தேசம் என்றால் வெறும் மண்ணல்ல, தேசமென்றால் மனிதம்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:40, 6 அக்டோபர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
தெலுங்கு இலக்கிய உலகின் பாரதி: குருஜாடா அப்பாராவ்திவாகர்
பகுதி 1சென்ற ஞாயிறன்று தெலுங்கு இலக்கிய உலகின் பாரதியான குருஜாடா வெங்கட அப்பாராவ் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிறுகதை தொகுப்பு ஒன்று குறித்து பேசுவதற்காக அடியேனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். நல்ல கூட்டம். ஒருநாள் முன்பே கொஞ்சம் ஏற்பாடு செய்துகொண்டும், எதைப் பேசவேண்டும் என திட்டமிட்டுக் கொண்டு சென்றதால் நம் பேச்சுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தெலுங்கு தினப் பத்திரிகைகளிலெல்லாம் போட்டோவுடன் செய்தி போட்டு தூள் கிளப்பி விட்டார்கள். இந்தச் செய்தியுடன் என் தற்பெருமையையும் நிறுத்திக் கொண்டு ‘மரபு விக்கிக்காக' உருப்படியாக ஒரு நல்ல கட்டுரை தர முயற்சிக்கிறேன்.
அத்துடன் அவரது ஒரு சிறுகதையையும் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன். சிறுகதையில் தமிழ்நாட்டினரின் பங்கும் உண்டு என்பதாலும், பொதுவாக நல்ல சிந்தனையாளர் ஒருவரின் இலக்கியத்தை தமிழர்களும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும் இக்கட்டுரையை எழுதிட முன் வந்துள்ளேன். கட்டுரையோடு இயைந்த கருத்துகளை தாராளமாக இங்கே பின்னூட்டம் இடலாம். கட்டுரையைக் கடுமையாக விமரிசிப்பவர் யாரேனும் இருந்தால் அவர்கள் தனியாக ஒரு இழையில் தாராளமாகத் தொடரலாம். தேவைப்படும்போது நானும் அங்கே உங்களுடன் சேர்ந்துகொள்கிறேன். முதலில் குருஜாடா பற்றி சில விவரங்கள்.
இந்த நாடகத்தைத் தொடர்ந்து பல்வேறு கவிதைகள் கதைகள் என எழுதினார் குருஜாடா.
’தேசமண்டே மட்டி காதோயி, தேசமண்டே மனுஷோயி’ - என்ற இவரது கவிதை வரிகள் காலா காலத்துக்கும் தெலுங்கு மக்கள் சொல்லக்கூடிய மந்திரச் சொல்லாக மாறியது. ’தேசம் என்பது வெறும் மண்ணென நினைத்தாயோ,
என்ற உன்னதமான வார்த்தையைக் கொடுத்தவர். இவரது நாடகமாகட்டும், கவிதையோ அல்லது கதைகளோ ஆகட்டும் எல்லாமே பேச்சுத் தெலுங்கில் எல்லோருக்கும் புரியக் கூடிய எளிய வகையில் எழுதினார் என்பது முக்கியமான விஷயமாகும். அதுநாள் வரை தெலுங்குப் புத்தகமோ, இலக்கிய எழுத்துக்களோ சாஹித்ய தெலுங்கில் எழுதுவது என்பது கற்றறிந்த தெலுங்கு சான்றோர்களின் பணியாகவே கிருந்து வந்தது. அதற்குக் காரணமும் உண்டு.
பகுதி 2தெலுங்கு மொழியின் ஆதிகவியாக நன்னயா மகாபாரதத்தை தெலுங்கில் பாடியதுதான் தெலுங்கு மொழிக்காக எழுத்துபூர்வ ஆதாரமாக முதல் நூலாகப் பெயரெடுத்துள்ளது. 1052 ஆம் ஆண்டில் வேங்கிராஜபுரத்தில் ராஜராஜ நரேந்திரன் (சோழ சக்கரவர்த்தியான ராஜேந்திர சோழனின் மருமகன், அம்மங்காதேவியின் கணவன்) அரசவையில் இந்த தெலுங்கு நூல் ஆந்திர மாஹாபாரதம் எனும் பெயரால் நன்னய்யாவினால் அரங்கேற்றப்பட்டது.
ராஜராஜநரேந்திரனையும் ஒரு பாட்டின் மூலம் சரித்திரத்தில் நிலையாக இடம் பெற வைத்தவர் நன்னயா. அதே போல டிக்கனா, யர்ரப்ரகடா, இந்த இருவரும் நன்னயா எழுதி ஆரம்பித்த மகாபர்ரத நூலை முழுமையாக தெலுங்கு மொழியில் மாற்றம் செய்தனர். ஏறக்குறைய எல்லா தெலுங்குப் புலவர்களுமே புராண இதிகாசக் கதைகளை தெலுங்கில் எழுதினர். 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுமதிசதகம் (சுமதிநூறு) மட்டும் நம் நாலடியார் போல நீதி சாஸ்திரத்தைப் போதிப்பது. இந்த நூறு பாடலை எழுதியவர் பெத்தன்னா பூபாலுடு என்பவர். ஸ்ரீநாத எனும் பெரும் புலவர் சரித்திரம் மற்றும் புராணங்களைக் கவிதையாகப் படைத்தார். இவர் ஒருவரே தெலுங்கில் கவிச்சக்கரவர்த்தி எனும் பெயர் பெற்றவர். பல்நாட்டி சரித்ரா எனும் சரித்திர நிகழ்வு கூட இவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். பின்னர் வேமனா, அன்னமய்யா போன்றோர் தெலுங்கு மொழியில் அதிகமான அளவில் கவிதைகள் இயற்றியவர்களாவர்.
ஆனால் தெலுங்கு மொழி மிகப் பிரபலமாக இருந்த காலம் என்பது விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பேரரசராக வீற்றிருந்த காலத்தில்தான். அஷ்டதிக்கஜங்கள் என்று சொல்லப்பட்ட எட்டு மகாகவிகள் (அல்லசானி பெத்தன்னா தலைமைப் புலவர், தெனாலி ராமனும் இவர்களில் ஒருவர்தான்) தெலுங்கில் மிக உயர்நிலையில் வைத்திருந்தனர். சிருங்காரமும், ஆட்சி இயலும், பக்தியும், புராணங்களும் அதிகம் தெலுங்கில் எழுதப்பட்ட காலமும் இதுதான்/ ஸ்ரீகிருஷ்ணதேவராயர், தான் துளு மொழிக்காரராய் பிறந்தாலும், தன் ஆட்சி மொழி கன்னடமாகவே இருந்தாலும் ‘ஆமுக்த மால்யதா’ எனும் தமிழுக்கான கவிதை மாலையை தானே இயற்றி அரங்கேற்றினார். உண்மையான திராவிடனாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் இருந்தது என்பது இந்த ஒன்றே சாட்சியாகும். கி.பி. 1500 - 1550 ஆண்டுகள் தெலுங்கு மொழியின் பொற்காலம் கூட. குறிப்பாக தூர்ஜதி எழுதிய ஸ்ரீகாளஹஸ்தி சதகம் என்பது நம் திருவாசகத்துக்கிணையாகப் போற்றப்படும் பாடல்கள் ஆகும்.
பின்னர் 1650 இல் எழுதப்பட்ட ராமதாச கீர்த்தனைகளாகட்டும், தியாகையா எழுதிய ராமநாம கீர்த்தனைகளாகட்டும் போத்தனா எனும் புலவர் நாவுக்கு மிக இனிமையாகவும் பொருள் செறிந்து எழுதிய தெலுங்கு-பாகவதம் ஆகட்டும், தெலுங்குக் கவிதை என்பது சாதாரண மக்கள்: படிக்கும் அளவுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. மிகவும் கற்றறிந்த சான்றோர் துணை கொண்டே எந்தக் கவிதையும் படிக்கவேண்டிய நிலை. திராவிட மொழிக் குடும்பத்தில் இருந்துதான் தெலுங்கு வந்தது என்றாலும் வடமொழி சற்று அளவுக்கதிகமா தெலுங்குக் கவியாக்கத்தில் கலந்து போனது ஒருவிதத்தில் பாலோடு தேன் சேர்ந்ததாக இருந்தாலும், இந்த இனிக்கும் மொழியை சான்றோர்களால் மட்டுமே மிகவும் ரசித்து சுவைக்கவேண்டியதாயிற்று என்பது உண்மை. அத்துடன் இவையனைத்தும் வடமொழிக் கவிதைக்கான இலக்கண மரபு மாறாமல் எழுதப்பட்டதையும் நோக்கவேண்டும்.
தெலுங்கு மொழி பேசும் நாட்டில் ஆதிகாலத்திலிருந்தே படித்தவர் என்போர் உயர்குலம் என்பதாக சொல்லப்பட்ட நால்வகை வர்ணத்திலேதான் அதிகம் இருந்தது. தெலுங்கு நாடு நல்ல ஆறுகளாலும், மலைவளத்தாலும் சூழப்பட்ட நாடு. வனங்களும், சுரங்கங்களும் அதே சமயத்தில் பாறைகளும் இயற்கையாகவே அதிகம் அமையப்பெற்ற நாடு இது. ஆகையினால் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்நாளும் வேலையும் வேலைக்கேற்ற ஊதியமும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் அதிகம் இருந்ததால் ஏட்டுப்படிப்பறிவு என்பது தேவையான ஒன்று என்பதை அவர்கள் அறியவில்லை என்றே சொல்லலாம். உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் ஆதிக்க வர்க்கத்தினர் பிடியில் இருந்தனர் என இக்கால வழக்கச் சொல்படி ஏற்றுக் கொண்டாலும் இதனால் இவர்கள் துன்பங்களை அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மை. இத்தகைய நிலை ஆங்கிலேயர் ஆட்சியைக் கையில் எடுக்கும் வரை நீடித்தது. ஆங்கிலேயர் காலம் முதற்கொண்டுதான் வேலைகளுக்கு வரைமுறை, அடக்குமுறை, அதிக வரி வசூல், சாதிகளுக்கிடையே ஏற்றதாழ்வுகளைப் பயன்படுத்தி அதனால் பயன் அடைவது போன்றவை அதிக அளவில் வெளியே தெரியவந்தன. இந்த ஏற்றதாழ்வுகளும் அதனால் ஏற்படும் துன்பங்களும் ஒரு சிலரை உண்மையாகவே காயப்படுத்தியதால் எவரெவர் துன்பத்துக்கு ஆளானவரோ அவர்களை ஆறுதல்படுத்தும் விதமாக உழைக்க ஆரம்பித்தனர்.
இப்படித்தான் குருஜாடா அப்பாராவின் சமூகப் பணியும் தொடர்ந்தது. இவரது நற்பணிகள் அறியப்பட்டு பிற்காலத்தில் மிகப் பெரிய சமூகசீர்திருத்தவாதி என்றும் அழைக்கப்பட்டார். சமூகத்தில் இழைக்கப்படும் அநியாயங்களை தனக்கே உரிய பாணியில் எகத்தாளமாகவும், சாஸ்திரத்தைப் பயன்படுத்தி இழைக்கப்படும் அவமானங்களையும், பெண்களுக்கான இழிநிலையையும் எதிர்த்து எழுத ஆரம்பித்தார். இதற்கு அவர் வெளியே உள்ள ஆதிக்க சாதியைச் சாடவில்லை. முதலில் தன் சாதியிலிருந்தே தொடங்கினார். பதிவு 31892 இல் குருஜாடா ‘கன்யாசுல்கம்’ எனும் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். இந்த நாடகம் ஏறத்தாழ 8 மணிநேர அளவுக்கான நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடகம் விஜயநகர ராஜாவின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தைப் பற்றி அறிந்தோமானால், நம்மால் அக்கால கட்டத்தில் நமது சமூகங்கள் எப்படியிருந்தன என்பது நன்றாகத் தெரியும். சமூகக் கட்டமைப்பு, சாத்திரங்களைக் காட்டி பயமுறுத்துதல், நிலச்சுவான் தார்களின் காமக் கிழத்திகளும், காம விளையாட்டுகளும், தீண்டாமையும் எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருந்தன என்பதும் தெரியும். அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குதல், ஒருவர் மீதான பகைமையை தம் சுயநலத்துக்காகத் தூண்டுதல், உழைப்பாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக் கொள்வது, தீண்டாமை போன்ற ச்மூகத்தின் அத்தனை கெடுதல்களையும் குருஜாடா தைரியமாக எழுதி தவறுகளை வெட்ட வெளிச்சமாகக் காண்பித்தார்.
குருஜாடாவுக்கு பெண் விடுதலை, விதவா விவாகம், பெண்கள் கல்வி கற்று முன்னேறுதல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதே போல தாசிகளின் வாழ்க்கையும் மேம்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் இருந்தது. இவை இவர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கவேண்டும். இந்த வேட்கை அவர் எழுதிய கன்யாசுல்கம் நாடகத்தில் மட்டுமல்ல, பல சிறுகதைகளிலும், கவிதைகளிலும் தென்பட்டது.
கன்யாசுல்கம் நாடகம் சமூக அலங்கோலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு கோர்வையான உரையாடல் தொகுப்பு என்றுதான் சொல்லவேண்டும். அக்ரஹாரத்தில் அன்றைய காலத்திலிருந்த அவலங்களை வெளிச்சமாக்கிய கதைத் தொகுப்புதான் இது. அக்னிஹோத்ரவதானிலு எனும் பிராம்மணர் குடும்பத்தை மையமாக வைத்து சித்தரித்தாலும், ஊரில் உள்ள பிற சமுதாயத் தவறுகளையும், சாஸ்திரங்களைக் காட்டி தன் சொந்தங்களைத் தாமே அழித்துக் கொள்வதையும் விவரமாகக் காட்டும் நாடகம்.
அக்னிஹோத்ரம் தன் இளைய பெண் சுப்பம்மாவை காசு பெற்றுக்கொண்டு ஒரு கிழவருக்குக் கலியாணம் செய்து கொடுக்க முன்வருகிறார். அந்த சிறு பெண் இன்னமும் பூப்படையாத சிறு பெண். ஏற்கனவே இப்படித்தான் தன் முதல் பெண்ணைக்கலியாணம் செய்து கொடுத்து, மருமகனையும் சாவுக்குப் பலிகொடுத்து விதவையாகத் தன் வீட்டிலேயே வைத்துப் போஷித்து வருபவர். இந்த சிறு பெண்ணைஇரண்டாம் தாரமாக மணக்க முன்வரும் கிழவர் வீட்டிலும் இதே போல ஒரு சூழ்நிலைதான். அந்தக் கிழவருக்கு ஒரு வளர்ப்பு மகனாக கிரியீசன் என்பவன் இளைஞன், நாலும் தெரிந்தவன், இவன் ஒரு சமயத்தில் மிக நல்லவனாகவும் சில சமயங்களில் கெட்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறான்.
கிரியீசனுக்கும் ஊரில் உள்ள தாசியான மதுரவாணிக்கும் ’சிநேகிதம்’ உண்டு. அதனால் சில முறைகள் ஊரில் இகழ்ச்சிகளுக்கும் ஆளாகிறான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மதுரவாணி தர்மநியாயம் தெரிந்தவள். அதர்மச் செயலுக்குத் துணை போகமாட்டாள். அப்படி யாராவது போனாலும் அவர்களை தைரியமாகக் கண்டிப்பவள் கூட. மதுரவாணிதான் முதன் முதலாக பூப்ப்டையாத பெண்ணை கிரியீசன் வளர்ப்புத் தந்தை காசு கொடுத்து மணம் செய்வதை எதிர்த்தவள். இந்த எதிர்ப்பில் கிரியீசனும் கலந்து கொள்கிறான். இது சிறிது சிறிதாக இரண்டு வீட்டிலும் இந்த எதிர்ப்பு பரவிப் பெரிதாகி ஊரையே ஒரு கலக்கு கலக்குகிறது.
மாப்பிள்ளைப் பேச்சைக் கேட்டு நீதி செய்கிறேன் பேர்வழி என அந்த அழகான மதுரவாணியையும் கிரியீசனையும் பிரிக்க முன்வருகிறார் அந்த ஊர் கர்ணம் ராமப்ப பந்துலு. அதற்கு விலையாக அந்தப் பந்துலு வேறு வழியில்லாமல் மதுரவாணி வீட்டிலேயே இருக்க நேரிடுவது தனிக்க்கதை (ஏற்கனவே சொன்னேனே,மதுரவாணி தர்மநியாயம் தெரிந்த தாசி என்று!).
நாடகம் முழுவதும் சமூகத்தின் அவலங்களை நையாண்டியாகப் பேசப்படுவதால் நாடகத்தில் எங்குமே அலுப்புத் தட்டாது. குருஜாடாவுக்கு பாமரர்களின் மனநிலையையும், நடுத்தரவர்க்கத்தாரில் மனநிலையும் நன்றாகத் தெரிந்துவைத்துக் கொண்டு அவர்கள் மனதில் தம் கருத்துகள் ஆழமாக மனதில் பதியும் வண்ணம் உரையாடலை எழுதியுள்ளார். அதனாலேயே பல ஆண்டுகள் இந்த நாடகம் ஆந்திராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கேறியது, 1909 ஆம் ஆண்டில் குருஜாட உடல்நிலை காரணமாக நீண்டநாள் ஓய்வாக உதகமண்டலத்தில்தங்கியிருந்த காலத்தில் இந்த கன்யாசுல்கம் நாடகத்தை மேலும் பொலிவு பெறச் செய்தார். நகைச்சுவையை மேலும் மெருகுபடுத்தப்பட்டதால் அவரது நாடகம்நூறாண்டைக் கடந்தும் இன்னமும் பாமர மக்களிடையே பேசப்படுகிறது.
கன்யாசுல்கம் 1955 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது. தாசி மதுரவாணியாக சாவித்திரியும், கிரியீசமாக என்.டி.ராமாரவும் நடித்தனர். இந்தப் படம் வெற்றிப் படமாக இருந்ததால் இந்தக் கதையும் நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைக்க வழி வகுத்தது.
கன்யாசுல்கம் நாடகத்தை மனதில் வாங்கிக்கொண்டு ஓவியர் திரு சூர்யாராவ் கன்யாசுல்கம் படங்கள் என்ற ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினார். 1. தாசி மதுரவாணியின் நாட்டிய பயிற்சி குருஜாடா சிறுகதைகள் பற்றிய விவரம் பார்ப்போம். |