(ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் அந்திம லீலையில், அவர் ஸ்ரீகிருஷ்ண விரஹ தாபத்தால் (ஸ்ரீ கிருஷ்ணைக் காணாத பிரிவின் வேதனை) ராதையின் மனோபாவத்தில் முற்றித் தன்னை மறந்து துடித்துக் கொண்டிருந்தார். அணுக்கச் சீடர்கள், பக்தர்கள் கண்ணில் வைத்துக் காப்பாற்றிய பொழுதினும் ஒரு நாள் காணவில்லை.
அணுக்கன் கோவிந்தனுக்கும், ஸ்வரூப தாமோதரருக்கும் ஒரு சந்தேகம். கடலின் கருமை வண்ணத்தைக் கண்டு கிருஷ்ணன் என்று மயங்கி கடலில் விழுந்து விட்டாரோ என்று துணுக் என்றது.
கடல் பக்கம் பார்க்கலாம் என்று வரும் பொழுது பீதியடைந்து ஒரு மீனவன் வாய் குழறியபடித் தனனை மறந்து கிருஷ்ண நாமம் உரக்கக் கூவியவாறு ஏதேதோ உளறியபடித் தள்ளாடி வந்ததை நின்று கேட்கின்ற சமயம்......)
ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தன் நிலை இழந்து ஸ்ரீகிருஷ்ணனுக்காக ஏங்கி, ஸ்ரீஜகந்நாதனின் கொடிமரத்தின் பக்கமாக நின்றபடி பாடிக்கொண்டிருக்கிறார்.
*
என்று உனைக் காண்பேன் ஜகந்நாதா? இன்று எனக்கருளாய் மமநாதா
ராதாகாந்தா வ்ரஜ பாலா
கேசவ முகுந்த முரளி மனோஹரா
அன்று நீ திரிந்தாய் பன்னிருவனங்களில்
கன்று காலிகள் மேய்த்துத் திரிந்தாய்
என்றும் துலாலியின் இனிமையுகந்தாய்
இன்று எனை நீயும் ஏனோ மறந்தாய் ?
பிரிவினில் துடிப்பேன் கோவிந்தா
பரிவுடன் அருள்வாய் கோபாலா
எரிகின்றது உடலெங்கும் கோவிந்தா
என் கண்காண வருவாய் ஸ்ரீகிருஷ்ணா
கிருஷ்ண முராரீ ! முகுந்த முராரீ !
கோபால கோவிந்த ராதா விஹாரீ !
*
(பட்டிக்காட்டுப் பெண் ஒருத்தி ஸ்ரீஜகந்நாதனைப் பார்க்க வேண்டி ப்ரயாசை பட்டுக் கூட்டமாக இருந்ததால், அங்கு ஏறி இங்கு ஏறி, ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் தோளில் கால் வைத்துக் கொண்டு கொடிமரத்தின் பக்கம் எம்பி ஜகந்நாதனை தரிசிக்கிறாள்.....)
ஐயா கன்னய்யா
சுகமா சொல்லய்யா?
வெய்யில் கொளுத்தையிலே
காடு மேடு திரியாமல்
எண்ணை தேச்சு குளிக்கிறியா?
என்னைக் கொஞ்சம் நினைக்கிறியா?
மண்ணைக் கொஞ்சம் தின்னுப்பிட்டு
மாமிகிட்ட உதை வாங்குறியா?
ஐயா கன்னய்யா !
அண்ணாரு தான் சுகமா?
ஒய்யாரமாக நீரு
எங்க காட்டுப்பக்கம் வருவியளே !
ஏனய்யா காணவில்ல?
எங்க எண்ணம் தோணவில்ல?
வேகாத வெய்யில்ல நான்
உனக்காக இங்கு வந்தா
ஊர்கூடி வச்சுகிட்டே
ஓராட்டம் போடுறீரு
மாராப்பு போடையிலே
உன் நினைப்பு குத்துதய்யா
என் நினைப்பு முள்ளாச்சோ?
எங்களை நீ வெறுத்தாச்சொ?
கண்களையே வெறுத்துகிட்டுக்
காணத்தான் ஆகிடுமோ?
கூட்டத்துல கூட்ட குரல்
கேட்டதுவோ கேக்கலையோ
வாட்டத்துல பாட்ட மழை
உன்முகத்தைப் பார்த்துப் புட்டேன்
ஏட்டெழுதி படிக்காக
என்னமோ உனைப் பாடுறாக
காட்டுமணல் குஞ்சத்துல
கண்டதெல்லாம் மறக்காத
வாட்டம் மிகுந்திருச்சா
வாருமய்யா வாஞ்சையில....
*
(அணுக்கன் கோவிந்தன் விரட்டப் போக, ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தடுத்துத் தம் தோளை அலுங்காமல் வைத்திருந்து தீனசுரத்தில் பாடுகிறார்)
*
கார்மேக வண்ணைக் கண்டாயோ அம்மா?
பார்புகழும் மன்னனைப் பார்த்தாயோ அம்மா?
யார்பெற்ற புண்ணியளோ?
எங்குற்ற விண்ணியலோ?
நின்பாத தூளிதனை
நான் பெறவே கொடுத்துவைத்தேன்.
*
ஐயய்யோ சாமீ ! அபசாரம் சாமீ !
அடியள் நான் பாக்கலையே, ஆகாது சாமீ !
மன்னிக்கணும் சாமீ!
மனமறிஞ்ச குத்தமில்ல
கன்னய்யாவைக் காணவேண்டி
கண்மறைச்சக் குத்தமிது
பெரும்பெரிய பண்டிதரு
அரும்பெரிய ஞானியரு
தருமதுரை செல்வந்தரு
தரணிவேந்தர் வீரர் எல்லாம்
கூடி யிருக்கையிலே
கோவாலு உள்ளிருக்க
பட்டிக்காட்டாள் நானும் வந்து
எட்டிஎட்டிப் பார்த்திருக்க
கன்னய்யன் கண்டுகிட்டான்
கண்ணடிச்சுப் போகச் சொன்னான்
எண்ணம்போல் வருவமின்னான்
என்னிக்குன்னு சொல்லல்லியே
உன்னிடம் ஏதும் சொன்னா -- சாமீ
ஊருக்கு சேதி சொல்லு
கண்ணனைக் கண்ணிமையா
கவனிச்சுக்க சாமீ நீயும்
கண்ணு முண்ணு தெரியாம
காலு வச்சு நின்னுப்புட்டேன்
கால்விழுந்து கும்பிடுறேன்
கருணை வையி சாமீ !
கண்ணின் இமையாகக்
கண்ணனைக் கருத்து வையி சாமீ !