"புணர்ச்சி விளக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
11:55, 11 பெப்ரவரி 2015 இல் கடைசித் திருத்தம்புணர்ச்சியின் வகைகள்: புணர்ச்சியானது, 'இயல்புபுணர்ச்சி' 'விகாரப்புணர்ச்சி' என இருவகைப்படும். மரம் + விழுந்தது = மரம்விழுந்தது இது இயல்புபுணர்ச்சி. இதில் நிலைமொழியின் ஈற்றெழுத்திலும் வருமொழியின் முதலெழுத்திலும் எந்தமாற்றமுமில்லை. அவற்றில் மாற்றமேற்படுமானால், அது விகாரப்புணர்ச்சியாகும். பலா + கொட்டை = பலாக்கொட்டை நிலைமொழியிலோ வருமொழியிலோ மாற்றமில்லாமற்போனாலும், ஓர் எழுத்து ( 'க்' ) இதில் புதிதாக தோன்றியிருக்கிறதன்றோ? இதுவும்விகாரப்புணர்ச்சிதான். இதற்கு 'தோன்றல்விகாரம்' எனப்பெயர். புல் + தரை = புற்றரை (ல் த் ஆகிய இரண்டுமே ற் எனத்திரிந்தன) நிலைமொழியின் ஈற்றெழுத்தோடு வருமொழியின் முதலெழுத்திலுமாற்றமுண்டானது. பால் + கடல் = பாற்கடல் (ல் என்பது ற் என திரிந்தது) இதில், மாற்றமானது நிலைமொழியின் ஈற்றெழுத்தில்மட்டும்வந்தது. பொன் + நாள் = பொன்னாள் (நகரம் நகரமாகத்திரிந்தது) மாற்றமானது வருமொழிமுதலில்மட்டும்வந்தது இவை யாவும் 'திரிதல்விகாரம்' எனப்படுவன. விகாரமானது, தோன்றல் திரிதல் கெடுதல் என மூவகைப்படும். இதுவரை தோன்றலும் திரிதலுமாகிய இரண்டுவிகாரங்களைப்பற்றிப்பார்த்தோம். கெடுதல்விகாரம்: மகரமெய்யீற்றுப்புணர்ச்சி: தமிழில், மகரவீற்றுச்சொற்கள் நிலைமொழியாயிருந்து வருமொழியோடு புணரும்போது, தன்னுடைய மகரத்தை சிலவிடங்களில் விட்டுவிடும். இவ்வாறு மகரம் மறைவது கெடுதல்விகாரமெனப்படும். குளம் + கரை = குளக்கரை - 'குளத்தினதுகரை' பழம் + கடை = பழக்கடை - 'பழத்துக்குக்கடை' (இவற்றில் பெயரோடு பெயரேபுணர்ந்தது - வேற்றுமைத்தொகைநிலைத்தொடர்) இதை மகரவீறு கெட்டுப்புணர்தலென்கிறோம். மகரவீறானது கெடாமற்புணருமிடமும் உண்டு. 1.) பழம் + யாருடையது = பழம்யாருடையது (பெயருடன் வினாச்சுட்டுபுணர்ந்தது) (இயல்பானது) 2. குடம் + வந்தது= குடம்வந்தது (இயல்பானது) குடம் + உருண்டது = குடமுருண்டது பழம் + இருந்தது = பழமிருந்தது (மெய்யும் உயிரும் உயிமெய்யாயின) (இவற்றில் பெயரோடு தெரிநிலைவினைமுற்றுபுணர்ந்தது - 'எழுவாய்த்தொடர்') 3.) பழம் + உண்டு = பழமுண்டு பழம் + இல்லை = பழமில்லை (இவற்றில் பெயருடன் குறிப்புவினைமுற்றுபுணர்ந்தது - 'எழுவாய்த்தொடர்') 4.) வரும் + காலம் = வருங்காலம் வெல்லும் + திறன் = வெல்லுந்திறன் (மகரவொற்றானது தன்னையடுத்துவரும் வல்லினத்திற்கேற்ப அவ்வதற்கினமான மெல்லினமாய்மாறியது. இதை 'இனமாதல்' என்போம்) (இவற்றில் பெயரெச்சத்துடன் பெயர்புணர்ந்தது - 'பெயரெச்சத்தொடர்') 5.) பழம் + தந்தான் = பழந்தந்தான் பழம் + கேட்டான் = பழங்கேட்டான் (இனமானது) நிலம் + வென்றான் = நிலம்வென்றான் (இயல்பானது) (இவை, பெயருடன் வினைபுணர்ந்த வேற்றுமைத்தொகைநிலைத்தொடர் - 'இரண்டாம்வேற்றுமைத்தொகை' - 'நிலத்தைவென்றான்' எனவும் 'பழத்தைத்தந்தான்' எனவும் 'பழத்தைக்கேட்டான்' எனவும்விரியும்) ஆக, பெயரும்பெயரும்புணர்வதான வேற்றுமைப்புணர்ச்சியில் மகரவீறு கெட்டுப்புணர்கிறதென்றும் இரண்டாம்வேற்றுமையில்மட்டும் மகரவீறானது வல்லினத்துக்கு இனமாகிறதென்பதும், பிறவாகிய அல்வழியில் வலிமிகுதலென்பதுமட்டும் இல்லை, வல்லினங்களோடு இனமாவதும் உயிரோடுசேர்ந்து உயிர்மெய்யாவதும் வகரயகரங்களின்முன் இயல்பாவதும் உண்டென்பது அறியத்தக்கதாயுள்ளது. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' என்பதன்படி இங்கு வலி மிகுமென்பது உண்மையே. ஆனால், வலிமிகாதவிடங்களும் உண்டு. 'இயல்புபுணர்ச்சியென்பது விகாரமற்றபுணர்ச்சியைப்பற்றிச்சொல்வதாகையால், இதை வலிமிகமற்சொல்வது வழக்கு. இதன் இலக்கணத்தைப்பார்த்தால், இதை ஒரு இருபெயரொட்டுப்பண்புத்தொகையாக, 'இயல்பாகியபுணர்ச்சி' என்றுகொள்ளலாம். இருபெயரொட்டுப்பண்புத்தொகையிலும் வலி மிகுந்தான். ஆனால் இதன் பொருளுக்கு வலிமிகாதிருத்தல் பொருந்துவதாயிருப்பதால் அவ்வாறு கொள்ளப்பட்டது. 'பலாவினதுகொட்டை' என்னும் ஆறாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரானது தொகைநிலைபெறும்போது சாரியையான 'இன்' என்பதையும், உருபான 'அது' என்பதையும் இழந்து, பலா + கொட்டை = பலாக்கொட்டை என்றாகிறது. ஆறாம்வேற்றுமைத்தொகையில் வலிமிகுந்துபுணர்தலே சரி. (இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலி மிகாதென்பது இங்கு எண்ணிக்கொள்ளத்தக்கது. வினையெச்சத்தின்முன் வல்லினமுதன்மொழிச்சொல்வருமானால், அவை புணரும்போது வலிமிகுந்தேபுணரும். ஆதலால், 'மாற்றப்படும்' என்பதே சரியானதாகும். வல்லினம்வரும்போது தோன்றல்விகாரம் வரக்கூடாதென்பதெல்லாம் இல்லை. தோன்றல்விகாரமென்பது பெரும்பாலும் வல்லினம்வரும்போதுதான் வரும்! மகரவீறு கெட்டுப்புணரும்போதெல்லாம் வருமொழியானது வல்லினமுதன்மொழியாயிருந்தால் அங்கெல்லாம் வலி மிகுந்தேபுணரும். மரக்கட்டில் குளக்கரை ஏலக்காய் மனக்குறை பழத்தட்டு என்பவற்றைப்பாருங்கள். எழுவாய்த்தொடரையும் இரண்டாம்வேற்றுமைத்தொகையையுமான்றி, பிறபுணர்ச்சிகளில் 'உயிர்முன்வந்த வல்லினம் மிகும். வினையெச்சத்தொடர்களில் வலி மிகும். ஆனாலும், 'செய்துதந்தான்' என்பதில் வலி மிகாது. ஏனெனில், செய்து' என்பது ஒரு இடைத்தொடர்க்குற்றியலுகரம். இடைத்தொடர்க்குற்றுகரங்கள் வினையெச்சமாயிருந்தாலும் வலிமிகாமலேபுணரும். மற்றவினையெச்சங்களில் வலி மிகும். எடுத்துத்தந்தான் என்பதில் 'எடுத்து' என்பது வன்றோடர்க்குற்றுகரமாதலால், இதில் வலி மிகுந்தது. கொடு என்பது வினைச்சொல் கொடு + காய் = கொடுகாய் (ஊறுகாய் என்பதைப்போல இது ஒரு வினைத்தொகையாகும்) கொடுகடல் என்பதும் அவ்வாறே. ஆனால், கொடுமை + காய், கொடுமை + கடல் என்பனவற்றில், நிலைமொழியின் மகரவீறு கெட்டுப்புணரும். அப்போது, அதுவும் கொடு + காய், கொடு + கடல் என்றாகி, கொடுங்காய், கொடுங்கடல் என, 'இனமிகல்' என்னும் பண்புப்பெயர்ப்புணர்ச்சிவிதியின்படிப்புணரும். கொடு + காய் = கொடுக்காய் எனவும்வரும். இதன்படி, 'கொடு' என்பது பெயர்ச்சொல்லாகும். கொடு என்னும் பெயர்ச்சொல் உள்ளதாவென்பது தெரியவில்லை. அப்படியொரு பெயர்ச்சொல் இருக்குமானால், இந்தப்புணர்ச்சியும் பிழையன்று. கொடிய என்பது பெயரெச்சம். கொடிய + கடல் = கொடியகடல் பெயரெச்சத்தொடரில் வலி மிகாது. 'கோடு' என்றால் 'வளைவு' என்பது பொருளென்றுநினைக்கிறேன். இந்த கோடுதான் கொடுவெனத்திரிந்தது. 'கொடுவாள்' என்பதில் 'கொடு' என்பது 'வளைந்த' என்னும்பொருளை தரமுடியாது. ஏனெனில், ஒரு பெயர்ச்சொல்லானது தானே பெயரெச்சமாகவுமாவதென்பது இல்லை.(பெயரே வினையாவதுண்டு. அவ்வாறு வினையானபின், அதில் எந்தமாற்றமுமின்றி, அதுவே வினையெச்சமாகவோ வெயரெச்சமாகவோ ஆவதில்லையென்றேயெண்ணுகிறேன். 'வளைவு' என்னும் பெயர்ச்சொல்லுக்கு, 'வளை' என்பது வினைச்சொல், 'வளைந்து' என்பது வினையெச்சம், 'வளைந்த' என்பது பெயரெச்சம். 'கொடு' என்பது ஒரு பெயர்ச்சொல். இந்த சொல்லுக்கான வினைவடிவம் தெரியவில்லை. ஒருவேளை இதுவே வினைச்சொல்லாயுமாகுமெனில், இதன் வினையெச்சமோ பெயரெச்சமோ எவ்வாறுவருமென்பது எண்ணிப்பார்த்தறியவேண்டியவொன்றாயிருக்கிறது. ஏனெனில், ஏற்கனவே கொடு என்பது கொடுத்தலைக்குறிப்பதும் அதன் வினையெச்சம் கொடுத்து என்றும் பெயரெச்சம் கொடுத்த என்றும் இருப்பதை நாம் அறிவோம். ஆகையால், கொடு + வாள் = கொடுவாள் என்பதை, வளைவு + வாள் = வளைவுவாள் என்றேகொள்ளமுடியும். வளைவுவாள் என்பதில் இரண்டுசொற்களும் பெயர்ச்சொற்களாயிருப்பதால், இதை ஓர் இருபெயரொட்டுப்பண்புத்தொகையாய்க்கொண்டு, 'வளைவாகியவாள்' என்றுதான்பார்க்கமுடியும். அதுபோல், கொடுவாளென்பதும் ஒரு இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகவேயிருக்கமுடியுமேயன்றி, அதை ஒரு பெயரெச்சத்தொடராய்க்கொள்ளமுடியாது. கொடுகடல் என்பது கொடுமை + கடல் = கொடு (பண்புப்பெயர்ப்புணர்ச்சியில் மைவிகுதி கெட்டது) + கடல் = கொடுங்கடல் (பண்புப்பெயர்ப்புணர்ச்சியில் 'இனமிகல்' என்னும்விதிப்படி இனமிகுந்தது). இதன்பொருலாவது, 'கொடுமையானகடல்' என்பதாகும். இதிலுள்ள 'ஆன' என்னும் பண்புருபு மறைந்துள்ளதாலும், இதில் இரண்டும் பெயர்ச்சொற்களாயிருப்பதாலும், இதுவும் இருபெயரொட்டுப்பண்புத்தொகையே. இருபெயரொட்டுப்பண்புத்தொகையில் வலி மிகுமென்பதன்படி, 'கொடுக்காய்' என்பதில் வலி மிகுந்தது. (இதிலுள்ள 'கொடு' என்பதும் பண்புப்பெயரான 'கொடுமை' என்பது தனது மைவிகுதிகெட்டு 'கொடு' எனநிற்பதும் ஒன்றன்றென்பது அறியத்தக்கது) கொடு என்பது பெயர்ச்சொல். இது, ‘வளைவு’ என்னும் பெயருக்கானபொருளைத்தருவது. இது ‘வளைந்த’ என்னும் பெயரெச்சப்பொருளை தராது. ‘கொடுக்காய்’ என்பது, ‘வளைவுக்காய்’ என்னும்பொருளையேதரும். இது ;வளைவானகாய்’ என்னும் பொருளை தருவதே. ஆனால், ‘வளைவான’ என்னும் பெயரெச்சப்பொருளை ‘கொடு’ என்பது இங்கு தரவில்லை. ‘ஆகிய’ ‘ஆன’ என்பவற்றை பண்புருபுகளாகக்கொள்ளவேண்டும். இந்த பண்புருபை சேர்த்துச்சொன்னால், அது பெயரெச்சமாகும். பெயரெச்சங்கள் ‘அ’ என்னும்விகுதியையேபெற்றுவரும். ‘உம்’ என்பதுமுண்டு. ‘உ’ என்னும்விகுதியை வினையெச்சங்களேபெறும். ‘கொடு’ என்பது பகுதியாகுமேயன்றி, இதில் விகுதியை காணமுடியாது. பெயரெச்சமானது அகரவிகுதியில்லாமல் அமையாது. வினைச்சொல்லிலிருந்துவரும் தெரிநிலைப்பெயரெச்சங்கள், நிகழ்காலத்திலும் கடந்தகாலத்திலும் அகரவிகுதியையும் எதிர்காலத்தில் ‘உம்’ என்னும்விகுதியையும்பெற்றுவரும். செய்கின்ற – நிகழ்காலம், செய்த – கடந்தகாலம், செய்யும் – எதிர்காலம். இதுபோல் எல்லாவினைச்சொற்களுமமையும். இவை தெரிநிலைப்பெயரெச்சங்கள். பெயரிலிருந்துவருவனவற்றை குறிப்புப்பெயரெச்சமென்போம். இவை, பண்புருபெனப்படுகின்ற ‘ஆன’ என்னும் உருபைக்கொண்டுவரும். அழகான, இனிமையான, உயரமான, உறுதியான என்பவை குறிப்புப்பெயரெச்சங்கள். எனவே, ‘கொடு’ என்பது பெயராகமட்டுமேகொள்ளப்படக்கூடியது. உண்மையில், ‘கோடு’ என்பதே ‘வளைவு’ என்னும் பொருளை தரக்கூடிய தனிச்சொல். இது ‘கொடு’ என திரிந்தது. இது பெயர்ச்சொல்லாயிருப்பதாலேயே, ‘கொடுக்காய்’ என்பதில் வலி மிகுந்தது. இது பெயரெச்சமாயிருந்தால் வலி மிகுந்திருக்காது. ஏனெனில், பெயரெச்சத்தொடரில் வலி மிகாது. ‘கோடு’ என்பதை பெயரெச்சமாக்குவதானால், ‘கோடான’ ‘கோடாகிய’ என பண்புருபுசேர்த்துச்சொல்ல்லாமேயன்றி, கோடென்பதையே பெயரெச்சமாய்க்கொள்ளமுடியாது. அதுபோல், ‘கொடு’ என்பதையும் ‘கொடான’ அல்லது ‘கொடாகிய’ என்றுவேண்டுமானாற்சொல்லலாம். ‘கொடுவாள்’ என்பதற்கு, ‘கோடானவாள்’ எனக்கொண்டால் அது இருபெயரொட்டுப்பண்புத்தொகை. ‘கோட்டையுடையவாள்’ எனக்கொண்டால் அது இரண்டாம்வேற்றுமையின் உருபும்பயனும் உடன்றொக்கதொகை. விளக்கம்: டாக்டர் பொன்முடி அவர்கள்
| |||||||||||||||||||||||||