சிவஞான கற்பம்-1

மரபு விக்கி இருந்து

Ulagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:46, 23 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


நூல்: சிவஞானகற்பம்

ஆக்கியோன் : முனைவர் கி.லோகநாதன் (டிசம்பர் 1994)
இறைவாழ்த்து


கண்ணுதல் எம்மிறைக் காக்க கருளிரியக்
பண்ணுநூ லீதெனப் பரிந்து

(இ-ள்)

நுதல்விழி காட்சி தெய்வ வடிவினை அகத்து இருத்திடும் ஆற்றலுடைய நுதல்விழி நாட்டத்து இறைவனையே அன்பின் மிகுதியால் 'எம்மிறை' என்றழைத்து, இந்நூல் இனிதே வளர்ந்து முடிய, பரிந்து காக்குமாறு இறைஞ்சுகின்றார். ஏனெனில் இந்நூல் உலகத்து மாந்தர் அனைவர் உள்ளத்திலும் செறிந்திருக்கும் அறியாமை இருளை இரிந்து விழுமாறு பண்ணப்படும் அக்காரணம் பற்றி என்பது. அகத்து மாசுக்களை அறப்போக்கும் திறத்தது மெய்ந்நெறி நியதிகள் பிழையாது செய்யப்படும் அறிவாய்வே என்பதாலும், அதனை இந்நூல் செய்து மெய்யறிவு யாதென்று விளக்குவது என்பதாலும் அனைத்தையும் நடாத்தி மகிழும் இறைவனது கருணையை வேண்டியதாயிற்று. இனி எத்தனையோ இறைவடிவங்கள் இருக்க, நுதல்விழி நாட்டதிறை வடிவினை சிறப்பித்துத் தொழுது அருள் வேண்டுவது யாதெனின், அவ்வடிவே எல்லா மாந்தர் உள்ளத்தும் நீங்காது நின்று, பொய்யறிவுகளைப் போக்கி மெய்யறிவினைக் காண்க! காண்க! என்று ஊந்திக் கொண்டே இருப்பதால் என்க. உள்ளத்தெழு எல்லா ஞானவுதிப்புகளையும் தருவது இறைவனின் இவ்வடிவமே எனினும் பொருந்தும். அத்தோடு ஊனக்கண்களோடும் அதனோடு வரும் பிறபொறிகளோடும் அந்தகரணங்களோடும் வருகின்ற அறிவுகளையே பெற்றுப் பெற்று மகிழும் ஆன்மாக்களுக்கு மறையாக நின்றிலங்கி அனைத்தையும் தரும் மந்திர சொரூபங்களையும் கண்டு மகிழும் திறத்தையும் இந்த நுதல்விழி இறைவடிவமே பயக்கிற தென்பதாலும், அந்த கடப்புரு காண் திறத்து அரிய பொருளறிவின்றி மெய்யறிவாய்வு நிறையாது என்பதாலும் இவ்வடிவினில் இறைவனைப் போற்றியது என்க.

மேலும் இந்நுதல்விழிக் காட்சியே பொய்யையொதுக்கி மெய்யை மெய்யாகக் காணும் திறத்தை அனைவருக்கும் தருவதாலும் அக்காட்சி அருளின் வந்தமையாதெனின் மெய்யறிவாய்வினை செய்யும் இஇந்நூல் பயனற்ற ஒன்றாகிவிடும் என்பதாலும் அதனை தவிர்ப்பான் பொருட்டு, கருணையே வடிவாம் இறைவனை இஇவ்வடிவிற் கருதி தொழுதது என்றுங் கொள்க.

தொழுதலாவது தன் ஆழ்வுள்ளத்தில் இவ்வடிவே எழுந்து உயிரோடு அயிக்கியமாகி அறிவினைச் செலுத்தவேண்டும் என்ற விருப்பொடு, உள்ளத்தை அதன் பொருட்டு திறந்து வைப்பதாம்.

மெய்யை மெய்யாக் காண்பதாவது இஇறையருளேக் கண்ணாகக் கொண்டு எவ்வகைத் திரிபும் ஐயமுமின்றி தற்போதக் கற்பிதங்களின்றி உள்ளதை உள்ளவாக் காண்பதாகும். இஇத்தகையக் காட்சிகள் வழியேதான் மெய்ஞ்ஞானம் விளையும் என்பதாம்.

முதல் தந்திரம்: பொதுப்பாயிரம் : மெய்யறிவாய்வு

பாயிரம் பலவற்றுள் இங்கு பொதுப்பாயிரமே பகரப்படுகின்றது. "பயிர்" என்றால் இங்கு 'அழைத்தல் ' என்பதாம். ஆகப் பாயிரம் என்பது அழைப்பு ஆயிற்று. பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு மயங்கியவாறு கிடக்கும் மக்களை விளித்து, "வம்மின் , மெய்யறிவாய்வு செய்மின்!" என்று அழைப்பதால் இஇது பொதுப்பயிரம் ஆயிற்று. அனைவரும் இந்த ஆய்வினைச் செய்யவேண்டும் என்று அதன் சிறப்பினை நவின்று ஊக்குவிப்பது கருதியது இந்த பொதுப்பாயிரம் ஆகும்.

1.1
தோண்டத்தோண் டத்துகள் தீர்க்கும் தெண்ணீர்
மாயக்கூபம் மெய்யறி வாய்வு

(இ-ள்)
மெய்யறிவினை விந்தையான ஒரு கிணறாக, கூபமாக உருவகம் செய்கின்றார். ஏனெனில் ஆழமாகக் கருத்தூன்றி தோண்டத் தோண்ட, அகத்துள் செறிந்திருக்கும் மனமாசுக்களை, அழுக்குகளை, பற்பல இன்னல்கட்கும் இடர்பாடுகட்கும் காரணமாக இருக்கின்ற பொய்யறிவுகள, மனப் பேதலிப்புக்களை, அவை தோன்றுதற்குக் காரணமாகிய மலங்களை, அறப்போக்கி இல்லாதாக்கும் தெள்ளிய நீராகிய தூவறிவு பொங்கிப் பொங்கி எழச் செய்யும் திறத்தது இம் மெய்யறிவு ஆய்வு என்பது.
மால்: இஇருள், மயக்கவறிவு: மலம்: அஞ்ஞான இருளாகிய அறியாமையை, மயக்கவறிவைத் தருவது.

1.2
செயிர்தீர் திறத்தின் சிந்தனை அறிவாய்வே
உயிர்படு யவதிகளொ டுக்கும்

(இ-ள்)
செயிர்: குற்றம், குறை ,மாசு போன்றவை. செயிர்தீர்:
இத்தகைய குறைகள் இல்லாது போக்குகின்ற.
இவ்வாறு அகத்திலிருக்கும் உளமாசுக்களுடன் கூடிய அறிவினையே ஆய்பொருளாகத் தேர்ந்து, ஏரண ஆரண ஒழுங்குபட பிழையின்றி சிந்தித்து அதன்வழி உண்மையிது பொய்யிது என்று அறிவுகளை வரைசெய்து பரபக்க சுபக்கமாக வகுத்துச் செல்லும் அறிவாய்வே, வாழ்க்கையில் உயிர்கள் படும் அவதிகளை எழாதொடுக்கும் ஏற்புடை முயற்சி என்பது.

இவ்வாறே இன்னும் பல பெரியார்களும் கூறியிருக்கின்றனர்.

மதுரைக் கூடலூர் கிழார் தம் "முதுமொழிக் காஞ்சி"யில் " வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்" , அதாவது அமைந்திருக்கின்ற வாழ்க்கையை நன்றா¡க அனுபவித்து இன்பத்தொடு வாழ, சூழ்ச்சியாகிய மெய்யறிவாய்வினை, தண்டான் அதாவது ஒதுக்கமாட்டான் என்கின்றார். மேலும் "அறிவு சோர்பு உடைமையின் பிறிது சோர்பும் அறிப" என்றுங் கூறி, யார் அறிவாய்வினை எடுப்பாக செய்வதற்கு தத்தம் மயக்கங்களின் காரணமாக ஈடுபடாது இருக்கின்றார்களோ, அவர்களுக்குப் படைப்பாற்றலும் ஆளுமையும் வந்தமையாது போக எல்லாப் பணிகளிலும் சோர்ந்து விழுவர் என்கின்றார்.

இனி கணிமேதாவியார் தன் ஏலாதியிலும்:

மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே
மெய்யே உணர்ந்தார் மிகவுரைப்பர் -- பொய்யே
குறளை கடுஞ்சொல் பயனிலசொல் நான்கும்
மறலையின் வாயினவாம் மற்று (28)

மெய்யறிவினை ஆராய்ந்து தெளிந்தாரே மேலானவற்றை உரைக்கின்ற திறனை பெறுவர்; பிறர் சிற்றறிவும் சினமும் பொய்யும் கபடும் கள்ளமும் உடையராய் சாக்காடு தரும் உடல்நோய் மனநோய்கட்கு ஆளாகுவர் என்கின்றார்.

மேலும் பொய்கையார் தம் இன்னிலையில்:

உண்மை மால் ஈர்த்து இருள்கடிந்து சார்ஐயம்
புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர் -- நுண்ணுணர்வான்
அண்ணா நிலைப்படுவர் ஆற்றல் விழுப்புலனை
எண்பொருட்கு ஊர் இஇயலைச் சார்ந்து (41)

பெரும் ஆற்றலோடு அற்பப் பொருட்களின்மேல் அவாவினை கொண்டு செல்லும் ஐம்புலன்களை, எண்ணுதல் திறத்தோடு அறிவாய்விற்கு ஆளாக்கி ஊர்ந்து செல்கின்ற இயல்பினை தனது இயல்பதாகக் கொண்டு வாழ்கின்ற ஒருவன் அதனால், உண்மையறிவினை மறைத்து நிற்கும் மாலாகிய அகத்திருளை ஈர்த்து துமித்து அறுத்து இலாப்போக்கி, உளத்திலே பற்பல புண்கள் -- கலக்கங்கள் அவதிகள் உலைச்சல்கள் -- போன்றவற்றை உளதாக்கும் ஐயந்திரிபுகள விலக்கி, பொருட்களை மெய்யாகக் காணும் திறனுடைய நுண்ணுணர்வினாகி, இதன் காரணமாக மேலாகி, தெய்வபதத்திற்கு சமமாகிய அண்ணா நிலைப் படுவன் என்கின்றார்.

மேலும் விளம்பி நாகனார் தம் நான்மணிக் கடிகையிலும்:

கற்பக் கழிமடம் அஃகும்; மடம் அஃகப்
புற்கந் தீர்ந்து இவ்வுலகின் கோள் உணரும்
கோள் உணர்ந்தால்
தத்துவமான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசை நெறீஇ --உப்பால்
உயர்ந்த உலகம் புகும்

மெய்யினைக் கற்று மேம்பட, அகத்திலிருகும் மடமை மடியும்; அது மடிய உலகத்தின் இன்னல்களெல்லாம் இல்லாது ஒழியும்; மேலும் வாழ்க்கையின் மெய்யான நோக்கு யாது, எதற்காக வாழ்க்கை என்ற அடிப்படையான கேள்விகளுக்கு தெளிவு தேடி, மெய்யறிவாய்வினை முதன்மையாகக் கொண்டுள்ள தத்துவ நெறிபால் விருப்பு உண்டாகி ஞானத்தெளிவினைத் தந்து இஇந்த உலகத்தில் மட்டிலுமிலாது உப்பால் உலகத்திலும் சிறந்தவோர் நிலையை அடைய உதவும் என்றவாறு.

இன்னும் இதனைபோன்ற பிற பெரியார்களின் உரைகளையும் கண்டு தெளிக. விரிப்பின் பெருகும்.

அற்ப ஆசைகட்கு ஆளாகி புலன்கள் இழுக்கின்ற வழி அறிவினைச் செல விடாது தடுத்து, அமர்ந்து தன்னையும் தனைச் செலுத்தும் அறிவு வகைகளையும் பொருளாக்கி சிந்தித்தல், வாழ்க்கையின் இழவுகள் அனைத்தையும் போக்கும் நன்முறை என்பது சான்றோர் வாக்கென இதனால் தெளிக.

1.3

பிறப்பறுக்கும் பெற்றிமையின் பேராநல் லுலகு
துறக்கப் பொய்யுலகுத் துய்யும்

(இ-ள்)

மெய்யறிவாய்வின் விழுமிய நோக்கமாக இருப்பது வீடுபேறு உறுவதாகும். மாறி மாறி பிறந்து உழல்வது நீங்கி, புகுந்தபின் யாண்டும் பெயரா பெற்றிமை உடைத்தாகிய முத்தியுலகு, எவ்வாறு துய்யும், அல்லது அனுபவிக்க வரும் எனில், எல்லாப் பொய்யுலகுகளையும் ஆங்கெழு அறிவுகளையும் மகிழ்வதை துறக்கவேண்டும் என்பதாம். இஇதனால் பொய்யறிவினை எல்லாம் பொய்யெனக் கண்டு போக்குதற்கும் மெய்யறிவாய்வு வேண்டியதாயிற்று என்பதாம்.

இவ்வாறே கூறியுள்ளனர் பல சான்றோர்கள்.
நல்லாதனார் தம் திரிகடுகத்தில்:

பற்றெனும் பாசத் தளையும் பலவழியும்
பற்று அறா தோடும் அவாத்தேரும் -- தெற்றெனப்
பொய்த்துரை யென்னும் பகையிருளும் இஇம்முன்றும்
வித்தற வீடும் பிறப்பு (22)

இறப்பும் பிறப்புமாக மாறி மாறி வரும் பிரபஞ்ச உழற்சியினின்று வித்தற நிற்கின்ற ஒரு நிலையை எய்தினாலேயே விடுதி உண்டாம். அதற்கு பற்றிப்பற்றி செலவே செய்யும் பாசத்தளைகளையும், அவற்றிற்கு மூலமாக இருக்கின்ற பற்பல விடுதற்கரிய வேட்கைகளையும், மெய் யாது பொய் யாது என்று தெற்றென அறியாதிருக்கின்ற மூடமும் பகையாக இருக்கின்றன, ஆகவே மெய்யறிவாய்வினை மேற்கொண்டு அவற்றைக் களைக்க வேண்டும் என்கின்றார் நல்லாதனார் இங்கு.
பொய்கையார் தம் இன்னிலையில்:

முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாலை
முப்பால் மயக்கேழ் பிறப்பாகி -- எப்பாலும்
மெய்ப்பொருள் தேறார் வெளி ஓரார் யாண்டைக்கும்
பொய்ப்பாலை உய்வாயாப் போந்து (40)

என்று இதனை வழிமொழிகின்றார்.

அறம் பொருள் இன்பம் எனப்படும் வேட்கைகளால் ஆகும் வாழ்க்கையில் வீழ்ந்து அதனின்று விடுபட முடியாதார், செறும் பாலையாகிய சுட்டெரிக்கும் பாலைநிலன் போன்ற துன்ப வாழ்க்கையை விலக்கத் தெரியாதவராம். இத்தகைய முப்பால் உலகிலேயே மயங்கிக் கிடக்க, மீண்டும் மீண்டும் பிறந்திறந்து வருதலை பெற்று சக்கர சுழற்சியின் இடர்படுவர். இதற்கு வழி யாதெனின், எப்பொழுதும் யாண்டும் அழியாது நிற்கும் மெய்ப்பொருளைத் தேடி, யாண்டும் அழியாது கிடக்கும் பேரா நல்லுலகாகிய சுத்தப்பெருவெளியை ஓர்ந்து அதனுள் நீங்காது நின்று பொய்யுலகு யாதென்றும் தோன்றாவாறு கிடப்பதாம்.
இன்னும் இதுபோன்ற சான்றோர் வாக்குகளைக் கண்டு தெளிக

இனி இந்த தெள்ளறிவு தரும் இன்பத்தை கீழ்கண்டவாறு விளக்குகின்றார்.

1.4
அளப்பரு தெளிவின் ஆனந்தச் சிவவுலகு
அளந்தறிய மெய்மை ஆய்வரும்

(இ-ள்)

உவகைகளிலெல்லாம் சிறந்த பேருவகை சிவானந்தம் எனப்படும். அறிவிலே எவ்வகைத் துகளும் இஇல்லாது சித்தமலமெலாங் கெடுத்து அறப்போக்கிய திறத்தின் ஆய்வரும் தெளிவிற் றெளிவாகி யாண்டும் அழியாத வொன்றாகி நிற்கும் சிவவுலகு தரும் செம்மையே இந்த பேரானந்தத்தைத் தரவல்லது. அது எவ்வாறு ஒருவனுக்கு கிட்டுமெனில், அறிவினிலே பல்வேறு வகையில் உதிக்கின்ற அறிவுகளையெல்லாம் சிந்தித்து அளந்து துணிந்து பொய்யினைப் போக்கி மெய்யினையேப் பற்றிப் பற்றி முன்னேறவே அது ஆய்வரும் என்கின்றார்.

இவ்வாறே விளம்புவர் பல சான்றோர்களும். நல்லாதனார் தம் திரிகடுகத்தில்:

முந்நீர் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை இன்றி மலமறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை மேல் நிற்பவர்.

என்கின்றார். கடலைகள் போன்று ஆசைகள் விடாதெழுந்து அலைப்பவும் அவற்றின்பால் படாது அற்பமெனத் தெளிந்து விடுபட்டு நிற்போனும், நுண்மையான ஆழமான பெருங்கேள்வி ஞானப் பனுவல்களை ஐயந்திரிபற கற்று தம்மறிவு , அவற்றின் எல்லையைத் தொட்ட மாண்பின் , ஆதவப் பிரகாசமென சுடர்வானும், அகத்து மாசுக்களை எல்லாம் அறப்போக்கி செறிந்திருக்கின்ற மாலங்களை எல்லாம் வாட்டி தெளிவிற் றெளிவாகிய சிவஞானத் தெளிவு பெற்றார்களாகிய இஇம்மூவரும், மெய்ம்மையே பயப்பதாகிய சிவவுலகு புக்கு செம்மார்ந்து இருப்பர் என்கிறார்.

பொய்கையார் தம் இன்னிலையில்:

பேராப் பெருநிலன் சேய்த்தே உடம்பொன்றா
பேரா ஒருநிலனாம் நீங்காப் பெரும்பொருளை
ஏரா அறிந்துய்யும் போழ்து (43)

என்கின்றார். செம்மையாகிய சேய்மை பொருந்திய, என்றும் அழியாத பெருநிலன் சிவவுலகு என்பதாம். அது உடம்பொடு ஒட்டியவாறே நின்று அதனைக் கழன்றறிய வாரா திறத்தில் அறியவாராததும், பெயர்ந்து மாறாதிருக்கும் பெற்றிமை உடைத்துமாகிய ஒரு நிலனாம். அறிவுயிர்களின் உள்ளத்தில் யாண்டும் நீங்காது நிற்கும் பெரும்பொருளை, தக்க முறையில் சிந்தித்துத் தெளிந்து உயர, ஏர் எனும் மேலான ஆனந்தப்பெருநிலை வையாகும் என்கின்றார்.
மேலும்:

மெய்யுணர்வே மற்றதைக் கொள்ள விழுக்கலனாம்
பொய்யுணர்வின் ஈண்டிய எல்லாம் ஒருங்கழியும்
ஐயுணர்வான் உய்ந்துவலம் சார்பாச்சார் பொறுக்க
நையா நிலை வேண்டுவார். (44)

என்கின்றார். யாண்டும் நைந்தொழியாத பெருநிலை வேண்டுபவர், உண்மையாகத் தோன்றி பிறகு பொய்யாகும் அசத்தறிவுகளை, பொய்யறிவுகளை வேண்டாது, ஐயங்கள் எல்லாவற்றையும் மெய்யறிவாய்வினால் அறப்போக்கி, சாரத் தகுவது இஇது சாரத் தகாதது இது என்று மெய்யுணர்வின் தக்க அளவையின் ஒறுத்து மெய்யுணர்வினையே பொருளாகப் பற்றிப்பற்றி ஊய்ந்து செல, அதுவே பேருவகையைத் தரும் விழுக்கலனாம், அருங்கலனாம் என்கின்றார். அளப்பரும் உவகை தருதலின் அருங்கலன் எனப்பட்டது


இனி முத்திச் சிந்தனையோடு கூடிய பிறிதொரு நோக்கத்தையும் அடுத்து சில சூத்திரங்களில் விளக்குகின்றார்.
1.5

முத்திமுன் னறிவின் முகிழுமே மூவாவறிவு
எத்திற மாமெனு மிச்சை

(இ-ள்)

முத்திமுன்னறிவாவது முத்தியாதென்று சகசமாய் உள்ளத்தில் இருந்தும் அதனை ஆகக் கூடிய ஒரு சாத்தியமாகவே அறிந்து மெய்த்தியமாக அனுபவித்தல் பிறவாத காலத்தில் அதனைப் பற்றி குறைவாகவே அறிந்திருக்கும் நிலையின் அறிவு. இதன் காரணமாகவே அறிவாய்வு மக்களிடையேத் தோன்றி என்றும் நிலைத்து நிற்கும் தன்மைத்தாகிய , காலத்தில் தாக்குறாது நித்தியமாக இருக்கின்ற மூவாவறிவு யாதென்று விசாரித்து அதன் திறத்தினை அறிந்து மகிழும் இச்சை அகலாது இஇருக்கின்றது. இந்த முன்னறிவு அகத்தில் இல்லையெனில், ஓர் அறிவினை பொய்யென்றும் பிறிதொன்றினை மெய்யென்றும் பேதப்படுத்தி பொய்யினை ஒதுக்கி மெய்யினை மேற்கோளாகக் கொண்டு செலும்போக்கு அமையாதென்க. (அடியேனது) "முத்தி முன்னறிவு" எனும் கட்டளை நூலில்:
" முத்தியைப் பற்றிய முன்னறிவு எல்லார் உள்ளத்திலேயும் அன்றே புதைந்து கிடக்கின்றது. நாம் வாழ்வதும், வாழுங்கால் பற்பல செய்வதும் அறிவினை பற்றி இருக்கின்ற இந்த முன்னறிவு தரும் முனைப்பின் அடிப்படையிலேயே நடக்கின்றன" (8.0) என்றும்

"இந்த முன்னறிவு இல்லையேல் அளவைகள் இல்லை; புண்ணிய பாவ அறிவு இல்லை; உயர்ந்தது தாழ்ந்தது என்ற மதிப்பீடுகளும், இனிய இன்னா என்ற சுவைபேதங்களும், அழகியது அழகற்றது என்ற நந்நய வேறுபாடுகளும் இல்லாதொழியும்' என்றும் இன்னும் பலவாறும் கூறப்பட்டிருப்பதைக் கண்டு தெளிக.

இனி முதுமொழிக் காஞ்சியாரும் "வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை" என்று மூவாவறிவாகிய வாய்மையின் திறத்தினை செவ்விதின் அறிந்து அகப்படுத்தினானே, எல்லா வளப்பங்களிலும் சிறந்த வளப்பத்தைக் கொண்டவன் ஆவான் என்று
வாய்மையை நோக்கிச் செல்லும் இயல்பு மாந்தர்கட்கு இஇயல்பாய் அமைந்தவொன்று என்கின்றர்.
இனி எல்லா மெய்யறிவாய்வுகளும் தத்தம் இலக்காகக் கொண்டிருக்கின்ற சிவஞானத்தை அறிமுகப் படுத்துகின்றார்.

1.6

மூலவையத்தை முடிக்கின்ற ஞானஞ் சிவஞானம்
மாலவத்தைப் போக்க-வை யாகுமே
(இ-ள்)

ஒரு பொருளைக் கண்டுழி அது இன்னது என்று தெள்ளிதின் அறிந்து கூறமுடியாமை சாதாரண ஐயம். இஇதற்கு மாறாக எத்தகையத் தெளிந்த அறிவு பெற்றாலும், தக்க பிரமாணங்களோடு பிரமேயங்களாக மெய்யென அளந்து பெற்றாலும், அது சுட்டறிவாக ஆகவே கட்டறிவாகவே இருக்கின்ற நிலையில், அகத்தில் அதனை மீறி செல்லுமாறு ஊந்திக்கொண்டே ஓர் ஐயம் இருக்கும். இஇத்தகைய ஐயமே மூலவையம் என்றது. இந்த மூல ஐயத்தைப் போக்கு ஞானமே சிவஞானம் என்றது. அது எவ்வாறு சித்திக்கும் எனும்போது உயிரினை சிற்றறிவினதாக்கும் (finititude) மாலங்களின் தொடக்கினை, அதனால் வரும் அவத்தைகளை அறப்போக்கி மேலெழ அது உண்மையாகும் என்றது. இந்த மூல ஐயத்தின் விளக்கம்(அடியேனது) 'சித்தியல்' எனும் சிறு நூலிலும் உண்டு. எல்லாவகை கலை முயற்சிகளும் தருகின்ற அறிவினை ஆதிசித்தென்றும், அது இயற்கையான ஓர் ஐயத்துடனேயே வரும் என்றும், அதனை தெளிவாக்கிய பொழுது ஆவது அந்தசித்தென்றும் ( அல்லது சித்தாந்தம்) என்றும் அந்த நூலில் விளக்கப்படுகின்றது.
அங்கு

" ஆர்வ உள்ளத்தின் ஆதியைத் தேர
பிறழ்ச்சி உண்டென நிகழ்ச்சிக் காட்ட
அல்லமெய் யென்று அறிவது திரிபு"
என்றும் , மேலும்

" திரிபு அந்தமெனத் தீரா முறைமையின்
ஆர்வம் மாய்க்கா வாற்றலாதியே ஐயம்"
என்றும் நையாயிகத்திற்கு வேறாக நவிலப்படுகின்றது. மூலவையமாவது ஆர்வத்தையும் ஆசைகளையும் பற்றினையும் பாழாக்கிப் போக்காத எல்லா அறிவுகளோடு உடன் வருவது என்றும், ஆகவே ஆர்வத்தை மாய்க்கின்ற சிவஞானத்தைத் தவிர்த்து வேறெல்லா ஞானத்தையும் பரபக்கமாக்கும் முனைப்பினைத் தருவதென்றும் அறிக.

இனி மெய்யறிவாய்வின் நோக்காகிய சிவஞானத்தை இறைவழிச் சிந்தனையிலேயே பெறவரும் என்று அடுத்து விளக்குகின்றார்.

1.7

ஆய்வின் முடிவெலாம் அந்தமாதி அடைந்து
வேயும் பொய்யெலாம் வீழ்த்தல்

(இ-ள்)

உள்ளத்திலே பற்பல மயக்கங்களையும் அதன்வழி பல்வேறு கலக்கங்களையும் உண்டாக்கிக்கொண்டே இருக்கின்ற பொய்களை பொய்யென்றறிந்து வீழ்த்தலே, மெய்யறிவாய்வின் நோக்கமாகும். எல்லா போராட்டங்களின் மூலமும் இதுவே யாகும். இதனால் இருக்கின்றதை அழித்து , எழாதிருக்கின்றதை எழவைத்து இருத்தி பிறகு மேல் எழுந்து அதனையும் அழித்து பிறிதொன்றினை உளதாக்கி, அந்தத்தைச் செய்யும் போது பிறிதொன்று ஆதியாக, தோன்றியதாக செலும் நெறியுடையது இஇம் மெய்யறிவாய்வு. அழித்துப் போக்கத் தக்கவை பொய்கள்; எவ்வகையிலும் அழிக்க வாராது நின்று சுடர்வன மெய்களாகும். இப்படி செல்கின்ற ஆய்வுகளிலும் அதனால் வரும் அனுபவங்களிலும் அவத்தைகளிலும் இஇத்தகைய அறிவின் செலவினை ஆன்மாக்கள் அறியாவண்ணம் நிறுத்தி முடிவில் தன்பால் ஈர்க்கும் அந்தமாதியாகிய , சங்கார காரணனாகிய முதலையே முடிவாக அடைய, ஆணவமலம் முற்றிலும் கழன்று விழுமென்றும் அதனால் பொய்மையே சித்திக்காது என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறு பண்டையோரில் கணிமேதாவியாரும் தம் ஏலாதியில் கூறியுள்ளார்:

வாள் அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பஞ்சான்
ஆள்அஞ்சான் ஆம்பொருள் தானஞ்சான் -- நாள் எஞ்சாக்
காலன் வரஒழிதல் காணின் வீடெய்திய
பாலின்நூல் எய்தப் படும்(22)

எதிரிகளின் வாளிற்கும் அஞ்சாது, மக்களின் கடுஞ் சினத்திற்கும் அஞ்சாது , மோகத்தின் வனப்பிற்கும் அஞ்சாது , ஆளும் அரசனுக்கும் அஞ்சாது, வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளுக்கும் அஞ்சாது, உலகெங்கும் நின்று நிலவும் அழியும் பண்பினை, நின்று நிலவாப் போம் பண்பினை ஐயம் ஒழியக் காண விரும்புவார் , சிவஞானம் பகர்ந்து வீட்டுநெறி பகரும் ஞானநூற்பால் எய்தப்படும் என்கின்றார். அழித்துப்போக்கல் சங்காரகாரணனாலேயே முடியுமென பாலின்நூல் பகர்வது அந்தமாதி அறிவினைத் தரும் சிவஞானமே என்றது. காலன் வர ஒழிதலாவது, உலகத்து இடையறாது நடைபெறும் சங்காரத்தொழிலை சிந்தித்துத் தெளிதலாகும்.
மேலும்,

பிணிபிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம்
தணிவில் நிரப்பிவை தாழா -- அணியின்
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றாய்
நிரம்புமேல் வீட்டு நெறி (24)

என்றும் கூறுகின்றார். பிணி மூப்பொடு சாக்காடாதி தரும் வாழ்க்கையில் விடுபாடாது பற்றுற்று கிடக்குங்கால், அரங்கில் நாடகம் நடக்க அதில் ஒன்றித்து, தன்னிலை மறந்து மயங்கி வேடத்திற்கேற்ற வகையில் ஆடுவதுபோல் வாழ்க்கை ஆகிவிடும். இதனால் அந்த சக்கரச்சுழற்சியினின்றும் உழற்சியினின்றும் விடுபடாதும் போய்விடும். இவ்வாறு ஒன்றழிய ஒன்று தோன்றி உளதாகும் பாரம்பரிய ஓட்டமாக, வரலாற்று முறையில் செல்லும் பிரபஞ்சச் செலவில் முற்றிலும் கட்டுண்டு விடுபடாது கிடக்க எல்லாத் துன்பங்களும் வரும். ஆயின் மெய்யறிவாய்வினை போற்றி சிறிது சிறிதாக விடுபட்டு, இவ்வாறான பிரபஞ்ச ஓட்டத்திற்குக் காரணமாகி அதே பொழுது ஒன்றாய் உடனாய் நின்றும் உயர்ந்து வேறாகியும் நிற்கின்ற அந்தமாதியை அடைந்தாலே வொழிய விடுதி இல்லை என்கின்றார்.

மேலும் (அடியேனது) "சித்தாந்தத் திருநெறி'யிலும் இவ்வாறு கூறப்படுகின்றது.

14.0 ஐந்து தன்மைய வினைகள் உண்டு: உழற்சி வினைகள், கழற்சி வினைகள், ஊழ்ச்சி வினைகள் எனூம் இவற்ரிற்கு எஹ்டிராக வீழ்ச்சி வினைகள், இவற்றிற்கு அப்பாலாக மலர்ச்சி வினைகள் என அவை வரும். எல்லாவினைகளும் இவ்வைந்திலும் பற்பல அகப்பிரிவுகளோடு அடங்கும் என்றும் கூறலாம்.

14.1 தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு இஇச்சைகளை நிறைசெய்யும் முகத்தானே, அந்தக்கரணங்கள் புறக்கரணங்கள் துணைக்கரணங்கள் போன்ற வற்றை முடுக்கி, மாயாகாரிய உலகின்மேல் செய்யப்படும் கருவி வினைகளே உழற்சி வினைகள்

14.1.1 உழற்சி வினைகளால் மாயா காரிய பொருட்களின் அறிவுதான் மிகும்.

14.1.2 முடிவில் இறைவனது கிரியாசத்தியினைத் தான் காணமுடியும்.

15.0 சார்ந்ததனைத் தானென மயங்கி நிற்கும் ஆன்மாக்கள், அந்த மயக்கம் நீங்கி, தத்துவங்களினின்று படிப்படியாகக் கழன்று தான் தானாய் ஆகுவதற்கு ஏதுவாய் நிற்பவையே கழற்சி வினைகள்.

15.1 இத்தன்மைய கழற்சி வினைகளால், ஆன்மாக்கள் பதவூழிகள் பெற்று உயர்நிலை அடைகின்றன.

15.1.1 மாயாகன்ம பந்தங்களும் ஒருவாறு நீங்கின்றன.

15.2 கழற்சி வினைகளின் முடிவு ஆன்ம தரிசனம்-- தத்துவகுலாம் கழன்று தான் தானாய் நின்று தன்னைத்தான் காணல்.

16.0 கழன்று நிற்கும் ஆன்மா ஆணவமலத்தடையால் இருளொடு நிற்கும் நிலையில், தத்துவக் கூட்டறவின்றி சங்கற்ப மாத்திரையால், மலநீக்கம் குறித்து செய்யப்படும் வினைகளே ஊழ்ச்சி வினைகளாம்.

16.1 ஊழ்ச்சி வினைகளின் நோக்கு இஇறைவனைக் கண்டு அவனோடு ஒருங்கியைந்து நிற்றல்
மெய்யறிவாய்வு என்பது ஊழ்ச்சி வினைகளாற்றி படிப்படியாக விடுதி பெற்று அதன் வழி இஇறைவனை அவன் அருளாலேயே அடைந்து பிரிப்பின்றி யாண்டும் ஒன்றி நிற்பது என்றும் பெருகின்றோம்.

17. இவற்றிற்கு எதிராக இருப்பவை வொஇழ்ச்சி வினைகள் ஆகும். ஆனவமலத் தொடக்கால் எழுவதின், மரணாவத்தைக்குக் கொண்டு செல்வன. டூனி இவற்றிற்கெல்லாம் அப்பாலாக ம்லர்ச்சி வினைகள் இருக்கின்றன. இறைவனோடு ஒன்றித்து செய்வதெல்லாம் சிவச் செயலேயாக் அமைய அவை மலர்ச்சி வினைகள் ஆகின்றன.

இனிக் காலகட்டில் சிக்குண்டு கட்டறிவுகளையேப் பெற்று மேலான மனநிறவினைப் பெறாது தவிக்கின்றார் அனைவரும் இஇந்த சுட்டறி நிலைப்போக்கி எட்டறி நிலை தரும் திறத்தினை மகிழ்வதும் இஇத்தகைய மெய்யறிவாய்வால் வரும் ஓர் பயனெனக் கூறுகின்றார்.

1.8

கடப்புரு காண்திறத்தில் காணவும் வரும்மே
நடக்கவிருப் பவைநானிலத் தில்

(இ-ள்)

கடப்புரு காண்திறமாவது நுதல்விழியின் கரந்துரு அறிவதாகும்; வெளிப்பட்டு நில்லாது மறையாகவே நின்றிலங்கி அனைத்தையும் தொழிற்படுத்தும் மந்திரசத்திகளையும் அவற்றோடு தொடர்புடைய பிறவற்றையும் அறிதலாகும். இஇதனால் அமையும் காட்சி வகையினை யோகக்காட்சி யென்றும் விஞ்ஞானக் காட்சியென்றும் சிவஞானக் காட்சியென்றும் பலவாறாகப் பகர்வர். சுட்டுக்கால குறிப்புக்கால உணர்வுகளில் படாமுறை நழுவி ஊடுறுவி உட்சென்று மறையாக நிற்பதைக் காணுந்திறன் பெற்றான் ஒருவன், காலத்தைக் கடந்து செல்லும் நெறியிற் செல்வான் என்பதால், எதிர்காலத்து நடக்கவிருப்பதை தூரதிருட்டி வழியாக இஇன்றே காணும் திறத்தினைப் பெற்றிருப்பான் என்பது.

இதனையே முதுமொழிக் காஞ்சியார் "மேல்வரவு அறியாதோன் தற்காத்தல் பொய்" என்கின்றார். தெய்வப் புலமை திருவள்ளுவரும்

"எதிராக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்" (குறள்: 429)

என்று கூறி, எதிர்காலத்து நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்து தக்கது செய்துகொளலே தகுந்த தற்காப்பு என்கின்றார்.

மேலும் பொய்கையார் தம் இன்னிலையில்:

ஒன்றுண்டே மற்றுடலில் பற்றி வினையுறுக்கும்
பொன்றா வுணர்வால் விலங்கொறுக்க பைம்மறியாத்
தன்பால் பெயர்க்குந்து பற்றுதலைப் பட்டோர்
நன்பால் அறிந்தார் துறந்தார் வாரவுயர்ந்தார்
புன்பாலால் சுற்றபடார் (45)

என்றும் கூறி கடப்புரு காண்திறத்தைப் பெறுதலின் நன்மையை போற்றுகின்றார். தானறியாது உடலில் ஒன்றிருந்து ஒருவனை பற்பல வினைகளை ஆற்றச் செய்து தொழிற்படுத்தும் அல்லது ஆட்டுவிக்கும். ஓர் தோற் பையைப் போன்று பலவற்றை உள்ளடக்கி நிற்கின்ற இஇந்த உடலை, அதுகொண்டு பற்பல அனுபவித்தும் மகிழும்போக்கினை மறுத்து, தன்பாலேப் பெயர்ந்து உள்நோக்கினனாக இந்த கடப்புரு காண் திறத்தின் என்றும் அழியாத மெய்யான அறிவின் வழி, தன்னை சிறைசெய்யும் விலங்குகளாக கிடக்கும் கன்மத் தளைகளை அடையாளம் கண்டு அகற்ற, இன்னல்கள் இடர்கள் என்பவற்றொடு இழிவான எண்ணங்களையும் ஒழுக்கங்களையும் தரும் அகத்து மலமாசுக்களால் சூழப்படார் என்பது.

இனி திருக்கோவலூர் ஆறுமுகசாமி அவர்கள் தம் "நிட்டானுபூதி" எனும் நூலில், மெய்யறிவு பெற ஓர் குரவனுக்கு அமைகின்ற திறன் இதுவென்றுங் கூறி மெய்யறிவாய்வின் பயனோடு அதனைப் பொருத்திக் காண்கின்றார்.

" இப்படி நிட்டை தன்னிலே யிருந்து இஇயல்பொடு தன் அனுபவத்தை
ஒப்பிலா அரசற்கு அமைச்சர் உரைப்பதுபோல் உயர்குருபரற் குரைத்து அளவில்
மெய்ப்படு குரவன் பின்னிகழ்வுதனை விளம்பிடக் கேட்டு அறியுனரே
ஒப்பின் மாயோகர் அலாதவர் கிரியாக் காண்டி யென்று உரைத்திடப் படுமால்" (61)

மெய்யான யோக வழிச் செல்வார் யாரெனின், நல்லவொரு அரசன் தரும் ஆணைகள் வழி இயங்கும் அமைச்சர்கள் எவ்வாறு நடக்கின்றவற்றை மெய்யாக உரைத்து மேலும் பல ஆணைகள் பெறுகின்றார்களோ அவ்வாறு ஒருவன் சாதாரண அளவைகட்கு எட்டாத, மறையாக நின்றிலங்கு ஆற்றல் மந்திர சத்திகளை அறிந்த குரவன் பால் தன் அனுபவங்களைக் கூற, அதுபொழுது அவனுக்கு பின்னிகழ்வதனை அவை நிகழா முன்பே தன் ஞானதிருட்டியால் அறிந்து விளம்பிட, அதுகேட்டு மெய்யறிந்து அதுவழி செல்வோரே யாவர்; பிறர் ஆழச்சிந்தனை இல்லாத கிரியாவாதிகள் என்கின்றார். இதற்கு உரை எழுதிய திருமூலர் மரபு முத்துக்கிருஷ்ணர், பின்னிகழ்வதை அறிந்து முற்கூட்டியே விளம்பிடும் பண்பினை பூரணவாரூடம் என்கின்றார். இத்திறத்தின் வந்தோரே குரவர் ஆகுதற்கு தகுதியுடையவர், பிறர் அத்தகுதி வரும் வரையில் குருகுல வாசம் செய்வதே தகுந்தது என்றும் கூறுகின்றார்.

இவ்வாறு இத்திறத்தினை பல யோகநூற்களும் சித்தர் நூற்களும் விரித்துக்கூறும்; கண்டு கொள்க.

இக்கடப்புரு காண்திறத்தினை எள்ளிநகையாடுவர் பொறிபுல அறிவினையே பெரிதும் போற்றி வளர்க்கும் ஐரோப்பியர்களும் அவர்கள் வழி செல்வோரும் என்பதையும் அறிக. இவ்வாறே செய்தனர் பண்டைய புத்தர்களில் ஓர் சாராரும் இன்னும் பலரும். இதனால் ஆகமங்களை ஓர் பிரமாணமாக அவர்கள் கொள்ளவில்லை என்பதையும் அறிக.

இனி ஒடிவின்றி வருகின்ற காரணக் காரியத் தொடர்புகளையே கணக்கிட்டறிந்து, அதன் அவினாபாவத்தை---- யாண்டும் தொடர்பிலாது இஇராத் தன்மையை -- சோதித்து அறிந்து ஓர் நியதியாக (law) அதனைக் கணித்து பிறகு அதனால் காலவுணர்வினை ஒதுக்கி, அதனையே பொதிவியல் நியதியாக்கி (universal law) அதன்வழி நடக்கவிருப்பவற்றைக் கணித்துக் கூறல் அவர்கள் போற்றும் பின்னிகழ்வுரைக்கும் ஆரூடம் (prediction) என்க. இத்தகைய ஆரூடங்கள், நுதல்விழி காட்சியின் வரும் பூரணவாரூடம் அல்ல என்றும் உணர்க. இவற்றின் விளக்கத்தினை அடியேனது அருட்குறள், மெய்யறிவின் இயல்பு (3.4.1) என்ற படலத்திற் காண்க. திருநெறித் தெளிவிலும் பெரிதும் விளக்கப்பட்டுள்ளது.


அடுத்து இந்த வல்லமை எவ்வாறு வந்தமையும் என்று விளக்குகின்றார்.

1.9

திரிகால ஞானத்திற் செறிந்திலங்கும் வல்லமை
குறிகாலங் கழன்றாரேக் கொள்வர்

(இ-ள்)

மெய்யறிவாய்வின் மெய்ப்பயன்களில் ஒன்று கட்டறிவாகிய சுட்டறிவு கழன்று சுட்டுணர்வு இறந்து நின்று காண்கின்ற இறைவனோடு ஒருமையுடன் அனைத்தையும் சத்தறிவாய்க் கண்டு சிவானந்தம் பருகுவதாகும். சுட்டறிவு நீங்க, சுட்டுக்காலமும் அதனோடு வரும் சுட்டிடவறிவாகிய திசையறிவும் ஒடுங்கும். அதுபொழுது நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்கவிருப்பது ஆகிய மூன்றையும் ஒருங்கே காணும் திரிகால ஞானிகளாகத் திகழ்வர். காலவுணர்வு இரண்டில், சுட்டுக்காலமென்றும் குறிப்புக்காலமென்றும் வருவதில், குறிப்புக்காலமென்பது ஆணவ மலச் செறிவினாலும் திரோதகத்தாலும் அதுவேண்டும் இதுவேண்டும் என்ற குறிப்போடு நிற்கும்போது எழுகின்ற காலவுணர்வாகும். வேறு வகையிலும் இது எழும். ஆணவமலங் கழற , உலகியல் வகையில் குறித்து நிற்றல் நிலைகள் எழாது போக, உலகியல் சுட்டிற்குப் பெயரும் குறிப்புக்காலம் கழறும்; கழறவே உலகியல் சுட்டுக்காலமும் எழாதொடுங்கும். அதுபொழுது ஆன்மா பரமான்மாவாக மலர்ந்து திரிகால நிகழ்ச்சிகளையும் ஒருங்கே அறியும் திறத்தோடு நிலவும் என்றது. இதன் விரிவை "காலதந்திரம்" எனும் அடியேனது சிறுநூலிற் கண்டு தெளிக.

திரிகாலவுணர்வினோடு தொடக்குற்ற பிற கலைகளையும் மெய்யறிவாய்வின் பயனோடு வருகின்றமையின் அதனையும் விளக்கியவாறு.

1.10

பரத நடனமும் பாவையெழுப் பியநற்றே வாரமும்
பரவிழிக் காட்சியின் பயன்

(இ-ள்)

இறைவனது திருவிளையாடல்களை அபிநயித்து காட்டும் பரத நடனமும் அதனோடு வரும் பிறவும், அவனைப் போற்றிப்பாட மந்திரத்தன்மை பெற்று , திருஞானசம்பந்தரின் பாவை எழுப்பிய பாடலைப்போன்ற தேவாரங்களும் அதனைப் போன்ற திவ்வியக் காட்சிகளும் , இன்னும் இவற்றோடு ஒத்துவரும் புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள் போன்றவையும் இத்தகைய பரவிழிக் காட்சியினால் வருகின்றவை என்றவாறு. இவற்றின் விரிவையெல்லாம் எனது "காலதந்திரம்" எனும் நூலிற் கண்டு கொள்க. மேலான இலக்கியங்களும் கலைகளுமாகிய இவையும் மெய்யறிவாய்வினோடு தொடர்புடையதே என்று நவின்று எவ்வாறு அத்தொடர்பு என்று இஇச்சிறுநூல் தெள்ளிதின் விளக்குகின்றது.


இனி இவ்வாறு மெய்யறிவாய்வினை விளக்கியப் பின், இந்நூலின்வழி நுதலிய பொருளை விளக்குகின்றார்.
(இப்பாடல் கண்கட்டி மறைஞானசம்பந்தர் தமது 'பதிபசுப் பாசப்பனுவல்' எனும் நூலில் உபகரித்தது. இது தொடங்கி இவர்தம் சூத்திரங்கள் உடுகுறி பெற்றிருக்கும்.)

  • 1.11
    சொல்வாம் பிரமாணம் மேயஞ் சுருதியுஞ்சொல்
    நன்மிதி மாதிருவு நாடு.

(இ-ள்)

சுருதி: தற்போத முனைப்பாலன்றி இறைவனாலேயே அறிவுறுத்தப்பட்டெழும் அருமறைகள். மாதிருவு என்பது ஞாதிரு என்பதின் திரிபு. ஞாதிருவாவது ஞானத்தை அனுபவபூர்வமாக அறியும் ஆன்மா. இந்நூலில் பிரமாணங்கள் யாதென்றும் அதனால் வரும் மெய்யறிவுகளாகிய பிரமேயங்கள் யாதென்றும் விளக்குவாம் ; இதுகொண்டு பிரத்தியக்கம் அனுமானம் என்ற இந்த ஞானமூலங்களோடு ஆகமங்களாகிய சுருதியையும் உடன்கொண்டு அவை கூறும் நல்லறிவுகளையும் ஞானத்தை நாடித் திரியும் மாதிருவாகிய நீ அறியக் கடவை என்கின்றார். ஆகமங்களை புறக்கணிக்காது அவற்றையும் பிரமாணங்களாக, ஞானமூலங்களாகக் கொண்டு மெய்யறிவாய்வு செய்யவேண்டும் என்பதாயிற்று. இஇங்கு பிரமாணங்கள் என்பன, மாணறிவுகளாகிய தெள்ளறிவுகளை பயப்பதற்கு ஏதுவாயின என்றே பொருள்படும்.
பிரமாணங்கள் சுருதி உத்தி அனுபவம் என்று கண்ணுடைய வள்ளாலரைப் பின்பற்றி உரைப்பதும் உண்டு. சுருதிகளை பிரமாணங்களாக, தெள்ளறிவு தரும் உறுதிச் சொற்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும், ஒதுக்கலாகாது என்பதை இக்குறளில் வற்புறுத்துகின்றார். இவ்வாறே கூறியுள்ளனர் பண்டைய சான்றோர்கள் பலரும். நல்லாதனார் தம் "திரிகடுகம்" எனும் நூலில்:

எள்ளற் பொருளது இகழ்தல் ஒருவனை
உள்ளற் பொருளது உறுதிச் சொல் -- உள்ளறிந்து
சேர்தற் பொருளது அறநெறி பன்னூலும்
தேர்தற் பொருள பொருள் (53)

இங்கு உள்ளற்பொருளாவது, அதாவது ஆழ்ந்து சிந்திக்க வேண்டுவது உறுதிச் சொற்களைக் கொண்டுள்ள ஆகமங்களும் அதனைப் போன்ற வீட்டுநெறி நூற்களும் என்றவாறு. பன்னூற்களால் பரிந்துரைக்கப்படுபவை கற்பிதங்கள் அல்லாது உலகில் உள்ள உண்மைகளாகும் என்று உண்மைக்கு ஓர் இலக்கணம் தருவதையும் காண்க.
இனி பிரமாணம் வேண்டற்பாலது யாதெனின் வாய்மை வேண்டுவார்க்கு அதுவே மெய்யறிவு பயப்பதாம் என்க. இவ்வாறே கூறுகின்றார் நல்லாதனாரும் மேற்கூறிய நூலில்:

குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய
சால்பினிற் றோன்றுங் குடிமையும் -- பால்போலுந்
தூய்மையுட் டோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு (37)

மெய்யறிவினையே வேட்டுத் திரிகின்றார் வழக்காவது குறளையாகிய வறுமையில் நட்பின் அளவு மாறாது இருத்தலும், பழகுதற்கு இனிய சால்பு கொண்டிருப்பதாகிய நற்குடிமையோடு இருத்தலும் பால்போலும் தெளிவான துய்மையான அறிவினையேத் தரும் பிரமாணங்களோடு அறிவினை விசாரித்து அறியும் திறத்தோடு வாழ்வதுமாகும் என்கின்றார். அகத் தூய்மையின் காரணமாக எழுகின்ற அனைத்தையும் மெய்யறிவு பயப்பிக்கவல்ல பிரமாணங்களாகக் கொண்டு மெய்யறிவாய்வு செய்யவேண்டும் என்றார், அகத்தூய்மையின் காரணமாக எழும் நூற்களில் பொய்மை இராதென்பதின்.


இனி இம்மெய்யறிவாய்வு கல்வியின் பாற்படும் என்ற சான்றோர் கூற்றிற்கு உடன்பட்டு, எத்தகைய கல்வி அது என்றும் தொடர்ந்து விளக்குகின்றார். இது தொடங்கி மெய்யறிவாய்வு என்பதில் அடங்கியுள்ள கலைகளை, கற்றல் தொழில்களை விளக்கியவாறு.

1.12
உலகோர் நூலெனவோர் வான்காணுந் தன்னறியாமை
இலதாக்குவ தெழில்நற் கல்வி

(இ-ள்)

மெய்யறிவாய்வு அனைத்தும் அகத்தே செறிந்துள்ள அறியாமை போக்கும் கல்வி என்றது. கற்றல் என்பது அறியாமை நீக்கும் தொழில் என்று அடியேனது சித்தாந்தத் திருநெறியில் விரிவாக கூறப்பட்டுள்ளது. தனக்குள் அறியாமை இருக்கின்றது என்று ஐயம்திரிபற உணர்ந்தான் கண்ணேயே கற்றல் வேட்கை உறுதியாக எழும்; இல்லையேல் எழாதுபோம் என்றவாறு. இனி மெய்யறிவாய்வு ஏனைய கல்விபோல் அல்லாது உலகவாழ்க்கையையே புரிந்து கொள்ள முயற்சிக்கப்படும் ஒன்றாகும். இதுவும் ஓர் அறியாமையை அகற்றும் போக்குடையது. எத்தகைய அறியாமை எனின் உலகத்தையே, வாழ்க்கையையே ஓர் நூலாகக் கண்டு அது பிரகாசமாய்(translucent) ஒருபுடை நின்று அதே பொழுது அப்பிரகாசமாய்(opaque) இன்னும் பல விடயங்கள் நிற்பதைக் கண்டு, அந்த அப்பிரகாசத்தின் மூலம் தன்னுள் செறிந்திருக்கும் அறியாமை என்று அதனை, அந்த உலகமூடத்தை இலதாக்கும் நோக்கில் இயற்றப்படுவதே மெய்யறிவாய்வு எனும் கல்வி என்றது. இதுவே தொல்காப்பிய பாரம்பரியத்திற்கு அடிப்படையான நூல்நெறியுமாம். நுனித்தகு புலவர் கூறிடும் நூலினை பற்றி, நுதலியது அறிந்து அதனை புரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்குவான் ஒருவனுக்கு நூலின் புறவுரு பிரகாசமாய் புதையுரு அப்பிரகாசமாய் நிற்றலால், தான் அந்நூலினை பழுதற அறியவில்லை, அந்நூற் பொருளை நோக்க தான் இன்னும் அறியாமையிலேயே இருக்கிறேன் என்று உணர்கிறான். இ ந்த அறியாமையை இஇலதாக்கு முகத்தானே பற்பல உத்திகள் கையாண்டு ஐயம்திரிபற அந்நூலை கற்றுத் தெளிகின்றான். தெளிகின்றபோது அப்பிரகாசம் அகன்றுவிட நூல் முற்றிலும் பிரகாசமாகி தெற்றென அறிந்த ஒன்றாகி விடுகின்றது. இவ்வாறு வாழ்க்கையையே புறவுரு புதையுரு என்ற இரட்டுரு நூலாகக் காணும்போதே அதன் அப்பிரகாசம் உணர்த்தும் புதையுருவை அறிந்து செறிந்திருக்கின்ற அறியாமையை இலதாக்கும் முயற்சியே மெய்யறிவாய்வு எனும் கல்வி என்றாயிற்று.
ஆன்மாவின் மாட்டெழும் உலகின் அப்பிரகாசமே, வாழ்வின் கோள் இஇஃதென்று உணரா நிலையே, அதன்கண் குறிப்புக்காலமாய் காலவுணர்வு எழுதற்குக் காரணமாக ஆகின்றது

இனி இந்நூலிய மரபு வழி அளத்தல் என்றால் என்ன என்பதை விளக்குகின்றார்.

1.13
கற்றலே அளத்தல் காரணமதற்கு கல்வான்கண்
நிற்றல் நீசந்தரு மறியாமை

(இ-ள்)

பற்பல அளவைகளால் அளந்து மெய்மையைத் தேர்ந்து பொய்மையை ஒதுக்குதலும் மேற்கூறப்பட்ட கற்றலும் வேறல்லவென்றது. இதனால் நூலுத்தி எனப்படுபவற்றை வாழ்க்கை நூலிற்கு பெயர்க்கும் போது ஆங்காகும் அளவைகள், அளத்தற் செய்திகள் இத்தகைய உத்திகள் ஆகின்றன. உத்திகளாவது அகத்திலே ஒளி பிரகாசம் உதிப்பித்து ஏற்கனவே செறிந்திருக்கும் அறியாமையை நீக்கிடும் செயல்கள் எனப்படும். ஏன் அளத்தல் கற்றலாகின்றதெனின் யாங்கு அளந்து ஒன்று மெய்யென நிறுத்தப் படுகின்றது, ஆங்கு அதனைச் செய்வான் கண்ணுள்ள அறியாமை ஒருபுடை அகற்றப்படுவதால் என்க.
அகத்தே செறிந்துள்ள அறியாமை, வாழ்க்கையை ஒரு நூலாகக் கருதி அதனை சிந்திப்பான்கண் அதன் அப்பிரகாசம் உணர்த்தும் அறியாமை, அஞ்ஞான இருள் ஆற்றல் மிக்கது, எளிதில் நீக்கக் கூடியது அல்ல வென்றும், அதுவே உலகத்து எல்லா இடுக்கண்களுக்கும் காரணமாக இருக்கின்றது என்றும் நவின்றது.

இவ்வாறே கூறுவர் நல்லாதனார் தன் திரிகடுகத்தில்:

குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்
கற்றறிவு இல்லான் கதழ்ந்துரையும் - பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இஇம்மூன்றும்
எண்ணின் தெரியாப் பொருள்

ஓர் குருடனுக்கு தன் மனையாளது அழகு அப்பிரகாசமாக இருக்கின்றது. தன் அகத்து இருள்தீர கற்றறிவு இல்லான் மாட்டு நுட்பமான ஓர் உரையும் அவன் புரிந்துகொள்ள முடியாதவொன்றாய் நிற்கின்றது. விளங்குகின்ற பண்ணின் இலக்கணம் அறியாதான் யாழிசை கேட்கும்போது அதன் முழுவறிவு தோன்றாது அதுவும் அப்பிரகாசமாய் கிடக்க சுவை நுகர்வும் குன்றியதாகவே இருக்கும். இத்தகைய அறியாமைகளை சிந்திக்கும் பொழுது, தெரியாமை எனும் நிலை ஆன்மாக்களை பற்றி நிற்கின்றது, அதனை மெய்யறிவாய்வு வழி கடிதல் வேண்டும் என்றவாறு.

இனி இதனால் அளத்தல் போன்ற மெய்யறிவு நிறுத்தல் தொழில்கள் அனைத்தும் உண்மையில் அறியாமை, தெரியாமை போக்கும் உத்திகளே என்கின்றார் அடுத்து.

1.14

காணுங்கால் கலைகளனைத் துங்கல்விதரு முத்திகள்
பேணுங்கால் உலகினைப்பெரு நூலென

(இ-ள்)

நூல் உத்திகள் என்பன கற்கப்படும் நூலொன்று அதனைக் கற்பான் அகத்து அந்நூலினால் ஆகும் தெரியாமையைப் போக்க எழும் வினைகளாம். ஓர் நுனித்தகு புலவர் யாத்த நூலிற்கு மூலமாக நிற்கின்ற காட்சியை தானும் பெற்று ஒத்துப்போக உதவுவதே உத்திகள் எனப்படும். இஇதனால் தான் தொல்காப்பிய மரபியலார் அதனை ஒத்த காட்சி உத்தி என்று நவின்று, அவற்றை விரிக்குங்கால் நுதலியது அறிதல், அதிகாரமுறைமை அறிதல், தொகுத்துக் கூறியதின் தொகைமை அறிதல், வகுத்து மெய்நிறுத்தியதின் வகைமை அறிதல், மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்து அறிதல், மொழியாததனை மொழிந்தவற்றின் வழி முட்டின்றி ஊகித்து அறிதல் என்றவாறு முப்பதிரண்டு வகை உத்திகளை விரிக்கின்றார். உலகினை, ஆங்காகும் வாழ்க்கையை நூலைப் போன்றவொன்றாக பற்பல ஞானங்களை தன்னகத்தே கொண்டு நிலவுகின்ற ஒன்றாகக் கொள்ளும்போது, அதனைத் தெரியாமை , வாழ்க்கையை உணராமை , உளந்தட்ட அதனைப் போக்கும் முகத்தான் எழும் பல்வேறு கலைகள் அனைத்தும் நூலுத்திகள் போன்று உலகியலுத்திகள் என்றவாறு. இந்த உலகியுலுத்திகளே அளவைகள் என்றும் அவற்றையே காண்டல், கருதல் ஆகமம் என்றவாறு வகுத்துத் தொகுப்பதுமாகும் . பின்பு இவை இன்னும் விளக்கப்படும்.

இனி இவ்வாறான உலகவுத்திகள் எனப்படும் கலைகளில் சிறந்தவற்றை தொகுத்து வகுத்துக் கூறுகின்றார்.

1.15

காண்டலுங் கருதலுங் கடந்தறி திறத்தின்
மாண்டநல் லாகமும் மறுவில

(இ-ள்)

உலகவுத்திகள் எனினும் மெய்யறிவுத்திகள் எனினும் ஒன்றே. புரிந்துணர்வு பயப்பித்து வாழ்க்கையை ஓர் பிரகாசப்பொருளாக மாற்றுந்தன்மையன இஇவை. இவற்றில் பலதிறப்பட்ட காண்டற்கலைகளும் கருதியறிக் கலைகளும், மலங்களை சரியாகிரியா யோக பயிற்சிகளின் வழி வாட்டி ஞானவிழி திறக்கப்பெற்று அதன்வழி கரந்துரு காண் திறன்பெற்று மறையாகக் கிடப்பதை தரிசிக்கும் ஆகமக்கலையும் குற்றமிலாத அளவைகள் அல்லது மெய்யறிவுத்திகள் என்றது. இவற்றானன்றி வாழ்க்கைதான் யாதென்று புரியாது போய்விடும் என்பதின் இஇவ்வாறு.
மேற்கூறிய மெய்யறிவுத்திகள் பயிலும் கலைகளை பொருள்வகையின் அடுத்து வகுத்துக் காட்டுகின்றார்.

1.16

முப்பொருள் தெரிக்கும் முத்திறக் கல்வியின்
முடியாவறிவு மூவுலகிலு மில்.

(இ-ள்)

முத்திறக் கல்வியாவது பொறிலியக் காட்சியின் வழி அமையும் பொருட்கல்வியும், நூலிய நுதலியக் காட்சிகள் வழி பசுக்களின் இயல்புகளை அறியத்தரும் தற்கல்வியும், நுதலியப்பார்வை வளர அதன்வழி வரும் விஞ்ஞானக் காட்சி சிவஞானக் காட்சி போன்றவற்றின் வழி பதி இயல்புகளை அறியத்தரும் இறைக்கல்வியுமாம். முப்பொருளாவது பதி பசு பாசம் என்பன; எல்லா பொருள்களும் இவற்றின் ஒன்று என்பதின் எல்லாக் கல்விகளும் முத்திறக்கல்வி என்றது. எவ்வகையான கலைகளும் , காண்டல் கருதல் ஆகமம் என்று பகுத்துக் கண்டாலும் வேறுவகையிற் கொண்டாலும், அவை பாசவறிவினைத் தருகின்ற பொருட்கல்வியாக, பசுவறிவினைத் தருகின்ற தற்கல்வியாக, பதியறிவினைத் தருகின்ற இறைக்கல்வியாக இஇருக்கும் என்றது. எல்லாப் பொருள் வகைகளும் இந்த முப்பொருளில் அடங்கிவிடுவதால், எஞ்சி நிற்பது யாதொன்றும் இல்லாததால், இந்த பொருள் வகைக்குள் அடங்காவறிவு யாதுமில்லை என்றது.

இத்தகைய மெய்யறிவுத் திறனில் காண்டற்கு சிறப்பிடம் உண்டு என்பதால், அதனை சிறிது விரிக்கின்றார்.

1.17

காண்டல் அனைத்தும் கற்றல் காணாமை
கழற்றி யொன்றைக்கண் படுத்தலின்

(இ-ள்)

காண்டலை, ஐம்பொறிகள் பொருட்களைப் புல்லுவதால் தோன்றும் உணர்வு நிலை எனும் நையாயிகர் கூற்றை மறுத்தது. காண்டலாவது பொறிலியப் பார்வை, நூலியப்பார்வை, நுதலியப்பர்வை என்றவாறு வரும் பலவேறு பார்வைகள் வழி அமையும் ஒன்றாகும். இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நிலையில் காண்டலைக் காண, அது கற்றல் யாகின்றது; ஏனெனில் காணவாராது கிடக்கும் ஒன்றினை இக்கலையே காணுமாறு செய்து அதுகால் நின்ற அறியாமை தெரியாமை புரியாமை போன்றவற்றை அகற்றுதலால் என்க.

எஞ்சியில்லாது அனைத்தும் ஊடுறுவி அநந்நியாமக நின்று, அதுவேத் தானாகி பொருளைப் பொருளாய் அறிவதே நுதலியப் பார்வைகளின் முடிவில் பார்வையற்றப் பார்வை விளைய அஞ்ஞான்று தோன்றும் சிவஞானக் காட்சியாகும். இதுவே சுட்டு அறிதல் கெடுத்து , சுட்டுணர்வு இறந்து நின்று முற்றிலும் வியாபித்து அனைத்தையும் அதுவேத் தானாய் நின்று அறிதலாகும். கருதலும் அதனோடு வரும் எண்ணியற்இகலைகளும் இறந்த நிலை. இஇறைவனோடு பிரிப்பின்றி ஒன்றித்து இறைவனது கண்ணே தனது கண்ணாய்க் கொண்டு காண்டல் மாத்திரையான் நோக்காது நோக்கி அனைத்தயும் அநந்நியமாய் அறிவதாகும். இத்தகைய சிவஞானக் காட்சியை தனது எல்லையாகக் கொண்டிருக்கின்றது மெய்யறிவாய்வு என்று இதனால் உணர்த்தப்பட்டவாறும்

சிவஞானகற்பம்: முதல் தந்திரம்: பொதுப்பாயிரம் முற்றும்.






பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=சிவஞான_கற்பம்-1&oldid=10952" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 23 மே 2012, 07:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,691 முறைகள் அணுகப்பட்டது.