பாசுர மடல் 012 : இதத்தாய் இராமானுசன் !மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:48, 15 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் இதத்தாய் இராமானுசன் !
வேதங்களை காட்டிற்கு உவமை கூறும் ஒரு பழக்கம் உள்ளது. "வேதாரண்யம்" என்ற பெயர் அப்படித்தான் தோன்றுகிறது. காடு என்றால் நெடிதுயர்ந்த மரங்கள் இருக்கும். வாசனை பூச்செடிகள் இருக்கும். உயிர் காக்கும் மூலிகைகள் இருக்கும், முட் புதர்களும் இருக்கும்.
வேதங்களை தன்னிச்சையாக மனிதன் இயற்கையுடன் ஒன்றிய தருணங்களில் கிடைத்த உண்மைத் தரிசனங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வேதத்தின் அடிநாதம், மனிதன் தொடங்கி உலகத்தின் அத்தனை நிகழ்வுகளுக்கும் ஓர் காரணியைக் காட்டுவதுதான். சாராம்சத்தில் வேதம் மனிதனை ஒருவருடன் ஒருவர் இணைப்பதுடன், மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்குமுள்ள ஆழ்ந்த தொடர்பை மீட்பித்து அவனை மகிழ்வாக வாழ வைக்கும் நோக்குடன்தான் எழுதி வைக்கப்பட்டது.
பயனுள்ள எதையும் மனிதன் கடைசிச் சொட்டுவரை சுவைத்து முடித்து விடுவதுதான் இதுவரை வழக்கமாய் உள்ளது. ஆயிரம் உதாரணங்கள் தரலாம். வேதத்தின் அடிப் பயனை தெரிந்து கொண்ட மனிதன் அதை அதீதமாக பயன்படுத்த, வேதம் வழிகாட்டலை விட்டு வழிபடும் பொருளாகிப்போகிறது. வழிபடுவதற்கு சடங்குகள் தேவை. ஒரு நிலையில் வேதம் மறைந்து சடங்குகள் மட்டும் நிற்கும் நிலை வந்தது. வேதம் வியாபாரம் ஆகிப் போனது. வேத வியாபாரிகள் நல்ல வாழ்வு கொண்டனர் . இப்படி இந்திய சிந்தனை ஓட்டமும், தத்துவத் தேடலும் அற்று உறைந்து நின்ற காலத்தில் தோன்றினான் சித்தார்த்த கெளதமன் என்ற புத்தபிரான். இப்படி சடங்குகள் நிரம்பி நின்ற வேதபாராயணம் வேண்டுமா என்ற புரட்சிகர கேள்வியை முன் வைத்தான். உண்மையை வேறு வழிகளில் கண்டுகொள்ள முடியாதா என்று ஆராய்ந்து புது வழி சொன்னான். வழி வழியாக சமயத் தத்துவ விசாரணைகள் ஆரியத்தில் (சமிஸ்கிரதம்) எழுதப்பட்டு வந்த போது, மக்கள் மொழிகளில் தன் போதனைகளை எழுதிவைத்தான் புத்தன். ஆரிய மாயையை முதலில் உடைத்தவன் அவன். இவன் கற்பித்த வழிமுறை இந்தியா தாண்டி எங்கெங்கோ (ஜப்பான், சீனா...) போனது சரித்திரம்
புத்தன் "கடவுள்" என்ற கருத்தைப் பற்றி ஆழ்ந்த மவுனம் சாதித்து இருந்த போதும், அவனே கடவுளாக்கப் பட்டான் கால ஓட்டத்தில்! மரியாதை கருதி இந்தியர்கள் செய்யும் இக்காரியத்தில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்ன பெரியாரை ஒரு வழிபடு பொருளாக மாற்றி வைத்திருக்கும் தமிழகத்தைப் பார்த்தால் அவரது அடிப்படை போதனைகளே கேள்விக்குறியாக ஆகிவிடுவது இச்செயலின் தீமை! இப்படித்தான் புத்தன் கதையும் ஆனது. புத்தம் அதன் சீர்மை கெட்டு, போதனைகள் வலுவிழந்த காலக்கட்டதில் இந்திய தத்துவ விசாரணைக்கு உரம் கொடுக்க தோன்றினான் சங்கரன் (ஆதி சங்கரர்).
புத்தரின் மீது உள்ளார்த்தமாக ஆழ்ந்த பக்தி செய்தவன் சங்கரன். பெளத்தம் விட்டுச் சென்ற இடிபாடுகளிலிருந்து ஒரு மாபெரும் மாளிகையை உருவாக்குகிறான் சங்கரன். ஒன்றிலிருந்து ஒன்று என்று இந்திய சிந்தனைகளுக்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. சங்கரனின் அத்துவைத (இரண்டு இல்லை) தத்துவம் பெளத்த கருத்துக்களை உள்வாங்கி எழும்புகிறது. இதனால்தான் சங்கரனுக்கு "பிரசன்ன புத்தன்" (புத்தன் வேறு போர்வையில்) என்றொரு பட்டப் பெயர் உண்டு. ஆனால் சங்கரன் உருவாக்கிய சனாதன மதம் பண்டைய இந்திய மதங்களை ஒன்று சேர்ப்பதாக அமைகிறது. வங்காளத்தில் புழங்கிய காளி பூஜை, ஒரிசாவில் பிரபலமாயிருந்த ஞாயிறு வழிபாடு, மராட்டிய தேசத்து கணேச பூஜை (தமிழக பிள்ளையார் வழிபாடு ஔவை பிரபலப்படுத்தியது. "பிள்ளையார் எறும்பு" போல் யாருக்கும் தொந்திரவில்லாத சாத்வீகமான வழிபாடு அது. இப்போது சென்னையை பயமுறுத்துவது மராட்டிய வழிமுறை!), திராவிட தேசங்களில் இருந்த முருக, அரி, சிவ வழிபாடுகள் இவைகளை ஒன்று சேர்க்கிறார் சங்கரர். இதை இப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் தமிழக மரபான ஐந்திணை வழக்கில் முல்லைக்கு கண்ணனும், குறிஞ்சிக்கு வேலனும், மருதத்தில் இந்திரனும், பாலைக்கு கொற்றவையும் (காளி), நெய்தல் தெய்வம் வருணன் என இருக்கிறது. சூரிய, கணேச வழிபாடு பண்டைய தமிழ் மரபில் இல்லை (?). சங்கரன் செய்வித்த சனாதன மதம் பண்டை வேதங்களின் அதிகாரத்தை (authority) ஏற்றுக் கொள்கிறது.சடங்குகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் வேதம் ஓதுதல் அந்தணர்களின் கடன் என்ற நிலையை மீட்டுக் கொடுக்கிறது. வேதமும், அதன் புரிதல்களும் மீண்டும் மேட்டுக்குடிக்கே போய்ச் சேர்ந்து விடுகிறது. சங்கரன் திராவிட கலாச்சாரத்தில் தோன்றினாலும் (மலையாள தேசங்களில் அரச மொழியாக தமிழ் இருந்தபோதும்), அவனுக்கு திராவிட/தமிழ் இலக்கியங்களில், அதன் மரபில் பரிச்சயமில்லை (தமிழ் நாட்டில் பிறந்து இங்கிலீஸ் மீடியத்தில் படிக்கும் மேட்டுக்குடி தமிழர்கள் போல்). அவன் செய்வித்த நூல்கள் அத்தனையும் உயர் ஆரியத்தில் நின்று போயின. "காலடி" மண்ணின் மொழியாகிய மலையாளம் நீச்ச பாஷையாக அவனுக்கு போய்விட்டது. எனவே சங்கரன் செய்வித்த மதமும் ஆரிய மதமாகவே போய்விட்டது.
இந்நிலையில் தோன்றுகிறான் ஸ்ரீபெரும்புதூரில் ஓர் தமிழன். தமிழ் மரபில் கல்வி கற்கிறான். ஈரப் பாசுரங்கள் நாலாயிரத்தையும் ஆழ்ந்து கற்கிறான். ஆழ்வார்கள் கண்ட இறை தரிசனங்களை அவர்கள் வழியில் பார்க்கிறான். இவனுக்கு தமிழ் நீச்ச பாஷையாகத் தோன்றவில்லை. தேவ பாஷையாகத் தெரிகிறது. மாறன் செய்வித்த தமிழ் இவனுக்கு அமுது. இவன் தமிழகத்தில் ஒரு சமய/சமூக புரட்சிக்கு வித்திடுகிறான், நம்மாழ்வாரின் நூற்றாண்டு அறைகூவலின் எதிரொலிபோல்:
பொலிக! பொலிக! பொலிக!
இங்கு கடல்வண்ணன் பூதங்கள் என்று சொல்வது வைணவ அடியார்களை! இப்பூதங்களின் பெரும்பூதம் ஸ்ரீபெரும்புதூர் பூதம் ;-) |
