"தமிழ் நாடும் இன்றைய அரசும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சி ("தமிழ் நாடும் இன்றைய அரசும்" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))

08:20, 16 ஜனவரி 2011 இல் நிலவும் திருத்தம்


நம் தமிழக முதல்வர், முதல்வரான போது, இது ஐந்தாம் முறையாக முதல்வர் பதவிக்கு வந்துள்ளதாக சொல்லப்பட்டது. உண்மைதான். இத்தகைய ஒரு வரலாற்றுச் சிறப்பு, ஒரு அரசியல் வாதியின் வெற்றி வாழ்க்கை, இந்தியாவிலேயே வேறு எந்த அரசியல் வாதிக்கும் இல்லாத சிறப்பு தான். முதல்வராக அமர்ந்தும் இன்னொரு வெற்றி விழாவும் அவரை மையப்படுத்தி தமிழ் நாடு சட்ட மன்றத்தில் கொண்டாடப்பட்டது. அவர் சட்ட மன்றத்தில் நுழைந்தது 1956-57 வருட தேர்தலில் என்று ஞாபகம். 50 வருடங்கள் ஆகிவிட்டன. 50 வருடங்களாக தொடர்ந்து ஒவ்வொரு சட்ட மன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார். அவர் கட்சி இரு முறை படு தோலவி அடைந்தாலும் அவர் தோற்றதில்லை. 50 வருட நிறைவை ஒட்டிய பொன் விழாவின் போது, அவர் 50 வருடங்கள் எங்கே சட்டமன்றத்தில் இருந்தார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. 1991-லும் சரி, 2001-லும் சரி, அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானால், இன்றைய முதல்வருக்கு சட்ட மன்றத்துடன் ராசி இருப்பதில்லை. ராசி இருப்பதில்லையோ அல்லது இவருக்குத்தான் ராசி வைத்துக்கொள்ள ஏதோ காரணங்களால் விருப்பமில்லையோ.1991-ல் அவர் சட்ட மன்ற தன் உறுப்பினர் பொறுப்பை ராஜிநாமா செய்தார். 2001-ல் சட்ட மன்றத்தின் உள்ளே நுழையாமலேயே வெளியே உள்ள பதிவேட்டில் அவ்வப்போது கையெழுத்திடும் உறுப்பினராக இருந்தார்.


பின் இருமுறை மந்திரி சபை கலைக்கப்பட்டு முதல்வர் பதவி இழந்ததும் சட்ட மன்ற வாழ்க்கை துண்டிக்கப்பட்டது, எல்லாம் கணக்கிடப்பட்டு பொன் விழாவுக்கு அவர் தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இந்த கேள்விகளின் பின்னிருக்கும் விவர நுணுக்கங்கள் இன்றைய முதல்வரின் அரசியல் வாழ்க்கையின் இந்த வெற்றிகளின் பெருமைக்கு வேறு எந்த அரசியல் வாதியும் இணை சொல்ல முடியாது என்பது என்னவோ உண்மை. அவரது சாதனைகளின் பெருமையை யாரும் மறுக்க முடியாது.அதுவும் எவ்வளவு நீண்ட அரசியல் வாழ்க்கை அது! படிப்பைத் துறந்து தெருவுக்கு வந்த அரசியல் வாழ்க்கை அவரது பதிமூன்றாவது வயதில் தொடங்கியது. தன் திருமணத்திற்கு வந்து தன்னை கௌரவிக்க வேண்டுமென்று அக்காலத்தில் அவர் நினைத்த கழகத் தலைவர்களையெல்லாம் பின் தள்ளி விட்டு, அவர்கள் எல்லாம் மெத்த படித்த பல்கலைக் கழக்ப் பட்டதாரிகள், இன்று இன்றைம தமிழ் நாட்டு முதல்வராக மட்டுமில்லை, இந்திய நாட்டின் இப்போதைய அன்னையான சோனியா காந்தியும், பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் 'எங்கள் எல்லோருக்கும் கருணாநிதியே அரசியல் வழிகாட்டி' என்று சொல்லுமளவுக்கு, அவரது விருப்பங்களையெல்லாம் நிறை வேற்று மளவுக்கு, மரியாதைக்குரியவராக, சக்தி வாய்ந்த அரசியல் தலைவராகத் திகழ்கிறார். இவருக்கு ஒப்புமை சொல்லக் கூடிய இன்னொரு மூத்த அரசியல் வாதியென்று கொஞ்சம் தயக்கத்தோடு ஜ்யோதி பாசுவைத்தான் சொல்லலாம். தயக்கத்திற்குக் காரணம் ஜ்யோதி பாசு இப்போது அரசியல் பதவியிலும் இல்லை. கட்சியின் மரியாதைக்குரிய பெரியவர் என்பதற்கு மேல் அவருக்கு உயர்ந்த இடம் இல்லை. நீண்ட பிரயாணம் தான். சாதனைகளும் வெற்றியும் நிறைந்த பிரயாணம் தான். தோல்விகளும் இடையிடையே கண்டதுண்டு. அந்தத் தோல்விகள் ஏதும் வெற்றி நிச்சயமற்ற பாதையில் கால் வைத்ததால் அல்ல. இன்றைய முதல்வர் என்றுமே எடுத்த காரியத்தின் வெற்றியில் சிறிதளவு சந்தேகம் இருந்தால் கூட, அதில் அவர் துணிந்ததில்லை. தன்னளவுக்கு குறைந்த முயற்சியில் பெருமளவு வெற்றி என்பதே அவரது குறிக்கோளும் செயல்பாடுமாக இருந்துள்ளது. கல்லக்குடி போராட்டத்திலிருந்து (ரயில் தண்டவாளத்தின் குறுக்கே தலை வைத்ததிலிருந்து), கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு அவர் அமைத்த பலத்த கூட்டணியும், தருவோம் என்று உறுதியளித்த வரலாறு காணாத இலவசங்களின் பட்டியலும் இதற்குச் சான்று.


தமிழ் நாட்டு வரலாற்றில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெறுதல் என்பது காங்கிரஸோடு போயிற்று. திமுக வாயினும் சரி, அதிமுகவாயினும் சரி, கூட்டணிகளின் பலத்தில் தான் வெற்றி பெற்று வந்துள்ளன. கூட்டணியின் பலம் அவ்வப்போதைய சந்தர்ப்பங்களையும், தலைமைக் கட்சித் தலைவரின் சாமர்த்தியத்தையும் பொறுத்தது. திமுகவிற்கோ அதிமுகவிற்கோ அவ்வப்போது சற்று ஏறும் குறையும் வாக்கு பலம் 30, 33, 35 என்ற விழுக்காட்டில் தான் இருந்து வந்துள்ளது. தம் வாக்கு பலத்திற்கு மீறிய தேர்தல் வெற்றியைத் தருவது தம் கூட்டணியில் சேர்ந்திருக்கும் கட்சிகளின் வாக்கு தயவால் தான். இது தான் 1967-லிருந்து நிரூபிக்கப்பட்டு வருவது. இப்போது திமுகவோடு அணி சேர்ந்திருக்கும் கட்சிகள் எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்த போது வெற்றி பெற்றது அதிமுக தான். நாட்டிலிருக்கும் ஜாதிகள் எல்லாம் தனித்தனி கட்சி அமைத்து திமுக வோடு அணி சேர்ந்த போது' இது ஜாதியை ஒழிக்க அமைந்த கூட்டணி என்றார் கருணாநிதி. அவர் அவ்வப்போது எடுக்கும் முடிவுகளை இப்படித்தான் அலங்கார வார்த்தைகளில் வெளிப்படுத்துவார். அது அவருக்கு கை வந்த தந்திரோபாயங்களில் ஒன்று. பத்து பதினைந்து ஜாதிக்கட்சிகளைக் கூட்டிக்கொண்டாலும் அது கூட்டணிப் போட்டி அல்ல. திமுக தனித்துப் போட்டியிட்டதாகத் தான் சொல்லவேண்டும். தோற்றுப் போனார் மிக பரிதாபகரமாக. ஆனால் அப்போதும் அவர் வெற்றியில் நம்பிக்கை கொண்டிருந்தவர் தான். அப்போதே மு.க. ஸ்டாலினுக்கு முடிசூட்டும் திட்டத்தில் இருந்தவர் தான். 'குறையே இல்லாதது தான் இந்த ஆட்சியின் ஒரே குறை" என்று தன் ஆட்சியைப் பற்றிச் சொல்லிக்கொண்டார். மறுபடியும் அலங்கார வார்த்தையாடல்கள். ஆனால் 2001-ல் விழுந்த அடி மிக பலமாகத் தான் விழுந்தது.


அந்த நிலை இனி வருவது கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில் நிறைய பாதுகாப்பு அரண்களைத் தன்னைச் சுற்றி அமைத்துக்கொள்ளும் படபடப்பு அவரிடம் காண்ப்பட்டது. இம்முறை தோற்கக்கூடாது என்ற உறுதி கொண்டார். முன்னர் வெற்றி தந்த கூட்டணி போதும் என்று அவர் நினைக்கவில்லை. ஜெயலலிதாவுக்குக் கூடும் கூட்டத்தின் அலைமோதல், பத்திரிகைகளின் கணிப்பு எல்லாமே கவலை அளித்திருக்க வேண்டும். இந்த கவலையில், பாதுகாப்பு உணர்வில், பிறந்தது தான் இலவசங்களின் மழைப் பொழிவு. இந்த நாடு, இம்மக்கள், அவர்களின் பொருளாதார வளம், என்று எதைப்பற்றியும் சிந்திக்காத, மக்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொட்டி வாக்குகளை அள்ளவேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பிறந்தது இந்த இலவச திட்டங்களின் அலங்கோலம். டிவி, இரண்டு ஏக்கர் நிலம், காஸ் இனைப்பு, கூட்டுறவு வங்கிக் கடன் ரத்து, கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசி, இன்னும் என்னென்னமோ வெல்லாம். நாட்டின் மீது, மக்களின் மீது சிறிதளவுகூட அக்கறை இருந்திருக்குமானால் இப்படி ஒரு இலவசங்களின் அம்பாரத்தை ஒரு அரசியல் தலைவர் எண்ணியயிருக்க மாட்டார். எது எக்கேடு கெட்டால் என்ன, அரசைக் கைப்பற்றவேண்டும் என்ற ஒரே சிந்தனை தான் அவர் மனத்தில் இருந்தது. என்னைக் கேட்டால் இது இப்போது எழுந்த சிந்தனை அல்ல. இதன் ஆரம்பங்களை, அறுபதுக்களிலேயே காணலாம். சென்னை மாநகராட்சியைப் பிடிக்க, 'கொடுப்பதைக் கொடுத்து பெறுவதைப் பெறுவோம்" என்று கோஷமிட்டு கைப்பற்றியதிலிருந்து ஒரே கோட்டின் நீட்சியில் அவரது அரசியல் பயணத்தைக் காணலாம். 84 வயது மூத்த அரசியல்வாதி, நாட்டிற்கே வழிகாட்டி என்று புகழ்ந்து பாராட்டப்படும் தலைவர் தேர்தல் வெற்றி ஒன்றே குறி அதற்கு எந்த வழியையும் கையாளலாம் என்று செயல்படுபவராக இருப்பது வேதனைக்குரியது.



அவரது பாதுகாப்பு உணர்வு தான் இந்த இலவச மழைதான் அவருக்கு வெற்றியைத் தந்துள்ளது என்பது, தேர்தல் முடிவுகளிலிருந்து தெளிவு. கடைசியில் அவரது பாதுகாப்பு உணர்வு, நிச்சயமற்ற பாதையில் கால் வைக்கத் துணியாதது, எல்லாம் செயல்பட்டுள்ளன. இந்த பெரிய கூட்டணி, இலவசமழை, அவ்வப்போது மத்திய அரசில் தன் செல்வாக்கால், தமிழகத்தின் அதிமுக அரசுக்கு எவ்வளவு இடைஞ்சல்கள், ஏற்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்து (வெள்ளச் சேதம், சுனாமியின் பயங்கர விளைவுகள் போன்றன), அரசுக்கும் அதிலும் முக்கியமாக தன் நாட்டு மக்களுக்கே எதிராக செயல்பட்டது ஒரு அரசியல் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் பெரிய களங்கம் தான். இவ்வளவுக்குப் பிறகும் திமுக பெற்ற வாக்குகள் 26.51% தான். தனித்து விடப்பட்ட அதிமுக பெற்றது 32.47% சட்ட மன்றத்தில் அதிமுக பெற்ற இடங்கள் 61. திமுக பெற்றது 95. 2001 தேர்தலில் திமுக பெற்றது 31, அதற்கு முந்தி 1991-ல் திமுக பெற்றது 2. இலவசங்களின் மழையும், கூட்டணியும் தனித்து விடப்பட்ட அதிமுக வை ஒரு இடம் இல்லாமல் செய்திருக்க வேண்டும். நாடாளுமன்ற வெற்றியும், 1991-ல் திமுக தள்ளப்பட்ட 2 இட படுதோல்வியுமே, அதிமுகவின் தேர்தல் முடிவாக இருக்க வேண்டும் என்று அவர் திட்டமிடதில், தோல்விதான் அவருக்கு. இருப்பினும், கருணாநிதியின் உடன் பிறந்த சாமர்த்தியங்களும் தந்திரோபாயங்களும், 234 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மன்றத்தில் 95 இடங்களே கொண்ட திமுகவே அமைச்சரவை முழுதையும் தன் ஏகபோகமாக்கி, பிணங்கிக் கொண்டிருந்த காங்கிரஸை, 'போய் சோனியா அன்னையிடம் முறையிட்டுக்கொள்" என்று சொல்லி அவர்களை அசட்டு ஏமாளிகளாக்க உதவியிருக்கின்றன. இருபது சொச்சம் நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட தன் கட்சிக்கு தன் அணியின் 40 எண்ணிக்கையை பூதாகாரமாக்கி, மத்திய அமைச்சரவில் தான் பட்டியலிடும் திமுக உறுப்பினர்களைத்தான் (அதில் அவரது மருமக/பேரப்பிள்ளையும் அடக்கம்) அமைச்சராக்க வேண்டும் அவர்களுக்கு தான் கட்டளையிடும் தனக்கு சௌகரியம் தரும் இலாக்காக்கள் தான் தரப்படவேண்டும் என்று கட்டளையிட்டுப் பெறும் அரசியல் சொக்கட்டான் காய்களை நகர்த்தவும் தெரியும் அவருக்கு. அதே காங்கிரஸை தமிழ் நாட்டு அமைச்சரவையிலிருந்தே முற்றிலுமாக ஒதுக்கவும் தெரிந்திருக்கிறது அவருக்கு. அதற்கு அன்னை சோனியா காந்தியோ, மன்மோகன் சிங்கோ வாய் திறக்கவில்லை. 'அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு சமத்தாக இருங்கள். சத்தம் போடக்கூடாது" என்பது தான் தமிழக காங்கிரஸுக்கு அவர்கள் இட்ட கட்டளை போலும். அவர்களுக்கு மத்திய அரசு கவிழாது காப்பாற்றும் நிர்ப்பந்தம். பிரதம மந்திரியின் பதவி இந்திய வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஆட்டுவிக்கும் பாவையாகி கேலிக்குள்ளானது முன்னர் எப்போதும் நடந்ததில்லை. அதிகாரம் இல்லாவிட்டால் என்ன, பிரதம மந்திரி நாற்காலியில் உட்கார்ந்திருப்பதே தன் லக்ஷியம் என்ற நிலை வெட்கக் கேடானது என்பது தெரியவில்லை.


ஆக, நடந்த வரலாற்றைப் பார்ப்போமானால், இன்றைய தமிழக முதல்வருக்கு ஈடாக, அரசியல் சாமர்த்தியமும், தந்திரோபாயங்களும், தான் நினைத்த காரியத்தை சாதித்து, தான் விரும்பும் பலன்களை எவ்வழியிலாவது பெறுவதில் வெற்றி கொள்ளும் முனைப்பும் கொண்ட ஒரு அரசியல் வாதி, இன்றைய இந்தியாவில் வேறு ஒருத்தர் இல்லை. தன் பலம் உண்மையில் எவ்வளவு குறைபட்டதாக இருந்தாலும், அதற்கு ஒரு ஊதிய தோற்றம் தந்து பார்ப்போரை பயமுறுத்தி தன் காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் சாதுர்யம் அவரிடம் ஏராளம். தன் இஷ்டத்திற்கு தமிழ் நாட்டை அரசாளும் வகை செய்து கொண்டாயிற்று. ஐந்து முறை முதன் மந்திரியான அனுபவம், வேறு யாருக்கும் இல்லாத அனுபவம் இருக்கிறது தன்னிடம்.' நாட்டுக்கே வழிகாட்டி', 'காந்தி வழி சத்தியாக்கிரஹி' (பிரிய ரஞ்சன் தாஸ்) என்ற விருதுகள் பெற்றாயிற்று. இந்திய அரசே தன் விரலசைவுக்குக் காத்திருக்கிறது என்று தன் கட்சியை நம்ப வைத்தாயிற்று. மத்திய அரசில் அவர் நினைத்ததைச் சாதித்துக்கொள்ளும் செல்வாக்கு உள்ளவர் என்ற எண்ணத்தை எல்லோரிடமும் பரவச் செய்தாயிற்று.. சிறந்த நிர்வாகி, உழைப்புக்கு அஞ்சாதவர், என்ற பெயரும் பெற்றாயிற்று. கட்சி தன் கைக்குள். அரசு தன் கைக்குள். மத்திய அரசிடம் தன் நலனுக்கு என்ன கேட்க வேண்டும், கேட்டுப் பெற்று உலகறியச் செய்யவேண்டும் என்பன போன்ற பொது உறவு வேலைகளும் செய்தாயிற்று. எதைக் கேட்டால் தன் நலனுக்கு குந்தகமாகும் ஆகவே அது மத்திய அரசிடம் கிடைக்குமாயினும் கேட்கக் கூடாது அது பற்றி மௌனம் சாதிக்க வேண்டும் என்ற விசயம் மாத்திரம் வெளிப்பட்டாலும் அதை மறுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்ற வரையரைகளை சிலர் யூகிக்கலாம். ஆனால் அவர்களை தமிழ் விரோதிகள் என்று கரி பூசிவிடலாம். ஆனால் தன் நிர்வாகம், தன் அதிகார பலத்தைப் பற்றிய பொது பிம்பம்?


சிறந்த நிர்வாகி என்ற பெயர் பெற்றவர், ஐந்து முறை முதல்வரானவர், ஐம்பது வருட சட்டமன்ற அனுபவம் கொண்டவர், அடுத்த வார தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் யோசனை இன்றி கண்டபடி மனத்தில் தோன்றியதை எல்லாம் இலவசபட்டியலாக்குவாரா? நாட்டில் எத்தனை தரிசு நிலம் உள்ளது, அவற்றில் விளைச்சலுக்கு உபயோகமானது எவ்வளவு, எவ்வளவு நிலமற்ற ஏழை விவசாயிகள், அதன் பங்கீட்டில் குறைந்த பட்சம் ஒரு ஏழை விவசாயிக்கு எவ்வளவு நிலம் கொடுத்தால் அவனுக்கு அது உபயோகமாக இருக்கும் என்ற யோசனை ஏதும் இல்லாது, ஏதோ மளிகைக்கடைப் பட்டியல் போல ஒவ்வொரு நிலமற்ற விவசாயிக்கும் இரண்டு ஏக்கர் நிலம் என்று பட்டியலில் எழுதி தேர்தல் பிரசாரம் செய்வது மிக மிக மலிவான மக்களை ஏமாற்றும் பிரசாரம் தான். மக்கள் ஏமாந்தார்கள், அந்நிலைக்கு அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்பது வேறு விஷயம். அதை நம்பித்தான் அவர் பட்டியலிட்டதும், பிரசாரம் செய்ததும். அவ்வளவு நிலம் ஏது? ஏற்கனவே ஏழை விவசாயிகளிடம் இருக்கும் தரிசு நிலங்கள் தரிசாகவே இருக்கின்றனவே என்று கேட்டால், அதை நாங்கள் எடுத்துக் கொண்டு விளை நிலமாக்கி அவர்களுக்குத் தருவோம் என்ற ஒரு சப்பைக்கட்டு. அனுமதி இல்லாது தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலங்கள் பற்றி பேச்சே இல்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் கணக்கெடுப்பு ஆரம்பித்தது பின்னர். எத்தனை தரிசு, எத்தனை புறம்போக்கு நிலங்கள், எத்தனை ஆக்கிரமிப்பில் போன்ற விவரங்கள் பின்னர் சேகரிக்கத் தொடங்கினர். பின்னர் இது காறும் தரப்பட்ட தரிசு நிலங்களை, (சிலருக்கு ஒரு ஏக்கர், சிலருக்கு 50 செண்ட், சிலருக்கு 70 செண்ட் என்று தரப்பட்டுள்ளது) என்ன செயவது என்று தெரியாது விழிக்கும் ஏழை விவசாயிகள். இது பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட திட்டம். கடைசியில் கேலிக்கூத்தானது. இது ஐந்து முறை முதல்வரின் நிர்வாகமாக இருக்க முடியாது. இலவச டிவி விஷயம் அடுத்தது. இது இலவசப் பட்டியலில் சேர்த்த சமயம் இந்த ஆலோசனையைச் சொன்னது அவரது மருமக/பேரப்பிள்ளை குடும்பமாக இருக்கவேண்டும். 750 கோடி ரூபாயகள் இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது. டிவி இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு இலவச டிவி. எதற்கு? பொது அறிவும், கல்வியும் பரவுமாம். தமிழ் நாட்டில் எந்த டிவி க்கு பொது அறிவும் கல்வியும் அக்கறையாகி உள்ளன. எந்த தமிழன் பொது அறிவுக்கும் கல்விக்கும் டிவியைப் பார்க்கிறான். சன் டிவியும் அவரது கலைஞர் டிவியுமே 24 மணி நேர ஓளி பரப்பில் சினிமாவுக்கும் குத்தாட்டத்திற்கும் எவ்வளவு நேரம் செலவிடுகின்றன? எவ்வளவு கல்வியும் பொது அறிவும் அவை கற்பிக்கின்றன? ஏன் இப்படி ஒரு கேலிக்கூத்தான சப்பைக்கட்டு?. சரி. இப்போது அதன் நிலை, ரேசன் கார்டு உள்ளவர்கள் எல்லாருக்கும் டிவி என்று ஆயிற்று. தமிழ் நாட்டில் டிவி இல்லாத வீடோ குடிசையோ கிடையாது என்றே சொல்ல வேண்டும். தமிழனின் டிவி சினிமா மோகம் அத்தகையது. வீட்டில் தண்ணீர் குழாய் இராது. கழிவறை இராது. அன்றாட கூலியாக இருப்பான். அவனிடம் கூட டிவி இருக்கும். திமுக கட்சிக்காரர்களே டிவிக்களை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கிறார்கள். டிவி வைத்திருப்பவர்களே இலவச டிவி வாங்கி அதை விற்று விடுகிறார்கள். திடீரென பிரோக்கர்கள் தோன்றியிருக்கிறார்கள். இலவச டிவிக்களை 1500 ரூபாய்க்கு வாங்கி அயல் மாநிலங்களில் விற்க. பத்திரிகைகளில் இப்படி சேகரித்த டிவி பெட்டிகள் டெம்போக்களில் அடுக்கப்பட்டுப் எடுத்துச் செல்லப்படும் காட்சிகளைப் பார்க்கிறோம். இப்படி வருடா வருடம் 750 கோடி மக்கள் வரிப்பணம் வீண் விரயமாக்கப்படுவது வேதனைக்குரியது. இது ஒரு மூத்த அரசியல் தலைவரின் நிர்வாகமாக இருக்கமுடியாது. வோட்டு வங்கிக்காக அலையும் தரமற்ற அரசியல் வாதியின் செயலாகத்தான் இருக்க முடியும். நாட்டுக்கே அரசியல் வழிகாட்டி என்று நம் முதல்வர் புகழப்பட்டார். உண்மைதான். இப்போது மற்ற மாநிலங்களும் இதன் வோட்டுக் கவர்ச்சியைக் கண்டு தாமும் இலவச டிவி யை தேர்தல் பிரசாரமாக்கியுள்ளனர். அப்படிச் செய்யாத ஒரே மாநிலத் தலைவர் நரேந்திர மோடிதான்.


இது போலத்தான் இரண்டு கிலோ அரிசியும். இதன் ஊழலும் அலங்கோலமும் சொல்லிச் சாத்தியமில்லை. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இதில் விரயமாகிறது என்பதை யாரும் சொல்வதில்லை. தினம் நூற்றுக்கணக்கில் லாரிகளில் அரிசி கடத்தப்படுகிறது என்பது வழக்கமாகியுள்ளது. போவது கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும். தமிழக அரசின் பணம் கோடிக்கணக்கில் விரயமாகிறது. இதில் லாபம் பெறுபவர்கள். கடத்தல் காரர்களும், வெளி மாநிலங்களில் இந்த அரிசியை குறைந்த விலையில் வாங்குகிறவர்களும். ஆக, ஆந்திர மக்களுக்கும் கேரள் மக்களுக்கும் தான் தமிழக அரசு பல ஆயிரம் கோடிக்கணக்கில் மான்யம் தருவதாகக் கொள்ளவேண்டும். ரூபாய் 50 லிருந்து 100 ரூபாய் வரை செலவழித்து சினிமா பார்க்க வரிசையில் நிற்கும் மக்களுக்கு இலவச டிவி தந்தால் தான் டிவி பார்ப்பார்கள் என்று இல்லை. கிலோ இர்ண்டு ரூபாய்க்கு அரிசி தந்தால் தான் சாப்பிடுவார்கள் என்று இல்லை. இலவசமாகக் கிடைப்பதைப் பெற்று அதை விற்று காசு பார்ப்பார்கள். கட்சிக்காரர்களுக்கும் இதில் பங்கு. குடிசையில் இருப்பவர்களுக்கு இலவச காஸ் அடுப்பும் இலவச இணைப்பும் இந்த ரகம் தான். அரசின் பொருளாத்தைப் பற்றி கொஞ்சம் கூட சிந்தனையில்லாமல், எந்த மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாமல், எதை எதையோ இலவசம் என்று வாரி வழங்கும் ஒரு தலைமை, நிர்வாகத் திறமை கொண்ட தலைமையாகவோ, நாட்டின் நலம் கருதும் தலைமையாகவோ இருக்க முடியாது. நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு வருகின்றன. ஆற்று மணல் தினம் ஆயிரக்கணக்கில் லாரி லாரியாக கொள்ளை போகின்றது. அதோடு வெளிமாநிலத்திற்கும் அந்த மணல் லாரிகள் தினம் செல்கின்றன. இதற்கு என்ன அர்த்தம்?. இந்த மாதிரியான வரம்பற்ற கண்மூடித்தனமான மணற்கொள்ளை இன்று கட்சிக்காரர்களுக்கும் கட்சிக்கும் காசு சேர்க்க வகை செய்யாலாம். இதை அனுமதிக்கும் போலீஸ், நிர்வாகம், கட்சித் தலைமை எல்லோருக்கும் எவ்வளவு பங்கு இருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம். அரிசிக் கடத்தலும் சரி, மணற்கொள்ளையும் சரி, அவ்வப்போது பேருக்கு பிடிபடுபவர்கள், பிடிபட்ட அரிசியும் மணலும் என்ன ஆயிற்று என்பது தெரிவதில்லை. அரிசிக்கடத்தலும் மணற்கொல்லையும் நிற்கவில்லை. பிடிபடுவதும் ஒரு நாடகம் என்றே தோன்றுகிறது. சிலர் இதில் பணம் பண்ணலாம். ஆனால் ஏற்கனவே நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது இன்னமும் வற்றி, தமிழ் நாடே பாலை வனமாகும் வெகு சீக்கிரம் என்பது பற்றி இன்றைய வாக்கு வங்கி அரசியல் வாதிகளுக்கு கவலை இல்லை. எந்த இலவசத் திட்டத்திலும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றலிலும் எத்தனை காசு பண்ணலாம் என்ற நடைமுறையே பலனாகியுள்ளது.



தமிழ் நாட்டுக்கு இன்றைய முதல் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி செய்ய வேண்டியவை, ஜெயலலிதாவின் அரசின் செயல்பாடுகளை அப்போது குறை கூறிய விஷயங்களில் தான் முனைது சரி செய்ய வேண்டியவை நிறைய உண்டு. அவை எல்லாவற்றிலும் நாம் இன்றைய முதல்வரின் மௌனம் மிக உரக்கத் தான் கேட்கிறது. காவேரி டிரிப்யூனல் தந்த தீர்ப்பை அவசர அவசரமாக தமிழ் நாட்டுக்கு சாதகமானது என்று சொல்லி மகிழ்ந்தது எவ்வளவு தவறானது என்பது பின்னர் தெரிந்தது. 1970லிருந்து காவேரி பிரச்சினையை அறிந்தவர் இன்றைய முதல்வர். இது புதிய பிரச்சினை அல்ல. சொல்லப் போனால், வரலாற்றைக் கிளறினால், இந்த பிரச்சினை பூதாகாரமாக நம்மால் எதுவும் செய்ய இயலாத, கர்நாடக அரசின் அடாவடிக்கு இரையாகி நிற்பதுக்கு காரணமே, இன்றைய முதல்வரிடம் அந்த பிரச்சினையின் ஆரம்ப காலத்திலிருந்து காணப்பட்ட அலட்சியப் போக்குத் தான். அலட்சியமா, இல்லை, அறியாமையா, இல்லை, அவர்களால் என்னதான் செய்துவிடமுடியும் என்ற ஆணவமா, எதுவென்று நிச்சயமாகத் தெரியவில்லை. நதிப்பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்காது அலட்சியம் காட்டியது, கர்நாடகம் காவிரியாற்றின் குறுக்கே அணைகள் ஒன்றன் பின் ஓன்றாகக் கட்டிக்கொண்டு போனபோதெல்லாம் சும்மா வாய் பொத்தி வாளாவிருந்தது, பின்னரும் காவேரி ரிவர் அதாரிட்டியின் முடிவுகள் ஏகோபித்ததாக இருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி, பெரும்பான்மையினரின் கருத்துப்படி முடிவெடுக்கலாம் என்ற நிலைக்கு ஒப்புக்கொண்டது இப்படி ஒவ்வொரு கட்டத்திலும், இன்றைய முதல்வர் காட்டியது புரிந்து கொள்ள முடியாத மௌனமும் அலட்சியமும்.


இப்படித்தான் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை கட்டும் விஷயத்திலும், கேரளா பெரியாறு விஷயத்திலும் இந்த மாநிலங்கள் எல்லாம் தமிழ் நாடு தன்னிடம் தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன. இந்த பிரச்சினைகளில் ஜெயலலிதா அரசு மத்திய அரசிடமும், நீதி மன்றங்களிடமும் முறையிட்ட போதெல்லாம், திமுக தலைமை அண்டை மாநிலங்களோடு சுமுகமான உறவு வைத்துக்கொள்ளவேண்டும், ஜெயலலிதாவின் செயல்பாடுகள்அண்டை மாநிலங்களுடன் பகைமை கொள்ளும் போக்கு என்று உபதேசம் செய்தன. இப்போது இந்த மாநிலங்கள் தம் இஷ்டத்திற்கு அராஜகப் போக்குடன் நடந்து கொண்டுதான் வருகின்றன. தமிழ் நாட்டுக்கும் இந்த நதிகளின் தண்ணீரில் பங்கு உண்டு என்பதை முரட்டுத்தனமாக அங்கீகரிக்க மறுத்துக்கொண்டு தான் வருகின்றன. இதற்கெல்லாம் நம் அகில உலக தமிழினத் தலைவரிடம் பதில் ஏதும் இல்லை. அவரது சுமுக உறவு மனம் எதையும் சாதித்ததாகவும் தெரியவில்லை. இந்த மனப்பாண்மை செயலற்று வாய் பொத்தி இருக்கும் குணம், நம் முதல்வரின் குணம் அல்ல. இது ஏதோ காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுவது. அவர் தாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விஷயங்களில் அவர் தான் நினைத்ததைச் சாதித்துக்கொள்ளும் உறுதிகொண்ட மனத்தையும் நாம் பார்த்துள்ளோம். மத்திய அமைச்சரவையில் தனக்கு வேண்டிய இலாக்காக்களையும் தமக்கு வேண்டிய நபர்களையும் தான் விரும்பிய எண்ணிக்கையில் நிரப்பிக்கொள்ள் அவருக்குத் தெரிந்தது தான். மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென்றால் அதற்கு ஆற்காட்டார் வசம் விமானம் முலம் கொடுத்தனுப்பும் ஒரு கடிதம் போதுமானதாக இருந்துள்ளது. நெய்வேலி வேலை நிறுத்தத்தில் தலையிட முடிந்துள்ளது. ஜெயலலிதா அரசின் திட்டம் எதையும் ஒன்றுமில்லாததாகச் செய்ய விரும்பினால் அதை தன் சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜா மூலம் சாதிக்க முடிந்துள்ளது. ஜெய்லலிதாவின் பைகாரா அணு மின் நிலயத் திட்டம் இவ்வாறுதான் தடை செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா உச்ச நீதி மன்றம் போய்தான் அந்தத் தடையை நீக்க முடிந்தது. இருப்பினும் அத்திட்டம் இப்போது கிடப்பில் தான். தமிழ் நாடு மின் தடையினால் இருளில் மூழ்கிக் கிடந்தால் என்ன. அது பற்றி என்ன கவலை. தமிழுக்கு க்ளாஸிக்கல் ஸ்டேடஸ் வாங்கித் தந்தேன் என்று பெருமை பேச முடிகிறது. அது ஒரு மோசமான சமரசத்தினால் விளைந்தால் என்ன? 2000 ஆண்டு பழமை என்ற விதி 1500- ஆகக் குறைக்கப்பட்டு, கன்னடமும், தெலுங்கும் கூட இந்த அந்தஸ்துக்கு போட்டியிடவே இந்த விதிமுறை தளர்த்தப்பட்டது என்பதை யார் கவனிக்கிறார்கள்?. தமிழ் நாட்டில் தமிழ் படிக்காமலேயே கல்லூரிப் படிப்பு வரை முடித்துவிட முடியும். தமிழுக்காகவே போராடி 70 வருஷங்களைக் கழித்த ஒரு கழகம், கட்சி, அரசோச்சும் தமிழ் நாட்டில் இந்த நிலை. அது பற்றி என்ன கவலை? உயர் கல்வி, மருத்துவம் தொழில் நுடபம் தமிழில் வேண்டும் என்று கோஷம் எழுப்பி தன் தமிழ் பற்றை பறை சாற்றிக்கொள்ளலாம். தமிழே தமிழ் நாட்டில் படிக்கும் கட்டாயம் இல்லையெனில் உயர் கல்வி தமிழில் படிப்பது எப்படி? என்று அவர்கள் தம் தமிழ்பற்று கொண்ட மனத்தைக் கேட்டுக்கொள்ளவில்லை.


இது தான் ஐந்தாம் முறையாக முதல்வரானவரின் நிர்வாகமும் அரசும். தேர்தலில் வென்றாயிற்று. இன்னமும் பதவி ஏற்க வில்லை. அறிவாலயத்தில் காவல் துறை முழுதும் பூச்செண்டுகளுடன் கூட்டம் கூடி உள்ளே நுழைய முடியாத நெரிசலை உண்டாக்கியது. இந்த நடைமுறை வேறு எங்கும் எக்காலத்திலும் காணாத காட்சி. காவல் துறை சட்டத்தையும் ஒழுங்கையும் காக்க வந்த துறை. அதற்கு கட்சியோ தனி மனிதரோ அதிகாரியல்ல. அரசுக்கு கட்டுப்பட்டவர்கள். அரசு சட்டத்திற்கு மீறி நடக்குமானால் அரசும் காவல் துறையின் கண்காணிப்புக்கு உள்ளாகும். "இங்கு ஒரு பையன் குடித்துவிட்டு, உரிமம் இன்றி காரோட்டியதனால் எங்கள் காவலில் இருக்கிறான். அவன் உங்கள் மகன் என்று சொல்கிறான்" என்று லண்டன் காவல் நிலயத்திலிருந்து பிரதம மந்திரியின் வீட்டிற்கு தொலை பேசியில் செய்தி சொல்லப்படுகிறது. பிரதம் மந்திரி காவல் நிலையத்திற்கு செல்கிறார். பையனை மீட்டு வருகிறார். இஸ்ரேலின் பிரெசிடெண்ட் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்து அவர் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று இஸ்ரேல் நாட்டின் அட்வகேட் ஜெனரல் காவல் அதிகாரிக்கு எழுதுகிறார். இதற்கு மாறாக இங்கு நடப்பது என்ன? நினைத்துப் பார்க்க முடியுமா காவல் துறைக்கு இவ்வளவு கடமை உணர்ச்சி இருக்குமென்று. இங்கு மதுரையின் சன் டிவி நிலையம் தீக்கிரையாக்கப்படுக்கிறதை டிவியில் பார்க்கிறோம். காவல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்டுள்ளது முதல்வரின் மகன் அழகிரி என்ற காரணத்தால். என்ன செய்வது என்று முதல்வரைக் கேட்டு செய்தி போகிறது. அங்கிருந்து பதில் வந்த பிறகு தான் ஏதும் செய்யமுடியும் என்பது காவல் துறையின் கட்சி. பல இடங்களில் தே.மு.தி.க. அ.தி.மு.க வினரின் மறியலில் அவர்களுக்கு எதிராக திமுகவினரின் வன்முறையில் இறங்குகின்றனர். அடி படுவது காயம் படுவது, தே.மு.தி..க. அ.தி.மு.க கட்சியினர். ஆனால் கைதாவது வன்முறையில் இறங்கிய த.¢மு.கவினர் அல்ல. எதிர் கட்சிகள். பாப்ரி மசூதி இடிப்பு நினைவு தினத்தன்று, டிஸம்பர் 6-ம் தேதி முன் பாதுகாப்பாக முஸ்லீம் அமைப்பினர் தான் காவலில் எடுத்துச் செல்லப்படுவார்கள். இங்கு பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த ராஜா வும் கைது செய்யப்படுகிறார். மதச் சார்பற்ற அரசல்லவா!. பாப்ரி மசூதி இடிப்பு நினைவு தினத்தன்று யாரிடமிருந்து பொது அமைதிக்கு ஆபத்து?. தமிழ் நாட்டில் பா.ஜ்.கவிடமிருந்து என்று இங்கு காவல் துறை எண்ணுகிறது.


சொல்லிக்கொண்டே போகலாம். சொல்வதற்கு நிறைய இருக்கின்றது. எவ்வளவு தான் சொல்வது? நம் முதல்வர் நிறைய அனுபவம் நிறந்தவர். பெரும் செல்வாக்கு படைத்தவர். நினைத்ததை செய்து முடிக்கும் திறன், அதற்கான வழிமுறைகள் எல்லாம் தெரியும். பெரும் சாமர்த்திய சாலி. எதையும் சாதிக்கத் தெரியும் தந்திரோபாயங்கள் அவருக்குத் தெரியும். ஆனால் அவர் எதைச் செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்? எதைச் சாதித்துக்கொள்கிறார்? எதில் பிடிவாதமாக மௌனம் சாதிக்கிறார்? கேள்விகள் தான்.

வெங்கட் சாமிநாதன்/11.12.07

--Ksubashini 08:20, 16 ஜனவரி 2011 (UTC)


பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Geetha Sambasivam