன்னும் ஆழமான ஞானங்களைப் பெற்று உய்யும் என்றவாறு. இனி இவ்வாறு செல்லுகையில், இடையே பல சித்திகள் கைவர, குறிப்பாக நுதலியப் பார்வை தொடங்கி பல சித்திகள கைவர, பிழையான் முறையில் அவற்றை பயன்படுத்தி மக்களை வஞ்சித்து பல தீயவற்றைச் செய்ய முயன்றால், இவ்வாறான அருட்பதிவுகள் தடைபடும் என்பதொடு, இருந்த ஞானத் தெளிவுகளும் இல்லாது போம் என்றவாறு.
எ-டு 1:6-4
இனி இவ்வாறான சில சித்திகள் கைவர, மந்திர்வாதம் பகன்று, மக்களை வஞ்சித்து பொருளைப் பரிப்பது, தன் இச்சைகட்கு உடம்படுமாறு வற்புறுத்துவது, தானே இறைவன் என்றவாறு சில மாந்தரீக வித்தைகளைக் காட்டி மக்களை மயக்குவது என்பன போன்ற பிறழ்ச்சி வினைகள் செய்வது, அருளைப் பேணுவதும் பெருக்குவதும் அல்லவாம். சில சித்திகள் கைவர, இப்படிப்பட்ட இழிவான துறைகளின் இறங்குவார்க்கு, அருட்பதிவு இல்லாது போய்விடுவது மாத்திரரமனறு, அதற்கு எதிராக உள்ள ஆணவ மலத்தின் பதிவு அதிகரிக்க பல இன்னல்களும் இடர்பாடுகளும் அவமானங்களும் மன உழைச்சல்களும் மனக் கலக்கங்கள் கிலேசங்கள் போன்றவையும் மெய்யாகி அகால மரனத்டதிற்கும் இட்டுச் செல்லும்.
எ-டி 1:6-5
இனி அருளைப் பேணாது பெருக்காது பிழைவழி செல்வோரில் சிலர், தானே இறைவன என்று கூறி, வேடமிட்டு, சில மந்திர தநதிர வித்தைகளைக் காட்டி, அப்பாவி மக்களை வஞ்சிக்கவும் செய்வர். இவர்கட்கு அருட்பதிவு தடைப்பட, மேற்கொண்டு ஞானம் வளர்க்கும் வாயில்களும் மூடிக் கொள்ள. உயர்ந்து உயர்ந்து சென்று பதவூழிகள் பெற்றுப் பக்குவதில் உயர்தலும் அதனால் ஆழமான ஞானத் தெளிவின் வரும் உபசாந்தி நிலையும் அமையாது போம் என்றவாறு. அற்ப அறிவுகளை வைத்துக் கொண்டும் பல சாத்திரங்களை ஓதி, அவற்றையே பிரமாணங்களாகக் கொண்டு குதர்க்கம் பேசி ஞான கபடம் ஆடுவர். தற்செருக்கின் அகந்தையே கூடி நிற்க, இவர்கட்கு அஞ்ஞான இருள் கூடுமே ஒழியக் குறையாது என்பதாம். தான் பிழையான வழியில் செல்வதொடு தன்னைச் சார்ந்தாரையும் பிழையான வழியில் கொண்டு சென்று கீழே வாழ்த்துவர்.
எ-டு 1:6-6
இனி இவர்களில் சிலர் அருட்பதிவினாலேயே மெய்ஞானம் விளையும் என்பதை அறியாது, தனது சுய முயற்சியாலேயே, சிந்தனாத் திறத்தாலேயே , கூர்த்த அறிவாலேயே தான் அறிவில் தத்துவ ஞானத்தில் சிறந்திருப்பதாகக் கருதி, பல்வேறு தர்க்கமாடி தன்னை தானே ஞான இருளிலேயே சிறைச் செய்வர். இப்படிப்பட்ட தர்க்க வாதங்களும் ஐயம் திரிபு போன்றவற்றை போக்கவே என்று அறியாது, தான் எனும் அகந்தையில் தர்க்கத்தில் மாற்றானை வீழ்த்தி வெற்றிக்கொள்வதையே குறியாகக் கொண்டு வாழ்வர், இவர்களைப் போன்றார்க்கும் அகந்தையின் காரணமாக, அருட்பதிவு தடைபட, பொய்யறிவுகளையே மெய்யறிவுகளாகக் கொண்டு தனது வாதத் திறமையால் பிறரை மயக்குவதொடு, தன்னையே மயக்கி கீழான பார்வைகளிலேயே கிடந்து பதியுண்மை போன்ற மெய்ஞானகங்களை மகிழ முடியாது நாத்திகம் பேசி அல்லற்படுவர் என்பதாம்
அழிவிலுண்மை சூத்திரம் 1-- ஏரணவுரை முற்றும்,
|