07:18, 15 ஜனவரி 2011 இல் கடைசித் திருத்தம்
fromrajam <rajam@earthlink.net>
toமின்தமிழ் <mintamil@googlegroups.com>
dateMon, Jan 3, 2011 at 6:40 AM
subjectமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் -- பகுதி 6
மணிமேகலை: காயசண்டிகைக்குப் பிச்சையிட்ட பின்
காயசண்டிகையின் தணியாத கொடும் பசியைத் தீர்க்கிறது மணிமேகலை இட்ட பிச்சை.
காயசண்டிகை அதன் பிறகு தன் வழியே போய்விடுகிறாள்; ஆனால், பாவம், போகிற வழியில் விந்திய மலையைக் காக்கும் விந்தாகடிகையின் வயிற்றுக்குள் அடங்கிவிடுகிறாள். பின்னால் இவளைத் தேடி வருவான் இவள் துணைவனான காஞ்சனன்.
இந்தப் பகுதியில் ... மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்தில் அமுதசுரபியைக் கொண்டு என்ன செய்தாள் என்பதையும் உதயகுமரன் அவளைத் தேடிவந்ததையும் காஞ்சனன் காயசண்டிகையைத் தேடி வந்ததையும் பார்ப்போம்.
இதுவரையும் இனியும்
இதுவரை மணிமேகலையின் இயக்கம்: காவிரிப்பூம்பட்டினம் --> மணிபல்லவம் --> காவிரிப்பூம்பட்டினம்
இனி அவள் போவாள் இன்னொரு பயணம்: காவிரிப்பூம்பட்டினம் --> சாவகம் --> மணிபல்லவம் --> வஞ்சி --> காஞ்சி
இறுதியில், காஞ்சியில்தான் "பவத்திறம் அறுக" என்று நோன்பு மேற்கொள்வாள்.
மணிபல்லவத்தில் கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரன் இட்டிருந்த அமுதசுரபியைப் பெறுகிறாள் மணிமேகலை. பிறகு வான் வழியே வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் மாதவி இருக்கும் பௌத்தப் பள்ளிக்குத் திரும்புகிறாள். மாதவியுடனும் சுதமதியுடனும் சேர்ந்து அறவண அடிகளைத் தேடிப் போகிறாள்.
மணிமேகலை அறவண அடிகளைக் காணுதல்
அறவண அடிகள் எங்கே என்று கேட்டுக்கொண்டே செல்கிறாள் மணிமேகலை. அறவண அடிகளுக்கு நரை முதிர்ந்த யாக்கை; ஆனால் தளராத நாக்கு. அவர் உறைவிடம் சேர்கிறார்கள் மணிமேகலை, மாதவி, சுதமதி மூவரும்.
வந்த மூவருடைய முற்பிறவி பற்றியும் அறவண அடிகளுக்குத் தெரியும். அவர்கள் இந்தப் பிறவியில் வேறு வடிவில் வந்திருப்பதும் தெரியும்.
மாதவரின் அடிகளை மூன்று முறை வணங்கி முறைப்படிப் போற்றுகிறாள் மணிமேகலை. பல நாட்கள் முன்பு தான் மலர்வனத்துக்குப் போனதிலிருந்து இதுவரை நடந்த எல்லாச் செய்திகளையும் ஒன்றுவிடாமல் அவருக்குச் சொல்லுகிறாள்.
இப்பிறப்பில் மாதவி ... முற்பிறப்பில் வீரை. இப்பிறப்பில் சுதமதி ... முற்பிறப்பில் தாரை. இப்பிறப்பில் மணிமேகலை ... முற்பிறப்பில் இலக்குமி. இந்த மூவரும் அமுதபதி என்பவனுக்கு மக்களாகப் பிறந்திருந்தார்கள். வீரையும் தாரையும் கச்சயம் ஆண்டுவந்த துச்சய வேந்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இலக்குமி இராகுலன் என்பவனுக்கு மனைவி. இந்த விவரம் எல்லாம் மணிபவல்லவத்தில் இருந்தபோது மணிமேகலைக்குத் தெரிய வந்திருந்தது.
இப்போது அறவண அடிகளிடமிருந்து புதுச் செய்தி ஒன்று கிடைக்கிறது. அது முன் பிறப்பில் வீரைக்கும் (மாதவிக்கும்) தாரைக்கும் (சுதமதிக்கும்) என்ன நடந்தது என்பது.
ஒரு நாள் ... வீரை கள்ளுண்ட மயக்கத்தில், புதிதாகப் பிடிக்கப்பட்ட, பழக்கப்படாத ஒரு யானையின் முன்னால் போனதால் இறந்துபட்டாள். வீரை அப்படி இறந்ததால் அவளுடைய உடன்பிறந்த தாரை என்ன செய்தாள்? ஒரு நிலாமுற்றத்திலிருந்து கீழே விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள்.
அப்படி, வீரையும் தாரையும் இறந்துபோனதால் துச்சய மன்னன் வருந்தியிருந்தான். அது அறவண அடிகளுக்கு எப்படித் தெரியும்? அவர் புத்தனின் பாதபங்கய மலையை வழிபடப் போனபோது ... ஒரு சோலையில் துச்சயனைப் பார்த்தபோது ... இந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டிருந்தார்.
அந்தச் செய்தியை இப்போது மாதவி, சுதமதி, மணிமேகலை மூவருக்கும் அவர் சொல்கிறார்.
பிறகு, அவர்கள் இந்தப் பிறவியில் வேறு வடிவத்தில் இருப்பதால் ...
"ஆடும் கூத்தியர் அணியே போல
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ" என்று சொல்கிறார்.
[சுருக்கமான பொருள்: கூத்து ஆடுபவர் அணிந்து கொள்ளும் அணி போல, இப்போது நீங்கள் வேறு கோலம் கொண்டு வந்தீர்களோ?]
பிறகு தரும தலைவன் உரைத்த நல்லறத்தை மக்கள் பின்பற்றாமல் இருந்த நிலையைப் பற்றி வருந்தி, தான் மக்களுக்கு அறம் உரைத்துவருவதைச் சொல்கிறார்.
"இந்த உலகில் தரும தேவன் உரைத்த பெருமை மிகுந்த நல்லறம் குறைந்து குற்றங்கள் நிறைந்த தீய வழி பெருகியது. ஆயினும் சிறிதளவாவது தருமம் உண்டாகக்கூடும் என்று நினைத்து நான் தருமத்தை அறிவுறுத்திவருகிறேன். அந்தத் தருமத்தை இந்த உலகத்தில் உள்ள மாந்தர்கள் அறியமாட்டார்கள். இந்த உண்மையை அறிந்த சக்கரவாளத்தில் உள்ள தேவர்கள் துடிதலோகத்தில் உள்ள சிறந்த தேவனை வேண்டுதலினால், ஆயிரத்து அறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் இந்த உலகத்தில் பேரறிவாளன் தோன்றுவான். அதற்குப் பிறகு மக்களுக்கு அருள் அறத்தில் மனம் செல்லும்."
தொடர்ந்து ... வேறு என்னென்ன வகைகளில் உலகத்தில் நல்லது நடக்கும் என்றும் விளக்குகிறார். அதோடு, தானும் பிறவிதோறும் போதி நாதனின் பாதம் ஏத்துதலை மறக்காமல் இருப்பது பற்றியும் சொல்கிறார்.
"அந் நாள் பிறந்து அவன் அருள் அறம் கேட்டோர்
இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்
போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன்"
[சுருக்கமான பொருள்: (அப்படி, பேரறிவாளன் தோன்றும்) அந்த நாளில் பிறந்து அவன் சொல்லும் அறத்தைக் கேட்டவர்கள் துயரம் தரும் பிறவியைக் கடந்தவர்கள். ஆதலினால், போதியின் கீழ் உள்ள நாதனின் பாதத்தைக் குற்றமில்லாதபடி ஏத்துவதை ஒவ்வொரு பிறவியிலும் நான் மறப்பதில்லை.]
இப்படிச் சொல்லிய அறவண அடிகள், பிறகு அவ்வூரில் மணிமேகலை மூலம் சில நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாகவும், அவை எல்லாம் நடந்த பின்னரே அவளுக்குத் தரும உபதேச மொழி பொருந்திவரும் என்றும், மாதவியும் சுதமதியும் பழைய பிறவியில் பாதபங்கய மலையை வணங்கியதனால் இந்தப் பிறவியில் மணிமேகலையோடு சேர்ந்து, சிறப்பு மிகுந்த போதி உரவோனின் திருந்திய அடிகளைத் தொழுது வலம் கொண்டு, குற்றமில்லாத நல்ல வழியில் செல்வார்கள் என்றும் சொல்கிறார்.
இதன்பின்னர்,
"மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல்" என்று அறம் உரைக்கிறார்.
[சுருக்கமான பொருள்: மக்கள் தேவர் என்ற இருவகைப்பட்டவர்களுக்கும் தகுந்த ஓர் அறம் சொல்லுவேன். அது பசியாகிய பிணியைத் தீர்ப்பதே.]
பிறகு ஆபுத்திரனைப் பற்றியும் மணிமேகலைக்குச் சொல்கிறார். ஆபுத்திரன் இந்தப் பிறவியில் சாவக நாட்டில் ஒரு பசுவின் வயிற்றில் பிறந்திருப்பதைத் தெரிவிக்கிறார். (பிறகு ஒருநாள் மணிமேகலை அங்கே போய் அவனைப் பார்ப்பாள். அதை வேறொரு பகுதியில் பார்ப்போம்.)
மணிமேகலை அம்பலத்தில்
அறவண அடிகளைக் கண்டு அறம் கேட்ட பிறகு மணிமேகலை பிக்குணிக் கோலம் எடுத்து அந்த நகரத்தின் பெரிய தெருவுக்கு வந்து ஆதிரை கையிலிருந்து பிச்சை வாங்கி, காயசண்டிகையின் பசியைத் தீர்க்கிறாள். பசி நீங்கிய காயசண்டிகை தன்வழியே போய்விடுகிறாள். (வழியில் விந்திய மலைக்கு மேலே போனதால் விந்தாகடிகையின் வயிற்றுக்குள் அடங்கிவிடுகிறாள், பாவம்.)
அதன்பின் ... மணிமேகலை சக்கரவாளக் கோட்டத்தில் இருக்கிற உலக அறவியை மூன்று முறை வணங்கி அதில் தனியாக ஏறி, சம்பாபதி கோட்டத்தை வணங்கி அங்கே இருக்கிற கந்திற்பாவையையும் தொழுது ஏத்தி, அமுதசுரபியிலிருந்து உண்ணுவதற்காக மக்களை அழைக்கிறாள்.
"உலக அறவியின் ஒரு தனி ஏறி-ப்
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-க்
கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய
தன் துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி
... ... ...
ஆபுத்திரன்கை அமுதசுரபியிஃ(து)
யாவரும் வருக ஏற்போர் தாம்"
[சுருக்கமான பொருள்: உலக அறவியில் தனியாக ஏறி, இல்லறத்தாரோடு ("பதியோர்"?) சேர்ந்து பலரும் தொழுது ஏத்தும் முதியவளாகிய சம்பாபதியை மனம்-வாக்கு-காயம் என்ற மும்மையினால் வணங்கி, தூணில் பொருந்திய பாவையைத் தொழுது ஏத்தி, "இது ஆபுத்திரன்கைப் பாத்திரம் அமுதசுரபி; (பிச்சை) ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் எல்லாரும் வருக" என்று அறிவிக்கிறாள்.]
உடனே அந்த அம்பலத்தில் எழுகிறது பெரிய இரைச்சல் ... எல்லாம் அந்த உணவுக்காகத்தான்!
சித்திராபதியின் துடிப்பு
அம்பலத்தில் உயிர்கள் உணவு ஏற்கும் ஓசை மாதவியின் தாய் சித்திராபதி காதுக்கு எட்டுகிறது. மகள் போய் அடைக்கலம் புகுந்தது மாதவர் பள்ளியில்! மகளுக்கு மகள் திரிவது ஊர் அம்பலத்தில்! தாய் பொறுப்பாளா?
கடுமையான புண்ணுக்குள் சிவந்த தீக்கோல் நுழைந்து சுட்டது போன்ற உணர்வு சித்திராபதிக்கு. அவள் உள்ளம் கொதிக்கிறது; நெஞ்சு பதறுகிறது; பெருமூச்சு விடுகிறாள்; கலங்குகிறாள்; "இந்த அறத்தைத் தீர்ப்பேன்" என்று மனத்தில் உறுதிகொள்கிறாள்.
அங்கே இருக்கும் கூத்தியல் பெண்களையெல்லாம் அழைக்கிறாள். கோவலன் இறந்தபின் கொடுமையான துயரம் அடைந்து மாதவி மாதவர் பள்ளியை அடைந்தது சிரிக்கத் தக்க செயல் என்கிறாள். கணிகையர் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை விவரித்துச் சொல்கிறாள். மாதவி தாபதக் கோலம் தாங்கியது நகைப்புக்கு இடமானது என்று பழிக்கிறாள்.
உலகை ஆளும் உதயகுமரன் என்ற வண்டு செவ்விதாக அருந்தும்படி மணிமேகலையைப் பிடித்து, அவளுடைய பிச்சைப் பாத்திரத்தை மற்றவர் கைக்குப் போகும்படிச் செய்துவிட்டு, உதயகுமரன் தேரில் மணிமேகலையைக் கொண்டு வரும்படிச் செய்வேன் என்று வஞ்சினம் உரைக்கிறாள்.
சில பெண்கள் புடைசூழ, வியர்வை சொட்டும் முகத்தோடு, நேரே உதயகுமரனிடம் போகிறாள். மணிமேகலை அம்பலத்தில் இருப்பதைச் சொல்லி உதயகுமரன் அவளை அடையவேண்டும் என்று தூண்டுகிறாள். உதயகுமரனுக்குத் தயக்கம். அதனால் ... மணிமேகலைமேல் மனம் வைக்கவேண்டாம் என்று மணிமேகலாதெய்வம் தனக்கு அறிவுரை சொன்னதைச் சித்திராபதிக்குத் தெரிவிக்கிறான்.
சித்திராபதியோ தளராமல் தன் கருத்துக்களைச் சொல்கிறாள். இந்திரன் கதை, தாருகாவனத்து முனிவர்கள் கதை ... இவற்றையெல்லாம் சொல்லி, எப்படியோ உதயகுமரன் மனத்தை மாற்றிவிடுகிறாள்.
உதயகுமரன் உள்ளம் பிறழ்கிறது. அவன் மனத்தைப் போலவே அவன் தேரும் விரைகிறது.
உதயகுமரன் மணிமேகலையைப் பார்த்தல்
தன் உள்ளத்தைக் கவர்ந்துகொண்ட மணிமேகலையைப் பார்த்து ...
"உடம்போடு என்தன் உள்ளகம் புகுந்து என்
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி!
நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்"
என்று கேட்க நினைத்து அவள் இருந்த அம்பலத்துக்கு விரைகிறான் உதயகுமரன்.
[சுருக்கமான பொருள்: (உன் முழு) உடம்போடு என் உள்ளத்தில் புகுந்து என் நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்ட வஞ்சகக் கள்வியே! நோன்பு நோற்று உண்ணும் வாழ்க்கையை நீ மேற்கொண்டது ஏன்? நொய்மை தரும் தவம் தாங்கியது ஏன்? (பிச்சை) ஏற்று உண்ணுவதை விரும்பியது ஏன்?]
இப்படியெல்லாம் சொல்லிக் கேட்க நினைத்தாலும் ... அவளைப் பிக்குணிக் கோலத்தில் பார்க்கும்போது ... அவன் துணிந்து கேட்பது என்னவோ வேறு!
"நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்து உடன் கேட்ப"
[சுருக்கமான பொருள்: நல்லவளே! நல்ல தவம் மேற்கொண்டது ஏன்? சொல்! என்று துணிந்து கேட்கிறான்.]
"வஞ்சக் கள்வி" என்று சொல்ல நினைத்தவன் வாயில் வருவது "நல்லாய்" என்ற நல்மொழி! அதுதான் பிக்குணிக் கோலத்தின் ஆற்றலோ!
முதல் முறையாக அவனை நேருக்கு நேர் பார்க்கிறாள் மணிமேகலை! முற் பிறவியில் அவள் கணவன் இராகுலன் ... இந்தப் பிறவியில் உதயகுமரன்! அவள் மனம் அப்படியே நெகிழ்ந்துபோகிறது! அவள் உள்ளத்து உணர்வைத் தெரிந்துகொள்ளுவோம்:
"என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி,
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்"
[சுருக்கமான பொருள்: என்னை விரும்பும் என் காதலன் இராகுலன் இவன்; இவன் அடிகளைத் தொழுவது எனக்கு ஏற்றது என்று வணங்கி, அறிவு பாழ்பட்டுத் தன் உள்ளம் அவன்பக்கம் போனாலும்...]
அறிவு ஓட்டையாகிப் போகிறதாம், பாவம்!
"இறைவளை முன்கை ஈங்கு இவன் பற்றினும்
தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல்
நன்றியன்று என நடுங்கினள் மயங்கி ..."
[சுருக்கமான பொருள்: தன் முன்கையை அவன் பிடித்தாலும் பழைய காதலன் ஆதலால் அவன் சொல்லை மறுப்பது நல்லது இல்லை என்று நினைத்து நடுங்கி மயங்குகிறாள்.]
எப்படியோ ... அவன் கேட்டதற்கு மறுமொழி சொல்கிறாள்:
"கேட்டது மொழிவேன்; கேள்வியாளரில்
தோட்ட செவியை நீ ஆகுவையாம் எனில்;
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்;
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்குப்
பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ?
கேட்டனை ஆயின் வேட்டது செய்க"
[சுருக்கமான பொருள்: கேள்வியால் துளைக்கப் பட்ட செவி உனக்கு இருக்குமானால்
... நீ கேட்டதைச் சொல்லுவேன். ("நான் கேட்டதைச் சொல்லுவேன்" எனவும் பொருள் கொள்ளலாம்.) மக்கள் உடம்பு என்பது, பிறப்பதையும் மூப்பு அடைவதையும், நோய்வாய்ப்படுவதையும், இறப்பதையும் உடையது; அது துன்பத்தைக் கொள்ளும் ஒரு கலம்; அந்த உண்மையை உணர்ந்து சிறப்பான நல்லறத்தை விரும்பினேன். மண்டிவரும் போரில் புகுந்து புரட்டும் ஆண் யானை போன்றவருக்குப் பெண்கள் சொல்லும் அறிவுரை உண்டோ? நான் சொல்வதைக் கேள்; உனக்கு விரும்பியதை நீ செய்.]
இப்படிச் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு விலகி, சம்பாபதி இருக்கும் குச்சரக் குடிகைக்குள்ளே போகிறாள். அங்கே போய், "ஆடவர் செய்கையை யாரால் அறியமுடியும்" என்று கவலைப்படுகிறாள். மணிமேகலா தெய்வம் தனக்குச் சொன்ன மந்திரத்தை ஓதிக் காயசண்டிகை வடிவம் எடுத்து வெளியே வருகிறாள்.
காயசண்டிகை வடிவில் மணிமேகலை
உதயகுமரனுக்கு ஒரே மலைப்பு! மணிமேகலை குடிகைக்கு உள்ளே போனாள். காயசண்டிகை வெளியே வந்தாள். மணிமேகலை அந்தக் குடிகைக்கு உள்ளேயே இருக்கவேண்டும். குச்சரக் குடிகையின் உள்ளே போகிறான் உதயகுமரன். காயசண்டிகை கையில் அமுதசுரபியைக் கொடுத்துவிட்டு மணிமேகலை அங்கே ஒளிந்திருப்பதாக நினைக்கிறான். மணிமேகலை எங்கே என்று காட்டித் தரவேண்டும் என்று அங்கே இருக்கும் தெய்வத்திடம் வேண்டுகிறான். மணிமேகலையைக் காட்டித் தராவிட்டால் பல நாட்கள் ஆனாலும் அங்கேயே பாடுகிடக்கத் துணிந்திருப்பதாகச் சொல்கிறான். மணிமேகலையின் அழகை விவரித்துச் சொல்லி, அவள் இல்லாமல் நான் தனியாக இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன் என்று வஞ்சினம் கூறுகிறான்.
அப்போது அங்கே இருந்த சித்திரம் ஒன்று தெய்வ மொழி சொல்கிறது: "நன்றாக நினைத்துப் பார்க்காமல் ஒரு முடிவு செய்து, எங்கள் கோமகள் முன்னால் சொல்லத் தகாத மொழிகளைச் சொல்லி உன் சொற்களில் வறுமை அடைந்தாய்."
உதயகுமரன் திடுக்கிட்டுப்போகிறான். முன்பு ஒருநாள் 'மணிமேகலையை மறந்துவிடு' என்று ஒரு தெய்வம் சொன்னதும் வியப்பானது; பலருடைய பசியை நீக்கவேண்டி மணிமேகலை கையில் ஏந்திய பாத்திரமும் வியப்பானது; இப்போது 'தெய்வக்குற்றம் செய்கிறாய்' என்று சித்திரம் சொன்னதும் வியப்பானது. என்ன இதெல்லாம்? குழம்புகிறான். இதையெல்லாம் பிறகு மணிமேகலையின் செயல்களிலிருந்து விவரமாகத் தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்து வருந்திய உள்ளத்துடன் அங்கேயிருந்து போய்விடுகிறான்.
மாற்றுவடிவத்தில் இருந்த மணிமேகலை நினைத்துப் பார்க்கிறாள். மாதவியின் மகள் வடிவத்தில் "மணிமேகலையாக" அந்த ஊர் மன்றத்தில் தான் திரிந்துகொண்டிருந்தால், அரசன் மகன் (உதயகுமரன்) தன்னைத் தொடர்வதைக் கைவிடமாட்டான் என்று உணர்கிறாள். அதனால் ... ஊரார் எல்லாருக்கும் அறிமுகமான, கொடும் பசிப்பிணியால் வருந்தும் காயசண்டிகை வடிவத்திலேயே பிச்சை எடுத்தும் பிச்சை இட்டும் ஆற்றா மாக்களுக்கு உதவுவது சிறந்தது என்று முடிவு செய்கிறாள்.
அதன்படியே ... காயசண்டிகை வடிவத்தில் அந்த ஊரில் திரிகிறாள். அரசக் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் சிறைச்சாலைக்குப் போய் அங்கே பசியால் வருந்தும் மக்களுக்கு உணவு கொடுக்கிறாள்.
அவள் கையில் இருப்பதோ ஒரே ஒரு பாத்திரம்; ஆனால் அதுவோ வாங்குபவர்கள் கையை வருத்துகிறதே ஒழியத் தான் குறைவில்லாததாய் இருக்கிறது. சிறைக் காவலர்களுக்குப் பெரும் வியப்பு! அவர்கள் இதைப் பற்றிச் சோழ மன்னனுக்குத் தெரிவிக்கிறார்கள்.
மன்னன் (காயசண்டிகை வடிவில் இருந்த) மணிமேகலையை வரவழைத்து விவரம் கேட்கிறான். அவளும் தன்னை "விஞ்சை மகள்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அமுதசுரபி பற்றிச் சொல்கிறாள்:
"... இது
ஐயக் கடிஞை; அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது; திப்பியம் ஆயது;
யானைத் தீ நோய் அரும் பசி கெடுத்தது;
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது"
[சுருக்கமான பொருள்: இது ஒரு பிச்சைப் பாத்திரம். அம்பலத்தில் ஒரு தெய்வம் கொடுத்தது. இது வியப்பானது. யானைத் தீ என்ற நோயினால் இருந்த கொடிய பசியைப் போக்கியது. ஊன் உடைய பிறவிகளின் உயிருக்கு மருந்து.]
மன்னன் கேட்கிறான்: "என்னால் செய்யக் கூடியது என்ன?"
அவள் சொல்கிறாள்:
"சிறையோர்க் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்காக்கும் அது வாழியர்"
[சுருக்கமான பொருள்: சிறைச்சாலையை இடித்து, அருள் நெஞ்சத்தை உடைய அறவோரைக் காக்கும் முயற்சி வாழ்க.]
நாடாளும் அரசனுடைய ஆணையாலும் ஆயிழை மணிமேகலையின் அருளாலும் ... நரக வேதனையைச் செய்யும் கொடுமையான சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆகிறது.
தீய பிறவியில் பிறந்து வருந்தியவர்கள் செய்வினைப் பயனால் நல்ல பிறவியை அடைந்ததுபோல ...
"பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருத்துநர் சாலையும்
கட்டுடைச் செல்வக் காப்பு உடைத்தாக ..."
[சுருக்கமான பொருள்: பொருள் ("சத்தியம்") விரும்புகின்ற புத்தன் கோயில், அறம் செய்யும் அறவோர்களின் பள்ளி, சமையல் சாலை, உண்பவர் சாலை ... என்று இந்த இடங்கள் எல்லாம் காவலும் செல்வமும் பெற்றன.]
இந்த நிகழ்ச்சிகள் உதயகுமரனுக்குத் தெரியவருகின்றன. அவனுக்குப் புரிகிறது -- அவள் காயசண்டிகை இல்லை, மணிமேகலைதான் என்று.
"அறிவுடையவர்கள் இகழ்ந்தாலும் சரி, மன்னவன் சினந்தாலும் சரி ... அவள் அம்பலத்தை விட்டுப் போகும்போது கைப்பற்றி, என் பொன் தேரில் ஏற்றி, அவள் கற்று அறிந்த வித்தைகளைக் கேட்டு அறிவேன். அவள் சொல்லும் அறிவுரைகளையும் கேட்பேன்" என்று முடிவு செய்து (காயசண்டிகை வடிவில்) மணிமேகலை இருந்த உலக அறவிக்குச் செல்கிறான்.
காயசண்டிகையைத் தேடி அவள் கணவன் காஞ்சனன் வருதல்
விருச்சிக முனிவன் காயசண்டிகைக்குச் சாபம் இட்டுப் பன்னிரண்டாண்டுகள் கழிந்தன. ஆனால் அவளை இன்னும் காணோம். தேடி வருகிறான் அவள் கணவன் காஞ்சனன்.
பூத சதுக்கம், பூமலர்ச் சோலை, மாதவர் இடங்கள், மன்றம், பொதியில் ... என்று இப்படி எல்லா இடங்களிலும் அவளைத் தேடி அலைந்து கடைசியில் இங்கே உலக அறவியில் அவளைப் பார்க்கிறான்!
அவனுக்குத் தெரியுமா ... அவள் அவனுடைய காயசண்டிகை இல்லை என்று!
அவள் கையில் ஒரு பிச்சைப்பாத்திரத்தைப் பார்க்கிறான். அவனுக்கு வியப்பு. பழைய உறவு முறையில் அவளை அணுகி,
"உன் கையில் இருப்பது ஒரே ஒரு பாத்திரம். ஆனால் அதிலிருந்து பலர் உண்கிறார்கள்! உன்னைப் பிணித்த ஆனைத்தீ நோய் நீங்கி மற்றவர்களின் அரும் பசியையும் நீ போக்கும்படி உனக்குத் தேவர்கள் ("வான வாழ்க்கையர்") அருள் செய்தார்களோ?" என்று பாராட்டுகிறான்.
(காயசண்டிகை வடிவில் இருக்கும்) மணிமேகலைக்குக் காஞ்சனன்மேல் என்ன அக்கறை? அவள் உதயகுமரனைப் பார்த்துப் போகிறாள்!
அங்கே இருக்கும் நரைத்த மூதாட்டி ஒருத்தியை உதயகுமரனுக்குக் காட்டி அறிவுரை சொல்கிறாள்.
மிகவும் விளக்கமாக ... ஒரு காலத்தில் இளமையும் பொலிவும் மிளிர்ந்திருந்த அந்தப் பெண்ணின் உடல் இப்போது எப்படித் தளர்ந்து பொலிவு இழந்து தொய்ந்துபோய்க் கிடக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். தலைமுதல் கால் வரை ... கூந்தல், புருவம், கண்கள், மூக்கு, பற்கள், வாய், காது, மார்பகம், தோள், விரல்கள், தொடை, கணைக்கால், அடி ... இப்படி ஒவ்வோர் உறுப்பும் எப்படி இருந்து எப்படி ஆனது என்று பிட்டுப் பிட்டு விளக்குகிறாள்! கொடுமை!
"பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து-த்
தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகனே"
[சுருக்கமான பொருள்: மன்னவன் மகனே! இதெல்லாம் ... பூவாலும் சந்தனத்தாலும் ஆடையாலும் மணிகளாலும் உடம்பின் புலாலை மறைப்பதற்காகத் தொல்லோர் செய்த வஞ்சனை என்று தெரிந்துகொள்.]
காஞ்சனனுக்கு வியப்பு! "நான் இவளைப் பாராட்டுகிறேன். இவள் என் சொற்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் என்னைப் பிறன்போல் பார்க்கிறாள்; இன்னொருத்தன் பின்னால் போகிறாள். இவன் இவளுக்குக் காதலன்" என்று அவன் மனத்தில் பகைமைத்தீ எழுகிறது. அப்போதைக்கு அந்தப் பகைமைத் தீயை மறைத்துக் கொண்டு, அந்த மன்றத்தின் பொதியிலில் புற்றுக்குள் அடங்கும் பாம்பு போலப் பதுங்குகிறான்.
காஞ்சனனும் உதயகுமரனும்
மணிமேகலைதான் காயசண்டிகை வடிவத்தில் பிச்சைப்பாத்திரம் ஏந்தித் திரிகிறாள் என்று உதயகுமரனுக்குத் தெரிந்துவிடுகிறது. அவள் சொன்ன அறிவுரை ஒன்றும் அவன் காதில் ஏறவில்லை. அவள் மேல் உள்ள வேட்கையும் தணியவில்லை. புதிதாக அங்கே வந்தவனொடு (காஞ்சனனோடு) அவள் போகமாட்டாள் என்று தெரிகிறது. நள்ளிரவில் மீண்டும் வந்து அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என்று முடிவு செய்து, காமனைத் துணையாகக் கொண்டு, அங்கேயிருந்து போய்விடுகிறான்.
ஊரெல்லாம் துயில்கொண்டிருக்கும் யாமத்தில், வேழத்தை வேட்டையாட வருகின்ற புலியைப் போல மணிமேகலை இருந்த அம்பலத்திற்கு மீண்டும் வருகிறான்.
காட்டம் மிகுந்த தீ நாகம் அடங்கிக் கிடக்கிற புற்றுக்கு உள்ளே நுழைகிறவனைப் போல அவனுடைய மார்பின் சந்தனம் அவன் வருகையை அறிவிக்கிறது! மெல்ல அடிமேல் அடிவைத்து அவன் உள்ளே நுழைந்துகொண்டிருக்கும்போது அங்கே பதுங்கியிருந்த காஞ்சனன் ... ... இவன் இவளிடம் வந்திருக்கிறான் என்று பொங்கிய சினத்தோடு எழுந்து ... உதயகுமரன் பின்னே போய் வண்டுகள் சுற்றும் அவனுடைய தோள் துண்டுபடும்படியாக அவனை வெட்டி வீழ்த்திவிட்டு ... அவள் (காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலை) இருந்த இடத்தை நோக்கி விரைகிறான்.
இதற்குப் பின் மணிமேகலை, சோழ மன்னன், சோழ அரசி, சித்திராபதி ... இப்படி ஒவ்வொருவரும் எப்படித் துடித்தார்கள், என்னென்ன செய்தார்கள் என்பதெல்லாம் பிறகு பார்க்கலாம்.
அன்புடன்,
ராஜம்
--Ksubashini 07:18, 15 ஜனவரி 2011 (UTC)