இறைவனைக் காண்போம்! அழியவிருக்கும் உயிரினங்கள்மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:03, 24 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் அழியவிருக்கும் ஒரு பறவையைக் காப்பாற்ற: (1)
ஒரு காலத்தில் இந்தப் பறவைக்கு எதிரிகள் யாரும் இருக்கவில்லை. இதன் மாமிசம் உண்ண லாயக்கற்றதாம். ஆனாலும் மொரீஷியஸ் வழியே கப்பலில் சென்ற மாலுமிகள் அதன் அழகிய சுருள் சுருளான இறகுகளுக்காக தலையில் ஒரு கழியால் அடித்துக் கொன்றனராம். ஓன்றைக் கொல்லும் போது மற்றவை ஓடித் தப்பிக்காமல் அருகிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமாம் சுலபமாக அடித்துக் கொல்ல லாயக்காக.
இதையே தான் ஆஸ்திரேலியாவின் கோலாக் கரடியும் செய்திடுமாம். ஒரு கரடியை, ஒரு நீண்ட கழியில் சுருக்கு மாட்டி நீலகிரித் தைல மரத்தில் இருந்து கீழே இழுத்துத் தள்ளிடும் போது, அருகில் இருக்கும் மற்ற கரடிகள் ஓடிடாது அசட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு இருக்கும் என்று ஜிரால்ட் டரல் என்பவர் சொல்கிறார்.
பின் நாட்களில் மக்கள் மொரீஷியஸ் தீவில் குடியேறிய போது அவர்களுடன் வந்த பூனை, நாய் போன்ற மிருகங்கள் எஞ்சி இருந்த டோடோக்களை முற்றிலுமாக அழித்தன.
ஆங்கிலத்தில் முற்றிலும் வழக்கிலிருந்து மறைந்த ஒன்றை “டோடொவென அழிந்தது” (Dead as a Dodo) என்றும், முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் ஒருவனை “டோடொ போன்ற மடையன்” (Dud as a Dodo) என்றும் சொல்லும் பழக்கமும் வந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து உயிர் வாழ் இனங்கள் பற்றித் தெரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு ஆர்வம் பிறக்க அவை அழிவதும் அதற்கான காரணங்கள் என்னவென்பதும் புரிய ஆரம்பித்தது.
டேவிட் ஆர். ஃஜிம்மர்மான் (David R. Zimmerman) என்பவர் ‘ஆபத்திலிருக்கும் ஒரு பறவையைக் காக்க’ (To save a bird in peril) என்று ஒரு அருமையான புத்தகம் எழுதியிருக்கிறார். சுமார் பத்து பறவை இனங்களைக் காப்பாற்றும் பொருட்டு எடுக்கப் பட்ட முயற்சிகள் பற்றியது இது.
பெரிக்ரீன் ஃபால்கன் (Peregrine Falcon) என்ற ஒரு கழுகு இனப்பறவை எண்ணிக்கையில் குறைவதற்கான காரணம் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது தெரிய வந்தது அதன் முட்டை ஓட்டின் தடிமன் குறைவதால் பறவை அடை காக்க அதன்மீது உட்காரும் போது முட்டை உடைகிறது என்றும், அதனால்தான் இந்தப் பறவையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதும்.
(பெரிக்ரீன் கழுகு)
அவ்வாறு தடிமன் குறையக் காரணம் அதன் உணவில் சேரும் டி.டி.டி. (DDT) என்னும் பூச்சி கொல்லி மருந்து என்பதும் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப் பட்டது. பயிர்களுக்குத் தெளிக்கப் படும் டி.டி.டி. ஆற்று நீரில் கலந்து மீன்கள் வயிற்றை அடைந்து பின் மீன் உண்ணும் கழுகின் உடலை அடைகிறது. வேறு சில மருந்துகள் போல அல்லாமல் டி.டி.டி. பறவைகளின் உடலில் இருந்து மலம், நீர் மூலம் வெளியறுவதில்லை. உடலில் உள்ள கொழுபு திசுக்களில் உட்கார்ந்து கொண்டு தன் கொடிய வேலையைச் செய்கிறது.
இந்த ஆராய்ச்சியின் பலனாக அமெரிக்காவில் டி.டி.டி. தயாரிப்பதும் உபயோகிப்பதும் முற்றிலுமாகத் தடுக்கப் பட்டது.
சமீப காலத்தில் நம் நாட்டில் பிணம் தின்னிக் கழுகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது தெரிய வந்துள்ளது. இதன் காரணம் கால் நடைகளுக்குக் கொடுக்கப் பட்ட ‘டைக்ளோ ஃபினாக்’ (Diclofenac) என்ற மருந்து என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இறந்த கால் நடைகளில் இருந்து அவற்றை உண்ணும் கழுகுகளின் உடலுள் சென்று கழுகளின் மூத்திரச் சுரப்பிகளை (Kidneys) செயல் இழுக்கச் செய்கிறதாம் டைக்ளோ ஃபினாக். இதே மருந்தை டைக்ளோ ஃபினாக் சோடியம் மாத்திரைகளாக நாமும் உண்கிறோம் வலி நிவாரணியாக!
ஃஜிம்மர்மானின் புத்தகத்தைப் படித்த போது நானும் பறவைகளைக் காப்பாற்ற என்னாலான சிறு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அவ்வப்போது எடுத்த சில முயற்சிகளையும் அவற்றிலிருந்து நான் கற்றுக் கொண்டவை பற்றியும் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
(தொடரும்)
|