சோழர் காலத்திய சமயம்-- பகுதி 1

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:01, 24 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 சோழர் காலச் சமயம்


எழுத்து: டாக்டர் பத்மா


கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவின் ஒரு பகுதியை ஆண்டவன் பல்லவ மன்னன் திரிலோசன பல்லவன். இவன் சமணர்களை அழித்தான். வேதமல்லாச் சடங்குகளை நீக்கிவிட்டு வேதச் சடங்குகளையே கடைப்பிடித்தான். கோயில்களில் வழிபாடு செய்து கொண்டிருந்த பிராமணர் அல்லாதவரை நீக்கிவிட்டு வட நாட்டிலிருந்து அழைத்து வந்த பிராமணர்களை நியமித்தான்.*1 இந்த வடநாட்டு பிராமணர் என்பவர்கள் காளாமுக, பாசுபத, காபாலிக சைவத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் பரவிய இம்மதங்கள் அங்கு இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அச்சைவம் தமிழகத்தில் நுழைந்தது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அப்பர் பாடல்களில் நாகப்பட்டினம் கோயிலை நாகைக் காரோகணம் என்று பாடுகிறார்.*2 இவரது காலம் மகேந்திர வர்மனின் காலம். அதாவது கி.பி. 600--630 ஆகும். திரிலோசன பல்லவன் கல்வெட்டுகள் ஆந்திராவில் கி.பி. 470 முதல் 490 வரை கிடைத்துள்ளன*3 எனவே. திரிலோசன பல்லவன் காலத்திற்குப் பின்னரும் மகேந்திர வர்மன் காலத்திற்கு முன்னரும் சற்றேறக் குறைய கி.பி. 500 முதல் 600-க்குள் வடநாட்டு சைவம் தமிழகத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.


அப்பர் நாகப்பட்டினத்தை நாகைக் காரோகணம் என்றும் குடந்தைக் காரோகணம் என்றும் கச்சிக் காரோகணம் என்றும் பாடியுள்ளார். வட நாட்டில் காரோகணம் என்ற இடத்தில் பிறந்த லகுளீசரின் சித்தாந்தத்தைப் பின்பற்றும் மதம் பாசுபதம். இந்த லகுளீசர் பிறந்த இடமான காரோகணம் ஒரு தலையாய பாசுபதர்களின் மையமாகத் திகழ்ந்தது. எனவே மேற்கூறிய தமிழ்நாட்டுக் காரோகணங்கள் லகுளீச சித்தாந்தத்தைப் பின்பற்றும் பாசுபத சைவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அப்பர் தம் திருவாரூர்ப் பதிகத்தில் பாசுபத, காளாமுக, காபாலிகர் உலவும் திருவாரூர் வீதியைப் பாடுகிறார். அவரது சமகால மகேந்திரவர்மனும் காபாலிகர்களையும் பெளத்தர்களையும் தமது மத்த விலாச பிரகடனம் என்ற நூலில் கேலி செய்து எழுதியுள்ளார்.


சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து சமண மதத்தைத் தழுவிப் பின்னர் தீவிர சைவ சமயத்தவராக மாறிய அப்பர் தாம் தழுவியிருந்த சமண மதத்தைக் கடுமையாகத் தாக்குகின்றார்.*4 சம்பந்தரும் அவ்வாறே தாக்கியிருக்கின்றார். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுகின்ற போது தீவிரமாவது மனித இயல்பு. அதுபோல வயதில் மூத்த அப்பர் மிகவும் தீவிர பக்தராக மாறுகிறார். சமண பெளத்த பாழிகள் இடிக்கப் பட்டிருக்கின்றன. சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. *5 அப்பரின் பாடல்கள் காபாலிக சைவர்களின் சிவ உருவ வழிபாடுகளும், சிவன் கபாலத்தை கையிலேந்தியவனாக, கால காலனாக, பைரவனாக, பிக்‌ஷாடனராக, மேனியெங்கும் திருநீறு பூசியவனாகக் கூறுவதிலிருந்து தீவிர சைவர்களான காபாலிகர்களின் சைவ சமயத் தாக்கம் அப்பரிடம் அதிகமிருந்திருக்கிறது. மனித உயிர்பலி செய்யும் காபாலிகத்தைப் பின் பற்றியதால் தான் மதுரை, திருவோத்தூர் போன்ற இடங்களில் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்லப் பட்டனரோ என எண்ண வேண்டியுள்ளது. *6


இவ்வாறு நாயன்மார், ஆழ்வார்கள் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சமண, பெளத்தர்களின் ஆதிக்கம் பொருளாதாரத்திலும், கல்வி, மருத்துவ, சமூக சேவைகளிலும் கட்டாயமாகப் பறிக்கப் பட்டது. அதற்கு மாற்றாக சைவ வைணவ மதங்கள் மக்கள் மத்தியில் முன் வைக்கப் பட்டு அவ்விடங்களை நிரப்ப முயற்சி செய்தன. முடிவில் வெற்றியும் பெற்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு சைவ சமய மறுமலர்ச்சியில் வேளாளரான அப்பரும் பிராமணரான சம்பந்தரும்,பங்கு பெற்றிருந்தனர். இவர்களுக்குப் பின்னர் வந்த பிராமணராகிய சுந்தரரும், எனவே. வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின் பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம். சமணர்களின் செல்வாக்கும் செல்வமும் வணிகர்களின் வியாபார ரீதியில் அமைந்தது.வணிகர்கள் ஆதரித்த மதம் சமண மதம். சமண முனிவர்கள் நல்லவர்களாக இருந்தும் சமூகத் தொண்டுகள் பல செய்தும் நீர்ப் பாசனத்திற்கு வேண்டிய குளம், தூம்பு, போன்றவை செய்து கொடுத்தும் நல்ல மனத்தவர்களாக இருந்திருந்தும், விவசாயத்தை முன்னிலைப் படுத்தித் தங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்த்தார்களில்லை. தமிழ்நாடோ ஒரு சிறந்த முழு விவசாய நாடு. விவசாய வளர்ச்சியில் தான் உழுகுடி மக்களின், பிற தொழிலாளிகளின் வாழ்வும் உயர்வும் அடங்கியிருந்தது. எனவே சமண மதத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து--விவசாய நாடாக நிலவுடமைச் சமுதாயமாக அச்சமுதாயத்தின் கருவூலமாகக் கோவில்களை அமைத்து மக்களின் அன்றாட வாழ்வில் கோயிலோடு அதாவது சைவ மதத்தோடு தொடர்பு படுத்தியதாகவும் அமைக்கப் பட்ட அரசமைப்பே பிற்காலச் சோழ வரலாற்றின் சாராம்சமாகும்.விவசாயத்தைப் பெருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன என்பதை நோக்கினால் மிகவும் பிரமிப்பாக இருக்கும். நீர்ப்பாசனத்திற்கு அவர்கள் செய்த செயல்களைக் கல்வெட்டுக்களில் படிக்கும்போது பெரு வியப்பை ஏற்படுத்தும்.


பிற்காலச் சோழராட்சியில், கி.பி. 9--ஆம் நூற்றாண்டில் அந்தணர்களும், வேளாளர்களும் மிக உயர்ந்த பதவியை வகித்தனர் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கி.பி. 6--ஆம் நூற்றாண்டில் அவர்கள் நடத்திய போராட்டத்தின் பலனை 9-ஆம் நூற்றாண்டில் மிக நன்றாகவே அனுபவித்தார்கள்.அமைச்சர்களாகவும் பிரமதேய சதுர்வேதி மங்கலங்களின் சபை நிர்வாகிகளாகவும் படைத் தளபதிகளாகவும் கோயில் அதிகாரிகளாகவும் நீதி வழங்குபவர்களாகவும் முக்கிய பதவிகளில் அமர்ந்திருந்த அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர்.அவர்கள் சைவக் கோயில்களுக்குத் தங்கள் செல்வத்தின் காரணமாக ஏராளமான பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினர். செப்புத் திருமேனிகளை எழுந்தருளிவித்தனர். ஏன் கோயில் பலவும் கட்டியிருக்கின்றனர். நல்ல வளமிக்க ஊர்கள் பிரமதாயமாகவும் சதுர்வேதி மங்கலங்களாகவும் அந்தணர்களுக்கு அளிக்கப் பட்டன.


இந்த இரு குலத்தவரும் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தாலும் கல்வி கேள்விகளிலும் நாட்டின் கருவூலங்களாக ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் கோயில்களின் கருவூலத்திலும், நிர்வாக அமைப்புக்களிலும் முதன்மை பெற்று விளங்கியவர்கள் அந்தணர்கள்.இறையிலியாக பிரமதேய சதுர்வேதி மங்கல நிலங்கள் வழங்கப் பட்டது அந்தணர்களுக்குத் தான். வளமிக்க அவ்வூர்களுக்கு சபை அதிகாரிகள் அல்லது அங்கத்தினர்கள் அவர்கள் தாம். இந்த அளவுக்கு வேளாளர்கள் செல்வாக்குப் பெற்றிருக்க வில்லை. அரசர்களிடம் அமைச்சர்களாகவும், மிகவும் குறைந்த அளவில் ஆங்காங்கே கி.பி. 11--ஆம் நூற்றாண்டின் சித்ரமேழி பெரிய நாடு என்னும் அமைப்பிலும் அவர்கள் அதிகாரிகளாக இருந்தார்களே தவிர, ஊர் நிர்வாகத்தில் அந்தணர்களைப்போல அதிகமான செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. முதலாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் அமணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமன் குடும்பத்தார் எந்த அளவுக்கு பரம்பரை பரம்பரையாக சோழர்களுக்கு அதிகாரிகளாக இருந்தார்கள் என்பதை திரு ஒய். சுப்பராயலு அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். *7


அந்தணர்களின் இந்த வளர்ச்சியும், செல்வாக்கும் நிலவுடமைச் சமுதாய வளர்ச்சியின் உச்சகட்டத்தை எய்திய முதலாம் இராஜராஜனின் செல்வாக்கிற்கு ஏற்றாற்போல அவன் காலத்தில் உயர்ந்திருந்தது. அந்தண சமூகத்தினரின் இந்த வளர்ச்சி ராஜராஜ சோழனின் போக்கையே திசை திருப்புமளவு காணப்பட்டது. ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளை ஊன்றிப் பார்க்கின்றபோது அவன் அந்தணர்களின் செல்வாக்கினைக் குறைக்க அவர்களே அறியாத வகையில் புத்திசாலித் தனமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றான். தந்தை சுந்தர சோழன் காலத்தில் பிரம்மாதிராயர்களாகிய அந்தண உயர் அதிகாரிகளால் தமையன் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட செய்தி அந்தணர்களின் ஆதிக்கத்தின் உச்ச கட்டமாக இருந்திருக்க வேண்டும். இத்தகைய காலகட்டத்தில் தான் ராஜராஜ சோழனின் சிந்தை வேறுவிதமாகச் செயல் பட்டது.


இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர், சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. இவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன் எடுத்த கோயில்களிலோ பாண்டிய நாட்டிலோ அகோர உருவங்கள் இல்லை. இக்கால கட்டங்களில் எடுத்த கோயில்களே நமக்குக் கிடக்கும் காலத்தால் முந்திய கோயிலும் உருவங்களுமாகும். அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான் சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.


அப்பர், சம்பந்தரின் இந்த நடவடிக்கைகள் ராஜராஜனைக் கவர்ந்திருக்கின்றன. அவனது மனப்போக்கு திசை திரும்பியது என்பதற்கான ஆதாரங்கள் பல. அவை;


1. ராஜராஜன் திருமுறைகளைத் தேடி எடுத்துத் தொகுக்கச் செய்தான். இதனால் ராஜராஜ சோழனுக்குத் தேவாரத் திருமுறைச் சுவடிகள் தில்லையில் இருக்கும் செய்தி முன்பே தெரிந்திருக்கிறது. புதிதாகக் கண்டு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. தெரிந்த செய்தியாக இருந்திருந்தும் ராஜராஜனுக்கு வரலாற்றுக்குத் தேவையான ஒரு சூழ்நிலை அப்போது தான் ஏற்பட்டது. நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு திருமுறைகளைத் தொகுக்கச் செய்ததின் மூலம் சைவ சமயத்தின் அடிப்படையில் மலர்ந்த காபாலிக பாசுபத காளாமுக மதங்களுக்குத் தமிழகத்தில் மீண்டும் புத்துணர்ச்சியைக் கொடுத்தான்.


2. மூவர் முதலிகளின் சிலைகளைக் கோயிலில் எடுக்கச் செய்தான். *8


3. மூவர் பாடிய பாடல்களுக்குத் தேவாரம் என்ற பெயர் சூட்டித் தான் வணங்குவதற்கென்றே தேவாரதேவர் என்ற சந்திரசேகரரைப் பிரதிஷ்டை செய்தான். *9


4. தான் கட்டிய பெரிய கோயிலில் வேதங்களை ஓதி வழிபாடு செய்யாது மூவரின் தேவாரங்களை ஓதி வழிபாடு செய்ய 48 ஓதுவார்களை நியமித்தான். *10


5. ராஜராஜ சோழன் காலம் முதல் அனைத்துக் கோயில்களிலும் தேவாரம் பாட ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. மூவர் முதலிகளின் சிலைகள் பிரதிஷ்டைச் செய்யும் வழக்கம் பரவியது.


6. பெரிய கோயிலைக் கட்டும்போது அவனுக்கு ராஜகுருவாக இருந்தவர் ஈசான சிவ பண்டிதர். தஞ்சைக் கோயிலின் கலசத்தை தானமளித்தவர். இவர் வடநாட்டைச் சேர்ந்தவர். இவரது தத்துவ ஆலோசனைப் படியே ராஜராஜ சோழன் தஞ்சைக் கோயிலை எடுத்திருத்தல் வேண்டும்.*11


7. பெரிய கோயிலுக்கு முன்பே ராஜராஜன் கட்டிய கோயில் நெல்லை மாவட்டம் திருவாலீஸ்வரத்திலுள்ள கோயிலாகும். இக்கோயிலைக் கட்டிய ராஜராஜன் இக்கோயில் கருவூலத்தை மூன்று கை மகா*12 சேனை என்னும் படையைக் காவல் காக்கும்படிச் செய்தான். இக்கோயில் கட்டிய ஊர் ராஜராஜ சதுர்வேதி மங்கலமாகும். இந்த ஊரில் உள்ள நிலங்கள் படிப்படியாக வெள்ளான் வகை நிலமாக மாற்றப் பட்டிருக்கிறது என்பதை இவனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களின் கல்வெட்டுக்களை ஆய்ந்தால் புரிந்து கொள்ளலாம்.*13 எனவே இம்முயற்சி ராஜராஜசோழன் காலத்திலேயே இப்பகுதியில் எடுக்கப் பட்டிருந்தது எனலாம். இக்கோயிலிலுள்ள சிற்பங்களை இக்கட்டுரையாசிரியர் ஆய்வு செய்தபோது, இவை காளாமுக பாசுபத சமயங்களின் அடிப்படையில் தத் புருஷம், அகோரம், வாமனம் ஆகிய தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. இக்கருத்துக்கு உதவுவது போல் இவ்வூரில் ராஜராஜ சோழனால் கோளகி மடம் என்றொரு மடம் நிறுவப் பட்ட செய்தியும் இவ்வூர்க் கல்வெட்டில் காணப்படுகின்றது. அப்பர் தம் தேவாரப் பதிகமொன்றில்,

"பாசுபதம் பார்த்தர்க்கு அளித்தார் போலும்"*14

எனப் பாடியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.


8. ராஜராஜ சோழன் காலம் முதல்தான் வட நாட்டு சைவர்கள் ராஜகுருக்களாக இருந்தனர். அதற்கு முன் இல்லை என்கிறார். கே. கே.பிள்ளை.*15


9. K.R. சேதுராமன் என்பவர் தஞ்சைப் பெரிய கோயிலைத் தென்னாட்டு சோமநாதபுரம் என்கிறார்.*16 கர்நாடக நாட்டிலுள்ள சோமநாதபுரக் கோயில் காளாமுக பாசுபதர்களின் மையம் என்பது யாவரும் அறிந்த செய்தியாகும்.


10. வைதீக சமயத்தின் செல்வாக்கைக்குறைக்க, காளாமுக, பாசுபத, காபாலிகத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்த இராஜராஜன் வைதீகர்களின் எதிரிமதங்களாகிய சமண, பெளத்த மதத்திற்கும் ஏராளமான நன்கொடைகள் அளித்து ஆதரித்தான். அவன் கட்டிய பெரிய கோயிலில் சமணச் சிற்பமும், பெளத்தச் சிற்பமும் மிகச் சிறிதாக இடம் பெற்றிருக்கின்றன.


11. நாகப்பட்டினத்தில் கடாரத்து அரசனால் எடுக்கப்ப்பட்ட பெளத்த விகாரத்திற்கு ஆனை மங்கலம் என்ற ஊரையே தானமளித்தான். தன் ஆட்சியில் தமக்கை குந்தவையாரைக் கொண்டு திருமலையிலும் அச்சிறுபாக்கம் அருகே ராஜராஜபுரம் என்ற ஊரிலும் சமணக் கோயிலை எடுக்கச் செய்து மகிழ்ந்தான்.


12. அந்தணர்களின் செல்வாக்கைக் குறைக்க, அவர்கள் உணராத வண்ணம் மிக புத்திசாலித்தனமாக ராஜராஜன் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகத் தான் இவனுக்குப் பிற்காலத்தில் அந்தணர்களின் ஆதிக்கம் குறைந்து வேளாளர்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இக்கருத்து கல்வெட்டுக்களை ஆய்வு செய்கின்ற அறிஞர்களுக்கு உடன்பாடான ஒன்றேயாகும்.


13. ராஜராஜனைத் தொடர்ந்து மகன் ராஜேந்திரனுக்கு சர்வசிவ பண்டிதர் குருவாக இருந்ததோடு லகுளீச பண்டிதர் என்பவரும் குறிக்கப் படுகிறார்.*17 சென்னை திருவொற்றியூரிலுள்ள கற்கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப் பட்டது. இக்கோயில் காளாமுக, பாசுபத, காபாலிகர்களின் மையமாகச் செயல்பட்டது. இங்குள்ள லகுளீசர் உருவம் சிறப்பு வாய்ந்தது. இங்கு காபாலிகர்களது சித்தாந்தமாகிய சோமசித்தாந்தம் எடுத்துரைக்கப் பட்டதற்கு ஆதாரமாகக் கல்வெட்டுள்ளது.*18 எனவே இக்கோயிலில் பாசுபத, காளாமுகக் கடவுளான லகுளீசர் உருவமும், காபாலிகர் சித்தாந்தமும் காணப் படுவதால் கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில், தனித்தனியாகச் செயல்பட்டு வந்த அம்மதங்கள் ஒன்று கலந்திருந்தன என்பது தெரிய வருகிறது.


14. சோழர் காலத்தில் ராஜ ராஜ சோழன் காலத்திற்குப் பிறகு தான் மடங்கள் காணப்படுகின்றன. அதற்குப் பின்னர் ஏராளமான மடங்களைக் காணலாம்.ராஜராஜன் காலத்திற்கு முன் மடங்களைக் காண்பது அரிதாக உள்ளது.வடநாட்டிலிருந்து அதாவது வாரணாசி, கெளடதேசம், ராட தேசம்(ஒரிஸ்ஸா)மடங்களிலிருந்து தென்னகம் வந்த சைவ மதத்தினர் தமிழக்த்திலும் மடங்களை நிறுவி தம் மதங்களை வளர்த்தனர். மடங்களே மத நிர்வாக மையமாகவும் கல்விச் சாலைகளாகவும், அன்னதானச்சத்திரங்களாகவும் அதூல சாலைகளாகவும் இயங்கின. இத்தகைய மடங்கள் ராஜ ராஜன் காலத்திலும், அவனுக்குப் பின்னர் ஆட்சி புரிந்தோர் காலத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன.


மேற்கூறிய இக்காரணங்கள் மட்டுமல்ல ராஜராஜன் எடுத்த பெரிய கோயிலே காபாலிக, காளாமுக மதங்களின் அடிப்படையில் எடுத்த கோயிலாகவே தோன்றுகிறது.


கி.பி. 6-ஆம் நூற்றாண்டளவிலேயே தமிழகத்தில் காபாலிக, காளாமுகத் தாக்கம் அதிகமிருந்தது என்பதைக் கண்டோம். கி.பி.10 ஆம் நூற்றாண்டளவில் ஒன்றுக்கொன்று கலந்து விட்டன. ராஜராஜ சோழன் எடுத்த கோயிலையே இதற்கு உதாரணமாகக் காட்டலாம். பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு முகங்கள் உள்ளதாகத் தத்துவம். லிங்கத்திற்கு ஐந்து முகங்களை வைப்பதற்குப் பதிலாகக் கருவறையைச் சுற்றியுள்ள உள் பிரகாரத்தில் முழு உருவங்களாக அதே தத்துவ அடிப்படையில் சிற்பங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் இங்குள்ள சிற்பங்களையும் செப்புச் சிலைகளையும் காண்கின்றபோது இக்கோயிலில் பிக்ஷாடனர், பைரவ, க்ஷேத்ரபாலர், சிறுத் தொண்டர், சீராள தேவர் ஆகியோர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்யப் படவேண்டிய காரணமென்ன? பைரவர்--காபாலிகர்களின் கடவுள். பிள்ளைக்கறி சமைத்து இறைவனுக்குக் கொடுத்தவர் சிறுத் தொண்டர். நரபலியிடும் காபாலிக சமய இறைவனுக்குப் பிள்ளையைக் கறியாக்கிக்கொடுத்தார் அவர்.இம்மதங்களை ஆதரித்த அப்பர், சம்பந்தருக்குச் சிலை வைத்து அவர்கள் இயற்றிய பாடல்களையே கோயிலில் பாட வைக்க 48 ஓதுவார்களை நியமித்த ராஜராஜன், வேதங்களுக்குப் பதிலாக தேவாரப் பாடல்களையும் அந்தணர்களுக்குப் பதிலாக ஓதுவார்களையும் நியமித்திருக்கின்றான்.இதோடு பைரவர், க்ஷேத்ரபாலர் ஆடையின்றி உலவும் காபாலிகக் கடவுளான பிக்ஷாடனர் ஆகியோரைப் பிரதிஷ்டை செய்து வணங்கிய ராஜராஜனின் சமயக் கொள்கையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பைரவர் வழிபாடு ராஜராஜன் காலத்திற்கு முன் சோழநாட்டில் இருந்ததா என்பது கேள்விக்குறியாகும். இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. காபாலிகர்கள் நரபலி நம்பிக்கை உடையவர்கள். சுடுகாட்டில் ஆடும் இறைவனைப் பிணத்தின் சாம்பலைப் பூசி, மண்டையோடுகளை அணிந்து திரியும் இறைவனை வணங்குபவர்கள்.காபாலிகர்களும் கபாலத்திலேயே உண்பர். உடலெங்கும் நீறு பூசிக் கொள்வர். இக்கருத்தோடு பிக்ஷாடனரை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் மண்டையோட்டு மாலையையும் பிணத்தினைத் தோளிலும் இட்டுக் கொண்டு முனிவர் பத்தினிகள் புடை சூழ அதாவது தாந்திரிகத் தத்துவத்தோடு நடந்து வரும் அந்த உருவத்தைக் காபாலிகத் தத்துவத்தோடு ஒப்பிட வேண்டும். காபாலிகர்கள் வழிபாட்டில் பெண்களுக்கு முக்கியப் பங்குண்டு; அவர்கள் மது, மாமிசம், பெண்கள் இவற்றோடு தான் வழிபாடு நடத்துவர். ரிஷிபத்தினியர் இறைவனின் பின்னால் ஆடையின்றிச் செல்லுதலை நோக்க பிக்ஷாடனர் முழுக்க முழுக்கக் காபாலிக மதக் கடவுள் என்பது தெளிவாகும்.


முதலாம் ராஜராஜ சோழனுக்கு ராஜகுருவாக இருந்து கோயிற்பணியை முடித்து வைத்தவர் வடநாட்டிலிருந்து இங்கு வந்து பணி புரிந்த ஈசான சிவ பண்டிதர் ஆவார். இவர் முற்றிலும் சைவத் தொடர்புடையவர்.


காந்தளூர்ச் சாலை என்னும் கடிகையை (கல்லூரி) ராஜராஜ சோழன் வென்றான். சேர நாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் கடிகை என்னும் சாலைகள் வைதீகச் சமயத்தினரின் உயர்கல்விக்கூடங்களாகச் செயல்பட்டன.


கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கருநன் தடக்கன் என்ற ஆயகுல மன்னன் ஒருவன் பார்த்திவ சேகரபுரத்தில் ஒரு விஷ்ணு கோயில் கட்டி, அதற்கு ஏராளமான நிலங்களை தானமளித்தான். அக்கோயிலில் கடிகை அமைத்து, அதில் ரிக், யஜுர், சாம வேதங்களும், அது தொடர்பான மீமாக்சம், வியாகரணம் போன்றவைகள் கற்றுத் தர ஏற்பாடு செய்தான். இங்குள்ள கடிகை அல்லது சாலை காந்தளூர்ச் சாலையைப் போல அமைந்ததாகவும் ஆய் மன்னன் தனது பாரத்திவேந்திரபுரச் செப்பேட்டில் கூறுகிறான். இக்கடிகையில் படிக்கும் சட்டரக்ள் (மாணவர்கள்) தங்கள் ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்ளக் கூடாது. கூட்டமாக உள்ள இடங்களுக்கு ஆயுதந்தாங்கிச் செல்லக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தமை அச்செப்பேட்டின் மூலம் தெரிகிறது. எனவே கல்வியும் ஆயுதப் பயிற்சியும் தரப்பட்டு, வீரர்களை உருவாக்கிக் கொண்டிருந்தன கடிகைகள்.


அதனால் கடிகைகள் அரசியலில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தன. அரசனை ஆக்குவதில் முக்கியப் பங்கு பெற்றிருக்கும் அரசின் (state) அங்கமாகத் திகழ்ந்தன.


அதன் கொட்டத்தை அடக்கி, அச்சாலையைக் கைப்பற்ற நினைத்தான் ராஜராஜன்.


தமது முன்னோர்கள் பலமுறை சேரநாட்டையும், பாண்டிய நாட்டையும் வென்றும் அரசாள முடியாமற் போனதற்குக் காரணம் இந்தக் கடிகையின் வலிமை தான்.தம் தந்தை காலத்தில் தம் தமையன் இறப்பிற்கும் அவர்கள் நினைத்தபடி ஒரு அரசனைச் சோழ அரியணையில் அமர்த்தியதும் இந்தக் கடிகைகளும், கடிகைகளில் கற்று அதன்படி நடந்த உயர் அதிகாரிகளும் தான் என்பதால் கடிகையை வென்று, அங்கு பயிற்சி பெற்ற அந்தண அதிகாரிகளையும், பிரமதேயங்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்து பேரரசனாக உயர்ந்தான் ராஜராஜன்.


கன்னிப்போர் செய்தருளிக் காந்தளூர்ச் சாலையை கலமறுத்தருளினான் ராஜராஜன். சமய நிறுவனத்தின் உயர்ந்த பீடமாக விளங்கிய ராஜகுரு அந்தஸ்தில் ஒரு வைதீக பிராமணரை அல்ல, ஒரு சிவ பண்டிதரை அமர்த்தி ஆலோசனையைப் பெற்று நாட்டை ஆட்சி செய்தான் இராஜராஜன்.


அடிக்குறிப்பு:

1. Religion of Andhra, B.S.C. Hanumantharao, 1973.

2. 4: 7: 1--10

3. E.g., Vpl. XXIX p. 229

4. 4:5:1--10; 4:102; 1--10

5. சமணமும் தமிழும்---மயிலை சீனி வேங்கட சாமி

6. மேற்படி நூல் மற்றும் தக்கயாகப் ப்ரணி.

7.Sidelight on chola official dom---Y. Subbarayalu p. 357 SRINIDHI--Shri, K.R. Srinivasan, Fest Shrift (1983)

8. S.I.I.Vol. II Part II no. 38

9. Ibid

10. Ibid No. 65

11. Are 24/1897

12. Are 120/1905 & Thd Colas, K.A.N. Sastri, p. 455.

13.முதலாம் இராசேந்திர சோழனின் எசாலம் செப்பேடு மற்றும் மன்னர் கோயில் கல்வெட்டைக்காண்க.

14. அப்பர் தேவாரம் 6: 242: 2

15. தமிழக மக்கள் வரலாறும் பண்பாடும் கே.கே. பிள்ளை: பக் 298.

16. செளராஷ்ட்ர மணி--தீபாவளி மலர் (1982) 14..11..1982

17.S.I.I. Vol. III No. 18

18. ARE 1912/300 & Introduction p.67

19. S.I.I. Vol. II part I No. 3


--Geetha Sambasivam 09:55, 23 மே 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 மே 2012, 15:01 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,793 முறைகள் அணுகப்பட்டது.