மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆருடம்:033மரபு விக்கி இருந்துNa.Kannan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:26, 16 ஜூலை 2012 அன்றிருந்தவாரான திருத்தம் வெங்கட் சாமிநாதன்
கடைசியில் கடம்மாவைக் கூட்டிவர அவள் வேலை செய்யவிருக்கும் ஷேக் வீட்டிலிருந்து ஷேக்கின் அப்பனும் அந்த வீட்டு ட்ரைவரும் வந்து அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழியில் ஷேக்கின் அப்பனான கிழவன் அஸ்வினியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வருகிறான். அவ்வப்போது தன் கைத்தடியால் டிரைவரைக் குத்திக்கொண்டே வருகிறான். ட்ரைவர் உஸ்மானும் மலையாளிதான் முஸ்லீம். முஸ்லீமேயானாலும் அவன் அங்கு வயிறு பிழைக்க வந்தவன். வேலைக்காரன் தான். அயல் நாட்டு வேலைக்காரன். ஆனால் ஷேக் ஒரு சௌதி. கொள்ளை பணக்காரன். பெட்ரோல் தரும் பணம். அதில்லாத ஒரு காலத்தில் சௌதிகள பழங்குடி இன மக்களைப் போல வாழ்ந்தவர்கள். அந்த பழங்குடி இனத்தின் வாழ்க்கைக் கூறுகள் இன்னமும் தொடர்ந்து வரும் விந்தையான நாகரீகம் அவர்களது எந்தத் தண்டனையும் சாட்டையடிகள் இத்தனை என்று தான் ஆரம்பிக்கும். கொள்ளையாகக் குவியும். பணம் இன்னும் கொடூரத்தை அதிகரிக்கவே செய்யும். டிரைவர் மலையாளத்தில் தன் கிழட்டு முதலாளியைப் பற்றிக் கேவலமாகவும் கேலியாகவும் காரில் வரும் போது அவ்வப்போது அஸ்வினிக்குச் சொல்லிக்கொண்டு வருவான். அவர்களது மாளிகை வந்ததும் இளைய ஷேக் அஸ்வினி உள்ளே நுழையும் முன் அவளிடமிருந்து பாஸ் போர்ட்டை வாங்கி வைத்துக்கொள்வான். இனி அவன் அனுமதி இன்றி அவள் வீட்டுக்கு வெளியே காலெடுத்து வைக்க முடியாது. அவனுக்குத் தெரியாமல் ஓடிவிடமுடியாது. இனி அவள் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ள ஒரு அடிமை தான்.
அவளுக்கு அளிக்கப்பட்ட அந்த வீட்டு வேலைகள் எல்லாம், துணி துவைப்பது, வீட்டை மெழுகி சுத்தம் செய்வது, சமையல் செய்து வைப்பது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது இத்யாதி. வீட்டுப் பெண்கள் ஊர் சுற்றப் போய்விடுவார்கள். வீட்டில் இருக்கும் கிழவன் ஷேக்கின் விஷமங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இன்னொரு இளம் பெண்ணும் வேலைக்காரியாக இருக்கிறாள். இந்தோனேஷியாவைச் சேர்ந்தவள். ஒரு நாள் நடு இரவில் அவளைப் படுக்கையில் காணோம். முதலாளி ஷேக்கின் படுக்கை அறையிலிருந்து அவள் வெளிவருவாள். ஒரு நாள் அவளுடைய கதறலைக் கேட்டு விழித்தவள், ஷேக் அவளை பெரும் குரலில் திட்டிக்கொண்டே சாட்டையால் அடிப்பதும் ஷேக்கின் பெண்டாட்டி திட்டிக்கொண்டே தன் கணவனைத் தூண்டிவிடுவதையும் பார்த்து நடுங்கிப் போகிறாள். மறு நாள் ஷேக்கின் குடும்பம் எல்லாம் வெளியே போயிருக்கும் போது ட்ரைவர் அந்த இந்தோனேஷியப் பெண் வெளியே தப்பிப் போவதற்கு வழி சொல்லிக்கொடுக்கிறான். அவள் இனி இங்கிருந்தால் உயிரோடு இருக்க மாட்டாள் என்றும் எச்சரிக்கிறான். திரும்பி வந்த ஷேக் அஸ்வினியும் இதற்கு உடந்தையென அவளுக்கும் சாட்டையடி விழுகிறது. ஷேக்கின் வீட்டுப் பிள்ளைகள் சிறுவர்களாக இல்லை. ராக்ஷஸப் பிறவிகள்தாம். தின்று கொழுத்துக்கிடக்கும் குட்டி பிசாசுகள். அதுகளுக்கும் கத்தியைக்காட்டி அஸ்வினியைச் சீண்டி பயமுறுத்தல் ஒரு சாதாரண விளையாட்டு.
அஸ்வினி ட்ரைவர் உஸ்மானிடம் தான் இனி இங்கிருந்தால் செத்துவிடுவேன், எனக்கு வீடு திரும்ப வேண்டும் என்கிறாள். அந்த உஸ்மான் தான் இந்தோனேஷியப் பெண் தப்ப வழி சொன்னவன். இவளுக்கும் பின்புற ஏணியில் ஏறி உயரக் காம்பவுண்டு சுவரை தாண்டி வெளியே குதித்து நேராகச் சென்று வலது புறம் போனால் ஒரு மலையாளி முஸ்லீம் கடையைத் தட்டினால் அவளுக்கு அடைக்கலம் கிடைக்கும் என்கிறான். வெளியில் யார் கண்ணிலும் படாமல் பார்த்துக்கொள் என்றும் எச்சரிக்கிறான். உஸ்மானுக்கு இந்தப் பெண்கள் இந்த ராக்ஷஸர்களிடம் அகப்பட்டு சித்ரவதைக்குள்ளாவது பொறுப்பதில்லை தான். ஆனால் அதே உஸ்மான், அஸ்வினிக்கான சம்பளம் 800 ரியாலில் 200 ரியாலைத் தன் கமிஷன் என்று எடுத்துக்கொள்ளவும் செய்வான். சௌதியில் வாழ்க்கை அப்படியான ஒரு இரட்டை நிலையில் தான் எவரையும் வைத்துள்ளது போலும். மனித அபிமானம் முற்றிலும் இழந்தவர்களும் இல்லை. தம் வாழ்க்கைச் சுயநலத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு போலும்.
அஸ்வினி பின்புற ஏணியைக் கொண்டு அந்த 10-12 அடி உயர காம்பவுண்ட் சுவரை ஏறி வெளியே குதிக்கிறாள். அதுவே கை கால் எலும்பை அல்லது இடுப்பை முறித்திருக்கும். ஆனால் அவளுக்கு நேர்ந்தது வெளியே கிடந்த கண்ணாடிச் சில்லுகளால் பாதத்தில் காயம். ரத்தம் பெருகும் காயத்தோடு உஸ்மான் சொன்ன கடைக்குப் போனால அது கதவு பூட்டியிருக்கிறது. காயம் பட்டு ரத்தம் ஒழுகும் காலோடு அவள் ஊருக்கு வெளியே பாலைவன மணல் வெளியில் நடந்து செல்வதைத் தான் அடுத்து பார்க்கிறோம்.
நாக்கு வரண்டு கால்கள் தளர்ந்து செல்லும் அஸ்வினி பாலைவன ரோடில் செல்லும் வண்டிகளையெல்லாம் நிறுத்தக் கை நீட்டுகிறாள். நிற்கும் ஒரு ட்ரக் ட்ரைவரிடம் தண்ணீர் வேண்டுமென சைகை காட்ட அவர்கள் தண்ணீர் கொடுத்து பின்னர் ட்ரக்கின் பின்னால் ஏறிக்கொள்ளச் சொல்கிறார்கள்.. அந்த ட்ரக் நிறைய ஒரு மந்தை வெள்ளாடுகள். அந்த ஆட்டு மந்தையின் இடையே ஒரு பயங்கர தாடியும் மீசையுமான ஒரு ஆள்.
ட்ரக் பாதையை விட்டு விலகி பாலைவன மணல்வெளியில் திருப்பப் படுகிறது. அஸ்வினி பயந்து வண்டியை நி9றுத்தச் சொல்லி கூச்சலிடுகிறாள். ட்ரக் ஒரு பாலை வெளியில் தனித்துக் காட்சி தரும் ஒரு பெரிய ஆட்டுக்கிடாய் போன்ற ஒரு கொட்டகை முன் நிற்கிறது. அங்கு ஒரு தோலுரிக்கப்பட்ட ஆடு அனலில் சுடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அஸ்வினிக்கு ஏதோ சாப்பிடக்கொடுத்து மற்றவர்களும் சாப்பிடுகிறார்கள். அவர்களது நடத்தையும் சிரிப்பும் அடுத்து அஸ்வினி அவர்களுக்கிரையாகப் போகிறாள் என்பதை உணர்த்தும். ட்ரக்கிலிருந்து ஆடுகளை இறக்கிக் கிடையில் கட்டித் திரும்பிய அந்த ஒல்லி தாடிக்காரன் மற்றவர்கள் நமாஸ் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அஸ்வினியைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பாலை வெளியில் ஓடுகிறான். மற்றவர்களின் கண்மறையும் தூரம் வந்ததும் மலையாளத்தில், “இங்கே இருக்காதே ஒடிப்போ, நேரா எங்கேயாவது ஓடி தப்பிப்போ என்று எச்சரித்துவிட்டுத் திரும்பி தன் இடத்துக்கு வந்தால், அஸ்வினியைத் தப்ப விட்டதற்கு அவனுக்குச் சாட்டையடி விழுகிறது. அவனைக் கையைக் காலைக் கட்டி வாயில் துணி அடைத்து அவர்கள் வண்டியை எடுத்துக்கொண்டு அஸ்வினியைத் தேடப் போகிறார்கள்.
இடையில் ஆடுகளுக்குத் தீவனம் சப்ளை செய்யும் ஆள் வருகிறான். அவனும் ஒரு மலையாளி முஸ்லீம். ”“ஏய் பஷீர்” என்று சத்தம் போட்டுக்கொண்டு வருகிறவன் வாயடைத்துக் கட்டப்பட்டுக் கிடக்கும் பஷீரை விடுவிக்கிறான். பஷீர் தான் தப்புவித்த பெண்ணைத் தேடிக் காப்பாற்ற வேண்டும் எனறு வந்தவனை வேண்ட அவர்கள் வண்டியெடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். கடைசியில் அவள் எங்கோ மயங்கிக் கிடப்பதைக் கண்டு வண்டியில் அவளை ஏற்றி அனுப்பிவிட்டு பஷீர் தன் கிடைக்குத் திரும்புகிறான். அவனை நாம் படத்தின் கடைசியில் பார்ப்பது ஒரு சவக்கிடங்கில் அடையாளம் தெரியாத இந்தியப் பிணமாக.
இங்கு இன்னுமொரு முக்கியமான நபரைக் குறிப்பிட மறந்து போயிற்று. அந்த நபரும் ஒரு மலயாளை முஸ்லீம் தான். ரஸாக் என்ற பெயர் கொண்ட SOCIAL ACTIVIST. அயல் நாட்டில் திக்கற்றுத் தவிப்பவர்களுக்கு தானே முனைந்து தன்னால் ஆன உதவிகள் செய்பவர். கட்டிட வேலைக்குச் சேர்ந்த தகுந்த ஆவணங்கள் இல்லாத ஒருவர் கட்டிட உச்சியிலிருந்து விழுந்த செய்தி கேட்டு ரசாக் அங்கு வருகிறார். அங்கு விழுந்த நிலையிலேயே கிடப்பவருக்குக் கட்டிடவேலை செய்யும் குத்தகைக்காரர் எந்த உதவியும் செய்ய மறுக்கிறார். ஆவணம் இல்லாதவரை வேலைக்குச் சேர்த்தது தெரியவந்தால் தனக்கும் ஆபத்து என்று. மலையாளியே ஆனாலும் நாட்டுக்காரனுக்கு ஒரு அளவுக்கு மேல் உதவி இக்கட்டிலகப்பட்டுக் கொள்ளத் தயார் இல்லை. இது அங்கு எல்லோரிடமும் காணும் குணம். உஸ்மான் ஷேக்கின் வீட்டில் அவதிப்படும் பெண்களுக்கு உதவத் தயார். ஆனால் அவர்கள் அகப்பட்டுக்கொண்டால், தனக்கு ஒன்றும் தெரியாது என்று கைவிரிப்பது போல. ரஸாக்குக்கு அஸ்வின் என்று ஒரு மலையாளிப் பெண் எங்கோ வேலைக்குச் சேர்ந்து இப்போது இருப்பிடம் தெரியாது அலைந்து கொண்டிருக்கிறாள் என்ற் செய்தி வருகிறது. ரசாக் உஸ்மானிடம் விசாரிக்கும் போது உஸ்மான் தனக்கு ஏதும் தெரியாது என்று சொல்லி விடுகிறான். அஸ்வினி வேலை செய்த ஷேக்கிடம் விசாரிக்கச்சென்ற ரஸாக்குக்கு அங்கு மிரட்டலும் வசையுமே கிடைக்கிறது. ரஸாக்குக்கும் குடும்பம் உண்டு அங்கு குடும்பத்தைக் கவனிக்காது ஊரார் அவதியையெல்லாம் தன் தலையில் சுமத்திக்கொள்வதாக அவனுக்கு வீட்டிலும் எதிர்ப்பு.
அஸ்வினியை பஷீர் கேட்டுக்கொண்டதன் பேரில் தன்னுடன் காரில் ஏற்றிய காசிமுக்கு - (இது நான் இப்போது என் சௌகரியத்துக்குக் கொடுத்துள்ள பெயர். படத்தில் என்ன பெயர் என்பது மறந்து விட்டது) - அஸ்வினி ஒரு வேண்டாத வில்லங்கம். போலீசுக்குத் தெரிந்தால் தனக்கும் ஆபத்து என்று உணர அவளைப் பாதி வழியில் இறக்கி “எங்கேயாவது போய்க்கோ” என்று மிரட்டி இறக்கி விட்டாலும் பின் இரக்கம் தோன்றி, அவளை மீண்டும் காரில் ஏற்றித் தன் அறைக்கு இட்டுச் சென்று அவளுக்கு அங்கு பாதுகாப்புத் தருகிறான். அவளுக்குச் சாப்பாடும் புதிதாக துணிகளும் வாங்கித் தருகிறான் . இரவு வந்ததும் அவள் அவன் அறையிலிருக்க அவன் வெளியில் தன் காரில் உறங்கிக் கழிக்கிறான். ஆனால் மறுநாள் அஸ்வினியும் காஸிமும் கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையிலும் அவளுக்குச் சாட்டையடிகள் விழுகின்றன. பெண் காவலர்களும் அவளிடம் கொடூரமாகத் தான் நடந்து கொள்கிறார்கள்.
ரஸாக் கடைசியில் அவர்களைக் கண்டு பிடித்து சிறைக்குச்சென்று தண்டனை காலம் வரை எப்படியாவது பல்லைக் கடித்துக்கொண்டு கழித்து விட்டால் தான் வந்து காப்பாற்றுவதாகச் சொல்கிறான்.
படத்தின் கடைசிக் காட்சியே அது தான். ரஸாக்கும் அவன் தோழர்களும் இரண்டு கார்களில் வந்திறங்குகிறார்கள் சிறைச் சாலையின் வாசலுக்கு எதிரில். சிறைசாலையின் வெளிக்கதவு திறக்க வெளிப்படுவது அஸ்வினி. அவள் கிட்டத்தில்வந்ததும் ரஸாக் அவளீடம் அவள் கொடுப்பது கேரளாவுக்குத் திரும்ப விமான டிக்கட்டும் பணமும். அத்தோடு கட்டாயம் பாஸ்போர்ட்டும் இருக்க வேண்டும். அது எப்படிக் கிடைத்திருக்கக் கூடும் என்பது தெரியவில்லை. சொல்லப்படவும் இல்லை. அஸ்வினியின் உயிர் நாடியே, ஷேக் அவள் அங்கு கால் வைத்த தினமே பிடுங்கி தன்னிடம் வைத்துக்கொண்ட அந்த பாஸ்போர்ட் தான். அவளுக்கு அது உயிர் நாடி. ஷேக்குக்கு அது ப்ளாக்மெயில் சாதனம். இதுஅரபு நாடுகளில் வேலைக்குச் செல்லும் எல்லோருக்கும் நேர்வது தான்.
பின்னால் வண்டியில் இருப்பது அவளுக்கு கடைசியாகத் தஞ்சம் அளித்த காஸிம் என்னும் ட்ரைவர்.அவனுக்கும் சிறையிலிருந்து விடுதலை கிடைத்து விட்டது.
இன்னும் ஒரு காட்சி பாக்கி இருக்கிறது. ரஸாக்குக்கு டெலிபோன் வருகிறது. ஒரு அனாதைப் பிணத்தை அடையாளம் காணவேண்டும் என்று. அந்தப் பிணம் ஆடடுக்கிடையின் பொறுப்பிலிருந்த, அஸ்வினியைத் தப்பி ஒடச் சொல்லி இழுத்துச் சென்ற பஷீர். ஆனால் ரஸாக்குக்கு அவனைத் தெரியாது. பஷீர் அனாதைப் பிணமாக சௌதி சவக்கிடங்கில் ஒரு பெட்டியில் அடைபட்டுக் கிடக்கிறான்.
இந்தப் போதாமை காட்சியில் காணும் அற்புதக் கலைப் படைப்பை அபத்தமாக உருமாற்றிக் காட்டும் பலம் கொண்டது. சொற்கள். காட்சியில் காணும் அபத்தத்தை வேறு ஏதோவாகத் தான் உருமாற்றிக் காட்டும் சாத்தியம் கொண்டவை .ஆனால் ஒரு போதும் அபத்தத்தை கலையாக்கிக் காட்டி விடமுடியாது தான். அந்த அளவு நிம்மதி கொள்ளலாம்.
முதலில் நான் இதில் காணும் குறைகளைச் சொல்லிவிடுகிறேன். அஸ்வினிக்கு அவள் பிறந்த கேரள கிராமத்து வீட்டிலிருந்து. நேர்வதெல்லாம் கடைசி வரை ஒரே சோகக் கதை தான். அவளைத் துரத்தித் துரத்திக் காதலிப்பவனுக்கே அவள் மனைவியாக வாய்க்கிறாள். அவனும் செத்துத் தொலைக்கிறான். அவள் குடும்பத்தைக் காப்பாற்ற அவள் ஒரு ஏஜெண்ட் மூலம் சௌதி போகிறாள். அங்கு கால் வைத்த நிமிடத்திலிருந்து அவளுக்கு உலகத்தில் உள்ள கொடுமைகள் எல்லாம் நேர்கிறது. எப்படியோ எத்தனை முறை எத்தனை வெவ்வேறு இடங்களில் கொடூர ஆண்களிடம் அகப்பட்டுக்கொண்ட போதிலும் அவளை யாரும் தொடுவதில்லை. அவளோடு அதே அறையில் தங்கியிருக்கும் இந்தோனேஷியப் பெண் தினம் கற்பழிக்கப் படுகிறாள். சாட்டையடி விழுகிறது. ஆனால் அஸ்வினி தமிழ்ப்படக் கதாநாயகி போல இலங்கைச் சிறையில் அனுமன் கண்ட கற்பெனும் பெயரதொன்றாகத் தான் தப்பி விடுகிறாள். கதாநாயகிக்கு தமிழ்த் திரைப்பட மரபு கொடுக்கும் கௌரவத்தை மலையாளத் திரைப்படமும் கொடுத்துள்ளது போல். இதைத் தவிர சௌதி அரேபியாவில் ஒரு அயல் நாட்டு இளம்பெண்ணுக்கு விதிக்கப்படும் அவதிகள அத்தனையும் அவளுக்கு நேர்கிறது. எந்த அவதியும் கொடுமையும் யாருக்கும் நேராத கற்பனை அல்ல. அவை அங்குள்ள யதார்த்தங்கள். ஆனால் அவை எல்லாம் ஒரு சேர அஸ்வினிக்கு நேர்வது தான் அவளை இந்தப் படத்தை நவீன நல்லதங்காள் கதையாக்கி விடுகிறது. சென்னையிலும் தமிழ் நாட்டிலெங்கிலும் குப்பையும் சாக்கடைத் தண்ணீரும் தெருவில் கொட்டிக்கிடப்பது உண்மைதான். ஆனால் எல்லாவற்றையும் ஒரு இடத்தில் திரட்டிக் குவித்தால் அது உண்மையல்லவே. பலரால் பல இடங்களிலும் அனுபவிக்கப் படும் கொடுமைகளையெல்லாம் ஒரே பெண்ணின் மீது சுமத்தினால் அது கொஞ்சம் அனுபவ யதார்த்தத்தைக் .கற்பனையாக்கி விடுகிறது.
குழந்தைகள் குழந்தைகள் தான். உலகில் எங்கிலும். அது வயது ஆக ஆகத் தான் சுற்றுச் சூழலிருந்து கற்று என்னவோ ஆகிப் போகின்றன. எவ்வளவு தான் தீய சக்திக்கு உருக்கொடுத்த மாதிரி நம் அரசியல் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் குழந்தைப் பருவத்தில் கட்டாயம் நம் கொஞ்சுதலுக்கு உரியவர்களாகத் தான் இருந்திருப்பார்கள். இன்று நம் நிலத்தை அபகரித்தவர்களுக்கு அன்று “மிட்டாய் சாப்பிறயாடா கண்ணு” என்று பிரியம் காட்டியிருப்போம். தவழும்போதே அசுரர்களாகவா இருந்திருப்பார்கள்?. அஸ்வினி வேலைக்குச் சேரும் ஷேக் வீட்டின் சிறுவன் கூட ராக்ஷஸப் பிறவியாக கத்தியை எடுத்துக்கொண்டு மிரட்டுகிறான். அரபு நாட்டுக் குழந்தைகளும் சிறு பிராயத்தினரும் எந்த நாட்டினரும் போல மிக அழகாக ஒரு தெரியாத்தனத்துடன் தான் இருப்பார்கள். அவர்களையும் ராக்ஷஸர்களாக்குவானேன்? இதுவும் தமிழ் சினிமாத்தனம் கேரளாவிலும் பரவியிருப்பதைத் தான் சொல்கிறதோ என்னவோ.
கடைசிக் காட்சியில் ரஸாக் சிறைச்சாலை வாசலுக்கு எதிரே இரண்டு கார்களில் வந்து அஸ்வினி வெளியே வந்ததும் தன் கைகளில் தயாராக வைத்திருக்கும் பணம் பாஸ்போர்ட், விமான டிக்கட் எல்லாம் அஸ்வினிக்குக் கொடுத்து அபய வசனம் பேசுவது டிபிகல் தமிழ் சினிமா அபத்தம். பெண் ரசிகர்கள் கண்ணீர் சிந்தலாம். அழக்கூட அழலாம் முடிந்தால்.
இனி இதையெல்லாம் மீறி இங்கு இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு எழுத நேர்ந்த நியாயம் பற்றிச் சொல்ல வேண்டும்.
நேராகக் கதை காட்சிப் படுத்தப் படுகிறது. அஸ்வினி ஒரு இடத்தில் கூட நம்ம சௌகார் ஜானகி போல, கன்ணாம்பா போல அல்லது இன்னும் சமீபத்திய விஜயகுமாரி போல அழுது புலம்பவில்லை. ஒப்பாரியோ வைக்கவில்லை .நீண்ட வசனம் பேசுவதில்லை. அஸ்வினி முழுப் படத்திலும் பேசுவது மொத்தம் ஒரு பத்து பதினைந்து வரிகளுக்கு மேல் போகாது.. அதிகம் அவள் நா தழுதழுக்கிறது அவ்வளவே.. படம் முழுதிலும் கூச்சலே இல்லை. அமைதியாகவே தன் துன்பத்தை எதிர்கொள்கிறாள். எந்த இடத்திலும் யாரும் அனுபவத்தை யதார்த்தத்தை மீறிய வசனம் பேசுவதில்லை. ஒரு கொடூர வாழ்க்கையும் அக்கிரம அதிகாரமும் நிலவும் சூழலில் ஒரு சண்டை ஸ்டண்ட் காட்சிகள் கிடையாது. டான்ஸ் கிடையாது. குத்துப் பாட்டு கிடையாது. நேரான கதை சொல்லலில். வாழ்க்கையின் அனுபவம் நம் முன் விரிகிறது. எல்லாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள். நம் சினிமா மரபின் அத்தியாவசிய ஹீரோக்கள் ஹீரோயின்கள் கிடையாது. நேரான, சின்சியரான கதை நம் முன் காட்சிகளாக விரிகிறது.
சௌதி அரேபியாவில் இதன் ஷூட்டிங் நடந்திருக்க சாத்தியமா? தெரியாது. ஆனால் பாலைவனக் காட்சிகள், வண்டிகளின் நெரிசல் நி9றைந்த தெருக்காட்சிகள் எல்லாம் சௌதி அரேபியாவைத் தான் நம் முன் நிறுத்துகின்றன. இவை வேறு எங்கு சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை.
அராபியர்கள் அரபி பேசுகிறார்கள். மலையாளிகள் மலையாளம் தான் பேசுகிறார்கள். இந்தோனேஷியப் பெண் அவள் மொழியில் பாஷாவில் தான் தனக்குள் ஒரு பாட்டை முணுமுணுக்கிறாள்.
கடைசியாக மிக மிக முக்கியமாக இந்தப் படத்தில் சொல்லப்படும் வாழ்க்கையின் உண்மையும் அதைச் சொல்லும் நேர்மையும்.
கேரளாவிலிருந்து அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை வேறு எந்த மாநிலத்தையும் விட மிக அதிகம். அவர்கள் கேரளாவுக்கு அனுப்பும் பணம் எத்தனை பில்லியனில் எனபதை நாடு அறியும். அவர்கள் அனைவரும் அங்கு வேலை செய்ய மட்டுமே உரிமை பெற்றவர்கள் . வாழும் உரிமையோ குடி உரிமையோ பெற்றவர்கள் அல்ல. அன்னியர்கள் தான், எந்த நேரத்திலும் பலவந்தமாக திருப்பி அனுப்பப்படும் நிலையில் உள்ளவர்கள் தான். இங்கு பங்களா தேஷிலிருந்து குடியேறி ரேஷன் கார்டும் வேலையும் பெற்று ஓட்டுரிமைக்கு வாதமிடும் கோடிக்கணக்கான பங்களா தேசி முஸ்லீம்கள் போல அல்ல. அவர்களை எதுவும் சொல்ல இந்த எதிர்கால வல்லரசு பயந்து நடுங்குகிறது. அதன் கால் உதறல் உலகம் அறிந்தது.
இப்படத்தில் வெளிப்படும் சௌதி அரேபியர்களின் சித்திரம் எள்ளளவிலும் அவர்களுக்கு உவப்பானதல்ல.. இங்கிருந்து தம் ஏழ்மையிலிருந்து விடுதலை பெற அங்கு உழைக்கச் செல்லும் நம் மக்கள் அங்கு சந்திப்பது இனவெறியின் கொடுமை. பணத்திமிரின் அரக்கத் தனம், அதிகாரத்தின் கொடூரம். அங்கு செல்பவர்கள் முஸ்லீமகளானாலும் அவர்கள் மதவெறியிலிருந்து தப்பலாமே ஒழிய மற்ற கொடூரங்களுக்கு இரையாகிறவர்கள்தான்.
இந்தப் பின்னணியில் அராபிய நாடுகளுக்கு வேலை செய்யச் செல்லும் நம் மக்கள் எத்தகைய கொடுமைகளைச் சந்திக்கிறார்கள், எத்தகைய சமூகத்தின் கொடூரங்களை அனுபவித்து இந்தியாவுக்குப் பணம் அனுப்புகிறார்கள் என்பதைச் சொல்வதில், இந்தப் படம் எத்தகைய தயக்கத்தையும் காட்டவில்லை.
இந்தப் படம் நமக்கும் அரபிய நாடுகளுக்குமிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் என்று சொல்லக் கூடும் இந்திய அரசும், மாநில அரசும். அவர்களுக்கு வேண்டியது இவர்கள் அனுப்பும் லக்ஷம் கோடிகள். அல்லது பல ஆயிரம் கோடிகள்.
இது போன்ற ஒரு கதையும் படமும் தமிழிலும் சாத்தியமில்லை. ஒரு சாதியை இனம் காட்டி ஒரு பாத்திரம் உலவ முடியாது. சுஜாதா கதையில் ஒரு கவுண்டரோ நாடாரோ வந்து விட்டால் குமுதம் அலுவலகத்துக்கு எதிரில் கலவரம் வெடிக்கும். அந்தத் தொடர் உடன் நிறுத்தப் படும். ஒதுக்கீடு பற்றி ஒரு படம் வந்தால் அதுக்கு தடை உடனே வரும். பம்பாய் படம் எத்தனை தான் உண்மையோடு உறவற்று கற்பனையே யானாலும் பால் தாக்கரேயிடம் சென்று அனுமதி பெற்றேயாக வேண்டும். இருவர் கதை எத்தனை உண்மைக்கு மாறான திருகல்கள் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த எழுபது எண்பது வருட கால தமிழ் சினிமா வரலாற்றில் வெளிவந்துள்ள பல்லாயிரக் கணக்கான படங்களில் எதாவது ஒன்று ஒன்றே ஒன்று வாழ்க்கையை நேராக எதிர்கொண்டது என்று சொல்ல முடிவதில்லை. பாரதியார்கூட ரயில் பிச்சைக்கரரன் மாதிரி ஓடுகிற ரயில் பாடுபவராகக் காண்பது தான் நமக்கு பிடிக்கிறது. ஒரே அபத்தமான கற்பனை உலகில்தான் நாம் சஞசரித்து வருகிறோம். அதற்குப் பழக்கமாகியுள்ளோம்.
கடம்மா நமக்கு முற்றிலும் மாறான ஒரு சிந்தனை கொண்ட சமூகத்திலிருந்து பிறந்துள்ளது. இதை எதிர்க்கொள்ளக்கூடிய தைரியம் கூட நமக்கு இல்லை என்பது தான் உண்மை.
கடைசியில் ஒரு வார்த்தை. கடம்மாவை ஒரு கலைப் படைப்பு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அதில் உண்மை உண்டு. நேர்மை உண்டு. அதைச் சொல்லும் தைரியம் உண்டு. இம்மாதிரியான படங்கள் மலையாளத்தில் அபூர்வம் அல்ல. நிறைய உண்டு. வணிக அபத்தங்களிடையே இவையும் கணிசமான என்ணிக்கையில் உண்டு. இவற்றின் பெருக்கத்தில் தான் கலைப் படைப்புகள் வரும் சூழல் உருவாகும்.
நாம் கடம்மாவுக்கு வெகு தூரம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கிறோம். கடம்மாவைத் தொடும் நிலைக்கு நாம் தயாராகவே இல்லை! --Ksubashini 10:46, 18 மார்ச் 2012 (UTC) |