- பாடல் முப்பத்தொன்பது
ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை, நின் குறையே அன்று முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.
விளக்கம் : முன்பு ஒரு நாள் முப்புரங்களையும் அழிப்பதற்காக வில்லில்
அம்பினைத் தொடுத்த ஈசனது இடப்பாகம் அமர்ந்த அழகிய ஒளி பொருந்திய நெற்றியை
உடைய அபிராமி அன்னையே... என்னை ஆள்வதற்கு நின் திருவடித் தாமரைகள் உண்டு.
கூற்றுவன் கையினின்று என்னை விடுவிக்க நின் கடைக்கண் பார்வை உண்டு. இவை
இல்லாது போனால் என்ன குறை?... உனது குறையே...!!
பரிபூரண நம்பிக்கையை அம்பிகைமேல் வைத்த அபிராமிப் பட்டரின் மன நம்பிக்கை
இவ்விடத்துத் தெரிகின்றது.. அம்மையே... என்னை ஆளுதற்கு உன் திருவடித்
தாமரைகள் இருக்கின்றன... அந்தகன் - வாழ்வின் அந்தந்தைக் காண்பிப்பவன் -
கூற்றுவன் - யமனிடமிருந்து தப்பிப்பதற்கு உனது கடைக் கண்பார்வை உண்டு...
அன்னையின் கடைக்கண் பார்வை ஒன்றே போதும்... மரண பயத்திலிருந்து அபயம்
அளித்திடும். "மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை?" எனை ஆள நின்
திருவடித்தாமரைகள் இருக்கின்றன... என்னை யமனிடமிருந்து காக்க உனது
கடைக்கண் பார்வை உள்ளது... ஆயினும்...... இன்றைக்கு நான் இவ்வண்ணம்
நெருப்பின் மீது நின்று நின்னை அழைத்துக் கொண்டிருக்கின்றேன்.. எங்கே
உனது உனது திருவடிகள்? எமை ஆள அவை வரவில்லையா??? எங்கே உனது கடைக்கண்
பார்வை?? எம்மை மீட்க நீ என்னைக் காணவில்லையா?? நான் இவ்வண்ணம்
பரிதவிப்பதற்கு என்ன குறையுண்டு??? "நின் குறையே" அது என் குறையல்ல....
உனது குறையே.... பரிபூரண நம்பிக்கை... இங்கே பார்... நான் நெருப்பின்
மீது நடக்கின்றேன்... அது என்னை சுட்டால் அது என் குறையல்ல.. உன்
குறையே... நான் மனித வாழ்வின் இந்திரிய இச்சைகளால் கட்டியாளப் பட்டால்...
அதன்மூலம் துன்புற்றால்... அது என் குறையல்ல.,... உன் குறையே... உன்
மகனைத் தவறிழைக்காமல் காப்பது தாயான உன் கடமையல்லவா?? உன் திருவருளை
வேண்டியே இவ்வண்ணம் நெருப்பின் மேல் நின்று பாடுகின்றேன்.. விரைந்து
வந்து காட்சியளிப்பாய்... என்னைக் காத்தருள்வாய்... "அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே." முன்பு
முப்புரங்களையும் அழிப்பதற்காக அம்பினை வில்லிலே தொடுத்த ஈசனது இடப்பாகம்
சேர்பவளே... அழகிய ஒளிபொருந்திய நெற்றியினைக் கொண்ட என் அபிராமி
அன்னையே.....
அன்னைமேல் நாம் வைக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் பாடல் இது..
மீண்டும் ஒருமுறை ஓதிப்பாருங்கள்..
பாடல் நாற்பது
"வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. "
விளக்கம் : அழகிய ஒளிபொருந்திய நெற்றிக் கண்ணையுடைய எங்கள் அபிராமி
அன்னையை.... அமரர்கள் எல்லோரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விரும்பும்
எங்கள் பெருந்தலைவியயை... அறியாமை நிறைந்த நெஞ்சத்தார் காணுதற்கு இயலாத
கன்னியை... காணவேண்டும்.. அன்பு கொள்ள வேண்டும் என்று என் மனத்தில்
உதித்த எண்ணம் என் முற்பிறப்பில் செய்த புண்ணியமாகும்..
பூமிப்பெருவெளியில் எத்தனையோ கோடி மாந்தர்கள் பிறக்கின்றனர்..
இறக்கின்றனர்.. மாந்தரல்லாத பல்வேறு உயிரினங்களும் வந்து வாழ்ந்து
மறைகின்றன... ஆனால் அன்னை அபிராமியைக் காண வேண்டும்.. வணங்கவேண்டும்..
அவள் மேல் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு எழும்?
வெகு சிலருக்கு மட்டுமே... அவர்கள் யார்? முற்பிறவியில் புண்ணியம்
செய்தோர்... அன்னையைக் காண்பதற்கும், அவளை வேண்டுதற்கும்.. அவள் மேல்
அன்பு செய்தலுக்கும் அபிராமிப் பட்டரால் இயன்றது.. அதற்குத் தான் செய்த
முற்பிறவிப் புண்ணியமே என்று இவ்விடத்து உரைக்கிறார்.."வாள்-நுதல்
கண்ணியை" ஒளி பொருந்திய அழகிய நெற்றிக் கண்ணையுடைய அபிராமியன்னையை....
இதென்ன விந்தை.... ? அப்பன் ஈசனுக்கல்லவா நெற்றிக்கண் உண்டு.. இவரென்ன
இவ்வண்ணம் பாடுகிறாரே...? அம்மையும் அப்பனும் ஒரே பரம்பொருளல்லவா??
அம்மையைக் குறித்தால் அது அப்பனையும், அப்பனைக் குறித்தால் அது
அம்மையையுமன்றோ குறிக்கும்?
"விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை"
அமரர்களெல்லாம் வந்து வேண்டி துதி செய்ய எண்ணங்கொண்டனர்.. யாரை?? எங்கள்
பெருமாட்டியை... பெருந்தலைவியை... அன்பு செய்யும் அபிராமியை.... "பேதை
நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை" அறியாமை இருள் குடிகொண்ட
பேதை நெஞ்சத்தால் காண்பதற்கு இயலாத கன்னியை.... அன்னை மேல் நாம் அன்பு
கொண்டால் நம் மனத்திருந்த அறியாமை எனும் இருள் அகலும்..அவ்விடத்து நாம்
அன்னைத் தெளிவுறக் காணும் பாக்கியம் பெறலாம்... கன்னியை... என்றும்
கன்னித்தன்மை கொண்ட எங்கள் அபிராமி அன்னையை...."காணும் - அன்பு பூணுதற்கு
எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. " அப்படிப்பட்ட எங்கள்
அபிராமித் தாயை... காணவேண்டும், அவள் பால் அன்பு செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தை என் மனத்தில் விதைத்தது யார்? நான் உன்னைத் தேடிவந்தேனா?? நீயே
என்னைத் தேடி வந்தாய்.. வலிய வந்து உன் திருப்பாதங்களை எந்தன் தலைமீது
வைத்தாய்... அவ்வழகிய திருவடிகளால் என்னை ஆண்டு கொண்டாய்... எனக்குக்
காட்சியுமளித்தாய்... என்மேல் மிகுந்த அன்பையும் கொண்டாய்... உன்னைக் காண
வேண்டும், தொழவேண்டும், அன்பு செய்ய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என்
மனத்துள் விதைத்தது யார்?? நான் முற்பிறவியில் செய்த புண்ணியம்தான்
தாயே...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. அடுத்த பாடலானது என்
மனத்துக்கு மிகவும் பிடித்த பாடல்.. குணா என்ற திரைப்படத்தைக் காணும்
வாய்ப்பு கிட்டிய போது கமல்ஹாசனது குரலில் அப்பாடலைக் கேட்டேன்.. மதி
மயங்கினேன்.. பின்னரே அபிராமி அந்தாதியைக் கற்கும் எண்ணம் எனக்குத்
தோன்றியது... அதைத் தொடர்ந்து வரும் பாடலும் இளையராஜாவின் இசையில்
அத்திரைப்படத்தில் இடம்பெற்றது.
மீண்டும் சந்திப்போம்.. நன்றி...
பாடல் நாற்பத்தொன்று
புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
விளக்கம் : புதிதாய் மலர்ந்த குவளைப்பூவைப்போன்ற கண்களையுடை அன்னை
அபிராமியும், சிவந்த மேனியையுடைய அவளது கணவரான சிவபெருமானும் இணைந்து
நம்மைக் காணவேண்டும் என்ற காரணத்திற்காக இங்கே வந்து தமது அடியார்களின்
கூட்டத்தில் நம்மை நடுவே இருக்கச் செய்து, தமது திருவடித் தாமரைகளை நம்
தலைமீது நிலை நிறுத்திடவே என்ன புண்ணியம் செய்திருக்கின்றாய் என் மனமே...
நேற்றையதினமே இன்றைய பாடல்கள் பற்றிய சிறு குறிப்பினைக்
கொடுத்திருந்தோம். "தனந்தரும்" எனத்துவங்கும் பாடலும், "ஆத்தாளை எங்கள்
அபிராம வல்லியை" எனத்துவங்கும் நூற்ப்யனும் மட்டுமே மனப்பாடச்
செய்யுளாகக் கற்றிருந்த நமக்கு, ஒருமுறை "குணா" எனும் திரைக்காவியத்தைக்
காணும் வாய்ப்பு கிட்டியது.. எப்பொழுதும் அபிராமி அபிராமி என புலம்பும்
ஒரு கதாபாத்திரத்தை திரு. கமல்ஹாசன் அவர்கள் மிகச் சிறப்பாகச்
செய்திருந்தார்.. அத்திரைக்காவியத்தில்தான் இப்பாடலை அவர் தனக்கேயுரிய
பாணியில் சிறப்பாகப் படித்திருப்பார்.. பாடலின் இறுதியில் அவர்
ஒற்றைக்காலில் நிற்கும் காட்சி இன்றும் கண்களை விட்டு அகலாதது விந்தை...
அச்சமயம்தாம் என் மனத்தில் இதென்ன இத்தனை அழகிய கவிதை... யார் எழுதியது?
என்ற வினா எழுந்தது..என்னவென்று நோக்குங்காலை அபிராமிப் பட்டரின்
கவிதைகள் என்பது புரிந்தது.. பின்னரே அபிராமி அந்தாதியை முழுதும்
கற்றோம்... சரி பாடலுக்கு வருவோம்..
"புதுப் பூங் குவளைக் கண்ணியும்" புதிதாய் மலர்ந்த குவளை மலரையொத்த
கண்களையுடை அன்னை அபிராமியும்... "செய்ய கணவரும்" சிவந்த மேனியையுடைய
அவளது கணவரான சிவபெருமானும் "கூடி" இணைந்து "நம் காரணத்தால்" நம்மைக்
காணவேண்டும்.. நம்மைக் காக்க வேண்டும்... நம்மை அருளாட்சி செய்ய
வேண்டும்... நம்மைத் தன் மகவு என்ற உண்மையை உலகுக்குணர்த்த வேண்டும்..
என்ற காரணத்தால்... "நண்ணி இங்கே வந்து" மிகவும் விரும்பி இங்கே
வந்து... நம் பக்தி சிறப்பானதாக இருந்தால் அம்மையும் அப்பனும் நம்மைக்
காண்பதற்காக மிகவும் விரும்பி ஓடி வருவார்கள்... அபிராமிப் பட்டரின்
பக்தி அளப்பரியது.. எனவேதான் அவரைக் காண தந்தையும் தாயும் இணைந்து ஓடி
வந்தனர்... "தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி.." நம்மைத் தமது
அடியார்களின் நடுவிருக்கச் செய்து... "நம் சென்னியின் மேல் பத்ம பாதம்
பதித்திடவே" நமது தலையின் மீது தங்களின் திருவடித் தாமரைகளை நிலை
நிறுத்திடவே.... எவ்வளவு பெருமை மிகுந்த காரியம் இது?? கீழோன்... மானிடப்
பிறவி.... கடையேன்... பித்தனென்று ஊரும் உலகும் தூற்றும் பண்பு
படைத்தவன்... இப்படிப் பட்ட என்னை, அம்மையும் அப்பனும் விரும்பி இங்கே
வந்து தமது அடியார்களைக் கூடி வரச் செய்து.. அவர்களின் நடுவே நம்மை
நாயகமாக நிறுத்தி... எந்தன் தலைமீது தங்கள் திருவடித் தாமரைகளை நிலை
நிறுத்தினரே...இதற்கு... "புண்ணியம் செய்தனமே-மனமே. " நீ என்ன புண்ணியம்
செய்து விட்டாய் எந்தன் மனமே....
பாடல் நாற்பத்திரண்டு
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே
விளக்கம் : உலகத்தோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நற்கொள்கையைக் கொண்ட
எங்கள் நாயகியே.... நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையுடையவளே...
அபிராமி அன்னையே...குளிர்ச்சியான சொற்களையுடைய அபிராமி அன்னையே...
வேதங்களை சிலம்புகளாகத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே.... தகுந்த
இடத்தைக் கொண்டு பெருமிதத்தால் விம்மும் ஒன்றுக்கொன்று இணையாக இறுகியும்
மென்மையால் இளகியும் முத்துமாலையை அணிந்துமிருக்கும் உனது கொங்கை மலைகள்,
வலிமை மிகுந்த நெஞ்சத்தைக் கொண்ட சிவபெருமானின் நெஞ்சத்தையும்
ஆட்டுவிக்கின்றன..
இந்த பாடலும் இளையராஜாவின் இசையில் குணா திரைக்காவியத்தில் இடம்
பெற்றது... யேசுதாசின் இனியகுரலில் வாலியின் வைரவரிகளைக் கேட்டுக்
கொண்டிருக்கும் போது இடையே பாடற்குழுவினர் பாடும் பாடலாக இணைத்திருப்பார்
இளையராஜா... இந்தப் பாடலும், ஐம்பதாவது பாடலான "நாயகி நான்முகி"
எனத்துவங்கும் பாடலும் இளையராஜாவின் இசையில் கேட்பதற்கு மிக அருமை..
"கொள்கை நலம் கொண்ட நாயகி" நலமிக்க கொள்கைகளைக் கொண்ட எங்கள் தலைவியே...
அபிராமி அன்னையே... அன்னையின் நோக்கமெல்லாம் அன்பரைக் காத்தருள
வேண்டுமென்ற நற்கொள்கைகளே... அன்னையின் பெருமைகளைத் திரைப்படங்கள்
வாயிலாகச் சொல்கிறோம் என்று ஒரு இயக்குனர் (யார் என்பதைப் புரிந்து
கொள்க) எடுத்த திரைப்படங்களைக் காணும் போது அன்னையின் பெயரை இப்படி ஏன்
கேவலப் படுத்துகிறார் என்று கோபம் எழும்... உலகத்தைக் கட்டியாளும்
அன்னையை எந்த ஒரு தீயசக்தியாலும் எதிர்த்து நிற்க இயலாது என்பதே
தீர்க்கமான உண்மை... நாம் அன்னைமீது பக்தி கொண்டு நற்செயல்கள்
புரிந்துவரின் எந்த வித தீய சக்தியாலும் நம்மை நெருங்க இயலாது... இது
சத்தியம்... ஆனால் அன்னையை ஒரு தீய சக்தி தடுக்க நினைப்பது போன்ற
காட்சிகள்.. அவள் எதுவுமே செய்ய இயலாதவள் போல் அமர்ந்த காட்சிகள் எல்லாம்
மனத்தை மிகவும் வேதனை செய்யக்கூடியவை... சரி நமக்கு அது வேண்டாம்...
பாடலைக் கவனிப்போம்...அன்னையே... மக்களைக் காத்தருள வேண்டும் என்ற
நல்லதொரு கொள்கையைக் கொண்ட எங்கள் தலைவியே.... "நல் அரவின் படம் கொண்ட
அல்குல்" நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலைக் கொண்டவளே... "பனி மொழி
" குளிர்ச்சியான சொற்களைப் பேசுபவளே... அன்னையானவள் தம் மக்களான
நம்மிடத்துப் பேசும் பேச்சுக்கள் மிக இதமானவை... மிகுந்த அன்போடும்,
அக்கறையோடும் பேசும் பேச்சுக்கள் குளிர்ச்சியானவை..."வேதப் பரிபுரையே"
வேதங்களை காலில் சிலம்பாக அணிந்தவளே... இப்பதம் அன்னையானவள் வேதங்களின்
தலைவி என்பதைக் குறிக்கும்...
"கொங்கை மலை.." உனது கொங்கை மலை.. "இடங்கொண்டு விம்மி..." தகுந்த
இடத்தினைப் பெற்று அப்பெருமிதத்தால் விம்மி... "இணை கொண்டு இறுகி இளகி"
ஒன்றுக்கொன்று இணையாக இறுகிப் பின்னர் இளகி.... வலிபொருந்திய மார்பினள்
என் அன்னை... எனவே அவளது தனங்கள் இறுகியன... எம்மைப் போன்ற பிள்ளைகள்
மேல் அன்பு மிகவுடையவள் என் அன்னை... எனவே எமக்காக அவளது தனங்கள்
இளகின.... "முத்து வடங்கொண்ட " முத்துக்களால் ஆன மாலையை உனது அழகிய
தனங்கள் சுமந்து கொண்டிருக்கின்றன.... "கொண்டு" இப்படிப் பட்ட
பெருமைகளைக் கொண்ட உனது தனங்களால்.... "இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட .."
இறைவனான எம்பெருமான் சிவனது வலிமை மிகுந்த நெஞ்சைத்தை நீ
ஆட்டிவைக்கின்றாய்.. உலகத்தை ஆட்டுவிக்கும் ஈசன், வலிமை மிகுந்தவன்...
அவனது நெஞ்சம் மிகுந்த வலிமை கொண்டது... அவனது நெஞ்சத்தை நீ
ஆட்டுவிக்கின்றாய் என் அபிராமி அன்னையே....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்...
-- --Geetha Sambasivam 04:51, 7 மார்ச் 2011 (UTC)