ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 6மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:43, 6 ஜனவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
அப்போது தான் வடநாட்டுப் படையெடுப்பைக் குறித்த தகவல்கள் வந்து சேர்ந்தன. ஹொய்சள மன்னன் எதிர்த்து நின்றதாகவும், அவனை மதம் மாறக் கட்டாயப் படுத்தியதாகவும், அவன் தன் நாடு, குடிபடைகள், கஜானா என அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டுத் தன் மதத்தைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் செய்தி வந்தது. எதிரிகள் சமயபுரத்தை நெருங்கி விட்டதாகவும் கேள்விப் பட்டனர். கோயிலில் அப்போது நிர்வாகியாக இருந்தவர் ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் என்பார், யோசிக்க நேரமில்லை, உடனடியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார். ஊர்ப் பெரியோர் சிலரோடு அப்போது அங்கிருந்த வேதாந்த தேசிகரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார். அவர்களைக் காக்கவேண்டிய பாண்டியர்களோ ஐந்து கூறுகளாகப் பிரிந்து தனித்தனியே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். ஹொய்சள மன்னர் வீர வல்லாளருக்கோ எதிர்த்து நிற்க முடியவில்லை. என்ன செய்வது! நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார்கள். அங்கேயே இருந்து மூலவரைக் காக்க வேண்டிய ஏற்பாடுகளையும் அரங்கனோடு செல்ல வேண்டியவர்களையும் அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி பிள்ளை லோகாசார்யர் தலைமையில் அரங்கனை ஸ்ரீரங்கத்தை விட்டுத் தென் திசைக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்யப் பட்டது.
அங்கிருந்த பலருக்கும் அரங்கனைப் பார்க்காமல், அவன் ஆராதனைகளைக் காணாமல் அன்றைய நாள் கழியாது. அரங்கனைப் பார்த்துவிட்டே அன்றாட உணவை அருந்தும் வழக்கம் உள்ளவர்கள். இப்படிப் பட்டவர்களிடம் தாங்கள் எடுத்திருக்கும் முடிவை எப்படிச் சொல்வது? ஆனாலும் வேறு வழியில்லை. மக்கள் கூட்டத்தினரிடம் முகலாயப் படையெடுப்பைக் குறித்தும், கண்ணனூர் அருகே நெருங்கி விட்டதாகவும் இப்போது செய்ய வேண்டியது அரங்கனை எவ்வாறேனும் காப்பது தான் என்றும் விவரிக்கப் பட்டது. விழாக் காணச் சென்றிருந்த அரங்கனை அவசரம் அவசரமாகக் கோயிலில் உள்ள அணிமா மண்டபத்துக்கு எடுத்து வந்தார்கள். அரங்கனின் அலங்காரங்கள் களையப்பட்டன. ஒரே ஒரு பூமாலையுடன் தோளுக்கு இனியானில் மீண்டும் அமர்த்தப்பட்டார் அழகிய மணவாளர். அரங்கனை ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் துவங்கின.
மக்கள் கூட்டம் கூடி இருந்தாலும் யாரும் அரங்கனை விட்டுப் பிரிய மறுத்தனர். அனைவரின் உயிருக்கு உயிரான அரங்கனை விட்டுப் பிரிந்து நம் உயிரைக் காத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்றே நினைத்தனர். அவர்களிடம் அரங்கனை ஊரை விட்டு வெளியே எடுத்துச் செல்லப் போகும் செய்தியைத் தெரிவிக்கவும், அவசரம் அவசரமாக அரங்கனோடு செல்லத் தயாரானார்கள். அவர்களின் லக்ஷியம், வாழ்க்கையின் நம்பிக்கை, உயிர் அந்த அரங்கனிடம் தான் உள்ளது. தோளுக்கு இனியான் என்னும் பல்லக்கில் அமர்ந்து கொண்டு நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறார் அவர். சிறிது நேரத்துக்குள்ளாக அழகிய மணவாளரும், உபய நாச்சிமார்களும் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிய கோயில் நிர்வாக அதிகாரிகள்வேத்திர பாணிகள் என்னும் கூட்டத்தை ஒழுங்கு செய்வோர் மூலம் கூட்டத்தைக் கட்டுப் படுத்திய வண்ணம் அரங்கன் பல்லக்கைக் கோயிலை விட்டு நகர்த்தினார்கள். பல்லக்கு மெல்ல நகர்ந்தது.
“ஓ”வென்ற இரைச்சல். மக்கள் விசும்பி விசும்பி அழுதனர். திருச்சின்னங்கள் ஊத, வேதியர்கள் மறை ஓத, பிரபந்தங்கள் பாடப்பட, மங்கள வாத்தியங்கள் முழங்க, அதிர்வேட்டு சப்திக்க, யானை முன்னால் அசைந்து சென்று அரங்கன் வரவைத் தெரிவிக்க, ஊர்வலம் எழுந்தருளும் அரங்கன் இன்று எந்தவிதமான சப்தமும் இல்லாமல், அணிமணிகள் பூணாமல், பட்டாடைகள் தரியாமல், வண்ண மலர்மாலைகள் பூணாமல், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் ஓர் ஏழை, எளியவனைப் போல் மறைந்து, ஒளிந்து இரவோடிரவாகத் திருட்டுத் தனமாகக் காவிரியைக் கடந்து தெற்கே செல்லப் போகிறார். அதைக் காணச் சகியாமல் கூடி இருந்த கூட்டம் ஓவென அழுது ஆர்ப்பரிக்க, அரங்கனைத் தொடர்ந்து சென்றார் பலர்; அங்கேயே மயங்கி விழுந்தார் சிலர். மார்பில் அடித்துக் கொண்டு அழுதார் பலர். அரசனைக் காண வந்தோமே, இப்படி ஆண்டியைப் போலச் செல்கிறீரே எனக் கதறிய வண்ணம் மக்கள் கூட்டம் அரங்கன் பல்லக்கைப் பின் தொடர்ந்தது. (இதை எழுதும்போது எனக்கும் கண்ணீர்)
அன்று ஸ்ரீராமன் நாடு விட்டுக் காடு ஏகியபோது அயோத்தியில் நிகழ்ந்த அனைத்தும் இன்று ஸ்ரீரங்கத்தில் நடந்தது. அரங்கன் உலாக் கிளம்பியது.
அரங்கனோடு நம் உலாவும் தொடரும். இந்த கோபுரம் தாக்குதல் நடந்த காலத்தில் இல்லை; இது குறித்துப் பின்னர் வரும். கோயில் அடையாளத்துக்காகச் சேர்த்துள்ளேன்.
விரைவில் ஒரு போர் இருக்கிறது என்ற எண்ணமும் அவர்களிடையே எழுந்தது. கோயிலில் அரங்கன் கிடைக்கவில்லை என்றதும், கோயிலின் சொத்துக்கள், நகைகள், ரத்தினங்கள் கிடைக்கவில்லை என்றதும் வரப் போகும் கொடியவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். சென்ற முறைத் தாக்குதலின் போது அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலின் மூலவரான ரங்கநாதரைக் கைகளை உடைத்துச் சேதப் படுத்தி, சேஷன் மடியிலிருந்து கீழே இறக்கிப் போட்டு என்ன என்ன என்னமோ செய்து விட்டனர். அப்போது எப்படியோ இங்கே ரங்கநாதரைக் காப்பாற்றி விட்டார்கள். ஆனால் இம்முறை அவர்கள் முக்கியக் குறியே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான். ஆகவே மூலவர் காக்கப்பட வேண்டும்.
கோயிலின் ஆர்யபடாள் வாயில் கதவைத் திறந்தால் உள்ளே நிலைவாயில் அருகே கற்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்களோடு நின்று வேலையை மேற்பார்வை மட்டுமில்லாமல் கூட நின்று தானும் வேலை செய்து கொண்டிருந்தார் பெரியவர் அவர் பெயர் வேதாந்த தேசிகர். முக்கியமான ஜனங்கள் ஊரை விட்டு வெளியே போய்விட்டாலும் கோயிலைச் சார்ந்த முக்கியமான பணியாளர்களில் பலருக்கும் மூலவரான பெரிய பெருமாளை விட்டுப் பிரிய மனமில்லை. அவர்களைப் பொறுத்தவரை மூலவர் பெரிய பெருமாள் வெறும் சுதையால் ஆன விக்ரஹம் இல்லை. சாந்நித்தியம் நிரம்பிய உயிர்ச் சக்தி ததும்பிய சொரூபமே அவர் தான். அவர்களை எல்லாம் அவர் தான் இத்தனை நாட்களாகக் காத்து வந்திருக்கிறார் என்பது உண்மை தான். ஆனால் இப்போது அவர்களை எல்லாம் வெட்டிக் கொன்றுவிட்டு அவரையும் துண்டு துண்டாக உடைக்க ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது. அந்தக் கூட்டத்தினின்று பெரிய பெருமாளை எப்பாடு பட்டேனும் காக்க வேண்டும். அதற்கு நம் உயிர் போனாலும் லட்சியம் இல்லை . அப்படிப்பட்ட மக்கள் அனைவரும் அன்று கோயிலுக்குள் கூடி அரங்கனை மறைக்கும் திருப்பணியைச் செய்து வந்தனர். முதலில் ஆர்யபடாள் வாயிலுக்கருகே கல்சுவர் எழுப்பிக் கோயிலைக் கோட்டை போல் மாற்றிவிட்டால் உள்ளே இருப்பவர்களுக்கு ஆபத்து வராது எனப் பூரணமாக நம்பினார்கள். அதே போல் எம்பெருமான் அடியார்களான பல பெண்களும் அங்கேயே தங்கி இருந்தனர். அவர்கள் அரங்கனுக்கு முன்னால் மட்டுமே ஆடிப் பாடுவார்கள். அரங்கனைத் தவிர மற்றவர்களுக்கு அவர்களின் இனிமையான சங்கீதமோ, ஒயிலான நாட்டியமோ காணக் கிடைக்காது. அரங்கன் இங்கே இருக்க நாங்கள் வெளியே செல்வதா? பின் வேறு யார் முன்னிலையில் எங்கள் கலையை நாங்கள் காட்டி ஆனந்திப்பது? திட்டவட்டமாக மறுத்தனர் அந்தப் பெண்களும். இதைத் தவிர வயது முதிர்ந்த பல பெரியவர்களும் கோயிலையே கதி என நம்பி வந்தவர்களும் அங்கே இருந்தனர். அனைவரையும் காக்கவேண்டி நகரப் படையினர் அனைவரும் மும்முரமாக இருந்தனர்.
அழகிய மணவாளர் காவிரியைக் கடந்து தெற்கே சென்று கொண்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும், திருவரங்க நாச்சியாரின் உற்சவ விக்ரஹத்தையும் ஒரு பல்லக்கில் வைத்து அணிமணி ஆபரணங்களைப் பெட்டியில் வைத்து சில ஆட்கள் காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிப் பயணப்பட்டனர். அரங்கன் தெற்கே சென்று கொண்டிருக்க, நாச்சியாரோ, மேற்கே. இனி இருவரும் சேர்வது எப்போது? யாருக்குத் தெரியும்! :( அடுத்ததாக அவர்கள் செய்த முக்கியக் காரியம் கோயிலின் தானியக் களஞ்சியத்தைக் காப்பது. அதையும் செய்து முடித்தார்கள். ஆயுதங்களைத் தயார் செய்து வரப் போகும் எதிரியைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டார்கள். எல்லாம் சரி, பெரிய பெருமாள்?? ஆஹா, இதோ, அவரையும் பாதுகாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால்.........ஆனால்........ இது என்ன, சந்நிதியை மறைத்துச் சுவர் ஒன்று! ஆம், அரங்கன் சந்நிதியை மறைத்துக் குலசேகரன் படியின் மேலேயே கல்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொத்து வேலையில் முக்கியமாக வேதாந்த தேசிகரும் ஈடுபட்டு முழு முனைப்போடு செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு கல்லாக வைக்க, வைக்க பாம்பணையில் துயிலும் அரங்கன் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தான்.
அனைவரும் கண்ணீர் வடிய வடிய வேலை செய்தார்கள். ஒரு சமயம் அரங்கனைப் பாரத்த வண்ணம். மறு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுத வண்ணம். அவர்கள் பார்வையிலிருந்து மெல்ல மெல்ல அரங்கன் மறைந்தான். தினம் தினம் வழிபாட்டில் சிறிது நேரம் போடப்படும் திரையையே எப்போது தூக்குவார்கள், எப்போது அவனைக் காணுவோம் எனத் துடிக்கும் அந்த மக்கள் இப்போது போடப்பட்டிருக்கும் இந்தக் கல்திரையைக் கண்டு உடலும், மனமும் பதறத் துடிதுடித்து அழுதார்கள்.
படங்கள் உதவி: தற்சமயம் கூகிளார் தான்.
--Geetha Sambasivam 14:40, 6 ஜனவரி 2013 (UTC) |
