"பெண் என்னும் மானிடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(பெண்ணின் தன்னுரிமை)

03:53, 11 ஜூன் 2015 இல் நிலவும் திருத்தம்

திருக்குறள் 58 ஒரு கருத்தைச் சொல்கிறது.  

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.  

இதற்கு உரை எழுதும் பரிமேலழகர் முதலியோர் கூறுவது --பெண்டிர் தம் கணவரைத் தொழுவாராயின், அதனால் புத்தேளிர் வாழும் உலகில் பெரும் சிறப்பு அடைவர்.  

அதாவது தன் கணவனைப் பெண் தொழுதால் அதனால் பெரும் சிறப்பு அவளுக்கு எய்தும். எங்கு? புத்தேளிர் வாழும் உலகில். இது உரையாசிரியர்கள் குறளுக்குச் சொல்லும் கருத்து. இதுதான் குறளின் கருத்தா?  

குறளைப் பார்த்தால் இயல்பான முறையில் ஒரு பொருள் தோன்றுகிறது. என்ன? குறளை உள்ளபடி பிரித்து எழுதுங்கள்.  

பெண்டிர் பெரும் சிறப்பு பெறின்  

புத்தேளிர் வாழும் உலகு  

பெற்றார் பெறுவர்.  

பெண்டிர் சிறப்பிக்கப்பட்டால் அதுவே போதும் ஆண்கள் சொர்க்கம் அடைவதற்கான காரணம்.  

ஆனால் உரையாசிரியர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். பெற்றான் பெறுவர் பெண்டிர் என்ற உயர்திணை ஆண்பால், பலர்பால் முடிவுகளைக் கவனிக்காது விருப்பம் போல் பொருள் கூறுவதா என்று பலர் முனியக் கூடும்.  

ஆனால் வடமொழி அறநூல்கள் என்ன கூறுகின்றன என்று பார்த்தால்  

"ஒரு குடும்பத்தில் ஆண் சமுதாயம் பெண்களை கௌரவிக்கவும், அணிகலன்களால் சிறப்புச் செய்யவும் வேண்டும், அவர்கள் தம்தமக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்று விரும்பினால். எங்கு பெண்கள் கௌரவிக்கப் படுகிறார்களோ, அங்கு தெய்வங்கள் மகிழ்கின்றன; எங்கு பெண்கள் கௌரவிக்கப் படுவதில்லையோ அங்கு எந்த வேள்விகளும் பலன் அளிப்பதில்லை."

(மனு தர்மம் 3--.55, 56)  

பெண்களைப் போற்றினால் சமுதாயம் சிறக்கும்; பெண்ணுக்குச் சிறப்பு கணவனைத் தெய்வமாக மதித்தல் -- என்ற இரு கருத்துகளும் சமுதாயத்திலும், இலக்கியத்திலும், சமய நூல்களிடையேயும் இருக்கத்தான் செய்கின்றன.  

பெண்களை எப்படிப் போற்றுவது? அவர்கள் அழகைக் கொண்டாடினால் அது போற்றுவது ஆகுமா? அதைத்தானே மனிதரில் பாதி பேர் செய்துகொண்டு இருக்கின்றனர்.  

முதலில் ஏன் போற்ற வேண்டும்? முதலில் தூற்ற வேண்டியது. பின்னர் எதிர் கோடிக்கு ஓடிப்போய் ஏற்றித் தொழ வேண்டியது. இரண்டும் ஏன்? உலகம் என்பது நமக்கு எப்படி வாழிடமோ அப்படியேதானே பெண்களுக்கும். ஆண் உலகத்தையே முற்றிலும் தன் மயமாகக் காண்கிறான். ஆணின் தேவைகளே, ஆணின் ரசிப்புகளே, ஆண்களின் அனுமதியே ஒவ்வொரு துறையிலும் ஆட்சி செய்து வந்துள்ளது.  

சரித்திரத்தின் நெடுக பாருங்கள். ஆண்களே தங்களைப் பெரும் தூண்களாகக் கருதிக்கொண்டு மொத்த சரித்திரத்தையுமே தங்கள் தலைக்கு மேல் கூரை போல் வேய்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் பெயரின்றி வடிவின்றி அந்தத் தூண்களிடை வளைந்து செல்லும் ஓட்டங்களாக ஒரு தோற்றரவு ஏற்படுகிறது. ஏன் பெண்களை மையப் படுத்திச் சரித்திரம் சுழன்றிருக்கக் கூடாது?  

'மையப் படுத்தி' என்னும் போது ஏதோ வலிந்து புனைவது போல் படுகிறது. அவ்வாறன்று. சரித்திரம் ஆண் என்பவன் குறிக்கும் மதிப்பீடுகளை முதன்மை படுத்தி நோக்குவதால் அவன் சார்பாகவே பதிந்திருக்கிறது. பெண் என்பவள் என்ன மதிப்பீடுகளைக் குறிக்கின்றாளோ அவற்றை முதன்மைப் படுத்தி நோக்கும் கல்வி நமக்கு வாய்க்குமானால், அந்தக் கல்வி வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடாமல் பண்பாட்டு மனப்படிவாக மாறுமானால் நிச்சயம் சரித்திரப் பதிவுகள் தன்னடையே பெண்ணைப் பேணுவதாய் அமையும்.  

தன்னடையே ஆண் பெண்ணின் உலகத்தைப் பெரிது என்று மதிக்கத் தொடங்குவதில்லை. அவளை எப்படியும் தன் ரசனைக்குரிய துய்ப்பிற்குரிய பொருள் என்றுதான் கருதுகிறான். அவ்வாறுதான் அவன் கருத இயலும் தொடக்கத்தில். ஏனெனில் இயற்கையின் நெடிய நாடகத்தில் இன்னும் அவன் தன் ஒப்பனையைக் கலைத்த பாடில்லை.  

 துய்ப்பு என்னும் மாயப்பொறி ஒன்று வைத்து இயற்கை தன் நிரலை சுழட்டிக்கொண்டு இருக்கிறது. பெண்ணைப் பார்த்ததும் ஆணிடம் ஒரு ஸ்விட்ச் தட்டப்படுகிறது. பிறகு படிப்படியாக நடக்கும் இயற்கையின் ப்ரொக்ராம் சுருளவிழ்கிறது. அந்தப் படிநிலைகளை இவன் தன் மனத்தின் திறனால், உள்ளத்தின் நெகிழ்ச்சி என்னும் தூரிகை கொண்டு எப்படி எப்படியோ கற்பனை உருவகம் பாத்திர நடிப்பு என்று செய்துகொண்டு போனாலும், ஸ்விட்ச் இயற்கையின் கையில் இருக்கிறது. என்று இவன் இயற்கை தன்னை கீ கொடுத்து ஆடவைக்கும் பொம்மையாக நடத்தும் மாயச் சூதிலிருந்து நகர்ந்து நிற்கக் கற்கிறானோ அன்றுதான் ஆண் பெண் என்பவளையே உண்மையாகப் பார்க்கிறான். அதுவரை இயற்கை அவனை எதைப் பார்க்க வைத்ததோ அதைத்தான் பார்த்து, தன் உள்ளத்தால் அதற்குப் பூச்சு வேலை கொடுத்துக்கொண்டிருந்தான். சூதிலிருந்து விடுபட்ட அவன் பார்வை பெண்மை என்பதைப் பூரணமாக தரிசிக்கிறது.  

அந்தத் தர்சனத்தில் 'பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட, செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப' என்ற பாடல் வரிகள் மனத்தில் ஓடுகின்றன. வீட்டிற்கு வெளியே பந்து வந்து விழுகிறது. பந்தெடுக்க ஓடிவரும் சீரார் வளை ஒலிக்கும் பெண்மையின் முன் ஆண் அங்கமெலாம் மண் தோய படிந்து வணங்குகிறது. இல்லை அங்கு ஆண் என்பதும் மறைந்து பெண்மை என்பதே நிறைந்து அந்த மூலப் பரம்பொருளாம் ஆணை அவாவும் உயிர்க்குலமாம் பெண்மை மாதவனுக்கு என்று உன்னித்தெழுந்த தடமுலைகள் பூரித்து நிற்கிறது. ........  

அடங்கி நடந்தால் பெண்ணுக்குச் சிறப்பு, பெண்ணைக் கொண்டாடினால் குடும்பத்திற்குச் சிறப்பு, இயற்கையின் தூண்டுதல் இயக்கும் விதத்தில் பெண்ணைக் கவனம் கொள்ளுதல், தன் உணர்வால் இந்தச் சூழ்ச்சியினின்றும் விலகி ஆன்மிகமாகக் காணுதல் -- அநேகமாக இந்தக் கோணங்களில்தான் நம்முடைய அணுகுமுறை பெண்ணைப் பற்றி இருந்து வந்திருக்கிறது காலம் காலமாக.  

ஆனால் பெண்ணை ஆணைப் போலவே அனைத்துச் சான்றாண்மையும் மிக்க இன்னொரு மனித உயிர் என்ற அளவிற்கு ஒப்பிய அணுகுமுறையில் காணும் நோக்கு என்றேனும் இருந்திருக்கிறதா தெரியவில்லை. இங்கென்று இல்லை கிரீக்கம், ஐரோப்பிய நாகரிகங்கள், சைன ஜப்பானிய நாகரிகங்கள் எங்குமே.  

சில நாகரிக வேறுபடுகளால் சார்புத் தோற்றத்தில் தென்படும் விடுதலைகள் அடிப்படையில் இந்த ஒப்பிய மனப்பான்மை கொண்டு எழுந்ததா தெரியவில்லை. பெரிகிள்ஸின் தோழியையும், ஸாபோவையும் கிரேக்க உலகில் மிக அதிக சுதந்திரம் அனுபவித்த பெண்மணிகளாகச் சொல்வார்கள். ஆனால் வீட்டுப் பெண்களின் கதி? அங்கும் கிட்டத்தட்ட இங்கு போல்தான்.  

கார்க்கி, வாசக்னவி உபநிஷத உதாரணங்களாக நம் நினைவில் வரும். ஆனால் பெண் ஒரு நாளும் சுதந்திரமானவளாக இருக்க முடியாது என்று விதியிட்டுரைத்த மனுவின் காலம்.? அந்தப் போக்குதானே நெடுங்காலம் சமுதாயத்தில் வேரூன்றிப்போய் வீட்டிற்குள்ளெ பெண்ணைப் பூட்டி வைக்கும் தலை கவிழாத விந்தை மனிதர்களை உருவாக்கியது.  

புராணங்கள் இலக்கியம் பழங்கதைகள் இதையெல்லாம் விட்டு நடைமுறைக்கு வந்தால்?  

நம் வீட்டுக்குள்ளேயே வழி வழி வரலாற்றுகளைச் சிந்தித்தோமானால்?

என் பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி, அவர்களுடைய தோழிகள், அவர்கள் அனுபவித்த சம்பவங்கள் இவையெல்லாம் என்ன ஆயிற்று? அவர்கள் எடுத்த அடுப்படி முடிவுகள் புகையோடு புகையாய்ப் போனதுதானா? அவர்களுக்கு என்று கனவு, வெற்றி, துயரம், வாழ்க்கைப் பாடம், நீண்ட கால சாதனை ஏதும் இருந்திருக்காதா?  

இந்த family chronicles இதில் முதற்கொண்டு ஆண் என்னும் மதகுதான் குறிப்பிடப்படுகிறதே அன்றி மதகுகளூடு ஓடும் நதிக்கு லாக் புக்கே கிடையாதா? அதைவிட அடிப்படையாக ஏன் நதியாக இருக்க வேண்டும்? தன் பெயரையும் பதிவையும் அழித்து அழித்து ஓட்டம் கொடுத்து நகர்த்திச் செல்லும் தியாகம் ஏன் என் நினைவில் ஜீவிதமாக எழுதப்படவில்லை. அனைத்து ஜீவிதங்களும் ஆண்களுடையது. பெண் என்னும் மானிடத்திற்கான பதிவுகள் எங்கே? 

 

பங்களிப்பாளர்கள்

Srirangam V Mohanarangan

"https://marabuwiki.org/index.php?title=பெண்_என்னும்_மானிடம்&oldid=13061" இருந்து மீள்விக்கப்பட்டது