சோழர் காலத்திய சமயம்-- பகுதி 1மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:55, 23 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம் சோழர் காலச் சமயம்
அப்பர் நாகப்பட்டினத்தை நாகைக் காரோகணம் என்றும் குடந்தைக் காரோகணம் என்றும் கச்சிக் காரோகணம் என்றும் பாடியுள்ளார். வட நாட்டில் காரோகணம் என்ற இடத்தில் பிறந்த லகுளீசரின் சித்தாந்தத்தைப் பின்பற்றும் மதம் பாசுபதம். இந்த லகுளீசர் பிறந்த இடமான காரோகணம் ஒரு தலையாய பாசுபதர்களின் மையமாகத் திகழ்ந்தது. எனவே மேற்கூறிய தமிழ்நாட்டுக் காரோகணங்கள் லகுளீச சித்தாந்தத்தைப் பின்பற்றும் பாசுபத சைவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அப்பர் தம் திருவாரூர்ப் பதிகத்தில் பாசுபத, காளாமுக, காபாலிகர் உலவும் திருவாரூர் வீதியைப் பாடுகிறார். அவரது சமகால மகேந்திரவர்மனும் காபாலிகர்களையும் பெளத்தர்களையும் தமது மத்த விலாச பிரகடனம் என்ற நூலில் கேலி செய்து எழுதியுள்ளார்.
சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து சமண மதத்தைத் தழுவிப் பின்னர் தீவிர சைவ சமயத்தவராக மாறிய அப்பர் தாம் தழுவியிருந்த சமண மதத்தைக் கடுமையாகத் தாக்குகின்றார்.*4 சம்பந்தரும் அவ்வாறே தாக்கியிருக்கின்றார். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுகின்ற போது தீவிரமாவது மனித இயல்பு. அதுபோல வயதில் மூத்த அப்பர் மிகவும் தீவிர பக்தராக மாறுகிறார். சமண பெளத்த பாழிகள் இடிக்கப் பட்டிருக்கின்றன. சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. *5 அப்பரின் பாடல்கள் காபாலிக சைவர்களின் சிவ உருவ வழிபாடுகளும், சிவன் கபாலத்தை கையிலேந்தியவனாக, கால காலனாக, பைரவனாக, பிக்ஷாடனராக, மேனியெங்கும் திருநீறு பூசியவனாகக் கூறுவதிலிருந்து தீவிர சைவர்களான காபாலிகர்களின் சைவ சமயத் தாக்கம் அப்பரிடம் அதிகமிருந்திருக்கிறது. மனித உயிர்பலி செய்யும் காபாலிகத்தைப் பின் பற்றியதால் தான் மதுரை, திருவோத்தூர் போன்ற இடங்களில் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்லப் பட்டனரோ என எண்ண வேண்டியுள்ளது. *6
இவ்வாறு நாயன்மார், ஆழ்வார்கள் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சமண, பெளத்தர்களின் ஆதிக்கம் பொருளாதாரத்திலும், கல்வி, மருத்துவ, சமூக சேவைகளிலும் கட்டாயமாகப் பறிக்கப் பட்டது. அதற்கு மாற்றாக சைவ வைணவ மதங்கள் மக்கள் மத்தியில் முன் வைக்கப் பட்டு அவ்விடங்களை நிரப்ப முயற்சி செய்தன. முடிவில் வெற்றியும் பெற்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு சைவ சமய மறுமலர்ச்சியில் வேளாளரான அப்பரும் பிராமணரான சம்பந்தரும்,பங்கு பெற்றிருந்தனர். இவர்களுக்குப் பின்னர் வந்த பிராமணராகிய சுந்தரரும், எனவே. வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின் பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம். சமணர்களின் செல்வாக்கும் செல்வமும் வணிகர்களின் வியாபார ரீதியில் அமைந்தது.வணிகர்கள் ஆதரித்த மதம் சமண மதம். சமண முனிவர்கள் நல்லவர்களாக இருந்தும் சமூகத் தொண்டுகள் பல செய்தும் நீர்ப் பாசனத்திற்கு வேண்டிய குளம், தூம்பு, போன்றவை செய்து கொடுத்தும் நல்ல மனத்தவர்களாக இருந்திருந்தும், விவசாயத்தை முன்னிலைப் படுத்தித் தங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்த்தார்களில்லை. தமிழ்நாடோ ஒரு சிறந்த முழு விவசாய நாடு. விவசாய வளர்ச்சியில் தான் உழுகுடி மக்களின், பிற தொழிலாளிகளின் வாழ்வும் உயர்வும் அடங்கியிருந்தது. எனவே சமண மதத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து--விவசாய நாடாக நிலவுடமைச் சமுதாயமாக அச்சமுதாயத்தின் கருவூலமாகக் கோவில்களை அமைத்து மக்களின் அன்றாட வாழ்வில் கோயிலோடு அதாவது சைவ மதத்தோடு தொடர்பு படுத்தியதாகவும் அமைக்கப் பட்ட அரசமைப்பே பிற்காலச் சோழ வரலாற்றின் சாராம்சமாகும்.விவசாயத்தைப் பெருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன என்பதை நோக்கினால் மிகவும் பிரமிப்பாக இருக்கும். நீர்ப்பாசனத்திற்கு அவர்கள் செய்த செயல்களைக் கல்வெட்டுக்களில் படிக்கும்போது பெரு வியப்பை ஏற்படுத்தும்.
பிற்காலச் சோழராட்சியில், கி.பி. 9--ஆம் நூற்றாண்டில் அந்தணர்களும், வேளாளர்களும் மிக உயர்ந்த பதவியை வகித்தனர் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கி.பி. 6--ஆம் நூற்றாண்டில் அவர்கள் நடத்திய போராட்டத்தின் பலனை 9-ஆம் நூற்றாண்டில் மிக நன்றாகவே அனுபவித்தார்கள்.அமைச்சர்களாகவும் பிரமதேய சதுர்வேதி மங்கலங்களின் சபை நிர்வாகிகளாகவும் படைத் தளபதிகளாகவும் கோயில் அதிகாரிகளாகவும் நீதி வழங்குபவர்களாகவும் முக்கிய பதவிகளில் அமர்ந்திருந்த அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர்.அவர்கள் சைவக் கோயில்களுக்குத் தங்கள் செல்வத்தின் காரணமாக ஏராளமான பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினர். செப்புத் திருமேனிகளை எழுந்தருளிவித்தனர். ஏன் கோயில் பலவும் கட்டியிருக்கின்றனர். நல்ல வளமிக்க ஊர்கள் பிரமதாயமாகவும் சதுர்வேதி மங்கலங்களாகவும் அந்தணர்களுக்கு அளிக்கப் பட்டன.
இந்த இரு குலத்தவரும் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தாலும் கல்வி கேள்விகளிலும் நாட்டின் கருவூலங்களாக ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் கோயில்களின் கருவூலத்திலும், நிர்வாக அமைப்புக்களிலும் முதன்மை பெற்று விளங்கியவர்கள் அந்தணர்கள்.இறையிலியாக பிரமதேய சதுர்வேதி மங்கல நிலங்கள் வழங்கப் பட்டது அந்தணர்களுக்குத் தான். வளமிக்க அவ்வூர்களுக்கு சபை அதிகாரிகள் அல்லது அங்கத்தினர்கள் அவர்கள் தாம். இந்த அளவுக்கு வேளாளர்கள் செல்வாக்குப் பெற்றிருக்க வில்லை. அரசர்களிடம் அமைச்சர்களாகவும், மிகவும் குறைந்த அளவில் ஆங்காங்கே கி.பி. 11--ஆம் நூற்றாண்டின் சித்ரமேழி பெரிய நாடு என்னும் அமைப்பிலும் அவர்கள் அதிகாரிகளாக இருந்தார்களே தவிர, ஊர் நிர்வாகத்தில் அந்தணர்களைப்போல அதிகமான செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. முதலாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் அமணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமன் குடும்பத்தார் எந்த அளவுக்கு பரம்பரை பரம்பரையாக சோழர்களுக்கு அதிகாரிகளாக இருந்தார்கள் என்பதை திரு ஒய். சுப்பராயலு அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். *7
அந்தணர்களின் இந்த வளர்ச்சியும், செல்வாக்கும் நிலவுடமைச் சமுதாய வளர்ச்சியின் உச்சகட்டத்தை எய்திய முதலாம் இராஜராஜனின் செல்வாக்கிற்கு ஏற்றாற்போல அவன் காலத்தில் உயர்ந்திருந்தது. அந்தண சமூகத்தினரின் இந்த வளர்ச்சி ராஜராஜ சோழனின் போக்கையே திசை திருப்புமளவு காணப்பட்டது. ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளை ஊன்றிப் பார்க்கின்றபோது அவன் அந்தணர்களின் செல்வாக்கினைக் குறைக்க அவர்களே அறியாத வகையில் புத்திசாலித் தனமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றான். தந்தை சுந்தர சோழன் காலத்தில் பிரம்மாதிராயர்களாகிய அந்தண உயர் அதிகாரிகளால் தமையன் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட செய்தி அந்தணர்களின் ஆதிக்கத்தின் உச்ச கட்டமாக இருந்திருக்க வேண்டும். இத்தகைய காலகட்டத்தில் தான் ராஜராஜ சோழனின் சிந்தை வேறுவிதமாகச் செயல் பட்டது.
இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர், சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. இவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன் எடுத்த கோயில்களிலோ பாண்டிய நாட்டிலோ அகோர உருவங்கள் இல்லை. இக்கால கட்டங்களில் எடுத்த கோயில்களே நமக்குக் கிடக்கும் காலத்தால் முந்திய கோயிலும் உருவங்களுமாகும். அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான் சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.
--Geetha Sambasivam 09:55, 23 மே 2012 (UTC) |