சோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு தண்டனைகள் 1மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:21, 10 ஆகஸ்ட் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் என்னுடைய திருப்பதி கல்வெட்டுக் கட்டுரையில் சட்டம் ஒழுங்கு முறை பற்றி நண்பர் செல்வமுரளி தன் வக்கீல் நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் (இராஜேந்திர சோழன் திருப்பதியில் சட்டத்தைக் காட்டித் திருத்தியது) அவர்கள் மேலும் இது போன்ற விவரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்ததாகவும், அவர் தெரியப்படுத்தினார். ஏன் இதைப் பற்றி விரிவாக எழுதக் கூடாது என்று தோன்றியது. இன்றைய நிலையில் நாம் (இந்தியாவில்) அனுபவித்து சட்டம் ஒழுங்கு நிலைமையும் தண்டனை என்பது கூட கேலிக்குரியதாகப் போய்விட்டதையும் நினைத்துப் பார்த்து இக் கட்டுரையை வடிவமைத்திருக்கிறேன்.
சரி, ஆரம்பிப்போமா?
சோழர்காலக் கல்வெட்டுகளைப் பார்க்கையில் அவர்கள் மிக முக்கியத்துவம் கொடுத்தது ஒரு குற்றம் மறுபடியும் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்கள் என்பதுதான். மதவேற்றுமையின்மை, பிரிவுகளிலும் ஒற்றுமையைக் காண்பித்து சேர்த்து வைப்பது, நாடெங்கிலும் உள்ள ஜனங்களின் வாழ்வாதரங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்வது, பஞ்சம் வரும்போதும் வெள்ளம் வரும்போதும் களத்தில் இறங்கி சாதாரண ஜனங்களைப் பாதுகாத்தது, இவை எல்லாவற்றையும் விட வெகு ஜன வாழ்க்கையில் தொல்லையில்லா வாழ்வும், அப்படியும் மனிதர்கள் திருடர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளர்களாக மாறி தொல்லை தந்த சமயத்தில் அவர்களைத் திருத்த எத்தகைய வழி வகைகளைச் செய்தது என்பதையும் குறித்துக் கிடைத்த கல்வெட்டுகளையெல்லாம் பார்க்கையில் மறுபடி நம் தமிழகத்துக்கு இப்படி ஒரு நீண்டகால நிலையான அரசு கிடைக்குமா என்ற ஏக்கம் வரத்தான் செய்யும்.
குற்றங்களிலேயே உயரிய குற்றம் என்பது ராஜத் துரோகம்தான். கொலைக் குற்றம் கூட இதற்கு அடுத்தபடிதான். எதைப் பொறுத்தாலும் ராஜத்துரோகத்தைப் பொறுக்கவில்லை என்பதற்கு எளிதான காரணம், ஆளும் தலைமையை அனைவரும் மதித்து நடக்கவேண்டும் என்பதற்குதான். ராஜத் துரோகம் என வரும்போது அன்றிருந்த சில சூழ் நிலைகளை நாம் முதலில் கவனித்தில் கொள்ள வேண்டும். கணக்கிலடங்கா அரசுகள். இந்த சிற்றரசுகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒரு பலமான அரசாங்கத்தின் கீழ் ஆள வேண்டிய சூழ்நிலை. மனிதர் மனங்கள் விசித்திரமானவை. பலவான் பலமாக இருக்கும் வரையில் பயந்துகொண்டே இருப்பவை, அந்தப் பலவான் பலவீனனாகத் தெரியவரும் பட்சத்தில் இதுவரை கண்ட அவனுடைய பலங்களைப் பொடிப் பொடியாக்கிய சிற்றரசர்கள் ஏராளமானோர் இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமாக இருந்தபோது அடங்கி நடந்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் என்ற பலமான அரசன் போனபின் தங்களுக்குள் எப்படியெல்லாம் சண்டையிட்டு மாண்டு போய் சுல்தான்களிடம் சரணடைந்தும், ஐரோப்பியர்களின் காலில் விழுந்தும் அழிந்தார்கள் என்பது நேற்றைய செய்திதான். ஆனால் பராந்தக சோழன் முதல் மூன்றாம் குலோத்துங்கன் மத்திம காலம் (கி.பி 900 முதல்கி.பி 1178-1200 என்று வைத்துக் கொள்வோம்) ஏறத்தாழ முன்னூறு வருடங்களுக்கு தமிழகத்தில் ஒரு தர்ம பரிபாலனமே நடந்துள்ளது.சோழராஜாங்கம் பலத்தை அப்படியே முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக தக்க வைத்துக் கொண்டே பாரதத்திலேயே ஒரு உயரிய அரசு என்ற பெயரைப் பெற்றது.
|

