பாடல் இருபத்து மூன்று
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
விளக்கம் : எளியேன் எனக்கு எந்தன் கண்மணியைப் போன்ற என் அபிராமித்
தாயே....மூவுலகுக்கும் உள்ளே இருந்து அதனை இயக்குபவளே.. அம்மூவலகையும்
தாண்டி வெளியிலும் இருப்பவளே... என் உள்ளத்துள் விளைந்த கள்ளே...
அமுதமே... ஆனந்தமே ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... என் மனத்தில் நின்
திருவுருவையன்றி வேறொன்றும் நினைக்க மாட்டேன். உனக்கு அன்பான அடியவர்
கூட்டத்தை விட்டு என்றும் விலக மாட்டேன். உனை விடுத்து வேறொரு தெய்வத்தை
வணங்கும் பிற சமயங்களை நான் விரும்ப மாட்டேன்.
அன்னையின் திருவுருவத்தை மனத்தில் நிலை நிறுத்தி தியானத்தில் ஈடுபடத்
துவங்கி விட்டால், அவளின் உருவமன்றி எந்த நினைவுகளும் மனத்தில் எழாது...
இது அன்பர்களுக்கு அன்னை வழங்கும் திருவரம்.. அவ்வரத்தைத் தன்
வாழ்க்கையாகப் பெற்ற அபிராமிப் பட்டர் தன் மனநிலையை இவ்விடத்துத் தெளிவு
படுத்துகிறார். உன் உருவம் மட்டுமே என் மனத்தில் நிலை நிற்கிறது. வேறெந்த
உருவும் அவ்விடத்து வர இடமில்லை... உன்னடியார்களை விட்டு நான் என்றும்
விலகவே மாட்டேன்.. எனக்கு உற்றார்கள், சுற்றார்கள் எல்லாரும் நின்
அடியார்களே... என்னருகே யார் வந்தாலும் அவர்களெல்லாம்
உனக்கடியார்களாகத்தான் இருக்கின்றார்கள்.. மகாபாரத்தின் ஒரு சம்பவம்
நினைவுக்கு வருகிறது. ஒருமுறை தர்மன் உலகில் உள்ள கெட்டவர்களைத் தேடிப்
புறப்பட்டானாம். ஆனால் அவன் கண்ணில் யாரும் கெட்டவர்களாகத் தென்படவே
இல்லையாம். துரியோதனன் உலகில் உள்ள நல்லவர்களைத் தேடிப் புறப்பட்டானாம்.
ஆனால் அவன் கண்ணில் யாருமே நல்லவர்களாகப் படவில்லையாம்... ஆக அவரவர்
மனத்தில் எழும் எண்ணங்களாகவே இவ்வுலகம் தென்படுகிறது. இவ்விடத்து
அபிராமிப் பட்டர் அன்னையின் அன்பராகவே இருப்பதால், காண்போரெல்லாம்
அவருக்கு அன்னையின் அடியவராகவேத் தோற்றமளிக்கிறது. அப்படிப்பட்ட
அடியவரின் கூட்டத்தை விட்டுத் தான் என்றும் விலகுவதில்லை என்று
அன்னையிடம் தெரிவிக்கிறார். "பர சம்யம் விரும்பேன்" வேறு சமயங்களை நான்
விரும்புவதில்லை.. .எத்தனையோ சமயங்கள் இந்த உலகில் உள்ளன தாயே...
ஒவ்வொன்றும் ஒவ்வொருவரை இறைவன் என்று உரைக்கின்றன... ஆனால் என் கண்ணிற்கு
உன்னை விடுத்து வேறு யாரும் தெய்வமாகத் தோன்றாததால், உன் சமயத்தை விட்டு
வேறு சமயத்தை நான் விரும்ப மாட்டேன். "வியம் மூவுலகுக்கும் உள்ளே" என்ன
இது குழப்பம்.? ஓரிடத்து ஏழுலகங்கள் என்றார். பிரிதோரிடத்தில் பதினான்கு
உலகங்கள் என்றார்.. இப்பாடலிலோ மூவுலகம் என்று பாடுகிறாரே... இதென்ன?
என்ற ஐயம் நம் மனத்தில் எழுகின்றது.. ஆனால் அவ்விடத்திருந்து நீ
இயக்குகின்றாய் என்ற விளக்கம் நம்மைத் தெளிவு படுத்துகின்றது.. பூவுலகின்
இயக்கங்களுக்குக் காரணமாக மூன்று உலகங்கள் உள்ளன.. அவை பிரம்மனின்
சத்தியலோகம், திருமாலின் வைகுண்டம், சிவபெருமானின் கயிலாயம்.
இவ்வுலகங்களே உலகின் முக்கிய இயக்கங்களான படைத்தல், காத்தல், அழித்தல்
என்ற முப்பெருந்தொழில்களை இயக்குகின்றன... ஆனால் தாயே.. நீ அந்த
மூவுலகினையும் இயக்குபவள் அல்லவா....? என்கிறார்... மேலும் அங்கு
மட்டுமல்ல, அண்டசராசரங்கள் எல்லாவிடத்தும் நிறைந்து நிற்பவளே... என்
உள்ளத்தே விளையும் கள்ளே... அமுதமே... "களிக்கும் களியே.." ஆனந்தமே
ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... நீ இன்பத்திற்கும் இன்பம்.. கள்ளை
அருந்துவோருக்கு அது மயக்கத்தை இன்பத்தைத் தருகின்றது... ஆனால் அக்கள்ளே
களிக்கும் களி... அக்கள்ளையே இன்பத்தால் மயங்க வைக்கும் பேரின்பம் நீயே
அம்மா..... எளியவன் எனக்கு நீ என் கண்ணின் மணியைப் போன்றவள்....
பாடல் இருபத்து நான்கு
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
விளக்கம் : மாணிக்கமாக விளங்குபவளே... அம்மாணிக்கம் உண்டாக்கும் ஒளியாக
விளங்குபவளே.. ஒளிரும் மாணிக்கங்களால் ஆன அணிகலனாக விளங்குபவளே.. அவற்றை
நீ அணிவதால் அவ்வணிகளுக்கே அழகு சேர்ப்பவளே.. உன்னை வணங்காது விலகி
நிற்பவர்களுக்குப் பிணியானவளே... உன்னைத் தேடி ஓடிவரும் பக்தருக்கு
அப்பிணிக்கான மருந்தைப் போன்றவளே.. அமரர்களுக்கும் மாபெரும் விருந்தாய்
தோன்றி நிற்கும் என் அபிராமி அன்னையே... அழகிய தாமரை மலரைப் போல்
விரிந்திருக்கும் உனது பாதங்களை வணங்கிய பின்னர், இன்னொருவரை நான் வணங்க
மாட்டேன்..
இந்த பாடலைத்தான் ஆதிபராசக்தித் திரைக் காவியத்தில் திரு. சௌந்தரராஜன்
பாடுவார். இப்பாடலைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் இயற்றிய "சொல்லடி
அபிராமி" எனத் துவங்கும் பாடல் வரும். கண்ணதாசனுக்கு மிகவும் பிரியமான
பாடல் இது... (அபிராமி அந்தாதிக்கு, கவியரசர் அவர்கள் உரை எழுதியிருப்பது
குறிப்பிடத் தக்கது). ஆனால் அப்பாடலில் மணியே... என்று தனது சிம்மக்
குரலில் சௌந்தர ராஜன் துவங்குவதற்கு முன்னர் ஒரு மணி ஒலி கேட்கும்...
அபிராமி அந்தாதியைக் கற்பதற்கு முன்னர் நான் அம்மணியொலியைத்தான் மணியே...
மணியின் ஒலியே... என்று பாடுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.. பின்னர்
அபிராமி அந்தாதியைக் கற்ற பின்னர் அவ்வெண்ணம் நகைச்சுவையாகி விட்டது..
மணியே - மாணிக்கமே... மணியின் ஒளியே... மாணிக்கம் சிந்தும் ஒளியைப்
போன்றவளே... அவ்வொளிதரும் மாணிக்கங்களால் செய்யப் பட்ட அணிகலனைப்
போன்றவளே... "அணியும் அணிக்கு அழகே" அவ்வணிகலன் அணிவதால் அணிகலனுக்கு
அழகு சேர்ப்பவளே... உன்னை அழகு செய்ய மாந்தரெல்லாம் உனக்கு மாணிக்கத்தால்
அணிகலன் செய்தார்.. ஆனால் தாயே... அவ்வணிகலன்களால் உனக்கு அழகு அல்ல...
உன்னால் அணியப் பட்டதால்தான் அவ்வணிகலனே அழகு பெற்றது.... எத்தனை அழகிய
உண்மை..... அன்னையை மட்டுமே எண்ணும் கண்களுக்கு அவளை விடுத்து வேறெந்த
ஒன்றும் திருப்தியைத் தராது.. அன்னை.. அன்னையின் திருநாமம்... அவளது
புகழ்... இவை மட்டுமே அபிராமிப் பட்டருக்கு அழகாய்த் தோன்றுகிறது..
ஆகையால்தான் அம்மையால் அவ்வணிகலன் அழகு பெற்றதாய்ப் பாடுகிறார்.
"அணுகாதவர்க்குப் பிணியே" உன்னை அணுகாதவர்க்கு, உன்னைத் தொழாதவர்களுக்கு,
அவர்களது கர்மவினைப் பயனால் ஏற்படும் பிணி நீதான்... நம் கிராமப்
பகுதிகளில் வெப்பு நோயை "அம்மை நோய்" என்றழைப்பது வழக்கு... "ஆத்தா
வந்திருக்காப்பா..." என்றுதான் குறிப்பிடுவார்களே விடுத்து அதற்கு வேரொரு
பெயரைத் தருவதில்லை... இவ்வாறு உன்னை அணுகாதவர்களுக்கு ஏற்படும்
பிணியானவளே... அப்பிணிக்கும் மருந்தானவளே... வெப்பு நோயினால் ஏற்படும்
துன்பத்தைத் தீர்க்க அனைவரும் மீண்டும் அன்னையையே நாடி வருகின்றனர்.
இதனால் பிணியுமானாள்... அப்பிணிக்கு மருந்துமானாள் அன்னை அபிராமி...
அமரர்களுக்கெல்லாம் பெரும் விருந்தாக விளங்கக் கூடியவளே... அழகிய தாமரை
மலர் போன்று தோற்றமளிக்கும் உன் அழகிய பொற்பாதங்களை வணங்கிய பின்னர்
இன்னொருவரை நான் பணிவது இல்லை... எத்தனை வைராக்கியம் அபிராமிப்
பட்டருக்கு... அன்னை அபிராமி மட்டுமே தன் தெய்வம் .. அவள் விடுத்து
வேறொரு தெய்வத்தை அவரால் கற்பனை கூட செய்ய இயலாது... அப்படிப்பட்ட
வைராக்கிய பக்தி நிலையில் நின்றிருந்தார் அபிராமிப் பட்டர்... பிற
தெய்வங்களை மட்டுமல்ல... யாரையுமே வணங்க மாட்டேன்... உலகில் பிறங்கு உலக
இன்பங்களால் துன்புற்றிருக்கும் மாந்தர், தம் இன்பங்களுக்காக மாந்தரை
வணங்குகின்றனர்.. பிற கடவுள்களையும் வணங்குகின்றனர்.. ஆனால் நான் உன்னைத்
தவிர வேறொருவரையும் வணங்குவதில்லை ... என்று தன் உறுதிநிலையைத் தெளிவு
படுத்துகிறார் அபிராமிப் பட்டர்..
தொடரும் பாடல்களுக்கான விளக்கம் அடுத்த மடலில்... அன்பர்கள் நமது
விளக்கத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்து, அவற்றை திருத்தித்
தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.. நன்றி...
பாடல் இருபத்தைந்து
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே
விளக்கம் : மும்மூர்த்திகளுக்கும் அன்னையான அபிராமித் தாயே... இந்த
உலகத்தாருக்குக் கிடைத்த அரிய மருந்தான என் அபிராமியன்னையே...
இப்பிறவியில் உன்னடியார்களைப் பின் தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய
திருப்பணிகளைச் செய்து என் பிறவித் துன்பத்தை வேரறுக்கும் வாய்ப்பினை
நான் முற்பிறப்பில் செய்த தவங்களின் வாயிலாக அடைந்தேன். என்னே உன்
பெருமைகள்... ! இப்பொழுது மட்டுமல்ல... இனிமேல் எக்கணமும் உனை நான்
மறவாது தொழுது கொண்டிருப்பேன்.
"பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று
கொண்டேன்"... உலகத்தோர் இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் அடுத்த
பிறப்பில் தமது தகுதியை நிர்ணயம் செய்யும் என்று நம்புகிறார்கள்..
இதற்கெனவே தான தர்மங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்..
ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடும் போது இப்பிறப்பின் எதிர்கால
நன்மைகளுக்காக வேண்டுகின்றனர்.. இனி எனக்கு பிறவி கிடையாது என்று
முழங்கும் அபிராமிப் பட்டர், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார். உன்
திருவடியைப் பற்றியிருக்கக் கூடிய உனது அடியார்களைப் பின் தொடர்ந்து
அவர்கட்கு வேண்டிய திருப்பணிகளை நான் செய்து வருகிறேன். எனவே எனக்கு
இனிமேல் பிறவி கிடையாது.. இத்திருப்பணிகளை நான் மேற்கொள்ள வேண்டிய
புண்ணியம் எனக்கு எங்ஙனம் கிடைத்தது தெரியுமா? நான் முற்பிறப்பில் பல
தவங்களை இயற்றி இவ்வரத்தினைப் பெற்றேன். பொருட்செல்வம் மிகப் பெற்றோர்,
தாம் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் இந்நிலையை அடைந்ததாகப் பெருமைப்
பட்டுக்கொள்கின்றனர்.. ஆன்மீக வழியில், உயர்ந்த நிலையை அடைந்த பெரியோர்
யாரும் தமது முற்பிறவிப் பயனால் இது எமக்குக் கிட்டியது என்று
முழங்கியதில்லை.. ஆனால் அபிராமிப் பட்டர் மிக உறுதியாக தனது கருத்தைத்
தெளிவுபடுத்துகிறார். மூன்று உண்மைகள்.. ஒன்று. தான் முற்பிறப்பில் செய்த
தவங்கள். இரண்டு. அத்தவங்கள் வாயிலாக இப்பிறப்பில் அபிராமி அன்னையின்
அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டு. மூன்று. அத்திருத்தொண்டின்
வாயிலாக இப்பிறப்புத் துன்பத்தை நீக்குதல். வேறெந்த பிறப்பும் ஏற்படாத
உன்னத நிலையை அடைதல். இம்மூன்று உண்மைகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது
அன்னையின் அடியாருக்குச் செய்யும் திருத்தொண்டுதான். எங்கள் குருதேவர்
பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கூறுவார் கடந்த காலம், நிகழ்காலம்,
எதிர்காலம். இவற்றுள் நிகழ்காலம் மட்டுமே நிதர்சனமான உண்மை. எனவே நீ
எக்கணமும் இக்கணத்தில் இரு.. என்று... அபிராமிப் பட்டரும் தன் நிகழ்கால
நிலைக்குக் காரணத்தையும், அதனால் வருங்காலத்தில் தனக்கு ஏற்பட இருக்கும்
உன்னத நிலையையும் இவ்விருவரிகளில் தெளிவுபடுத்திவிடுகிறார். முன்னர் ஒரு
பாடலில் "நான் முன் செய்த புண்ணியம் எது என் அம்மே" என்று பாடிய
அபிராமிப் பட்டர் இவ்விடத்துத் தான் செய்த புண்ணியம் என்ன என்பதை
உணத்துகிறார்.
"முதல் மூவருக்கும் அன்னே" அன்னை அபிராமியே மும்மூர்த்திகளைப்
பெற்றெடுத்தாள் என்பதை இன்னுமொருமுறை தனது பாடலின் வாயிலாகக் கூறுகிறார்.
"உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே" எதுவும் தேவையில்லை அன்னை
அபிராமியை விடுத்து... என்னும் தன் நிலையில் உறுதியாக இருக்கும்
அபிராமிப் பட்டர் அன்னை அபிராமி உலகத்தாருக்குக் கிடைத்த ஒரு அரிய
மருந்து என்கிறார். அபிராமியை எண்ணித் துதித்தால் எந்தவித காயமும்
ஆறிப்போகும். எல்லாவித நல்நிலையும் தேடிவரும் என்பதே நிச்சயமான உண்மை.
உலகத்தார் செய்த புண்ணியம் அவ்வருமருந்தினைப் பெற்றிருப்பது. "என்னே.?"
உனது பெருமைகளையெல்லாம் எங்ஙனம் உரைப்பேன்...? "இனி உன்னை யான் மறவாமல்
நின்று ஏத்துவனே" அன்னையை மறப்பது அபிராமிப் பட்டரால் இயலுமா? எக்கணமும்
உன்னை மறவாது தொழுவேன் என்று பறைகிறாரே.... துன்பத்தில் இறைவனை
நினைப்பது, இன்பத்தில் இறைவனை மறப்பது .. இதுதான் உலகத்தார் வாடிக்கை..
எனவேதான் குந்தி தேவி, கண்ணனிடம் தனக்கு எப்பொழுதும் துன்பங்கள் வந்து
கொண்டேயிருக்க வேண்டும் என்று வேண்டினாள். அத்துன்பங்கள் தொடர்ந்து
கொண்டேயிருந்தால், இறைவனை என்றும் மறவாது தேடிக்கொண்டே இருப்போம் என்பது
அவரது கருத்து.. ஆனால் அபிராமிப் பட்டரால் அன்னையை மறப்பது முடியுமா?
என்றும் மறப்பதில்லை... ஆயினும் தொழுதல் என்பது வேறு... மறவாதிருத்தல்
என்பது வேறு.. அன்னையை மறவாது நினைப்பது மட்டுமே புண்ணியம் தரும்
செயலல்ல... நாத்திக அன்பர்கள் தினம் ஒருமுறையாவது "இறைவன் இல்லை" என்று
சொல்லி இறைவனை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு
இறைவனின் திருவருள் கிட்டுமா? எனவே தொழுதல் முக்கியம்.. இனிமேல்,
எக்கணமும் உன்னைத் தொழுது கொண்டேயிருப்பேன் என் அன்னை அபிராமியே... என்று
அபிராமிப் பட்டர் மொழிகின்றார்.
பாடல் இருபத்தாறு
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே
விளக்கம் : அபிராமித் தாயே... உன்னை என்றும் தொழும் அடியவர் யாரெனில்
பதினான்கு உலகையும் படைத்து, காத்து, அழித்துத் தொழில் புரியும் அந்த
மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் சிவபெருமான். நறுமணம்
வீசும் கடம்பப் பூவினை கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் அழகிய என்
அபிராமித் தாயே... மணம் வீசுகின்ற உனது திருவடிகளில் எளியேனான என்
நாவிலிருந்து தோன்றிய கீழான சொற்களை சாத்துகிறேன். அக்கீழான சொற்கள் நின்
திருவடிகளில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது நல்லதொரு நகைச்சுவை..
"ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும்
திரிபவராம்" கடந்த பாடலில் அன்னையின் அடியவர்க்கு திருத்தொண்டு புரிதலைப்
பற்றிப் பேசிய அபிராமிப் பட்டர் அவ்வடியவர்களில் சிறந்த மூவரைப் பற்றி
இவ்விடம் பேசுகிறார். பதினான்கு உலகையும் படைத்து, காத்து, அழிக்கும்
தொழில் புரியும் அம்மும்மூர்த்திகள். நீ அவர்களைப் படைத்தாய்.. அவர்கள்
இவ்வுலகினைப் படைத்தனர். அவர்கள் படைத்த உலகோரும் உன்னைத் தொழுகின்றனர்.
நீ படைத்த அம்மும்மூர்த்திகளும் உன்னைத் தொழுகின்றனர்...
மும்மூர்த்திகளும் உனக்கு அடியவர்கள்... "கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல்
அணங்கே" நறுமணம் கமழும் கடம்பப் பூவினை கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும்
அழகிய பெண்ணே... " மணம் நாறும் நின் தாளிணைக்கு" மும்மூர்த்திகள் உனக்கு
அடியார்கள்.. உன் கூந்தலில் இருப்பதோ நறுமணம் வீசும் கடம்பப் பூ.. நீயோ
அழகிற்சிறந்தவள். இது போன்ற பெருமைகளால் மணம் வீசும் உன்
திருவடிகளில்..... "என் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே" என்
நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள் உன் பாதங்களில் ஏற்பு பெற்றிருப்பது
நல்ல நகைச்சுவை... இவ்விடத்து தனது நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள்
என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது அபிராமி அந்தாதியை... நமக்கெல்லாம்
அபிராமி அந்தாதியே வேதம்.. அன்னையின் புகழ்பாடும் சிறந்த பாடல் நூல்.
ஆனால் அதை எழுதிய அபிராமிப் பட்டரோ எளியவன் என் நாவில் இருந்து புறப்பட்ட
கீழான வார்த்தைகள் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்.. ஆனால் அதையும் நீ
ஏற்றுக் கொண்டாயே... இது சிறந்த நகைச்சுவை என்கிறார்.
மும்மூர்த்திகளாலும் தொழப் படுபவள் நீ.. அவர்கள் உன்னை என்ன சொல்லித்
துதிப்பார்கள்?? நாமறியோம்... தேவாதிதேவர்களெல்லாம் உன்னை என்ன சொல்லித்
துதிப்பார்கள்?? நாமறியோம்.. எம் சிற்றறிவுக்கெட்டிய சிறு சொற்களால்,,
கீழான சொற்களால் உன்னைத் துதிக்கிறேன்... அதையும் நீ ஏற்றுக்
கொள்கிறாயே... இதென்ன நகைச்சுவை... ? என்கிறார். இவ்விடத்து அன்னை
அபிராமி எளியோர் சொல்லையும் தம் கவனத்தில் ஏற்கும் கருணையுடைவள் என்ற
அவளது பெருமையும், அன்னையைத் துதி செய்ய மிகச்சிறந்த பாடல்களைப்
பாடிவிட்டு இதெல்லாம் மிகவும் கீழான சொற்கள் என்று கூறும் அபிராமிப்
பட்ட்ரின் எளிமையும் தன்னடக்கமும் இப்பாடலின் மூலம்
வெளிப்படுகின்றன..அபிராமிப் பட்டரின் பாடல்களையே அவர் அவ்வாறு
சொல்லும்போது, அறியாது விளக்கமளிக்கும் இவ்வடியேனின் சொற்களெல்லாம்
எவ்விடம்தான் போகும்?
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்..
--Geetha Sambasivam 09:21, 26 பெப்ரவரி 2011 (UTC)