சிவலிங்கங்களின் வகைகள்மரபு விக்கி இருந்துGeethasambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:04, 22 ஜூன் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் கீதா சாம்பசிவம்
அறிமுகம்
அண்டமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமானுக்கு உருவம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி எல்லாம் இல்லை. இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் "சிவன்" என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. வடிவம் எப்படி ஏற்பட்டாலும் இன்றைக்கு முழுமுதல் வழிபாட்டில், சிவலிங்க வழிபாடும், நடராஜர் வழிபாடும், சோமாஸ்கந்தர் வழிபாடும் சிறப்பாகப் பேசப் படுகிறது.
முகலிங்கம்:
தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் முகலிங்கங்களும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலில் கண், காது, மூக்கு வைத்து அலங்கரிக்கப் பட்ட முகலிங்கமும், காளஹஸ்தி கோயிலிலும் மேற்கூறியவாறு அலங்கரிக்கப் பட்ட லிங்கமும், ஊட்டியிலும் இவ்வாறான லிங்கங்களும் காணப் படுகின்றன. லிங்கங்கள் பலவகைப் பட்டாலும், வழிபாட்டுக்கு உரியவையில் சிறப்பானவை சுயம்புலிங்கங்களே ஆகும். இந்தச் சுயம்பு லிங்கங்கள் தானாக உண்டானதும், கரடுமுரடாகவும் இருக்கும், மற்ற ரேகைகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கின்றனர். இது தவிர, குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறும் இஷ்டலிங்கங்கள் உண்டு. இவை தனிப்பட்ட வழிபாடுகளிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பாமர மக்களுக்கு அருளும் வண்ணம் ஏற்பட்டவையே தேவர்கள், முனிவர்கள், மற்றும் மனிதர்களால் ஸ்தாபிக்கப் பட்ட பரார்த்தலிங்கம். இவையே பெரும்பாலும் கோயில்களில் வழிபாட்டுக்கு என அமைந்துள்ளவை.
முக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப் படும். அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது. இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது. பரம்பொருள் ஆன அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப் படுகிறது. ஒரு முகலிங்கம்:
முதலில் ஒரு முகம் கொண்ட லிங்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும் இந்த லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடைவார்கள். சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது எனச் சொல்கின்றார்கள். தென்மேற்கு மூலையை "நிருதி" என அழைக்கிறார்கள். இந்த நிருதி தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும் அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்கங்கள் காணப்படுவதாயும் சொல்கின்றார்கள். வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம் என ஆய்வாளர்கள் சொல்வதாயும் தெரிகின்றது. ஆந்திராவில் உள்ள குடிமல்லம் என்னும் பகுதியிலும் சிவனின் முழுவடிவமும், லிங்கமாய் ஆன வரலாறும் காணப் படுவதாய்ச் சொல்கின்றார்கள். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரிகிறது.
இப்போது இரு முக லிங்கம் பத்திப் பார்ப்போம். இரு முக லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு நோக்கியும் (தத்புருஷம்) மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். இவை "ம்ந்திரலிங்கங்கள்" எனச் சொல்லப் படுகின்றன. இவற்றை அதிகம் வழிபடுவது கர்நாடகாவில் உள்ள லிங்காயத்தார் என அழைக்கப் படும் வீர சைவர்கள் ஆவார்கள். சிவத் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கங்களை வழிபடலாம் எனச் சொல்லப் படுகிறது. இந்த லிங்கங்களைப் பூஜிக்க தற்காலத்தில் "விருட்சி" என அழைக்கப் படும் இருவாட்சி மலர்கள் நல்லது. இரு முகம் கொண்ட ருத்திராட்சத்தால் அலங்கரிக்கலாம்.
அடுத்து மூன்று முக லிங்கங்கள். இவை கிழக்கு, தெற்கு, வடக்கு மூன்று திசைகளை நோக்கிக் காணப் படும். தத் புருஷம், அகோரம், வாமதேவம் என மூவகைப் பட்ட முகங்கள் கொண்ட இந்த லிங்கங்கள் முத்தொழிலையும் குறிப்பவை எனச் சொல்லப் படுகிறது. கிழக்கு முகம் ஆண்மையின் கம்பீரத்துடன் காணப்படுவதால் படைத்தலையும், தெற்கு முகம் கோபத்துடன் காணப் படுவதால், அழித்தலையும், வடக்கு முகம் பெண்மையின் ஜாடையுடனே சிரிப்புடனேயும் காணப் படுவதால் காத்தலையும் குறிக்கும். திரிமூர்த்தி லிங்கம் என அழைக்கப் படும் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை கோயிலிலும், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரரும் திரி மூர்த்தி லிங்கங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர, எலிபெண்டா குகையிலும் மும்முக லிங்கம் காணப் படுவதாய்ச் சொல்கிறார்கள். இந்த மும்முக லிங்கங்களுக்கு மும்முக ருத்ராட்ச மாலை அணிவித்து, மூன்று தளங்கள் உள்ள வில்வத்தால் வழிபடலாம்.
சதுர்முகலிங்கம்:
இனி சதுர்முக லிங்கங்கள் பத்திப் பார்க்கலாம். சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் "வேத லிங்கம்" என அழைக்கப் படுகிறது. இவற்றின் முகங்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிப்பவை என்று சொல்வார்கள். நேபாளத்தின் பசுபதி நாதர் கோயிலில் நம் கண்ணுக்குத் தெரிவது சதுர்முக லிங்கம் தான் என்றாலும், அவற்றுக்கும் மேல் நோக்கிய ஒரு முகமும், கீழ் நோக்கிய ஒரு முகமும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளதாய்ச் சொல்லப் படுகிறது. ஆனால் நேபாள சதுர்முக லிங்கம் மார்பு வரையிலும், இரு கரங்களுடனும் காட்சி தருகிறது. நான்கு முகம் இருப்பதால் அங்கே நான்கு வாசல்களும் உண்டு. ஒவ்வொரு வாசலிலும் போய்த் தனித் தனியாகத் தரிசனம் செய்யும் வசதியும் உண்டு.
ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானனக்காவில் கோவில் அருகே "பஞ்சமுகேஸ்வரர் கோயில்" என்று தனியாக உள்ளது. சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோயிலில் வைத்துச் செய்யப் படுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப் படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப் படுகிறது. இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது. திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப் படும் "ஆகமம்" இந்த ஐந்து முகங்களில் இருந்தே வந்ததாயும் சொல்லப் படுகிறது. அதனால் பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் "சிவாகம லிங்கம்' எனவும் சொல்வார்கள்.
பஞ்ச முக லிங்கங்கள் தவிர்த்து, ஈசனின் ஆறாவது முகமும் உள்ளது. இந்த ஆறாவது முகம் கீழ்நோக்கியே காணப் படுகிறது. இது "அதோ முகம்" என அழைக்கப் படுகிறது. ஈசனின் ஐந்தாவது முகம் மேல் நோக்கி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டும், ஆறாவது முகம் கீழ் நோக்கி பாதாளத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும். இந்த ஆறாவது முகம் நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாகும். இந்த ஆறு முகங்களில் இருந்தும், அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து விளைந்த நெருப்புப் பொறிகளில் தோன்றியவரே முருகப் பெருமான் ஆவார். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் பொங்கி வந்த போது, அதை விழுங்கியது இந்த ஆறாவது முகமே எனவும் சொல்லப் படுகிறது.
ஆகவே ஈசனின் நீலகண்டமே ஆறாவது முகமாய்க் கருதுவோர்களும் உண்டு. ஆறுமுகங்களுடன் கூடிய லிங்கங்கள் எங்கும் வழிபாட்டுக்குக் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் முருகப் பெருமானே சிவ ஸ்வரூபம் என்பதால் அவரே ஆறுமுக, சிவனாய்க் கருதி வழிபடுவோரும் உண்டு. திருவானைக் காவில் உள்ள தென் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானும் காணப் படுவதாய்ச் சொல்கின்றனர். காஞ்சியில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும், முன் மண்டபத்தின் லிங்கத் திருமேனியில் பிடாரியின் உருவம் அமைக்கப் பட்டு, சக்தி லிங்கம் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். அடுத்து சதாசிவ மூர்த்தி பற்றிப் பார்ப்போமா?
|