மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:036மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:24, 11 ஆகஸ்ட் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் மனே என்னும் கன்னடப்படம் பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். மனே இரண்டு மாதங்களுக்கு முன் லோக் சபா தொலைக்காட்சியில் பார்த்திருந்த ஞாபகத்தில், ஓரோரிடத்து பயில்வான் என்னும் மலையாளப் படம் பற்றி எழுதி வரும் போது ஒரு கன்னடப் படம் பற்றியும் அதுவும் சமீபத்தில் பார்த்த படம் என்ற காரணமாகவும் அது பற்றி பிரஸ்தாபித்தேன். மேலும் கன்னடத்தில் சினிமா என்னும் கலைச் சாதனத்தை அறிந்தவர்கள், அதில் சீரியஸாக ஆழ்ந்து தாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி பேசுபவர்கள் பலர் உண்டு. அங்கு பலர் உண்டு என்றேன். தமிழ் நாட்டில் ஒருவரைக் கூட காணோம். அங்கு இருக்கும் ராஜ்குமார் போன்ற மாடல்கள் தான் நம்மிடம் உண்டு. நாம் அங்கிருந்து தமிழ் படங்களுக்காக இறக்குமதி செய்து வரும் எம்.வி..ராஜம்மா, சரோஜா தேவி, போன்றவர்களுக்குஅங்கு தேவை இருக்கவில்லை. சரி அததது அந்தந்த மண்ணுக்கான குணம். சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன். நம்மவர்கள் செமத்தியாக மூளைச் சலவை செய்யப்பட்டு வருவதால், ஏதும் அதிகம் பலன் இருப்பதில்லை.
போகட்டும். கன்னட சினிமாவில் வித்தியாசமாக செயல்படுபவர்கள் பலர் உண்டு என்று சொன்னேன்.
மனே நகரத்தில் வீடு தேடும், தேடிய வீட்டில் நிம்மதியாக குடியிருக்க விரும்பும் சாதாரண நடுத்தரக் குடும்பத்து தம்பதிகளின் அவஸ்தைகளைப் பற்றியது. இது நம் பெரும்பாலோரின் அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளைப் பற்றியது. இதுவும் ஒரு சினிமாவுக்கான கதையா என்று அதைப் பற்றிய சிந்தனை யாருக்கும் எழும் முன்னரே அதை உதறி எறிந்துவிடும் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் நம் தயாரிப்பாளர்களிலிருந்து ரசிகர்கள் வரை. ஆயினும் ஒரு காலத்தில் இத்தைகைய பைத்தியக்கார எண்ணங்களோடு தான் தமிழ் சினிமாவுக்குள் ஒருவர் புகுந்தார். பாலுமகேந்திரா என்று பெயர் அவருக்கு. வெகு சீக்கிரம் அவர் புத்தி தெளிந்து அத்தகைய பைத்தியக்கார எண்ணங்களிலிருந்து விடுபடச் செய்துவிட்டோம் நாம். நாம் என்றும் நம் பண்பாட்டை கறை ஏதும் படாமல் பாதுகாக்கிறவர்கள்.
போகட்டும். கர்நாடக சினிமா தானே. ஆகையால் நம் பண்பாட்டுக்கு எவ்விதக் களங்கமும் விளைந்து விடாமல் அதைப் பற்றிக் கொஞ்சம் கேட்கலாம்.
புதுமணத் தம்பதிகள். கணவன் முதலில் வீடு தேடி வருகிறான். அவனுக்கு வீடு மறுக்கப்படுகிறது. பின்னர் தன் மனைவியுடன் வரும்போது ஒரு பெரியவர் அவர்களை வரவேற்று வீட்டை வாடகைக்குக் கொடுக்கிறார். தம்பதிகள் குடியேறுகின்றனர். வீடு எல்லாம் உள்ளே சௌகரியமாகத்தான் இருக்கிறது. சௌகரியம் என்றால், தனியே இருக்கலாம். எவ்வித வெளித் தொந்திரவும் இல்லாமல். அது தானே புது மணத் தம்பதிகள் விரும்புவது? சந்தோஷமாகத் தான் இருக்கிறது.. கணவன் ராஜண்ணாவாக நடிப்பது நாஸருத்தீன் ஷா. மனைவி கீதாவாக தீப்தி நவல். கணவனுக்குக் கொண்டாட்டம் தான். ஆனால் அது அதிக நேரம் நீடிப்பதில்லை. வீட்டைச் சுற்றி நிறையக் குடும்பங்கள். என்னென்னவோ பட்டறைகள். தொழிற்கூடங்கள். இரவு முழுதும் ஒரே சத்தம். தாங்க முடிவதில்லை. என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள், அந்த சத்தத்தை மறந்து பொழுதைக் கழிப்பதற்கு. முடிவதில்லை.
கீதாவுக்கு அங்கு ஒரு சினேகம் கிடைக்கிறது. தனியாக வாழும் அவளுடைய அல்லது ராஜண்ணாவின் உறவுக்காரப் பெண்மணி. மகாத்மா படத்தில் கஸ்தூரிபாவாக நடித்த ரோஹிணி ஹட்டங்கடி. மத்திம வயதுக் காரி. நல்ல செல்வாக்கும் சௌகரியங்களும் கொண்டவள். தன் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்பவள். அவளுடன் கீதாவுக்கு நெருங்கிய சினேகம் ஏற்படுகிறது. ரோஹிணி ஹட்டங்காடிக்கு ஒரு இன்ஸ்பெக்டருடன் நெருங்கிய தொடர்பு. அது தனியாக வாழும் அவளுக்கு ஒரு சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. கீதாவின் சங்கடத்தை உணர்ந்து அவள் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி இரவு நேரங்களில் வேலை ஏதும் அந்த பட்டறைகளில் நடக்கக்கூடாது, பகலில் மாத்திரம் வேலை செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது கொஞ்ச நாட்கள் அமைதியாகக் கழியவும் தம்பதிகளுக்கு சந்தோஷம் தான். ஆனால் அது அதிக நாட்கள் நீடிப்பதாக இல்லை. மறுபடியும் இரைச்சல் கொஞ்ச நாட்களில் மீண்டும் தொடங்கி விடுகிறது. இரவு பகல் என்று பாராமல். ஏன்? ரோஹிணி ஹட்டங்காடி இன்ஸ்பெகடர் மூலம் கார்ப்பரேஷன் அதிகாரிகளை அணுக முடியுமானால், பட்டறைக்காரர்களும் மற்றவர்களும் அதே கார்ப்ப்ரேஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துத் தம் வழிக்குக் கொண்டுவர முடியாதா என்ன? உலகத்தில் நடக்காத காரியமா என்ன? மறுபடியும் இன்ஸ்பெக்டரிடம் முறையீடு போகிறது. இது தானே நகர வாழ்க்கை! இன்ஸ்பெக்டர் மறுபடியும் தன் அதிகாரத்தைக் காட்டுகிறார். பட்டறைகள் முழுவதுமாக அகற்றப் படுகின்றன. மக்கள் வாழும் பகுதிகளில் பட்டறைகள் எப்படிச் செயல்பட முடியும்? சட்டம் என்று ஒன்று இருக்கிறதே. சரி.ஆனால் பட்டறைகளை நம்பி வாழ்ந்த எத்தனை ஏழைக் குடும்பங்கள், குழந்தைகள், குட்டிகள். அவர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளார்களே. அவர்கள் பிழைப்பைக் கெடுத்த பாவத்துக்கு ஆளாகிவிட்டார்களே இந்தத் தம்பதிகள், தம் புதுமண சுக வாழ்க்கைக்காக. அவர்கள் வேண்டும் அமைதிக்காக இத்தனை குடும்பங்கள் பிழைப்பை இழந்து தவிக்கவேண்டுமா? சுற்றி இருப்போர் அத்தனை பேரின் பார்வையும் கோபமும் இவர்களைச் சாடுகின்றன. கீதாவுக்கு இதைப் பார்க்கப் பொறுப்பதில்லை. ஆனால் இந்த நிம்மதியும், குற்றம் சாட்டும் அயலார் பார்வைகளும் அதிக காலம் நீடிப்பதில்லை. பட்டறைகள் காலியான இடத்தில் இன்ஸ்பெக்டரின் உறவுக்காரன் ஒருவன் வந்து விடுகிறான். தன் வீடியோ பார்லரோடு. பட்டறைச் சத்தம் போய் வீடியோ பார்லரின் சத்தம் வந்து விடுகிறது. இனி யாரிடம் போய் புகார் செய்வது.? வீடியோ பார்லர் வந்தது மட்டுமல்லாமல் இன்ஸ்பெக்டரின் உறவுக்காரன், வீடியோ பார்லர் சொந்தக்காரன், ராஜண்ணா தம்பதியினரை வீடியோ பார்லரின் திறப்பு விழாவுக்கும் அழைக்கிறான். இந்தப் புதிய இரைச்சலில் பங்கு கொண்டு அதைக் கொண்டாடுவதாகவும் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இது தவிர தம்பதியினரிடையே இன்னுமொரு பூசல். ரோஹிணி ஹட்டங்கடியுடன் கீதா பழகுவதை ராஜண்ணா விரும்புவதில்லை. தடுக்கிறான். ஆனால் அவள் உறவுக்காரி. சினேகமாகப் பழகுகிறாள். கணவனை விட்டுப் பிரிந்திருப்பவள். தனியே தன் சுதந்திரத்துடன் வாழ்கிறவள். உதவுகிறவள். பட்டறையில் வேலை செய்தவர்களும் ஏழைகள் தான். தம் பிழைப்புக்கு ஏதோ செய்கிறார்கள். விரட்டப்பட்ட குடும்பங்களில் ஒரு குடும்பம் தமிழ்க் குடும்பம் . அவர்கள் போய் குடியேறிய சேரியை தகர்க்கிறார்கள். யார்? ராஜண்ணாவின் அலுவலகம் தான். அவர்களுக்குஆறுதல் சொல்லக் கிளம்பிய ராஜண்ணா இதற்கு என்ன செய்யமுடியும்? கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் புகார் செய்தது போல தன் அலுவலகத்தோடு மோத முடியுமா?
இது தான் இன்றைய வாழ்க்கையின் சிக்கல்கள். எப்படித் திரும்பினாலும் சிக்கல். பாதிக்கப் படுபவர்கள் இருக்கிறார்கள்.
இப்படியும் ஒரு இயக்குனர் இருக்கிறார், நமது அண்டை நிலத்தில். ராஜ்குமாருக்குச் சிலை எழுப்பும், நம் கலைஞர் கன்னடத்துப் பைங்கிளி என்று போற்றும் சரோஜா தேவியை அளித்த, நமக்குப் பிரகாஷ்ராஜையும் இன்னும் மற்றோரையும் தந்த சமூகத்தில், 1977 லிருந்து சுமார் முப்பத்தைந்து வருடங்களாக கடஸ்ராத்தாவிலிருந்து இன்று வரை தம் சமூகத்தோடும் தம் திரைப்படங்களோடும் சம்பாஷித்து வருபவர். அவரையும் அவர் போல இன்னும் சுமார் அரை டஜன் கலைஞர்களையும் தம் கலைமுகமாக உலகின் முன் நிறுத்தி வருகிறது கர்நாடகம். கன்னட சினிமாவில் நம்மூர் சிவாஜி போல அங்கும் ஒரு ராஜ்குமார் இருந்தார் தான். அவருக்கு மணிமண்டபமும் சிலை எழுப்பலும் நடக்கின்றன தான். அவர்களது திரையரங்கிலும் தொலைக் காட்சிகளும் நம்மூர் கூத்தடிப்புகள் போல கூத்தடிப்புகளும் உண்டு தான். ஒரே வித்தியாசம். நம்மூரில் கூத்தடிப்புகள் மாத்திரமே உண்டு. அங்கு பட்டாபிராம ரெட்டிகளும், காரந்துகளும், ஜி.வி. அய்யர்களும், கர்நாடுகளும் எம்.எஸ் சத்யூக்களும், காஸரவல்லிகளும் உண்டு. கன்னட சமூகத்திற்கு பெருமை சேர்ப்பவர்களும் அதன் கலை முகத்தை வெளி உலகுக்குக் காட்டுபவர்களும் இவர்கள் தான். நம் சமூகத்தில் இவர்கள் இல்லை. இவர்களுக்கு இடமும் இல்லை. வெங்கட் சாமிநாதன் --Ksubashini 06:48, 26 மே 2012 (UTC) |