தொடரும் உரையாடல்: எதற்கும் சலனமற்று......மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:43, 23 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் சமீபத்தில் விட்டல் ராவின் 'தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்' என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. மிகவும் குறிப்பிட்டுப் பேசவேண்டிய புத்தகம், மிகவும் குறிப்பிட்டுப் பேசவேண்டிய விட்டல் ராவிடமிருந்து. பல பார்வைகளில் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். அவரது அக்கறைகளும் திறமைகளும் பல துறைகளில் விரிந்து கிடப்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இன்று பேசப்படும் தமிழ் எழுத்தாளர்களில்கூட அவரும் ஒருவராக இல்லை. தமிழ் நாட்டில் இது எப்படி நிகழ்கிறது என்பது எனக்குப் புரிந்ததில்லை.
விட்டல் ராவ் நிறைய எழுதியிருக்கிறார். நாவல்கள், சிறுகதைகள் என. அவரது எழுத்து அவரது பரந்த அனுபவங்களிலிருந்து பிறந்தது. மிக அமைதியான, குரல் எழுப்பாத, சீற்றத்தைக் காட்டாத எழுத்து. முதலில் எனக்குப் படிக்கக் கிடைத்தது, நதி மூலம் என்ற நாவல். ஒரு மாத்வ பிராமண குடும்பத்தின் மூன்று தலைமுறைச் சரித்திரம். விஷயம் என்னவென்றால், எந்தத் தனிமனிதனும் ஒரு தீவல்லவே. அவன் சமூகத்தின் ஒரு அங்கம். சரி, அதே சமயம் அவனது தனி மனித வாழ்க்கையும் உண்டு, அவனது ஆளுமையும் உண்டு. இம்மூன்று தலைமுறையினரின் சரித்திரம், அக்குடும்ப சரித்திரமாகவும், அதே சமயம் அந்நீண்ட கால கட்டத்திய நாட்டின், சமூகத்தின் சரித்திர பாதிப்பில் வாழ்ந்ததால், சமூக சரித்திரப் பிரவாகமும் சொல்லப்பட்டு விடுகிறது. அக்குடும்பத் தனிமனிதர்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது அதோடு பின்னிப் பிணைந்த நாட்டின் சமூகத்தின் சரித்திரமும் நம் முன் விரியும். மிக அமைதியாக ஆரவாரம் இல்லாமல் எழுதப்பட்ட எழுத்து. தமிழ் நாவல்களில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய எழுத்து.
'ஓவியக் கலை உலகில்' என்றொரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அத்தோடு காலவெளி என்றும் ஒரு சிறிய நாவல். விட்டல் ராவ், சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். தன் மூத்த மாணவர்களோடும் ஆசிரிய ஓவியர்களோடும் பழகிய அனுபவங்கள், கல்லூரி வாழ்க்கையில் கண்ட பொறாமைகள், உரசல்கள், ஏமாற்றங்கள், சமரசங்கள், அவற்றோடு அந்நாட்களில், ஓவியர்களும், அவர்கள் வயதை ஒத்த புது வேகத்துடன் எழுத வந்த எழுத்தாளர்களோடு தொடங்கிய உறவாடல்கள், இப்படி அக்காலச் சூழலை, வேகமும், ஏமாற்றமும், கொண்ட சூழலை அந்நாவலில் பதிய வைத்துள்ளார். இது என்ன நாவலா அல்லது செய்தித் தொகுப்பா என்று கூட எண்ண வைக்கும். தன் அனுபவங்களை ஒட்டியே எழுதுபவர்கள் அதற்கு மேல் அதன் ஆத்மாவை மீறிய கற்பனைச் சாயம் பூசாதவர்கள் எழுத்து அப்படித்தான் எண்ணத் தோன்றும். அப்படித்தான் அவரது மற்றவர்கள் என்ற நாவலும். விட்டல் ராவ் ஓவியம் பயின்றிருந்தாலும், எழுத்தில் தீவிரம் காட்டினாலும், இளமைக் காலத்தில் நாடகக் குடும்பத்தோடு உறவு இருந்தாலும், கடைசியில் அவர் வேலை டெலிபோன் இலாக்காவில் தான். முன்னர் அவர் ரேடியோக்ராஃபராக இருந்தார். தொழிற்சங்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தாரோ என்று எண்ணும் அளவுக்கு 1978-ல் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் போது அவர் அனுதாபம் வேலை நிறுத்தத்தின் பால் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டிருந்த மனைவியை மருத்துவ மனையில் சேர்த்திருந்த போது மருத்துவ மனையும் வேலை நிறுத்தத்தில். மிக நேர்த்தியாக, அசட்டு உணர்வுகளோ, சீற்றங்களோ கொட்டாது, உணர்ச்சி வசப்படாது, செய்தியாளன் போல எழுதப்பட்டுள்ள நாவல்.; இப்படி நிறையச் சொல்லிக் கொண்டு போகலாம். அவரது நூற்றுக் கணக்கான சிறு கதைகளும், இதே மன உணர்வில் எழுதப்பட்டுள்ளவைதான். ஆனால் மிக முக்கியமானவை. சாதாரணமாக மற்றவர்கள் எழுதத் துணியாதவை. ஒரு கதையில் ஏதோ ஒரு வீட்டைத் தேடிப் போகிற மனிதன் வழியில் கண்டவரை விசாரிக்கிறான். அது முஸ்லீம்கள் வசிக்கும் பகுதி. அதில் இருவர் பேசிக்கொள்கிறார்கள். இருவரும் முஸ்லீம்கள்: "அவுங்களா? அவங்க நம்மாள் இல்லையே. அவங்க தமிழ் பேசறவங்களாச்சே!" என்று பதில் வருகிறது. இது ஒரு வாழ்க்கை உண்மை. அது குரல் எழுப்பாது பதிவு செய்யப்படுகிறது.
சாதாரண மத்திய தர சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் போல அவரது கதை உலகம் காட்சி தரும். அவரும் நாமும் அறிந்தது அந்த சமூகம் தானே. தன் அனுபவ எல்லைக்கு அப்பால் விட்டல் ராவ் கால் வைப்பதில்லை. வண்ண முகங்கள் என்று நாடக உலகில் உழலும் மனிதர்களின் ஆசாபாசங்கள், அவதிகள், பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது கன்னட நாடக உலகம் . அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்ற குப்பி வீரண்ணா உலகம். விட்டல் ராவ் பிறந்தது வளர்ந்தது ஹோசூர். கன்னடம், தமிழ் இரண்டு உலகங்களிலும் கலந்து வாழும் ஊர். அவரும் கன்னடம் பேசும் மாத்வ பிராமணர். அவரது குடும்பம் அந்த நாடகக்காரர்களுடன் நெருங்கி உறவாடிய குடும்பம். அந்த ஆரம்ப காலங்களில் அந்த உலகுடன் நேரடி பரிச்சயம் உள்ளவர். அது தமிழுக்கு ஒரு நல்ல வரவு.
ஆனால் விட்டல் ராவ் போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வது இப்போதைய தமிழ் எழுத்துலகில் அவ்வளவாக ஃபாஷன் இல்லை. அவருக்குத் தெரிந்தது அவர் அனுபவித்த வாழ்க்கை தான். தன் இயல்பான ஈடுபாட்டில், தான் படித்து, கற்று அறிந்தது தான். இக்கால இஸம்கள் தெரியாது. தான் நேரடியாக அறியாததை கணினியிலிருந்து வலையிலிருந்து இறக்குமதி செய்து கடை பரப்புவது கிடையாது. இரைச்சலும், தீக்கங்குகளும் அவர் எழுத்தில் இல்லை.
அவரது பல வண்ண ஆளுமையில் சினிமாவும் சேர்ந்ததுதான். தமிழ் நாட்டில் பிறந்தவனுக்கு சினிமா மோகம் என்பது ஒரு நோய்கூறாக இருக்கும் போது, எந்த தமிழனதும் சினிமா ரசனை பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதில்லை. எல்லா சினிமாக்காரனும் கலைஞன் தான். எல்லாத் தமிழனும் கலாரசிகன் தான். ஆனால், கலையாகத் தமிழன் சினிமாவை அனுபவிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. ஒரு சிலர் இருக்கிறார்கள் தான். ஆனால் அக்கலை பற்றியும் கலை அல்லாதது பற்றியும் வெளிப்படையாக எழுதுவது என்பதும் மிக துர்லபம். ஆக சினிமா பற்றிய நுண்ணிய பார்வையும் ரசனையும் கொண்ட எழுத்துக்கள் மிக மிகக் குறைவு. அந்த எழுத்துக்கள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதவை தான். சில புத்தகங்கள் வந்துள்ளன. அறந்தை நாராயணன் என்பார் தமிழ் சினிமாவின் கதை என்ற புத்தகம் வெறும் தகவல் சேகரிப்புப் புத்தகம். என்னுடைய 'திரை உலகில்' என்ற புத்தகம் வந்தது தெரியாது பலருக்கும். தெரிந்தவர்களும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். சினிமாவைப் பற்றிக் கலா ரசனையோடு அணுகுவதாகச் சொல்லும் பத்திரிகை, கழகப்பற்றாளரை விட்டு '"தமிழ்த் திரை உலகிற்கு திராவிடக் கழகக் கலைஞர்களும் அறிஞர்களும் கொணர்ந்த புரட்சி கர மாற்றங்களை அறியாத சாமிநாதன்" என்று செமத்தியாகத் துவைத்து எடுத்த திருப்தி கொண்டார் அதன் ஆசிரியர். ஆக சாதிக்கும் அரசியலுக்கும் சினிமா ரசனையில் பங்குண்டு என்று தெரிந்தது. தியோடார் பாஸ்கரன் ஆங்கிலத்திலும் தமிழிலும் சில புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சினிமாவைக் கலையாக அறிந்தவர். ஆனால் படித்தவர் வட்டத்திலேயே கூட ரொம்பவும் அடக்கி வாசிப்பவர். இந்த எழுத்துக்களைக்கண்டு தமிழ்த் திரை உலகம் வெருண்டு விடுவதில்லை. அது வாழ்வது வேறு உலகம்.
ஆனால் விட்டல் ராவ் இந்த உள்வட்டத்தில் புகாமல், தன் இயல்பில் தனிமையில் தனக்கெனவே தன் ரசனையை வளர்த்துக் கொண்டவர். இந்தப் புத்தகத்திற்கு முன் 'சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்' என்றொரு புத்தகம் அவரது சில வருடங்களுக்கு முன் வெளிவந்துள்ளது. அது 'சுப மங்களா' இதழில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. உலகத் திரைப்படங்கள் என்று சொன்னாலும், அது பெரும்பாலும், இந்திய சினிமாவின் சத்யஜித் ரே, ஷ்யாம் பெனிகல், பிமல் ராய் போன்றோர் தவிர, ஹாலிவுட் உலகின் சிறந்த கலைஞர்கள், ஹிட்ச் காக், டேவிட் லீன், ஜான் ஹஸ்டன், பெர்ட்டோலூஸி, ஸ்டான்லி குப்ரிக், எலியா கஸான், விஸ்கோண்டி, டி சிகா, அகிரா குரஸவா போன்றோர் படைப்புகளையும் பற்றி தன் ரசனைக் குறிப்புகளைத் தருகிறார். அவை ஒவ்வொருவர் பற்றியும், கட்டுரை என்னும் அளவுக்கு விரிவான குறிப்புகள். அவற்றில் அவரதேயான ரசனையைச் சொல்கிறார். ஆனால் ஒன்று, உலக அளவில் பேசப்படும் கலைஞர்கள் என்ற தளத்தில் இவர்கள் எல்லாம் தமிழ் நாட்டளவில் ஹாலிவுட்டும் ஹிந்தி சினிமாவும் தரும் பரிச்சய எல்லைக்குள் அடைபடுபவை. அந்த எல்லைக்குள் விட்டல் ராவ் தன் ரசனையை, விஸ்தரித்து, கூர்மையும் ஆக்கிக் கொண்டது பெரிய விஷயம். கலைகளை நோக்கிய பயணம் அது. தேடல் அது. இந்த வட்டத்திற்கும் கிழக்கு ஐரோப்பிய, நார்வே ஸ்வீடன், லத்தீன் அமெரிக்க கலைஞர்களோ அவர்கள் படைப்புகளோ வராதது, விட்டல் ராவின் குற்றமல்ல. அகிரா குரசவாவையும், ரோமன் பொலான்ஸ்கியையும் கொணர்ந்த ஹாலிவுட் உலகம், யோஸிஜிரோ ஓஜூவையோ, ஆந்த்ரேஜ் வாஜ்தாவையும் கொணராதது தான் காரணம். இப்படி அனேக சிகரங்களின் கூட்டம், ஹங்கரி, ஃப்ரான்ஸ், இதாலி, போலந்து, செக்கோஸ்லாவேக்கியா, ஹாலந்து ஸ்பெயின் என்று நீள்கிறது. ஒரு விஷயம், இந்த சிகரங்களிடையே, அகிரா குரஸவா, செர்ஜி ஐஸன்ஸ்டைன், போன்றோரைத்தவிர, மற்ற ஹாலிவுட் பெருந்தலைகள், தொழில் நுட்பத்தை தம் தேவைக்கு விஸ்தரித்துக் கொண்டவர்கள் என்பதற்கு மேல் வாஜ்தா, தர்க்கோவ்ஸ்கி, ஜோல்டான் ஃபாப்ரி, மிஹாயில் யான்சோ, புனுவேல், ராபர்ட் ப்ரெஸ்ஸான், அண்டோனியோனி, ஃபாஸ்பைண்டர், வெர்னர் ஹெர்ஸாக், இப்படி நான் சொல்லிக்கொண்டோ போகலாம், இவர்களையெல்லாம் போன்று தமக்கேயான ஒரு உலகப் பார்வையை முன் வைத்தவர்கள் என்று சொல்லமுடியாது. அத்தகைய ஒரு பார்வை சார்லி சாப்ளினைத் தவிர வேறு எந்த ஹாலிவுட் தொழில் நுட்ப சிகரத்திற்கும் இருந்ததில்லை. டேவிட் லீனைப் பற்றி மாத்திரம் ஒன்று சொல்லலாம். வெற்றி தோல்விகளைப் பற்றிய விஷயமில்லை. தொடர்ந்த ஒரு ஆளுமையைப் பார்க்கலாம் ரியான்ஸ் டாட்டர் படத்தில் சமுத்திரத்தின் பிரம்மாண்டமே ஒரு ஆக்கிரமப் பாத்திரமாக படம் முழுதும் கவிந்து படர்வதைப் பார்க்கலாம். அதுவும் ஒரு பாத்திரமாகவே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியாக, அதுபோல, லாரன்ஸ் ஆஃப் அரேபியாவில் பாலைவனம் படம் முழுதையும் ஆக்கிரமித்திருக்கும். வெற்று வெளியாக, அல்லது ஒரு பின்னணியாக மங்கித் தேய்வதில்லை.
டாக்டர் ஷிவாகோவில் சைபீரிய அகண்ட வெளிகளும், காடுகளும், பனிப்படர்வும். ஹாலிவுட் வட்டத்திற்குள்ளேயே கூட மிக விரிவாக பேசவேண்டிய ஆர்ஸன் வெல்ஸின் ஸிடிஸன் கேன் பற்றி போகிற போக்கில் ஒரு குறிப்பைத் தந்து விட்டுச் செல்கிறார் விட்டல் ராவ். அதன் பிறகு வெல்ஸின் ஒரே படம் காஃப்காவின் விசாரணை(The Trial) மட்டும் தான் என்று நினைக்கிறேன். அது நான் பார்த்ததில்லை.
ஒரு முக்கியமான விஷயம், உலகக் கலைஞர்கள் என்று ஹாலிவுட் வழி தெரிந்ததை எல்லாம், தன் ரசனையில் கண்டு அனுபவித்ததை எழுதுகிறார். அதே போலத் தான் அவர் இந்தியத் திரைப்பட உலகிலிருந்தும், சத்யஜித் ரே, பிமல் ராய், ஷ்யாம் பெனெகல், போன்றோர் படைப்புகளைப் பற்றி மிகவும் ரசித்து எழுதுகிறார். அதே ரசனை, ராஜ் கபூரையும், மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களைப் பற்றியும் எழுதுவது அவருக்கு சாத்தியமாகியுள்ளது. இது பற்றி நான் திகைப்புண்டாலும், விட்டல் ராவ் தரும் தகவல்கள் நம்மை திக்குமுக்காடச் செய்வன. ஒரு சின்ன உதாரணம். அறுபதுகளின் இறுதியில் ஜெயலலிதாவை கதாநாயகியாகக் கொண்டு Epistle என்று ஒரு ஆங்கிலப் படம் எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார். மலைத்துப் போகிறேன்.
இப்படி மலைக்கவைக்கும் தகவல்கள், ரசனைகள், நிறைந்தது தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என்னும் விட்டல் ராவின் புத்தகம், நான் முதலில் பிரஸ்தாபித்த புத்தகம். தகவல் என்ற அளவில் கூட, இதைவிட மூன்று மடங்கு தடிமனான தமிழ் சினிமாவின் சரித்திரம் புத்தகத்தில் காணப்படாத தகவல்கள் இதில் உண்டு. இப்புத்தகம் முழுதும், தான் அவ்வப்போது எழுதிவைத்திருந்த குறிப்புகள், டைரிகளின் துணையோடு எழுதப்பட்டது என்கிறார். ஆக, இதில் தரப்பட்டுள்ளவையும் அவரது அனுபவத்திலிருந்தும் ரசனையிலும் பிறந்தவை தான்.
தமிழ் சினிமாவின் ஆரம்ப 1935-ம் வருடத்திலிருந்து 1950 வரை வெளிவந்த சமூகப்படங்கள்,(ஏனெனில் ஆரம்பங்கள் நாட்டுப்புறக்கதைகள், புராணங்கள் என்றவாறே இருந்த காரணத்தால்), பக்திப் படங்கள், மாயாஜாலக்கதைகள், துப்பறியும் படங்கள், வீர தீர சாகஸப்படங்கள் என எழுதப்பட்ட சில வருடங்கள் முன் வகைப்படுத்தப்பட்டு ஆரம்பம் முதல் இன்றுவரை விமர்சனமும் தகவல்களுமாக எழுதியுள்ளார் விட்டல் ராவ். விட்டல் ராவ் 1951-ல் பிறந்தவர். இயல்பான சினிமா ஈடுபாடு, ஆரம்ப கால நாடக உலகப் பரிச்சயம், எழுத்தாளர், ஓவியக் கல்லூரிப் பயிற்சி என்றெல்லாம் ஒரு வித்தியாசமான பன்முக ரசனையும் ஆளுமையும் கொண்டவர் என்பது இப்புத்தகத்தில் வெளிப்படும் அவர் பார்வையும் விமர்சனங்களும் தெளிவாக்குகின்றன. பொதுவாகத் தமிழ் நாட்டில் காணப்படும் பாமர ரசனையே அறிவுஜீவிகளின் ரசனையும் என்ற வகையில் இல்லை விட்டல் ராவ். மிகத் துல்லியமாக பல விஷயங்களை ஆராய்கிறார். புதிய தகவல்களை தகவல்களாக அல்லாமல் ரசனை பூர்வமாகவும் தருகிறார். அவரது விவரத் தொகுப்புக்கும் ரசனைக்கும் உதாரணமாக ஒரு படம், பரசுராமர்,
சேலத்துக்காரர்கள் தயாரிப்பு என்றாலும் கோவை சென்டிரல் ஸ்டுடியோவில் தயாரித்தது. அது பக்ஷி ராஜா ஸ்டுடியோவாக மாறியது. " 30-களிலோ 40-களிலோ வெளியான இப்படம் பற்றிய இத்தகவல்கள் பத்திரிகைகளிலிருந்து சேகரிக்கப்படக்கூடியன. சரி, "காமிராவை இப்படத்திற்காகக் கையாண்டவர் அன்றைக்கு பம்பாயில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான் பொம்மன் இரானி. தந்திரக் காட்சிகளில் இவருக்கு உதவியாக இருந்தவர்களில் குட்ச்வாக்கர் என்பவர். இப்படத்தில் இசையமைப்பை புகழ் பெற்ற ஜி.ராமநாதன் செய்திருந்தார். இப்படத்தின் கதை வசனத்தை ஆக்கிய வரதநஞ்சைய கவிஞர் என்பவர் சேலத்தையடுத்த ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்தவர். பின்னாளில் நியூஸ் ஏஜெண்டாகவும் டூரிங் குத்தகைக்காரராகவும் (தீபம் டூரிங் டாக்கீஸ் முதலியன) காலங்கடத்தியவர்.." இப்படிப் போகின்றன தகவல்கள். தகவல்களே நிறைந்த தலயணைப்புத்தகங்கள் எழுதிப் பெயரும் விருதுகளும் பெற்றவர்கள் கூடப் பத்திரிகைகளில் சாதாரணமாகக் காணமுடியாத தகவல்கள். விட்டல் ராவ் எப்படிப் பெற்றாரோ, ஆச்சரியம் தான். இதெல்லாம் சரி ஆனால் "படத்தில் தந்திரக் காட்சிகளை விட அக்காட்சிகளின் போது பின்னணியில் தரப்படும் இசை-ஓசை தந்திரக் காட்சிகளினின்றும் விலகியே செல்கிறது" என்று அவர் தரும் விமர்சனம், அதன் நுணுக்கத்தைப் பார்த்து நாம் வியக்கும் அதே சமயம், இந்த விமர்சனம் எப்படி சாத்தியமாயிற்று என்றும் வியக்கத் தோன்றுகிறது. விட்டல் ராவ் பிறப்பதற்கு 10 வருடங்கள் முன்னரே வந்த படம். விட்டல் ராவ் வாலிப வயது எட்டி படங்களை ரசித்து குறிப்பு எடுக்கும் முதிர்ச்சி எப்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும்? சரி தமிழ் சமூகம், படங்களை வாங்கி சேகரித்து, பயில்வோருக்கு பார்க்கத் தரும் நிறுவனமோ கல்லூரியோ கொண்டதல்ல. ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் கூட இப்படங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஜெமினியின் நந்தனார்(1942) பத்து வருடங்களுக்கு முன் திரையிடப்பட்டது. அசோக் குமார்(1941), அம்பிகாபதி(1938) போன்றவையும் film archives-ல் கிடைக்கும் படங்கள். அம்பிகாபதி படத்தை நான் 1980களின் கடைசி வருடம் ஒன்றில் நான் தில்லியில் பார்த்திருக்கிறேன். 1939- வருட தியாகபூமியை தில்லியில் 1994-லோ என்னவோ தில்லியில் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் பூனே திரைப்படக் கல்லூரி நிறுவனம் தன் சேகரிப்பில் கொண்டுள்ள படங்கள். ஆனால் பரசுராமர்?. விட்டல் ராவுக்கு இவை எப்படி விமர்சன பூர்வமாக பார்க்கும் வயது காலத்தில் பார்க்கக் கிடைத்தன, அவை பற்றி குறிப்புகளும் எழுதி வைத்துக் கொண்டார் என்பது வியப்பான விஷயம். எது பற்றியும் தனக்கு நினைவு மயக்கங்கள் இருக்கின்றனவோ அது பற்றியும் அவர் கட்டாயம் குறிப்பிடுகிறார். தான் அனுபவிக்காதது எதையும் அவர் எழுதுவதில்லை. இது போன்று அனேக நுணுக்கமான விமர்சனங்கள் பழைய படங்கள் பற்றி அவர் நிறையவே சொல்கிறார். இவையெல்லாம் சாதாரணமாக நமக்குக் கிடைக்க வாய்ப்பில்லாதவை. மேலும் விட்டல் ராவின் நினைவாற்றல் வியக்க வைக்கக் கூடியது. ஒரு உதாரணம்: "1941 வருடத்திய அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் ஒரு வில்லன் பழம் பெரும் குணச்சித்திர வில்லன் கே.பி. காமாட்சி சுந்தரம்" என்று சொல்கிறார். இதையெல்லாம், 1951-ல் பிறந்த ஒரு மனிதன் 10 வருடம் முந்தி வந்து மறைந்த படத்தைப் பற்றி எப்படி நினைவு வைத்திருக்கமுடியும்?
அனேக இடங்களில் விட்டல் ராவின் ரசனை பாராட்டுக்குரியதாகவே உள்ளது. தமிழ் நாட்டு அறிவு ஜீவிகள் விழும் பாமர ரசனையில் அவர் விழுவதில்லை. ஒரு சமயம் வியப்பூட்டும் அவர் அடுத்த வரிகளில் நம்மை யோசிக்க வைத்து விடுகிறார்: "1958-ம் வருட உத்தம புத்திரன் புது மெருகுடன் தயாரிக்கப்பட்டு..." என்று சொல்லிச் செல்கிறவர்...."சிவாஜி கணேசன் நடிப்புத் திறன் மிக்கவர். ஏற்கும் பாத்திரத்தைக் கற்றறிந்து, உள்ளே நுழைந்து பாத்திரமாக மாற முயற்சித்தவர். ஆனால் அப்பாத்திரங்களை -அந்தத்துறைக்கு பொறுப்பேற்று அவற்றை மனதில் வரித்து வடிவமைப்பதில் பொறுப்பேற்றவர்கள் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அப்பழுக்கற்ற வரலாற்றுச் சிந்தனையோடு நூலக ஆவணத் தகவல் சேகரித்து.....இயக்குனர்கள் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும்..." என்கிறார். எதில்? உத்தம புத்திரனில்! அடுத்துச் சொல்கிறார்: (ஆனால் இப்படத்தில்) பாத்திர வார்ப்பு, வசனம் எல்லாமே அதீதமாகவும் மிக உரத்த கதியிலுமாக வடிக்கப்பட்டன. சகல தீர்மானங்களும் சுருதி பேதமடைந்து தோன்றின "இது தான் உனக்கான உனக்கேற்ற உனக்கேயான பாகம்" என்று சிவாஜிக்கான பாகங்களை உருவாக்கி, அவர் விஸ்வரூபியாக வளர்ந்ததால், அவரை அடக்கி, மயக்க சங்கோஜப்பட்டு, பயப்பட்டு......" "சிவாஜியும், எம்.கே.ராதாவும், பி.யு. சின்னப்பாவும். நாடக மேடைப் பாணியின் உரத்த அட்ட காச நடிப்பு, இயல்புக்கு அதீதமான - இயல்பு மீறிய மிகைச் சித்தரிப்பு, தணிந்த நடிப்புக்கு ஒத்து வராமை என்றிருந்தவர்கள். ஆனால் அதே சமயம் இவையெல்லாம் ரசிகர்களால் உடனுக்குடன் ஏற்கப்பட்டும், ரசிக்கப்பட்டு பலத்த பாராட்டுக்களைப் பெற்றும், இப்பாணியையும் இவர்களின் பாத்திர சித்தரிப்பையும் நடிப்பு வெளிப்பாட்டையும் ஏற்று அங்கீகரித்த கதை இவர்களின் கலைச் சோகம். கலையிலக்கிய ரீதியாக மூளைச் சலவை செய்யப்பட்ட தமிழ் சினிமா ரசிகர் மகா ஜனம் வேறு வழியின்றி இவ்விதமான ரசனைப் பெருவழியிலேயே முக்கால் நூற்றாண்டு காலமாய் நடந்து வந்து கொண்டிருப்பது முக்கிய காரணம்." "பாரதி ராஜா முதல் மரியாதையில் சிவாஜியை அடக்கி நடிக்க வைத்ததை, "அந்த ஆளுக்கு என்னிடம் வேலை வாங்கவே தெரியலை" என்று சொன்ன சிவாஜியை, "இதைப் போல (சிவாஜியின்) கடந்த கால நூற்றுக்கணக்கான படங்களிலும் செய்ய வைத்திருந்தால், பிராண்டோ இல்லை, அவன் அப்பன் தாத்தனையெல்லாம் இந்த வி.சி.கணேசன் என்னும் சிவாஜி கணேசன் நடிப்பில் பிச்சை வாங்க வைத்ததோடு 'செவாலியர்' போல எத்தனையோ விருதுகளை வாங்க வைத்திருக்க முடியும் " என்றும் சொல்கிறார் விட்டல் ராவ். நான் தலையைப் பிய்த்துக் கொள்கிறேன். இன்னமும், வேறோரிடத்தில், சிவாஜியைப் பார்த்துவிட்டு, ஆங்கில "நான் வணங்கும் தெய்வத்தை"ப் பார்க்கும் போது, ஸ்பென்ஸர் ட் ரேசி சிவாஜியை நடிப்பில் காப்பி அடிப்பது போல் தோன்றும்": விட்டல் ராவ் எழுதுதைப் பார்த்து, நான் செய்வதற்கு என்ன இருக்கிறது? கடைசியில் "பணத்தின் வரத்தை வைத்தே சினிமா வியாபாரம் பண்ணும் எழுபது வருட வறட்டுத் தமிழ் சினிமா வெளியில் "தரமான -கலை அழகு மிக்க அறிவார்த்த தளத்தில் இயங்கும்" என்றெல்லாம் மூச்சு விடக்கூடாது" என்றும் எழுதுகிறார். சிவாஜி 'செவாலியே' விருது வாங்கியது ஒரு பக்கம் இருக்கட்டும். "மிகுந்த மிகை நடிப்பைக் கட்டுப்பாடின்றிக் காட்டிய அலுப்பூட்டிய படங்களாய் கட்ட பொம்மன், திருவிளையாடல், வியட்னாம் வீடு......" என்ற பட்டியலில் இடம் பெறும் கட்ட பொம்மனில் நடித்த சிவாஜி கணேசன் கெய்ரோவில் நடந்த ஆஃப்ரோ ஏஷியன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது பெற்றார். இது சர்வதேச அரசியல் நல்லெண்ண வளர்ப்பைச் சேர்ந்த விவகாரம். சினிமா விவகாரம் அல்ல.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களும், அவர்களது பாத்திரங்களும் தான் இயல்பாக நடிக்கிறார்கள், இயல்பாகப் பேசுகிறார்கள், என்றும் மிகச் சரியாகச் சொல்கிறார். தமிழ் சினிமா நகைச் சுவை பற்றி விரிவாக ஒரு அத்தியாயமே எழுதியிருப்பதுடன், என்.எஸ் கிருஷ்ணன் பற்றி தனித்து ஒரு அத்தியாயமும் எழுதியிருக்கிறார். குறிப்பாக ஒன்றைச் சொல்லலாம்: " எல்.நாராயண ராவ் ஜெமினி நிறுவனத் தயாரிப்புகளில் தவறாமல் நடிக்கச் சந்தர்ப்பம் பெற்றவர்....நந்தனாரில் எலி துரத்தும் காட்சியில் லாரல் ஹார்டி பாணியில் செய்திருக்கிறார். இந்தக் காட்சியே அசல் ஹாலிவுட் காபி தான். அதெல்லாம் ஜெமினி படங்களில் சர்வ சாதாரணம்....இவர் போன்ற வெகு சிலரைக்கூட இன்றைய தலைமுறையில் சத்தான அசலான நகைச்சுவை நடிப்பில் காணமுடிவதில்லை" என்னும் விட்டல் ராவ் எவ்வளவு நுணுக்கமாக அவ்வளவாக பிரபலமாகாத நடிகர் பற்றிக் கூட உயர்வாக கவனித்துச் சொல்லமுடிகிறது. காப்பியடிப்பது பற்றி இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று சொல்லும் விட்டல் ராவ், அதே போல் சர்வசாதாரணமாகக் காணும் கே.பி.பாலசந்தர் படங்களைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்கிறார்.
எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம், விட்டல் ராவ் தமிழ் சினிமா இசை பற்றி எழுதியிருப்பது தான். படங்களோடான பரிச்சயம், ஆரம்ப கால நாடக உலகப் பரிச்சயம், இவற்றோடு ஓவியக் கல்லூரியில் ரஞ்சனோடு சினிமா பற்றியும் விவாதித்திருக்கிறார். தியாகராஜ பாகவதர் சிறையிலிருந்த காலத்தில் அவர் இடத்திற்கு வந்த ஹொன்னப்பா பாகவதர் விட்டல் ராவின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர். பி.யு.சின்னப்பபா, டி.ஆர்.மகாலிங்கம், யூ.ஆர் ஜீவரத்தினம் (இவரை எத்தனை பேர் நினைவு வைத்திருக்கின்றனர், அதே போல என்.சி.வசந்த கோகிலமும் தான், தியாகராஜ பாகவதர் போன்றோரின் மிகச் சிறப்பான பாடல்களை ரசித்து நினைவு கொள்ளும் போது, தமிழ் சினிமா ஏதோ ஒரு வகையில் ஒரு காலத்தில் மிகச் உயர்ந்த இடத்தில் இருந்தது எனபதை நினைவு கொள்ளலாம். அந்த இடத்தைத் தமிழ் சினிமா நிரந்தரமாக இழந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஒரு இடத்தில் விட்டல் ராவ் தரும் விவரம் திகைக்க வைக்கிறது: "ஜெமினி தயாரிப்புகளில் இசையமைப்பை ராஜேஸ்வர ராவ் அமைப்பது என்பது ஒரு மரபாகவே இருந்து வந்தது. மங்கம்மா சபதத்தில் அவர் ஐரோப்பிய இசையை ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையோடு கலந்தமைத்தார். சைகலிடம் இந்துஸ்தானி இசைப் பயிற்சி பெற்றதால் இவரது இசை தணிந்தும் இதமாயும் மெலோடியஸ்ஸாகவும் இருக்கும்" என்னுடல் தனிலொரு ஈ மொய்த்த போதுங்கள் இனியும் ஒரு குரல் - ஒரு நயமான இசை -தமிழின் கவித்வ சஞ்சாரத்துக்கு எடுத்துகாட்டான வரிகளை இந்த சமகால சினிமா பஜார் கூச்சல் வியாபாரத்தில் காணப்போகிறோமா, கேட்கப்போகிறோமா..?"
தமிழ் சினிமாவில், ஏன் உலக சினிமாவிலேயே கூட, கருப்பு வெள்ளைக் காலத்தின் அழகைப் பற்றி, அவற்றின் கலை அழகு பற்றி எழுதுகிறார் என்றால் , ஓவியப் பயிற்சியும் கலை அழகுத் தேடலும் கொண்ட விட்டல் ராவிடமிருந்து அது வருவது வியப்பில்லை.
வெங்கட் சாமிநாதன்/19.9.06 சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்: விட்டல் ராவ், நர்மதா பதிப்பகம், சென்னை.
|