நினைவுகளின் சுவட்டில் - 025மரபு விக்கி இருந்துNa.Kannan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:57, 14 ஜூலை 2012 அன்றிருந்தவாரான திருத்தம் நினைவுகளின் தடத்தில் - (25) வெங்கட் சாமிநாதன்
தாழ்வாரத்தை ஒட்டிய கூடத்தில் ஹரிகேன் விளக்கின் மங்கிய மஞ்சள் ஒளியில் நடந்த அந்த மகா நாட்டில், "கஷ்டமா இருக்கற பாடத்துக்கு ஒரு முழுக்கு போட்டுட்டு வேறே பாடம் எடுத்துக்கறது, இஷ்ட பாடங்கள் தான் நிறைய இருக்கே, என்னத்துக்கு வேண்டாததக் கட்டிண்டு அழணும்?" என்ற தீர்மானம் நிறைவேறியது. மறு நாளே வேறே என்ன எடுத்துக்கலாம் என்று நானே யோசித்து, ஒரு வேளை வேலை தேடி வடக்கே போவதென்றால் உபயோகமாக இருக்கும் என்று, பாகவதர் கிராப் வைத்துக்கொண்டிருந்த ஹிந்தி பண்டிட் வகுப்பில் சேர்ந்தேன். அப்படி ஒன்றும் ஹிந்தியையும் ஒழுங்காகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. ஹிந்தி வகுப்பில் என்னையும் சேர்த்து மூன்று பையன்கள், ஆறு பெண்கள். ஏதோ எம்ப்ராய்டரி, தையல் க்ளாஸ் போல இந்த ஹிந்தி வகுப்பிற்கும் அந்த மரியாதை தான் என்று தோன்றிற்று.
எனக்கு சிரமம் கொடுக்கத் தொடங்கிய இன்னொரு பாடமும் உண்டு. அது நம் தேனினும் இனிய தமிழ் தான்.. அந்த ஆண்டு தமிழ்ப் பாடங்கள் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே, தமிழ் வாத்தியார் எடுத்த பாடங்கள் என்னை பயமுறுத்துவனவாக இருந்தன. என்னென்னமோ தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். தமிழ் வகுப்பில் காய்கள் எங்கிருந்து வந்தன என்று நான் திகைத்துப் போனேன். எப்படிடா இங்கே படித்துத் தேறப்போகிறேன், எதைத் தொட்டாலும் அது பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்து விடுகிறதே, தமிழ் எப்படி இவ்வளவு சிரமப்படுத்தும் ஒன்றாகியது என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதில் ஒரு நன்மையும் இருந்தது. தமிழ் வகுப்பில் தான் எனக்கு மிக ஆப்தமான நண்பனும் கிடைத்தான். ஆர். ஷண்முகம் என்று பெயர். வகுப்பிலேயே ஷண்முகம் தான் உயரமானவன். வயதிலும் மூத்த ஒரு தோற்றமும் உண்டு. வித்தியாசமான உடையும் அணிந்து வந்தவன். எல்லாரும் சட்டையுடன் காற்சட்டையோ வேட்டியோ அணிந்து வந்தால், ஷண்முகம் ஜிப்பாவும் வேஷ்டியும் பாகவதர் க்ராப்புமாகத் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்தும் தோற்றமுடையவன். எப்படியோ எனக்கும் அவனுக்கும் அத்யந்த சினேகம் உண்டாகிவிட்டது. என்னை பிரமிக்க வைத்த இன்னொரு காரணம், தேமா புளிமா என்னை பயமுறுத்திய மறு நாளே, "என்ன சாமிநாதன், இதையெல்லாம் நான் படிக்கவே வேண்டாம். எனக்குத் தெரியாத தேமாவும் புளிமாவுமா? ரொம்ப நாளாவே நான் இதில் தான் மூழ்கி நீந்திக்கொண்டிருக்கேன்" என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'படிக்கவே வேண்டாம் என்கிறான், ரொம்ப நாளா அதிலேயே உழண்டுண்டிருக்கானாமே" என்று திகைத்தேன். சும்மா அளக்கறான், பெரிய மனுஷனா என்கிட்டே காட்டிக்கறான் என்றே நினைத்தேன். திடீரென்று ஒரு நாள் அவன் ஒரு பத்திரிகையின் அச்சடித்த நான்கு பக்கங்களை என்னிடம் காட்டினான். "இதைப் பார்" என்று. அது கும்பகோணத்திலிருந்து வெளியாகும் "காவேரி" என்ற பத்திரிகையில் வெளியாகியிருந்த ஷண்முகம் எழுதிய கட்டுரை. அதில் அவன் எழுதிய கவிதைகளும் இருந்தன." நான் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனேன். "இது பழைய பத்திரிகை. எந்த மாசத்தது பாத்தியா? நான் எழுதியது என் கிட்டவே இல்லை. பெரிய தெருவிலே நான் சாமான் வாங்கறப்போ இதை எனக்குப் பொட்டணம் கட்டிக்கொடுத்தான். அது நான் எழுதியதா இருந்ததா, "இது நான் எழுதினதுங்க"ன்னு சொல்லி, "கட்டுரையின் மற்ற தாட்களையும் கொடுன்னு அவனைக் கேட்டு வாங்கி வந்தேன்". என்றான்.
எனக்கு கும்பகோணம் பாணாதுரைப் பள்ளியில் கிடைத்த அரிய, ஒரே நண்பன் ஷண்முகம். அவனுக்கும் என்னைப் பிடித்துப் போயிற்று. என்னிடம் அவன் என்ன கண்டான் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நாட்களில் எனக்கு ஷண்முகம் தான் ஹீரோ மாதிரி. என்ன காரணத்தாலோ தமிழ் வாத்தியார் தேமாங்காய் புளிமாங்காயை இரண்டொரு நாட்களிலேயே விட்டு விட்டார். அதெல்லாம் பெரிய வகுப்புகளுக்கு நடத்த வேண்டிய சமாச்சாரம் என்றோ என்னவோ தெரியாது. ஆனால் தேமாங்காயும் புளிமாங்காயும் போனாலும் அது எனக்குத் தந்த சண்முகம் என்ற நண்பன், நான் வேலை தேடி ஒரிஸ்ஸாவுக்குப் போன பிறகும் என்னை விட்டுப் போகவில்லை. அதற்கும் முன், முதல் வடநாட்டுப் பயணமாக ஜெம்ஷெட்பூருக்குப் போக கும்பகோணம் ரயில் நிலையத்தில் நான் காத்திருந்த போது யாரைப் பார்த்தேன்? ஷண்முகத்தைத் தான். 1948-ம் வருடம் ஜூலை மாதம் 27 அல்லது 28 தேதியாக இருக்கவேண்டும் அன்று. பின்னர் நான் ஒரிஸ்ஸாவில் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். எங்கள் தொடர்பு விட்டுப் போகவில்லை. ஷண்முகம் சிதம்பரத்திற்குப் பக்கத்தில் கிள்ளை என்று தான் நினைவு, அங்கு தொடங்கப்பட்ட காந்தி ஆஸ்ரமத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். நான் விடுமுறையில் ஒரு முறை தெற்கே வந்த போது, நான் கிள்ளை போய் ஷண்முகத்தைச் சந்தித்தேன். அதன் பிறகு எப்படியோ தொடர்பு விட்டுப் போயிற்று. அந்நாட்களில் சண்முகம் எனக்கு எழுதிய கடிதங்கள் செய்யுள் வடிவிலேயே இருக்கும். அந்த சிறு வயதிலேயே வெகு லாகவமாக, செய்யுள் இயற்றும் திறமை வாய்த்திருந்த சண்முகம் கவிஞனாக மலர்ந்தானா, இல்லை தமிழ் வாத்தியாராகி தேமா புளிமா சொல்லிக்கொடுக்கத்தான் விதி என்றாகியதா என்பது தெரியவில்லை. ஷண்முகத்திற்கு சொந்தம் மாயவரம் பக்கத்தில் மணல் மேடு என்ற ஊர். அந்த நாட்களில் ஒரு நாள் மணல் மேடு போகவேண்டும் ஷண்முகத்தைப் பார்க்க வேண்டும், இல்லை, அவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் அது நடக்கவில்லை.
படித்துக் கொண்டிருந்த போது ஷண்முகம் தங்கியிருந்தது காவிரி தாண்டி மேலக்காவேரியைக் கடந்து சுவாமி மலை பாபுராஜபுரம் போகும் சாலையில் மேலக்காவேரிக்கு அடுத்து இருக்கும் கொட்டையூர் என்ற கிராமத்தில். நான் ஒரு முறை அவன் கொட்டையூர் வீட்டுக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்கி வந்தேன். என்ன புத்தகம்! அடால்ப் ஹிட்லரின் சுய சரிதம் "எனது போராட்டம்" (Mein Kemph) தமிழ் மொழிபெயர்ப்பில். சுமார் 500 பக்கங்கள் கொண்ட தடி புத்தகம்.
பாடபுத்தகங்களை விட இவற்றில் தான் எனக்கு மிகுந்த ருசி இருந்தது. அதற்கு ஏற்றாற் போல, ஒரு நாள் தலைமை ஆசிரியர் வகுப்பில் எல்லோருக்கும் சொன்னார், 'நீங்கள் எல்லாம் பாட புஸ்தகமே கதீன்னு இருக்கப்படாது. லைப்ரரீலேருந்தும் வெளி புஸ்தகங்களைப் படிக்கணும். நான் லைப்ரரேரியன் கிட்டே சொல்லிருக்கேன். அவர் புஸ்தகம் கொடுப்பார். படித்து ஒழுங்கா கிழிக்காம திருப்பிக் கொடுக்கணும்" என்று சொன்னார். உடனே இடைவேளையில் நாங்கள் நாலைந்து பேர் லைப்ரேரியனிடம் ஒடினோம். "கதைப் புஸ்தகமெல்லாம் கொடுக்க மாட்டேன். இலக்கிய புஸ்தகம் தான் கொடுக்கச் சொல்லிருக்கார் ஹெட்மாஸ்டர்" என்றார் அவர். அந்தக் காலத்தில் மட்டுமல்ல, ரொம்ப காலத்துக்கு இலக்கிய என்றால், புறநானூற்றுச் சொற்பொழிவுகள், கம்பர் தரும் காட்சி போன்றவை தான் இலக்கியம் என்று சொல்லப்பட்டது. இலக்கியப் புகழ் வாய்ந்த கலைமகள் பிரசுரப் பட்டியலில் கூட, சிறுகதை, நாவல், வரலாறு என்ற தலைப்புகளைத் தாண்டி இலக்கியம் என்ற தலைப்புக்கு வந்தால், கி.வா.ஜ., பி.ஸ்ரீ., டி.கே. சிதம்பர நாத முதலியார், போன்றோரின் கம்ப ராமாயண, சங்க இலக்கிய சொற்பொழிவுகள், விளக்கக் கட்டுரைகள் தான் காணப்படும். ஒரு வேளை இன்றும் கூட அந்த நிலைதானோ என்னவோ.
அந்த அறிவிப்பினால் எனக்கு ஒன்றும் பாதகம் ஏற்படவில்லை. எனக்குப் பிடித்தமான புத்தகங்கள் கிடைத்தன தான். இப்போது நினைவிலிருக்கும் புத்தகங்கள், எங்கள் பாணாதுரைப் பள்ளி லைப்ரரியிலிருந்து எடுத்துப் படித்தவை என்று சொல்லப்போனால், சுபாஷ் சந்திர போசின் 'இளைஞன் கனவு" (இதன் ஆங்கிலத் தலைப்பு என்னவென்று தெரியாது), வ.ரா. எழுதிய "தமிழ் நாட்டுப் பெரியார்கள்", ஜவஹர் லால் நேரு அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய அரசியல் நிர்ணய சபை என்னும் தொகுப்பு, வெ.சாமிநாத சர்மாவின் புத்தகங்களில் நினைவிலிருப்பது, முஸ்தபா கெமால் பாஷா, யோகி சுத்தானந்த பாரதியின் புத்தகங்கள் என்பன உடனே நினைவுக்கு வருபவை. இன்னும் சிரமப்பட்டு யோசித்தால் இன்னம் நாலைந்து நினைவுக்கு வரலாம். ஆனால் இந்த திட்டம் வெகு சீக்கிரம் கைவிடப்பட்டது, ஏனோ தெரியாது. ஆனால், சண்முகத்திடமிருந்து எனக்குப் புத்தகங்கள் கிடைத்து வந்தன. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், எனக்கு என் பள்ளி நாட்களிலேயே சிதம்பர ரகுநாதனைத் தெரியுமென்றால், அதற்குக் காரணம் ஷண்முகம் தான். நான் படித்த முதல் புத்தகம் சிதம்பர ரகுதானின் "ஓர் இரவு". அப்போது அது தடைப்படுத்தப்பட்ட புத்தகம். ஆபாசமான புத்தகம் எழுதிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறை வாசம் கூட இருந்தார் என்று பத்திரிகைகளில் அப்போதோ அல்லது பின்னரோ படித்தேன். பாஸ்கரத் தொண்டைமான், "இவன் என் தம்பியே இல்லை" என்று கோபத்துடன் சொன்னதாகவும் செய்தி படித்தேன். அப்போது பாஸ்கரத் தொண்டைமானை எனக்குத் தெரியாது. சிதம்பர ரகுநாதனின் அண்ணன் என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன். வெங்கட் சாமிநாதன்/29.7.08
|