தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 14மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:58, 24 செப்டெம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட மீனவத் தலைவர்கள். புலவர் ஆ.சிவசுப்பிரமணியன் வரலாற்று ஆய்வாளர், தூத்துக்குடி. வெள்ளையனை எதிர்த்து அவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற உணர்வு இந்தியாவில் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் தான் முதலில் தோன்றியது. ஊமைத்துரையின் இரண்டாவது போர் மிக உக்கிரமானது. அந்தப் போரில் அவனுக்கு உதவியவர்களில் தூத்துக்குடிப் பகுதியில் உள்ள மீனவ ஜாதித் தலைவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. நெல்லை மாவட்டத்தின் நீண்ட கடற்கரைப் பகுதியில் கடலை நம்பி தொழில் நடத்துபவர்கள் பரதவர்கள். இவர்களின் ஊர்த்தலைவர்கள் 'பட்டம் கட்டிகள்' என்று அழைக்கப்பட்டார்கள். கடற்கரை ஊர்கள் அனைத்திற்கும் இவர்களே தலைவர்களாக இருந்து வந்தார்கள். இந்தத் தலைவர்களின் தலைநகர் தூத்துக்குடி. இவருடைய பதவி பரம்பரையாக வருவதாகும். கிட்டத்தட்ட இந்த சமூகத்தின் மன்னர்கள் என்று கூறலாம். குடும்பத்தின் மூத்த மகனே இந்தப் பதவிக்கு ஏற்றுக் கொள்ளப்படுவான். பட்டாபிஷேஹம்: இவர்கள் பதவி ஏற்கும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அதைப் பட்டாபிஷேஹ விழா என்றே குறிப்பிட்டுள்ளார்கள். பரவர் குல வரலாற்று ஆசிரியர் எம்.எக்ஸ். மிராண்டா இந்த விழாவைப் பற்றி வர்ணிக்கையில், "ஜாதித் தலைவர் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் முன்னர் சமுதாயத்தின் முக்கியப் பிரமுகர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் குருவின் கரத்தால் "ஆசீர்" பெற்றுக் கொள்வார். பின்னர் மகிமையுடன் அரியணை ஏறி அமர்வார். அவருடைய துணைவர்கள் செலுத்தும் திறையைப் பெற்றுக் கொள்வார். இந்த முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து கோலாகல பவனி நடக்கும். தங்கப்பல்லக்கில் தலைவர் அமர்ந்து வர தீவட்டிகள், பாவாடை, குடைசுருட்டிகள், யானைகள், வாத்தியங்கள் பல்வேறு இசைக்கருவிகள், தாரை, தப்பட்டை என இத்யாதி அம்சங்கள் ராஜபவனிக்கு அழகு செய்யும். இதைத் தூத்துக்குடியில் இது வரை கண்டுபிடிக்காத ஒரு கல்வெட்டில் பட்டாபிஷேஹம் எனக் குறிப்பிட்டிருப்பதை நான் பார்த்து அதிசயித்தேன். நடைபாதையில்: தூத்துக்குடியில் புனித பீற்றர் ஆலயம் புராதனமானது. இங்கு இன்று வழிபாடு எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆலயம் இருக்கும் தெருவே புனித பீற்றர் கோவில் தெரு என்று தான் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள கல்லறைத் தோட்டம் அழிக்கப்பட்டு, இங்கு இரண்டு கல்வி நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இங்குதான் கேள்வி கேட்பாரில்லாமல் ஆங்கிலத்திலும், போர்த்துக்கீசிலும், தமிழிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் கல்வெட்டு பல புதிய உண்மைகளைச் சொல்கின்றன. அத்தனையும் அதிசயமான செய்திகள்: தம் 36 வயதில் காலமான (1885) ஜார் ரெண்டோ என்னும் குருவைப் பற்றியது ஒரு கல்வெட்டு. இவருடைய பெயரை வைத்து இவர் போர்த்துக்கீசியர் என்று முடிவு செய்யலாம். பரவ குலத்தின் முதல் குரு 1894--இல் தான் தோன்றினர் என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் இவர் வெளி நாட்டவராகப் போர்த்துக்கீசியராகவே இருக்க வேண்டும். கல்லறைக் கல்வெட்டுப்பகுதியில் எண்ணெய் பூசியும், மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மறக்குடித்தெரு, பீட்டர் கோவில் தெரு, பெரியகடைத்தெரு கத்தோலிக்க மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைக்கின்றனர். நோய் தீர்த்தல் காண்கின்றனர். ஆண் குழந்தை வேண்டிப் பிரார்த்தனைகளும் செய்து வருகிறார்கள். சகோதரர்கள் வசிக்கும் விடுதியின் நுழைவாயிலில் கல்லறைக் கல்வெட்டு ஒன்று நடைபாதையாகப் பயன்பட்டு வருகிறது. அதனால் அதில் உள்ள எழுத்துக்கள் மிகவும் கெட்டுப் போய்க் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டின் ;தமிழ்ப் பகுதியில் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி இல்லை. இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி. 1808. இதன் வாசகம் இப்படி இருக்கிறது:- மதுரைக்கடல் துறை முதல் தலத்திலிருந்து பரவர் சாதிகட்கெல்லாம் சாதித் தலைமையென்ற ஸ்தானத்துக்கு மிகவும் யோக்கியமுள்ளவராகி இருந்த சி.சி. டோம் கரிபியேல்தா குருவாஸ் கோமாஸ் அவர்கள் பிறந்தது 1758 மார்கழி 3. அவர்களுக்கு சாதித் தலைமை என்ற பட்டாபிஷேகம் சூட்டினது 1779 ஆடி மாதம் 10. அவர்கள் தெய்வமானது 1808 தை 11.... என்றும் அவருடைய மனைவியின் மறைவு குறித்தும் செய்திகள் உள்ளன. சி.சி. சிஞ்ஞோர் சாதித் தலைவருக்குரிய அடைமொழி. இதுபோர்ச்சுக்கீசியச் சொல் என்பதைக் கவனிக்க வேண்டும். தங்கத்தேர்: தூத்துக்குடி பனிமாதா கோவில் தங்கத்தேர் முதன்முதலாக ஓடியது 1806-ஆம் ஆண்டுதான். அந்தத் தங்கத்தேரைச் செய்தவரும் இவர்தான் என்பது பலருக்குத் தெரியுமோ என்னவோ! பாஞ்சாலம் குறிச்சி: வெள்ளையன் எதிர்ப்பு உணர்வுகள் நெல்லை மாவட்டத்தில் தான் முதலில் தோன்றியது. இந்த எதிர்ப்பில் கட்டபொம்மன், அவனுக்குப் பின்னர் ஊமைத்துரை இவர்கள் தீவிரம் காட்டினார்கள். ஊமைத்துரையின் இரண்டாவது போர் மிக அதிசயிக்கத் தக்கது. பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து தப்பி வெள்ளையர்களால் அழிக்கப்பட்டப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பெரும் மனித சக்தியைத் திரட்டி ஒரு வாரத்துக்குள் கட்டினான். அந்தக் கோட்டையின் அமைப்பு வெள்ளையர்களால் பெரிதும் வியப்பாகப் பேசப்பட்டது. அதைத் தகர்ப்பது அவர்களுக்குச் சாமானியமானதாக இல்லை. தாங்கள் கொண்டு வந்த பீரங்கிகளால் அதை நொறுக்க முடியாத நிலையில் திருச்சியில் இருந்து அவர்களின் இஞ்சினியர்கள் வரவழக்கப்பட்டுக் கோட்டையை ஆராய்ந்தார்கள். பின்னர் அதைத் தகர்க்க வேண்டுமானால், 12 பவுண்டர் பீரங்கி தான் வேண்டும் என்று அதைத் திருச்சியில் இருந்து கொண்டு வந்தார்கள். பெரும் முயற்சியில் கோட்டை தகர்க்கப்பட்டது. "கோட்டைக்குள் சென்று பார்க்கும்போது 12 ஆயிரத்திற்கும் அதிகமான போர்வீரர்களின் சடலங்களை ஒரு குவியலாக மலை போல் கிடந்ததைப் பார்த்தேன்." எனப் போர்க்களத் தளபதி ஜெனரல் காலின்ஸ் தம் குறிப்பில் எழுதி வைத்துள்ளார். ஊமைத்துரையிடம் துப்பாக்கிகள், மற்றும் நவீன ஆயுதங்களும் இருந்தன என்றும் அவை எங்கிருந்து கிடைத்தன என்பது புதிராக உள்ளது என ஆங்கிலத் தளபதி வியந்து கூறியுள்ளார். இந்த அளவிற்குப் பெரும் உதவிகளை அந்த மாவீரனுக்குச் செய்தது யார் என்ற புதிருக்கு விடை கிடைத்துள்ளது. மதுரைப் பல்கலைக் கழக வலாற்று ஆய்வாளர் திரு ராஜய்யன், South Indian Rebellion என்ற ஆய்வு நூலில் இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சிப் போரை நடத்திய ஊமைத்துரைக்கு உதவி செய்தவர்களைக் குறித்துக் கூறும்போது, "The Fishermen Community of the coast, Jati Talaivan or Headman not onlya rebellion but he supplied guns and gun powder for the promotion of the struggle," என்று குறிப்பிடுகிறார். மேலும் காடல்குடியில் நடந்த ஆங்கிலேயர் எதிர்ப்புக் கூட்டத்தில் சாதித்தலைவர் சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.( Ramnad Nagaraja Monigar of Tirunelveli, Jatitalivan of Tutukudi held a meeting and their deliberations were held in. details could not be ascertained. ராஜய்யன் சாதித் தலைவர் என்பவர் இங்கு கூறப்படும் சாதித்தலைவர் தான் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் ஊமைத்துரை தலைமையில் நடந்த பாஞ்சாலங்குறிச்சி யுத்தம் 1801 இல் நடைபெற்றது. கல்லறைக் கல்வெட்டின்படி 1808 வரை இவர் தலைவர் பதவி வகித்திருக்கிறார்; ஆகியால் அந்த அடிப்படையின் படி பார்க்கும்போது வெள்ளையர் எதிர்ப்பில் அவர் முக்கியப் பங்கு வகித்திருப்பதாகக் கருதலாம். மேலும் பல செய்திகள்: "மதுரைக் கடல்துறை" என்று கடற்கரைகள் சில அழைக்கப்பட்டன என்பது கல்வெட்டுக்களின் வரியிலிருந்து தெரிகிறது. காலமானார் என்பதை 'தெய்வீகமானார்' என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் அப்போது இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. Category: பரதவர்: சமூகங்கள்; கிறிஸ்துவம்
|