ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:31, 22 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் வெங்கட் சாமிநாதன்
ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல் தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத் தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இன்றும் சரி, இலங்கை சுதந்திரம் பெற்று, சேனநாயக தமிழருக்குக் குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கினதும், பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை அடுத்தடுத்துத் தொடர்ந்த பின் வருடங்களில் யாழ்ப்பாண நூலக எரிப்பும் வன்முறைகளும் 1983 லிருந்து ஈழத்தமிழர் புலம் பெயரத்தொடங்கிய வரலாறும், பின் வந்த போரின் பயங்கரங்களும் படு கொலைகளும் இன்று இன்னும் குறைந்தது ஒரு தலைமுறைக்காலத்துக்கு தம் குரல் இழந்து, செயல் இழந்து கண்ணியமும் சம உரிமையும் இழந்து தம் வாழ்ந்த மண்ணிழந்து வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளாயிருக்கும் ஈழத் தமிழர் தம்மைப் பற்றி உற்சாகத்துடன் வாழும் எதிர்கால நம்பிக்கையுடன் சொல்ல ஏதும் அற்றிருக்கும் போது அவர்கள் எழுத்து புலம் பெயர்ந்த நாட்டிலிருந்தும் கூட ஒரு சோகக் கதையாகத்தான் இருக்க முடியும்.
கிரேக்க நாடகங்கள் பெரும்பாலானவை, எனக்குத் தெரிந்தவை எல்லாமே தொடர்ந்த அடுத்தடுத்த போர்களின், அவை விளைவித்த நாசத்தின், பின்னணியில் பிறந்தவை தான். உதாரணத்துக்கு ஒன்று யூரிபிடிஸின் நாடகம் Trogen Women பெலப்பனேசியன் போரில் ஏதென்ஸ் நகரமே சூறையாடப்பட்டு நகரம் அதன் ஆண்மக்களை இழந்த தன் பெண்களின் சோகத்தையும் அவலத்தையும் சொல்வதுதான் ட்ராய் நகரத்துப் பெண்கள். தம் கணவரை இழந்த பெண்களின் கூட்டுப் புலம்பல் தான் அந்நாடகமே. ஒரு விதத்தில் பார்க்கப் போனால் பகவத் கீதையே ஒரு குடும்பமும், ராஜ்யமும் தமக்குள் போரிட்டு அழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் போது பிறந்த தர்மோபதேசம் தானே. ஆப்பிரிக்கக் கவிதைகள் எல்லாமே உரத்த குரலில் தம் அடிமை வாழ்வுக்கு எதிரான போருக்கான அறைகூவல் என்று சொல்ல முடியாதா?
முத்துலிங்கம் தன் வாழ்வின் பெரும்பகுதியை உலக நாடுகள் பலவற்றிலும் வேலை நிமித்தம் வாழ்ந்திருக்கிறார். சுற்றியலைந்திருக்கிறார். அவ்வாழ்க்கையின் சன்ன மெல்லிய குரல் பதிவுகள் தான் அவரது கதைகள் அனேகமும். அவை அனைத்தும் சோக நிகழ்வுகளாகவே பெரும்பாலும் நிறைந்துள்ளன. அத்தோடு ஒரு வாழ்க்கை விடம்பனமும் மெல்லிய புன்னகையும். இஸ்லாமாபாதில் அவர் குடியிருந்த இடம் ராணுவ அதிகாரிகள் வாழும் பங்களாக்கள் கொண்டது. அங்கு அவருக்கு சினேகிதமான ஒரு பெட்டிக்கடைக்காரன். 18 வயதிலிருந்து 20 வருடங்களாக அங்கு இருப்பவன். பேப்பர், பான், சிகரெட் இத்யாதி விற்று வாழ்பவன். அங்கு ஒரு கல்யாண நிகழ்ச்சிக்காக இடைஞ்சலாக இருந்த அவனை விரட்டி அவன் பெட்டிக்கடையையும் உடைத்து எறிந்தார்கள்.. கல்யாணம் பெரிய ஷாமியானா போட்டு, வெகு தடபுலாக, ஃபதே அலி கான் கச்சேரியோடு நடந்து முடிந்தது. சுற்றிக் குடியிருக்கும் எல்லோருக்கும் கல்யாண வீட்டில் தான் சாப்பாடு ஐந்தாறு நாட்கள் ஆயின பந்தலைப் பிரிக்க. பின் தான் பெட்டிக் கடைக்காரன் வந்தான். அவனுக்கு பதே அலிகான் கேட்க முடியாது போய்விட்ட துக்கம். கல்யாண மாப்பிள்ளையைச் சிறுவயதில் தன் தோளில் சுமந்ததாகச் சொல்கிறான் நவாஸ். இருப்பினும்………அவன் விரட்டப்பட்டான். கேட்பார் வருந்துவார் யாரும் இல்லை. மாப்பிள்ளை கலைந்த தலையும் கசங்கிய உடையுமாக பெட்டிக்கடைக்காரனிடம் “சிகரெட்” என்கிறான். நவாஸ் ஒரு கிகரெட் எடுத்துக்கொடுக்கிறான். கதை “பத்து நாட்கள்” .
வேடிக்கையான சில கற்பனைகளும் உண்டு. ”நீ குடியிருக்கும் இடத்தின் புவியீர்ப்பை அனுபவிக்கிறாயே அதற்குக் கட்டணம் கொடு” என்று ஒரு அதிகாரம் கட்டணம் வசூலிக்கிறது. புவியீர்ப்பு இல்லாது வீடு கட்டமுடியுமா? தெருவில் தான் நடக்கமுடியுமா? 48-வது அகலக்கோடு என்று ஒரு கதை. அந்த கற்பனைக் கோட்டுக்கு ஒரு புறம் போனால் செவ்வாய்க் கிழமை. மறுபுறம் புதன் கிழமை. இந்தக் கோடு எத்தனையோ நாடுகளைப் பிரித்தும் ஊடுருவியும் செல்கிறது. பிரிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் கனடாவும். நயாகரா வீழ்ச்சிக்கு ஒரு புறம் அமெரிக்கா. மறு புறம் கனடா. இரண்டு நாடுகளையும் இணைக்கும் பாலமும் ஒன்று உண்டு. கீழே விழுந்து கிடக்கும் மேபில் இலை காற்றில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமாக அலைந்து கொண்டிருக்கும். தனக்குத் தான் மறதி அதிகமாயிற்றே, திசை மயக்கமும் உண்டே என்று சுற்றுலா வந்த சிவமூர்த்தி பஸ்ஸிலிருந்து இறங்கியவர் இறங்கிய இடத்தின் அடையாளங்களைக் குறித்துக்கொண்டு கடைத்தெருவைச் சுற்றி வந்தவர் திரும்பிப் பார்த்தால் பஸ்ஸைக் காணோம். விசாரித்துப் பார்த்தால் பஸ் போய்விட்டது என்கிறார்கள். பிரசினை என்னவென்றால அவர் இறங்கியது கனடாவில்.
ஊர் சுற்றிவிட்டு வந்து விசாரித்தது அமெரிக்காவில். அவர் மறதி அவரைத் திரும்பவும் ஏமாற்றிவிட்டது 48-வது அகலக்கோடு கதையில்பலதரப்பட்ட அனுபவங்கள். வெளிநாட்டு அனுபவங்கள். வெளி நாடுகளில் சொந்த மனிதர்களின் வேற்று பண்பாட்டு அனுபவங்கள். தாட்பாள்களின் அவசியம் என்று ஒரு கதை. அம்மா இலங்கையிலிருந்து வந்தவர் கனடா வாழ்க்கையுடன் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு மிகவும் கஷ்டப் படுகிறார். முதலில் அதற்கேற்ப பழக்கப்படுத்திக் கொள்ளவே அவருக்கு இஷ்டமில்லை. அதில் தாட்பாளும் ஒன்று. வேண்டாத விருந்தினர்களை அம்மா உபசரிக்கத் தொடங்குகிறார் .அவர்கள் மதமாற்றத்துக்குப் பிரசாரம் செய்கிறவர்கள். அவர்களை நம்பும் அம்மா வெகுளி. அம்மா இலங்கைக்குப் போனபின்னும் அவர்கள் வந்து அம்மாவைப்பற்றி விசாரிக்கிறார்கள். அம்மாவுக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம் செய்ய அவர்கள் பிரார்த்தனை செய்வதாக அம்மாவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் என்று அம்மா வேறு சந்தோஷமாகச் சொல்லியிருக்கிறார். “இப்போது “உங்களுக்கு சொர்க்கம் போக விருப்பமா? என்று இவரிடமும் கேட்டார்களாம். “ஏதோ இவர்களிடம் எக்ஸ்ட்ரா டிக்கட் ஒன்று மிஞ்சியிருப்பது போல. ”பாதைகள் எங்கு பிரிகின்றன என்று சொன்னால் நானே விசாரித்துப் போய்க் கொள்கிறேன்” என்று இவர் பதில் சொல்ல, பிரசாரகர்களுக்கு இது உவப்பாக இருக்கவில்லை. “உங்கள் தாயார் மிக தயாள குணத்தவர்” என்று சொல்லி இவர் சொர்க்கத்துக்கு லாயக்கில்லாதவர் என்ற தீர்மானத்துடன் வெளியேறுகின்றனர்.
ஒரு சமயம் திருமணம் செய்துகொள்ள காதலர் இருவரும் அவள் யுக்ரெய்ன் வழக்கப்படி மூன்று ரகஸ்யங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமாம். இவள் ஒரு ரகஸ்யம் சொல்லி நிறுத்தி விடுகிறாள். அடுத்த ரகஸ்யம் என்ன? சொல்லவில்லையே என்றால், அது அடுத்த ஆளுக்கு. ஒரு ஆளுக்கு ஒரு ரகஸ்யம் தான் என்கிறாள். இப்படிப் போகிறது அந்தக் கதை. ஒரு சமயம் இருவருக்கும் சண்டை. தெருவில் தபால் வண்டி ஒட்டிப் போகும் ஒரு மீசைக்காரனைக் காட்டி “ பார், அது உன் தகப்பனாக இருக்கக் கூடும்,” என்று இவன் சொல்ல, நான் சொன்ன புனிதமான ரகஸ்யத்தை நீ கேலி செய்துவிட்டாய்” என்று அவளுக்குக் கோபம். அவனைப் படுக்கையில் விழுத்தாட்டி, அவன் மேல் தவளை போல் கால் பரப்பி தன் முகத்தை அவன் அருகே கொண்டு போனாள். உக்ரேனிய மிருகம் அவனை முகரக் குனிவது போல் இருந்தது. ஆனால் அவள், கழிவு விலையில் வாங்கப் பட்டவள் போல் பாதியிலேயே நின்று விட்டாள். இவளோடு தான் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்த போது அவர்கள் திருமணம் செய்துகொண்டு 45 நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. என்று முடிகிறது கதை.
கதையின் அடுத்ததும் கடைசியுமான வரி:
பதினேழாம் நூற்றாண்டு இலங்கைக் கதை “லூசியா” கண்டியைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் ராஜசிங்கன் என்னும் சிங்கள அரசன் ஆண்டுகொண்டு இருந்த காலம். போர்ச்சுகீசியரும் ஆங்கிலேயரும் ஊடுருவி தம்மை ஸ்தாபித்துக்கொள்ள முயன்று கொண்டிருந்த காலம் தகப்பன் கண்டிச் சிறையில். இறந்து விட மகன் 18 வயது ராபர்ட் நாக்ஸ்க்கு தகப்பன் சொன்ன கடைசி அறிவுரை. உனக்கு ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக்கொள்ளாதே. ஏசுவிடம் விசுவாசமாக இரு”. தப்பித்த ராபர்ட் சிங்களம் கற்று, சிங்கள நாட்டுப் பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்கிறான். அவனும் அவனது இரண்டு நண்பர்களும் கண்டி வழக்கப்படி சிந்திரிக்மல் என்னும் பெண்ணை மணந்து கொள்கிறார்கள். அவள். வீட்டு வேலை எல்லாம் செய்கிறாள். இவர்கள் வியாபாரத்தில் நிறைய பணம் சேர்த்து செல்வந்தர் ஆகிறார்கள். ஆனால் அரசனின் கொடுமை தாளாது இங்கிலாந்து திரும்ப விரும்புகிறார்கள். ராபர்ட்டுக்கு ஓடிப்போக விருப்பமில்லை. கண்டி அரசனுக்கு ஆங்கிலம் பேசும் ஆலோசகன் தேவை. அரச அதிகாரி திவச அவனைப் பிடித்துக்கொண்டு போய் விடுகிறான்.
அப்போது சிந்திரிக்மல், அவனிடம் குழந்தை லூசியா அவனது குழந்தை தான் என்று சொல்கிறாள். போகும் முன் லூசியாவுக்கு ராபர்ட் சொன்ன புத்திமதி, “ நான் திரும்பி வருவேன். அது வரை யாரையும் தலை நிமிர்ந்து பார்க்காதே. உனக்கு ஆங்கிலம் தெரியும் என்று யாரிடமும் சொல்லாதே” டச்சுக்காரர்கள் தோற்று வருகிறார்கள். ஆங்கிலேயர் வெற்றி பெற்று வருகிறார்கள். அப்போது நான் தப்பி, கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து நான் திரும்புவேன்” என்று சொல்லிச் செல்கிறான். அது 1679-ம் வருடம். லூசியா 14 வயதுச் சிறுமி. ராபர்ட்டுக்கு வயது 37. ஆனால் திசாவின் கண்களில் லூசியா பட்டு விடவே அவள் அரண்மனைப் பணிக்கு இட்டுச் செல்லப்படுகிறாள். அரசனுக்குப் பணிவிடை செய்ய. அரண்மணையில் அவள் ஆங்கிலம் அறிந்தவள் என்பது வெளிப்பட, அரசன் முன் நிறுத்தப்பட்டு அவள் அரசனின் 37-வது ஆசை நாயகியாகிவிடுகிறாள். அரசனின் படுக்கைக்குச் சென்றவள். அரசனின் அகோர பூத உடலில் அவளது சிறிய உடல் புதைந்து போகிறது. ஏழு வருடங்கள் இப்படிக் கழிகின்றன. ராஜசிம்ஹன் இறந்து போகிறான். அப்போது லூசியாவுக்கு வயது 22.
ஈழத் தமிழ் எழுத்தாளர்களிலேயே தனித்துவம் மிக்கவர். ஆர்ப்பாட்டமில்லாமல், இரைச்சலிடாமல், நம் முன் நின்று விடுகிறவர். ஈழம் தமிழுக்குத் தந்துள்ள ஒரு கொடை.
|