"மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:027" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

12:24, 16 ஜூலை 2012 இல் நிலவும் திருத்தம்

இது நான் எழுதுவது 27-வது அத்தியாயம். நான் கொஞ்சம் எளிதாகவே, எந்த ஒரு விஷயத்தையும் முன்னர் சொல்லியிருந்தாலும், இப்போதைய சந்தர்ப்பத்தில் அதைத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வர திரும்பச் சொல்ல வேண்டியிருந்தால் இரண்டாம் முறையும்,  மூன்றாம் முறையும் சொல்லி விடுகிறேன். கடந்த 26 அத்தியாயங்களையும் ஒரு முறை இதைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் பல விஷயங்களை நான் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சொல்லி வந்துள்ளதைப் பார்த்திருக்கலாம். இதை ஏன் மறுபடியும் மறுபடியும் திரும்பச் சொல்கிறான் இந்த மனுஷன் என்று கூட பலர் நினைத்திருக்கலாம். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்று கேட்பதற்காக, அது பற்றிச் சிந்திப்பதற்காக அல்ல, தாம் அனுபவித்துவரும் சந்தோஷத்தைக் கெடுப்பதற்காகவும், தாம் போற்றிப் புகழ்ந்து வரும் படங்களையும், நக்ஷத்திரங்களையும் அவமானப் படுத்துவற்காகவே எழுதுவதாக சிலருக்குக் கோபம் எழுகிறது. இது போல நிறைய இங்கு பார்க்கிறேன். உதாரணத்திற்கு ஒன்று. நான் கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தேன்.


”யாரும் பணத்தைக் கொட்டி நாசமாக்குவதற்காக இங்கு வரவில்லை. ஒரு படம் எடுத்து பணம் பண்ண வேண்டும் தான். நிறையவே வேண்டும். அந்தப் பணம் திரும்ப எடுக்கப் படவேண்டும் தான். ஆனால் பணம் கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு அதற்கான காரியங்கள் அத்தனையையும் சந்தை நிலவரத்தை, இந்த வாரம் ஹிட்டான படத்தின் தரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அதே மாதிரித் தானும் செய்ய வேண்டும் என்ற மந்தை மனப்பான்மைதான் தமிழ் சினிமாவின் மொத்த உருவாகவும், கலாச்சாரமாகவும் இருந்து வந்துள்ளது.


இதற்கு உடனே எதிர்வினை எழுதுபவர் சொல்கிறார்:


ஐயா திரைப்படம் எடுக்க வருவது அனைவரும் சம்பாதிக்கத் தான். பிறகென்ன இங்கே வந்து சேவையா செய்வது? சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் ஒரு திரைப்படத்தை நம்பி இருக்கிறது. அவர்கள் அனைவரும் சாப்பிட நிச்சயம் வணிக சினிமா தேவைப்படுகிறது.
( பிரகாஷ் on Thursday, 22.09.11 @ 21:01pm)


நீ என்னவேண்டுமானாலும் எவ்வளவு காரணங்களோடும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டு போ. அதை நான் கேட்டுக்கொள்ளத் தயாரில்லை. நீ எதுவும் எழுதாதது போலவே பாவனை செய்துகொண்டு நான் பழைய நிலையிலேயே தான் உழன்று கொண்டிருப்பேன் என்கிற மனோபாவம் இது. இதை நாம் எதுவும் செய்ய முடியாது. நான் யாருடைய சந்தோஷத்தையோ கெட்டிப்பட்ட மனோபாவங்களையோ மாற்றியே தீருவது என்ற சபதம் எடுத்துக்கொண்டு இங்கு பிரசாரம் செய்ய வரவில்லை. இங்கு சமூகத்தில், கலைகளில் தொடர்ந்து நடப்பதும், சமூகத்தின் உணர்வுகளும், ரசனையும் ஆபாசப்படுத்தப் படுவதும் சகிக்காமல் எழுதுகிறேன். அவரவருக்கு எது சந்தோஷம் தருகிறதோ அதில் அவர்கள் ஆழ்ந்திருப்பது எனக்கு வருத்தம் தருவதானாலும் அவர்கள் சந்தோஷங்களை நான் கெடுக்க வரவில்லை. அவர்கள் இவற்றையெல்லாம் ஏற்க பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அபபடி பழக்கப் படுத்துகிறவர்கள், சமூகத்தை நாசப்படுத்துவதுமல்லாமல் சுய லாபக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நான் சொல்ல எனக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு. கேட்பதும் அல்லது உதறித் தள்ளி நகர்ந்து செல்வதும் அவரவருக்குள்ள சுதந்திரமும் உரிமையுமாகும். ஆனால் ஒன்று. நான் எழுதுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆதலால் என் கருத்துக்களை எதிர்கொள்ளாமல், உங்களுக்கு பழக்கப்படுத்தியதையே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள் என்பது படிப்பவர்களுக்குத் தெரியும்.


ஒருவர் சொன்னார்: நீங்கள் சொல்கிறபடி வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும், வாழ்க்கைப் பிரசினைகள் தான் சினிமாவில் கையாளப்படவேண்டும், வாழ்க்கையை மீறிய கனவுலகத்தையே சிருஷ்டிக்கக் கூடாது என்று சொல்வீர்களானால், அதற்கு சினிமா எதற்கு? அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டித் தான் பார்க்கவேண்டும், அது தான் சினிமாவா என்று கேட்டார் ஒருவர். இப்போது தேடிப் பார்த்து அவர் யார் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரும் சினிமாத் துறைக்குச் சம்பந்தமில்லாத, அது பற்றி எதுவும் தெரியாத, கலை உணர்வே இல்லாத கொள்ளை லாபமே குறியாகக் கொண்டவர்களால் பழக்கப்படுத்தப்பட்டவர் இவர். இவர் மாத்திரமல்ல. தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோருமே தான். ஏதோ லம்பாடி இனக்குழு நடனமாட மச்சுப்பிச்சுவைத் தேடி ஒருவர் போய் அங்கு ஐஸ்வர்யா ராயையும், ரஜனிகாந்தையும் இன்னும் நாற்பது பேரோடு ஆடச் சொன்ன தமிழ் வாழ்க்கைப் பிரசினை என்ன? அது என்ன தமிழ் ரசனை? என்ன தமிழ் மக்கள் பற்று? என்று நாம் கேட்பதில்லை. இப்படியெல்லாம் கேட்காமல் சென்னையின் கொளுத்தும் வெயிலில் அன்று சம்பாதித்த ரூபாய் 100-ஓ 150-ரூபாயையோ கொடுத்து டிக்கட் கௌண்டருக்கு முன்னால் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வைத்திருப்பது பழக்கப் படுத்தப்பட்டதால் தான். ஏழை என்று 20 கிலோ அரிசி அன்று கொடுக்கப்படாவிட்டால் கோபம் வருகிறது. ஆனால் இங்கு 150 ரூபாய் கொடுத்து வெயிலில் வறுபட்டாலும் சந்தோஷம் தான்.


எப்படி யெல்லாம் நம் வாழ்க்கை ஆபாசப்படுத்தப் பட்டு விட்டது!, எப்படியெல்லாம் நம் உணர்வுகளும், மூளையும் சலவை செய்யப் பட்டு விட்டன!. ஆச்சரியம் தான். பரிதாபம் தான். எல்லாவற்றையும் விட என்னைப் பொறுத்த மட்டில் அது ஒரு சோகம். பாரிய சோகம். அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது தான் சினிமாவா என்று கேட்டவர், கொஞ்சம் யோசித்திருந்தால், பின்னோக்கிப் பார்த்திருந்தால், வீட்டுக்குள் நடப்பதையும் தான் தமிழ் சினிமா காட்டுவதாக பாவனை செய்துள்ளது. காட்சிகள் வீட்டுக்குள் நடப்பதாகத்தான் தயாரித்தவர்களும் சொன்னார்கள். நாமும் அப்படி எண்ணித்தான் பார்த்தோம். ஆனால் இவை யார் வீட்டிலும் நடப்பதல்ல. ஸ்டுடியோவில் வீடாக செட் அமைத்து அதில் சிலரை நிற்க வைத்து வசனம் பேசச் செய்த காட்சிகள் தான் அவை. சாதாரணமாக வீட்டில் வாழும் வாழ்க்கையை, மனிதர்களை, அவர்கள் ஜீவனைக் கூடச் சொல்லமுடியாத, நேர்மையாகக் காட்சிப் படுத்த முடியாதவர்கள் நாம். இந்த்ப் பொய்மையை நாமும் இத்தனை வருஷ காலமாகப் பார்த்து, ரசித்து, புகழ்ந்து, அதை ஒரு மரபாக வேறு பேணிக் காத்து வருகிறோம். எந்த சினிமாவில், எந்த வீட்டில் நமக்குக் காட்டப்பட்ட மனிதர்களும், வீடும், அவர்களிடையேயான பேச்சும் நம் வாழ்க்கையின் நம்பகத் தன்மையைப் பெற்றிருந்தது? இல்லாத வாழ்க்கையை, இல்லாத மனிதர்கள், இல்லாத தோரணையில் இல்லாத பேச்சை, மிக அபத்தமான நாடகமாக, தமிழ் நாடகத்துக்கே உரிய அபத்தத்துடன் நாம் சினிமாவில் பார்த்து வருகிறோம். அன்றாட வாழ்க்கையை, நாம் தினம் எதிர்கொள்ளும் மனிதர்களைச் சினிமாவில் காட்டியதாகப் பெயர் பெற்ற இயக்குனர் சிகரத்தை, ஒருவர் “என்னிக்கு ஐயா நீங்க நாடகத்தை நிறுத்தி சினிமா எடுக்கப் போறீங்க? என்று கேட்டு விட்டார். உடனே பாய்ந்தது ஒரு படை பத்திரிகை அலுவலகத்துக்கு.


சமீபத்து உதாரணத்தைச் சொல்கிறேன். வெற்றிமாறனின் படம் .ஆடு களம் .ஊரெல்லாம் இரவு பூராவும் சுற்றி விட்டு வீட்டுக்கு வருகிறான். அந்தக் காட்சி அமைப்பை நினைவு கொள்ளலாம். ஒரு சின்னச் சந்து போல இருக்கும் நுழைவு. உள்ளே போகும் மகனைக் கடிந்து கொள்கிறாள் தாய். அந்தக் காட்சியும், பேச்சும்,. தாயும் மகனும் அவர்கள் வீட்டினுள் நடப்பும் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான். குடிசை தான். முன் திண்ணையில் கைலியை மடித்துக்கட்டிக் குந்தி உட்கார்ந்திருப்பவன் டீயை ஒரு வாய் குடித்துத் துப்புகிறான். பின் உட்புறம் பார்த்து அம்மாவை வைகிறான். அம்மா திருப்பி அவனைத் திட்டுகிறாள் அந்த காட்சியில் அவனது பொறுப்பில்லாத் தத்தாரித் தனமும், அம்மாவின் கஷ்டங்கள் வீட்டுக் கஷ்டங்கள் அறியாது அம்மாவைக் கண்டபடி திட்டுவதும் நம் தமிழ் நாட்டு வாழ்க்கைக் காட்சிகள். எல்லாமே உண்மை. எதுவும் ஜோடிக்கப் படவில்லை. இந்த மாதிரியான ஒரு காட்சியை நான் தமிழ் சினிமாவில் காண இத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது.


வெற்றி மாறனின் படம் பெரும்பாலும் ஒரு நல்ல முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமா ரசிகனுக்கு சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டால் ரசிக்காது. அது சேவல் சண்டைக் காட்சிகளால் அந்த ஆசையும் நிறைவேற்றப் படுகிறது. அதை நாமும் ஏற்றுக்கொள்ளலாம். கதையே சேவல் சண்டையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது. எந்தக் காரை, ஜீப்பைப் பறக்கவிடலாம் என்று அலையவில்லை. யாருடைய பேச்சும் இயல்பான ஒன்றே. அதை இயல்பாகவே பேசுகிறார்கள். தமிழ் சினிமாவில் எல்லா டயலாகும் இரண்டு இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளாக வெட்டி வெட்டியே பேசுவார்கள். இவர்களுக்கு இந்த வியாதி எங்கேயிருந்து வந்தது என்று நமக்குத் திகைப்பாக இருக்கும். நாடகத்தில் பக்கத்தில் மறைந்திருந்து ப்ராம்ப்டர் இரண்டு இரண்டு வார்த்தைகளாகத்தான் நம்ம ராஜ பார்ட்டுக்கு வசனம் சொல்வார். ஒரு முழு வாக்கியத்தையும் சொல்லி அவர் பேசிவிட முடியாது. அந்தக் கண்றாவி தான் இன்று 70 வருடங்களாகியும் தமிழ் சினிமாவை விட்டு நீங்க மறுக்கிறது. தனுஷை யாரும் சினிமாக் கதா நாயகன் என்று சொல்ல மாட்டார்கள். ரிக்‌ஷாக் காரனானாலும் எம்.ஜி.ஆருக்குப் பான்ட்டும் ஷர்ட்டும் பளபளக்கும் பட்டில் தான் வேண்டும். இல்லையெனில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இப்படி ஒவ்வொருவருக்கு ஒன்று. நம் எல்லா சினிமா கதாநாயகர்களும் கதாநாயகிகளும் தம்மைத் தாமாகத் தான் சினிமாவில் காட்டிக்கொள்வார்கள். உலக நாயகன் கமல் சாரையும் சூப்பர் ஸ்டார் ரஜனி சாரையும் சேர்த்து. ஆனால் தனுஷையும் ஒரு சில நிமிடங்களுக்காவது குத்தாட்டம் போட வைத்துவிட்டுத் தான் தீர்வது என்று இருந்திருக்கிறார்கள்.


காதல் இல்லாது ஒரு தமிழ் சினிமாப் படம் சாத்தியமா என்ன? இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்தியா பூராவும் இதே கதை தான், அதாவது வியாபாரத்தை முன் வைத்தே எடுக்கப் படும் படங்களில். சேவல் சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதையே ஆனாலும், அதில் இருக்கும் வாலிபன் ஒருவனுக்கு அங்கு இருக்கும் பெண்மேல் ஆசை வராதா என்ன? வரும் தான். அந்த வாழ்க்கைப் பகுதியை விட்டு விடலாம் என்றாலும் அது சேர்க்கப்பட்டாலும் பெரிய தவறு இல்லை தான். ஆனால் அது வெள்ளை வெளேரென்று இருக்கும் ஒரு சட்டைக் காரியாகத் தான் இருக்கவேண்டும் அவளும் கொழுத்த அழகியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது சந்தையில் விலை போக வேண்டுமே என்ற நினைப்புத் தான் நிச்சயமாக. அதுக்கு ஒரு டாப்ஸியோ, பாப்ஸியோ (இந்தப் பெயர்கள் எனக்குச் சரிவர நினைவிலிருப்பதில்லை) அவளை வடக்கேயிருந்து தான் இறக்குமதி செய்யவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் இன்றைய கால கட்டச் சந்தை விதித்துள்ள விதி. இந்த விதி எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது. அதுவும் வடவர் ஆதிக்கத்தை மூன்று தலைமுறையாக எதிர்த்து வந்த இயக்கம் அரசில் மாத்திரம் இல்லை, சமூகத்தின் குணமாகவே ஆக்கிவிட்ட இன்றைய கால கட்டத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகள் எல்லாம் வடக்கத்திக் குட்டிகளாகவே இருக்கவேண்டும் என்ற நியதி திராவிடியக் கழகங்கள் ஆட்சி தொடர்ந்து 50 வருட காலம் ஆகிவிட்டபிறகு வந்து ஆட்சி செய்வது, அதுவும் அவ்வியக்கத்தின் 86 வயது மூத்த தலைவர் இதற்கு எதிராக முணுமுணுத்ததாகக் கூடத் தகவல் இல்லாது போனது ஒரு விசித்திரம் தான். நான் காணும் தொலைக்காட்சி விழாப் பதிவுகளை நம்புவதென்றால் அவருக்கு இதில் ஆட்சேபம் என்ன, அவரை இந்த மாற்றம் மகிழ்விக்கிறது என்று கூடத் தோன்றுகிறது.


சரி சட்டைக்காரியின் மேல் காதல் ஏற்படக்கூடாதா? அப்படி ஒன்றும் விதி இல்லை. ஆனால் அவள் சினிமாக் கதாநாயகி மாதிரி தான் இருக்க வேண்டுமா? கொஞ்சம் நம்பும்படியான தோற்றம் இருக்கக் கூடாதா? தனுஷை நம்பிப் படம் எடுக்கவில்லையா? தனுஷ் மாதிரி ஒருவர் நம் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளதும், அவருக்குத் தன்னைப் பற்றிய கதாநாயக பிரமைகள் ஏதும் இல்லை என்பதும் அறிய மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அவரை நம்பிப் படம் ஓடவில்லையா? தென்மேற்குப் பருவக் காற்று படத்தில் (இதைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்) இரண்டு பெண்கள் வருகிறார்கள். இளம் பெண்கள் தான். ஒருத்தி மேல் காதல். இன்னொருத்தி அவன் தாய் நிச்சயித்துள்ள பெண். இருவரும் கிராமத்தில் நாம் காணும் சாதாரணப் பெண்கள் என நம்மை நம்ப வைக்கவில்லையா? அவர்கள் அனுஷ்காவையும் ஷ்ரேயாவையும் தேடிப் போகவில்லையே?


இப்படி இன்னும் சில சொல்லலாம் தான். தனுஷின் குருவாக நாம் காணும் ஈழத்துக் கவிஞர் ஜெயபாலன் மிகச் சிறப்பாகத் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதைச் செய்திருக்கிறார். மிக நன்றாக என்று சொல்லவேண்டும். ஆனால் கடைசியில் இத்தனை வன்மமும், குரூர சதி மனமும் இருக்குமா என்பது சந்தேகம் தான். தேவையுமில்லை. இப்படித்தான் அதிகம் நாடகத் தன்மையேற்றி விடுகிறார்கள், ரசிகர்களைத் திருப்திப் படுத்த. தனுஷும் டாப்ஸியும் இரவில் பேசி நடந்து வரும் காட்சியிலும் இரவில் மைதானத்தில் கூட்டத்தைக் காணும் காட்சியிலும் ஒளி அமைப்பு நாடகத் தன்மை கொண்டது.


இருப்பினும் நான் அதிகம் வரவேற்கும் மாற்றங்களையும், சந்தைக்குத் தயாராக்க மிகக் குறைவான சமரசங்களையும் கொண்ட படம் ஆடுகளம். இதை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது ஏதோ தவறிப் போய் நடந்து விட்ட காரியம். மங்காத்தாவும், சிங்கமும் காணும் இடத்தில் ஆடுகளம் இருப்பது விசித்திர நிகழ்வு தான். இதற்கு தேசீய விருது கிடைத்திருப்பது இப்படத்தின் பொறுப்பாளர்களை உற்சாகப் படுத்தும் என்று நினைத்தேன்.ஆனால், வெற்றி மாறன் உத்தேசித்திருக்கும் அடுத்த படம் அந்த நம்பிக்கையை எனக்குத் தரவில்லை..சில சமயம் பரிட்சையில் நமக்கே தெரியாமல் சரியான பதிலை எழுதி விடுவதில்லையா? .
.-வெங்கட் சாமிநாதன்

--Ksubashini 20:47, 3 பெப்ரவரி 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini, Geetha Sambasivam மற்றும் Na.Kannan