நந்நியல் பகுதி இரண்டுமரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:10, 20 ஏப்ரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் நந்நியல் பகுதி 2
படலம் 4: இல்லறத்தின் சூக்குமங்கள் இனி சிவசத்தி திருநடத்தின் விளைவாய் அவனியில் ஆன்மாக்கள் ஆணாய் பெண்ணாய்ப் பிறந்து திருமணம் புரிந்து இல்லறம் நடத்தி இன்பமும் துன்பமும் துய்த்து சந்தான விருத்தி செய்யும் சூக்குமம் விளக்கியது. இங்கு எவ்வாறு நந்நயப் பொருட்களின் வெளிப்பாடு விளக்கப்படுகின்றது. சூக்குமம் 32 அறத்தின் மூலம் ஆணையின் ஆக்கம் விளக்கம்: அறத்தையும் அன்பையும் நிலைக்களனாக் கொண்டே இல்லறம் தோன்றுகின்றது. இவ்வாறு வரும் அறம், இறையாணையின் ஆக்கப்பண்பென்றும் , அன்பு அஃதின் அருட்பண்பு என்றும் சூக்குமம் தெரித்தது. சூக்குமம் 33 பெண்மையின் முழுநலம் பேரின்ப அன்பு விளக்கம்: இல்லறத்திற்கு இணங்கும் பெண்மையின் இயல்பு விளக்கியது. பெண்மையின் இயல்பு பேரின்பத்தைத் தரும் அன்பு மீதூர நிற்பதென்றும் அதனால் எல்லா உயிர்களையும் பேணி வளர்த்து அவை பெரும் பெரும் பேறுகளை மகிழ்வதற்கு காரணமாக இருப்பதாம். சூத்திரம் 34 ஆண்மையின் முழுநலம் ஆற்றல்மிகு ஆக்கம் விளக்கம்: ஆண்மையின் தனிச் சிறப்பு பல ஆற்றல்களைக் கொண்டிருப்பதொடு மக்களிடையே உயர்ந்து நின்று செருக்கில்லா முறையில் பிறரை ஆளுதலுமாகும். அது பொழுது அறம் பிழையாதே ஆட்சி நடக்கும் என்பதாம். சூத்திரம் 35 ஆணும் பெண்ணுமாய் அணைந்தோர் வாழ்வில் விளக்கம்: நாதத்தின் வெளிப்பாடாகிய ஆண்மையும் விந்துவின் வெளிப்பாடாகிய பெண்மையும், ஓர் ஆன்மாக்கண் இல்லற வாழ்வின் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ உட்பதிந்து உடங்கியைந்து நிற்கத்தான் அன்பும் அறனும் ஒருங்கே தோன்றி ஆங்கு நின்றிலங்கும் என்றது. தொடரும் நந்நியல் 8 சூத்திரம் 36 ஆக்கமொடு புணர்ந்த அருள்மிகு வாழ்வில் விளக்கம்: இல்லற வாழ்வின் வழி இறைவனை உணர்வது எவ்வென்று விளக்கியது. ஆக்கமும் அருளும் ஒருங்கேத் தோன்ற நாதவிந்துக்களின் அறிவு மலர்கின்றது. இவை மேற் சென்று அவை தொழிற்படற்கு ஏதுவாய் நிற்கும் ஆணையினை உணர்த்தும் பண்பினது நன்றாக அமைந்த இல்லற வாழ்க்கை என்றது சூத்திரம் 37 ஆணையின் சொரூபம் அறிந்த நல்லான்மா விளக்கம்: சாயுச்சியப் பேறு அடைவதற்கு அன்பும் அறனும் பெருகிய அழகிய இல்லறம் உறுதுணையாம் என்று விளக்கி, இல்லறத்தின் இறை நோக்கம் தெரித்தது. சூத்திரம் 38 ஆக்கமே மிகூவும் அருளிற் றலைவன் விளக்கம்: பெண்மையுடன் கூடி அருளிற சிறவா ஓர் தலைவனுக்கு, ஆணவ நீக்கம் அறவே இல்லை என்பதால், வெறிபிடித்து தன் ஆக்கச் சத்தியினால் அனைவரையும் அடக்கி ஒடுக்கி வணக்கி, அகந்தை மேவர அறியாமையில் அழுந்தி கொடுங்கோலனாய் ஓர் அரக்கனாய்த் திகழ்வன் என்றது. அருளில்லா ஆக்கம் அடக்குமுறை ஆட்சியைக் கொண்டு வரும் என்றது. சூத்திரம் 39 ஆணையின் வழியது அன்பும் அறனும் விளக்கம்: மேலும் இத்தகைய கொடுங்கோலர் உள்ளத்தில், கொடூரம் விளங்கும் வரை இறைவனது திருவாணை புதையுண்டே கிடக்கும். இதனால் ஆழமான ஞானமும் கிட்டாதாகி அவலமும் விரக்தியும் நோயும் தாக்கி மனவுழச்சலைத் தந்து அவனை வருத்தும் வகையில் சிந்திக்கவும் வைக்கும் என்றது. தொடரும்
சூத்திரம் 40 ஆக்கமில் அருளின் அச்சமே வளரும் விளக்கம்: ஆண்மை நலம் குறைந்துள்ள ஆன்மாக்களில், விந்துவின் இயல்பே மிகுந்து, அச்சத்தோடு வரும் பல மனோவிகாரங்களைத் தந்து, உரனும் துணிவும் தெளிவும் இல்லாமையால் அடிமைத் தனத்தையும் யாதையாவது பற்றிக் கொண்டு அதன்வழியே நிதானிக்கும் பண்பினையும் உருவாக்கும் நிலமை மெய்யாகி நிற்கும் என்றது. சூத்திரம் 41 அன்பும் அறனும் அனைத்துயிர் கண்வர விளக்கம்: குண்டலினி சத்தியைத் தந்து அதனை எழுப்பி, காமவேட்கை ஆன்மாக்களை வருத்தும்படி செய்து, அஃதின் ஊந்தலால் ஆணும் பெண்ணும் பொருந்தி, ஓர் ஆண் தன் ஆக்கமொடு அருளாகியப் பெண்மையையும், ஓர் பெண் தன் அருளொடு ஆக்கமாகிய ஆண்மையையும் பெற்று சிவசத்தியாய் மலர, தோற்றுவிக்கப்பட்டதே அறம்பிழையா அழகியக் காமம் என்று நற்காமத்தின் சூக்குமம் தெரித்தது. அழகியக் காமம் என்றதால் மன்மதக் கலையும் ஓர் கலையே என்றது. சூத்திரம் 42 இறைதன் ஆணையின் இயங்கிடு வான்மா விளக்கம்: இறையாணை அறிவுடன் இல்லறம் நடத்தும் ஆன்மாக்கள், சத்திநிபாதமாகியக் குண்டலினி சத்திப் பாய்வு பெறுவதை விளக்கியது. அருளே வடிவாய் அதனால் புண்ணியப் பாவச் சிந்தனைகளையும் கடந்து என்றும் மாறா ஓரியல்பொடு அழகெல்லாம் தன்னுள் கொண்டு பிறர்க்கு அடைக்கலம் தந்து புரக்கும் தன்மையுடன் இந்நிலைத் தூய்த்து இன்பமே சூழ இறைவனுடன் கலந்து பிரிவற்று சீவன்முத்தியுடன் வாழும் என்றது. நான்காம் படலம் முற்றும்
படலம் 5 : கலாவியல் இனி எல்லா நந்நயங்களும் தோன்றுதற்கு இடமாகிய நுண்கலைகளை விளக்கும் நோக்கின் இப்படலம் சூத்திரம் 43 : பயின்றிடு கலைகளில் பண்பின் அமைந்தவை விளக்கம்: காணவரும் பற்பல கலைகளில் பண்போடு அமைந்தவையாகக் கருதத் தக்கவை, இந்த உலகத்தையே செலுத்துகின்ற பரவாணையின் வழிப்படி அமைந்துவிட்டால் அவை அஞ்ஞான இருள் அகற்றி நந்நயப் பொருள் சிந்தையிற் பட வைக்கும் திறனுடைய ஓர் சாதனமாகும் சூத்திரம் 44 பண்பென்றும் பகரொணா இன்பவெழி லென்றும் விளக்கம்: கலைகளில் அமையும் இறைநலங் காட்டும் இயல்பை இன்னும் விளக்கியது. பக்குவத்தில் முதிர்ந்து உயர்ந்து செல்வதற்கு உதவும் நந்நயப் பொருளை தரிசிக்க அனுபவிக்க உதவும் இயல்பினை விளக்கியது. ஏண: உயர்ந்த சூத்திரம் 45 வடிவாய் வண்ணமாய் நளினமாய் நற்சுவையாய் விளக்கம்: நந்நயப் பொருளை சிந்தையில் உணர்வில் கொண்டு வரும் சிறப்பு மிகு கலைகள், அத்தகைய சீர்மை பெறுவதற்குக் காரணம், முன்பு கூறியது போல தெய்வீகம் நிறைந்திருப்பதொடு, மேலும் இறைவனே ஆழத்தில் நிற்கும் புதைபொருளாய் மறைபொருளாய் இருந்தவாறு ஆடுவதும் இன்னொரு காரணம் என்பதாம். ஆணவ இருளில் அகப்பட்டு இடர்படும் ஆன்மாக்கள், தானேயாய் இவ்வுன்னதக் கலைகளை படைக்க முடியாது என்பதையும் உணர்த்தக் கருதியது. தொடரும் நந்நியல் 11 சூத்திரம் 46 ஆணவத் தளைப்படு அவதி மானிடன் விளக்கம்: தெய்வீகக் கலைகளின் தெய்வீகத்தை உணரும் பக்குவம் எல்லார் மாட்டும் இல்லை. நமன் செய்யும் நளினக் கூத்தினை பக்குவம் இல்லாதோர் கண்டு மயங்கி விழுகின்றனர். இதற்குக் காரணம் ஆணவமலத் தளைபட்டு அஞ்ஞான இருளிற் கிடப்பதே யாகும். சூத்திரம் 47 ஆனிப் பொன்னும் அதனுரும் அணியும் விளக்கம்: கூடத்தப் பிரமமே பொருள் எனும் வேதாந்தக் கூற்றைக் கண்டித்தது. தூயப் பொன்னும் அதனின் ஆகும் அணியும் ஒன்றெனக் கூறும் போது, அணியில் விளங்கும் அழகும் கலையும் மறக்கப்படுகின்றன. இக்கொள்கை உடையோர். தாமே தோற்றிக் கொண்ட மயக்கில் விழுந்து கண்ணிருந்தும் காணகில்லா குருடர்களாய் தம்மை ஆக்கிக்கொள்வதால் யாண்டும் இவர்கட்கு ஏற்றம் இல்லை என்றது. இந்த மயக்கத்தினால் இறைவனையும் உணராது இடர்படுவர் என்று அவர்களைத் தெளிவித்தற் பொருட்டு கண்டித்தது. சூத்திரம் 48 ஆணையின் ஆட்டம் அவனியி லெங்கும் விளக்கம்: மயக்கினைத் தரும் வேதாந்தம் விட்டு, தெளிவினைத் தரும் சித்தாந்தம் கண்டோர், இறைவனது ஆணையின் எழிலான ஆட்டத்தை பெருங்கலைகளிற் கண்டு, அவைக் காண வருவதே என்று தெளிந்து மகிழ்ந்து, இறைவன் தன் கருணையையும் அதன்வழி கண்டு சீலம் பேணி சிறப்புடன் நற்சிந்தையுடன் வாழ்வர் என்றது. இதனால் பொய் வேதாந்த நெறி விட்டகன்று மெய்மையின் சித்தாந்த நெறி போற்ற வேண்டுமென வற்புறுத்தியதும் ஆகும்.
அன்பும் அறனும் அழியாத திருவெழிலும் விளக்கம்: அருங்கலைகள் பல பண்டு தொட்டே சமயச் சட்ங்களாக திகழ்ந்து வருவதை விளக்கக் கருதியது. இக்கலைகள் தெய்வீக உணர்வை அகத்தே தோற்றுவித்து அதனால் ஆணவமலத்தின் வலுப்பிடியை சிறிது தளர்க்கும் பெற்றிமை உடையது என்றது. தொடரும் நந்நியல் 12 சூத்திரம் 50 திறந்த மதியொடு திருவெல்லாங் காணவிழை விளக்கம்: திறந்த மதியொடு சிறந்து விளங்கும் சிந்தையினர்கட்கு அம்முயற்சிக்கு ஏற்ப இறைவன் மறையாகவும் தெளிவாகவும் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு, அவற்றின் வழி ஆழ்ஞானங்கள் பலவற்றை அருளி தனது தற்சொரூபத்தையே முடிவில் காட்டி வீடுபேறு அருளுவன் என்றது சூத்திரம் 51 கலைகளில் நிறைந்திடு காமர்ச் செறிவெலாம் விளக்கம்: மேலும் ஞானங் கைவரப் பெறாதார் மாட்டிலும், காமர்ச் செறிவினைக் காட்டி அதாவது கருத்தைக் கவரும் அழகினைக் காட்டி இறையுண்மையை உணர்த்தும் பண்பின நற்கலைகள் என்றது. சூத்திரம் 52 பல்கலை கட்கற்று பண்பழி யாணவம் விளக்கம்: நற்கலைகளின் அறிவும் பயிற்சியும் எவ்வாறு முடிவில் தூய்மைத் துறவினையும் அதன்வழி இடர்ப்பட்டுழலும் மக்களின் துயரங்களை தீர்ப்பதே மிகச் சிறந்த திருப்பணி எனும் கருத்து சிந்தையில் வலுவாக நிற்க திருத்தொண்டனாய் மாறி விளங்கும் பண்பினை விளக்கியது. சித்தத்து விலங்குகள் திமிரிய வீரன் விளக்கம்: சித்தத்தில் விளங்கும் விலங்குகளாகிய வினைகளை எல்லாம் இறையருளினால் எரித்து இவ்வாறு நற்கலைகளை போற்றும் பண்பாளன், பகை நினைவு யாதும் இல்லாது பரந்த சிந்தையுடன் எல்லா உயிர்களையும் ஒருங்கே அனைத்து சாதி மத பேதங்கள் சூத்திரம் 54 இன்ப அன்பொடு எழில் அறத்தொடு விளக்கம்: மேலே அன்பும் அறனும் எவ்வாறு ஒருங்கே ஆன்மாக்கள் நடத்தும் இல்லற வாழ்வின் வழி மேம்படும் என்று விளக்கப்பட்டது. இனி மக்களைப் பெற்று குடும்பம் உண்டாக அதனைப் பேணுதற்கு இலக்கணம் நற்கலைகளின் வழியாக விளக்கப்பட்டது. பண்புடைய பற்பல கலைகளை பயின்றிடு சூழலை உருவாக்குவதே தான் பெற்ற மக்கட்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமையாகும். இதுவே குழந்தை வளர்ப்பு நெறியின் அடிப்படை நோக்கமாகும். இதற்காகவே இறைவன், ஓர் ஆணும் பெண்ணும் காமம் தூய்த்து மகிழும் அதே பொழுது, சந்ததி விருத்தி செய்யவும் ஆங்கே ஓர் வழி வைத்து அருளியுள்ளான். இதனால் இத்தகைய சூழலில் குடும்பத்தை நடத்திச் செல்ல உதவுதற்கே அரசியல் என்று அரசியல் அறத்திற்கும் ஓர் இலக்கணம் காணக்கிடக்கின்றது. கலாவியல்: ஐந்தாம் படலம் முற்றும் நந்நியல் 13 படலம் 6: ஒழிபியல் மெய்யுணர்வின் தோற்றத்தை, அது எவ்வாறு அனுபவமாகின்றது என்பதை விளக்கக் கருதியது, சூத்திரம் 55 தூயநல் லாடியின் துணிதருநற் சாயையென விளக்கம்: எந்த அழுக்கும் துகளும் தூசும் விக்கினங்களும் குறையும் இல்லா நல்லாடி ஒன்று, தான் பிரதிபலிக்கும் பொருளின் தன்மை எல்லாம் எந்தவொரு விகாரமும் இன்றி, உள்ளதை உள்ளவாக் காட்டும் தன்மையால், காண்பது உண்மையென்றே ஐயமும் திரிபுமின்றி துணிதற்குக் கருவியாக நிற்கும். அதே போல எவ்வித மலங்களாலும் மாயைகளாலும் பந்திக்கப்படாதவாறு உணர்வு விளங்கி, அந்நிலையினில் பொருளைக் காட்டுகின்ற பொழுது, எந்த விகாரமுமின்றி உள்ளதை உள்ளவாக் காட்டும். இத்தகையக் காட்சிகள் மெய்யுணர்வுகளை பிறப்பிப்பதாக சித்தாந்தங்களையே அனுபவிக்க உதவும். மேலும் ‘சித்தியல்’ எனும் சிறுநூலைக் காண்க. விரிவு அங்கு. சூத்திரம் 56 உணர்வில் உதிப்பதை ஒண்பொரு ளாக்கி விளக்கம்: பொருளணர்வினைத் தரும் உணர்வின் தெளிவுகள் அனைத்தையும், மொழி என்பது தன் பல்வேறு இலக்கணங்களில் மறைத்துக் கொண்டிருப்பதால், மெய்யறிவு வேட்கையின் முதற்படியாக மொழியியல் ஆய்வு ஆகின்றது. பரநாத விந்துக்களால் தோற்றப்படும் மந்திரங்களே, பல்வேறு மாறுதல்கள் அடைந்து, மொழிகளாக பேதப்பட்டு வைகரி பைசந்தி மத்திமை சூக்குமை அதிசூக்குமை என்றவாறு ஒன்றில் ஒன்று புதைந்து புதையடுக்காக நிற்கின்றன. இவற்றை ஆய்ந்து பொதுவியற் கூறுகளை எல்லாம் திறம்பட காணுற்றால், மந்திர சொரூபியாக இறைவனது தற்சொரூபத் திருமேனி தெரியவரும். இக்கருத்தின் விரிவை ‘உயர் ஞானப் பனுவல்” எனும் அடியேனது சிறுநூலில் காண்க. திருமந்திரம் நான்காம் தந்திரத்தையும் ஆழக் கற்க. தொல்காப்பியப் பயிற்சியும் மிகத் தேவை
உரை யுணர்வில் நிறைவ தென்றும் விளக்கம்: மேற் சூத்திரத்திற்கு ஓர் புறனடை. எல்லா பொருளுணர்வும் மொழிக்குப் படுமாறில்லை. ஆனால் அவ்வாறு அகப்படாததும் அகப்படுவது கொண்டே வேறென்று ஊய்த்து உணரப்படுவது என்று விளக்கியது. மொழியுணர்வில் அகப்படுவது பற்றி பொருளாய்வு வேண்டியதே வீணல்ல என்றது தொடரும் நந்நியல் 14(Final) சூத்திரம் 58 அறியவரும் உணர்வின் உலகை அறிந்து விளக்கம்: இதன் பொருள் வெளிப்படையான ஒன்று. உணர்விலே உதிப்பது அறிவிற்பட்டு பொருளாகத் தெரிந்தக்காலே, அஃது சொற்களால் குறிக்கவரும் ஒன்றாகின்றது. ஆகவே மொழியின் வழி அறியப்படுவதாயும் அறியப்படு பொருளின் இலக்கணத்தையும் அறிவின் தொழிற்பாடுகளையும் தெரிதல் உறும். இவ்வாறு தெளிந்த பிறகே உணர்வில் உதித்து ஆனால் அறிவிற் தனித்தும் படாது உணர்வோடே கலந்து கரந்து உட்பட்டே இருக்கும் மறைபொருட்களின் தன்மையை எதிர்மறை அனுமானத்தால் --- அல்ல அல்ல எனும் நெதிப்பால்---- ஓர் வகையில் அறிய வரும். இந்நெறியிலலேயே கள்ளனாய் எங்கும் கரந்துள்ள சிவபரம்பொருளை அறிந்து மகிழ ஓர் அழகிய நெறியாம் என்றது.
ஆணையின் விளக்கமாம் ஐந்தொழில் களவையே விளக்கம்: உணர்வின் தெளிவாய் உயிர்கட்கண் தோன்றும் அனைத்து சித்துக்களும் தோன்றுதற்குக் காரணம், எல்லா முயற்சிகட்கும் மூலமாய் உயிரோடு கலந்தும் வேறுநின்றும் விளங்கும் இறையாணை என்பதின் விளக்கமாகிய தோற்றல் நிலைப்பித்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழில்களே. சிவசத்தியாக திருசிற்றம்பலத்தில் பரசிவன் ஆடும் கூத்தும் இஃதே. தன் ஆணையைப் பிறப்பித்தே இவ்வாறு ஆடுகின்றான், ஐந்தொழிகள் இயற்றுகின்றான். சூத்திரம் 60 முற்றும் உணர்தல் முடியா வொன்று விளக்கம் முத்தியின் இயல்பை ஓர் புதிய முறையில் விளக்கக் கருதியது இச் சூத்திரம். எல்லாவற்றையும் அந்நியமின்றி அவையேத் தானேயாய் நின்றும் ஒருங்கே பிழையின்றி உணர்ந்திருக்கின்ற பரஞான அல்லது சிவஞான நிலை இறைவனுக்கு இயல்பான ஒன்று. ஆனால் மலங்களால் பந்திக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு அவை நீங்கிய பொழுதும் இறைவனுக்கு தொழும்பனாய் நின்றே ஞானம் புசிக்கவல்ல ஆன்மாக்களுக்கு அது அமையாது என்பதாம். அதேப் போன்று சிந்தனை பலத்தால் பொருந்தி வருகின்ற ஏரண நெறிகட்கு உட்பட்டு வரம்பிலறிவு பெறுதலும் மானிடராய் பிறந்த எவ்வுயிர்க்கும் அமையாதவொன்று, இதுவரையில் இத்தகைய உணர்வும் அறிவும் பெற்றாரை யாங்கும் கண்டிலம். இனியும் காண்போம் என்பதற்கு வழியும் இல்லை. ஆனாலும் முற்றுணர்வும் வரம்பிலறிவும் பெறாத நிலையிலும் முத்தி நிலல பெற்றாரை காண்கின்றோம். இதனால் முத்தியின் இலக்கணம் வேறொன்றாகின்றது. அது யாதெனில் உலகத்தைத் தோற்றுவித்து நிலைப்பித்து அழிப்பித்து அதனூடே தன்னை மறைத்தும் வெளிப்படுத்தி அருளியும் செல்கின்ற இறைவனது திருநோக்கின் வெளிப்பாடாகிய ஆணையை பிழைபடாது அளந்து அத்துடன் யாண்டும் பிளவு படாத ஒருமையுடன் திகழ்ந்து, அதன் வழி வாழ்தலே யாகும். இறையாணையுடன் வாழ்வதால் இறைதன்மையே இறைகுணங்களே முற்றிலும் கைவந்த ஓருயிராக இத்தன்மைய ஆன்மாக்கள் ஒளிவிட்டு பிரகாசிக்கும். இதுவே சித்தமலங் கெடுத்து சிவத்தோடு அந்நியமின்றி ஒருமையுடன் வேறற நின்று உய்ப்பதாகும். இது சீவன்முத்தி, பரமுத்தி அல்ல என்பாரும் உளர். படலம் 6 ஒழிபியல் முற்றும் நந்நியல் முற்றும்
|