"ஜெயகாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
12:07, 25 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்தனது நண்பர் ஜெயகாந்தனுடன் கூடிய தனது ஞாபகங்களை கட்டுரையாக தருகிறார் சீதாலட்சுமி.
சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன்சீதாலட்சுமி - மின்னஞ்சல் முகவரி seethaalakshmi@gmail.com
பகுதி 121-12-2009 டாக்டர். ஜெயகாந்தன்! பட்டம் வழங்கப் போவதாக செய்தி மட்டும்தான் வந்திருக்கின்றது. ஆனால் ஏனோ உடனே அவர் பெயருடன் டாக்டர் பட்டத்தை ஒட்டிப் பார்க்க மனம் விழைகின்றது. பள்ளிப்படிப்பு கூட முடிக்காதாவர். அச்சகத்தில் அச்சு கோர்க்கும் சாதாரண தொழிலாளி. இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன!.வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே! மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார்!? இவரைப்பற்றி எழுத என் மனம் கட்டளையிட்டுவிட்டது. என் அன்புக்குரிய நண்பர். 40 ஆண்டுகால நண்பர். குடும்ப நண்பர். எத்தனை சந்திப்புகள்! நாங்கள் கழித்த பொழுதுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.ஒருகாலத்தில் எனக்குள் ஒரு ஆசை இருந்தது. ஜான்சனைப்பற்றி பாஸ்வெல் எழுதியது போல் ஜெயகாந்தனின் உரையாடல்களைத் தொகுத்து எழுத விரும்பினேன். கையிலே டேப் ரிகார்டர் சகிதமாகச் சுற்றியிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் பதிவு செய்திருக்க முடியாது. சிறு அசைவும் கூட அவரிடமிருந்து திடீரென்று வெள்ளமென வரும் வார்த்தைகளின் ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பொழுதே எழுதியிருந்தால் இந்த சமூகத்திற்கு ஓர் அரிய நூல் கிடைத்திருக்கும். இப்பொழுது என் நினைவுப் பெட்டகத்தில் தேடிப் பார்க்கும் வலுக் கூடக் குறைந்து விட்டது. இருப்பினும் தெரிவதையாவது பதிவு செய்ய வேண்டியது என் கடமையெனக் கருதுகின்றேன். என் நட்பு வட்டம் மிகப் பெரியது. நான் சந்தித்தவர்களில் உரையாடலில் மிகச் சிறந்தவர் ஜெயகாந்தன். HE IS ONE OF THE BEST CONVERSATIONALISTS IN MY LIFE. என்னைப் பற்றி நன்குணர்ந்த , எங்கள் குடும்ப நண்பர் பேராசிரியர் அரசு அவர்கள் கூறியது. ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர். ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர். ”இந்த இரண்டினைப் பற்றியும் நிறைய எழுதிவிட்டடர்கள். அவருடன் பேசும் பொழுது அவரிடம் கண்டவைகளை, உணர்ந்தவைகளை அவருடன் பழகியவர்கள் எழுத வேண்டும். சீதாம்மா, அவர் உங்களுக்கு நீண்ட கால நண்பர். நினைவில் இருப்பவைகளைப் பதிவு செய்யுங்கள். ஏற்கனவே நீங்கள் மீண்டும் எழுதத் தாமதித்துவிட்டீர்கள். தொடர்ந்து உங்களுடன் பழகிய பல அறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும். உங்கள் அனுபவங்களையும் பதிவு செய்யுங்கள் “ நான் எழுதும் நினைவலைகள் பிறந்த கதை இதுதான்! சீதாம்மாவின் குறிப்பேட்டில் இனி என்னுடன் பழகிய பலரைப்பற்றி எழுத நினைத்துள்ளேன். வரிசையில் முதலில் வந்துவிட்டார் ஜெயகாந்தன். அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று நிறைய பேசினேன், எங்களிடையே நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும், பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.. நாங்கள் இருவரும் அச்சமில்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். ஆடம்பரமில்லாதவர்கள். அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள். மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப் பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்து உண்மைகளை சத்தம் போட்டுக் கூறியவர். அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன. நான் செயலில் இறங்கினேன். இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.அவர் எண்னங்கள் எழுத்துக்களில் வெளிப்பட்டன என் பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது மனங்களில் வரைந்த சித்திரம். உணர்வுகள். என்னுடைய பணியில் எனக்குக் கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். என் சாதனைகள் என்று கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் இது.கடந்த கால நிகழ்வுகளை மனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி. எனக்கிருக்கும் வாழ்நாட்கள் குறைவு. இருக்கும் மணித்துளிகளை உங்களுடன் கழிக்க விரும்புகின்றேன். ஆம் இப்பொழுது நான் உங்களுடன் வாழ்கின்றேன்! பகுதி 223-12-2009 ஜெயகாந்தன்பற்றி எழுதுகின்றேன் என்பதைப் பார்க்கவும் நிலா ரசிகனுக்கு ஒரே குஷி ! அடுத்து ஒரு நிகழ்ச்சியிலும் நிலா உடன் இருந்தான். ஒரு வருடத்திற்கு முன்னால் சென்னைக்கு வந்திருந்தேன். என்னால் தனியாக எங்கும் போக முடியாது. டாக்ஸியில் ஏறவும் இறங்கவும் கூட ஒருவர் என்னைப் பிடித்துக் கொள்ள வேண்டும். என்னுடன் இரு கவிஞர்கள் துணை வந்தனர். ஒருவர் நம் நிலா ரசிகன்; இன்னொருவர் கவிஞர் சஹாராத் தென்றல். நிலா எனக்குச் செல்லப்பிள்ளை ; சஹாரா எனக்குச் செல்லப்பொண்ணு. என்னைக் கவனித்துக் கொள்வதில் இருவருக்கும் போட்டி. எனக்கு அடுத்திருந்தது ஒருசாய்வு நாற்காலி. அதில் வந்து உட்கார்ந்தார் ஜெயகாந்தன். மற்றவர்கள் எதிரே அமர்ந்தனர். அவர் மனைவியார் வந்து நலம் விசாரித்துவிட்டுக் காபி எடுத்துவரச் சென்றார்கள். அவர் வீட்டிற்குச் செல்லும் பொழுது நானும் அவர் மனைவியும் சமயலறையருகில் உட்கார்ந்து பேசுவோம்; பின்னர்தான் ஜெயகாந்தன் இருக்கும் இடம் சென்று பேசுவேன். ஆனால் நாங்கள் சென்ற அன்று ஒரே அறையில் உட்கார்ந்து இருந்தோம். கவுசல்யா வந்து அமர்ந்தார். எங்கள் உரையாடல் அக்காலத்திற்குச் சென்றது. ஜெயகாந்தன் ஒரு கேள்வி கேட்டார் - அவ்வளவுதான் ! அதற்குப் பிறகு அவர்தான் பேசினார். இரு கவிஞர்களிடம் எங்கள் சந்திப்புகள், நாங்கள் ஊர்கள் சுற்றியது எல்லாம் விளக்கமாக அவர் கூறிவந்தார். எங்கள் சந்திப்பு, எங்கள் சுற்றுலாவிற்குப் பின்னர் அவர் என்னென்ன கதைகள் எழுதினார் என்பதைக் கவுசல்யா விளக்கி வந்தார். சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்த உரையாடல் அவர் மகன் வரவும் மாறியது. என் முகக் கலக்கத்தைப் பார்த்து ஒரு சின்ன முறுவல். “பரவாயில்லை” என்று அந்த முறுவலில் புரிந்து கொண்டேன். வெள்ளமென வார்த்தைகளையும் கொட்டுவார்; ஒற்றைச் சொல்லில் பல வார்த்தைகளையும் உள்ளடக்கிக் கூறும் திறமையும் உண்டு அவரிடம். “இன்னுமா என்னைப் புரிந்து கொள்ளவில்லை” என்று கேட்காமல் “பரவாயில்லை” என்று முறுவலால் பதில் கூறியவன் என் நண்பன். எத்தனை பேர்கள் இருந்தாலென்ன? எங்களுக்கிடையில் வாய்மொழி தேவையில்லை. பேசிக் கொள்ள முடியும். இந்த சக்தியை இன்னொருவரிடமும் நான் கண்டிருக்கின்றேன். திடீரென்று என்னை நோக்கி, “நாம் இருவரும் சேர்ந்து போய் கலைஞரைப் பார்க்கலாமா?” என்று கேட்டார். இப்பொழுது அவர் கேட்கக் கூடாத கேள்வி கேட்டு விட்டார். துடித்துப் போனேன். ஒரு காலத்தில் இருவரையும் சந்திக்க நான் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அன்று நான் விரும்பிய சந்திப்பு இப்பொழுது வாய்க்க இருக்கின்றது. அவர் சுலபமாக் கேட்டுவிட்டார். பகுதி 325-12-2009 கற்பனையில் காணும் காட்சிகள் சில விஷயங்களில் கற்பனையாகவே இருந்துவிடுதல் நலம்.என் இயலாமையைத் தெரிவித்துவிட்டு எழுந்து விட்டேன்.நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் காரை நோக்கி நடந்தேன். ஜெயகாந்தனும் உடன் மெதுவாக வந்தார். இருவரும் ஒன்றும் பேசவில்லை. மவுனம் சக்தி வாய்ந்த மொழி; அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. “ஏன் இப்படி இங்கு வந்து உட்கார்ந்திருக்கின்றீர்கள்?” “அம்மா, அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். அவர் பேச்சைக் கேட்கத்தான் காத்திருக்கின்றோம்” அவர்கள் பைத்தியக்காரர்களா? ஆமாம், அறிவுப் பைத்தியம். ஜெயகாந்தனிடம் வெட்டி அரட்டையை எதிர்பார்க்க முடியுமா? இப்பொழுது அப்படிப்பட்ட காட்சிகள் கிடையா. அவர் வீட்டின் மாடியில் கூரை வேய்ந்த இடம் இருக்கின்றது. அங்கே சந்திப்புகள் நடக்கின்றன; கலந்துரையாடல்களும் இங்கேதான்; ஆனால் அந்தக் காலத்து அதிரடிக் கச்சேரிகள் இப்பொழுது இல்லை.
பகுதி 404-01-201 அக்கினிப் பிரவேசம் இந்தக்கதை விகடனில் வரவும் பெரிதும் பேசப்பட்டது. இந்தக்கதையின் கரு ஓர் உண்மை சம்பவத்தையொட்டியது. படைப்பாளிக்குப் பார்க்கும் ஒவ்வொன்றும் சொந்தமாகிவிடும். சின்னக் கதையுடன் மனம் திருப்தி அடையவில்லை. அதனுடைய நீட்சிதான் சில நேரங்களில் சில மனிதர்கள். எத்தனைவிதமான மனிதர்கள்! எத்தனை சூழ்நிலைகள்! அலை அலையாய் வந்து போகும் மனிதனின் அவல உணர்வுகள். கங்காவின் பஸ் பயணத்தில் அவள் அனுபவிக்கும் உரசல்களும் இடிகளும் புதிதல்ல. ஆனால் ஒரு பெண்படும் அவஸ்தையை அப்படியே நம்மையும் உணர வைத்திருப்பார். அக்காட்சியைப் படிக்கும் பொழுது எனக்கே உடலில் பூரான் ஓடுவது போன்று ஓர் அறுவறுப்பான தாக்கம். வக்கிர குணத்திற்கு அப்பனும் உடன் பிறந்தானும் கூட விதிவிலக்கில்லை. இப்படிக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும்; இது பொதுவானதன்று. ஆனால் இது போன்ற பல புகார்கள் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நான் பார்த்த வேலை அத்தகையது. கங்காவின் மாமாவின் செய்கைகளை வேறு யார் இப்படி எழுதியிருக்கமுடியும்? ஆனால் ஜானகிராமன் எழுதிய மோகமுள் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மோக முள் - அடிமனத்தில் ஒளிந்திருக்கும் உணர்வைக் கொக்கி போட்டு வெளியே இழுத்து , அந்தத் தவிப்பை வெளிக்காட்டிய விதம் இன்றும் கதை உலகில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றது. உளவியல் கதைகளுக்கு ஆயுள் அதிகம். படிப்பவனுக்கு அவஸ்தை கொடுத்தாலும் உண்மைகள் உறங்காமல் என்றாவது கண் விழிப்பதைப் பார்க்கும் பொழுது வியக்காமல் இருக்க முடியாது. அந்தரங்கத்தைச் சுண்டி இழுப்பவை. ஜெயகாந்தனின் கதைகள் எல்லாவற்றிலும் மனிதனின் அந்தரங்கத்தைத் தோலுரித்துக் காட்டுவதைப் பார்க்கலாம். அவர் அதில் சமரசம் செய்துகொள்ளமாட்டார். பெண்களுக்கு மத்தியில் ஒன்று பேசப்படுவதைக் கேட்டிருக்கின்றேன் -“சின்னப் பசங்களைக் கூட நம்பி வெளியில் போகலாம். ஆனால் கிழங்களை நம்ப முடியாது “ எல்லோரும் அப்படியல்ல; ஆனாலும் பெண் மனத்தில் அப்படி எண்ணம் வந்துவிட்டதற்கு அவள் சின்னப் பெண்ணாக இருக்கும் பொழுது வயதானவர்கள் யாராவது சில்மிஷம் செய்திருக்கலாம், அல்லது அவள் சிநேகிதிக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம், அது மனத்தில் தங்கி இப்படி ஒரு கருத்தை அவள் சுமந்து கொண்டிருக்கலாம். “சில நேரங்களில் சில மனிதர்கள்” தலைப்பே தனித்துவம் கொண்டது. இது திரைப்படமாக வந்தபொழுது , அதில் அத்தனை பாத்திரங்களும் உயிர் பெற்று நடமாடினர். குறிப்பாக லட்சுமி, கங்காவாகவே மாறிவிட்டார். பொதுவாகப் பிரபலமான கதைகள் திரைப்படமாகும் பொழுது ஒரு விமர்சனம் வரும். “கதை மாதிரி சினிமா இல்லே” ஆனால் இந்தப் படம் மட்டும் சிறப்பாக வந்திருந்தது. ”கங்கா எங்கே போகின்றாள் ?” இது பெற்ற சிறப்பைப் பெறவில்லை. ஆங்கிலத்திலும் இப்படித் தொடர் நிலையில் கதைகள் வரும்பொழுது மூன்றாவதில் தொய்வு காணலாம். கல்கியின் நினைவு இங்கே வருகின்றது. பார்த்திபன் கனவு எழுதினார். அதில் அவர் காட்டும் சிற்பக்கூடத்தில் பிறந்தது சிவகாமியின் சபதம். ஓவியக் கூடத்தில் பிறந்தது பொன்னியின் செல்வன். அவரே பொன்னியின் புதல்வர். நாட்டிய மங்கைக்கு உயிர் கொடுக்கவும், நரசிம்ம வர்மனை இளைஞனாக்கிக் காதலனாக்கவும் ஆசை வந்துவிட்டது. அதே போல் பார்த்திபன் வரைந்தஓவியங்களில் சோழர் காலத்துப் பெருமைகளைக் கண்டார். அவருக்குத் தெரிந்த செய்திகள் அனைத்தையும் யார் வாயிலாகவாவது பேச வைத்தார். எண்ணங்களைச் சுமக்கும் பொழுது எழுத்தாளன் பிரசவ வேதனையில் தவிப்பான். கோலைப் பிடித்துவிட்டால் வார்த்தைகள் குதித்தோடி வெள்ளமென வடிந்தோடும். மனித உணர்வுகளை அப்படியே ஓவியமாக்குவதில் சிறந்தவர் ஜெயகாந்தன். ஒரு கதை, இரு கதை என்று மற்றவர் எழுதியிருக்கலாம்ம். ஆனால் ஜெயகாந்தனின் கதைகளை அனைத்தும் உளவியலும், சிந்தனைத் திறனும் கலந்தவை. ஒரு மனிதரின் உணர்வுகளின் தாக்கமே ”ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்”. அவர் எழுதிய பல கதைகள் பிறந்தவிதம் பற்றி என்னுடன் மனம் விட்டுப் பேசி இருக்கின்றார். எங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவாக எந்த நிகழ்வும் கிடையாது. அந்தரங்கம் புனிதமானது. ஆனாலும் தகுந்த நண்பர்கள் இருந்தால் அந்த அறையைத் திறந்து காட்டுதல் சரியே. கௌசல்யா ஒரு படித்த பெண்மணி. வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களும் நடித்துவந்தார். மிகச் சிறந்த நடிகை. சேஷாத்ரி குழுவில் இருந்தார். இவர் நடித்த தனிக்குடித்தனம் பின்னால் கே. ஆர். விஜயா நடித்த திரைப் படமாகியது. படம் வந்த காலத்தில் கௌசல்யாவைப் போல் விஜயா அந்த அளவு சிறப்பாக நடிக்கவில்லை என்பர். ஜெயகாந்தனிடம் செயலாளராகப் பணியில் சேர்ந்தார் கௌசல்யா. நடிப்பையும் விடவில்லை. இரு அறிவு ஜீவிகளின் சங்கமம்; ஜெயகாந்தனின் துணைவியானார். அப்பொழுதும் சில நாட்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை அழைத்துச் செல்லும் ஜெயகாந்தன் சபாக்களின் வெளியிலேயே இறக்கிவிட்டு வந்து விடுவார். நாடகங்கள் பார்க்க மாட்டார். கௌசல்யா புத்திசாலிப் பெண்மணி. அவராகவே நடிப்பதை நிறுத்திவிட்டார். ஜெயகாந்தன் அவர் நடிப்பதைத் தடுக்கவில்லை. சில உணர்வுகள் அவர் கதையில் காணலாம்.பிறருக்கு அறிவுரை கூறுவதை விரும்ப மாட்டார் ஜெயகாந்தன். அந்த சொல்லே அவருக்குப் பிடிக்காது. பிறர் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றால் அவர் பேச்சில் அவரின் மறுப்பு இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். கேட்பவர் முதலில் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சிந்தித்துப் பார்க்கும் பொழுது பின்னர் அதன் யதார்த்தம் புரிந்துவிடும். அவரிடம் போலித்தனம் கிடையாது. முரட்டுத்தனம் உண்டு. நுனிப்புல் மேய்வதைப் போன்று படிப்பவர்களுக்கு அவர் காட்டும் பல அரிய செய்திகள் புலப்படாது. ஒவ்வொரு வரியையும் வார்த்தையையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும்.சில சமயங்களில் மனித உணர்வுகளின் அரிச்சுவடி ஜெயகாந்தன். பல சமயங்களில் வாழ்வியலின், சமூக இயலின் அகராதி. சில நிகழ்வுகளைக் கூறுவேன். அவரின் பார்வையையும் விளக்குவேன். புரிந்து கொள்வீர்கள். அதற்குமுன் இன்னும் கொஞ்சம் அவர் கதையைப் பற்றிப் பேச வேண்டியிருக்கின்றது. ஒரு நாள் நானும் என் நண்பர் நிருபர் நாராயணனும் ஜெமினி கணேசனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கே நம் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது.
பகுதி 507.01.2010 ஜெயகாந்தன் தன் பெயரிலேயே காந்தத்தை வைத்திருக்கின்றார். அவர் பெயரைப் பார்க்கும் பலருக்கும் பதிவை எட்டிப் பார்க்கத் தோன்றுகின்றது. அவரைப் பற்றிப் பல கோணங்களில் எழுதியுள்ளார்கள். சாதாரண நிலையிலும் ஒரு விஷயத்தைக் கூறினால் அவர் அதனை எவ்வளவு யதார்த்தமாக எடுத்துக் கொள்கின்றார் என்பதை உதாரணங்களுடன் கூற விரும்புகின்றேன். அவர் எழுத்துக்களைத் தொடர்ந்து ஊன்றிப் படிப்பவருக்கு எப்பொழுதாவது ஓர் அனுபவம் ஏற்படும் -“எப்படி நம்மைப் புரிந்து கொண்டு எழுதுகின்றார்” என்று. அவர் எழுத்தில் எங்கோ நம் நிழலும் பதிவாகியிருக்கும். நிருபர் நாராயணன் womens weekly, womens era போன்ற பல ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு நிருபர். எங்கள் இருவர் தொழிலுக்கும் நாராயணனுக்கு என் மீது மதிப்பு அதிகம். தன் நண்பர்களிடம் என்னைப்பற்றி நிறைய சொல்லி இருக்கின்றார். அவரால் ஆர்வமூட்டப் பட்ட பலரிடமும் என்னைக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்துவார். அப்படித்தான் ஜெமினி கணேசனின் அறிமுகம் கிடைத்தது. பிறர் கூறி அறிவதற்கு முன் நானே அவர்களுடன் பழகியதால் அவர்கள் தெளிவையும், எதையும் ஆணித்தரமாகக் சொல்லும் விதமும் கண்டு வியந்திருக்கின்றேன் .சில சமயம் ஜெயகாந்தனிடம் பேசுகின்றோமோ என்ற நினைவு கூட வந்திருக்கின்றது. கே.கே. நகர் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடன் கொஞ்ச நேரமாவது தனித்து அமர்ந்து பேசுவேன். நல்ல சிந்தனையாளர். நினைப்பது மட்டுமல்ல அதனை வெளிப்படுத்தும் முறையும் வியக்க வைக்கும். என் கணவரையும் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தியிருக்கின்றேன். அவரும் கௌசல்யாவின் சிந்தனையாற்றலையும், பேசும் தன்மையையும் புகழ்ந்திருக்கின்றார். ஜெயகாந்தன் அதிகமாக எழுதிக் கொண்டிருந்த காலம். அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்க்கும் பொழுது ஒரு கற்பனை என் மனத்தில் நிழலாடும். பாரதம் எழுத வியாசருக்கு உதவியவர் விநாயகப் பெருமான். வியாசரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத வேண்டும். அதுவும் புரிந்து எழுத வேண்டும். ஜெயகாந்தனின் படைப்புகள் எதுபற்றிக் கேட்டாலும் வரிக்கு வரி கௌசல்யாவிற்குத் தெரியும். ஜெயகாந்தன் அவர்களைப் பாராட்டும் பொழுது அவருக்குப் பக்கத் துணையாயிருக்கும் கௌசல்யாவைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. நம் நாயகர் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை பெற்றுப் பிழைத்து வந்தபின், அவரின் தேவை இன்னும் கூடுதலாயிற்று. பார்வையாளர்களைக் குறைத்துக் கொண்ட காலத்தில் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள அறிவுசார்ந்த ஒரு தோழமை அவசியம் வேண்டும். உடல்நலம் கருதி வெளியிலிருந்து வருபவர்களைச் சிறிது காலம் குறைத்துக் கொண்டனர். இன்று தோழியாய் இருந்து அந்த அறிவு ஜீவியைப் பாதுக்காத்து வருகின்றார். ஜெயகாந்தனைப்பற்றிப் பேசும் பொழுது அந்தப் பெண்மணியை என்னால் நினைக்காமல் இருக்க முடியாது. தொடரிலும் அவர் பெயரைப் பதிவு செய்ய வேண்டியது என் கடமை என நினைத்தேன். இம்முறை சென்னைக்குச் சென்றால் நான், ஜெயகாந்தன், கௌசல்யா மூவர் மட்டும் உட்கார்ந்து நிறையப் பேசவேண்டும் என்று இப்பொழுதே கூறிவிட்டேன். இருவரும் சிரித்துக் கொண்டே சம்மதமும் தெரிவித்துவிட்டனர். முதியவள் நான் முணுமுணுக்க நிறையச் செய்திகள் இருக்கின்றன; அவர்களிடம் புலம்ப வேண்டும். இனி நம் ஜெயகாந்தனைப் பார்க்கலாம். திடீரென்று அவர் எழுதிய கதைகள் ஒன்றிரண்டாவது படிக்க ஆசை வந்துவிட்டது. கண்களில் முதலில் பட்டது “யுக சந்தி” கௌரிக்குப் பத்துவயதில் திருமணம், பதினாறு வயதில் விதவை.என் பெரியம்மா மீனாட்சியம்மாளின் நினைவு வந்தது. 7 வயதில் திருமணம். 21 வயதில் விதவை. மிகவும் அழகாக இருப்பார்கள். நீண்ட கூந்தலாம். மொட்டையடித்து மூளியாக்கப் பட்டார்கள்.சாகும் பொழுது 83 வயது. 80 வயது வரை புகுந்த வீட்டில், கணவன் இல்லாத வீட்டில் கடுமையாக உழைத்தார்கள். 81வயதானது.புகுந்த வீட்டார் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. அது ஒரு பெருங்கதை. பிறகு சொல்கின்றேன். கௌரிப்பாட்டியைப் பார்ப்போம். கௌரிப் பாட்டிக்குக் குழந்தை இருந்து பேரன் பேத்திகளும் இருந்தனர். ஆசார வாழ்க்கை. அதாவது கட்டுப்பாடான வாழ்கை. காலம் சுழல்வதை யாராலும் மாற்ற முடியுமா? அவள் பேத்தி கீதா திருமணமாகிப் பத்து மாதங்களில் விதவையாகிப் பிறந்தகம் வந்து பாட்டியின் மடியின் முகம் புதைத்துக் கதறி அழுத பொழுது பாட்டி அவளை அரவணைத்துக் கொண்டாள். அதற்குப் பாசம் மட்டும் காரணமன்று. இறந்த காலத்தின் நிகழ்காலப் பிரதிநிதியாய் அவளில் தன்னைக் கண்டாள்.
பகுதி 610.01.2010 குருவம்மா ஒரு கிராமத்துப் பெண். அவள் பட்டப்படிப்பை முடித்து என் துறையில் பணியாற்றச் சேர்ந்தாள். சில மாதங்களில் அவள் வாழ்வில் காதல் புகுந்தது. செய்தி அறிந்த அவள் தந்தை கொதிப்படைந்து அவளைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சொந்தக்காரப் பையன் ஒருவனுடன் கட்டாயத் திருமணம் செய்து முடித்துவிட்டார்.
குற்றவாளிகளிடமும் குறையை மட்டுமே கண்டேன். எனவே என்னால் யாரையும் நேசிக்க முடிந்தது. பல காரணிகளில் ஜே.கேயும் ஒருவர். காழ்ப்புணர்ச்சி வேண்டாம். மறக்க முடியவில்லையா, மன்னித்துவிடுங்கள். அடுத்து ஒரு காவியக் காட்சி காட்டப் போகின்றேன். பகுதி 710.01.2010 நயமான காட்சி ஒன்றைக் காட்டுவதாகச் சொன்னேன். அதற்குள் நம்மவரின் கதைபடிக்க ஆசை பிறந்துவிட்டது. படிக்க ஆரம்பித்தால் உடனே முடித்து வைக்கும்படியாகவா எழுதுவார் ! நாம் அதில் லயித்து விடுவோம். நம் மனக்குதிரையும் ஓட ஆரம்பிக்கும். நான்மட்டும் விதிவிலக்கா? படித்த கதை - ஒரு பிடி சோறு. நான் கொடுக்கும் பழைய சோறு வேண்டாம். வயிறு இருக்கின்றதே. பசிக்கச் சோறு வேண்டும். விருந்தன்னமா வேண்டுகின்றார்கள்?!. வேலை இல்லையென்றால் பசிக் கொடுமை. அதனைப் போக்க அவளுக்குத் தெரிந்தது இன்னொரு வியாபாரம். அவளிடம் இருந்த முதலீடு அவள் உடம்புதான். விபச்சாரம் அவள் தொழிலன்று. உடல் இச்சைக்காகவும் அவள் கடை விரிக்கவில்லை. பணம் தேவையென்றால் எவனாவது வருவான், அவன் கேட்பதைக் கொடுத்து இவளுக்கு வேண்டியதைப் பெறுவாள். இது தினசரி வியாபாரமும் இல்லை. அவ்வப்பொழுது அவள் இந்தத் தொழிலையும் செய்து வருவாள். அவளுக்கு ஒரு மகன் மண்ணாங்கட்டி. .முகவரி இல்லாத ஒரு மண்பொம்மை. . இந்த இருவரின் வாழ்க்கைதான் ஒரு பிடி சோறு. இதைப் படித்தவுடன் நான் எங்கோ பயணம் சென்று விட்டேன். ஜெயகாந்தன் மாளிகைவாசியல்ல. மண் குடிசைக்குப் போவார்; அங்கு பழைய சோறு சாப்பிடுவார். அப்படிப் போய்த்தான் கதை எழுத வேண்டுமா என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. அவர் கதையா எழுதினார்? அவர் எழுத்தில் உடன் வாழ்ந்து நம்மையும் உணரவைக்கின்றாரே!. அந்த சக்தி அவருக்கு எப்படி கிடைத்தது?அவருடன் போய் அவர் உணர்வுகள் ஓடும் பாதையை நேரில் பார்த்து உணர்ந்தவள் நான்.எனக்கு எழுதத்தெரியாது. ஆனால் உணர முடியும். அவருடன் நான் சென்ற பயணமும், நான் உணர்ந்ததும் இத்தொடரில் எழுதுவேன். என் சொந்த அனுபவம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். சமுதாய அக்கறையுள்ளவர்கள், சீர்மைப் படுத்த என்ணுகின்றவர்களின் சிந்தனை எப்பொழுதும் சமூகத்தையே சுற்றிவரும். முதன் முறையாக நன் என் பத்து வயது மகனைக் கூட்டிக் கொண்டு பம்பாய் சென்றிருந்தேன். அது ஒரு தொழில் அதிபர் வீடு. அவர் தங்கை என் துறையில் வேலை பார்த்து வந்தாள். அவளின் அழைப்பின் காரணமாகச் செல்ல முடிந்தது. “அம்மா. உங்களுக்கு பம்பாயில் எங்கெல்லாம் போக வேண்டும் என்று சொல்லுங்கள். கிருஷ்ணன் உங்களைக் கூட்டிச் செல்வார். அவரை லீவு போடச் சொல்லுகின்றேன். எந்த நேரமானலும் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள். உங்கள் விருப்பம் சொன்னால் போதும்.” “எனக்கு தாராவி போக வேண்டும். அங்குதான் தமிழர்கள் நிறைய இருக்கின்றார்களாம். அவர்கள் வீடுகளைப் பார்க்க வேண்டும்” “இந்தத்தமிழ் நாட்டு வாசிகளுக்கே ஒரு பைத்தியம். தமிழன் மட்டும்தானா மனுஷன், மத்தவங்களையும் பாக்கத் தோணலியா ?”, கிருஷ்ணன் கிண்டலடித்தார். நானும் சிரித்துவிட்டு,“பிழைக்க வந்த இடத்தில் அவர்கள் ஒண்டிக் கொண்டு வாழ்கின்றார்களாம். அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்க்க வேண்டும். அங்கு ஒரு சாராயக் கடையில் பெண்ணே வியாபாரம் செய்கின்றாளாம். அந்த சாராயக் கடைக்குப் போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்க வேண்டும். அங்கு அவர்களுக்கு ஒரு சங்கக் கட்டடம் இருக்கின்றதாம். அங்கும் போக வேண்டும் “ என்றேன் “அப்பா சந்திரன், இந்தம்மா என்னைச் சாராயக் கடைக்குக் கூப்பிடறாங்க. அங்கெல்லாம் என்னால் போக முடியாது. சாராய பாட்டில் வேணும்னா நான் வாங்கிட்டு வரேன். ஏம்மா, பிள்ளையார் கோயில் இங்கே விசேஷம் அங்கே போகணுனு தோணல்லியா? கிருஷ்ணனின் ஆத்திரம் புரிந்தது. நல்ல மனிதர். நான் விளக்கவேண்டும் “கிருஷ்ணன் பிள்ளையார் இல்லாத இடம் ஏது? அதையும் பின்னால் பார்க்கலாம் .மஹாலட்சுமி கோயிலுக்கும் போகவேண்டும்.. நான் ஒரு சமூக சேவகி. வாழும் சூழலைப் பார்க்க வேண்டும். .நான் எங்கு சென்றாலும் குடிசைகள் பக்கம்தான் போவேன். அவங்க எப்படி வாழறாங்கண்ணு பார்க்கணும். எனக்குக் குடிக்க சாராயம் வேண்டும்னா சொல்றேன் “என்றவுடன் எல்லோரும் சிரித்துவிட்டார்கள் “அப்புறம் வேறு எங்கெல்லாம் போகணுன்ம்னு சொல்லிடுங்கோ. அதுக்கேத்தாப்பலே ஏற்பாடு செய்யணும் “ என்றார் சந்திரன் “சிவப்பு விளக்கு ஏரியா போகணும்.” “அய்யோ” என்று கத்திவிட்டார் கிருஷ்ணன். சந்திரன் மட்டும் என்னை சுவாரஸ்யமாகப் பார்க்க ஆரம்பித்தார். “அங்கே வீடுகளுக்குள் போய் அந்தப் பெண்களுடன் பேசணும்” “அது ரொம்பக் கஷ்டம்”என்று முறைத்தார் கிருஷ்ணன். “அதுக்கேத்த ஆட்களைப் பிடிச்சு போய்ப் பார்க்கலாம். அம்மா கதை எழுதப்போறாங்க போல இருக்கு.”என்று சந்திரன் கூறவும் நான் மறுத்துத் தலையாட்டினேன். “பெண்கள் படும் கஷ்டங்கள் எனக்குத் தெரியணும். என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாக்கணும் “ என்றவுடன் சூழ்நிலை அமைதியாயிற்று “ இன்னும் என்னவெல்லாம் பார்க்கணும்?” “இதுவரை நைட் கிளப் பார்த்ததில்லை. ஒண்ணு பாக்கணும். பாதி ராத்திரியில் பிளாட்பாரத்தில் தூங்குவாங்களே, அவங்களைப் பாக்கணும். . எழுப்பி பேசல்லாம் வேண்டாம். “ கிருஷ்ணன்தான் நெளிந்து கொண்டிருந்தார். அவர்தானே கூட வரப் போகின்றவர். இந்த அனுபவங்களை விரிவாக நினைவலைகளில் பதிய இருப்பதால் இதற்கு மேல் எழுதவில்லை என்னை யாரும் இதனைப் பார்த்து அறிக்கை கேட்கவில்லை. எங்கெல்லாம் துயர்கள் என்று கேள்விப் படுகின்றேனோ அங்கே அவைகளைப் பார்க்க எண்ணுவது என் இயல்பு. எனக்கும் ஜெயகாந்தனுக்கும் குடிசை வாழ்க் குணங்கள், அதாவது போலித்தனம் இல்லாத வாழ்க்கை. அவர் எழுத்தில் வடித்தார். நான் முடிந்த அளவு செயலில் இறங்கினேன். அவருக்கு எப்பொழுதும் வெற்றி. ஆனால் நான் வெற்றியையும் தோல்வியையும் சந்திக்க வேண்டிவரும். ராசாத்தி செய்ததை எவ்வளவு நாசுக்காகச் சொல்லுகின்றார். படுக்கை அறைக் காட்சிகளை அலங்காரப்படுத்தி காட்டவில்லை. ஜானகிராமன் எழுதிய மோக முள்ளை இப்பொழுது எடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தக் கருத்தே ஒரு முள், மோக முள். ஓர் இளைஞனின் மனத்தவிப்புதான் முழுவதும். “இதுக்குத்தானா இவ்வளவும் “ அப்பப்பா, ஆமாம், இதுக்குத்தான் இவ்வளவு தவிப்பும். ஒரு சொல்லில் புரியவைக்கும் விந்தை மனிதர்கள் காலத்தில் வாழ்ந்த பெருமையும் உண்டு. பெண்ணின் உடலை நான்கு பக்கங்களில் பிரித்துப் போட்டு அசிங்கப் படுத்தும் காலத்திலும் வாழ்கின்றோம். சின்னப் பிள்ளைகளும் புத்தகங்களைப் படிக்க முடியாவிட்டாலும் படம் பார்க்க்ன்றார்கள். அவர்களால் முழு உடம்பைப் பார்க்க முடியாது. திகைப்பை விதைக்கின்றோம். மனத்திற்குள் ஒட்டவைத்துப் பார்க்கும் காலத்தில் வாழ்கின்றோம். அடுத்து புதுச்செருப்புக் கடிக்கும். ஜெயகாந்தா, நான் கேட்கத் துடிக்கும் கேள்வியை நீ கேட்டுவிட்டாய். உனக்கு டாக்டர் பட்டம் கொடுத்து அந்த பட்டத்திற்குப் பெருமைதேடிக் கொண்டுவிட்டான் மனிதன். அடுத்து அந்தச் செருப்பைப் பார்ப்போம்.
பகுதி 817.01.2010 நந்தகோபாலுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகிவிட்டன. ஆனாலும் கணவன் மனைவிக்கிடையில் சுமுகமான உறவில்லை. அவன் விருப்பப்படி அவள் ஈடு கொடுக்கவில்லை. அவனுக்கு எரிச்சல். அவளுக்கோ அலட்சியம். இப்படி இருந்தால் குடும்பம் உருப்படுமா? ஆத்திரத்தில் அவனுக்கு உறக்கம் வரவில்லை. நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியில் செல்கின்றான். மனைவியோ அலட்சியமாகக் கதவைச் சாத்திவிடுகின்றாள். அதுவும் அவன் ஆண்மைக்குக் கிடைக்கும் அடியாக உணர்கின்றான். பிள்ளைப் பருவ நினைவுகள் அவ்வப்பொழுது அவன் நினைவில் வந்து முள்ளாய் உறுத்தும். இரவு நேரத்தில் அம்மா சத்தம் போட்டுக் கத்துவதும் , அப்பா அடிப்பதும் எல்லாம் ஒலிகளாய் இவன் இருக்குமிடம் வரும். பொழுது புலர்ந்துவிட்டால் அதே அப்பாவும் அம்மாவும் ஒன்றும் நடக்காதது போல் பேசும் காட்சிகள் உணர்ச்சியில் ஆழமாகப் பதிந்துவிடும். இன்றும் அவைகள் அவனை ஆட்டிப்படைக்கின்றன. “பெற்றோர்கள் சண்டையைவிடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனத்தை மிகவும் அசிங்கப் படுத்தின” இது ஜெயகாந்தனின் வார்த்தைகள். விமர்சிக்கலாம். ஆனால் இது யதார்த்தம். என் பிள்ளைப் பருவத்திலும் எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது சரியா தப்பா என்பதில்லை. குழந்தைகள் மனங்களில் எப்படி ஆழமான புண்களாகப் பதிந்துவிடுகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். அவன் வீட்டைவிட்டுப் போவதும் பிடிக்கவில்லை. ஆனாலும் கடந்தகாலப் புண்களும் இக்கால அடிகளும் அவனைத் துரத்திவிட்டன.அவன் இப்பொழுது போகும் இடம் எங்கே? அதுதான் அவன் கடந்தகாலம். திருமணமாகும் முன் அவனுக்கு அறிமுகமாகின்றாள் கிரிஜா. ஏதோ சின்னச் சின்ன வேலை செய்கின்றாள். உடன் பிறந்த ஒருவனும் எங்கேயோ இருக்கின்றான். ஒற்றை மரமாக ஒருத்தி.எப்படியோ காலம் நகர்கின்றது. மரபு வாழ்க்கை அவளுக்கில்லை. பாதையில் வரும் அனுபவங்களை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கின்றாள். நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கின்றது” இது ஜெயகாந்தன். ஒருத்தியல்ல, ஆயிரக் கணக்கான பெண்களை இது போன்ற நிலையினில் பார்த்திருக்கின்றேன். நந்தகோபாலுக்கும் ஒரு நாள் உறவு ஏற்பட்டது. சிறுகதை தொடர் கதையாயிற்று.வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இவள் வீட்டில் சாப்பிட ஆரம்பித்தான்; சொல்லப் போனால் குடும்பமே நடத்தினான். அவள்தான் இவனைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப் படுத்தினாள். ஆனால் அவனுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங் களுக்குப் பிறகு இப்பொழுது கிரிஜாவைத் தேடி வந்து விட்டான். அவளிடம் தன் உள்ளக் குமுறலைக் கொட்டுகின்றான். அப்பொழுது கிரிஜா பேசுவதில்தான் ஜெயகாந்தனின் தனித்துவம் தெரிகின்றது. அந்தக் காலத்தில் வேறு யாரும் இப்படி எழுதத் துணிந்ததில்லை. “பாருங்க, வய்பா வர்ரதற்கு டிரெய்ண்ட் ஹாண்டா கேக்குறாங்க.? நான் டிரைண்ட் ஹாண்ட். அதுதான் என் டிஸ்குவாலிகேஷன் “. இதைவிட ஒரு சாட்டையடி இருக்க முடியுமா ? ஜெயகாந்தனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததால் , அதைக் கொடுப்பவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள். அடுத்து கிரிஜா கூறுவது ஆண்மகனுக்கு ஒரு பாடம். “செருப்புகூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ !. அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களா?!” இதைவிடப் படிப்பினையை எளிமையாகக் கூறமுடியுமா? “புதுச்செருப்பு கடிக்கும்” கதையைப் படிப்பவரிடமிருந்து இது வெறும் மிகையான கதை என்று உடனே ஒரு விமர்சனம் வரும். அய்யா, பெரியோர்களே, இது இப்பொழுதும் தொடர்கதை. பத்திரிகையில் வருபவைகளைச் சொல்லவில்லை. இது போன்ற பிரச்சனைகள் என்னிடமே நிறைய வந்திருக்கின்றன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். ராஜு கணிணியில் பட்டம் பெற்று டில்லியில் வேலை பார்த்து வந்திருக்கின்றான். அவனுக்குத் திருமணமாகி இதே போன்று அவனுடைய இயல்புக்கு ஒத்துழைப்பு கிடைக்காததால் அவளுக்கு உடல் நோய் என்று சொல்லிப் பிறந்தகம் அனுப்பி விட்டான். அத்துடன் விவாகரத்துக்கும் முனைந்துவிட்டான். தனிமையில் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அரட்டை மூலம் அறிமுகமானான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கதையைக் கூறினான். கொஞ்சம் பழகட்டும் என்று காத்திருந்தேன். நடந்த சம்பவங்களைக் கூச்சப்படாமல் சொல்லச் சொன்னேன். என் முதுமையும் அணுகுமுறையும் அவன் நடந்தவைகளை அப்படியே ஒன்றுவிடாமல் கூறினான். இவனுக்கு அவசரம், அவளுக்கு மிரட்சி. இது மட்டும் காரணம் அன்று.இன்றைய ஊடகத்தாக்கங்களும் சூழலும் இளைஞர்களை கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்து நிஜ வாழ்க்கையில் அவர்களைப் புரட்டி எடுக்கின்றன! இளைஞன் பெண்ணின் விழிகளையும் இதழ்களையும் வருணித்துத் திரும்பத் திரும்பக் கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்றான். கொஞ்சம் முதிர்ந்தவன், அனுபவப்பட்டவன் காதலென்று காம சூத்திரத்தை அறுவை செய்து கூறு போட்டுக் கொண்டிருக்கின்றான். இளைஞர்களில் நிலைபற்றி சில சம்பவங்களைக் கூற விரும்புகின்றேன். இவள் கிழவி, இவளுக்கு எப்படி இக்கால இளைஞர்களைத் தெரியும் என்ற கேள்வி எழும்புமே?! சமுதாயப் பணிக்கு ஓய்வு கிடையாது. அந்தப் பணியில் வயதுகள் எல்லையும் கிடையாது.கருவில் உருவாவதற்கு முன்னே அந்த நிலத்தைப் பண்படுத்தும் முதல் பணி ஆரம்பமாகி விடுகின்றது. கணிணி கற்க ஆரம்பித்தவுடன் அரட்டையில் கூடிய இளஞர்களை வைத்து ஓர் அமைப்பை ஒருவன் கதை. தப்பு, கதையல்ல நிஜம் ஒரு நாள் நள்ளிரவில் என் தொலைபேசி ஒலித்தது. எடுத்தால் மோகன் கோபத்துடன் பெண்களைத் திட்ட ஆரம்பித்தான். (உண்மைப் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை) பொறியியல் கல்லூரியில்படிக்கும் பொழுது நான்கு ஆண்டுகளாகக் காதலியாக இருந்தவள் பிரிந்து விட்டாள். இவனுக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. அமெரிக்காவில் வேலை பார்க்கின்றவன் அவளுக்குப் புருஷனா இருக்கவேண்டும் . அவள் பெற்றோர் அமெரிக்கா மாப்பிள்ளையைக் காட்டவும் மனம் மாறி விட்டாள். “வாழ்க்கையில் இது சகஜம். ஸாரி,என் கல்யாணத்திற்கு வா” என்று கூறிப் பத்திரிகையைக் கொடுத்து விட்டுப் போய் விட்டாள்.இவன் குடிக்க ஆரம்பித்துவிட்டான். அன்று அவன் பிறந்த நாள். காதலியைத் திட்ட வேண்டும; பெண்ணினைத்தைத் திட்ட வேண்டும். அதனால் என்னக் கூப்பிட்டுத் திட்டுகின்றானாம். “சரி திட்டு” என்றேன். பேசிக் கொண்டிருந்தவன் அழ ஆரம்பித்த்து விட்டான். முடிந்தால் உடனே , வீட்டிற்கு வா என்றேன். விடிந்த பிறகு வருவதாகச் சொன்னான். காலையில் அவன் வந்த பொழுதும் போதை தெளியவில்லை. என்னைப் பார்க்கவும் சத்தம் போட்டுக் கதறினான். அவன் புரிந்து கொண்ட காதல்பற்றிப் பேசினான். அவன் ஏக்கத்தைப் புலம்பினான். நான் பொறுமையாகக் கேட்டேன். பிறகு அம்மா என்று ஓடிவந்து என் மடியில் தலை வைத்துக் குமுறினான். நான் ஒன்றும் பேசவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கொதிப்பு அடங்கியது அன்று முதல் தினமும் வர ஆரம்பித்தான். கதையிலும் சினிமாவிலும் வரும் காதல், நிஜ வாழ்க்கை இவைகளைப்பற்றி யதார்த்தமாகப் பேச ஆரம்பித்தோம். அறிவுரைகள் யாருக்கும் பிடிக்காது. மனம்விட்டு எதையும் பேச முடிகின்ற இடத்திற்குப்போகத் தயக்கம் இருக்காது என்று சொல்வதை விட அங்கு செல்ல ஆர்வம் பிறக்கும். அவனுக்கு நம்பிக்கை பிறக்க ஆரம்பித்தது. ஏமாற்றத்தைத் துடைத்து விட முடியாது, அவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. குழந்தையாய் மகிழ்ந்து எனக்குத் தெரிவித்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. அழகான மனைவி. புகைப்படம் அனுப்பினான். தொலைபேசியில் கூப்பிட்டான். ’அம்மா’ என்றான் அவனுக்குப் பேச்சு வரவில்லை. “சரிடா கண்ணே, எதுவும் பேச வேண்டாம் சந்தோஷமா இரு என்றேன். இப்பொழுது அவனுக்குக் குழந்தைப் பிறந்திருக்கின்றது. உடனுக்குடன் எனக்கு அவன் செய்தி அனுப்பிவிடுவான். எங்கள் சந்திப்புகளால், என்னுடைய யதார்த்த அணுகுமுறைகளால் ஒருவன் செத்துவிடாமல் இன்று மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தேவதாஸ் என்று தன்னை நினைத்துக் கொண்டு காதலுக்காகச் சாவதுத்தான் சரி என்று நினைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். ஊடகங்களின் தாக்கம் இளைஞர்களை அதிகம் பாதிக்கின்றது. பெரியவர்களும் அந்தக் காலத்தை நினைத்துக் கொண்டு பிள்ளைகளின் மாற்றங்களைப் புரிந்து கொள்லாமல், சரியாக வழி நடத்த முயலாமல் இருப்பதும் ஒரு காரணமாகும். Adolescent psychology ஐப் பொதுப்படையாகப் பேசிவிட முடியாது. ஒவ்வொரு பிரச்சனையையும் தனியாகப் பார்க்க வேண்டும்..உளவியல் என்பது சாதாரணமானதன்று. இன்னொருவன் பிரச்சனையால் போலீஸ் ஸ்டேஷன்வரை போக வேண்டிய சூழல் வந்தது.
பகுதி 9வாழ்க்கை எப்பொழுதும் யதார்த்தமாக இருந்துவிடுவதில்லை. திடீர்த் திருப்பங்களும், சில நேரங்களில் அதிர்ச்சிகளும் காண நேரிடலாம். பல அனுபவங்கள் பெற்ற என்னையே ஆட்டிவைத்த ஓர் நிகழ்வு. மேலோட்டமாகப் படித்தால் “இந்தம்மா இப்படி வம்பை விலைக்கு வாங்கியிருக்க வேண்டாம்” என்று எண்ணத்தோன்றும். அது தவறில்லை. அதுதான் யதார்த்தம். ஆனால் நான் அச்சப்பட்டு விலகியிருந்தால் சில உயிர்கள் போயிருக்கும். சிலர் சிறைகளுக்குப் போயிருக்கவேண்டும். நள்ளிரவு. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று வீட்டின் காலிங் பெல் அடித்தது. நான் வீட்டில் தனியாக இருந்தேன். ஏற்கனவே போலீஸ் துறையில் வேலை பார்க்கின்ற ஒரு நண்பர் கூறியது நினைவிற்கு வந்தது. “சமூக சேவைன்னு இப்போதும் ஏதாவது செய்துகிட்டிருக்கீங்க. ராத்திரி யார் வந்து உதவின்னு கேட்டு வந்தா கதவைத் திறக்காதீங்க. தெரிஞ்ச பசங்க வந்தாலும் திறக்காதீங்க. சில புகார்கள் வர ஆரம்பிச்சிருக்கு. சில பணக்காரப் பசங்க கூடச் செலவுக்கு அதிகமா பணம் வேண்டி, திருட ஆரம்பிச்சிருக்காங்க. தனியா இருக்கறதுனாலே எதையும் செய்யலாம்”. இந்த சம்பவம் நடந்தது 2002. நான் எழுந்திருந்து போய் விளக்கு போட்டு பார்த்தேன். முன்னால் கம்பிகளுடன் கூடிய ஜன்னல். வந்திருந்தவன் என் அன்புக்குரிய செல்லப் பிள்ளை சிவா. துடிதுடிப்பு அதிகம். அவன் பக்கத்தில் வேறு யாரோ ஒரு பையனும் நின்று கொண்டிருந்தான். ”ஏண்டா சிவா, வீட்டுக்கு வர்ர நேரமா இது. காம்பவுண்ட் சுவத்தில் ஏறிக் குதிச்சு வந்திருக்கியே. நல்ல வேளை நான் கிழவி. இல்லேனா ஊர் என்ன நினைக்கும். கதவைத் திறக்க மாட்டேன், போய்த் தொலை.” ”அம்மா, கோவிச்சுக்காதீங்க. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். உங்க கிட்டே என்ன செய்யறதுன்னு கேட்க வந்திருக்கேன். ஒருத்தர் உயிர் ஆபத்துலே இருக்கு. அதான் வந்தேன், திறங்கம்மா.” அதற்கு மேல் தயக்கம் இல்லை. சிவாவும் என்னைப் போல் ஒரு அசடு. யாருக்காவது கஷ்டம்னா வரிஞ்சு கட்டிக் கொண்டு உதவி செய்வான். கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னேன். அவர்கள் உள்ளே வரவும் வாசல் கதவைப் பூட்டி விட்டேன். உட்கார்ந்த உடனே சிவா பேசினான். அவன் பேசப் பேச அதிர்ச்சியில் என்னால் பேச முடியவில்லை. அதன் சுருக்கம் மட்டும் கூறுகின்றேன். வந்தவன் பெயர் குமார். அவனும் சிவாவுடன் கல்லூரியில் படித்து வருகின்றான். மூன்றாம் வருடம். அவனுடைய அப்பா பணக்காரர். மதுரையில் இருக்கின்றார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் தான் குழந்தைகள். மகன்மேல் உயிரையே வைத்திருக்கின்றார். அவனுக்கு ஒரு காதலி. அவள் ஊர் சேலம் பக்கம். (இங்கே ஊர்ப் பெயர்கள் கூட மாற்றி எழுதியிருக்கின்றேன் ).இருவரும் பல வருடங்களாகக் காதலித்து வந்திருக்கின்றனர். ஒரு முறை இருவரும் திருப்பதிக்குச் சென்றிருக்கின்றனர். இரவு தங்கலில் இணைந்துவிட்டனர். பலன் அந்தப் பெண் கர்ப்பவதியாகி விட்டாள். இப்பொழுது ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. குமாருக்கு இப்பொழுதுதான் சொல்லி இருக்கின்றாள். ஒரு டாக்டரிடம் போயிருக்கின்றார்கள். ஏழு மாதக் குழந்தையை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. வயிற்றில் அறுவை செய்து எடுக்கக் கூடாது. திருமணமாகாத ஒருத்தியின் வயிற்றில் வடு இருப்பது அந்தப் பெண்னுக்கு நல்லதல்ல. எல்லாம் பேசிய பின் சிகிச்சை செய்யவேண்டுமென்றால் ஒரு காகிதத்தில் இருவரும் கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு என்ன ஏற்பட்டலும் டாக்டர் மேல் இதைக் கேட்கவும் இருவரும் பயந்து விட்டனர். ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் இது போன்று எழுதி வாங்குவது வழக்கம். எனவே டாகடர் சாதாரணமாகக் கேட்டது இவர்களுக்குப் பயத்தைக் கொடுத்து விட்டது. சிவாவிடம் ஆலோசனை கேட்டிருக்கின்றார்கள். அவனும் சின்னப் பையன். ஆலோசனை கேட்க என்னிடம் கூட்டி வந்து விட்டான். செய்தி சொல்லி வரும் பொழுதே என் ஆத்திரமும் வளர்ந்தது. திட்ட ஆரம்பித்துவிட்டேன். “பாவிப் பயலே, போயும் போயும் கோயில் ஸ்தலங்களுக்குப் போயா தப்பு செய்தீர்கள். எல்லாத்துக்கும் அவசரம் ! ஊரெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டப் பிரச்சாரம் நடக்குதே, ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டாமா?” “அம்மா, திட்டம் போட்டு செய்யல்லே. சாமி கும்பிடத்தான் போனோம். ராத்திரி ஒரே இடத்தில் தங்கினோம். இதுவரை இப்படி தங்கினதில்லே தப்பு செய்துட்டோம். “இப்படி சொல்லிவிட்டு குமார் அழ ஆரம்பித்துவிட்டான். “குமார், அந்தப் பொண்ணு மேலே எனக்கு சந்தேகமா இருக்கு. எந்தப் பெண்ணுக்கும் ஏழு மாதம் ஆகிற வரைக்கும் தான் கர்ப்பமானது தெரியல்லேனு சொல்றது நம்பும் படியா இல்லே. நாளைக்கு அவளயும் கூட்டிக் கிட்டு வா. பேசுவோம். இப்போ நான் ஒண்னும் சொல்ல முடியாது. யோசிக்கணும் “. அம்மா, எப்படியோ நடந்து போச்சு. அந்தப் பொண்ணுக்கு என்னமாவது ஆனா இவனும் செத்துடுவான். கோவிச்சுக்காதீங்க. என்ன செய்யலாம்னு சொல்லுங்க. செய்யச் சொல்றேன் என்று சிவா அவன் நண்பனுக்காகப் பரிந்து பேசினான். மறுநாள் அந்தப் பெண்ணுடன் வரச் சொன்னேன். இப்பிரச்சனையை விட்டு விலக விரும்பவில்லை. அவர்கள் செய்தது சரி , தப்பு என்று சொல்லும் நிலை கடந்துவிட்டது. இரு உயிர்கள் சம்பந்தப்பட்டது. எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் என்றே நினைத்தேன். மறுநாள் காதலி மாலாவுடன் குமாரும் சிவாவும் வந்தனர். ஆண்கள் இருவரையும் போகச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணுடன் தனியாகப் பேசினேன்.எப்படி ஒரு பெண் தான் கர்ப்பமாகி இருப்பதை ஏழு மாதம் வரை தெரியாது என்று சொல்ல முடியும் ? நான் வேலை பார்த்த துறையில் கர்ப்பிணிகள் பாதுகாப்புப் பிரிவில் பல ஆண்டுகள் வேலை பார்த்திருக்கின்றேன். மேலும் நான் ஒரு தாய். கேள்விகளின் விபரங்கள் இங்கே தர விரும்பவில்லை. நான் கேள்விகள் கேட்கக் கேட்க அழ ஆரம்பித்துவிட்டாள். கடைசியாக ஒன்று கேட்டேன். குமார் பணக்காரவீட்டுப் பையன் என்று தெரிந்து திட்டமிட்டுச் செய்தாயா? இதைக் கேட்கவும் சத்தமாக அழுது கொண்டே வெளியே ஓடினாள். அவளைப் பிடித்துக் கொண்டு குமார் உள்ளே வந்தான். சிவாவும் வந்தான். குமாருக்கு என் மேல் ஆத்திரம்.”அவளிடம் நீங்கள் அப்படி பேசி இருக்கக் கூடாது. உங்கள் உதவி வேண்டாம். அவளுக்கு ஏதாவது ஆனால் நானும் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவேன் “என்று கோபமாகச் சொல்லிவிட்டு புறப்பட்டான். “நில்லு. நிலைமையை இன்னும் மோசமாக்காதே. உட்கார். பேசுவோம்” சிவா அவன் நண்பனைச் சமாதானப் படுத்தி உட்காரவைத்தான். மாலாவின் அப்பா ஜாதி வெறி பிடித்தவர். வேற்று சாதிப் பையனுக்குப் பெண் கொடுக்கமாட்டார். குமாரின் அப்பா நல்லவர். மகன் விருப்பத்தை அறிந்தால் முதலில் கோபப்பட்டாலும் பின்னால் சமாதானம் ஆகிவிடுவார். ஆனாலும் எதுவும் தீர்மானமாக நினைக்க முடியாது. எனவே இருவரையும் ஏதாவது கோயிலுக்குச் சென்று உடனே திருமணம் செய்து கொள்ளச் சொன்னேன். என்னை வரச் சொன்னதற்கு மறுத்து விட்டேன். நண்பர்களைக் கூட்டிப் போகச் சொன்னேன். கர்ப்பத்தை இப்பொழுது கலைக்க முயன்றால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்பதை உணர்த்தினேன். இப்பொழுதே கொஞ்சம் வயிறு உப்புசமாக தெரிந்தது. இன்னும் ஒரு மாதம் போனால் மறைக்க முடியாது. குழந்தைப் பிரசவம் பிரச்சனை. அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அந்தப் பெண்ணை வேறு இடத்தில் வைத்துப் பாதுகாக்க உதவி செய்கின்றேன் என்றேன். ஆனால் அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினேன். குழந்தை பிறந்த பிறகு இரு வீட்டாருக்கும் தெரியப் இன்னும் 15 நாட்களில் நான் அமெரிக்கா புறப்பட வேண்டியிருந்தது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் முடித்து , பின்னர் என்னை வந்து பார்க்கச் சொன்னேன். அப்படி செய்தால்தான் நான் புறப்படும் முன் மாலா எங்கே , யாருடன் தங்கலாம் என்பதைச் சொல்வேன் என்றேன். இதைத்தவிர வேறு வழியில்லை. தாமதித்தால் மாலாவின் உயிருக்கும் ஆபத்து, அவர்கள் காதலுக்கும் ஆபத்து என்று கூறிவிட்டேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்ற ஒன்றை யாருமே நினைக்கமாட்டான். குமார் வந்து போன இரண்டாம் நாள் நானும் என் தங்கை சரசாவும் காஞ்சிக்குக் காமாட்சி தரிசனம் செய்யச் சென்றிருந் தோம். சென்னைக்குச் செல்லும் பொழுதெல்லாம் ஒரு முறையாவது என் அம்மா காமாட்சியைப் பார்க்காமல் வர மாட்டேன். அங்கிருந்து திரும்பும் பொழுது குரோம்பேட்டையில் உள்ள என் தங்கை வீட்டிற்குச் சென்றோம். அங்கே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிவாவும் குமாரும் அங்கே இருந்தனர். குமார் அழுது கொண்டிருந்தான். பைத்தியம் பிடித்தவனைப் போல் இருந்தான். மாலாவின் அப்பா வந்து மகளைக் கூட்டிச் சென்று விட்டார். எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.. குமாருக்கு உடனே மாலா வேண்டுமாம் அல்லது எலெக்ட்ரிக் ரயிலில் விழுந்து இறந்து விடுவானாம். சிவா அவனைக் கூட்டி வருவதற்குள் மிகவும் கஷ்டப் பட்டிருக்கின்றான். காதல் படுத்தும்பாடு! எத்தனை அனுபவங்கள் இருந்தும் ஒன்றும் எனக்குக் கை கொடுக்கவில்லை. அப்படியே திகைத்துப் போய்விட்டேன்.
பகுதி 10எதிரே அமர்ந்திருந்த சிவாவையும் குமாரையும் திகைப்புடன் பார்த்தது ஒரு நிமிடம்தான். என்ன செய்ய வேண்டும் என்று அனுபவ அறிவு உணர்த்திவிட்டது.சூடான விவாதம் தொடங்கியது - ”குமார், இப்பொழுது என்னிடம் என்ன உதவி எதிர்பார்க்கின்றாய்? தெளிவாகச் சொல்.” “உங்களுக்கு இருக்கும் செல்வாக்கில் போலீஸ் மூலம் எனக்கு மாலாவை மீட்டுத் தாருங்கள்.” ”போலீசிடம் உனக்கும் மாலாவுக்கும் என்ன உறவென்று கூறுவது?” ”அவள் என் காதலி; அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் அப்பா.” “சட்டப்படி நீ அவளை இன்னும் மணக்கவில்லை. அவள் அப்பாவிற்கு இருக்கும் உரிமைகூட உனக்குக் கிடையாது. அவள் மேஜரான பெண். அவளை நீ கெடுத்து கர்ப்பமாக்கிவிட்டாய் என்று அவள் சொன்னால் உன்னைக் கைது செய்யலாம்.” “அவள் அப்படி சொல்ல மாட்டாள்.” ”இப்பொழுது அப்பாவுடன் போயிருக்கின்றாளே! சண்டை போட்டு உன்னிடம் வந்திருக்கலாமே?” “அவள் பயந்து போய் கூடப்போயிருக்கின்றாள்.” “அதே பயத்தில் அவள் அப்பா சொல்லிக் கொடுத்தபடி பேச மாட்டாளா?” இப்பொழுது குமாருக்கு அதிர்ச்சி - மாலா பயத்தில் அப்படி கூறலாம். “அப்படியானால் மாலா இனிக் கிடைக்கமாட்டாளா?” ”இந்தச் சூழ்நிலையில் போலீஸ் உனக்கு உதவ முடியாது. நீ தகராறு செய்தால் அவள் அப்பா புகார் கொடுப்பார். உன்னைக் கைது செய்யலாம்.” ”அப்போ ரயில்லே விழுந்து சாகறேன்.” ”எதுக்கும் உனக்கு அவசரம். நீ இருக்கற லட்சணத்துக்குப் பொண்டாட்டி, புள்ளே! காதல்ங்கறது விளையாட்டில்லே. சொல்றதைக் கேளு. மதுரைக்குப் போ. உன் அப்பா கால்லே விழு. முதல்லே உன்னைத் திட்டுவார். அடிச்சாலும் அதிசயமில்லே. ஆனால் உன்னைச் சாக விடமாட்டார். அவன் பதற்றம் குறைய ஆரம்பித்தது. ”சரி அப்பா கிட்டே போறேன். அதுக்குள்ளே மாலாவுக்கு ஒண்ணும் ஆகாதே. என் புள்ளையைக் கொன்னுட்டா?” ”நீங்களும் டாக்டர் கிட்டே போனீங்களே எதுக்கு? கொல்லத்தானே. இப்போ மட்டும் பாசம் பொங்குதோ?!. உன் மாலாவுக்கு ஒண்ணும் ஆகாது. உன் அப்பா பணக்காரர். உனக்கு மாலா கிடைப்பாள்.” ”சரி. ஊருக்குப் போறேன்.” “சிவா, நீ கூடப் போய் அவனை மதுரை பஸ்ஸில் ஏத்திவிடு. பஸ் புறப்படவும் எனக்கு போன் செய்”. என்று சிவாவிடம் கூறிவிட்டு “மதுரைக்குப் போன பின் அங்கிருந்து சிவாவுக்கு போன் செய். அடிக்கடி அங்கே நடக்கறதை அவன் கிட்டே சொல்லு. இப்போ போ “ என்று குமாரையும் அனுப்பி வைத்தேன். அப்பாடா என்று படுத்தேன். உறக்கம் வரவில்லை. பிள்ளைகள் பெற்றோர்களுடன் சேர்ந்து விடுகின்றார்கள். இனி அவர்கள் பொறுப்பு. பொழுது விடிந்தது. குமார் வீடு போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் அத்துடன் கதை முடியவில்லை. எனக்கு மதுரையிலிருந்து போன்கால். பேசியது குமாரின் அக்கா. வீட்டில் பெரிய சண்டை. இப்பொழுது அப்பாவும் அழ ஆரம்பித்துவிட்டார். எப்படியோ மகனுக்கு மாலாவைத் திருமணம் செய்து வைக்க ஒப்புதல் கொடுத்துவிட்டார். மாலாவின் வீட்டிற்குத் தொடர்பு கொண்டால் அங்கு மாலா வரவில்லையென்றும், அவள் அப்பாவும் அங்கில்லையென்றும் தகவல்தான் கிடைத்தது. மாலாவின் வயிற்றில் வளர்வது குடும்ப வாரிசு. அதை அழித்திருந்தால் திருமணம் செய்து வைக்க முடியாது என்று குமாரின் அப்பா சொல்லிவிட்டார். அதனால் குமார் அறைக்குள் போய் இருந்து கொண்டு வெளியில் வருவதில்லை. சாப்பிடவில்லை. அவன் அப்பாவும் இன்னொரு அறைக்குள் போய்விட்டார். எனவே அவன் அக்கா கவலையால், இனிமே என்ன செய்யவென்று கேட்டாள். மாலாவின் அப்பா ஜாதி வெறி பிடித்தவராக இருக்க வேண்டும். குமார் பணக்கார வீட்டுப் பையன் என்று தெரிந்தும் மகளை மறைத்து வைத்திருக்கின்றார் என்றால் அவருக்கு ஜாதிதான் பெரிது என்பது நன்றாகத் தெரிகின்றது. நிச்சயம் கர்ப்பம் கலைக்கப்பட்டுவிடும். அப்படி மட்டும் அவர் செய்துவிட்டால் குமாரின் அப்பா திருமணத்திற்கு நிச்சயம் ஒப்புதல் தரமாட்டார். இதனை விளக்கமாக எடுத்துச் சொன்னேன். எப்படி இருந்தாலும் மணம் செய்து கொடுப்பதாக அப்பாவைச் சொல்லச் சொன்னேன். அதில் குமார் கொஞ்சம் சமாதானம் ஆவான். நாளாக ஆகக் கொஞ்சம் கொஞ்சமாக மனம் தேறிவிடுவான். சண்டை வேண்டாம் என்று சொன்னேன். அதன்பின் போன் வரவில்லை. நான் அமெரிக்கா புறப்படும்வரை போன் வரவில்லை. சிவாவை என்னை வழியனுப்ப வர வேண்டாம்என்று சொல்லிவிட்டேன். அவன் எனக்குப் பல மெயில்கள் அனுப்பினாலும் பதில் அனுப்பவில்லை. ஓராண்டு கழித்துச் சென்னை சென்ற பின் சிவாவை வீட்டிற்குக் கூப்பிட்டேன். சந்தோஷமாக ஓடி வந்தான் அவனாகக் குமாரைப் பற்றி எதுவும் பேசவில்லை. நானாகக் கேட்ட பின் நடந்தவைகளைக் கூறினான். மாலாவின் கர்ப்பம் கலைக்கப்பட்டு விட்டது. கொஞ்ச நாட்கள் கழித்துக் கல்லூரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டாள். இப்பொழுது கட்டுப்பாடுகளுடன் கல்லூரிப் படிப்பு. குமாரும் மாலாவும் பேசிக் கொள்வதில்லை. பரீட்சை முடிந்த அன்றே மாலா காணவில்லை. தேடினால் குமாருடன் இருந்தாள். எப்படியோ திருமணம் செய்து கொண்டு அதனை ரகசியமாக வைத்திருந்தனர். படிப்பு முடியவும் சேர்ந்து விட்டனர். மாலாவின் அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குமாரின் அப்பா அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொண்டு விட்டார். இதுதான் வாழ்க்கை. ஜெயகாந்தன் தொடருக்கும் இந்த நிகழ்வுக்கும் என்ன சம்பந்தம்? ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பைக் கூறப் போகின்றேன். முதலில் அவர் பாத்திரம் கங்காவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். என்றோ ஒரு நாள் அவளைக் கெடுத்துவிட்டுப் போனவனைத் தேடிபிடித்து, அவன் திருமணமானவன் என்று தெரிந்தும், அவன் தன்னைச் சின்ன வீடாகக் கூட வைத்துக் கொள்ள மாட்டான் என்றும் தெரிந்தும் அவனுடன் பழகினாளே, எதற்கு? அவளை முட்டாள் என்று சொல்லலாமா? காதல் புகழ் பாடுகின்றவர்கள் வேறு விதமாக நினைக்கலாம். கசப்பான நினைப்பை இனிமையாக்கச் சில வினாடிகள் பேச்சிலே பிறக்கும் பாசத்தை விரும்பிய ஒருத்தி என்று கூறலாமா? கானல் நீரைத் தேடி ஓடிய பைத்தியம் என்றும் சொல்லலாமா? கங்காவைப் போன்ற எத்தனை பெண்களை நாம் காண முடியும்?! கதைக்காகப் படைக்கப்பட்ட பாத்திரமா? இல்லை. எங்கோ அவளைப் போன்ற ஒருத்தி சீதாலட்சுமி என்று ஒரு பெண். ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்புகின்றாள். கோயில், குளம் பார்க்காமல், அழகான இடங்களைத் தேடிப் போகாமல், சிவப்பு விளக்கு ஏரியா, சாராயக் கடை, நைட் கிளப், நள்ளிரவு பிளாட்பாரக் காட்சிகள் காண விரும்புகின்றாள். இப்படி எத்தனை பெண்கள் இருக்கின்றார்கள்?!. உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் அமைதியாகப் பொழுதைப் போக்காமல், ஏதாவது பிரச்சனை என்று கண்டு விட்டால் உடன் ஓடுகின்றாளே! குமாரின் பிரச்சனையை அவள் தேடிப் போகவில்லை. தானாக வந்ததுதான். ஆனாலும் பயந்து ஒதுங்கவில்லை. அவள் பிழைக்கத்தெரியாத முட்டாளா? இப்படி ஒன்றா இரண்டா, எத்தனை எத்தனை பிரச்சனைகளுடன் போராடியிருக்கின்றாள். பித்துப் பிடித்தவளா? எப்படியோ அவள் வித்தியாசமானவள். ஆம், நான் வித்தியாசமானவள். எனக்குள் ஒரு பேராசை பிறந்தது. என்னிடம் கொட்டிக் கிடக்கும் பல கதைகளைச் சரியாக வடிக்க ஓர் எழுத்தாளனைத் தேடினேன். பலர் என்னைச் சுற்றி இருந்தாலும் ஒரே ஒரு கோல்தான் அதனை ஓவியமாகத் தீட்ட முடியும் என்று நினைத்தேன். ஆம், அந்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். நான் அவரைப் பார்க்க விரும்பினேன். அவரைப் பற்றி நிறையத் தெரியும். அவர் கதைகள் எல்லாம் படித்திருக்கின்றேன். ஆனால் அவரைப் பார்த்ததில்லை. முதல் சந்திப்பு நிகழ்ந்த ஆண்டு 1970.என்னுடன் இருந்தவர்கள் பழனியம்மாளும் ராஜியும். உயிரோட்டமான சந்திப்பு. அடுத்துக் கூறுகின்றேன்.
பகுதி 11ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பைச் சுவையாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் சமீபத்தில் சங்கரநேத்திராலயா ஆய்வு நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவில் ஜெயகாந்தன் பேசியிருக்கின்றார். “பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர்.இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “. ஜெயகாந்தனின் மேடைப் பேச்சென்றால் திடீர் வெடி வெடிக்கும். அது எப்பொழுதாவதுதான். இந்தப் பேச்சு காற்றோடு போயிருக்கும். ஆனால் பத்திரிகைகளுக்குச் சுடச் சுடச் செய்தி வேண்டுமே!. அவ்வளவுதான். பேட்டிகள், பேட்டிகள் பேட்டிகள் தலைப்பு “ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர் “ ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் திருமது வாசுகி அம்மையார் புள்ளி விபரங்களுடன் ஜே.கே அவர்களுக்குக் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.. இந்த அமைப்பு எப்பொழுதும் எங்கு ஆய்வுகள் நடத்தினாலும் புள்ளி விபரங்களைச் சேகரித்து வைப்பவர்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் ஓர் அமைப்பு. அடுத்துச் சாடியிருப்பவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி திருமதி ராமாத்தாள் அவர்கள்.அரசு சார்புடையது. நான் இருப்பது அமெரிக்கா. தமிழகச் செய்திகளை உடனே எனக்கு அனுப்ப இப்பொழுது சில குழந்தைகள் வந்துவிட்டனர். ஜே. கே அவர்களின் பெயரின் வசீகரம். அவரைப்பற்றி எழுத ஆரம்பிக்கவும் சிலர் எனக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர். இரு வாரத்திற்கு முன்னால் துளஸிதாஸுடன் தொலைபேசியில் பேசினேன். அப்பொழுது பொதுப்படையாகக் குறித்துப் பேசியதுதான் குழப்பத்திற்குக் காரணம். இது ஒரு trend. ஒரு பிரச்சனையைத் தெரிந்து கொள்ள சில வழிகள் இருக்கின்றன. Study or research. பத்திரிகைகளைப் பார்த்து, செவி வழிச் செய்திகளைக் கேட்டு ஒரு முடிவிற்கு வரக் கூடாது. அதாவது அது முழுமையானதல்ல. சில பிரச்சனைகளையாவது உள் புகுந்து கொஞ்சம் பார்த்துவிட்டுப் பேச வேண்டும். இன்னும் ஆழமாகப் போக நினைத்தால் ஆய்வுகள் செய்தாக வேண்டும். ஆய்வுகள் அறிக்கைகளை வைத்துப் பேசும் பொழுது கூட நம் பகுதியில் நாமும் கொஞ்சமாவது ஆய்வு செய்திடல் வேண்டும். ஒரு சின்ன உதாரணம் சொல்லுகின்றேன். 1967ல் தி. ,மு. க ஆட்சிக்கு வந்ததது. அறிஞர் அண்ணா முதல்வராகவும் அவருக்கு ஆலோசகராக வந்தவர் திரு. முருகேச முதலியார் அவர்கள், அறிஞர் பெருமான். அரசுத் துறைகளைப் பற்றி ஆய்வு செய்து ஓர் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதிலே மகளிர் நலத்துறையை மிகவும் குறைவாக மதிப்பிட்டு அறிக்கை கொடுத்திருந்திருந்தார். அதிலே அவர்கள் பெண் ஊழியர்களை அலங்காரப் பதுமைகள் என்று குறிப்பிட்டு விட்டார். அண்ணா அவர்களும் அந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் உள்ள மகளிர் நலத்துறையை மூடிவிடலாம் என்று முடிவு எடுத்து பத்திரிகைகளில் அறிவிப்பும் செய்துவிட்டார். இந்தப் பி்ரச்சனையில் நான் நேரடியாகச் சம்பந்தப் பட்டவள். அப்பொழுது நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட மகளிர் நல அதிகாரியாகப் பணியாற்றி வந்தேன். செய்தி அறிந்து சென்னைக்குக்கு உடனே ஓடினேன். பத்திரிகை உலகம் எனக்குக் கை கொடுத்தது. கதைகள் எழுதி பேரும் புகழும் பெற்றதில்லை. காரணம் நான் தொடர்ந்து எழுதவில்லை. ஆனால் நண்பர்கள் அதிகம் கிடைத்தனர். என் கதைகள் அதிகமாக வெளிவந்த பத்திரிகை சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையாகும். அப்படியே அதன் உதவி ஆசிரியர் மா. ரா. இளங்கோவன் பழக்கமானார். அவர் குடும்பத்தில் நானும் ஒருத்தியானேன். அவர்களுக்கு இந்த முருகேச முதலியாரை நன்கு தெரியும். புனிதம் குடும்பத்திற்கு மிகவும் பரிச்சயமானவர். இளங்கோவனை அழைத்துக் கொண்டு திரு முருகேச முதலியார் அவர்களைச் சந்திக்கக் கோட்டைக்குப் போனேன். எதற்காக நான் வந்திருக்கின்றேன் என்று சொன்னேன். அவர் மிகப் பெரிய அளவில் உயர்மட்ட அதிகாரி. நான் சாதாரணமானவள். இருப்பினும் என்னை அழைத்துச் சென்றவர் அவருக்கு மிகவும் வேண்டியவர். எனவே என்னைப் பேச அனுமதித்தார். நான் கேட்ட முதல் கேள்வி - அவர் கொடுத்த ஆய்வறிக்கையின் புள்ளிவிபரங்கள் எந்த மாநிலத்தில் சேகரிக்கப் பட்டவை ?. இதற்கு அவர் எனக்குப் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. இப்படிக் கேட்டதற்கு என் மேல் நடவடிக் கையும் எடுக்கலாம். ஆனாலும் என் குரலின் அழுத்தம் கண்டு உடனே பதில் கொடுத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை என்று. அப்பொழுதுதான் நான் காந்தி கிராமத்தின் பயிற்சி முறைகளை, கல்லுப்பட்டி பயிற்சி முறைகளை விவரித்தேன். திருச்செங்கோடு ஆசிரமமும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் காந்தீயத்தை விதைத்தி ருந்தது. இங்கெல்லாம் பயின்றவர்கள் அலங்காரப் பதுமைகளாக இருக்க முடியாது என்றேன். உத்தரப் பிரதேச ஆய்வு தமிழகத்திற்குப் பொருந்தாது என்றேன்.தமிழ் நாட்டில்தான் மகளிர், குழந்தைகள் நலத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுச் சிறப்பாக, நாட்டிற்கே முன்னோடியாக இருப்பதை விளக்கினேன். நான் அதை நிரூபிக்கவும் செய்ய முடியும் என்றேன். பாருங்கள் ஆய்வு என்பதில் சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கின்றன. அப்பொழுது எனக்கு ஓரளவே தெரியும். 1979க்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக அப்பிரிவில் இன்னும் தெளிவு பெற்றேன். ஆனாலும் அப்பொழுது என்னால் ஒரு பெரிய அதிகாரியுடன் பேச முடிந்தது. பின்னர் மகளிர் நலத் துறை மூடினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்றேன். ஏன், நானே அதில் முன்னின்று உயிர் மரிப்பேன் என்றேன். பெண்ணியம் மேடையில் முழங்கினால் போதாது. பிரச்சனையைத் தீர்க்கமுறையுடன் செயலில் இறங்க வேண்டும். என் மீது அவர் கோபப் படவில்லை. முதல் காரணம் நான் விவாதத்தில் முறைப்படி விளக்கினேன். அண்ணன் மா.ரா. இளங்கோவன் உடன் இருந்ததால்தான் பேச அனுமதியே கிடைத்தது. அதற்குப் பிறகுதானே என் பேச்சு. என் வாதங்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டவர் என்னை உட்கார வைத்துவிட்டு, “இதோ வருகின்றேன் “ என்று சொல்லிவிட்டு முதல்வர் அறைக்குச் சென்றார். ”பிறகு வாருங்கள்” என்று அனுப்பவில்லை. சம்பந்தப்பட்ட கோப்பு கையெழுத்திற்காக முதல்வர் மேசையில் இருந்த நேரம். ஒரு மணி நேரம் தாமதித்துச் செயல்பட்டிருந்தாலும் கையெழுத்தாகி இருக்கும். இருக்கையில் இருக்க முடியவில்லை. என் அண்ணன்தான் என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஆலோசகர் வந்தார்.”அம்மா, சரியான நேரத்தில் வந்தீர்கள். உங்கள் துறைக்கு ஆபத்தில்லை. உங்களை அமைதியாகப் போகச் சொன்னார் முதல்வர் “ என்றார். அறிஞர் அண்ணாவைச் சந்தித்த பொழுது, மேடைப்பேச்சால் மயக்கியிருந்த அந்த மாமனிதரைப் பார்க்கும் பொழுது என்னால் பேச முடியவில்லை. அழுதேன். திராவிட வரலாற்றில் அவருக்கு இணையானவர் கிடையாது. என் துறையைக் காப்பாற்றியதற்காகக் கூறவில்லை. அவரை விடுத்து தமிழக வரலாறு எழுத முடியாது. மனித நேயம் மிக்கவர். அவர் பெயர் வாழ இந்த ஒன்று போதும்.இந்த விஷயங்களை என் இலாக்காவிற்கோ, வேறு யாருக்கும் சொன்னதில்லை. பேருக்காகப் புகழுக்காக இதைச் செய்யவில்லை. இது பற்றி அறிந்தவர்களில் ஒருவர் இன்னும் உயிருடன் இருக்கின்றார். அவர்தான் புனிதவதி இளங்கோவன். என்னை எங்காவது இதைப் பதியும்படி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர் கணவர் உடன் வரவில்லையென்றால் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. அவருக்குத் தன் கணவர் செய்த உதவி பதியப்பட வேண்டும் என்பது அவா. எனக்கு அத்துடன் இந்த உண்மை தமிழக அரசு சமூக நலத்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரிய வேண்டும். தேவைப்படின் பழைய கோப்பினைப் பார்க்கட்டும். அதன் பயணம் எங்கு நிறுத்தப் பட்டது என்பது தெரியும். ஜே.கே இன்று மறைமுகமாக உதவி செய்துவிட்டார். புள்ளி விபரங்கள் பற்றிய விபரம் மட்டுமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றவர்கள் நம்மை அண்டி வரும் நோயையும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டியிருக்கின்றது.ஜெயகாந்தன் அவர்கள் பேச்சு கிளப்பியிருக்கும் கேள்விகளுக்கு அடுத்துப் பதில்கள் தருகின்றேன். எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்த விதமும், பின்னர் அவர் பேசியதும், இன்னொரு சமயத்தில் பெண்களைப் பற்றிக் கூறியதையும் கூறுகின்றேன்.பெண்ணினம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் நாம் ஏமாறக் கூடாது. நம்மை ஏமாற்றவிடக் கூடாது. நமது தேவைகள் எதுவென்று புரிந்து, நம் சூழ்நிலை மாற்றங்களையும் புரிந்து கொண்டு போராட வேண்டும். நமக்குத் தெரியாமல் நம்மை நோய் பற்றினால் நோயையும் அகற்ற வேண்டும்.” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “ என்ற ஜெயகாந்தனின் சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு; மனம்விட்டுப் பேசுவோம்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||