மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:023

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

நான் ஒன்றைக் கவனித்து வருகிறேன். நான் என்ன எழுதினாலும் நம் சினிமா கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக ஒரே பாதையில், சிந்தனையில், அதாவது வணிக உலகைச் சார்ந்த ஒன்றாக, தொழில் சார்ந்த ஒன்றாக, ஆகவே அதிக பட்ச மக்களைச் சென்றடைய அவர்களுக்குப் பிடித்த அதமப் பொதுவான ரசனையை வளர்ப்பதாக அந்தப் பாதையில் அது தவிர வேறு சிந்தனை எதையும் அனுமதிக்காத வளர்ந்து பெருகி, அதிலேயே நாமும் ஊறித் திளைத்து வருவதன் காரணமாக வேறு எந்தச் சிந்தனைக்கும் இடம் தராத ,மனக் கட்டமைப்பில் இருந்து வருகிறோம். அத்தோடு அதற்கு கௌரவமும் அரசியல் பாதுகாப்பும் பெற்றுத் தந்துள்ளோம். அதிக மக்களின் அதமப் பொது ரசனைக்குத் தீனி போடுவது மக்களுக்கான கலையை வளர்ப்பது என்றும் பலத்த கோஷத்தோடு சொல்லிக்கொள்கிறோம்.


எம்.ஜி.ஆரும் மற்றோரும் சினிமாவுக்கு வந்த காலத்தில் அவர்கள் சினிமாவில் தம் ஈடுபாட்டை தொழில் என்றே கூறி வந்தனர். ஆனால் இப்போது எந்த ஆபாசக் குத்தாட்டம் போடும் துணை நடிகையும் தன் ஈடுபாட்டைக் கலை என்று தான் சொல்லிக்கொள்கிறாள். அவள் மட்டுமல்ல பத்திரிகைகளும் டைரக்டரிலிருந்து தொடங்கிக் குத்தாட்டத் துணை நடிகை வரை எல்லோரும் கலைஞர்களாகத் தான் பேசப்படுகிறார்கள். திரைப்படக் கலைஞர்கள் என்று தான் அவர்கள் தம் சங்கத்துக்குப் பெயரிட்டுக்கொள்கிறார்கள்.  இந்தக் கள்ளுண்ட மயக்கம் தரும் சிந்தனையை விட்டு அவர்கள் வெளியே ஏன் வரவேண்டும்? பணமும் கௌரவமும் கொடுக்கும் மலினமான ஒரு ஈடுபாட்டைக் கலை என்று கௌரவித்து உலகம் போற்றும் போது அதை இந்நாளைய ரெக்கார்ட் டான்ஸ் என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்.? 50 வருட காலமாக இத் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ள அந்த ஈடுபாட்டில் கலைஞர் பட்டத்தையும் பெற்றுள்ளவரின் அரசும் இவர்களுக்குக் கலைமாமணி என்று விருதும் கொடுத்து கௌரவிக்கத் தயாராக இருந்தால், இவர்களுக்கு அதில் என்ன ஆட்சேபமோ குறையோ இருக்க முடியும்?


சாதாரண மக்களை விட்டு விடுங்கள். அவர்களைப் பற்றியும் நான் அறிந்ததை, பார்த்ததை, இப்போது இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கொள்வதைச் சொன்னால் எத்தனை பேருக்கு அதை எதிர்கொள்ள மனமிருக்கும்? மூன்று வயது பிராயத்தில் ஒரு டூரிங் சினிமா கொட்டகை எங்கள் வீட்டுக்கு எதிரே குறுக்கிடும் ரோடைத் தாண்டினால் இருந்தது .எங்கள் வீட்டுத் திண்ணயில் இரும்புக் கிராதிக்குள்ளிருந்து இரவு நேரம் பூராவும் விழித்திருக்கும் வரை சினிமாப் பாட்டுக்களையும் உரையாடல்களையும் கேட்கலாம். சினிமா பார்த்த அனுபவம் கிட்டும். சினிமா பார்த்து விட்டுத் தம் கிராமத்துக்கு வண்டியோட்டிச் செல்பவர்கள். சந்தை வியாபாரிகள் தாங்கள் கேட்ட சினிமா பாட்டுக்களைப் பாடியவாறே வண்டி ஓட்டிச் செல்வார்கள். அவர்கள் தம் ஆனந்தத்துக்கு தமக்குத் தெரிந்த குரலில் பாடுவார்கள். என்னவாக இருந்தால் என்ன? இரவு நேரம் கிராமம் போய்ச் சேரும் வரை சுகமாகக் கழியும். அவர்கள் பாட்டை அவர்களே ஆனந்தித்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் பாடும் பாட்டுக்கள் என்ன தெரியுமா? சிவ கவியில், அஷோக் குமாரில் தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்கள். ”அப்பனைப் பாடும் வாயால் பழனியாண்டி சுப்பனைப்பாடு வேனோ….?”சின்னப்பா பாடிய பாடல்கள். “மானமெல்லாம் போன பின்பே வாழ்வதும் ஓர் வாழ்வா?” கோவலன் படத்தில் பாடியது. சினிமாவின் பாடல்கள் அத்தகைய ரசனையை ஏதும் அறியாத பாமரனின் மனத்தில் விதைத்தது. வளர்த்தது. என்னமோ மக்களுக்காகப் படம் எடுப்பதாகச் சொல்லும் சினிமாவுக்கு வந்துவிட்ட வணிகப் பெருமக்கள் சொல்வதன் பொய்மை அவர்களின் மூத்த தலைமுறைக்குத் தெரியும். அவர்கள் பணம் பண்ண வந்தவர்கள். மக்கள் தம் அதமப் பொது ரசனைக்கு எதைக் கொடுக்கிறார்களோ அதை விழுங்கி ரசிக்க, பழக்கப்படுத்தப் பட்டுள்ள சாதாரண மக்களை விட்டு விடலாம்.


ஆனால் உலகத்தின் தரமான சினிமாக்களையெல்லாம் ரசிப்பவர்களாக, அவற்றின் இன்ஸ்பைரேஷனில் தமிழ் மக்களுக்கு அவற்றை அளிப்பவர்களாகச் சொல்லிக்கொள்ளும் சினிமாப் பெருந்தலைகளை என்ன சொல்வது? இங்கு உள்ள இளம் தலைமுறையினர் படித்த விவரம் தெரிந்திருக்க வேண்டியவர்கள், சினிமாத் தலைகளின் வேஷதாரித்தனப் பேச்சின் உள்ளர்த்தங்களைத் தெரிந்திருக்க வேண்டியவர்களும் சினிமா மக்கள் கலையாக்கும், வியாபாரமாக்கும், பெரும் முதலீடுகளை வேண்டுவதாக்கும், போட்ட பணம் எடுக்க வேணுமாக்கும், மக்களின் சொட்டும் வியர்வையைக் காயவைக்கணுமாக்கும் என்று திரும்பத் திரும்பச் சொல்வது, வணிகப் பெருந்தலைகளும், கலைஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வேஷதாரிகளும் இயக்குவிக்க ஆடும் பேசும் பாவைகளாகத் தானே பேசுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு சுய சிந்தனையோ வாழ்வோ இருப்பதாகத் தெரியவில்லையே.


ஆக எனக்கோ அல்லது தமிழகத்தின் ஆபாசமும் பாமரத்தனமும் கொண்ட சூழலுக்கு இரையாகாத யாரும் என்ன சொன்னாலும் இந்தச் சூழலில் மூழ்கி சுகம் கண்டவர்களுக்கும், அவ்வாறு மூழ்கடிப்பதில் தம் புகழும் பணமும் கண்டு சுகம் காணுபவர்களுக்கும் இதை மாற்றுவதில் எந்த அக்கறையும் இருக்க முடியாது. இருக்கும் சுகத்தை, அனுபவிக்கும் சுகத்தை விட்டு விட்டுத் தெரியாத ஒன்றுக்கு யாரும் ஆசைப்படுவார்களா? கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன், ”கட்டமரத் துடுப்புபோல இடுப்பை ஆட்டுறா”, இல்லை, என்னமோ விக்ரம் ஒரு பாட்டு பாடுவாரே, ரோட் பூராவும் பெயிண்ட் அடித்து அதில் வித விதாமான அலங்காரத்தில் அணி வரும் லாரிகளோடு, ‘என்னமோ ”அண்டங்காக்கா கொண்டைக்காரி, , என்று, சரி இதெல்லாம் இல்லாத இது போன்ற பாட்டுக்கள், ஆட்டங்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான சினிமா என்று வந்துவிட்டால் என்ன ஆகும், ஒரே போரடிக்கும் இல்லையா?. அந்த பயங்கரத்தை நமீதா, திரிஷா, மும்தாஜ் யாரும் இல்லாத பயங்கரத்தை, போரை இதற்குப் பாட்டெழுதும் கவிஞர்கள், இசை அமைக்கும், இசைஅமைப்பாளர்கள், பின்னணி தரும் வாத்தியக் காரர்கள் இவற்றையே நம்பி திரை உலகத்துக்கு வரும் நடிகர்கள், இதை நம்பிப் பணம் போடும் வினியோகஸ்தர்கள், இயக்குனர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? பாவம் தவித்துப் போய்விட மாட்டார்களா?


இவர்கள் சிந்தனையும் மனமும் இதைவிட்டு விலகக் கட்டாயம் மறுக்கும். அவர்கள் மட்டுமல்ல இவர்களது அன்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமான200 /300 ரூபாய்களோடு க்யூவில் நிற்கும் ரசிகப் பெருமக்களூம் தான். வேறு எதுவும் சிந்தித்துப் பழக்கம் இல்லை இவர்களுக்கு.


ஒரு கதை ஒன்று சொல்வார்கள். புராணங்களிலிருந்து. ஒரு ரிஷியோ இல்லை மன்னனோ ஏதோ சகிக்கவொண்ணாத பாப காரியத்தைச் செய்து, சாபத்துக்கு ஆளாகிறார். “ பன்றி மாதிரி என்னிடம் நடந்து கொண்டாய். நீ பன்றியாகக் கடவது? என்று சாபத்தைக் கேட்ட பின் தானே தன் தவறு தெரியும், ரிஷியானாலும், மன்னனாலும். தேர்தல் சமயத்தில் அரசுக்கு வரும் ஞானோதயம் போல, உடனே ரிஷியும் தன் தவற்றை அறிந்து உடல் நடுங்க, ”:என்னிடம் இரக்கம் கொண்டு இந்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று இறைஞ்சிக் கேட்க, கடவுளும் தண்டனை ரொம்பத் தான் அதிகமாய்ப் போய்விட்டது போலிருக்கே என்ற செகண்ட் தாட்டில், “சரி உன் குற்றத்துக்கு சாபத்தை அனுபவித்தே ஆகவேண்டும். நானும் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற்றுககொள்ள முடியாது. நீ ஒரு வருஷ காலமாவது பன்றியாகச் சேற்றிலும் சகதியிலும் உழல்வாயாக. பின்னர் நானே திரும்ப வந்து உனக்கு சாபவிமோசனம் தருகிறேன். திரும்ப நீ ரிஷியாகலாம்” என்று அவனுக்கு அருள் பாலித்தாராம். ரிஷியும் உடனே பண்றியாக மாறி சேற்றில் விழுந்து புரள ஆரம்பித்தாராம். பன்றிக்குட்டிகளும் பெண் பன்றிகளும் சூழ. அதுவும் சுகமாகத்தான் இருந்திருக்கிறது. அட இது தெரியாமப்போச்சே என்று நினைத்துக் கொண்டாராம். ஒரு வருஷம் கழித்து கடவுள் திரும்பப் பன்றியாக உழலும் ரிஷி முன் தோன்றி, “உன் சாப காலம் முடிந்தது. திரும்ப ரிஷியாக மாறுவாயாக, என்று சொல்லி முடிக்கும் முன் அந்த ரிஷிப் பன்றி சேற்றில் புரண்ட வாறே சொன்னதாம். “பகவானே, இதுவே எனக்கு சுகம் தருவதாக இருக்கிறது இது தண்டனை அல்ல. நீங்கள் வரமருளிய சொர்க்க வாசமாக எனக்குத் தோன்றுகிறது. இதை விட்டு வர மனமில்லை எனக்கு. யார் ரிஷியாகக் காடும் மலையும் அலைந்து பட்டினி கிடந்து தவம் இயற்றிக் கடைசியில் சாபத்துக்கு என்றும் பயந்து கொண்டு வாழ்வது?. அந்த வாழ்க்கையும் வேண்டாம். சாப விமோசனமும் வேண்டாம். எனக்கு இந்த சொர்க்கமே மிகுந்த காலத்துக்கும் நீடிக்கட்டும் என்று வரம் தாருங்கள்”. என்று வேண்டிக்கொண்டதாம். கடவுளும் ஒரு ஏளனச் சிரிப்போடு, “அப்படியே ஆகட்டும், பக்தனே” என்று வரம் அருளிப் பின் தன் மற்ற வேலைகளைப் பார்க்கப் போனாராம்.


iஇந்தக் கதையின் சமகால, நம் வாழும் கால, தமிழகப் புதிய பதிப்பும் உண்டு. அது நம் எல்லோருக்கும் தேரிந்ததே. தெரிந்தது தான் என்பதை நான் சொன்னபிறகு தான் புலப்படும். அது பின்னர். {இதில் அந்தக் கால கல்கி தொடர்கதையின் சுவாரஸ்யமும் சஸ்பென்ஸும் இருக்கிறதல்லவா?

--Ksubashini 09:20, 30 டிசம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini, Geetha Sambasivam மற்றும் Na.Kannan