seshadri sridharan
sseshadri69@gmail.com
களப்பிரர் படையெடுப்பால் தமிழகத்தில் தமிழ மூவேந்தர் ஆட்சி குலைந்து சங்க காலம் முடிவுற்ற பின்பு எல்லாத் துறைகளிலும் கோலோச்சிய தமிழ்என்ற நிலை மாறி தமிழ் அரசின் ஆட்சி மொழி, மத வழிபாட்டு மொழி என்று இல்லாமல் போகும் அவலநிலை தோன்றியது.
களப்பிரரும், பல்லவரும் தமிழருக்கு அயலான பிராகிருதத்தை அரசவை மொழி ஆக்கினர். தமது அரசாணைகளையும், நிலக் கொடை ஆவணங்களையும் பிராகிருதத்திலேயே வெளியிட்டு மக்கள் மொழியாம் தமிழைப் புறக்கணித்தனர். பல்லவர் பின்பு சமற்கிருதத்தை ஆதரித்தனர். ஆயினும் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசர்களும் வேளிரும் எளியோரும் தமிழைப் போற்றிப் பாதுகாத்தனர். இதற்கு சான்றாக அமைந்தவை தாம் போரிலும், பூசலிலும் பங்கெடுத்து வீர சாவு எய்திய மறவர்களின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட நடுகல் கல்வெட்டுகள்.
மதப்பித்து கொண்டு பல்லவ வேந்தர் சமற்கிருதப் பெயர்களை ஏற்றிருந்த வேளையில் அவருக்குக் கட்டுப்பட்டு அடங்கிய சிற்றரசர்கள், வேள்கள், படைத்தலைவர், படைவீரர் உள்ளிட்டு தமிழ எளியோர் பெரும்பலரும் தமிழ் மீது மாறாப் பற்று கொண்டு தமிழ்ப் பெயர்களை ஏந்தி இருந்தனர். ஈண்டு நடுகற்களில் உள்ள தமிழ்ப் பெயர்களைக் குறிப்பாகச் சுட்டவும், அவற்றுள் சில பெயர்கள் அயலக நாகரிக மன்னர் பெயர்களுடன் ஒத்திருப்பதைக் கோடிட்டுக் காட்டுவதுமான எனது பார்வையை வாசகருக்கு இந் நடுகல் கல்வெட்டுச் செய்திகளுடன் தருவதே இந்த நடுகல் கல்வெட்டு விளக்கத்தின் தலையாய நோக்கம்.
இனி, நடுகற்கள் குறித்து சிறு அறிமுக உரைக்குப் பின்பு நடுகல் விளக்கம் தொடங்கும். போரிட்டு மாண்ட மறவர்களுக்கு ஈமக் கடன் ஈந்து அவர் வீரத்தைப் பாராட்டி அவர் நினைவில் கல் ந்ட்டு வழிபடுவது பண்டைய தமிழ் மரபாக இருந்துள்ளது. இவ்வாறு நடப்பட்ட கற்களை நடுகல், வீரகல் என்று தமிழில் அழைப்பர். தெலுங்கில் வீர சிலாலு எனவும் ஆங்கிலத்தில் 'Hero Stones' எனவும் கூறுவர். நடுகற்கள் இந்தியா முழுமையிலும் காணக் கிடைக்கின்றன. தமிழில் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை உள்ளிட்ட இலக்கியங்களில் இவற்றுக்கான குறிப்புகள் உள்ளன. வெட்சிப் பூ சூடி கள்வர் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இது நடுகற்களில் தொறுக் (தொழு) கொள்ளல் எனப்படுகின்றது. அதே நேரம் கரந்தைப் பூ சூடி பகைநாட்டுக் கள்வர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை தாயக மறவர் மீட்டு வருவர். இவ்வாறான தொறுப் பூசலில் இருபக்கமும் மறவர்கள் மாள்வர்.
போரில் வீழ்ந்துபட்ட மறவர்களுக்கு நடப்பட்ட நடுகற்கள் அவர்கள் வீழ்ந்த ஊர்களிலேயே நடுப்படுவது உண்டு. ஒரே போரில் இறந்த வீரர்களுக்கு ஒரே இடத்தில் தனித்தனி நடுகற்கள் நடப்படுவதும் உண்டு. இதற்கு ஊரின் ஒரு புறத்தைத் தேர்ந்து ஈமக்காடு போல் எண்ணி அங்கு மாண்ட வீரர்களுக்கு சடங்குகள் ஆற்றி நடுகல் எடுத்து உள்ளனர் என்று கொள்வதற்கும் சான்றுகள் உள்ளன. சில நடுகற்கள் ஏரிக் கரைகளிலும், ஆற்றுக் கரைகளிலும் காணப்படுகின்றன. இன்னும் சில நடுகற்கள் ஊருக்கு வெளியே நடுக் காடுகளில் காணப்படுகின்றன. இது ஆகோள் எனும் தொறுக் கவரப்பட்ட இடம் ஆகலாம். தமிழகத்தில் நடுகற்கள் உள்ள இடங்கள் மக்களால் வேடியப்பன் கோவில் என்று அழைக்கப்படுகின்றன. சில நடுகற்கள் நாய், எருது, கிளி, யானை போன்ற விலங்குகளின் நினைவாகவும் எடுக்கப்பட்டு உள்ளன. கல்வெட்டு ஆய்வாளர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி நடுகற்களை இருபத்து எட்டு வகையினதாகப் பிரிக்கின்றார்.
சங்க காலத்தில் நடுகற்கள் ஓவியங்களாகவே இருந்துள்ளன. அதற்கு அடுத்து கோட்டு உருவ (Line drawing figures) நடுகற்கள் ஏற்பட்டன. பல்லவர் காலத்தில் தான் புடைப்புச் சிற்பங்கள் கொண்ட வட்டெழுத்து வாசகம் பொறித்த நடுகற்கள் ஏற்பட்டன என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி.
நடுகல்லில் வீரனின் புடைப்புச் சிற்பம் அல்லது உருவம், அவன் சமர்புரியும் நிலை, அவன் கையில் ஏந்திய படைக் கலன் வகை அதன்மேலோ, கீழோ அல்லது பக்கவாட்டிலோ அவன் காலத்தில் வழங்கிய எழுத்துகளில் மன்னனின் ஆட்சி ஆண்டு, அவனுக்குக் கட்டுப்பட்டு அடங்கிய சிற்றரசர் பெயர், அவருடைய படைத்தலைவர் பெயர், அவருடைய மறவர் பெயர், வீர சாவடைந்த மறவன் பெயர், அவனைப் பற்றிய சேதிகள், தொறுப் பூசல் என பல செய்திகள் குறிக்கப்பட்டு இருக்கும்.
தமிழ் நாட்டில் தென்பெண்ணை, சேயாறு, பாலாறு பாயும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை (செங்கம்), விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 80% நடுகற்கள் கண்டறியப்பட்டு உள்ளன. சேலம், கோவை, மதுரை, திருநெல்வெலி ஆகிய இடங்களிலும் நடுகற்கள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் சோழர் ஆண்ட தஞ்சை, நாகை பகுதிகளில் அதிகமாக நடுகற்கள் கிட்டவில்லை.
இந்நடுகற்கள் பல்லவர், வாணர் (பாணர்), கங்கர், நுளம்பர், சோழர், போசளர், பாண்டியர், விசயநகர மன்னர் ஆகிய அரசர் காலங்களைச் சார்ந்தவை. இவை 4 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து உள்ளன. தமிழி எனும் தமிழ்ப் பிராமியிலும் நடுகற்கள் 2006 ஆம் ஆண்டில் தேனி மாவட்டம் புலிமான்கோம்பையில் மூன்றும், தாதப்பட்டில் ஒன்றுமாக நான்கு நடுகல் வகை சார்ந்த கல்வெட்டுகள் கிட்டி உள்ளன.
வாணர் அல்லது பாணர் பிரிக்கப்படாத வட ஆர்க்காடு, விழுப்புரம் ஒட்டிய தென் ஆர்க்காடு, தருமபுரியின் தகடூர் நாடு, கோலார் ஆகிய பகுதியை ஆண்டுள்ளனர். சங்க காலம் தொட்டே ஆட்சியில் உள்ள இந்த மன்னரின் கீழ் சில குறுநில மன்னர்கள் இருந்துள்ளனர். பல்லவர்க்கு அடங்கிய இவர்கள் கங்கருடனும், நுளம்பருடனும் போரிட்டு உள்ளனர்.
சங்க கால குறுநில மன்னரான கங்கர் கொங்கணர் என்றும் குறிக்கப்படுவர். இவர்கள் காவிரியின் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் சில பகுதிகளையும் ஆண்டுள்ளனர். பல்லவர்க்கு அடங்கிய இவர்கள் சில போது பல்லவருடனும், வாணருடன் அதிக அளவும் போர் புரிந்து உள்ளனர்.
பல்லவர் கால நடுகற்கள் பெரும்பாலும் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன. இவை பிராமியில் இருந்து வட்டெழுத்து வளர்ந்து வந்ததன் கால அளவை அறிய உதவுகின்றன. சில தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளன. எளியோர் ஆக்கிய இந்நடுகற்களில் தமிழ் பீடுநடை போடுகின்றது. பிற மொழிச் சொல் கலப்பில்லாமல், சமற்கிருத பெயர்களைத் தமிழ்ப்படுத்தி எழுதி இருப்பது அக்கால மக்களின் தமிழ்ப்பற்றை பறைசாற்றுவதாய் உள்ளது. ஆள் பெயர்கள் 'ஆர்', 'அர்' என்று மதிப்புரவாகவும், உகரச் சாரியை உடனும் குறிக்கப்பட்டு உள்ளன. சில நடுகற்களில் 'மகன்' மக்கள் என்றும், 'மருமகன்' மருமக்கள் என்றும் பன்மையில் சுட்டப்பட்டுள்ளன. இச்செய்கை மக்கள் பொதுவாக வீரர்களை மதித்துப் போற்றியதற்கு அடையாளம் எனலாம். நடுகற்கள் கூறும் வரலாறு எளியோரின் பண்டைய குமுக வரலாறு மட்டும் அன்று, இன்னும் சொல்லப் போனால் அது தமிழின் வரலாறும் கூட என்று கூறுவது மீகை ஆகாது. இத்தகு எளியோர் வரலாற்றை, தமிழ் வரலாற்றை தமிழகத் தொல்லியல் துறை அறிஞர்கள் அரிதின் முயன்று கண்டுபிடித்து, படியெடுத்துப் படித்து விளக்கி நூலாக வெளியிட்டு உள்ளனர். அவர்தம் முயற்சிகள் பாராட்டுக்கு உரியன, உலகத் தமிழரின் நன்றியறிதலுக்கும் உரியன.
இங்கு மேற்கோளாக எடுத்துக் கொள்ளப்பட்ட நடுகல் வாசகங்கள் தமிழகத் தொல்லியல் துறை 1972 ஆம் ஆண்டு வெளியிட்ட 'செங்கம் நடுகற்கள்' எனும் நூலில் இருந்தும், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீட்டில் கல்வெட்டு அறிஞர் திரு ச. கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'நடுகற்கள்' எனும் நூலில் இருந்தும் பெறப்பட்டவை என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
செங். நடு. > நூல் செங்கம் நடுகற்கள்,1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு
தரும. கல். > நூல் தருமபுரி கல்வெட்டுகள்,1975,தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு
நடு. > நடுகற்கள்' எனும் நூல், 2004,மெய்யப்பன் பதிப்பகம்வெளியீடு, ஆசிரியர் கல்வெட்டறிஞர் திரு ச. கிருஷ்ணமூர்த்தி
கல்வெட்டு விளக்கம்
தருமபுரி ஊத்தங்கரை வட்டம் புலியானூர் என்ற ஊரில் வேடியப்பன் கோவில் வளாகத்தில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு (தரும. கல். 4/1972)உள்ளது . இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசை செயவிரு / மர்கே இருபது / (ஆவது) மீவெண் நாடு / சிரு பாழ் ஆள் / வார் பாலாசிரிரு மக் / கள் மாறன் க(பெ)லூரு தொறு கொண் / ட ஞான்று பட்டா / ன் கல்
மீ - மேல், மேற்கு; ஆள்வார் - ஆள்பவர்; மக்கள் - அரசருக்கு அடுத்த அதிகாரப் பொறுப்பு நிலை கொண்ட வீரர் அல்லது மகன்; தொறு - ஆநிரையை குறிக்கும் தொழு என்ற சொல்லின் திரிபு; ஞான்று - காலத்தில் (at the time of),பொழுது ; பட்டான் - செத்து வீழ்ந்தான், வீர சாவடைந்தான்
மகேந்திர வர்மனின் தந்தை சிம்ம விஷ்ணுவிற்கு முன் (545 AD இவனது இறுதி ஆட்சி ஆண்டு) ஆண்ட சிம்ம வர்மனின் இருபதாவது ஆட்சி ஆண்டில் மேல் வேணாட்டு சிறுபாழ் எனும் பகுதியில் ஆட்சி செய்த வேள் பாலாசிரியன் என்பானுக்கு 'மகன்' பொறுப்பு படைத்தலைவன் அல்லது மகன் மாறன் என்பவன் கப்பலூர் ஆநிரைகளைக் கவர்ந்த போது அங்கத்து மறவர்களின் எதிர்த் தாக்குதலில் வீர சாவு அடைந்துள்ளான். அவன் நடுகல் இது என்பதே செய்தி.
கல்வெட்டில் எழுத்துப் பிழைகள் மலிந்து உள்ளன. வர்மருக்கே என்பது விருமருக்கே என பொறிக்கப்பட்டு உள்ளது. வேணாடு வெண்நாடு என்று உள்ளது. சிறு என்பது சிரு என எழுதப்பட்டு உள்ளது. மாறன் பாண்டிய நாட்டுப் பெயராக உள்ளது. வால் அசிரியன் என்பது இங்கு பாலாசிரியன் என வழங்குகிறது. வால் > பால் என்பது ஒளிரும் வெண்மையை குறிக்கும். அசிரியன், ஆசிரியன், அசுரன் என்பன அசீரிய நாட்டினன் என்பதை குறிக்கும். இவன் முன்னோர் அந்நாட்டவருடன் தொடர்பு கொண்டவர் ஆகலாம். அதனால் இவன் பெயர் ஆசிரியன் என வழங்கியது போலும். அசூர் பாணி பால் 668 -626 BC என்ற அசீரிய மன்னன் பெயரை நோக்குக. பால் என்ற பெயர் மேலை நாகரிகங்களில் பல மன்னர் பெயர்களில் இடம் பெறுகிறது. மகேந்திர வர்மனின் 14 ஆம் ஆண்டு மாக்கனூர் நடுகல்லும், பதினெட்டாம் ஆண்டு தண்டம்பட்டு நடுகல்லும் ஈண்டு கருத்தில் கொள்ளத் தக்கன. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Amen Asero 659 - 643 BCE > ஆமின் அசிர(ன்) > ஆமன் அசுரன். பாலாசிரியன் பெயரைச் சுட்டும் கல்வெட்டுகள் சிம்மவிஷ்ணுவின் பத்தென்பதாம் ஆட்சி ஆண்டு புலியனூர் கல்வெட்டு ஒன்றிலும், மகேந்திரனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் புலியனூரில் அமைந்த கல்வெட்டு ஒன்றிலும் ஆக மூன்று கல்வெட்டுகள் இவன் 60 ஆண்டுகள் வாழ்ந்ததைக் குறிக்கின்றன.
- - - -
திருவண்ணாமலை மாவட்ட செங்கம் வட்டம் பெருங்குளத்தூர் எனும் ஊரின் வேடியப்பன் கோவிலில் வட்டெழுத்தில் நடுகல் கல்வெட்டு (நடு.பக். 152). அமைந்து உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசை சிங்க பருமற்கு அ -- / துவது கங்கதிரை மகன் / விண்ணன் ஊர் எறிபட்ட / கெலவர் பொன்னக்க கடுரூ / பெருங் குளத்தூரு ப / ட்டார் கல்
எறிபட்ட - அழிபட்ட அல்லது வெல்லப்பட்ட எனக் கொள்ளலாம்; கெலவர் - அச்சத்தால், மனக்கலவரத்தால்; கல் - நடுகல்.
சிம்ம வர்மனின் ஐ(ந்தா)வது ஆட்சி ஆண்டில் கங்க அதியரசனின் 'மகன்' என்ற அதிகாரப் பொறுப்பு பெற்ற விண்ணன் என்பவன் பெருங்குளத்தூரைத் அழித்த போது வென்ற போது மனக்கலவரத்தால் அவ்வூர்த் தலைவன் பொன்னக்க கடுரூ சாவு எய்தியதன் நினைவில் எடுத்த நடுகல்.
ஆண்டுக் குறிப்பில் சில எழுத்துகள் அழிந்து உள்ளன. ஐந்து என்பது உய்த்துணர்வு தான். கங்க அதியரசன் என்பவன் பல்லவருக்கு அடங்கிய கங்க மன்னன் ஆவான். பொன் நக்க கடு ஊர்(அன்) என்பதே புணர்ந்து எழுதப்பட்டு உள்ளது. ஊரன் என்று ஆள் பெயர் உண்டு. இக் கல்வெட்டில் அன் ஈறு சுட்டப்படவில்லை. ஒரு கொரிய மன்னன் பெயர் Godumak 108-60 BCE > கடு மாக்(அன்). கெலவர் என்பதற்கு மிகத் துலக்கமான பொருள் காண முடியவில்லை. கெலவு என்பதற்கு அச்சம் என்ற பொருள் உள்ளது.
- - - -
தருமபுரி மாவட்ட ஊத்தங்கரை வட்டம் கோரையாறு எனும் ஊரில் வட்டெழுத்தில் பொறிப்பு உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு (S. Hariharan - Seminar on Herostones,Pg. 69) உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய சிங்கவி / ண்ண பருமற்கு பதினான்காவது / பெரும் பாண்ணரைசர் மக்கள் சாத் / த பரவனார் சேவகன் / வன்ன ஊர் பா / வன் பூசலுட்ப / ட்ட கல்
மக்கள் - அதிகார பொறுப்பு உள்ள படைத் தலைவன், சிற்றரசன் அல்லது மகன்; சேவகன் - மறவன், வீரன்; பூசல் - சிறு போர்
சிம்ம வர்மனின் மகன் சிம்மவிஷ்ணுவின் பதினான்காவது ஆட்சி ஆண்டில் (560 CE) அவனுக்கு அடங்கிய வாண மன்னன் பெரும் பாண அரசன் என்பவனுக்கு 'மகன்' எனும் அதிகாரப் பொறுப்பில் இருந்த சிற்றரசன் சாத்த பராவன் என்பவனின் படைப்பிரிவு தலைவன் வன்னவூர் சார்ந்த பாவன் என்பவன் பூசலில் வீர சாவு அடைந்ததால் அவன் நினைவில் எடுப்பித்த நடுகல்.
சிம்மவிஷ்ணு என்ற சமற்கிருதப் பெயர் சிங்க விண்ணன் என தமிழ்ப் படுத்தப்பட்டு உள்ளது. வர்மன் என்பது வருமன் என மக்கள் வழக்கில் சுட்டப்பட்டு உள்ளது இக்கல்வெட்டின் ஒரு சிறப்பு ஆகும். பரவன் என்ற சொல் பராவன் என எழுதப்பட்டு உள்ளது. பரவன் என்பது மீனவனைக் குறிக்கும். ஒரு எதியோபிய மன்னன் பெயர் Senefrou 4014 - 4034 BCE > சேனி பராவு > சேனன் பரவன். இன்னொரு எதியோபிய மன்னன் பெயர் Barawas 60 - 50 BCE > பரவன்.
- - - -
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் புளியனூர் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (தரும. கல். 2/1972) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய சிங்கவிண்ண பருமற் / குப் பத்தொன்பதாவது மேல் வேண்ணா / ட்டுச் சிறுப்பாழாளும் பாலாயிரியரு மக்கள் / சிறுப்படுவாணாரு கருங்காலிப்பாடித் / தொறுக் கொளப் பூசல் சென்று புய / நாட்டுப் பில(யாசதங்)கள் / எறிந்து பட்டான்
சிம்மவிஷ்ணுவின் பத்தொன்பதாம் ஆட்சி ஆண்டில் (565 CE) அவன் ஆட்சிக்கு உட்பட்ட மேல் வேணாட்டுப் பகுதியின் சிறுப்பாழ் எனும் ஊரை ஆளுகின்ற வேள் பாலாசிரியன் என்பானிடத்தில் 'மகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற படைத்தலைவன் அல்லது மகன் சிறுப்படுவாண் என்பவன் கருங்காலிப்பாடியின் ஆநிரைகளைக் கவர்ந்து வரப் பூசல் மேற்கொள்ளச் சென்ற போது புயநாட்டைச் சேர்ந்த பிலயா சதங்கன் அவனை எதிர்த்துத் வென்றிடவே அப்பூசலில் வீர சாவு எய்தினான்.
பாலாசிரியன் என்னும் பெயர் பாலாயிரியன் என சகரத்திற்கு பகரமாக யகரம் எழுதப்பட்டு உள்ளது. சிம்மவர்மனின் புலியானூர் 20 ஆம் ஆண்டுக் கல்வெட்டு பாலாசியர் எனபாரும் இவரே. மகேந்திரனின் 20 ஆம் ஆண்டுக்கால பாலாசிரிகனும் இவரே. சத்தன் + அங்கன் என்ற இரு வேறு பெயர்கள் புணர்ந்து சதங்கன் என்று வழங்குகின்றது. சிறுப்படுவாண் என்பதில் உள்ள சிறு என்பது சங்க காலத்தே இள என வழங்கியது. படு என்றால் பெரிய எனப் பொருள். வாண் என்பது இவன் வாண அரசகுடியினன் என்பதற்கு சான்றாகும். பெரும் பாண் அரைசர் என்ற பெயரின் பொருளை ஈண்டு கருதுக. துருக்கியின் ஒரு மித்தானி அரசன் பெயர் Suttarna I 1490 - 1470 BCE > சத்தரண(ன்) > சத்தன் அரணன். Gija வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Sudo 634-615 BC > சத்த(ன்)
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் நரசிங்க நல்லூர் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (செங். நடு. 30 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 6 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.
கோவியைய சிங்கவிண்ணபருமற்கு முப்பத்து / மூன்றாவது கங்கதி அரைசரு மக்கர் மேன் விண்ணன்னா / ர் சேவகந் தொப்புரவருப்பாடி ஆ(ள்கி)ன்ற பசிரப் / பண்ணன் குறட்டாதன் - - - வரமு கொண்ட ஞான் / றெறிந் / து பட்டா / ன் கந்த / பருபேன் / னாதியார் / மகன் கல்
மக்கர் - மகன்; ஏனாதி - படைத் தலைவருக்கு அரசன் வழங்கும் ஒரு பட்டம்; அதிஅரைசன் - வேந்தன் அல்லது அரசனுக்கும் சிறிய நிலை வேள், எறிந்து - வெல்லப்பட்டு, பட்டான் - வீர சாவடைந்தான்
பல்லவன் சிம்மவிஷ்ணுவின் முப்பத்து மூன்றாவது (579 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய கங்க மன்னன் கங்கஅதி அரசனுக்கு 'மகன்' நிலை அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசனான மேன் விண்ணன் என்பானுடைய படைப்பிரிவு தலைவனும் தொப்புரவருப்பாடி எனும் நிலத்தை ஆளுகின்ற வேளுமான வசிரப் பண்ணன் குறட்டாதன் என்பான் தாக்கி வென்ற போது கந்தபருமன் ஏனாதி என்ற படைத் தலைவனின் மகன் அல்லது படைவீரன் வீரசாவடைந்ததன் நினைவில் நட்டுவித்த நடுகல்.
யகர சகர திரிபில் வயிர என்பது வசிர என திரிந்து உள்ளது. குறு அட்ட ஆதன் > குறட்டாதன் என புணர்ந்தது. மேன் என்பது மிகப் பண்டைய தமிழ்ப் பெயர். அன் ஈறு உடன்சேர மேனன் என்று ஆகும். ஒரு எதியோபிய மன்னன் பெயர் Menelik I 982-957 BCE > மேன் எல்லிக(ன்). சில எகிபதிய மன்னர்கள் மேன் என்ற பெயர் கொண்டு இருந்தனர். Menkaure 2490 - 2472 BCE > மேன் காரி; Menkauhor 2422 - 2414 BCE > மேன் காக்கர்; Menkamin I 2150 - 2135 BCE > மேன் காமன்.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கொட்டையூரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (செங். நடு.62/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. சிம்ம விஷ்ணுவின் 6 ஆம் நூற்றாண்டு காலத்ததாக முடிபு கொள்ளப்பட்டுள்ளது.
சோமாசி கோ திருமானில்கு / இருபத்தொன்றாவது மீகொன் / றை நாட்டு பெருபுளிஊர் தொல்(தே) / வரு சுட்ட ஞான்று மறு அதிரைச / ரு சேவகன் கதவசாத்தன் பட்டான்
சுட்ட - ஊர் எரித்த; ஞான்று - பொழுது; சேவகன் - அதிகார நிலைப் படைத் தலைவன்; மறு - தடு, காவற்படுதல்
சிம்ம விஷ்ணு காலத்து நடுகல்லின் உருவ அமைப்புடன் ஒத்து இருப்பதால் இந் நடுகல் 6 ஆம் நூற்றாண்டினதாக முடிபு கொள்ளப்பட்டு உள்ளது. தனிஆட்சி நடத்திய சோமாசிகோ திருமான் என்பானுக்கு இருபத்தொன்றாவது ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய மேல் கொன்றை நாட்டு பெரும்புளியூர் சிற்றரசன் தொல் தேவன் படை எடுத்துத் வந்து ஊரை எரித்த போது காவல் பொறுப்பில் இருந்த அதிரைசன் என்னும் அதிகாரப் பொறுப்புள்ள குறுநில மன்னனின் படைத் தலைவன் கதவசாத்தன் என்பான் போரில் ஈடுபட்டு வீர சாவடைந்தான்.
தொல் தேவன் கொளுத்திய ஊரின் பழம் பெயர் என்ன என்று குறிக்கப்படவில்லை. அது இன்றைய கொட்டையூராக இருக்கலாம். சோமாசி கோ யார் கட்டுப்பாட்டிலும் அடங்காத தனி அரசன். சோமாசி என்பது சோ, மாசி ஆகிய இரு பெயர்களின் ஒட்டுப் பெயர். சோ என்பதும் கதவன் என்பதும் சிந்து முத்திரைகளில் காணப்படும் பழந்தமிழ்ப் பெயர்கள். ஒரு கொரிய மன்னன் பெயர் Soseong (798–800) > சோ சேயன்; துருக்கியின் ஒரு இலிடிய வேந்தன் பெயர் Croissos 575-546 BCE > குறு ஓய் சோ > குறு ஓயன் சோ. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Sofard 2345 - 2315 > சோ பரத(ன்). இன்னொரு எதியோபிய மன்னன் பெயர் Sousel Atozanis 2055- 2035 > சோ சேல்(அன்) அட்டசாணி. தென்மெக்சிகோவில் ஒரு மாயப்பன் அரசர் பெயர் .Cho Cocom 1352-1365 AD > சோ கக்கம்.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தொரைப்பாடியில் அமைந்த நடுகல் கல்வெட்டு (செங். நடு. 33/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயேந்திர / பருமற்கு (றண்ணு) ஆவது க / ங்கரைசரோடு பவ்வது கங் / கரைசரு மக்கள் பொன் / னந்தியாரு பெருமுகை / எறிந்த ஞான்று கங்க / ரைசரு சேவகரு எறிந்து / ப ட்டாரு ராராற்று ஆண்ட / குன்றக் கண்ணியார் / கல்
பவ்வது - பரவிப் படர்ந்து, நிலம் கவர்ந்து நாடு விரித்து; எறிந்து - அழித்த, வென்று, கல் - நடுகல்
முதலாம் மகேந்திர வர்ம பல்லவனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் (592 CE) கங்க அரசனோடு சேர்ந்து கங்க அரசனின் 'மகன்' பொறுப்பு அதிகாரத் தலைவன் பொன்னந்தி (பொன்+ நந்தி அல்லது அந்தி) என்பான் பராவி நாடு கவர்ந்து தன் நாட்டு எல்லையை விரித்த போது, இதாவது, பெருமுகை மீது போர் தொடுத்த அழித்த போது அந்த கங்க அரசனுக்கு கட்டுப்பட்ட குறுநில மன்னன் ஆராற்றூரை ஆண்ட குன்றக்கண்ணி என்பான் வென்று வீர சாவு எய்தியதன் நினைவாக நடப்பட்ட கல் என்பது கல்வெட்டின் செய்தி.
பருமன் என்பது வேந்தன் நிலை அதற்கு அடுத்த நிலை அதியரைசன்அல்லது மன்னன் நிலை. மன்னனுக்கு கீழே 'மக்கள்' என்ற பொறுப்பு அதிகாரி. அதற்கும் கீழ் உள்ள பதவி சேவகன் என்ற படைத்தலைவன் நிலை. குன்றன், கண்ணன் என்ற இரு வேறு பெயர்களின் தொகுப்பு குன்றக்கண்ணி. இகர ஈறு பெற்று கண்ணி என இப் பெயரில் வழங்குகிறது. கங்கனுக்கு கட்டுப்பட்டிருந்த குன்றக் கண்ணி என்ன காரணத்தினாலோ கங்கனுக்கு மாறுபட்டு நடந்ததால் கங்கன் பகைக்கொண்டு அவன் மீது போர் தொடுத்து அவனைக் கொன்று உள்ளான்.
- - - -
சேலம் மாவட்டம் கேது நாயக்கன்பட்டிப் புதூர் சங்கிலிச்சி ஏரியில் இந்நடுகல் உள்ளது. இதன் காலம் 6 - 7 ஆம் நூற்றாண்டு என இதனை கண்டுபிடித்து ஆய்வு செய்த கல்வெட்டு அறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கின்றார்.
இரண்டாவது நா / யனூர் நாடாளப் பொன்னந் / தியார் சேவகரு தாயனூராள் / வார் கொங்கிள வரைசரு ம / க்கள் பொற்சாத்தனார் நா /யனூர் மேல்வந்த ஞான்று / எறிந்து தொறு மீட்டுப் / பட்டான் வழுதியர் ம / (க)ன் பத்திரன் கல்
மகேந்திர வர்மன் காலப் பொன்னந்தியாரின் பெயர் கொண்ட இவர் வேற்றொருவர். கொங்கிளவரைசரான கங்க இளநிலை மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் அவருடைய 'மகன்' பொறுப்பு அதிகாரியாக இருந்த தாயனூர் பகுதி ஆளும் குறுநில மன்னன் பொற்சாத்தன் என்பவன் நாயனூரைப் பொன்னந்தி என்பவன் ஆண்டு கொண்டிருந்த வேளையில் நாயனூர் மேல் படையெடுத்து வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது பொன்னந்தியின் படைத் தலைவன் வழுதி என்பானின் மகன் அல்லது படைப்பிரிவு வீரன் பத்திரன் அதை எதிர்த்துத் தாக்கி வென்று அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான். பத்திரன் நினைவில் எழுந்த நடுகல் இது என்பதே செய்தி.
பொன் என்ற முன் அடை செல்வ நிலையைக் குறிக்கும் பட்டம் ஆகலாம். பல குறுநில மன்னர் இப்பட்டம் கொண்டு இருந்தனர் என்பது அறிஞர் கருத்து. இது சமீன்தார் நிலையை ஒத்தது. வழுதி என்ற பெயர் இவர் பாண்டிய நாட்டினர் என்று உணர்த்துகிறது. பத்திரம் என்பது ஒரு வகைப் படைக் கருவி அதில் வல்லவர் பத்திரன் எனக் கொள்ளலாம்.
- - - -
தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டத்து பலிஞ்சிரஹள்ளி (வல் ஈஞ்சன் பள்ளி) எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு (நடு. பக். 160) உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயீந்திர பருமற்கு யா / ண்டைந்தாவது காடந்தைகள் சேவகன் / புதுப்பள்ளிகளோடு பொருத ஞான்று ப / ட்டா னெருமெ / திகாரி
யாண்டு - ஆண்டு; சேவகன் - படைத்தலைவன், மெய்க்காப்பாளன்; பொருத - போர் செய்த; ஞான்று - அக்கால்; பட்டான் - செத்து வீழ்ந்தான்
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (595 CE) அவனுக்கு அடங்கிய சிற்றரசன் காடந்தை என்பானின் படைத் தலைவன் எருமெதிகாரி என்பான் புதுப்பள்ளி என்பானுடன் போர் செய்து வீர சாவடைந்தான்.
காடன், அந்தை ஆகிய இரு பெயர்களின் ஒட்டுப் பெயர் காடந்தை என்பது. எருமை அதிகாரி என்பதே எருமெதிகாரி என பொறிக்கப்பட்டு உள்ளது. இவன் எருமைத் தொறுவுக்கு காவலனாய் இருந்தவன் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம். இது இவன் இயற்பெயரன்று. அதிகாரி என்ற சொல் தமிழுக்கு உரியது அது சமற்கிருதம் அன்று. புதுப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவன் புதுப்பள்ளிகள் எனக் கொள்ளலாம். பள்ளன் என்பது இகர ஈறு பெற்று பள்ளி என்றும் வழங்க இடமுண்டு.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கருங்கலிப்பாடிபட்டி எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (செங். நடு. 113 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.
கோவியைய மசீந்திர / ம் பருமற்கு பதின்னான் / காவது மீ / வேண்ணா / ட்டு கருங் / காலிபாடி / ஆள் கொற்ற / வாசிற் கருசா / த்தனாரு மக / ன் கட்டங்க / ன்னாரு பொற் / காடான்னாரு சே / வகரு நரிபள் / ளி வீரவாண்ண / ரையரு மக்கள் / பொன் பானன் / னாரோடெறிந்து / பட்டாரு கல்.
எறிந்து - அழித்து, வென்று, கொள்ளையிட்டு
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் பதினான்காம் (604 CE) ஆட்சி ஆண்டில் மேல் வேணாட்டின் ஒரு பகுதியான கருங்காலிப்பாடியை ஆண்டு கொண்டுள்ள மன்னன் கொற்றவாசி கருசாத்தன் என்பானுடைய 'மகன்' அதிகாரப் பொறுப்பு பெற்ற கட்டங்கன் என்பவன் சிற்றரசன் பொற்காடான் என்பானுடைய நரிப்பள்ளியைச் சேர்ந்த படைத்தலைவன் வீரவாண் அரையன் என்பவருடைய மகன் அல்லது வீரன் பொன்பானன் என்பவனுடன் போரிட்டு வென்று வீர சாவடைந்ததன் நினைவாக கட்டங்கனுக்கு நட்டுவித்த நடுகல்.
கொற்றவாயில் என்பதே கொற்றவாசி என வழங்கி உள்ளது. வீரவாண அரையனும் பொன்பாணனும் வாண அரச வழியினர் ஆகலாம் என்பது அவர்தம் பெய்ரகளில் உள்ள வாண், பாணன் ஆகிய பெயர்கள் காட்டி நிற்கின்றன.
- - - -
தருமபுரி மாவட்ட தருமபுரி வட்டத்து மாக்கனூரில் வட்டெழுத்தில் பொறித்த நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயீந்திர பருமற்கு ப / தின் நால்காவாது பெரும்பாண அதிஅ / ரைசருச் சிங்க பரும அதிஅரைசரு / (எரி)ந்தஞான்று சிங்கபரும அதிஅரைசரு சே / வகன் அச்சுர பாநில் பட்டார்
எரிந்த ஞான்று - வென்ற போது; அதிஅரைசரு - வேந்தனால் ஒரு சிற்றரசனுக்கு வழங்கப்படும் பதவி அல்லது பொறுப்பு
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் பதினான்காம் ஆட்சி ஆண்டில் (604 CE) அவனுக்கு அடங்கிய வாண அரசன் பெரும்பாண அதியரசன் சிம்மவர்மன் என்ற பெயர் கொண்ட அதியரசன் நிலையில் இருந்த ஒரு குறுநில மன்னனை வென்ற போரில் போது சிம்ம வர்மனுடைய படைத்தலைவன் அச்சுரபாணில் வீர சாவு எய்தினான்.
அசீரிய நாட்டவர் தமிழ் மரபினர் என்பது அறிஞர் கருத்து. அசீரியாவில் அசூர் பாணிபால் 668 - 626 BCE என்றொரு மன்னன் ஆட்சிபுரிந்தான். அவன் பெயரை ஒப்பதாக இந்த வீரன் பெயர் உள்ளது. வ > ப திரிபு.பாணி என்பது வாணி > வாணன் என்பதன் மருஉ. அல் ஈறு பண்டு தமிழில் வழங்கியது. இங்கு அகரம் ஒழிந்து 'ல்' மட்டும் குறிக்கப்பட்டு உள்ளது. இரணியல் முட்டம் எனும் ஊர்ப் பெயரில் அல் ஈறு உள்ளதை நோக்குக.
- - - -
விழுப்புரம் மாவட்ட சங்கராபுரம் வட்டத்து காணங்காடு என்ற ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள இந்நடுகல் (நடு. பக். 168) உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைம இந்தி / ரபருமற்கி பதி / னைந்தாவது / மீ கொன் / றை நாட்ட / ரைசரை / ய் யோட்டி / ன பூசல் / லில்பட்டான் / மேலூர் ஆதன்
மீ - மேல், மேற்கு; ஓட்டின - தோற்கடித்து விரட்டு; பூசல் - சிறு போர்
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் பதினைந்தாவது ஆட்சி ஆண்டில் (605 CE) அவனுக்கு அடங்கி மேல் கொன்றை நாட்டை ஆண்ட சிற்றரசனை பூசலில் தோற்கடித்து விரட்டிய போரில் மேலூர் ஆதன் என்பவன் வீர சாவு எய்தினான். மேலூர் ஆதன் எந்நாட்டினன் அவனுடைய அரசன் பெயர் என்ன என்பது இக்கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.
மகேந்திரன் என்பது ம + இந்திரன் என பிரித்துக் காட்டப்பட்டு உள்ளது. பருமற்கு என்பது பருமற்கி என தவறாக எழுதப்பட்டு உள்ளது. மேல் கொன்றை நாட்டரசன் பெயர் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டம்பட்டு எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (செங். நடு. 77 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தது.
கோவிசைய மயீந்திரபரு / மற்கு பதின்எட்டாவது மீ / வேணாட்டு ஆந்தைபாடி ஈசை / பெரும்பாணரைசரு மருமக்கள் / பொற்சேந்தியாஞ் சேவகரு தொறு / க் கொண்ட ஞான்று மீட்டு பட்டா / ன் (வே)ணாட்(டு) நந்தி / (யார்) கல் க - -
மீ - மேல், மேலை; மருமக்கள் - மன்னனுக்கு அடுத்த அதிகாரப் பொறுப்பு வேள் அல்லது குறுநில மன்னன்; தொறு - ஆநிரை; சேவகர் - படைத்தலைவர்; பட்டான் - சாவடைந்து வீழ்ந்தான்
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனுடைய பதினெட்டாவது (608 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கியமேல் வேணாட்டு ஆந்தைப்பாடியை ஆளும் மன்னன் ஈசைபெரும்பாணரைசர் என்பானுக்கு 'மருமகன்' பொறுப்பு அதிகாரி ஆன குறுநில மன்னன் பொற்சேந்தியான் என்பானின் படையினர் வேணாட்டு ஆநிரைகளைக் கவர்ந்த பொழுது வேணாட்டைச் சேர்ந்த நந்தி என்பான் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்ததன் நினைவில் நடுவித்த நடுகல் என்பது செய்தி.
ஈசன் என்பது இங்கு ஐகார ஈறு பெற்று ஈசை என வாண அல்லது பாண மன்னன் பெயரில் வழங்குகிறது. ஓர் அசீரிய வேந்தன் பெயர் Esar Haddon > ஈசர் அட்டன்; ஓர் எலாமிய வேந்தன் பெயர் Palar-Ishshan 1890 BC > பள்ளர் ஈசன். ஒரு தய்ரி நகர போனீசிய மன்னன் பெயர் Baal Eser 946 - 930 B C > பால் ஈசர் > வால் ஈசன். எனவே ஈசன் என்பது சமற்கிருத சொல் அன்று அது ஒரு தூய தமிழ்ப் பெயரே. ஈச என்ற பெயர் கொண்ட மேலை நாகரிக மன்னர் முன்னோரும் தமிழர் தாமே என்பதுடன் வாண (பாண) அரசர் முன்னோரும் அசீரியா, எலாம், போனீசிய நாகரிகத்தாரோடு குருதித் தொடர்பு உடையவர் என்று கொள்ள இடமளிக்கின்றன இந் நடுகற்களில் வழங்கும் பெயர்கள்; அல்லது புற: 201 ஆம் பாடலில் "நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என கபிலரால் குறிப்பிடப்படும், துவரை மன்னன் கண்ணனால் தமிழகத்துக்கு அனுப்ப்பபட்டதாக கருதப்படும் 12 வேளிர் குலத்தவருள் வாணர் ஒருவராகலாம். சேந்தன் என்பது இகர ஈறு பெற்று சேந்தி ஆனது. அதே போல் நந்தன் இகர ஈறு பெற்று நந்தி ஆனது.
- - - -
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி எனும் ஊரில் அமைந்த இக் கல்வெட்டு (செங். நடு. 21/1972) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய ம(யீ)ந்திர பருமற்கி பத்தொண் / பதாவது மீவெண் / ணாட்டுக் / கிப்பை (ஊ)ரா / ளும் வாணிகரு ஊரு கொள(ப்) / பட்டாரு / கிணங் / கன் / கல் / அவருது கா / ராண்மை
கொளப் - கைப்பற்ற, கவர; கல் - நடுகல்; காராண்மை - பயிர் தொழிலில் ஈடுபடுவார்க்கான பங்கு.
மகேந்திர வர்மப் பல்லவனின் பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (619 CE) அவன் ஆட்சிக்கு உட்பட்ட மேல் வேணாட்டுப் பகுதியான கிப்பை ஊரை ஆளும் குறுநில மன்னன் வாணிகன் என்பான் ஊரைக் கைப்பற்ற வந்த போது கிணங்கன் என்பவன் அத்தாக்குதலுக்கு ஆளாகி வீர சாவு எய்தினான். அக்கிணங்கனுடைய தொழில் காரண்மை. இதாவது, பயிர் தொழிலில் ஈடுபடுபவருக்கு விளைச்சலில் பங்கு பெறும் உரிமை காராண்மை அல்லது கீழ்வாரம் ஆகும்.
வாணிகன் கைப்பற்றிய ஊர் பெயர் குறிக்கப்படவில்லை. அது நடுகல் உள்ள இன்றைய நடுப்பட்டி ஆகலாம். வாணிகத்தில் ஈடுபட்ட சிலர் வாணிகத்தை விட்டுவிட்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றிருந்தனர் எனத் தெரிகின்றது. பண்டு நெடுவழியில் கள்வர்களின் தாக்குதலில் இருந்து தப்ப வணிகர் தம் பாதுகாப்பிற்கென சிறு படை ஒன்றை பேணி வந்து உள்ளனர். அவ்வாறான வணிகப் படையினர் அமைத்த பாளையத்தின் படைத் தலைவன் பின்னாளில் அப்பகுதியை மேம்படுத்தி அப்பகுதிக்கு வேள் ஆகி இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. சீனாவின் Jin ஆள்குடியில் வாணியன் என்ற பட்டப் பெயரை 1115 -1234 வரை ஆண்ட பல மன்னர்கள் கொண்டு உள்ளனர்.காட்டாக,Wányán Āgǔdǎ > வாணியன் ஆகூட(ன்).
- - - -
தருமபுரி மாவட்ட தருமபுரி வட்டம் புலியனூர் எனும் ஊரில் இக் கல்வெட்டு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு. (நடு.பக். 169)
கோவிசைய மசீந்திர பரு / மற் கிருபதாவது மீவெண் / ணாட்டு க / ட்டைஊ / ற் றொறு / கொண்ட ஞா / ன்று சிறுபாழா / ளும் பாலா / சிரி க / ரு மகன் / வீரவரு / கல்
மீ - மேல், மேற்கு; தொறு - ஆநிரை; மகன் - மைந்தன் அல்லது படைத் தலைவன்.
மகேந்திர வர்மப் பல்லவனின் இருபதாவது ஆட்சி ஆண்டில் (610 CE) அவனுக்கு அடங்கிய மேல் வேணாட்டு கட்டை ஊரின் ஆநிரைகளை கவர்ந்த போது நிகழ்ந்த பூசலில் சிறுபாழ் எனும் பகுதியை ஆண்ட வேள் பாலாசிரிகன் என்பானுடைய படைத்தலைவன் அல்லது மகன் வீரவன் என்பவன் வீர சாவு அடைந்தான். இந்த வீரவனுக்கு எடுப்பித்த நடுகல் இது என்பது இதன் பொருள்.
வால் ஆசிரிகன் என்பதே பாலாசிரிகன் என திரிந்து வழங்குகின்றது. 'கன்' ஈறு பண்டு தமிழில் வழங்கியது. அசீரியன், ஆசிரியன், அசுரன் என்பன அசீரியா நாட்டவரையே குறிக்கும் என்பது வரலாற்று அறிஞர் கருத்து. இங்கு ஆசிரிகன் என வழங்குகிறது. வால் > பால் என்பதற்கு ஒளிர்தல், ஒளிரும் வெண்மை எனப் பொருள். ஓர் அசீரிய மன்னன் பெயர் அசூர் பாணி பால் 668 - 626 BCE > அசூர் வாணி வால்.தருமபுரி பகுதியில் ஆண்ட இந்த வேள் பாலாசிரியனின் முன்னோர் அசீரிய நாட்டவராய் இருந்திருத்தல் கூடும். மகேந்திர வர்மனின் பதினான்காவது ஆட்சி ஆண்டு நடுகல் ஒன்று இக்கூற்றுக்கு சான்றாக உள்ளது. சிம்ம வர்மனின் இருபதாம் ஆட்சி ஆண்டுப் புலியனூர் நடுகல் கல்வெட்டில் இவன் பெயர் இடம் பெற்று உள்ளது. மன்னன் > மன்னவன் என்றும், வய்ரன் > வய்ரவன் என்றும் அவன் ஈறு பெற்று வழங்குவது போல வீரன் வீரவன் என அவன் ஈறு பெற்றுள்ளது.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மோத்தகல் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (செங். நடு. 88 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.
கோவிசைய ம / ந்திரபரும(ற்கு மு) / ப்பத்திரண்டாவது - - - - - யை தொ / றுக்கொண்ட ஞான்று பொன்மோதன்னா / ர் சேவகன் அக்கந்தைகோடன் / தொறு விடுவித்துப் பட்டா / ன் கல்
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்திரண்டாம் ஆட்சி ஆண்டில் (622 CE) பகைவர் ஆநிரைகளை கவர்ந்த போது பொன்மோதன் என்பானின் படைவீரன் அக்கந்தைக்கோடன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்ததன் நினைவில் நட்ட நடுகல் என்பது செய்தி.
மோதன் என்ற பழம் பெயரில் அமைந்த ஓர் ஊர் மோதூர். அக்கன் என்பது பண்டு அண்ணன், அப்பன், ஐயன், அத்தன் போல் வழங்கிய ஒரு சிறப்பு அடை. இங்கு பெயர் முன் வந்து உள்ளது. கந்தன் ஐகார ஈறு பெற்று கந்தை என வழங்குகிறது. அக்கந்தைகோடன் மூன்று பெயர்ச் சொற்களின் ஒட்டுப் பெயர். ஒரு எதியோப்பிய அரசியின் பெயர் Nicauta Kandae (Queen) 740-730 BCE > நய்காத்த கந்தை
இகர ஈறு பெற்று கந்தன் கந்தி எனவும் வழங்கும். இப்பெயர் சூசாவை ஆண்ட ஒரு எலாமிய மன்னன் பெயரில் வழங்குகின்றது kutir nakhante 693 BCE > கதிர் நக்கந்தி.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மோத்தகல் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (செங். நடு. 89 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தது. இது மேல் உள்ள நடுகல் செய்தி மாந்தருடன் தொடர்புடையது.
கோவிசைய மயேந்திர / பருமற்கு முப்பத்திரண்டா / வது பொன்மோதனார் சே / வகன் வின்றண் (வ)டுகன் / புலி குத்திப் பட்டான் / கல்.
குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொன்று
முதலாம் மகேந
--Ksubashini 06:05, 7 ஏப்ரல் 2012 (UTC)